உங்கள் இருதயத்தை காத்துக்கொள்ளுங்கள்
“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”—நீதிமொழிகள் 4:23.
1, 2. நமது இருதயத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?
கரிபியன் தீவு ஒன்றில் புயல் காற்று வீசி ஓய்ந்த பிறகு மறைவிடத்திலிருந்த வயதான ஒருவர் வெளியே வந்தார். சுற்றிலும் ஏற்பட்ட சேதத்தை பார்வையிடுகையில் தன் வீட்டு வாசலுக்கு முன்பு பல ஆண்டுகள் கம்பீரமாக நின்றிருந்த ஒரு பெரிய மரம் விழுந்து கிடப்பதை கவனித்தார். ‘அக்கம்பக்கத்தில் உள்ள சிறிய மரங்கள் விழாமலிருக்க இது எப்படி விழுந்தது?’ என அவர் யோசித்தார். விழுந்து கிடந்த மரத்தின் அடிமரத்தை பார்த்தபோது அவருக்கு உண்மை புரிந்தது. அசைக்க முடியாததாக தோன்றிய அந்த மரத்தின் உட்பகுதி உளுத்துப் போயிருந்தது, மறைவாக இருந்த அந்த நிலையை புயல்காற்று வெளிப்படுத்தியது.
2 கிறிஸ்தவ ஜீவ பாதையில் உறுதியாக நிலைநிற்பது போல் தோன்றும் ஒரு உண்மை வணக்கத்தாரின் விசுவாசம் சோதிக்கப்படுகையில் அவர் விழுந்துபோனால் அது எவ்வளவு பெரிய துயரம். “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” என பைபிள் சொல்வது முற்றிலும் உண்மையே. (ஆதியாகமம் 8:21) அதாவது தொடர்ந்து ஜாக்கிரதையாய் இல்லையென்றால் மிகவும் நல்ல இருதயங்கள்கூட பொல்லாப்பு செய்ய தூண்டப்படலாம். அபூரண மனிதர்களின் இருதயங்கள் அனைத்துமே கெட்டுப்போக முடியும் என்பதால் பின்வரும் ஆலோசனைக்கு நாம் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும்: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” (நீதிமொழிகள் 4:23) ஆகவே, நமது அடையாளப்பூர்வ இருதயத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?
இடைவிடாத பரிசோதனை அவசியம்
3, 4. (அ) நிஜ இருதயத்தைப் பற்றி என்ன கேள்விகள் கேட்கப்படலாம்? (ஆ) நமது அடையாளப்பூர்வ இருதயத்தை பரிசோதிக்க நமக்கு எது உதவும்?
3 பரிசோதனைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றால் அவர் உங்கள் இருதயத்தையும் சோதிப்பார். போதுமான ஊட்டச்சத்து பெறுவதை இருதயம் உட்பட உங்கள் உடல்நலம் சுட்டிக்காட்டுகிறதா? உங்கள் இரத்த அழுத்தம் எவ்வாறு உள்ளது? உங்கள் இருதயத்துடிப்பு சீராகவும் பலமாகவும் உள்ளதா? போதுமான உடற்பயிற்சி செய்கிறீர்களா? உங்கள் இருதயத்திற்கு தேவையற்ற அழுத்தம் ஏற்படுகிறதா?
4 நிஜ இருதயத்தை தவறாமல் பரிசோதிப்பது அவசியமென்றால், நமது அடையாளப்பூர்வ இருதயத்தை பற்றி என்ன சொல்லலாம்? யெகோவா அதை பரிசோதிக்கிறார். (1 நாளாகமம் 29:17) அவ்வாறே நாமும் அதை பரிசோதிக்க வேண்டும். எப்படி? பின்வரும் கேள்விகளை கேட்பதன் மூலமே: தவறாத தனிப்பட்ட படிப்பு, கூட்டங்கள் ஆகியவற்றின் மூலம் இருதயத்திற்கு போதுமான ஆவிக்குரிய உணவு கிடைக்கிறதா? (சங்கீதம் 1:1, 2; எபிரெயர் 10:24, 25) யெகோவாவின் செய்தி என் இருதயத்திற்கு முக்கியமானதாக, ராஜ்ய பிரசங்கிப்பிலும் சீஷராக்கும் வேலையிலும் பங்குகொள்ளும்படி தூண்டுவிக்கும், “என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல்” உள்ளதா? (எரேமியா 20:9; மத்தேயு 28:19, 20; ரோமர் 1:15, 16) வாய்ப்பு கிடைக்கும்போது முழுநேர ஊழியத்தின் ஏதாவதொரு அம்சத்தில் பங்குகொள்ள கடினமாய் பிரயாசப்படும்படி தூண்டுவிக்கப்படுகிறேனா? (லூக்கா 13:24) என் அடையாளப்பூர்வ இருதயம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறது? மெய் வணக்கத்தால் ஒன்றுபட்ட இருதயம் உள்ளவர்களோடு கூட்டுறவு கொள்ள விரும்புகிறேனா? (நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33) ஏதாவது குறைபாடு தென்பட்டால் அதை உடனடியாக கவனித்து, சரிசெய்ய நடவடிக்கை எடுப்போமாக.
5. விசுவாசத்திற்கு வரும் சோதனைகள் என்ன நல்ல நோக்கத்தை சேவிக்கின்றன?
5 நம் விசுவாசத்தை சோதிக்கும் சூழ்நிலைமைகளை அடிக்கடி சந்திக்கிறோம். நம் இருதயத்தின் நிலைமையை அறிந்துகொள்ள இந்த சந்தர்ப்பங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழையும் தறுவாயிலிருந்த இஸ்ரவேலரிடம் மோசே இவ்வாறு கூறினார்: “உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்தி”னார். (உபாகமம் 8:2) எதிர்பாராத சூழ்நிலைகளை அல்லது சோதனைகளை சந்திக்கையில் வெளிப்படும் உணர்ச்சிகள், ஆசைகள், அல்லது பிரதிபலிப்புகளைக் கண்டு நாமே அநேக சமயங்களில் ஆச்சரியப்படுவது இல்லையா? நமக்கு நேரிடும்படி யெகோவா அனுமதிக்கும் சோதனைகள் நமது குறைபாடுகளை உணர்த்தி, முன்னேற வாய்ப்பளிக்கின்றன. (யாக்கோபு 1:2-4) சோதனைகளை சந்திக்கையில் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதை பற்றி ஜெபத்தோடு சிந்திக்க தவறாதிருப்போமாக!
நம் பேச்சு எதை வெளிப்படுத்துகிறது?
6. நாம் பேச விரும்பும் காரியங்கள் நம் இருதயத்தை பற்றி எதை வெளிப்படுத்தலாம்?
6 நம் இருதயத்தில் சேமித்து வைத்திருப்பதை நாம் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” என இயேசு கூறினார். (லூக்கா 6:45) நாம் பொதுவாக பேசும் விஷயங்கள் நம் இருதயம் எதை செய்ய தீர்மானித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டும். நாம் பொருளாதார காரியங்களையும் உலகப்பிரகாரமான வெற்றிகளையும் பற்றியே அடிக்கடி பேசுகிறோமா? அல்லது ஆவிக்குரிய காரியங்களையும் தேவராஜ்ய இலக்குகளையும் மையமாக வைத்தே நம் பேச்சு அமைகிறதா? மற்றவர்களுடைய குறைகளை பற்றி பேசுவதற்கு பதிலாக அன்போடு அவற்றை மூடுவதற்கு முயலுகிறோமா? (நீதிமொழிகள் 10:11, 12) மற்றவர்களையும் அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களையும் பற்றியே அதிகமாக பேசி, ஆவிக்குரிய மற்றும் தார்மீக காரியங்களை பற்றி குறைவாக பேசுகிறோமா? மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தேவையின்றி மூக்கை நுழைப்பதையே இது சுட்டிக்காட்டுகிறதா?—1 பேதுரு 4:15.
7. யோசேப்பின் பத்து சகோதரர்கள் பற்றிய பதிவிலிருந்து நம் இருதயத்தை காத்துக்கொள்வது சம்பந்தமாக என்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம்?
7 ஒரு பெரிய குடும்பத்தில் நடந்ததை சிந்தித்து பாருங்கள். யாக்கோபின் பத்து மூத்த குமாரர்களும் தங்கள் இளைய சகோதரனான யோசேப்புடன் “சமாதானமாய் பேச இயலாமல்” இருந்தார்கள். ஏன்? அவர்களுடைய தகப்பன் அவரை அதிகமாய் நேசித்ததால் அவர்கள் பொறாமைப்பட்டார்கள். பின்னர், தம்முடைய தயவு யோசேப்புக்கு இருப்பதை நிரூபிக்கும் கனவுகளைத் தந்து யெகோவா அவரை ஆசீர்வதிக்கையில் “அவனை பகைக்க மேலுமான காரணத்தை” கண்டார்கள். (ஆதியாகமம் 37:4, 5, 11, NW) இரக்கமின்றி தங்கள் சகோதரனை அடிமையாக விற்றார்கள். பிறகு, தங்கள் தவறை மூடி மறைப்பதற்காக, யோசேப்பு ஒரு காட்டு மிருகத்தால் கொல்லப்பட்டதாக நினைக்கும்படி தங்கள் தகப்பனை ஏமாற்றினார்கள். அந்த சந்தர்ப்பத்தில் யோசேப்பின் பத்து சகோதரர்கள் தங்கள் இருதயத்தை காத்துக்கொள்ள தவறினார்கள். மற்றவர்களிடம் குறைகாணும் பழக்கம் நமக்கிருந்தால் நம் இருதயத்தில் பொறாமை இருப்பதற்கான அத்தாட்சியாக அது இருக்குமா? நாம் என்ன பேசுகிறோம் என்பதை பரிசோதித்து தவறான மனச்சாய்வுகளை நீக்கிப்போட நாம் கவனமாய் இருக்க வேண்டும்.
8. ஒரு பொய் சொல்லிவிட்டால் நம் இருதயத்தை ஆராய எது நமக்கு உதவும்?
8 ‘தேவன் எவ்வளவேனும் பொய்யுரையாதவர்’ என்றபோதிலும் அபூரண மனிதர்கள் பொய் சொல்லும் மனச்சாய்வுடையவர்கள். (எபிரெயர் 6:18) “எந்த மனுஷனும் பொய்யன்” என சங்கீதக்காரன் புலம்பினார். (சங்கீதம் 116:11) அப்போஸ்தலன் பேதுருகூட மூன்று தரம் பொய் சொல்லி இயேசுவை மறுதலித்தார். (மத்தேயு 26:69-75) ஆகவே, பொய் பேசாதிருக்க நாம் கவனமாய் இருக்க வேண்டும், ஏனெனில் யெகோவா ‘பொய் நாவை’ வெறுக்கிறார். (நீதிமொழிகள் 6:16-19) நாம் எப்போதாவது பொய் சொல்லிவிட்டால் அதற்கான காரணத்தை ஆராய்வது அவசியம். மனித பயத்தின் காரணமாக பொய் சொன்னோமா? தண்டனைக்கு பயந்து சொல்லிவிட்டோமா? நற்பெயரை காத்துக்கொள்வது அல்லது சுயநலமே பிரச்சினையின் அடிப்படை காரணமா? காரணம் எதுவாக இருந்தாலும் சரி அதை பற்றி சிந்தித்து, நம் குறையை மனத்தாழ்மையோடு ஒப்புக்கொண்டு, யெகோவாவின் மன்னிப்பிற்காக மன்றாடி, அந்த குறையை சரிசெய்ய அவருடைய உதவியை கேட்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கும்! அந்த உதவியை அளிக்க ‘சபையின் மூப்பர்களே’ மிக சிறந்த நிலையில் இருக்கிறார்கள்.—யாக்கோபு 5:14.
9. நம் ஜெபங்கள் நம் இருதயத்தை பற்றி எதை வெளிப்படுத்தலாம்?
9 இளம் அரசனாகிய சாலொமோன் ஞானமும் அறிவும் வேண்டுமென கேட்டபோது யெகோவா இவ்வாறு பதிலளித்தார்: “இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், . . . கேளா[ததால்], . . . ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், . . . ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன்.” (2 நாளாகமம் 1:11, 12) சாலொமோன் கேட்டவற்றிலிருந்தும் கேட்காதவற்றிலிருந்தும் அவருக்கு மிகவும் பிரியமானது எது என்பதை யெகோவா அறிந்தார். நம்முடைய ஜெபங்கள் நம் இருதயத்தை பற்றி எதை வெளிப்படுத்துகின்றன? அறிவு, ஞானம், புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றிற்காக ஏங்குகிறோம் என்பதை நமது ஜெபங்கள் சுட்டிக்காட்டுகின்றனவா? (நீதிமொழிகள் 2:1-6; மத்தேயு 5:3; NW) ராஜ்ய அக்கறைகளே நம் இருதயத்திற்கு பிரியமானதாக இருக்கிறதா? (மத்தேயு 6:9, 10) நம் ஜெபங்கள் இயந்திரத்தனமாகவும் மேலோட்டமாகவும் இருந்தால் யெகோவாவின் செயல்களை பற்றி தியானிக்க நேரம் எடுக்க வேண்டிய தேவையை அது சுட்டிக்காட்டலாம். (சங்கீதம் 103:2) தங்கள் ஜெபங்கள் வெளிப்படுத்துவதை ஆராய எல்லா கிறிஸ்தவர்களுமே கவனமாய் இருக்க வேண்டும்.
நம் செயல்கள் என்ன சொல்கின்றன?
10, 11. (அ) விபச்சாரமும் வேசித்தனமும் எங்கே துவங்குகின்றன? (ஆ) ‘இருதயத்தில் விபச்சாரம்’ செய்யாமலிருக்க எது நமக்கு உதவும்?
10 சொற்களைவிட செயல்கள் அதிகத்தை வெளிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. இருதயத்தில் நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதை பற்றி நம் செயல்கள் அதிகத்தை தெரிவிக்கின்றன. உதாரணமாக, ஒழுக்க விஷயங்களில் இருதயத்தை காத்துக்கொள்வது, வேசித்தனம் அல்லது விபச்சாரம் செய்யாமலிருப்பதை மட்டுமே குறிப்பதில்லை. தமது மலைப்பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு கூறினார்: “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” (மத்தேயு 5:28) நம் இருதயத்தில்கூட விபச்சாரம் செய்யாமலிருப்பது எவ்வாறு?
11 விசுவாசமுள்ள முற்பிதாவான யோபு திருமணமான கிறிஸ்தவ ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல முன்மாதிரி. யோபு, இளைய பெண்களோடு இயல்பான தொடர்புகளை வைத்திருப்பார், தேவைப்படுகையில் இரக்கத்தோடு அவர்களுக்கு உதவியும் செய்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களோடு காதலீடுபாடு கொள்வது உத்தம புருஷனாகிய அவரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏன்? ஏனெனில், பெண்களை காம உணர்ச்சியோடு ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது என அவர் உறுதியாக தீர்மானித்திருந்தார். அவர் இவ்வாறு கூறினார்: “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1) நாமும் நம் கண்களோடு அதைப் போன்ற ஒரு உடன்படிக்கை செய்துகொண்டு நம் இருதயத்தை காத்துக்கொள்வோமாக.
12. உங்கள் இருதயத்தை பாதுகாப்பதில் லூக்கா 16:10-ஐ எவ்வாறு பொருத்துவீர்கள்?
12 “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்” என கடவுளுடைய குமாரன் கூறினார். (லூக்கா 16:10) ஆம், அன்றாட வாழ்க்கையின் சிறுசிறு விஷயங்களிலும், நம் வீட்டிற்குள் நடக்கும் காரியங்களிலும் நம் நடத்தையை ஆராய வேண்டும். (சங்கீதம் 101:2) வீட்டிலிருக்கையில், டிவி பார்க்கையில், அல்லது இன்டர்நெட்டை உபயோகிக்கையில் பின்வரும் வேதப்பூர்வ ஆலோசனையை பின்பற்ற கவனமாய் இருக்கிறோமா? “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்.” (எபேசியர் 5:3, 4) டிவியில் அல்லது வீடியோ விளையாட்டுகளில் காணப்படும் வன்முறை பற்றி என்ன சொல்லலாம்? “கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.”—சங்கீதம் 11:5.
13. நம் இருதயத்திலிருந்து வெளிவருவதை ஆராய்கையில் என்ன எச்சரிக்கை பொருத்தமானது?
13 “இருதயமே எல்லாவற்றிலும் வஞ்சனையுள்ளது, மிகவும் கெட்டுப்போனது” என எரேமியா எச்சரித்தார். (எரேமியா 17:9, தி.மொ.) நம் தவறுகளுக்கு சாக்குப்போக்கு சொல்லும்போதும், குறைபாடுகளை பூசிமெழுகும்போதும், நம்மிடமுள்ள மிக மோசமான குறைபாடுகளை நியாயப்படுத்தும்போதும், அல்லது சாதித்தவற்றைப் பற்றி பெருமையடிக்கும்போதும் இருதயத்தின் இந்த வஞ்சனை வெளிப்படும். கெட்டுப்போன இருதயம் இரண்டு விதமாக செயல்படும் திறன் கொண்டது, இச்சக உதடுகள் ஒன்றை சொல்ல, செயல்களோ வேறொன்றை வெளிப்படுத்தும். (சங்கீதம் 12:2; நீதிமொழிகள் 23:7) ஆகவே, நம் இருதயத்திலிருந்து என்ன வெளிவருகிறது என்பதை நேர்மையாக ஆராய்வது எவ்வளவு முக்கியம்!
நம் கண் தெளிவாக உள்ளதா?
14, 15. (அ) ‘தெளிவான’ கண் என்பது என்ன? (ஆ) கண்ணை தெளிவாக வைப்பது இருதயத்தை காத்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவும்?
14 “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது” என இயேசு கூறினார். “உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்” என அவர் மேலும் கூறினார். (மத்தேயு 6:22) தெளிவான கண், ஒரே இலக்கில் அல்லது நோக்கத்தில் குறியாக உள்ளது, அதிலிருந்து திசை திரும்பாமல் அல்லது கவனம் சிதறாமல் இருக்கிறது. “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடு”வதிலேயே நம் கண் குறியாக இருக்க வேண்டும். (மத்தேயு 6:33) நம் கண் தெளிவாக இல்லையென்றால் நமது அடையாளப்பூர்வ இருதயத்திற்கு என்ன நேரிடும்?
15 வாழ்க்கை நடத்துவதற்காக சம்பாதிப்பதைப் பற்றி சிந்தித்து பாருங்கள். குடும்பத்தின் தேவைகளை கவனித்துக் கொள்வது ஒரு கிறிஸ்தவ கடமையாகும். (1 தீமோத்தேயு 5:8) ஆனால் உணவு, உடை, இருப்பிடம், மற்ற பொருட்கள் போன்றவற்றில் அதிநவீனமான, மிகச் சிறந்த, அதிக விரும்பத்தக்கவற்றையே வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை நம்மை ஆட்டிப்படைத்தால் என்ன செய்வது? அது நம் மனதையும் இருதயத்தையும் உண்மையில் அடிமைப்படுத்தி நம் வணக்கத்தை அரைமனதோடு செய்யும் ஒன்றாக ஆக்கிவிடாதா? (சங்கீதம் 119:113, NW; ரோமர் 16:18) குடும்பம், வியாபாரம், பொருளாதார காரியங்கள் போன்றவற்றை மையமாக வைத்தே நம் வாழ்க்கை அமையும்படி சரீர தேவைகளை கவனித்துக் கொள்வதிலேயே நாம் ஏன் மூழ்கிவிட வேண்டும்? ஏவப்பட்ட பின்வரும் ஆலோசனையை நினைவில் வையுங்கள்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.”—லூக்கா 21:34, 35.
16. கண்ணைப் பற்றி இயேசு என்ன ஆலோசனை கூறினார், ஏன்?
16 மனமும் இருதயமும் வெளி உலகத்தோடு தொடர்புகொள்வதற்கான ஒரு முக்கிய வழி நமது கண்ணே. அது எதில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறதோ அதுவே நம் எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள் ஆகியவற்றை பெரிதும் பாதிக்கிறது. கண்களால் வரும் சோதனை எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை அடையாள மொழியில் இயேசு இவ்வாறு கூறினார்: “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.” (மத்தேயு 5:29) தவறான காரியங்களில் கவனத்தை ஒருமுகப்படுத்தாதபடி நம் கண்ணை காத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, தவறான ஆசைகளையும் விருப்பங்களையும் தூண்டிவிடுவதற்காகவே தயாரிக்கப்பட்டவற்றை தொடர்ந்து பார்க்க அதை அனுமதிக்கக் கூடாது.
17. கொலோசெயர் 3:5-ஐப் பொருத்துவது இருதயத்தை காத்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவும்?
17 ஆனால், வெளி உலகத்தோடு தொடர்புகொள்வதற்கான ஒரே வழி பார்வை மட்டுமே அல்ல. தொடுதல், கேட்டல் போன்ற மற்ற உணர்வுகளும் உள்ளன; அவற்றோடு சம்பந்தப்பட்ட உறுப்புகளை குறித்தும் கவனமாயிருக்க வேண்டும். “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்” என அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார்.—கொலோசெயர் 3:5.
18. தவறான எண்ணங்கள் தலைதூக்கினால் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
18 நம் மனதின் ஆழங்களில் ஒரு தவறான ஆசை முளைக்கலாம். அதைப் பற்றியே சிந்திக்கையில் பொதுவாக அந்த தவறான ஆசை வேர்விட்டு வளர்ந்து நம் இருதயத்தை பாதிக்கலாம். “பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்.” (யாக்கோபு 1:14, 15) பெரும்பாலும் இவ்வாறுதான் சுயபுணர்ச்சிக்கு ஆளாவதாக அநேகர் ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே, நம் மனதை ஆவிக்குரிய காரியங்களால் நிரப்புவது எவ்வளவு முக்கியம்! (பிலிப்பியர் 4:8) அப்படியே தவறான எண்ணம் நம் மனதிற்குள் வந்தாலும், அதை நீக்கிவிட முயல வேண்டும்.
‘முழு இருதயத்தோடு யெகோவாவை சேவியுங்கள்’
19, 20. முழு இருதயத்தோடு யெகோவாவை சேவிப்பதில் நாம் எவ்வாறு வெற்றி பெறலாம்?
19 முதிர்வயதில் தாவீது ராஜா தன் மகனிடம் இவ்வாறு கூறினார்: “என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம [“முழு,” NW] இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்.” (1 நாளாகமம் 28:9) சாலொமோனும்கூட ‘கீழ்ப்படிதலுள்ள இருதயத்திற்காக’ ஜெபித்தார். (1 இராஜாக்கள் 3:9, NW) இருந்தாலும், அப்படிப்பட்ட இருதயத்தை தன் வாழ்நாள் முழுவதும் காத்துக்கொள்ளும் கடினமான சவாலை அவர் எதிர்ப்பட்டார்.
20 இந்த விஷயத்தில் நாம் வெற்றிபெற வேண்டுமென்றால், யெகோவாவுக்கு உகந்த இருதயத்தை வளர்த்துக்கொள்வதோடு அதை காத்துக்கொள்வதும் அவசியம். இதை செய்ய கடவுளுடைய வார்த்தையின் நினைப்பூட்டுதல்களை நம் இருதயத்திற்கு பிரியமானவையாக, அதாவது “இருதயத்துக்குள்ளே” வைக்க வேண்டும். (நீதிமொழிகள் 4:20-22) நம் இருதயத்தை சோதித்து பார்ப்பதை பழக்கமாக்கிக் கொண்டு, நம் சொல்லும் செயலும் எதை வெளிப்படுத்துகின்றன என்பதை ஜெபத்தோடு சிந்தித்து பார்க்க வேண்டும். நமக்கு தென்படும் குறைபாடுகளை சரிசெய்ய யெகோவாவின் உதவியை ஊக்கத்தோடு தேடவில்லை என்றால் அவ்வாறு சிந்தித்து பார்ப்பதால் என்ன பயன்? நம் புலனுணர்வுகள் மூலம் எதை உட்கொள்கிறோம் என்பதிலும் ஜாக்கிரதையாய் இருப்பது எவ்வளவு முக்கியம்! அவ்வாறு செய்கையில், ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும் நம் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’ என்ற உறுதி நமக்குள்ளது. (பிலிப்பியர் 4:6, 7) ஆம், வேறு எதையும்விட நம் இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக்கொண்டு, முழு இருதயத்தோடு யெகோவாவை சேவிக்க தீர்மானமாய் இருப்போமாக.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இருதயத்தை காத்துக்கொள்வது ஏன் முக்கியம்?
• நாம் சொல்வதை ஆராய்வது நம் இருதயத்தை காத்துக்கொள்ள எவ்வாறு உதவும்?
• நம் கண்ணை நாம் ஏன் ‘தெளிவாக’ வைக்க வேண்டும்?
[பக்கம் 23-ன் படங்கள்]
வெளி ஊழியத்தில், கூட்டங்களில், வீட்டில் நாம் பொதுவாக எதைப் பற்றி பேசுகிறோம்?
[பக்கம் 25-ன் படங்கள்]
தெளிவான கண் கவனம் சிதறாமல் இருக்கும்