“எல்லா விதமான பேராசைகளிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்”
“ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.”—லூக்கா 12:15.
1, 2. (அ) மக்களுடைய நாட்டங்களையும் குறிக்கோள்களையும் குறித்து நீங்கள் என்ன கவனித்திருக்கிறீர்கள்? (ஆ) இப்படிப்பட்ட சிந்தைகள் நம்மை எவ்வாறு பாதிக்கலாம்?
வெ ற்றியின் அடையாளமாக அல்லது பாதுகாப்பான எதிர்காலத்தின் ஆதாரமாக மக்கள் கருதுகிற பல காரியங்களில் பணம், பதவி, சொத்து, அதிக வருமானத்தை ஈட்டித்தரும் வேலை, குடும்பம் ஆகியவை அடங்குகின்றன. பணக்கார நாடுகளிலும் ஏழை நாடுகளிலும் மக்களுடைய ஆர்வமும் குறிக்கோளும் பொருள் சேர்ப்பதிலும் வெற்றி அடைவதிலுமே இருப்பதை பார்க்கமுடிகிறது. மறுபட்சத்தில், ஆன்மீகக் காரியங்களிலோ அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை, அப்படியே சிலர் காட்டினாலும் அவர்களுடைய ஆர்வமும் அதிவேகமாக சரிந்து வருகிறது.
2 இது பைபிள் முன்னறிவித்தபடியே இருக்கிறது. அது சொல்வதாவது: “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், . . . தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” (2 தீமோத்தேயு 3:1-5) பொழுது விடிந்து பொழுது சாயும்வரை இப்படிப்பட்ட ஜனங்கள் மத்தியில் உண்மை கிறிஸ்தவர்கள் இருப்பதால் இதுபோன்ற சிந்தையையும் வாழ்க்கை முறையையும் பின்பற்றும் அழுத்தத்தை அவர்கள் தொடர்ந்து எதிர்ப்படுகிறார்கள். உலகம் ‘அதன் அச்சுக்குள் நம்மைத் திணிக்க’ எடுக்கிற முயற்சிகளை எதிர்த்துப் போராட நமக்கு எது உதவும்?—ரோமர் 12:2, ஜே.பி. பிலிப்ஸின் த நியூ டெஸ்டமென்ட் இன் மாடர்ன் இங்கிலிஷ்.
3. இயேசு அளித்த என்ன ஆலோசனையை நாம் இப்போது சிந்திக்கப் போகிறோம்?
3 “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற” இயேசு இந்த விஷயத்தில் நமக்குச் சிறந்த பாடங்களைக் கற்பித்திருக்கிறார். (எபிரெயர் 12:1) ஒரு சமயம் இயேசு, மக்களிடம் சில ஆன்மீக விஷயங்களை விளக்கிக்கொண்டிருந்தபோது ஒருவன் இடையில் வந்து “போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிட வேண்டும்” என்று கேட்டான். அப்போது இயேசு அந்த மனிதனுக்கும், அவருக்குச் செவிகொடுத்து கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கினார். பேராசையைக் குறித்து கடுமையான எச்சரிக்கையை அளித்தது மட்டுமல்லாமல் அந்த எச்சரிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் சிந்தனையைத் தூண்டும் ஓர் உவமையையும் கூறினார். எனவே, அந்தச் சமயத்தில் இயேசு என்ன சொன்னார் என்பதை நாம் கவனமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதோடு, அதை நம் வாழ்க்கையில் பின்பற்றி எவ்வாறு பயனடையலாம் என்று நாம் யோசிக்கவும் வேண்டும்.—லூக்கா 12:13-21.
பொருத்தமற்ற வேண்டுகோள்
4. இயேசு பேசிக்கொண்டிருந்தபோது அந்த மனிதன் குறுக்கிட்டது ஏன் பொருத்தமாக இருக்கவில்லை?
4 அந்த மனிதன், இடையில் வந்து பேசுவதற்கு முன்பு இயேசு தம் சீஷர்களிடமும் மற்றவர்களிடமும் மாய்மாலத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருப்பதைப் பற்றியும், மனுஷகுமாரனைக் குறித்து தைரியமாகச் சாட்சி கொடுப்பது பற்றியும், பரிசுத்த ஆவியின் உதவியைப் பெறுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். (லூக்கா 12:1-12) இவையெல்லாமே சீஷர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய முக்கிய பாடங்கள் என்பதில் சந்தேகமே இல்லை. சிந்தனையைத் தூண்டும் அப்படிப்பட்ட ஒரு கலந்துரையாடலின் மத்தியில்தான் அந்த மனிதன் திடீரென இயேசுவை அணுகி ஒரு பிரச்சினையைத் தீர்த்துவைக்கும்படி கேட்டான், அதுவும் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஒரு குடும்பப் பிரச்சினையாக அது தெரிகிறது. இருந்தாலும் இச்சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது.
5. அந்த மனிதனின் வேண்டுகோள் அவனைப்பற்றி என்ன தெரிவிக்கிறது?
5 “ஒருவர் மத சம்பந்தப்பட்ட சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருக்கையில் அவர் எதைப்பற்றிச் சிந்திக்கிறார் என்பதைச் சார்ந்தே அவர் எப்படிப்பட்டவர் என்பது தீர்மானிக்கப்படுகிறது” என சொல்லப்படுகிறது. இயேசு முக்கியமான ஆன்மீக விஷயங்களைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் அந்த மனிதனோ குறிப்பிட்ட சில பொருளாதார ஆதாயங்களை எவ்வாறு பெறுவது என்பதைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தது போல் தெரிகிறது. அவனுடைய சொத்தைக் குறித்துக் கவலைப்படுவதற்கு அவனுக்கு நியாயமான காரணம் இருந்ததா என்பதைப்பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஒருவேளை மனிதர்களுடைய விவகாரங்களைத் தீர்த்துவைப்பதில் இயேசுவுக்கு இருந்த அதிகாரத்தையும், ஞானமாக நியாயந்தீர்ப்பதில் அவருக்கு இருந்த திறமையையும் ஆதாயப்படுத்திக்கொள்ள அவன் முயற்சி செய்திருக்கலாம். (ஏசாயா 11:3, 4; மத்தேயு 22:16) எப்படியிருந்தாலும், அவனுடைய மனதின் ஆழத்தில் ஏதோவொரு பிரச்சினை இருப்பதை அவனுடைய கேள்வி தெரியப்படுத்தியது. என்னவெனில், ஆன்மீகக் காரியங்களை அவன் துளியும் மதிக்கவில்லை. நம்மை நாமே ஆராய்வதற்கு இது ஒரு நல்ல காரணமல்லவா? உதாரணத்திற்கு, கிறிஸ்தவ கூட்டங்களில் நம் மனதை அலைபாய விடுவதும், கூட்டத்திற்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்பதைக் குறித்து யோசித்துக்கொண்டிருப்பதும் சுலபம். ஆனால், அப்படிச் செய்வதற்குப் பதிலாக கூட்டங்களில் சொல்லப்படுகிற விஷயங்களைக் கவனித்துக் கேட்க வேண்டும், அவற்றை நம் வாழ்க்கையில் எவ்வாறு பொருத்தலாம் என்பதைக் குறித்து யோசிக்க வேண்டும்; இப்படிச் செய்வதன்மூலம் நம்முடைய பரலோகத் தகப்பனாகிய யெகோவா தேவனிடமும் நம்முடைய சக கிறிஸ்தவர்களிடமும் உள்ள நம் உறவைப் பலப்படுத்திக்கொள்ளலாம்.—சங்கீதம் 22:22; மாற்கு 4:24.
6. அந்த மனிதனின் வேண்டுதலுக்கு இயேசு ஏன் இணங்கவில்லை?
6 எந்தக் காரணத்தினால் அந்த மனிதன் அப்படிப்பட்ட உதவியைக் கேட்டானோ தெரியவில்லை, என்னவாக இருந்தாலும் இயேசு அவனுடைய வேண்டுதலுக்கு இணங்கவில்லை. அதற்குப் பதிலாக “மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்” என்று இயேசு அவனிடம் கேட்டார். (லூக்கா 12:14) இப்படிக் கேட்டபோது மக்கள் நன்கு அறிந்திருந்த ஒன்றையே இயேசு குறிப்பிட்டார். ஏனென்றால், நியாயப்பிரமாணச் சட்டத்தின்படி, பட்டணத்திலுள்ள நியாயாதிபதிகள்தான் அப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கையாள நியமிக்கப்பட்டிருந்தார்கள். (உபாகமம் 16:18-20; 21:15-17; ரூத் 4:1, 2) மறுபட்சத்தில் இயேசுவோ அதைவிட முக்கியமான காரியங்களைக் குறித்து அக்கறையாய் இருந்தார். அதாவது, ராஜ்ய சத்தியத்திற்குச் சாட்சி கொடுப்பதிலும் கடவுளுடைய சித்தத்தைப்பற்றி மக்களுக்குக் கற்பிப்பதிலும் அவர் அக்கறையாய் இருந்தார். (யோவான் 18:37) தினசரி வாழ்க்கையின் கவலைகளினால் திசை திருப்பப்படுவதற்குப் பதிலாக, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி நம் நேரத்தையும் சக்தியையும் நற்செய்தியைப் பிரசங்கித்து ‘சகல ஜாதிகளையும் சீஷராக்குவதில்’ பயன்படுத்துகிறோம்.—மத்தேயு 24:14; 28:19.
பேராசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
7. இயேசு என்ன ஆழமான விஷயத்தைக் குறிப்பிட்டார்?
7 மனதின் ஆழத்தில் இருப்பவற்றைப் புரிந்துகொள்ளும் சக்தி இயேசுவுக்கு இருந்தது. அதனால்தான் தன் சொந்த விஷயத்தில் தலையிடும்படி கேட்ட அந்த மனிதனின் வேண்டுகோளில் கவனிக்க வேண்டிய ஏதோ ஒன்று இருப்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, இயேசு வெறுமனே அவனுடைய வேண்டுகோளை மறுத்துவிடாமல், அதற்குப் பின்னால் இருந்த உண்மையான காரணத்தைச் சுட்டிக்காட்டி இவ்வாறு சொன்னார்: “விழித்திருங்கள், எல்லா விதமான பேராசைகளிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.”—லூக்கா 12:15; NW.
8. பேராசை என்றால் என்ன, அது எதில் விளைவடையும்?
8 பேராசை என்பது வெறுமனே நமக்குத் தேவையாக, பிரயோஜனமாக இருக்கக்கூடிய பணத்திற்காகவோ குறிப்பிட்ட சில பொருள்களுக்காகவோ ஆசைப்படுவதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. அது, சொத்துக்களையோ உடைமைகளையோ மற்றவர்களின் உடைமைகளையோ அடைய வேண்டுமென்பதில் உள்ள தீராத ஆசையைக் குறிக்கிறது. பொருள் சேர்ப்பதிலோ ஒருவேளை மற்றவர்களின் பொருள்களை அடைவதிலோ உள்ள தணியாத ஆசையையும் அது அர்த்தப்படுத்தலாம்; இவையெல்லாம் தனக்கு உண்மையில் தேவைதானா என்பதைக் குறித்து யோசிக்காமல் அல்லது மற்றவர்கள் எந்தளவு பாதிக்கப்படுவார்கள் என்ற கவலையில்லாமல் வெறுமனே அவற்றைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பொருள் சேர்ப்பதையும் அது உட்படுத்தலாம். பேராசையுள்ள ஒரு நபர், தான் விரும்புகிற பொருள் தன் யோசனைகளையும் செயல்களையும் கட்டுப்படுத்துமளவுக்கு அனுமதிப்பதால் அதுவே அவருடைய கடவுளாக ஆகிவிடுகிறது. அப்போஸ்தலன் பவுல், பேராசையுள்ள ஒரு நபரை விக்கிரகாராதனைக்காரருடன் ஒப்பிடுவதை நினைவுப்படுத்திப் பாருங்கள். அப்படிப்பட்டவருக்குக் கடவுளுடைய ராஜ்யத்தில் இடமில்லை என்று பவுல் கூறுகிறார்.—எபேசியர் 5:5; கொலோசெயர் 3:5.
9. எந்தெந்த விதங்களில் பேராசை வெளிப்படுத்தப்படலாம்? சில உதாரணங்களைத் தாருங்கள்.
9 இயேசு, ‘எல்லாவிதமான பேராசைகளைக் குறித்தும்’ எச்சரிக்கையாயிருக்கும்படி சொல்லியிருப்பது ஆர்வத்துக்குரிய விஷயம். பேராசை பல விதங்களில் தலைதூக்குகிறது. அவற்றில் சிலவற்றை பத்து கட்டளைகளில் கடைசி கட்டளை பட்டியலிடுகிறது: “பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:17) ஏதாவது ஒருவித பேராசையினால் கடுமையான பாவத்தைச் செய்தவர்களின் உதாரணங்கள் பைபிளில் நிறையவே உள்ளன. வேறொருவருக்கு சொந்தமானதைத் தனக்கு வேண்டுமென முதன்முதலில் விரும்பியது சாத்தானே. யெகோவாவுக்கு மட்டுமே உரிய மகிமை, கனம், அதிகாரத்தைத் தான் பெற வேண்டுமென சாத்தான் ஆசைப்பட்டான். (வெளிப்படுத்துதல் 4:11) சுயமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையைப் பெற வேண்டுமென ஏவாள் ஆசைப்பட்டாள். இந்த விஷயத்தில் அவள் வஞ்சிக்கப்பட்டதால் முழு மனிதவர்க்கமும் பாவத்தையும் மரணத்தையும் சுதந்தரித்தது. (ஆதியாகமம் 3:4-7) ‘தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்டு’ தங்களுக்கு உரியதல்லாத ஒன்றுக்காக ஆசைப்பட்ட தேவதூதர்களே பேய்களாய் மாறினார்கள். (யூதா 6; ஆதியாகமம் 6:2) பிலேயாம், ஆகான், கேயாசி, யூதாஸ் ஆகியோரைக் குறித்தும் யோசித்துப் பாருங்கள். வாழ்க்கையில் தங்களுடைய நிலையைக் குறித்து அவர்கள் திருப்தியாய் இராமல் பொருள் சேர்ப்பதில் அதீத ஆர்வம் காட்டினார்கள். இதன் காரணமாக, தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பான ஸ்தானத்தைக் குறித்துக்கூட யோசிக்காமல், தங்களையே கெடுத்துக்கொண்டு, அழித்துக்கொண்டார்கள்.
10. இயேசு அறிவுறுத்தியபடி நாம் எந்த விதத்தில் ‘விழித்திருக்க’ வேண்டும்?
10 பேராசையைக் குறித்து இயேசு எச்சரிக்கை விடுக்கையில் “விழித்திருங்கள்” என்ற வார்த்தைகளுடன் ஆரம்பித்தது மிகப் பொருத்தமாக இருக்கிறதல்லவா! ஏன்? ஏனென்றால், மற்றவர்கள் பேராசை உள்ளவர்களாக அல்லது பிறருக்குரியவற்றுக்கு ஆசைப்படுகிறவர்களாக இருப்பதைக் கண்டுபிடிப்பது மக்களுக்கு மிகவும் சுலபம், ஆனால், தாங்களே அப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்வதுதான் மிகமிக கடினம். இருந்தாலும், அப்போஸ்தலன் பவுல், “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது” என்று குறிப்பிடுகிறார். (1 தீமோத்தேயு 6:9, 10) தவறான இச்சையானது “கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்” என்று சீஷனாகிய யாக்கோபு விளக்குகிறார். (யாக்கோபு 1:15) இயேசு அறிவுறுத்துகிறபடி நாம் ‘விழித்திருக்க’ வேண்டும், எதற்கு? மற்றவர்கள் பேராசை உள்ளவர்களாய் இருக்கிறார்களா என்று நியாயந்தீர்ப்பதற்காக அல்ல, நம் இருதயம் எதை விரும்புகிறது என்பதை ஆராய்ந்துப் பார்ப்பதற்காகவே. அப்படிச் செய்வதன்மூலம் ‘எல்லா விதமான பேராசைகளிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.’
ஆஸ்திகள் நிறைந்த வாழ்க்கை
11, 12. (அ) பேராசையை எதிர்த்து இயேசு என்ன எச்சரிக்கை விடுத்தார்? (ஆ) நாம் ஏன் இயேசுவின் எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
11 பேராசையிலிருந்து நம்மை ஏன் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இயேசு அடுத்ததாக என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” (லூக்கா 12:15) பொருளாசை மிகுந்த இந்தச் சகாப்தத்தில் செல்வமே சந்தோஷத்தையும் வெற்றியையும் தருமென மக்கள் நினைக்கிறார்கள், இந்தச் சமயத்தில் இயேசு கூறியதை நாம் ஆழ்ந்து சிந்திப்பது அவசியம். இந்த வார்த்தைகளின்மூலம் இயேசு எதைச் சுட்டிக்காட்டினார்? அர்த்தமுள்ள, திருப்தியான வாழ்க்கை பொருள் செல்வங்களிலிருந்து கிடைப்பதுமில்லை, அவற்றைச் சார்ந்திருப்பதுமில்லை, எவ்வளவு அதிக செல்வமிருந்தாலும் இதுவே உண்மை.
12 என்றாலும், இந்த உண்மையை சிலர் மறுக்கக்கூடும். பொருள் செல்வங்கள் வாழ்க்கையை சொகுசாகவும் சந்தோஷமாகவும் அனுபவிக்க உதவுவதால் அவை பிரயோஜனமானவையே என்று அவர்கள் வாதாடலாம். எனவே, தாங்கள் விரும்புகிற எல்லாவிதமான பொருள்களையும் எலெக்ட்ரானிக் சாதனங்களையும் வாங்குவதற்கு போதியளவு பணம் ஈட்டித்தருகிற தொழில்களுக்குத் தங்களையே அர்ப்பணித்துவிடுகிறார்கள். இதனால் தங்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கை அமையும் என நினைக்கிறார்கள். ஆனால், இப்படி நினைப்பதால் இயேசு வலியுறுத்திய குறிப்பை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள்.
13. வாழ்க்கையைக் குறித்தும் பொருள்களைக் குறித்தும் சமநிலையான கண்ணோட்டம் என்ன?
13 நிறைய பொருள் சேர்த்துவைத்திருப்பது சரியா தவறா என்பதைக் குறித்து இயேசு விளக்கமளிக்கவில்லை. மாறாக ஒரு மனிதனின் ஜீவன் ‘அவனுடைய திரளான ஆஸ்திகளிலிருந்து’ அதாவது அவனிடம் ஏற்கெனவே இருக்கும் பொருள்களிலிருந்து விளைவடையாது என்ற குறிப்பை அவர் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில், நாம் வாழ்வதற்கோ வாழ்க்கையை ஓட்டுவதற்கோ நிறைய காரியங்கள் தேவையில்லை என்பது நம் எல்லாருக்குமே தெரியும். வெறுமனே கொஞ்ச உணவு, உடுத்த துணி, தலைசாய்க்க ஓர் இடம் இருந்தாலே போதும், வாழ்க்கையை ஓட்டிவிடலாம். பணக்காரர்களிடம் இவற்றுக்கெல்லாம் குறைவே இல்லை. ஏழைகளோ தங்களுக்குத் தேவையானதைப் பெற போராட வேண்டியிருக்கலாம். பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி, வாழ்க்கை முடிவுக்கு வரும்போது எல்லாமே முடிவுக்கு வந்துவிடுகிறது. (பிரசங்கி 9:5, 6) எனவே, வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் பிரயோஜனமுள்ளதாகவும் இருக்க வேண்டுமென்றால், வெறுமனே ஒருவரால் பெற முடிந்த பொருள்களையும் அடைய முடிந்த பொருள்களையும் சேர்த்துவைப்பது மட்டுமே வாழ்க்கையாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. இயேசு எந்த விதமான வாழ்க்கையைக் குறித்து பேசினார் என்பதை ஆராய்ந்து பார்க்கையில் இந்தக் குறிப்பு நமக்குத் தெளிவாகிறது.
14. இந்த பைபிள் பதிவில் “ஜீவன்” என்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்று இயேசு சொன்னபோது லூக்கா சுவிசேஷத்தில், இந்த இடத்தில் “ஜீவன்” (கிரேக்கில் ஸோயி) என்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை ஜீவிக்கும் முறையை அல்ல நிஜத்தில் ஜீவனையே குறிக்கிறது.a நாம் பணக்காரரோ ஏழையோ நாம் சொகுசாக வாழ்கிறோமோ வாழ்க்கையின் அடிப்படை வசதிகளுக்காகக்கூட தத்தளிக்கிறோமோ, எப்படியிருந்தாலும் நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பதன் பேரில் நமக்கு அதிகாரமும் இல்லை, ஏன், நாளை நாம் உயிருடன் இருப்போமா என்பதைக்கூட நம்மால் சொல்ல முடியாது என்பதாக இயேசு கூறினார். “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” என்று இயேசு தம் மலைப் பிரசங்கத்தில் குறிப்பிட்டார். (மத்தேயு 6:27) ‘ஜீவ ஊற்று’ யெகோவாவிடத்தில் மட்டுமே இருக்கிறது என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. அதனால் அவர் மட்டுமே உண்மையுள்ளவர்களுக்கு ‘உண்மையான வாழ்வை’யும் அல்லது ‘நித்திய ஜீவனை’யும், அதாவது பரலோகத்திலோ பூமியிலோ முடிவில்லா வாழ்க்கையைக் கொடுக்க முடியும் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது.—சங்கீதம் 36:9; 1 தீமோத்தேயு 6:12, 19; NW.
15. அநேகர் ஏன் பொருள் செல்வங்களில் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள்?
15 வாழ்க்கையைக் குறித்து மக்கள் தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது எவ்வளவு சுலபம் என்பதை இயேசுவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. பணக்காரர்களுக்கும் சரி ஏழைகளுக்கும் சரி எல்லாருக்கும் ஒரே முடிவுதான். பண்டைய காலத்தில் வாழ்ந்த மோசே சொல்வதாவது: “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.” (சங்கீதம் 90:10; யோபு 14:1, 2; 1 பேதுரு 1:24) கடவுளிடம் ஒரு நல்ல உறவை வளர்க்காத மக்கள் இந்தக் காரணத்தினால்தான் அப்போஸ்தலன் பவுல் சொன்னதுபோல் “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்ற மனநிலையை பெரும்பாலும் கொண்டிருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 15:32) இன்னும் சிலர், வாழ்க்கை சீக்கிரம் கடந்துசெல்வதாலும் நிச்சயமற்றதாய் இருப்பதாலும் பொருள் செல்வங்களால் பாதுகாப்படையவும் நிலைத்து நிற்கவும் முயற்சி செய்கிறார்கள். நிறைய பொருள்களைச் சேர்த்துவைத்தால் அது எப்படியாவது தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள் போலும். அதனால்தான் பொருள்களையும் சொத்துக்களையும் குவிப்பதற்கு அவர்கள் மாடாய் உழைக்கிறார்கள். இவற்றின்மூலம் பாதுகாப்பையும் சந்தோஷத்தையும் பெறமுடியும் என தவறாக கணக்குப் போடுகிறார்கள்.—சங்கீதம் 49:6, 11, 12.
பாதுகாப்பான ஓர் எதிர்காலம்
16. வாழ்க்கையின் உண்மையான மதிப்பு எதன்மீது சார்ந்தில்லை?
16 வாழ்க்கை தரம் உயர்ந்ததாக இருந்தால், உதாரணத்திற்கு, ஏராளமான உணவு, உடை, தங்குமிடம் மற்ற சொகுசுகள் இருந்தால் இன்னும் வசதியாக வாழ முடியலாம், ஏன், மருத்துவ செலவுகளைப் பற்றிகூட கவலைப்படாமல் இருக்கலாம். இதனால் இன்னும் சில வருடங்கள் அதிகமாகக்கூட வாழலாம். என்றாலும், அப்படிப்பட்ட வாழ்க்கை உண்மையிலேயே அதிக அர்த்தமுள்ளதாகவும் அதிக பாதுகாப்புள்ளதாகவும் இருக்கிறதா? ஒருவர் எவ்வளவு காலம் வாழ்கிறார் அல்லது எவ்வளவு பொருள் வைத்திருக்கிறார் என்பதன் பேரில் வாழ்க்கையின் உண்மையான மதிப்பை கணக்கிட முடியாது. அப்படிப்பட்ட காரியங்களில் அளவுக்கதிகமான நம்பிக்கை வைப்பதன் ஆபத்தை அப்போஸ்தலன் பவுல் சுட்டிக்காட்டினார். “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கைவைக்கவும்” வேண்டுமென அவர் தீமோத்தேயுவுக்கு எழுதினார்.—1 தீமோத்தேயு 6:17.
17, 18. (அ) பொருள் செல்வங்கள் சம்பந்தமான என்ன சிறந்த உதாரணங்கள் நாம் பின்பற்றத் தகுந்தவை? (ஆ) இயேசுவின் எந்த உவமை அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்?
17 ஆஸ்திகள்மீது நம்பிக்கை வைத்திருப்பது ஞானமற்றது, ஏனென்றால், அவை ‘நிலையற்றவை.’ கோத்திர பிதாவான யோபு பணக்காரராக இருந்தார், ஆனால், திடீரென்று பேரழிவு தாக்கியபோது அவருடைய ஆஸ்திகளால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை; அவை ஒரே இரவில் அழிந்துவிட்டன. என்றாலும், அவர் யெகோவாவிடம் வைத்திருந்த அசைக்கமுடியாத உறவே அவருடைய எல்லா சோதனைகளிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் அவரை விடுவித்தது. (யோபு 1:1, 3, 20-22) ஆபிரகாமிடம் ஏராளமான பொருள் செல்வங்கள் இருந்தாலும் யெகோவா அவருக்குக் கொடுத்த சவாலான வேலையை ஏற்றுக்கொள்வதற்கு அவை தடையாயிருக்க அவர் அனுமதிக்கவில்லை. அதனால் அவருக்குக் கிடைத்த ஆசீர்வாதம், ‘திரளான ஜாதிகளுக்குத் தகப்பனானார்.’ (ஆதியாகமம் 12:1, 4; 17:4-6) இவையும் மற்ற உதாரணங்களும் நாம் பின்பற்றத் தகுந்தவை. நாம் சிறியவர்களாய் இருந்தாலும் சரி பெரியவர்களாய் இருந்தாலும் சரி, நம்முடைய வாழ்க்கையில் எது முக்கியமாக இருக்கிறது, நாம் எதில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும்.—எபேசியர் 5:10; பிலிப்பியர் 1:9.
18 பேராசை பற்றியும் வாழ்க்கையைக் குறித்த சரியான கண்ணோட்டதைப் பற்றியும் இயேசு சுருங்கக் கூறிய வார்த்தைகள் அர்த்தமுள்ளவையாகவும் அறிவுரை நிறைந்தவையாகவும் இருக்கின்றன. ஆனால், இயேசுவின் மனதில் இன்னும் சில அறிவுரைகள் இருந்தன. அதனால், புத்தியில்லாத ஐசுவரியவானைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் ஓர் உவமையைக் கூறினார். அந்த உவமை இன்று நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகிறது, அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்தக் கேள்விகளுக்கு அடுத்த கட்டுரை பதிலளிக்கும்.
[அடிக்குறிப்பு]
a “ஜீவன்” என்பதற்கான இன்னொரு கிரேக்க வார்த்தை பையாஸ் என்பதாகும், இந்த வார்த்தையிலிருந்துதான் ஆங்கில வார்த்தைகளான “பையாகிரஃபியும்” “பையாலஜியும்” வந்திருக்கின்றன. வைன்ஸ் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் ஓல்ட் அண்ட் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் சொல்கிறபடி பையாஸ் என்ற வார்த்தை “வாழ்க்கையின் கால அளவை,” “வாழ்க்கை முறையை,” “பிழைக்கும் வழியைக்” குறிக்கிறது.
உங்கள் பதில் என்ன?
• ஒரு மனிதனின் வேண்டுதலுக்கு இயேசு இணங்க மறுத்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
• நாம் ஏன் பேராசையிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும், அதை நாம் எப்படிச் செய்யலாம்?
• ஜீவன் ஏன் பொருள் செல்வங்களைச் சார்ந்திருப்பதில்லை?
• வாழ்க்கையை உண்மையிலேயே மதிப்புள்ளதாகவும் பாதுகாப்புள்ளதாகவும் ஆக்குவதற்கு எது உதவும்?
[பக்கம் 23-ன் படம்]
இயேசு ஏன் ஒரு மனிதனின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை?
[பக்கம் 23-ன் படம்]
பேராசை பயங்கரமான விளைவுகளில் முடிவடையலாம்
[பக்கம் 25-ன் படங்கள்]
ஆபிரகாம் எவ்வாறு பொருள் செல்வங்களைக் குறித்து சரியான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார்?