மீட்புவிலை நம்மை இரட்சிக்கும் விதம்
“மகன்மீது விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லா வாழ்வு இருக்கிறது; மகனுக்குக் கீழ்ப்படிய மறுப்பவனுக்கோ முடிவில்லா வாழ்வு இல்லை, கடவுளுடைய கடுங்கோபத்திற்கே அவன் ஆளாவான்.”—யோவா. 3:36.
1, 2. என்ன ஒரு காரணத்திற்காக சீயோனின் காவற்கோபுரம் ஆரம்பத்தில் பிரசுரிக்கப்பட்டது?
“பைபிளைக் கவனமாய்ப் படிக்கிறவர்கள் கிறிஸ்துவினுடைய மரணத்தின் முக்கியத்துவத்தை உணருவார்கள்” என்பதாக அக்டோபர் 1879-ல் வெளியான இப்பத்திரிகையின் நான்காம் இதழ் குறிப்பிட்டது. அக்கட்டுரையின் முடிவில் பின்வரும் இந்த முக்கிய விஷயம் கொடுக்கப்பட்டிருந்தது: “கிறிஸ்துவின் மரணம் ஒரு பலியுமல்ல, பாவங்களுக்கான பிராயச்சித்த பலியுமல்ல என துச்சமாக நினைக்க வைக்கிற எந்தவொரு கருத்தையும் உதறித்தள்ள நாம் கவனமாய் இருப்போமாக.”—1 யோவான் 2:1, 2-ஐ வாசியுங்கள்.
2 சீயோனின் காவற்கோபுரம், ஜூலை 1879-ல் முதன்முதலாகப் பிரசுரிக்கப்பட்டதற்கான ஒரு காரணம், மீட்புவிலையைப் பற்றிய பைபிள் போதனையை ஆதரிப்பதற்கே. அந்தப் பத்திரிகை ‘ஏற்ற வேளையில் உணவளித்தது’; ஏனென்றால், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொண்ட எண்ணற்றோர் இயேசுவின் மரணம் எப்படி நம்முடைய பாவங்களுக்கு மீட்புவிலையாக ஆக முடியும் என்று சந்தேகிக்க ஆரம்பித்தார்கள். (மத். 24:45) அந்தச் சமயத்தில், அநேகர் பரிணாம கோட்பாட்டிற்கு இரையாகிக் கொண்டிருந்தார்கள்; இந்தக் கோட்பாடு, மனிதன் பரிபூரண நிலையிலிருந்து அபூரண நிலையை அடைந்தான் என்ற உண்மைக்கு முரண்பாடானது. மனிதன் தானாகவே முன்னேறிக் கொண்டிருப்பதால் மீட்புவிலைக்கான அவசியமே இல்லை என பரிணாமவாதிகள் கற்பிக்கிறார்கள். அப்படியானால், தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரை ரொம்பவே பொருத்தமானது: “உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை நீ பாதுகாத்துக்கொள்; பரிசுத்தமானவற்றுக்கு விரோதமான வீண் பேச்சுகளுக்கும், ‘அறிவு’ என்று தவறாக அழைக்கப்படுகிற முரண்பட்ட கருத்துகளுக்கும் விலகியிரு. ஏனென்றால், அப்படிப்பட்ட அறிவு தங்களுக்கு இருப்பதாகக் காட்டிக்கொண்டு சிலர் விசுவாசத்தைவிட்டே விலகிப்போயிருக்கிறார்கள்.”—1 தீ. 6:20, 21.
3. எந்தக் கேள்விகளை நாம் இப்போது சிந்திப்போம்?
3 நீங்கள் ‘விசுவாசத்தைவிட்டு விலகி’ போகாதிருக்கத் தீர்மானமாய் இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக, பின்வரும் கேள்விகளைச் சிந்திப்பது நல்லது: மீட்புவிலை எனக்கு ஏன் தேவைப்படுகிறது? மீட்புவிலையில் உட்பட்டிருந்த தியாகங்கள் என்ன? கடவுளுடைய கடுங்கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க உதவும் இந்த அருமையான ஏற்பாட்டிலிருந்து நான் எப்படிப் பயனடையலாம்?
கடவுளுடைய கடுங்கோபத்திலிருந்து பாதுகாக்கப்படுதல்
4, 5. சாத்தானுடைய உலகத்தின் மீது கடவுளுக்குக் கடுங்கோபம் நிலைத்திருப்பதை எது நிரூபிக்கிறது?
4 ஆதாம் பாவம் செய்தது முதற்கொண்டு மனிதகுலத்தின் மீது கடவுளுடைய கடுங்கோபம் ‘நிலைத்திருப்பதாக’ பைபிளும் சரித்திரமும் காண்பிக்கின்றன. (யோவா. 3:36, திருத்திய மொழிபெயர்ப்பு) எந்த மனிதனும் மரணத்திலிருந்து தப்ப முடியாமல் இருப்பது இதற்கு ஒரு சான்றாகும். கடவுளுக்கு எதிரான சாத்தானின் ஆட்சியால், ஓயாத இன்னல்களிலிருந்து மனிதகுலத்தைத் துளியும் பாதுகாக்க முடியவில்லை; எந்தவொரு மனித அரசாங்கத்தாலும் குடிமக்கள் அனைவரின் அத்தியாவசிய தேவைகளை இதுவரை பூர்த்தி செய்ய முடியவில்லை. (1 யோ. 5:19) ஆகவே, மனிதகுலம் இன்றுவரையாக போராலும், குற்றச்செயலாலும், வறுமையாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
5 இவை யாவும், இந்தப் பொல்லாத உலகத்தின் மீது யெகோவாவின் ஆசீர்வாதம் இல்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன. ‘எல்லா விதமான தேவபக்தியற்ற செயல்கள்மீதும் கடவுளுடைய கடுங்கோபம் பரலோகத்திலிருந்து வெளிப்படுகிறது’ என்று பவுல் சொன்னார். (ரோ. 1:18-20) எனவே, மனம் திரும்பாமல் கடவுளுக்குப் பிடிக்காத விதத்தில் வாழ்பவர்கள், அதன் விளைவுகளிலிருந்து தப்பவே முடியாது. இன்று, நியாயத்தீர்ப்பு செய்திகளின் மூலமாகத் தெரிவிக்கப்படுகிற கடவுளுடைய கடுங்கோபம், சாத்தானுடைய உலகத்தின் மீது வாதைகளைப் போல் ஊற்றப்படுகிறது; இப்படிப்பட்ட தகவல்கள் நமது பைபிள் சார்ந்த அநேக பிரசுரங்களில் காணப்படுகின்றன.—வெளி. 16:1.
6, 7. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் என்ன வேலையை முன்நின்று வழிநடத்துகிறார்கள், சாத்தானுடைய உலகத்தின் பாகமானோருக்கு இன்னும் என்ன வாய்ப்பு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது?
6 அப்படியானால், மனிதர் சாத்தானுடைய செல்வாக்கிலிருந்து விடுபட்டு கடவுளுடன் சமரசமாவதற்கு காலம் கடந்துவிட்டதா? இல்லை; அவருடன் சமரசமாவதற்கு வாய்ப்பு எனும் கதவு இன்னும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ‘கிறிஸ்துவின் சார்பில் தூதுவர்களாய் இருக்கிற’ பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் வெளி ஊழியத்தை முன்நின்று வழிநடத்துகிறார்கள்; இதன் மூலம் “கடவுளோடு சமரசமாகுங்கள்” என எல்லாத் தேசத்தாரையும் கெஞ்சிக் கேட்கிறார்கள்.—2 கொ. 5:20, 21.
7 இயேசு, ‘வரப்போகிற கடுங்கோபத்திலிருந்து நம்மை விடுவிப்பார்’ என அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 தெ. 1:10) யெகோவா தம்முடைய கடுங்கோபத்தைக் கடைசியாக வெளிக்காட்டுகையில், மனந்திரும்பாத பாவிகள் முற்றிலுமாய் அழிக்கப்படுவர். (2 தெ. 1:6-9) அப்போது யார் தப்பிப்பர்? “மகன்மீது விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லா வாழ்வு இருக்கிறது; மகனுக்குக் கீழ்ப்படிய மறுப்பவனுக்கோ முடிவில்லா வாழ்வு இல்லை, கடவுளுடைய கடுங்கோபத்திற்கே அவன் ஆளாவான்” என்று பைபிள் பதிலளிக்கிறது. (யோவா. 3:36) ஆம், உயிரோடிருந்து இயேசுவின் மீதும் அவரது மீட்புவிலையின் மீதும் விசுவாசம் வைப்பவர்கள், இந்த உலகம் அதன் முடிவைச் சந்திக்கையில், அதாவது கடவுள் இறுதியாக கடுங்கோபத்தை வெளிக்காட்டும் நாளில், அழியாமல் பாதுகாக்கப்படுவார்கள்.
மீட்புவிலை செயல்படும் விதம்
8. (அ) ஆதாம் ஏவாளுக்கு முன் எப்படிப்பட்ட மகத்தான எதிர்காலம் இருந்தது? (ஆ) தாம் பரிபூரண நீதியைக் கடைப்பிடிப்பவர் என்பதை யெகோவா எப்படி நிரூபித்தார்?
8 ஆதாமும் ஏவாளும் பரிபூரணராகப் படைக்கப்பட்டார்கள். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்திருந்தால், இப்போது இந்தப் பூமி அவர்களுடைய சந்ததியாரால் நிறைந்து எல்லாருமே அவர்களோடு பூஞ்சோலையில் சந்தோஷமாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால், நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுடைய கட்டளையை வேண்டுமென்றே மீறியது வருத்தத்திற்குரிய விஷயம். அதன் விளைவாக, அவர்களுக்கு நித்திய மரணத்தீர்ப்பு அளிக்கப்பட்டது; அதோடு, தாங்கள் குடியிருந்த பூஞ்சோலையிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்கள். ஆதாம் ஏவாளுக்கு பிள்ளைகள் பிறப்பதற்குள்ளாக பாவம் மனிதரை பாதித்திருந்தது; அதனால், அந்த முதல் மனித தம்பதியர் கடைசியில் வயதாகி மரித்தார்கள். இது, யெகோவா வார்த்தை தவறாதவர் என்பதை நிரூபிக்கிறது. அதுமட்டுமல்ல, அவர் பரிபூரண நீதியையும் கடைப்பிடிக்கிற கடவுள். விலக்கப்பட்டிருந்த பழத்தைச் சாப்பிட்டால் மரித்துப்போவாய் என ஆதாமை யெகோவா எச்சரித்திருந்தார். அதன்படியே நடந்தது.
9, 10. (அ) ஆதாமின் சந்ததியார் ஏன் மரிக்கிறார்கள்? (ஆ) நித்திய மரணத்திலிருந்து நாம் எப்படித் தப்பிக்கலாம்?
9 ஆதாமின் சந்ததியாரான நாம் பாவம் செய்து மரிக்கும் இயல்புள்ள அபூரண உடலைச் சொத்தாகப் பெற்றிருக்கிறோம். ஆதாம் பாவம் செய்தபோது, ஒரு கருத்தில் நாம் அவருக்குள் இருந்தோம். ஆகவே, அவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையில் நாமும் உட்பட்டிருக்கிறோம். யெகோவா, மீட்புவிலையைச் செலுத்தாமலேயே மனிதரின் வயோதிபத்தையும் மரணத்தையும் நீக்கிப்போடுவாரானால், அவர் சொன்ன வாக்கை காப்பாற்றாதவர் என்றாகிவிடும். சொல்லப்போனால், பவுல் நம் எல்லாரையும் உட்படுத்தியே இவ்வாறு பேசினார்: “நமக்குத் தெரிந்திருக்கிறபடி, திருச்சட்டம் ஆன்மீக இயல்புள்ளது; நானோ பாவ இயல்புள்ளவன், பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டிருப்பவன். எப்பேர்ப்பட்ட இக்கட்டான நிலையில் இருக்கிறேன்! மரணத்தை உண்டாக்கும் இந்த உடலிலிருந்து யார் என்னைக் காப்பாற்றுவார்?”—ரோ. 7:14, 24.
10 யெகோவா தேவனால் மட்டுமே அதற்கான சட்டப்பூர்வ ஆதாரத்தை அளிக்க முடியும்; அதன் மூலம், நியாயமாகவே நம்முடைய பாவங்களை மன்னித்து நித்திய மரணம் எனும் தண்டனையிலிருந்து நம்மை விடுவிக்க முடியும். இதற்காக, அவர் தமது நேச மகனைப் பரலோகத்திலிருந்து அனுப்பி பூமியில் பரிபூரண மனிதனாகப் பிறக்கச் செய்தார்; அவருடைய மகனால் மட்டுமே மீட்புவிலையாகத் தம் உயிரை நமக்கு அளிக்க முடியும். ஆதாமைப் போலின்றி, அவர் கடைசிவரை பரிபூரணராக நிலைத்திருந்தார். ஆம், “அவர் பாவமே செய்யவில்லை.” (1 பே. 2:22) அதனால், ஒரு பரிபூரண மனித சந்ததியாருக்குத் தகப்பனாகும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனாலும், அப்படிப்பட்ட வாய்ப்புக்கு இடமளிக்காமல் கடவுளுடைய எதிரிகள் தம்மைக் கொலை செய்வதற்கு அவர் அனுமதித்தார்; ஆதாமின் பாவமுள்ள சந்ததியாரைத் தத்தெடுப்பதற்காகவும் தம்மீது விசுவாசம் வைக்கிறவர்கள் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காகவும் அப்படிச் செய்தார். அதைப் பற்றி பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “ஒரே கடவுள்தான் இருக்கிறார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரே மத்தியஸ்தர்தான் இருக்கிறார், அவரே மனிதராகிய கிறிஸ்து இயேசு. சரிசமமான மீட்புவிலையாகத் தம்மையே எல்லாருக்காகவும் அளித்தவர் அவரே.”—1 தீ. 2:5, 6.
11. (அ) மீட்புவிலையால் கிடைக்கும் நன்மைகளை எவ்வாறு விளக்கலாம்? (ஆ) மீட்புவிலையால் யாரும்கூட நன்மை அடைகிறார்கள்?
11 மீட்புவிலை எவ்வாறு செயல்படுகிறது என்பதை இவ்வாறு விளக்கலாம்: போலியான ஒரு வங்கியில் தங்கள் சேமிப்புகளைக் கொட்டிய மக்கள் மோசடி செய்யப்படுகிறார்கள். இதனால், அவர்கள் கடனில் மூழ்கிவிடுகிறார்கள். வங்கியின் உரிமையாளர்கள் நியாயமாகவே பல வருட சிறைத் தண்டனையைப் பெறுகிறார்கள். ஆனால், அந்த வங்கியில் பணத்தைப் போட்ட அப்பாவி மக்களின் கதி என்ன? ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த மக்கள் பணத்தைத் திரும்பப் பெற்று கடனிலிருந்து மீள வேண்டுமென்றால், பரிவும் பாசமுள்ள ஒரு பணக்காரர் அந்த வங்கியை விலைக்கு வாங்க வேண்டும். அவ்வாறே, யெகோவா தேவனும் அவருடைய நேச மகனும் ஆதாமுடைய சந்ததியாரை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்; அதோடு, இயேசு சிந்திய இரத்தத்தின் அடிப்படையில் அவர்களுடைய பாவக் கடன்களை ரத்து செய்து பரிபூரண வாழ்க்கை எனும் எதிர்பார்ப்பை மீண்டும் பெற வழி செய்திருக்கிறார்கள். அதனால்தான், யோவான் ஸ்நானகரால் இயேசுவைக் குறித்து இவ்வாறு சொல்ல முடிந்தது: “இதோ, உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்குக் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!” (யோவா. 1:29) உலகத்தின் பாவத்தைப் போக்குவது என்பது இப்போது உயிரோடிருப்பவர்களின் பாவங்களை மட்டுமல்ல மரித்தவர்களின் பாவங்களையும் போக்குவதை உட்படுத்துகிறது.
மீட்புவிலையில் உட்பட்டிருந்த தியாகங்கள்
12, 13. ஈசாக்கைப் பலி செலுத்த ஆபிரகாம் முன்வந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 மீட்புவிலையைச் செலுத்துவதில் நம் பரலோக தகப்பனும் அவரது செல்ல மகனும் என்னென்ன தியாகங்களைச் செய்தார்கள் என்பதை நம்மால் முழுமையாக புரிந்துகொள்ளவே முடியாது. ஆனால், இதைப் பற்றி சிந்தித்துப் பார்க்க பைபிள் சம்பவங்கள் நமக்கு உதவுகின்றன. உதாரணமாக, ஆபிரகாம் கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்பட்டு மோரியா தேசத்துக்கு மூன்று நாள் பயணிக்கையில் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள். “உன் புத்திரனும் உன் ஏக சுதனும் உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்று யெகோவா கட்டளையிட்டார்.—ஆதி. 22:2-4.
13 கடைசியில், கடவுள் குறித்த இடத்திற்கு ஆபிரகாம் வந்து சேர்ந்தார். ஈசாக்கின் கைகளையும் கால்களையும் கட்டி, தானே உண்டாக்கிய பலிபீடத்தின்மேல் அவனைக் கிடத்தியபோது ஆபிரகாமின் மனம் எப்படிப் பதறியிருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். தன் மகனைக் கொல்வதற்கு கத்தியை உயர்த்தியபோது ஆபிரகாமின் நெஞ்சு எப்படி வலித்திருக்கும்! இப்போது ஈசாக்கைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். பலிபீடத்தில் படுத்திருக்க, கூர்மையான அந்தக் கத்தி ‘சதக்’ என உடலுக்குள் ஊடுருவிச்சென்று அதனால் தான் மரிக்கப்போவதை யோசித்து அவருடைய மனம் எப்படிப் படபடத்திருக்கும்! சரியான நேரத்தில் யெகோவாவின் தூதன் ஆபிரகாமைத் தடுத்தார். அந்தச் சமயத்தில் ஆபிரகாமும் ஈசாக்கும் செய்தது, சாத்தானின் ஆட்கள் தம்முடைய மகனைக் கொல்வதற்கு அனுமதித்தபோது யெகோவா எப்படி உணர்ந்திருப்பார் என்பதைப் புரிந்துக்கொள்ள நமக்கு உதவுகிறது. ஆபிரகாமோடு ஈசாக்கு ஒத்துழைத்தது, இயேசு துன்பப்பட்டு மரிப்பதற்கு முன்வந்ததைப் படம்பிடித்துக் காட்டுகிறது.—எபி. 11:17-19.
14. மீட்புவிலை செலுத்துவதில் உட்பட்ட தியாகங்களைப் புரிந்துகொள்ள யாக்கோபின் வாழ்க்கையில் நடந்த எந்தச் சம்பவம் நமக்கு உதவுகிறது?
14 மீட்புவிலையைச் செலுத்துவதில் என்னென்ன தியாகங்கள் உட்பட்டிருக்கும் என்பதை யாக்கோபின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமும்கூட படம்பிடித்துக் காட்டுகிறது. யாக்கோபு தன்னுடைய மகன்களில் யோசேப்பை மிகவும் நேசித்தார். வருத்தகரமாக, யோசேப்பின் அண்ணன்களோ பொறாமை கொண்டு அவரை வெறுத்தார்கள். இருந்தாலும், தன்னுடைய அண்ணன்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து வரும்படி அப்பா அவரை அனுப்பியபோது யோசேப்பு மனமுவந்து சென்றார். அப்போது, அவர்கள் எப்ரோனிலிருந்த தங்களுடைய வீட்டிலிருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் தங்கள் அப்பாவின் மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய மகன்கள் இரத்தக் கறை படிந்த யோசேப்பின் அங்கியை எடுத்துக் கொண்டு வீடு திரும்பியபோது யாக்கோபு எப்படி உணர்ந்திருப்பார் என கற்பனை செய்து பாருங்கள்! “இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான்” என்று சொல்லி அவர் புலம்பினார். இந்தச் சம்பவம் யாக்கோபை ரொம்பவே பாதித்ததால், அவர் யோசேப்பை நினைத்து பல நாட்கள் துக்கித்துக்கொண்டிருந்தார். (ஆதி. 37:33, 34) அபூரண மனிதர் உணருகிறபடி யெகோவா உணருவதில்லை என்பது உண்மைதான். ஆனாலும், யாக்கோபின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்தை ஆழ்ந்து சிந்திப்பது, பூமியில் ஒரு மனிதராக தம்முடைய நேச மகன் சித்திரவதை செய்யப்பட்டு மூர்க்கத்தனமாகக் கொலை செய்யப்படுவதைக் கண்டு கடவுள் எப்படி உணர்ந்திருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவலாம்.
மீட்புவிலையால் கிடைக்கும் நன்மைகள்
15, 16. (அ) யெகோவா மீட்புவிலையை ஏற்றுக்கொண்டதை எப்படிக் காண்பித்தார்? (ஆ) மீட்புவிலையிலிருந்து நீங்கள் எப்படிப் பயனடைந்திருக்கிறீர்கள்?
15 யெகோவா தேவன் தம்முடைய உண்மையுள்ள மகனுக்கு மகிமை பொருந்திய ஆவி உடலைக் கொடுத்து உயிர்த்தெழுப்பினார். (1 பே. 3:18) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு 40 நாட்களாக தம்முடைய சீடர்களுக்குக் காட்சி அளித்தார், அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தினார், செய்ய வேண்டியிருந்த மாபெரும் சுவிசேஷ வேலைக்கு அவர்களைத் தயார்படுத்தினார். அதன் பிறகு, பரலோகத்திற்குச் சென்று, அங்கு தாம் சிந்திய இரத்தத்தின் விலையைக் கடவுளிடம் சமர்ப்பித்தார்; தமது மீட்பு பலியின் விலையில் விசுவாசம் வைக்கிற உண்மையுள்ள சீடர்களின் சார்பாக அதைப் பயன்படுத்த அவ்வாறு செய்தார். கிறிஸ்து செலுத்திய மீட்புவிலையை யெகோவா தேவன் ஏற்றுக்கொண்டார்; அதற்கு வெளிக்காட்டாக, கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமில் கூடியிருந்த சீடர்கள்மீது தம்முடைய சக்தியைப் பொழிவதற்கு இயேசுவை நியமித்தார்.—அப். 2:33.
16 கிறிஸ்துவைப் பின்பற்றிய பரலோக நம்பிக்கையுள்ள அந்தக் கிறிஸ்தவர்கள், கடவுளுடைய கடுங்கோபத்திலிருந்து தப்பிக்கும்படி தங்களுடைய சக மனிதரை அறிவுறுத்த ஆரம்பித்தார்கள்; ஆம், பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெறுவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறும்படி அவர்களை அறிவுறுத்தினார்கள். (அப்போஸ்தலர் 2:38-40-ஐ வாசியுங்கள்.) வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நாளிலிருந்து இந்த நாள்வரையாக எல்லாத் தேசத்தையும் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கடவுளுடன் ஒரு நெருங்கிய உறவுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்; இயேசுவின் மீட்பு பலியில் விசுவாசம் வைப்பதன் அடிப்படையில் இது அவர்களுக்குச் சாத்தியமானது. (யோவா. 6:44) நாம் இதுவரை கலந்தாலோசித்த விஷயங்களோடு பின்வரும் இரண்டு கேள்விகளையும் சிந்திப்பது அவசியம்: நாம் செய்கிற நல்ல காரியங்களுக்காக முடிவில்லா வாழ்க்கை எனும் நம்பிக்கை நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா? இந்த அருமையான நம்பிக்கையைப் பெற்றிருக்கிற நாம் இதை இழந்துவிட முடியுமா?
17. கடவுளுடைய நண்பராயிருக்கும் அருமையான ஆசீர்வாதத்தை நீங்கள் எப்படிக் கருத வேண்டும்?
17 மீட்புவிலையிலிருந்து நன்மையடைய நாம் முற்றிலும் தகுதியற்றவர்கள். ஆனால், அதில் விசுவாசம் வைப்பதன் மூலம் இன்று லட்சக்கணக்கானோர் கடவுளுடைய நண்பர்களாகி இருக்கிறார்கள்; அதோடு, பூஞ்சோலையான பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறும் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். என்றாலும், யெகோவாவின் நண்பர்கள் ஆகிவிட்டால் அந்த நட்பிலிருந்து ஒருபோதும் விலக மாட்டோம் என்று சொல்லிவிட முடியாது. வரவிருக்கும் கடவுளுடைய கடுங்கோபத்தின் நாளிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், ‘கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலைக்கு’ நம் உள்ளப்பூர்வமான நன்றியை எப்போதும் காட்ட வேண்டும்.—ரோ. 3:24; பிலிப்பியர் 2:12-ஐ வாசியுங்கள்.
மீட்புவிலையில் தொடர்ந்து விசுவாசம் வையுங்கள்
18. மீட்புவிலையில் விசுவாசம் வைப்பது எதை உட்படுத்துகிறது?
18 எஜமானரான இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது, அவருக்குக் கீழ்ப்படிவதையும் உட்படுத்துகிறது என்பதை இக்கட்டுரையின் முக்கிய வசனமான யோவான் 3:36 காட்டுகிறது. மீட்புவிலையின் மீது நமக்கு நன்றியுணர்வு இருந்தால், இயேசு போதித்த நன்னெறிகள் உட்பட அனைத்தையும் வாழ்க்கையில் பின்பற்றத் தூண்டப்படுவோம். (மாற். 7:21-23) பாலியல் முறைகேடு, ஆபாசமான கேலிப் பேச்சு, அதோடு ஆபாசத்தைத் தொடர்ந்து பார்ப்பதை உட்படுத்துகிற ‘எல்லாவித அசுத்தமான’ பழக்கங்களையும் விட்டுவிடாமல் இருப்பவர்கள்மீது ‘கடவுளுடைய கடுங்கோபம் வரப்போகிறது.’—எபே. 5:3-6.
19. மீட்புவிலையில் நாம் விசுவாசம் வைத்திருப்பதை எந்தெந்த வழிகளில் காட்டலாம்?
19 மீட்புவிலைக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கும்போது ‘தேவபக்திக்குரிய செயல்களில்’ எப்போதும் சுறுசுறுப்பாய் ஈடுபடுவோம். (2 பே. 3:11) தவறாமல் ஊக்கமாய் ஜெபம் செய்வது, தனிப்பட்ட பைபிள் படிப்பு, கூட்டங்களில் கலந்துகொள்வது, குடும்ப வழிபாடு, ஊழியத்தில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபடுவது ஆகியவற்றிற்குப் போதுமான நேரத்தை ஒதுக்குவோமாக. ‘நன்மை செய்யவும், நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிடாதிருப்போமாக; இப்படிப்பட்ட பலிகளில் கடவுள் பிரியமாயிருக்கிறார்.’—எபி. 13:15, 16.
20. மீட்பு பலியில் விசுவாசம் வைக்கிற அனைவரும் விரைவில் என்ன ஆசீர்வாதத்தை எதிர்பார்க்கலாம்?
20 இந்தப் பொல்லாத உலகத்தின்மீது யெகோவா தம்முடைய கடுங்கோபத்தை வெளிக்காட்டும்போது, நாம் மீட்புவிலையில் விசுவாசம் வைத்து அதற்கு எப்போதும் நன்றியுணர்வைக் காட்டியதற்காக எவ்வளவாய் சந்தோஷப்படுவோம்! அதுமட்டுமல்ல, கடவுளுடைய கடுங்கோபத்திலிருந்து நம்மைப் பாதுகாத்த இந்த அருமையான ஏற்பாட்டிற்காக கடவுள் வாக்களித்திருக்கும் புதிய உலகில் நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாய் இருப்போம்.—யோவான் 3:16-யும், வெளிப்படுத்துதல் 7:9, 10, 13, 14-யும் வாசியுங்கள்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• நமக்கு மீட்பு பலி ஏன் தேவை?
• மீட்புவிலையைச் செலுத்துவதில் என்னென்ன தியாகங்கள் உட்பட்டிருந்தன?
• மீட்புவிலையின் மூலம் கிடைக்கும் நன்மைகள் யாவை?
• இயேசுவின் மீட்பு பலியில் நாம் எப்படி விசுவாசம் வைக்கிறோம்?
[பக்கம் 13-ன் படம்]
யெகோவாவுடன் சமரசமாவதற்கு வாய்ப்பு எனும் கதவு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது
[பக்கம் 15-ன் படங்கள்]
ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபை உட்படுத்திய சம்பவங்களைச் சிந்தித்துப் பார்ப்பது, மீட்புவிலையைச் செலுத்துவதில் உட்பட்ட தியாகங்களைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்