இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
ஓய்வுநாளில் நல்ல செயல்களைச் செய்தல்
அது பொ.ச. 31-ன் இளவேனிற் பருவம். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருந்தபோது சமாரியாவில் கிணற்றண்டையிலிருந்த பெண்ணிடம் பேசினதற்குப் பிற்பட்டு ஒருசில மாதங்கள் சென்றிருந்தன.
இப்பொழுது, கலிலேயா முழுவதிலும் வெகு விரிவாய்க் கற்பித்தப்பின், இயேசு அதைவிட்டு மறுபடியும் யூதேயாவுக்குச் செல்கிறார், அங்கே ஜெபாலயங்களில் பிரசங்கிக்கிறார். பைபிளில் இயேசுவின் கலிலேயா ஊழியத்துக்குக் கொடுத்துள்ள கவனத்தோடு ஒப்பிட யூதேயாவில் அவருடைய இந்தச் சந்திப்பின்போதும் முந்தின பஸ்காவைப் பின்தொடர்ந்து அங்கே அவர் செலவிட்ட மாதங்களின்போதும் அவர் நடப்பித்த வேலையைப் பற்றிச் சிறிதே சொல்லியிருக்கிறது. அவருடைய ஊழியம் கலிலேயாவில் ஏற்கப்பட்டபடி யூதேயாவில் அவ்வளவு ஆர்வத்துடன் ஏற்கப்படவில்லையென தெரிகிறது.
சீக்கிரத்தில் இயேசு பொ.ச.31-ன் பஸ்காவுக்காக யூதேயாவின் முக்கிய நகரமாகிய எருசலேமுக்குப் போய்க் கொண்டிருக்கிறார். இங்கே அந்நகரத்தின் ஆட்டு வாசலினருகில் பெத்சாதா எனப்பட்ட ஒரு குளம் இருக்கிறது, அங்கே நோயுற்றோரும், குருடரும் முடவருமான பலர் வருகின்றனர். அந்தக் குளத்தின் தண்ணீர்கள் கலங்குகையில் அதற்குள் இறங்குவதால் ஆட்கள் சுகமாகக் கூடுமென அவர்கள் நம்புகிறார்கள்.
அது ஓய்வுநாள், 38 ஆண்டுகளாக நோயுற்றிருக்கும் ஒரு மனிதனை இயேசு அந்தக் குளத்தண்டையில் காண்கிறார். அந்த மனிதன் நெடுங்காலம் நோயுற்றிருப்பதை அறிந்து: “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா”? என்று இயேசு கேட்கிறார்.
“ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான்,” என அவன் பதிலளிக்கிறான்.
இயேசு அவனிடம்: “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட,” என்று சொல்லுகிறார். அந்த மனிதன் உடனடியாக உடலில் சுகமாகிறான், தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்குகிறான்!
ஆனால் யூதர்கள் அந்த மனிதனைக் காண்கையில், “இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல,” என்கிறார்கள்.
அந்த மனிதன்: “என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார்,” என பதிலளிக்கிறான்.
“உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார்”? என்று கேட்கிறார்கள். ஜனக் கூட்டத்தின் காரணமாக இயேசு விலகியிருந்தார், சுகப்படுத்தப்பட்டவன் இயேசுவின் பெயரை அறியாதிருந்தான். எனினும், பின்னால், இயேசுவும் அந்த மனிதனும் ஆலயத்தில் சந்திக்கிறார்கள். அந்த மனிதன் தன்னைச் சுகப்படுத்தினவர் யாரென தெரிந்துகொள்கிறான்.
ஆகவே சுகமானவன், இயேசுவே தன்னைச் சுகமாக்கினார் என்று அறிவிக்க யூதர்களைக் காண்கிறான். இதைத் தெரிந்துகொண்டபோது யூதர்கள் இயேசுவிடம் செல்கிறார்கள். என்ன காரணத்துக்காக? இந்த அதிசயமான காரியங்களை எந்தத் துணைக்கொண்டு அவர் செய்ய முடிகிறதென கற்றறியவா? இல்லை. இந்த நல்ல காரியங்களை ஓய்வுநாளில் அவர் செய்வதனால் அவரைக் குற்றப்படுத்தவேயாகும். அவர்கள் அவரைத் துன்புறுத்தவும் தொடங்குகிறார்கள்! லூக்கா 4:44; யோவான் 5:1-16.
◆ இயேசு கடைசியாக யூதேயாவுக்குச் சென்று எவ்வளவு காலமாகியிருக்கிறது?
◆ பெத்சாதா எனப்பட்ட குளம் ஏன் மக்கள் அவ்வளவு மிக நாடின இடமாயிருந்தது?
◆ அந்தக் குளத்தருகில் இயேசு என்ன அற்புதத்தை நடப்பித்தார்? யூதர்களின் பிரதிபலிப்பு என்னவாயிருந்தது? (w86 6/15)