அந்தப் பொன் விதி—அது என்ன?
“இதோ பாருங்கள்! நான் என் அயலாரைத் தொந்தரவு செய்வது கிடையாது. என்னைப் பொறுத்தவரை, அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ, அதை அவர்கள் செய்யலாம். ஆனால் நிச்சயமாகவே அவர்கள் கஷ்டத்திலிருக்கையில் நான் உதவி செய்ய என்னால் இயன்றதைச் செய்வேன்.” இதுவே உங்கள் கருத்தாக இருக்கிறதா? துன்பம் வந்து தாக்கும்போது அநேகருக்கு ஆச்சரியமுண்டாக்கும் வகையில் தயவும் தன்னலமற்றச் செயல்களும் மிகுந்து காணப்படுகின்றன. ஆனால் இது போதுமா?
நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்கள் பிள்ளைகள், அவர்களுடைய விளையாட்டுத் தோழர்களைச் சினமூட்டுவதைத் தவிர்க்கும்படியாக அவர்களுக்குப் புத்தி சொல்லியிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த வழிகாட்டி நியமத்தை அசட்டைச் செய்வது பழிவாங்குதலில் விளைவடைகிறது என்பதைக் காண்பிக்க நம்மில் பலர், நம்முடைய இளமைப் பருவத்திலிருந்து சுமந்துவரும் தழும்புகளைக் கொண்டிருக்கிறோம். ஆம், கிழக்கத்திய தத்துவஞானி கன்ஃபூசியஸினால் உருவம் கொடுக்கப்பட்ட ஒழுக்க விதியின் ஞானத்தை நாம் கற்றறிந்திருக்கிறோம்: “நீங்கள் உங்களுக்குச் செய்யப்பட விரும்பாததை, மற்றவர்களுக்குச் செய்யாதிருங்கள்.” ஆனால் இது வெறுமென, பொன்விதி என்றறியப்பட்டிருப்பதனுடைய இரண்டாம் தரமான, எதிர்மறையான கூற்றாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்களா?
உடன்பாடான ஒரு விதி
வெப்ஸ்டரின் நியு காலஜியேட் அகராதி “பொன்விதியை [மத்தேயு] 7:12 மற்றும் [லூக்கா] 6:31-க்கு தொடர்புடையதாயிருக்கும் நன்னெறி சார்ந்த நடத்தைக்குரிய விதி என்றும் அது ஒருவர் மற்றவர்கள் தனக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறார்களோ அதை அவர்களுக்குச் செய்யவேண்டும் என்பதாக குறிப்பிடுகிறது” என்றும் தொகுத்துரைக்கிறது. இப்பக்கத்தின் கீழ் உள்ள பெட்டியைக் கணநேரம் பார்வையிட்டு, மத்தேயு 7-ம் அதிகாரம் 12-ம் வசனத்தின் பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகள் எவ்விதமாக இந்த வழிகாட்டி நியமத்தின் ஒளியை வீசச்செய்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
வார்த்தைகள் மொழிபெயர்ப்புக்கு மொழிபெயர்ப்பு வித்தியாசப்பட்ட போதிலும், விதி உடன்பாடாக இருப்பதை தயவு செய்து கவனியுங்கள். எப்படியும் மலைப்பிரசங்கத்தின் முற்பகுதியில் இயேசு நியாயமானக் காரணங்கள் காட்டி விளக்கிய வண்ணமே: “கேட்டுக்கொண்டேயிருங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டேயிருங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டிக்கொண்டேயிருங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.” (மத்தேயு 7:7, 8, NW) கேட்பது, தேடுவது, தட்டுவது ஆகிய அனைத்தும் உடன்பாடான செயல்களாகும். “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாக இயேசு தொடர்ந்து சொன்னார்.—மத்தேயு 7:12.
இயேசுவின் சீஷர்களும்கூட இதே நியமத்தின்படி வாழ்க்கை நடத்துவதை வெளிப்படையாக பரிந்துரைத்தார்கள் என்பதாக பைபிள் காண்பிக்கிறது. (ரோமர் 15:2; 1 பேதுரு 3:11; 3 யோவான் 11) ஆனால் வருத்தத்திற்குரிய வகையில், மனித உறவுகளின் தற்போதைய நிலை, மொத்தமாகப் பார்த்தால் பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் இதைப் பின்பற்றுவதில்லை என்பதை உறுதிசெய்கிறது. நன்னெறி சார்ந்த இந்த நடத்தை விதி இனிமேலும் செல்லத்தக்கதாக இல்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? அது ஒருவேளை வழக்கற்றுப்போய்விட்டதா? (w89 11/1)
[பக்கம் 3-ன் பெட்டி]
“மற்ற மனிதர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புவதை எல்லாம் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—பரிசுத்த பைபிள் R. A. நாக்ஸின் மொழிபெயர்ப்பு.
“மற்றவர்களால் நீங்கள் நடத்தப்பட விரும்பும் அதேவிதமாகவே மற்றவர்களை நடத்துங்கள்.”—நவீன ஆங்கிலத்தில் புதிய ஏற்பாடு, J. B. பிலிப்ஸ்.
“மற்றவர்கள் உங்களுக்கும் உங்களுக்காகவும் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புவதை, அவர்களுக்கும் அவர்களுக்காகவும் செய்யுங்கள்.”—ஆம்பிளிஃபைட் புதிய ஏற்பாடு.
“மற்றவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அனைத்தையும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—W. F. பெக்கின், இன்றைய மொழியில் புதிய ஏற்பாடு.
“அப்படியென்றால் எல்லாக் காரியங்களிலும், உங்கள் உடனொத்த மனிதர் உங்களை நடத்த விரும்பும் விதத்தில் அவர்களை நடத்துங்கள்.”—E. V. ரியு மொழிபெயர்த்த நான்கு சுவிசேஷங்கள்.
“மற்றவர்கள் உங்களோடு செயல்தொடர்புகொள்ள நீங்கள் விரும்பும் வகையில் அவர்களோடு செயல்தொடர்பு கொள்ள நீங்கள் பழகவேண்டும்.”—C. B. வில்லியம்ஸின் புதிய ஏற்பாடு.