அவர்கள் குற்றமற்றவர்களாய் நடந்ததற்காகப் பலனளிக்கப்பட்டார்கள்
யெகோவா தமது உண்மையுள்ள ஊழியர்களை ஆசீர்வதித்து பலனளிக்கிறார். கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேறுவதைப் பார்ப்பதற்கு அவர்கள் சிலகாலம் காத்திருக்கவேண்டியிருக்கலாம்; ஆனால் அவருடைய ஆசீர்வாதத்தை அனுபவிக்கையில் எவ்வளவு சந்தோஷகரமாக இருக்கிறது!
இது சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்குமுன், யூத ஆசாரியனான சகரியா மற்றும் அவருடைய மனைவியாகிய எலிசபெத்து ஆகியோரின் விஷயத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டது. அவர்கள் இருவருமே ஆரோனின் குடும்பத்தாராயிருந்தனர். இஸ்ரவேலர் கடவுளை உண்மையுடன் சேவித்தால் அவர்களுக்குப் பிள்ளைகளைக் கொடுத்து ஆசீர்வதிப்பதாகக் கடவுள் வாக்களித்திருந்தார். பிள்ளைகள் ஒரு பலன் என்று அவர் சொன்னார். (லேவியராகமம் 26:9; சங்கீதம் 127:4) என்றாலும், சகரியாவும் எலிசபெத்தும் பிள்ளையில்லாதவர்களாகவும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள்.—லூக்கா 1:1-7.
சகரியாவும் எலிசபெத்தும் “கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்,” என்று வேத எழுத்துக்கள் சொல்கின்றன. (லூக்கா 1:6) அவர்கள் கடவுளை அந்த அளவிற்கு நேசித்ததால், ஒரு நீதியான போக்கைப் பின்தொடர்வதும் அவருடைய கட்டளைகளைக் காத்துக்கொள்வதும் அவர்களுக்குப் பாரமானதாக இருக்கவில்லை.—1 யோவான் 5:3.
எதிர்பாரா ஆசீர்வாதங்கள்
பொ.ச.மு. 3-ம் வருடத்தின் வசந்தகாலத்தின் பிற்பகுதி அல்லது கோடைகாலத்தின் ஆரம்பத்திற்கு நாம் வருவோம். மகா ஏரோது யூதேயாவில் ராஜாவாக ஆளுகிறார். ஒரு நாள், ஆசாரியனாகிய சகரியா எருசலேம் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைகிறார். மக்கள் தேவாலயத்திற்கு வெளியே கூடி ஜெபம் செய்துகொண்டிருக்கையில், அவர் பொற்பீடத்தின்மேல் தூபங்காட்டிக் கொண்டிருக்கிறார். தினசரி ஊழியங்களில் மிகவும் மதிப்பானதாக ஒருவேளை கருதப்பட்டிருந்த இது பலி செலுத்தப்பட்டபின் செய்யப்படுகிறது. ஒரு ஆசாரியனுக்கு தன் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இந்தச் சிலாக்கியம் கிடைத்திருக்கக்கூடும்.
சகரியாவினால் தான் காண்பதை நம்பவே முடியவில்லை. யெகோவாவின் தூதன் தானே தூப பீடத்தின் வலது பக்கத்தில் நிற்கிறார்! வயதான ஆசாரியன் குழப்பமடைந்து, பயப்படுகிறார். ஆனால் அந்தத் தூதன் சொல்கிறார்: “சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.” ஆம், எலிசபெத்து, சகரியாவின் ஊக்கமான ஜெபங்களை யெகோவா கேட்டிருக்கிறார்.—லூக்கா 1:8-13.
அந்தத் தூதன் மேலுமாகச் சொல்கிறார்: “உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.” யோவான் கடவுளுடைய பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு வாழ்நாள் முழுவதும் ஒரு நசரேயனாக இருப்பார். அந்தத் தூதன் தொடர்கிறார்: “அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்.”—லூக்கா 1:14-17.
சகரியா கேட்கிறார்: “இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே.” அந்தத் தூதன் பதிலளிக்கிறார்: “நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய்.” சகரியா தேவாலயத்திலிருந்து வெளியே வந்தபோது, அவரால் பேச முடியவில்லை; அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறார் என்று மக்கள் அறிந்துகொள்கின்றனர். அவரால் முடிந்ததெல்லாம், தன் எண்ணங்களைத் தெரிவிக்க சைகைகளைப் பயன்படுத்தி சாடைகாட்டுவது மட்டுமே. அவருடைய பொது ஊழியம் முடிந்ததும், அவர் வீட்டுக்குத் திரும்புகிறார்.—லூக்கா 1:18-23.
சந்தோஷத்திற்கான காரணம்
வாக்குப்பண்ணப்பட்டபடியே, விரைவில் எலிசபெத்து சந்தோஷப்படுவதற்குக் காரணத்தைக் கொண்டிருக்கிறார்கள். மலடி என்ற பழிதூற்றலை நீக்கும்வண்ணம் அவர்கள் கர்ப்பந்தரிக்கிறார்கள். அவர்களுடைய உறவினளான மரியாளும் சந்தோஷப்படுகிறார்கள்; ஏனென்றால் அதே தூதன் அவர்களிடம் சொல்கிறார்: “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.” “[யெகோவாவுக்கு, NW] அடிமை” என்ற பாகத்தை வகிக்க மரியாள் மனமுள்ளவர்களாய் இருந்தார்கள்.—லூக்கா 1:24-38.
யூத மலைப்பாங்கான நாட்டில் உள்ள ஒரு நகரிலிருக்கும் சகரியா மற்றும் எலிசபெத்தின் வீட்டிற்கு மரியாள் விரைந்து செல்கிறார்கள். மரியாளின் வாழ்த்துதல் சத்தத்தைக் கேட்டதும், எலிசபெத்தின் வயிற்றிலுள்ள சிசு துள்ளுகிறது. கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உந்துவிப்பால், எலிசபெத்து உரத்த சத்தமாகச் சொல்கிறார்கள்: “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்.” மரியாள் மிகுந்த சந்தோஷத்துடன் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரையாக எலிசபெத்துடன் தங்குகிறார்கள்.—லூக்கா 1:39-56.
யோவான் பிறக்கிறார்
வயதான எலிசபெத்துக்கும் சகரியாவுக்கும் குறித்த காலத்தில் ஒரு மகன் பிறக்கிறான். எட்டாம் நாளில், அந்தச் சிசுவுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. உறவினர் அந்தப் பையனை சகரியா என்றழைக்கவேண்டும் என்கின்றனர்; ஆனால் எலிசபெத்து சொல்கிறார்கள்: “அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும்.” இன்னும் பேசமுடியாமல் இருக்கிற அவர்களுடைய கணவன் ஒத்துக்கொள்கிறாரா? ஒரு எழுத்துப் பலகையில் அவர் எழுதுகிறார்: “இவன் பேர் யோவான்.” உடனடியாக, சகரியாவின் நாக்கு கட்டவிழ்க்கப்பட்டு, அவர் பேசத் தொடங்கி, யெகோவாவை ஸ்தோத்திரிக்கிறார்.—லூக்கா 1:57-66.
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, சந்தோஷமுள்ள அந்த ஆசாரியன் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதமாக வரும் ஒரு வித்தைப் பற்றிய ஆபிரகாமிய உடன்படிக்கைக்கு இசைவாக, வாக்குப்பண்ணப்பட்ட மீட்பர்—‘தாவீதின் வம்சத்து இரட்சணியக் கொம்பு’—ஏற்கெனவே எழுப்பப்பட்டிருப்பது போல அவர் பேசுகிறார். (ஆதியாகமம் 22:15-18) மேசியாவின் முன்னோடியாக, அற்புதகரமாகப் பிறந்த சகரியாவின் சொந்த மகன் ‘யெகோவாவுக்கு முன்பாகச் சென்று வழியை ஆயத்தம்பண்ணவும், மக்களுக்கு இரட்சிப்பைப் பற்றிய அறிவைத் தெரியப்படுத்தவும்’ செய்வார். வருடங்கள் கடந்துசென்றபோது, யோவான் தொடர்ந்து வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டார்.—லூக்கா 1:67-80.
அபரிமிதமாகப் பலனளிக்கப்பட்டனர்
சகரியாவும் எலிசபெத்தும் விசுவாசம் மற்றும் பொறுமையின் சிறந்த உதாரணங்களாக இருந்தனர். அவர்கள் கடவுளுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தாலும், யெகோவாவை உண்மையுடன் சேவிப்பதில் தொடர்ந்திருந்தனர்; அவர்களுடைய மிகப் பெரிய ஆசீர்வாதங்கள் அவர்கள் மிக முதிர்ந்த வயதானவர்களானபோதுதான் கிடைத்தன.
இருந்தாலும், எலிசபெத்தும் சகரியாவும் என்னே ஆசீர்வாதங்களை அனுபவித்தனர்! கடவுளுடைய ஆவியின் உந்துவிப்பால் அவர்கள் இருவரும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். மேசியாவின் முன்னோடியாகிய முழுக்காட்டுபவரான யோவானுக்குப் பெற்றோராகவும் போதனையாளர்களாகவும் இருக்கும் சிலாக்கியத்தை அவர்கள் பெற்றார்கள். மேலுமாக, கடவுள் அவர்களை நீதிமான்களாகக் கருதினார். அதேவிதமாகவே, இன்றும் கடவுளுடைய வழியைப் பின்தொடருபவர்கள் கடவுளுடன் ஒரு நீதியான நிலைநிற்கையை உடையவர்களாய் இருந்து, யெகோவாவின் கட்டளைகளில் குற்றமற்றவர்களாக நடப்பதற்காக அநேக ஆசீர்வாதமான பலன்களைப் பெறுவார்கள்.