இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
தம்முடைய அப்போஸ்தலர்களைத் தெரிந்துகொள்ளுதல்
அப்பொழுது முழுக்காட்டுபவனாகிய யோவான் இயேசுவை தேவனுடைய ஆட்டுக்குட்டி என்பதாக அறிமுகஞ்செய்து, இயேசு தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்தது முதல் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது. அந்தச் சமயத்தில், அந்திரேயா, சீமோன் பேதுரு, யோவான் மற்றும் ஒருவேளை யாக்கோபு (யோவானின் சகோதரன்) பிலிப்பு, நாத்தான்வேல் (பற்தொலொமேயு என்றும்கூட அழைக்கப்பட்டவன்) ஆகியோர் அவருக்கு முதலாவதான சீஷர்களாக ஆகிவிட்டிருந்தனர். காலப்போக்கில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் இன்னும் மற்ற அநேகர் அவர்களைச் சேர்ந்துகொண்டனர்.
இப்பொழுது இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களைத் தெரிந்துகொள்ள தயாராக இருக்கிறார். இவர்கள் இவருடைய நெருக்கமான கூட்டாளிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு விசேஷமான பயிற்றுவிப்பு கொடுக்கப்படும். ஆனால் அவர்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, இயேசு ஒரு மலையின் மேல் ஏறி ஓர் இரவு முழுவதையும் ஜெபத்தில் செலவழிக்கிறார். அவர் அநேகமாக கடவுளுடைய ஞானத்துக்காகவும் ஆசீர்வாதத்துக்காகவும் ஜெபிக்கிறார். பொழுது விடிந்தபோது, தம்முடைய சீஷர்களை வரவழைத்து அவர்களில் இந்தப் பன்னிருவரை தெரிந்துகொள்கிறார். என்றபோதிலும், அவர்கள் தொடர்ந்து இயேசுவுக்கு மாணாக்கர்களாகவே இருப்பதன் காரணமாக அவர்கள இன்னும் சீஷர்களென்றே அழைக்கப்படுகிறார்கள்.
இயேசு தெரிந்துகொள்ளும், மேலே பெயர் குறிப்பிடப்பட்ட ஆறு பேர் அவருடைய முதலாவதான சீஷர்களாகிறார்கள். ஆயத்துறையிலிருந்து இயேசு அழைத்த மத்தேயுவும் தெரிந்துகொள்ளப்படுகிறான். தெரிந்துகொள்ளப்படும் மற்ற ஐவர் யூதா (ததேயு என்றும் அழைக்கப்பட்டவன்) யூதாஸ் காரியோத்து மற்றும் கானானியனான சீமோன், தோமா மற்றும் அல்பேயுவின் குமாரனான யாக்கோபு. இந்த யாக்கோபு ஒருவேளை மற்ற அப்போஸ்தலனாகிய யாக்கோபிலிருந்து வித்தியாசப்படுத்திக் காண்பதற்காக சின்ன யாக்கோபு என்றும் கூட அழைக்கப்படுகிறான்.
இந்தச் சமயத்திற்குள் பன்னிருவரும் இயேசுவோடுகூட சில காலமாக இருந்துவந்திருக்கிறபடியால் அவர் அவர்களை நன்கு அறிந்திருக்கிறார். உண்மையில் அவர்களில் பலர் அவருடைய சொந்த உறவினர்களாக இருக்கிறார்கள். யாக்கோபும் அவனுடைய சகோதரன் யோவானும் இயேசுவினுடைய பெற்றோரின் உடன்பிறந்தாரின் குமாரர்களாக இருக்கிறார்கள். அல்பேயு இயேசுவின் வளர்ப்பு தகப்பனாகிய யோசேப்பின் சகோதரனாக இருக்க வேண்டும். ஆகவே அல்பேயுவின் குமாரனான அப்போஸ்தலனாகிய யாக்கோபும் கூட இயேசுவுக்கு பெற்றோரின் உடன் பிறந்தாரின் மகனாக இருக்கிறான்.
இயேசுவுக்கு நிச்சயமாகவே தம்முடைய அப்போஸ்தலர்களுடைய பெயர்களை நினைவில் வைத்திருப்பதில் பிரச்னை இருக்கவில்லை. ஆனால் உங்களால் அவைகளை நினைவில் வைத்திருக்க முடிகிறதா? சீமோன் என்ற பெயரில் இருவரும், யாக்கோபு என்ற பெயரில் இருவரும், யூதா என்ற பெயரில் இருவரும் இருப்பதையும் சீமோனுக்கு அந்திரேயா என்ற சகோதரனும் யாக்கோபுக்கு யோவான் என்ற சகோதரனும் இருப்பதையும் மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எட்டு அப்போஸ்தலர்களை நினைவில் கொள்வதற்கு இதுவே முக்கியமாக இருக்கிறது; மற்ற நால்வர், ஆயக்காரனாகிய (மத்தேயு) பின்னால் சந்தேகித்த (தோமா) மரத்தின் கீழிருக்கும் போது அழைக்கப்பட்ட நாத்தான்வேலும் அவனுடைய நண்பன் பிலிப்பும் ஆவர்.
அப்போஸ்தலர்களில் பதினோரு பேர் இயேசுவின் சொந்த ஊரான கலிலேயாவைச் சேர்ந்தவர்கள். நாத்தான்வேல் கானானைச் சேர்ந்தவன். பிலிப்பும் பேதுருவும் அந்திரேயாவும் முதலில் பெத்சாயிதா பட்டணத்தாராக இருந்தார்கள், என்றபோதிலும், பேதுருவும் அந்திரேயாவும் பின்னால் மத்தேயு வாழ்ந்துவந்ததாக தெரிகிற கப்பர்நகூமுக்கு இடம் மாறி வந்திருந்தார்கள். யாக்கோபும் யோவானும் மீனவத் தொழிலில் இருந்தார்கள். இவர்கள் கப்பர்நகூமில் அல்லது அதற்கு அருகாமையில் வாழ்ந்துவந்தவர்களாக இருக்க வேண்டும். இயேசுவைப் பின்னால் காட்டிக் கொடுத்தவனாகிய யூதாஸ்காரியோத்து யூதேயாவிலிருந்து வந்த ஒரே அப்போஸ்தலனாக இருந்ததாகத் தெரிகிறது. மாற்கு 3:13-19; லூக்கா 6:12-16
◆ எந்த அப்போஸ்தலர்கள் இயேசுவின் உறவினர்களாக இருந்திருக்கக்கூடும்?
◆ இயேசுவின் அப்போஸ்தலர்கள் யாவர்? அவர்களுடைய பெயர்களை நீங்கள் எவ்விதமாக நினைவில் வைத்துக்கொள்ளலாம்?
◆ அப்போஸ்தலர்கள் எந்தப் பிராந்தியத்திலிருந்து வந்தவர்களாக இருந்தனர்?
[பக்கம் 8-ன் படம்]
தம்முடைய 12 அப்போஸ்தலர்களைத் தெரிந்தெடுப்பதற்கு முன்பாக, இயேசு யெகோவாவிடம் ஜெபிப்பதில் முழு பகலையும் இரவையும் செலவழித்தார்.