பூமியில் முடிவில்லா வாழ்வு கிறிஸ்தவ நம்பிக்கையா?
“அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது.” —வெளி. 21:4.
1, 2. முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்ற நம்பிக்கை முதல் நூற்றாண்டு யூதர்கள் பலருக்கு இருந்ததென்று நமக்கு எப்படித் தெரியும்?
பணமும் புகழும் படைத்த இளைஞன் ஒருவன் இயேசுவிடம் ஓடிவந்து, மண்டியிட்டு, “நல்ல போதகரே, முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். (மாற். 10:17) அந்த இளைஞன் முடிவில்லா வாழ்வை எங்கே பெற்றுக்கொள்ள நினைத்தான்? பரலோகத்திலா, பூமியிலா? முந்தின கட்டுரையில் நாம் பார்த்தபடி, உயிர்த்தெழுதல் மற்றும் முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்ற நம்பிக்கையைக் கடவுள் யூதர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அளித்திருந்தார். அந்த நம்பிக்கை முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அநேக யூதர்களுக்கு இருந்துவந்தது.
2 இயேசுவுக்கு நன்கு அறிமுகமான மார்த்தாளும் பூமியில் உயிர்த்தெழுதல் நடக்குமென்று நம்பினாள்; அதனால்தான், இறந்துபோன தன் சகோதரனைப் பற்றிப் பேசிய சமயத்தில், “கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடைபெறும்போது அவன் எழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” என்றாள். (யோவா. 11:24) உண்மைதான், அன்று வாழ்ந்த சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் நடைபெறுமென்று நம்பவில்லை. (மாற். 12:18) என்றாலும், ஜார்ஜ் ஃபுட் மூர் என்பவர் தன் புத்தகத்தில் (கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் யூத மதம் என்ற புத்தகத்தில்) இவ்வாறு சொல்கிறார்: ‘இறந்துபோனவர்கள் எல்லாரும் என்றோ ஒரு நாள் உயிர்த்தெழுந்து மீண்டும் இந்தப் பூமியில் வாழ்வார்கள் என நம்முடைய சகாப்தத்திற்குமுன் இரண்டாம் அல்லது முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.’ ஆகையால், இயேசுவை அணுகிய அந்தப் பணக்கார இளைஞன் முடிவில்லா வாழ்வைப் பூமியில் பெறவே நினைத்தான் என்பது தெளிவாகிறது.
3. இந்தக் கட்டுரையில் என்ன கேள்விகள் சிந்திக்கப்படும்?
3 முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்பது கிறிஸ்தவ போதனையே அல்ல என இன்றுள்ள அநேக மதங்கள் சொல்கின்றன; பைபிள் அறிஞர்கள் பலரும்கூடச் சொல்கிறார்கள். இறந்தவர்கள் ஆவியுலகத்தில் வாழ்வார்கள் எனப் பெரும்பாலோர் நம்புகிறார்கள். அதனால்தான், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை வாசிக்கிற அநேகர், “முடிவில்லா வாழ்வு” என்ற சொற்றொடரைப் பார்க்கும்போது, அது எப்போதும் பரலோக வாழ்க்கையையே குறிக்கிறதென நினைத்துக்கொள்கிறார்கள். அது சரியா? முடிவில்லா வாழ்வைப் பற்றிப் பேசியபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? அவருடைய சீடர்கள் என்ன நம்பினார்கள்? முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்ற நம்பிக்கையைப் பற்றி கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் கற்பிக்கிறதா?
“அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலத்திலே” முடிவில்லா வாழ்வு
4. “அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலத்திலே” என்னவெல்லாம் நடைபெறப்போகின்றன?
4 கடவுளுடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டு பூமியின் மீது ஆட்சி செய்வார்கள் என பைபிள் கற்பிக்கிறது. (லூக். 12:32; வெளி. 5:9, 10; 14:1-3) என்றாலும், முடிவில்லா வாழ்வைப் பற்றி இயேசு பேசியபோதெல்லாம், அந்தத் தொகுதியினரை மட்டுமே மனதில் வைத்துப் பேசவில்லை. சொத்துசுகங்களை விட்டுவிட்டு வர மனதில்லாத அந்தப் பணக்கார இளைஞன் துக்கத்தோடு திரும்பிப்போன பின்பு இயேசு தம் சீடர்களிடம் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள். (மத்தேயு 19:28, 29-ஐ வாசியுங்கள்.) ராஜாக்களாக ஆட்சி செய்வோரில் தம்முடைய அப்போஸ்தலர்களும் இருப்பார்கள், “இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும்,” அதாவது பூமியில் வாழும் மனிதர்கள் எல்லாரையும், நியாயந்தீர்ப்பார்கள் என்று அவர்களிடம் சொன்னார். (1 கொ. 6:2) அவரைப் பின்பற்றுகிற ‘எவருக்கும்’ ஒரு வெகுமதி கிடைக்கப்போகிறது என்றும் சொன்னார். அப்படிப்பட்ட ஒவ்வொருவரும் ‘முடிவில்லா வாழ்வைப் பெற்றுக்கொள்வார்கள்.’ “அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலத்திலே” இவையெல்லாம் நடைபெறப்போகின்றன.
5. ‘அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலம்’ என்ற சொற்றொடரை எப்படி விளக்குவீர்கள்?
5 “அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலத்திலே” என்று சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? கத்தோலிக்க பைபிள் இந்தச் சொற்றொடரை, “உலகம் புத்துயிர் பெறும் நாளில்” என்று மொழிபெயர்த்துள்ளது; ஈஸி டு ரீட் வர்ஷன் பைபிள் இதை, “புதிய உலகம் படைக்கப்படும்பொழுது” என்று மொழிபெயர்த்துள்ளது. இயேசு இந்தச் சொற்றொடரைக் குறிப்பிட்டபோது அதைப் பற்றி எந்த விளக்கமும் அளிக்காததால், யூதர்களுக்குப் பல நூற்றாண்டுகளாக இருந்த நம்பிக்கையைப் பற்றியே குறிப்பிட்டார் எனத் தெரிகிறது. அது என்ன நம்பிக்கையென்றால், “அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலத்திலே,” ஆதாம் ஏவாள் பாவம் செய்வதற்குமுன் ஏதேன் தோட்டத்தில் இருந்த அதே சூழ்நிலை பூமி முழுக்க நிலவும் என்பதே. அப்போதுதான் ‘புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிப்பதாக’ கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும்.—ஏசா. 65:17.
6. செம்மறியாடு, வெள்ளாடு பற்றிய உவமை முடிவில்லா வாழ்வைப் பற்றி என்ன கற்பிக்கிறது?
6 இயேசு இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த சமயத்திலும் முடிவில்லா வாழ்வைப் பற்றிக் குறிப்பிட்டார். (மத். 24:1-3) “மனிதகுமாரன் தம்முடைய மகிமையில் எல்லாத் தேவதூதர்களோடும் வரும்போது, தம் மகிமையுள்ள சிம்மாசனத்தில் அமருவார். எல்லாத் தேசத்தாரும் அவர்முன் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்; ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிப்பதுபோல், அவர் அவர்களைப் பிரிப்பார்.” அப்போது, தண்டனைத் தீர்ப்பு பெறுகிறவர்கள் “நிரந்தர அழிவைப் பெறுவார்கள், நீதிமான்களோ நிரந்தர வாழ்வைப் பெறுவார்கள்.” பூமியில் நிரந்தர வாழ்வை, அதாவது முடிவில்லா வாழ்வை, பெறுகிற ‘நீதிமான்கள்’ கிறிஸ்துவோடு பரலோகத்தில் இருக்கப்போகிற அவருடைய ‘சகோதரர்களை’ உண்மையோடு ஆதரிக்கிறவர்கள் ஆவர். (மத். 25:31-34, 40, 41, 45, 46) அந்தச் சகோதரர்கள், பரலோக அரசாங்கத்தில் ஆட்சி செய்யப்போவதால், மேற்சொல்லப்பட்ட ‘நீதிமான்கள்’ அந்த அரசாங்கத்தின்கீழ் வாழும் பூமிக்குரிய குடிமக்களாகத்தான் இருக்க வேண்டும். “ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் [யெகோவா நியமித்த ராஜா] அரசாளுவார்” என்று பைபிள் முன்னறிவித்தது. (சங். 72:8) ஆகவே, பூமியின் எல்லைகள்வரை குடியிருக்கப்போகிற மக்கள் அந்த அரசாங்கத்தின்கீழ் முடிவில்லா வாழ்வை அனுபவிப்பார்கள்.
யோவான் சுவிசேஷம் என்ன காட்டுகிறது?
7, 8. நிக்கொதேமுவிடம் இயேசு என்ன இரண்டு நம்பிக்கைகளைப் பற்றிச் சொன்னார்?
7 “முடிவில்லா வாழ்வு” என்ற சொற்றொடரை இயேசு மேற்குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்களில் பயன்படுத்தினார் என்பதை மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய சுவிசேஷப் பதிவுகள் காண்பிக்கின்றன. இதே சொற்றொடர் சுமார் 17 முறை யோவான் சுவிசேஷத்தில் காணப்படுகிறது. முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்ற நம்பிக்கையைப் பற்றி இயேசு என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்ள அவற்றில் சில வசனங்களை இப்போது நாம் ஆராயலாம்.
8 யோவான் சுவிசேஷத்தின்படி, நிக்கொதேமு என்ற ஒரு பரிசேயரிடம்தான் இயேசு முதன்முதலாக முடிவில்லா வாழ்வைப் பற்றிப் பேசினார். “தண்ணீரினாலும் கடவுளுடைய சக்தியினாலும் ஒருவன் பிறக்காவிட்டால், அவன் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் நுழைய முடியாது” என்று அவரிடம் இயேசு சொன்னார். அப்படியானால், பரலோக அரசாங்கத்திற்குள் நுழைகிறவர்கள் ‘மறுபடியும் பிறக்க’ வேண்டும். (யோவா. 3:3-5) இயேசு இதைச் சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை; முழு உலகத்திற்கும் கிடைக்கப்போகிற ஒரு நம்பிக்கையைப் பற்றியும் சொன்னார். (யோவான் 3:16-ஐ வாசியுங்கள்.) ஆகவே, இயேசுவோடு ஆட்சி செய்யப்போகிறவர்களுக்குப் பரலோகத்திலும், மற்றவர்களுக்குப் பூமியிலும் முடிவில்லா வாழ்வு கிடைக்குமென்ற நம்பிக்கையைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
9. சமாரியப் பெண்ணிடம் இயேசு என்ன நம்பிக்கையைப் பற்றிப் பேசினார்?
9 எருசலேமில் நிக்கொதேமுவிடம் பேசிவிட்டு, இயேசு வடக்கு நோக்கி கலிலேயாவுக்குப் பயணம் செய்தார். வழியில், சமாரியாவிலுள்ள சீகார் நகரத்திற்கு அருகிலிருந்த யாக்கோபின் கிணற்றருகே ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளிடம், “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிற எவனுக்கும் என்றுமே தாகமெடுக்காது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர், அவன் முடிவில்லா வாழ்வைப் பெறும்படி அவனுக்குள்ளிருந்து கொப்பளிக்கிற நீரூற்றாக ஆகும்” என்று சொன்னார். (யோவா. 4:5, 6, 14) பூமியில் வாழப்போகிறவர்கள் உட்பட எல்லா மனிதர்களுக்குமே மீண்டும் முடிவில்லா வாழ்வு கிடைப்பதற்கான கடவுளுடைய ஏற்பாடுகளைத்தான் இந்தத் தண்ணீர் குறிக்கிறது. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் கடவுளே இவ்வாறு சொல்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது: “தாகமாயிருக்கிறவனுக்கு வாழ்வளிக்கும் நீரூற்றிலிருந்து இலவசமாய்த் தண்ணீரைக் கொடுப்பேன்.” (வெளி. 21:5, 6; 22:17) ஆகவே, முடிவில்லா வாழ்வைப் பற்றி இயேசு அந்தச் சமாரியப் பெண்ணிடம் பேசியபோது, பரலோக அரசாங்கத்தில் சக ராஜாக்களாக இருக்கப்போகிறவர்களுக்கு மட்டுமல்ல, கடவுள் மீதும் அவருடைய வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைக்கிற எல்லாருக்குமே அந்த வாழ்வு கிடைக்குமென்று அர்த்தப்படுத்தினார்.
10. பெத்சதா குளத்தருகே நோய்வாய்ப்பட்டிருந்த ஒருவனைக் குணப்படுத்திய பிறகு, இயேசு தம்மை எதிர்த்த மதத் தலைவர்களிடம் முடிவில்லா வாழ்வைப் பற்றி என்ன சொன்னார்?
10 அதற்கடுத்த வருடம், இயேசு மறுபடியும் எருசலேமில் இருந்தார். அங்கு பெத்சதா குளத்தருகே நோய்வாய்ப்பட்டிருந்த ஒருவனைக் குணப்படுத்தினார். அவர் செய்ததைக் கடுமையாக விமர்சித்த யூதர்களை நோக்கி, “மகனால் எதையுமே சுயமாகச் செய்ய முடியாது; தகப்பன் எதைச் செய்வதைப் பார்க்கிறாரோ அதை மட்டுமே அவரால் செய்ய முடியும்” என்று அவர் சொன்னார். “நியாயந்தீர்க்கிற அதிகாரம் முழுவதையும் [தகப்பன்] மகனிடம் ஒப்படைத்திருக்கிறார்” என்றும் சொன்னார்; அதன்பிறகு, “என் வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பியவரை நம்புகிறவனுக்கு முடிவில்லா வாழ்வு இருக்கிறது” என்று சொன்னார். அதோடு, “வேளை வரப்போகிறது; அப்போது, கல்லறைகளில் உள்ள அனைவரும் [மனிதகுமாரனுடைய] குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்; நன்மை செய்தவர்கள் முடிவில்லா வாழ்வைப் பெறுவார்கள், தீமை செய்துவந்தவர்களோ தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள்” என்றும் சொன்னார். (யோவா. 5:1-9, 19, 22, 24-29) முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்ற யூதர்களுடைய நம்பிக்கையை நிறைவேற்றுவதற்குத் தம்மையே கடவுள் நியமித்திருக்கிறார் என்பதையும், உயிர்த்தெழுதலின் மூலம் அவ்வாறு செய்வார் என்பதையும் தம்மை எதிர்த்த யூதர்களிடம் அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
11. யோவான் 6:48-51-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளில், முடிவில்லா வாழ்வு பூமியிலே கிடைக்குமென்ற நம்பிக்கை உட்பட்டுள்ளது என்று நமக்கு எப்படித் தெரியும்?
11 கலிலேயாவில், இயேசு அற்புதமாய்க் கொடுத்த உணவை மீண்டும் பெற விரும்பிய ஆயிரக்கணக்கானோர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களிடம் இயேசு வேறொரு உணவைப் பற்றிச் சொன்னார், அதாவது, ‘வாழ்வளிக்கும் உணவை’ பற்றிச் சொன்னார். (யோவான் 6:40, 48-51-ஐ வாசியுங்கள்) “நான் கொடுக்கும் இந்த உணவு . . . என் சதையே” என்று அவர் கூறினார். தம்மோடு பரலோக அரசாங்கத்தில் ஆட்சி செய்யப்போகிறவர்களுக்காக மட்டுமே அவர் தம் உயிரைக் கொடுக்கவில்லை, மீட்புக்குத் தகுதியுள்ளவர்களைக் கொண்ட ‘உலகம் வாழ்வு பெறுவதற்காகவும்’ அவர் தம் உயிரைக் கொடுத்தார். “இந்த உணவைச் சாப்பிடுகிற ஒருவர்,” அதாவது இயேசுவுடைய மீட்புபலியில் விசுவாசம் வைக்கிற ஒருவர், முடிவில்லா வாழ்வுக்கான நம்பிக்கையைப் பெறுவார். ஆம், ‘என்றென்றும் உயிர் வாழ்வது’ பற்றி இங்கே இயேசு சொன்ன விஷயம், மேசியாவுடைய ஆட்சியின்போது முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்ற யூதர்களுடைய நீண்டநாள் நம்பிக்கையை உட்படுத்தியது.
12. ‘தம் ஆடுகளுக்கு முடிவில்லா வாழ்வைத் தருவதாக’ இயேசு தம்மை எதிர்த்தவர்களிடம் சொன்னபோது, எந்த நம்பிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டார்?
12 பிற்பாடு, எருசலேம் ஆலயத்தின் அர்ப்பண விழாவின்போது, இயேசு தம்மை எதிர்த்தவர்களிடம், “நீங்கள் என் மந்தையைச் சேர்ந்த ஆடுகள் இல்லை, அதனால்தான் நம்பாமல் இருக்கிறீர்கள். என் ஆடுகள் என்னுடைய குரலுக்குச் செவிகொடுக்கின்றன, நான் அவற்றை அறிந்திருக்கிறேன், அவை என்னைப் பின்பற்றி வருகின்றன. நான் அவற்றுக்கு முடிவில்லா வாழ்வைத் தருகிறேன்” என்று கூறினார். (யோவா. 10:26-28) இயேசு பரலோக வாழ்க்கையைப் பற்றி மட்டுமே இங்கு பேசிக்கொண்டிருந்தாரா அல்லது பூஞ்சோலையான பூமியில் முடிவில்லா வாழ்வைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தாரா? சில நாட்களுக்கு முன்புதான் இயேசு தம் சீடர்களை நோக்கி, “பயப்படாதே சிறுமந்தையே, உங்களிடம் அரசாங்கத்தைக் கொடுக்க உங்கள் தகப்பன் அங்கீகரித்திருக்கிறார்” என்று சொல்லியிருந்தார். (லூக். 12:32) என்றாலும், அதே அர்ப்பண விழாவின்போது இவ்வாறு சொன்னார்: “இந்தத் தொழுவத்தைச் சேராத வேறே ஆடுகளும் எனக்கு இருக்கின்றன; அவற்றையும் நான் கொண்டுவர வேண்டும்.” (யோவா. 10:16) ஆகவே, ‘சிறுமந்தையை’ சேர்ந்தவர்களுக்குப் பரலோகத்திற்குச் செல்கிற நம்பிக்கையும், ‘வேறே ஆடுகளுக்கு’ பூமியில் வாழ்கிற நம்பிக்கையும் இருக்கிறது என்பதையே தம்மை எதிர்த்தவர்களிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் காட்டுகின்றன.
விளக்கம் தேவைப்படாத ஒரு நம்பிக்கை
13. “நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று இயேசு சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்?
13 இயேசு கழுமரத்தில் ரண வேதனைப்பட்டுக்கொண்டிருந்தபோது, மனிதகுலத்திற்கான நம்பிக்கையைக் குறித்து மறுக்கமுடியாத விதத்தில் உறுதியளித்தார். அவரருகே கழுமரத்தில் ஏற்றப்பட்டிருந்த ஒரு குற்றவாளி, “இயேசுவே, நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினான். அப்போது இயேசு, “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று அவனுக்கு வாக்குக் கொடுத்தார். (லூக். 23:42, 43) அந்த மனிதன் ஒரு யூதனாக இருந்ததால், அந்தப் பூஞ்சோலையைப் பற்றிய எந்த விளக்கமும் அவனுக்குத் தேவைப்பட்டிருக்காது. வருங்காலத்திலே பூஞ்சோலையான பூமியில் மனிதர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்குமென்று அவன் அறிந்திருந்தான்.
14. (அ) பரலோக நம்பிக்கை பற்றிப் புரிந்துகொள்வது அப்போஸ்தலர்களுக்குக் கடினமாக இருந்ததென்பதை எது காட்டுகிறது? (ஆ) இயேசுவின் சீடர்கள் பரலோக நம்பிக்கை பற்றி எப்போது தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்?
14 உண்மையில், இயேசு குறிப்பிட்ட பரலோக நம்பிக்கைக்குத்தான் விளக்கம் தேவைப்பட்டது. தம்முடைய சீடர்களுக்கு ஓர் இடத்தைத் தயார்படுத்துவதற்காக இயேசு பரலோகத்திற்குச் செல்வதாகச் சொன்னபோது அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. (யோவான் 14:2-5-ஐ வாசியுங்கள்.) “இன்னும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் இப்போது அவற்றை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. இருந்தாலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிற சக்தியாகிய அந்தச் சகாயர் வரும்போது சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வார்” என்று அவர் பிற்பாடு சொன்னார். (யோவா. 16:12, 13) தாங்கள் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யப்போகிறார்கள் என்பதை பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்புதான், அதாவது எதிர்காலத்தில் ராஜாக்களாக ஆட்சி செய்யும்படி கடவுளுடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளுக்குப் பின்புதான், அவர்கள் புரிந்துகொண்டார்கள். (1 கொ. 15:49; கொலோ. 1:5; 1 பே. 1:3, 4) பரலோகத்திற்குச் செல்கிற நம்பிக்கைதான் அவர்களுக்குப் புதிய கருத்தாக இருந்தது; அதோடு, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள கடிதங்களும் அந்த நம்பிக்கையையே சிறப்பித்துக் காட்டின. ஆனால், மனிதர்கள் முடிவில்லா வாழ்வை பூமியில் அனுபவிப்பார்கள் என்ற நம்பிக்கையை இந்தக் கடிதங்கள் ஆதரிக்கின்றனவா?
பைபிளிலுள்ள கடிதங்கள் என்ன சொல்கின்றன?
15, 16. பூமியிலேயே முடிவில்லா வாழ்வு கிடைக்குமென்று எபிரெயர் புத்தகத்திலும், பேதுரு புத்தகத்திலும் உள்ள வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன?
15 எபிரெயர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கடிதம் எழுதியபோது சக வணக்கத்தாரை, ‘பரலோக அழைப்பில் பங்குகொள்கிற பரிசுத்த சகோதரர்கள்’ எனக் குறிப்பிட்டார். என்றாலும், “வரப்போகும் உலகத்தை” இயேசுவுக்குக் கடவுள் கீழ்ப்படுத்தியிருக்கிறார் எனவும் குறிப்பிட்டார். (எபி. 2:3, 5; 3:1) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், “உலகம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை மக்கள் குடியிருக்கிற பூமியையே எப்போதும் குறிக்கிறது. எனவே, ‘வரப்போகும் உலகம்’ என்பது எதிர்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் இருக்கப்போகிற புதிய பூமியையே அர்த்தப்படுத்துகிறது. “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்று கடவுள் கொடுத்த வாக்குறுதியை இயேசு அந்தச் சமயத்தில்தான் நிறைவேற்றுவார்.—சங். 37:29.
16 அப்போஸ்தலன் பேதுருவும் மனிதகுலத்திற்கான நம்பிக்கையைப் பற்றி எழுதுவதற்குக் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “இப்போது இருக்கிற வானமும் பூமியும் அதே வார்த்தையினால் நெருப்புக்கென்று வைக்கப்பட்டிருக்கின்றன, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகிற நாளுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கின்றன.” (2 பே. 3:7) உலக அரசாங்கங்களை அடையாளப்படுத்துகிற வானத்தையும், தற்போதைய பொல்லாத மனித சமுதாயத்தை அடையாளப்படுத்துகிற பூமியையும் எவை மாற்றீடு செய்யப்போகின்றன? (2 பேதுரு 3:13-ஐ வாசியுங்கள்.) ‘புதிய வானமாகிய’ கடவுளுடைய மேசியானிய அரசாங்கமும், ‘புதிய பூமியாகிய’ நீதியுள்ள மனித சமுதாயமும் அவற்றை மாற்றீடு செய்யப்போகின்றன.
17. வெளிப்படுத்துதல் 21:1-4-ல் மனிதகுலத்திற்கான நம்பிக்கை எப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது?
17 மனிதகுலம் திரும்பவும் பரிபூரண நிலைக்குக் கொண்டுவரப்படுவது பற்றி பைபிளின் கடைசிப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள தரிசனக் காட்சி நம் இருதயத்தைத் தூண்டியெழுப்புகிறது. (வெளிப்படுத்துதல் 21:1-4-ஐ வாசியுங்கள்.) ஏதேன் தோட்டத்தில் மனிதர்கள் பரிபூரணத்தன்மையை இழந்த சமயத்திலிருந்தே இது உண்மையுள்ள மனிதர்களின் நம்பிக்கையாக இருந்துவந்திருக்கிறது. அதன்படி, நீதிமான்கள் பூஞ்சோலை பூமியில் முதுமையடையாமல் என்றென்றும் வாழ்வார்கள். இந்த நம்பிக்கை எபிரெய வேதாகமத்திலும் சரி, கிரேக்க வேதாகமத்திலும் சரி, உறுதியாக வேரூன்றப்பட்டிருக்கிறது; அதோடு, யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களை இந்நாள்வரை பலப்படுத்தி வந்திருக்கிறது.—வெளி. 22:1, 2.
உங்களால் விளக்க முடியுமா?
• “அனைத்தும் புதிதாக்கப்படுகிற காலத்திலே” என்று சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?
• நிக்கொதேமுவிடம் இயேசு எதைப் பற்றிப் பேசினார்?
• தம் அருகே கழுமரத்தில் ஏற்றப்பட்டிருந்த குற்றவாளியிடம் இயேசு என்ன வாக்குக் கொடுத்தார்?
• எபிரெயர் புத்தகத்திலும், பேதுரு புத்தகத்திலும் உள்ள வார்த்தைகள் முடிவில்லா வாழ்வு பூமியில் கிடைக்குமென்ற நம்பிக்கையை எப்படி உறுதிப்படுத்துகின்றன?
[பக்கம் 8-ன் படம்]
செம்மறியாடு போன்றவர்கள் முடிவில்லா வாழ்வைப் பூமியில் பெறுவார்கள்
[பக்கம் 10-ன் படங்கள்]
முடிவில்லா வாழ்வைப் பற்றி இயேசு மற்றவர்களுக்குச் சொன்னார்