வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
இயேசுவின் தாயாகிய மரியாள் தனக்கு உறவினரான எலிசபெத்தைக் காணச் சென்றபோது ஏற்கெனவே கர்ப்பமாக இருந்தார்களா?
ஆம், அவ்வாறே இருந்திருக்கவேண்டும் எனத் தெரிகிறது.
லூக்கா 1-ம் அதிகாரத்தில், (முழுக்காட்டுபவராகிய) யோவானைப் பெற்றெடுத்த ஆசாரியனாகிய சகரியாவின் மனைவி கர்ப்பமாக இருந்ததைப்பற்றி நாம் முதலில் வாசிக்கிறோம். எலிசபெத்துடைய “ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன்” மரியாளைச் சந்தித்து, அவர்கள் கர்ப்பமாகி ‘உன்னதமானவருடைய குமாரனை’ பெற்றெடுப்பார்கள் என்று சொன்னார். (லூக்கா 1:26, 27, 30-33) ஆனால் மரியாள் எப்போது கர்ப்பமானார்கள்?
கர்ப்பமாக இருந்த தன் உறவினராகிய எலிசபெத்தைச் சந்திப்பதற்கு உடனடியாக மரியாள் யூதாவுக்குப் பயணப்பட்டதாக லூக்காவின் பதிவு தொடர்ந்து சொல்கிறது. அந்த இரு பெண்களும் சந்தித்தபோது, எலிசபெத்தின் வயிற்றிலிருந்த சிசு (யோவான்) துள்ளியது. ‘மரியாளுடைய கர்ப்பத்தின் கனியை’ பற்றி எலிசபெத்து பேசினார்கள்; மரியாளை “என் ஆண்டவருடைய தாயார்” என்றும் அழைத்தார்கள். (லூக்கா 1:39-44) ஆகவே, மரியாள் ஏற்கெனவே கருவுற்றிருந்தார்கள் என்பதும், எலிசபெத்தைப் பார்க்கச் சென்றபோது கர்ப்பமாக இருந்தார்கள் என்பதுமே நியாயமான முடிவாக இருக்கிறது.
லூக்கா 1:56 இவ்வாறு வாசிக்கிறது: “மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.” சரியாக நாட்காட்டியில் எந்தத் தேதி என்று இந்த வசனம் துல்லியமான கணக்கைக் கொடுக்கவில்லை. “ஏறக்குறைய மூன்றுமாதம்” என்று அது சொல்கிறது; கர்ப்பமான நிலையிலிருக்கும் எலிசபெத்து ஒன்பதாம் மாதத்தில் இருந்திருக்கவேண்டும்.
எலிசபெத்து கர்ப்பமாக இருந்த காலத்தின் பிற்பட்ட பகுதியில் அவர்களுக்கு உதவியாக இருந்த பிறகு, மரியாள், நாசரேத்திலுள்ள தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினார்கள். எலிசபெத்து (யோவானை) பெற்றெடுத்ததும், பலர் பார்க்க வருவார்கள் என்றும் அவர்களில் சிலர் உறவினர்களாகக்கூட இருக்கலாம் என்பதையும் மரியாள் ஒருவேளை உணர்ந்திருக்கக்கூடும். கர்ப்பிணியாக இருந்த திருமணமாகாத ஒரு இளம்பெண்ணுக்கு அது தர்மசங்கடமான நிலைமையாக இருக்கக்கூடும். மரியாள் நாசரேத்துக்குப் புறப்பட்டபோது, அவர்கள் எவ்வளவு மாத கர்ப்பிணியாக இருந்தார்கள்? அவர்கள் எலிசபெத்துடனே “ஏறக்குறைய மூன்றுமாதம்” இருந்தபடியால், மரியாள் நாசரேத்துக்குத் திரும்பியபோது ஒருவேளை தன் கர்ப்பகாலத்தின் மூன்றாம் மாத பிற்பகுதியில் அல்லது நான்காம் மாத ஆரம்பத்தில் இருந்திருக்கவேண்டும்.