அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
ஒரு சமாரியன் அன்புள்ள அயலானாக நடந்துகொள்கிறான்
இயேசுவின் நாட்களில் யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் பரம விரோதம் இருந்தது. இதனால் யூத மிஷ்னாவில் ஒரு சட்டமும் சேர்க்கப்பட்டது; அதன்படி, இஸ்ரவேல் பெண்கள் யூதர்களல்லாத பெண்களுக்கு மகப்பேறு சமயத்தில் உதவக்கூடாது, ஏனென்றால் புறஜாதியினரின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிடும் என சொல்லப்பட்டது.—அபோடா சாரா 2:1.
மதத்தாலும் இனத்தாலும், புறஜாதியாரைவிட சமாரியர்கள் யூதர்களுக்கு நெருங்கிய சம்பந்தம் உடையவர்களாய் இருந்தனர். ஆனால் அவர்களும் கீழ்ஜாதியினராகவே கருதப்பட்டனர். ‘யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலக்கவில்லை’ என அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். (யோவான் 4:9) இன்னும் சொல்லப்போனால், “ஒரு சமாரியன் தரும் ரொட்டித் துண்டு, பன்றி மாம்சத்தைவிட அசுத்தமானது” என டால்முட் கற்பித்தது. வெறுப்பையும் இகழ்ச்சியையும் காட்டவே, ‘சமாரியன்’ என்ற பதத்தை சில யூதர்கள் பயன்படுத்தினார்கள்.—யோவான் 8:48.
இந்த நிலைமையைக் கருத்தில்கொள்கையில், யூத சட்டங்களை நன்கு அறிந்திருந்த ஒரு மனுஷனிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் நமக்கு பாடம் கற்பிக்கின்றன. அந்த மனுஷன் இயேசுவை அணுகி, “போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்” என்று கேட்டான். அதற்கு இயேசு நியாயப்பிரமாணத்திற்கு கவனத்தைத் திருப்பினார்; அது, ‘கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் அன்புகூரவேண்டும்’ என்றும், ‘உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூரு’ என்றும் சொன்னது. அப்போது அந்த நியாயசாஸ்திரி இயேசுவை நோக்கி, “எனக்குப் பிறன் யார்” என்று கேட்டான். (லூக்கா 10:25-29; லேவியராகமம் 19:18; உபாகமம் 6:5) பரிசேயர்களைப் பொருத்தமட்டில், ‘பிறன்’ என்ற பதம் யூத பாரம்பரியங்களைக் கடைப்பிடித்தவர்களுக்கு மட்டுமே பொருந்தியது; நிச்சயமாகவே புறஜாதியாருக்கோ சமாரியர்களுக்கோ அது பொருந்தவில்லை. ஆவல்மிக்க அந்த நியாயசாஸ்திரி, இயேசுவும் அதே மனப்பான்மையை ஆதரிப்பார் என்று எண்ணியிருக்கலாம்; ஆனால் ஆச்சரியம்தான் அவருக்குக் காத்திருந்தது.
இரக்கமுள்ள சமாரியன்
இயேசு ஒரு நீதிக்கதையைச் சொல்வதன் மூலம் அந்த மனிதனது கேள்விக்குப் பதிலளித்தார். ‘ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போனான்’ என அவர் சொன்னார். எருசலேமுக்கும் எரிகோவுக்கும் இருந்த தூரம் சுமார் 23 கிலோமீட்டர். இந்த இரு நகரங்களையும் இணைத்த சாலை குறுகிய திருப்பங்களையும் துருத்திக்கொண்டிருந்த பாறைகளையும் பெற்றிருந்தது. ஆகவே திருடர்கள் ஒளிந்துகொள்வதற்கும் தாக்குவதற்கும் தப்பித்துக்கொள்வதற்கும் வசதியாய் இருந்தது. அதேவிதமாய் இயேசுவின் நீதிக்கதை சொல்லும் அந்த மனுஷன் “கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.”—லூக்கா 10:30.
இயேசு தொடர்ந்து சொன்னதாவது: “தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.” (லூக்கா 10:31, 32) ஆசாரியர்களும் லேவியர்களும் நியாயப்பிரமாணத்தின் ஆசிரியர்கள்; அப்பிரமாணத்தில் அயலாருக்கு அன்பு காட்ட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. (லேவியராகமம் 10:8-11; உபாகமம் 33:1, 10) அப்படியென்றால், மற்றவர்களைவிட இவர்களே, காயப்பட்ட பிரயாணிக்கு உதவவேண்டுமென துடிதுடித்திருக்க வேண்டும்.
இயேசு தொடர்ந்தார்: ‘பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில் அவனைக் கண்டான்.’ சமாரியன் என சொன்னவுடன் நியாயசாஸ்திரியின் ஆவல் தூண்டப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்த இனத்தவரைப் பற்றி இயேசுவும் தாழ்வாக சொல்லப்போகிறாரா? அதற்கு மாறாக, பரிதாப நிலையிலிருந்த பிரயாணியைப் பார்த்து சமாரியன் ‘மனதுருகியதாய்’ சொன்னார். அவர் மேலும் சொன்னபடி, அவன் “கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.a மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பி வரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.”—லூக்கா 10:33-35.
இப்போது இயேசு அந்த நியாயசாஸ்திரியைப் பார்த்துக் கேட்கிறார்: “இப்படியிருக்க, கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது.” அவனுக்கு பதில் தெரிந்திருந்தது, ஆனால் “சமாரியன்” என சொல்ல தயங்கியதாய் தோன்றுகிறது. ஆகவே வெறுமனே “அவனுக்கு இரக்கஞ் செய்தவனே” என்றான். அதற்கு இயேசு “நீயும் போய் அந்தப்படியே செய்” என்றார்.—லூக்கா 10:36, 37.
நாம் கற்றுக்கொள்ளும் பாடம்
இயேசுவைப் பார்த்து கேள்விகேட்ட அந்த மனுஷன், “தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய்” இருந்தான். (லூக்கா 10:29) நியாயப்பிரமாணத்தில் தனக்கிருந்த ஆழ்ந்த பற்றை இயேசு பாராட்டுவார் என ஒருவேளை அவன் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்த அகந்தையுள்ள மனுஷன் பின்வரும் பைபிள் நீதிமொழி சொல்லும் உண்மையை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது: “மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.”—நீதிமொழிகள் 21:2.
உண்மையான நீதிமான் என்பவன் கடவுளது சட்டங்களைக் கடைப்பிடிப்பவனாக மட்டுமல்ல, ஆனால் அவரது குணாதிசயங்களைப் பின்பற்றுபவனாகவும் இருக்கவேண்டும் என இயேசுவின் நீதிக்கதை காட்டுகிறது. (எபேசியர் 5:1) உதாரணத்திற்கு, “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 10:34) இந்த விஷயத்தில் நாம் கடவுளைப் பின்பற்றுகிறோமா? அயலாருக்கு காட்டும் அன்பு, தேசம், கலாச்சாரம், மதம் என்ற எல்லா தடைகளையும் மீறிச்செல்ல வேண்டும் என மனதைத் தூண்டும் இந்த நீதிக்கதை காட்டுகிறது. ‘யாவருக்கும் நன்மைசெய்யக்கடவோம்’ என்றே கிறிஸ்தவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது; அதே சமூக அந்தஸ்தையும் இனத்தையும் தேசத்தையும் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அல்லது உடன் விசுவாசத்தாருக்கு மட்டுமே நன்மை செய்யவேண்டுமென சொல்லப்படவில்லை.—கலாத்தியர் 6:10.
யெகோவாவின் சாட்சிகள் இந்த வேதப்பூர்வ கட்டளையைப் பின்பற்ற முடிந்தளவு முயல்கிறார்கள். உதாரணத்திற்கு, இயற்கை சேதங்கள் ஏற்படும்போது அவர்கள் உடன் விசுவாசிகளுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும்கூட மனிதாபிமான உதவியை அளிக்கிறார்கள்.b அதுமட்டுமின்றி, பைபிளை நன்கு புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு வருடமும் ஒட்டுமொத்தமாய் கோடிக்கணக்கான மணிநேரங்கள் செலவிடுகின்றனர். அனைவருக்கும் ராஜ்ய செய்தியைச் சொல்ல அவர்கள் முயலுகிறார்கள்; ஏனென்றால் ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்’ கடவுள் சித்தமுள்ளவராயிருக்கிறார்.—1 தீமோத்தேயு 2:4; அப்போஸ்தலர் 10:35.
[அடிக்குறிப்புகள்]
a இயேசுவின் நாட்களிலிருந்த சில சத்திரங்களில் தங்கும் வசதி மட்டுமின்றி உணவும் மற்ற வசதிகளும் இருந்தன. இப்படிப்பட்ட தங்கும் இடங்களைத்தான் இயேசு மனதில் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, லூக்கா 2:7-ல் (NW) “விடுதி” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையிலிருந்து வேறுபடுகிறது.
b உதாரணத்திற்கு, காவற்கோபுரம், டிசம்பர் 1, 1996, பக்கங்கள் 3-8 மற்றும் ஜனவரி 15, 1998, பக்கங்கள் 3-7-ஐக் காண்க.