தேவபக்தியுள்ள கொடுப்போருக்கு நித்திய மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”—யோவான் 3:16.
1, 2. (எ) மிகப் பெரிய கொடையாளி யார், மனிதவர்க்கத்துக்கு அவர் கொடுத்த மிகப் பெரிய ஈவு என்ன? (பி) தம்முடைய மிகப் பெரிய ஈவைக் கொடுத்ததில், கடவுள் என்ன பண்பை வெளிப்படுத்தினார்?
யெகோவா தேவனே எல்லாரிலும் மிகப் பெரிய கொடையாளர். வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய, அவரைக் குறித்தே, கிறிஸ்தவ சீஷன் யாக்கோபு பின்வருமாறு எழுதினான்: “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” (யாக்கோபு 1:17) யெகோவாவே என்றாயினும் கொடுக்கக்கூடிய எவற்றிலும் மிகப் பெரிய ஈவையும் கொடுத்தவர். மனிதவர்க்கத்துக்கு அவர் கொடுத்த இந்த மிகப்பெரிய ஈவைக் குறித்து, பின்வருமாறு சொல்லப்பட்டது: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”—யோவான் 3:16.
2 இந்த வார்த்தைகளைப் பேசினவர் கடவுளுடைய ஒரேபேறான குமாரன்தாமேயன்றி வேறொருவருமில்லை. ஒரு தகப்பனின் ஒரே பேறான குமாரன் இயல்பாகவே அத்தகைய தகப்பனைத் தன் உயிரின் மற்றும் உயிரைத் தான் அனுபவித்து மகிழ்வதற்காக அளிக்கப்பட்ட எல்லா நல்ல காரியங்களுக்கும் மூலக்காரணராக நன்றியோடு மதித்து நேசிப்பான். ஆனால் கடவுளுடைய அன்பு இந்த ஒரே குமாரனுக்கு மாத்திரமேயென வரையறுக்கப்படவில்லை. அத்தகைய ஈவைத் தம்முடைய சிருஷ்டிகளான மற்றவர்களுக்கு அருளுவது, கடவுள் தம்முடைய அன்பை பொதுநிலைக் கடந்த அளவில் காட்டுவதைத் தெரிவிக்கும். (ரோமர் 5:8-10-ஐ ஒத்துப் பாருங்கள்.) “தந்தருளி”னார் என்ற இந்த வார்த்தை இந்தச் சூழமைவில் உண்மையில் பொருள்கொள்வதை நாம் ஆராய்கையில் இது இன்னும் மிக அதிகத் தெளிவாகத் தெரிகிறது.
“தமது அன்பின் குமாரன்” கடவுள் கொடுத்த ஈவு
3. “தம்முடைய அன்பின் குமாரனைத்” தவிர வேறு எவரும் பரலோகத் தகப்பனின் அன்பை அனுபவித்து மகிழ்ந்தனர்?
3 கூறப்பட்டிராதக் காலப்பகுதியாகக் கடவுள், பரமண்டலத்தில்—“தமது அன்பின் குமாரன்”—ஆன இந்த ஒரேபேறான குமாரனுடன் தனிப்பட்ட நெருங்கிய கூட்டுறவை அனுபவித்து மகிழ்ந்திருந்தார். (கொலோசெயர் 1:13) அந்தக் காலத்தின்போதெல்லாம், தகப்பனும் குமாரனும் ஒருவருக்கொருவர் அன்பிலும் பாசத்திலும் அவ்வளவு அதிகமாய் மிகுந்திருந்ததால் அவர்களுடையதைப்போன்ற பரஸ்பர அன்பு வேறு எதுவும் உண்டாகியிருந்ததே இல்லை. கடவுள் தம்முடைய ஒரே பேறான குமாரனைக் கொண்டு உண்டாகியிருக்கச் செய்த மற்ற சிருஷ்டிகளும் யெகோவாவின் தெய்வீகக் குடும்ப உறுப்பினர்களாக நேசிக்கப்பட்டனர். இவ்வாறு, கடவுளின் முழு குடும்பத்தின்மீதும் அன்பு ஆட்சி செய்தது. “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” என்று பரிசுத்த வேத எழுத்துக்களில் திருத்தமாகவே கூறப்பட்டுள்ளது. (1 யோவான் 4:8) ஆகையால், இந்தத் தெய்வீகக் குடும்பம் தகப்பனான யெகோவா தேவன் நேசிப்பவர்களால் ஆகியதாயிருக்கும்.
4. கடவுள் தம்முடைய குமாரனைக் கொடுப்பது சொந்தத் தனித்தன்மையான உறவை இழப்பதைப் பார்க்கிலும் அதிகத்தை எவ்வாறு உட்படுத்தியது? யாருக்காக?
4 யெகோவாவுக்கும் அவருடைய முதற்பேறான குமாரனுக்கும் இடையிலிருந்த பாசப் பிணைப்பு அவ்வளவு நெருங்கியதாக இருந்ததால், அத்தகைய மிக நெருங்கிய கூட்டுறவைத் தங்களுக்கு இல்லாமற்போகச் செய்வது தன்னில்தானே பெரும் இழப்பாயிருக்கும். (கொலோசெயர் 1:15) ஆனால் இந்த ஒரேபேறான குமாரனைக் ‘தந்தருளுவது’ கடவுள் “தமது அன்பின் குமார”னுடன் அந்தச் சொந்தத் தனித்தன்மையான உறவு தமக்கு இல்லாமற்போகச் செய்வதைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறித்தது. தம்முடைய குமாரனை மரணத்துக்குட்படவும், இவ்வாறு தற்காலிகமாகக் கடவுளுடைய சர்வலோகக் குடும்பத்தின் ஓர் உறுப்பினராக இல்லாமற்போகவும் செய்வதை யெகோவா அனுமதிக்கும் அவ்வளவு தூரமளவாகவும் சென்றது. இது கடவுளுடைய குடும்ப உறுப்பினராய் ஒருபோதும் இராதவர்களுக்காக மரித்த மரணம். “கடவுள் சிருஷ்டிப்புக்கு ஆதி,” என்றும் வேத எழுத்துக்கள் அடையாளங்குறிக்கும், தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தேவையிலிருக்கும் மனிதவர்க்கத்துக்காகத் தந்ததைப் பார்க்கிலும் பெரிய ஈவை யெகோவா அளிக்க முடியாது.—வெளிப்படுத்துதல் 3:14, தி.மொ.
5. (எ) ஆதாமின் சந்ததியின் நிலைமை என்னவாக இருந்தது? கடவுளுடைய நீதி அவருடைய உண்மையுள்ள குமாரரில் ஒருவரின் பங்கில் எதைக் கேட்டது? (பி) கடவுளுடைய சொந்த பங்கில் அவருடைய மிகப் பெரிய ஈவு அவர் எதைச் செய்யும்படி தேவைப்படுத்தும்?
5 முதல் மனிதத் தம்பதிகளான, ஆதாமும் ஏவாளும், கடவுளுடைய குடும்பத்தின் உறுப்பினர்களாகத் தங்கள் இடத்தைக் காத்துக்கொள்ளத் தவறினர். கடவுளுக்கு எதிராகப் பாவஞ்செய்ததால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டிருந்த பின்பு இந்த நிலையிலேயே அவர்கள் தங்களைக் கண்டார்கள். அவர்கள் அதற்குமேலும் கடவுளுடைய குடும்பத்தின் உறுப்பினர்களாக இல்லாததுமட்டுமல்லாமல் மரணத்தீர்ப்பின்கீழும் இருந்தார்கள். ஆகையால், பிரச்னையானது, அவர்களுடைய சந்ததியைக் கடவுளுடைய குடும்பத்தின் உறுப்பினர்களாக அவருடைய தயவுக்குத் திரும்பக் கொண்டுவருவது மட்டுமேயல்லாமல், கடவுள் அளித்த மரணத்தீர்ப்பை அவர்கள்மீதிருந்து விலகச் செய்ய வேண்டியதுமாகும். தெய்வீக நீதி செயல்படுவதன்படி, இது கடவுளுடயை உண்மையுள்ள குமாரர்களில் ஒருவர் பதிலீடாக மரணத்தை அனுபவிப்பதை, அல்லது ஒரு மீட்கும் பொருளைத் தேவைப்படுத்தியது. ஆகையால், அந்தப் பெரிய கேள்வியானது: தெரிந்துகொள்ளப்பட்டவர் மனித பாவிகளுக்காக ஒரு பதிலீடான மரணத்துக்கு உட்பட மனமுள்ளவராய் இருப்பாரா? என்பதாகும். மேலும், இதைக் கொண்டுவருவது சர்வவல்லமையுள்ள கடவுளின் பங்கில் ஓர் அற்புதத்தைத் தேவைப்படுத்தும். மேலும் இது நிகரற்ற அளவில் தெய்வீக அன்பின் வெளிக்காட்டையும் கேட்கும்.—ரோமர் 8:32.
6. பாவிகளான மனிதவர்க்கம் உட்பட்ட இந்த நிலைமையின் தேவைகளைத் தீர்ப்பதற்குக் கடவுளுடைய குமாரன் எவ்வாறு தகுதிபெற்றிருந்தார்? இதைக் குறித்து அவர் என்ன சொன்னார்?
6 யெகோவாவின் முதற்பேறான குமாரனே, பாவமுள்ள மனிதவர்க்கம் உட்பட்ட இந்த நிலைமையின் தனிப்பட்ட தேவைகளைத் தீர்க்கத் தகுதியுடையவராக இருக்க முடியும். கடவுள் உண்டாக்கின குடும்பத்தின் உறுப்பினருக்கு உள்ளன்பைக் காட்டுவதில் அவர் தம்முடைய பரலோகத் தகப்பனின் அத்தகைய ஒத்தச் சாயலாயிருப்பதால் கடவுளுடைய குமாரருக்குள் அவர் நிகரற்றவராயிருக்கிறார். அறிவுள்ள மற்ற எல்லா சிருஷ்டிகளும் அவரைக் கொண்டு உண்டாக்கப்பட்டதால், அவர்கள்பேரில் அவருடைய உள்ளன்பு நிச்சயமாகவே மிகுந்திருக்கும். மேலும் யெகோவாவின் ஒரேபேறான குமாரனாகிய, இயேசு கிறிஸ்து, “அவருடைய [கடவுளுடைய] மகிமையின் பிரகாசமும் அவருடைய தன்மையின் சொரூபமுமாயிரு”ப்பதால், அன்பு அவருடைய முதன்மையான பண்பாயுள்ளது. (எபிரெயர் 1:3) பாவிகளான மனிதவர்க்கத்துக்காகத் தம்முடைய உயிரைக் கொடுப்பதன்மூலம் இந்த அன்பை மிக உச்ச அளவில் வெளிப்படுத்தத் தாம் மனமுவந்திருந்ததைக் காட்டி, இயேசு தம்முடைய 12 அப்போஸ்தலரிடம் பின்வருமாறு கூறினார்: “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.”—மாற்கு 10:45; யோவான் 15:13-ஐயும் பாருங்கள்.
7 மனிதவர்க்கத்தின் இந்த வறுமைநிறைந்த உலகத்துக்குள் இயேசுவை அனுப்ப யெகோவா தேவன் தனிப்பட்ட காரணத்தைக் கொண்டிருந்தார். தெய்வீக அன்பே இதற்கான உள்நோக்கம், எவ்வாறெனில், இயேசுதாமே பின்வருமாறு கூறினார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.”—யோவான் 3:16, 17.
7, 8. (எ) மனிதவர்க்க உலகத்துக்குள் இயேசு கிறிஸ்துவை அனுப்பினதில் யெகோவாவின் உள்நோக்கம் என்ன? (பி) எந்த வகையான ஊழிய நியமிப்பின்பேரில் கடவுள் தம்முடைய ஒரேபேறான குமாரனை அனுப்பினார்?
8 இரட்சிப்புக்குரிய ஓர் ஊழிய நியமிப்பின்பேரில் யெகோவா அன்புடன் தம்முடைய ஒரேபேறான குமாரனை அனுப்பினார். பூமியை நியாயந்தீர்க்கும்படி கடவுள் தம்முடைய குமாரனை இங்கே அனுப்பவில்லை. நியாயத்தீர்ப்புச் செய்யும் அத்தகைய வேலைநியமிப்புடன் கடவுளுடைய குமாரன் அனுப்பப்பட்டிருந்தால், மனிதவர்க்கம் முழுவதற்கும் எதிர்கால வாய்ப்பு நம்பிக்கையற்ற மோசமான நிலையில் இருந்திருக்கும். மனிதக் குடும்பத்தின்மீது இயேசு கிறிஸ்து கூறியிருந்திருக்கும் அந்தக் கண்டனத் தீர்ப்பு மரணாக்கினைத் தீர்ப்பாயிருந்திருக்கும். (ரோமர் 5:12) இவ்வாறு, முற்றிலும் சரியாய் நீதி கேட்டிருக்கும் மரணத்தீர்ப்பை, தெய்வீக அன்பின் இந்தத் தனிப்பட்ட வெளிக்காட்டால், கடவுள் சரி ஈடு செய்தார்.
9. யெகோவாவின் கொடுக்கும் தன்மையைப்பற்றி சங்கீதக்காரன் தாவீது எவ்வாறு உணர்ந்தான்?
9 எல்லா காரியங்களிலும், யெகோவா தேவன், தம்முடைய பண்பியல்பின் மேம்பட்ட அம்சமாக அன்பை வெளிப்படுத்தியும் மெய்ப்பித்தும் காட்டுகிறார். நல்ல காரியங்களைக் குறித்தவரையில் கடவுள் பூமியிலுள்ள தம்முடைய உண்மையுள்ள வணக்கத்தாருக்குப் போதியளவுக்கு மேலாக அன்புடன் கொடுக்கிறாரென சரியாய்ச் சொல்லலாம். சங்கீதக்காரன் தாவீது கடவுளிடம் பின்வருமாறு சொன்னபோது அவ்வாறே உணர்ந்தான்: “உமக்குப் பயந்தவர்களுக்கென்று நீர் வைத்திருக்கிற நன்மை எவ்வளவு பெரிது! மனுப்புத்திரர் முன்னிலையில் உம்மிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு நீர் செய்திருக்கிற நன்மை எவ்வளவு பெரிது!” (சங்கீதம் 31:19, தி.மொ.) இஸ்ரவேல் ஜனத்தின்மீது தாவீது ஆட்சிசெய்த காலத்தின்போது—ஆம், கடவுள் தனிப்பட்டுத் தெரிந்தெடுத்த அந்த ஜனத்தின் ஓர் உறுப்பினனாகத் தன் வாழ்நாள் முழுவதும்—யெகோவாவின் நற்குண பரிவை அடிக்கடி அனுபவித்தான். தாவீது அதை மிகுதியானதாகக் கண்டான்.
கடவுள் கொடுத்த ஒரு பெரிய ஈவை இஸ்ரவேல் இழந்தது
10. பூர்வ இஸ்ரவேல் ஏன் பூமியிலிருந்த மற்ற எந்த ஜனத்திலிருந்தும் வேறுபட்டிருந்தது?
10 பூர்வ இஸ்ரவேல், யெகோவாவை அதன் கடவுளாகக் கொண்டிருந்ததில் பூமியிலிருந்த வேறு எந்த ஜனத்திலிருந்தும் வேறுபட்டிருந்தது. யெகோவா, தீர்க்கதரிசியாகிய மோசேயை மத்தியஸ்தனாகக் கொண்டு, ஆபிரகாம், ஈசாக்கு, மற்றும் யாக்கோபின் இந்தச் சந்ததியாரைத் தம்முடன் ஓர் உடன்படிக்கை உறவுக்குள் கொண்டுவந்தார். இம்மாதிரியின்படி, அவர் வேறு எந்த ஜனத்துடனும் கையாளவில்லை. ஆகையால் தேவாவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரன் பின்வருமாறு உணர்ச்சிமீதூரக் கூற முடிந்தது: “யாக்கோபுக்குத் தமது திருவசனத்தையும், இஸ்ரவேலுக்குத் தமது நியமங்களையும் தமது நியாயத்தீர்ப்புகளையும் அறிவிக்கிறார். அவர் வேறே எந்த ஜனத்துக்கும் இப்படிச் செய்ததில்லை; அவர்கள் அவருடைய நியாயத்தீர்ப்புகளை அறியவில்லை, அல்லேலூயா.”—சங்கீதம் 147:19, 20, தி.மொ.
11. எதுவரை இஸ்ரவேல் கடவுளுடன் தயவுக்குரிய அதன் உறவை அனுபவித்து மகிழ்ந்தது? அவர்களுடைய உறவில் ஏற்படவிருந்த மாற்றத்தை இயேசு எவ்வாறு வெளிப்படுத்திக் கூறினார்?
11 மாம்சப்படியான இந்த இஸ்ரவேல் ஜனம் நம்முடைய பொது சகாப்தத்தின் 33-ம் ஆண்டில் இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்க மறுத்துத் தள்ளிவிட்டது வரையில் கடவுளுடன் இந்தத் தயவுக்குரிய உறவில் தொடர்ந்திருந்தது. இயேசு பின்வரும் இந்த வருத்தந்தோய்ந்த உணர்ச்சியுரையை வெளியிட்டுக் கூறின அந்த நாள் நிச்சயமாகவே இஸ்ரவேலுக்கு விசனகரமான நாள் ஆகும்: “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.” (மத்தேயு 23:37, 38) அந்த இஸ்ரவேல் ஜனம் முன்னால் யெகோவாவின் தனித் தயவுபெற்ற ஜனமாயிருந்தபோதிலும் கடவுள் கொடுத்த ஒரு தனிப்பட்ட ஈவை இழந்துவிட்டதென இயேசுவின் வார்த்தைகள் குறிப்பிட்டுக் காட்டின. எவ்வாறு?
12. ‘எருசலேமின் பிள்ளைகளாக’ இருந்தவர்கள் யார்? இயேசு அவர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்ப்பது எதைக் குறித்திருக்கும்?
12 “பிள்ளைகள்” என்ற பதத்தைப் பயன்படுத்தினதால், இயேசு எருசலேமில் வாழ்ந்து முழு யூத ஜனத்தையும் பிரதிநிதித்துவஞ்செய்த மாம்சப்படியான விருத்தசேதனஞ்செய்யப்பட்ட யூதர்களை மாத்திரம் குறிப்பிட்டார். இயேசு ‘எருசலேமின் பிள்ளைகளை’ ஒன்றாய்க் கூட்டிச்சேர்ப்பது, யெகோவாவுக்கும் இந்த மாம்சப்படியான யூதர்களுக்கும் நடுவே தாம் மத்தியஸ்தராகச் சேவித்து, இந்தப் “பிள்ளைகளைக்” கடவுளுடன் ஒரு புதிய உடன்படிக்கைக்குள் அவர் கொண்டுவருவதைக் குறித்திருக்கும். (எரேமியா 31:31-34) இது பாவங்கள் மன்னிக்கப்படுவதில் பலன் தந்திருக்கும், கடவுளின் அன்பின் ஆழம் அத்தகையதாயிருந்தது. (மல்கியா 1:2-ஐ ஒத்துப்பாருங்கள்.) இது உண்மையாகவே பெரிய ஈவாக இருந்திருக்கும்.
13. இஸ்ரவேல் கடவுளுடைய குமாரனை ஏற்க மறுத்துவிட்டது எதை இழப்பதில் முடிவடைந்தது? ஆனால் யெகோவாவின் மகிழ்ச்சி ஏன் குறையவில்லை?
13 இந்தப் புதிய உடன்படிக்கையின் பங்காளிகளாவதன் பரிசை யூதரல்லாதோருக்கு நீட்டுவதற்கு முன்னால், யெகோவா, தம்முடைய தீர்க்கதரிசன வார்த்தைக்கு ஒத்திசைய, நியாயமான கால அளவு வரையில் காத்திருந்தார். ஆனால் கடவுளுடைய சொந்தக் குமாரனான, மேசியாவை ஏற்க மறுத்துவிட்டதால், மாம்சப்படியான இஸ்ரவேல் ஜனம் இந்தப் பெரிய ஈவை இழந்துவிட்டது. ஆகையால் யெகோவா, இந்த ஈவை யூத ஜனத்துக்குப் புறம்பான ஜனங்களுக்கு நீட்டுவதன்மூலம் தம்முடைய குமாரனை ஏற்காது தள்ளிவிட்டதை சரி ஈடு செய்தார். இம்முறையில், பெரிய கொடையாளியாக யெகோவாவின் மகிழ்ச்சி குறையாமல் தொடர்ந்தது.
கொடுப்பதன் மகிழ்ச்சி
14. இயேசு கிறிஸ்து ஏன் சர்வலோகம் முழுவதிலும் மிக மகிழ்ச்சியுள்ள சிருஷ்டியாக இருக்கிறார்?
14 யெகோவா “நித்தியானந்த தேவன்.” (1 தீமோத்தேயு 1:11) மற்றவர்களுக்குக் கொடுப்பது அவரை மகிழ்ச்சியாக்கும் ஒரு காரியமாகும். மேலும் பொ.ச. முதற் நூற்றாண்டில், அவருடைய ஒரே பேறான குமாரன் பின்வருமாறு கூறினார்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [மகிழ்ச்சி, NW].” (அப்போஸ்தலர் 20:35) இந்த நியமத்துக்கு ஒத்திசைய, இயேசு சர்வலோகம் முழுவதையும் படைத்த சிருஷ்டிகரின் மிக அதிக மகிழ்ச்சியுள்ள சிருஷ்டியானார். எவ்வாறு? இயேசு கிறிஸ்து மனிதவர்க்கத்தின் நன்மைக்காகத் தம்முடைய உயிரைக் கொடுத்ததன்மூலம், யெகோவா தேவனுக்கு அடுத்தப்படியாக, எல்லாவற்றையும்விட மிகப் பெரிய ஈவைக் கொடுத்தார். உண்மையில், அவர் “நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதி.” (1 தீமோத்தேயு 6:15) இவ்வாறு இயேசு கொடுப்பதன் அதிக மகிழ்ச்சியைப்பற்றித் தாம் சொன்னதை மாதிரியாகச் செய்துகாட்டினார்.
15. எதற்கு முன்மாதிரியாயிருப்பதை யெகோவா ஒருபோதும் நிறுத்திவிடமாட்டார்? அவருடைய அறிவுள்ள சிருஷ்டிகள் எவ்வாறு அவருடைய மகிழ்ச்சியில் ஓரளவை அனுபவிக்க முடியும்?
15 இயேசு கிறிஸ்துவின்மூலம், யெகோவா தேவன் தம்முடைய அறிவுள்ள சிருஷ்டிகள் யாவருக்கும் தயாளமாய்க் கொடுப்பவராக இருக்க ஒருபோதும் தவறமாட்டார் மற்றும் கொடுப்பதில் அவர்களுடைய மிகச் சிறந்த முன்மாதிரியாக இருப்பார். மற்றவர்களுக்கு நல்ல பரிசுகளைக் கொடுப்பதில் கடவுள் இன்பத்தைக் கண்டடைவதைப்போலவே, பூமியிலிருக்கும் தம்முடைய அறிவுள்ள சிருஷ்டிகளின் இருதயங்களில் தயாள உள்ளுணர்ச்சியை அவர் வைத்தார். இம்முறையில் அவர்கள் அவருடைய பண்பியல்பைப் பின்பற்றிப் பிரதிபலித்து, அவருடைய மகிழ்ச்சியில் ஓரளவை அனுபவிக்கின்றனர். (ஆதியாகமம் 1:26; எபேசியர் 5:1) சரியாகவே, இயேசு தம்மைப் பின்பற்றினவர்களுக்கு இவ்வாறு கூறினார்: “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.”—லூக்கா 6:38.
16. லூக்கா 6:38-ல் எந்த வகையான கொடுத்தலை இயேசு குறிப்பிட்டார்?
16 கொடுக்கும் போக்கை ஒரு பழக்கமாக்குவதில் இயேசு மிகச் சிறந்த முன்மாதிரியைத் தம்முடைய சீஷர்களுக்கு வைத்தார். அத்தகைய முறையில் கொடுப்பது பெற்றுக்கொள்வோரின் பங்கில் நல்ல பிரதிபலனைக் கொண்டுவரச் செய்யுமெனக் கூறினார். லூக்கா 6:38-ல், இயேசு பொருள்சம்பந்த ஈவுகளைக் கொடுப்பதைமட்டுமே குறிப்பிடவில்லை. பொருள்சம்பந்தமாய் அவர்களை வறுமையாக்கும் ஒரு போக்கைப் பின்தொடரும்படி அவர் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லவில்லை. அதற்கு மாறாக, ஆவிக்குரிய ஒரு நிறைவேற்ற உணர்வை அவர்களுக்குக் கொடுக்கும் ஒரு போக்கைப் பின்பற்றும்படி அவர்களை வழிநடத்தினார்.
நித்திய மகிழ்ச்சி உறுதியளிக்கப்பட்டது
17. எந்த அதிசயமான ஈவைக் கடவுள் தம்முடைய சாட்சிகளின்பேரில் இந்தக் கடைசி நாட்களில் பொழிந்தருளியிருக்கிறார்?
17 சிருஷ்டிப்பு முழுவதற்கும் தலைவரான யெகோவா, எத்தகைய அதிசயமான ஓர் ஈவை இந்தக் கடைசி நாட்களில் தம்முடைய சாட்சிகளின்மீது பொழிந்திருக்கிறார்! அவர் தம்முடைய ராஜ்யத்தின் நற்செய்தியை நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆட்சிசெய்யும் அவருடைய குமாரன், இயேசு கிறிஸ்துவின் பொறுப்பிலுள்ள கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தை யாவரறிய அறிவிப்போராக இருக்கும் இந்தப் பெரிய சிலாக்கியம் நமக்கு இருக்கிறது. (மத்தேயு 24:14; மாற்கு 13:10) மகா உன்னதக் கடவுளின் வாய்முறையாய்ப் பேசும் சாட்சிகளாக இருக்கும்படி செய்யப்பட்டது ஒப்பிடமுடியாத ஒரு ஈவாகும், மேலும், காரியங்களின் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை முடிவடைவதற்கு முன்பாக மற்றவர்களோடு இந்த ராஜ்ய செய்தியைப் பகிர்ந்துகொள்வதே, கடவுளுடைய மாதிரியைப் பின்பற்றி கொடுக்கும் பழக்கத்தை நாம் கடைப்பிடிக்கக்கூடிய மிகச் சிறந்த முறையாகும்.
18. யெகோவாவின் சாட்சிகளாக, நாம் மற்றவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும்?
18 அப்போஸ்தலன் பவுல் இந்த ராஜ்ய செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கையில் தான் அனுபவித்தத் துன்பங்களைக் குறிப்பிட்டான். (2 கொரிந்தியர் 11:23-27) யெகோவாவின் தற்கால சாட்சிகளும் துன்பங்களை அனுபவிக்கவும் மற்றவர்களுக்கு ராஜ்ய நம்பிக்கையைக் கொடுக்கும் முயற்சியில் தங்கள் சொந்த விருப்பத் தேர்வுகளை ஒருபுறம் ஒதுக்கி வைக்கவும் வேண்டியுள்ளது. ஆட்களின் வீட்டு வாசல்களுக்குச் செல்ல ஒருவேளை நமக்கு மனவிருப்பமிராது, முக்கியமாய் வெட்கமுறும் இயல்புடையோராய் நாமிருந்தால் அவ்வாறிருப்போம். ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றுவோராக இருப்பதால், நாம், “ராஜ்யத்தின் இந்த நற்செய்தியை,” பிரசங்கிப்பதன்மூலம் ஆவிக்குரிய காரியங்களை மற்றவர்களுக்குக் கொடுக்கும் இந்தச் சிலாக்கியத்தைத் தவிர்க்கவோ, தட்டிக்கழிக்கவோ முடியாது. (மத்தேயு 24:14, NW) இயேசு கொண்டிருந்த அதே மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும். மரணத்தை எதிர்ப்படுகையில், அவர் பின்வருமாறு ஜெபித்தார்: “என் பிதாவே, . . . என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” (மத்தேயு 26:39) ராஜ்யத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்குக் கொடுக்கும் காரியத்தில், யெகோவாவின் ஊழியர்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய வேண்டும், தங்கள் சொந்த சித்தத்தை அல்ல—அவர் விரும்புகிறதையே செய்ய வேண்டும், தாங்கள் விரும்பக்கூடியதையல்ல.
19. “நித்திய வீடுகளை” உடையவர்கள் யார்? நாம் அவர்களை எவ்வாறு சிநேகிதர்களாக்கிக் கொள்ள முடியும்?
19 இத்தகைய கொடுப்பது நம்முடைய நேரத்தையும் பொருளாதார வாய்ப்புகளையும் உட்படுத்தும், ஆனால் தேவபக்தியுள்ள கொடுப்போராக இருப்பதால், நம்முடைய மகிழ்ச்சி நித்தியமாயிருக்கும்படி நாம் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ஏன்? ஏனெனில் இயேசு பின்வருமாறு கூறினார்: “அநீதத்திற்கேதுவான உலகப்பொருளால் [உலகப்பிரகாரமான செல்வத்தால், நியு இன்டர்நேஷனல் மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)] உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அப்பொருள் இல்லாமற்போகும்போது அவர்கள் உங்களை நித்திய வீடுகளில் வரவேற்பார்கள்.” (லூக்கா 16:9, தி.மொ.) “நித்திய வீடுகளை” உடையவர்களைச் சிநேகிதராக்கிக்கொள்வதற்கு “அநீதத்திற்கேதுவான உலகப்பொருளைப்” பயன்படுத்துவது நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். சிருஷ்டிகராக, யெகோவாவுக்கே எல்லாம் உரியது, அவருடைய முதற்பேறான குமாரன் எல்லாவற்றின் சுதந்தரவாளியாக அந்த உரிமையில் பங்குகொள்கிறார். (சங்கீதம் 50:10-12; எபிரெயர் 1:1, 2) அவர்களைச் சிநேகிதராக்கிக் கொள்ள, நாம் செல்வத்தை அவர்களுடைய அங்கீகாரத்தைக் கொண்டுவரும் முறையில் பயன்படுத்த வேண்டும். இது மற்றவர்களின் நன்மைக்காக பொருளாதாரங்களைப் பயன்படுத்துவதில் சரியான மனப்பான்மையைக் கொண்டிருப்பதை உட்படுத்துகிறது. (மத்தேயு 6:3, 4; 2 கொரிந்தியர் 9:7, ஒத்துப்பாருங்கள்.) யெகோவா தேவனுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் நம்முடைய சிநேகிதத்தை உறுதிப்படுத்துவதற்குப் பணத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்தலாம். உதாரணமாக, நமக்கிருப்பதை உண்மையான தேவையிலிருக்கும் ஆட்களுக்கு உதவிசெய்வதற்கு மனமகிழ்ச்சியுடன் பயன்படுத்துவதாலும் கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு நம்முடைய பொருளாதார வாய்ப்புகளைச் செலவிடுவதாலும் நாம் இதைச் செய்கிறோம்.—நீதிமொழிகள் 19:17; மத்தேயு 6:33.
20. (எ) ஏன் யெகோவாவும் இயேசுவும் நம்மை “நித்திய வீடுக”ளுக்குள் வரவேற்க முடியும்? இந்த வீடுகள் எங்கே இருக்கலாம்? (பி) நித்திய காலமுழுவதிலும் எது நம்முடைய சிலாக்கியமாயிருக்கும்?
20 யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் சாவாமையுடையோராக இருப்பதனால், என்றென்றும் நம்முடைய சிநேதிதர்களாக இருக்கவும் “நித்திய வீடுக”ளுக்குள் நம்மை வரவேற்கவும் முடியும். இவ்வாறு இவை பரலோகத்தில் பரிசுத்த தூதர்கள் எல்லாருடனும் இருப்பவையாகவோ பூமியின்மீது திரும்பக் கொண்டுவரப்பட்ட பரதீஸில் இருப்பவையாகவோ இருக்கலாம். (லூக்கா 23:43) இயேசு கிறிஸ்துவைக் கொடுத்த கடவுளுடைய அன்புள்ள பரிசு இந்த எல்லாவற்றையும் சாத்தியமாக்கிற்று. (யோவான் 3:16) தம்முடைய சொந்த ஒப்பற்ற மகிழ்ச்சிக்கு ஏதுவாக எல்லா சிருஷ்டிக்கும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருப்பதற்கு யெகோவா தேவன் இயேசுவைப் பயன்படுத்துவார். உண்மையில், நித்திய காலமெல்லாம் யெகோவா தேவனின் ஈடற்ற சர்வலோக அதிகாரத்தின்கீழும் அவருடைய ஒரே பேறான குமாரனாகிய, நம்முடைய கர்த்தரும் மீட்பருமான, இயேசு கிறிஸ்துவின் அரசாதிகாரத்தின் கீழும் நாம்தாமே, கொடுக்கும் சிலாக்கியத்தை உடையோராக இருப்போம். இது தேவபக்தியுள்ள கொடுப்போர் எல்லாருக்கும் நித்திய மகிழ்ச்சியில் பலன்தரும். (w92 1/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻கடவுளுடைய மிகப்பெரிய ஈவு அவருடைய பங்கில் எதைக் கேட்கும்?
◻எந்த வகையான ஊழிய நியமிப்பின்பேரில் கடவுள் தம்முடைய குமாரனை அனுப்பினார்?
◻சர்வலோகம் முழுவதிலும் யார் மிக அதிக மகிழ்ச்சியுள்ள சிருஷ்டி? ஏன்?
◻தேவபக்தியுள்ள கொடுப்பவர்கள் எவ்வாறு நித்திய மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்?
[பக்கம் 10-ன் படம்]
மீட்பின் கிரய பலியாகத் தம்முடைய குமாரனைக் கொடுத்த கடவுளுடைய ஈவை நீங்கள் நன்றியோடு மதிக்கிறீர்களா?
[பக்கம் 12-ன் படம்]
நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலமும் உங்கள் பொருளாதார வாய்ப்புகளைக் கொண்டு அந்த ஊழியத்தை ஆதரிப்பதன்மூலமும் நீங்கள் முதலாவது கடவுளுடைய ராஜ்யத்தைத் தேடுகிறீர்களா?