வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
கெரிசீம்—‘இந்த மலையிலே நாங்கள் தொழுதுவந்தோம்’
கிணற்றருகே சமாரியப் பெண். அந்தச் சொற்றொடர், சமாரியாவின் ஒரு நகரமாகிய சீகாரில் உள்ள “யாக்கோபுடைய கிணறு [நீரூற்று, NW]” அருகில் ஒரு பெண்ணிடம் இயேசு சந்தர்ப்பச் சாட்சி கொடுத்த அந்த மனதைக் கவரும் பதிவை உங்களுடைய நினைவிற்கு கொண்டுவரவில்லையா? அந்த ஆழ்ந்த அர்த்தமுள்ள நிகழ்ச்சியைப் பற்றிய உங்களுடைய கருத்தை இன்னும் அறிவுக்கூர்மையுள்ளதாக ஆக்குவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா?—யோவான் 4:5-7.
எருசலேமுக்கு ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மேலேயுள்ள இரண்டு மலைகளைக் கவனியுங்கள்.a இடது (தெற்கு) பக்கத்தில் மரங்களால் நிறைந்துள்ள கெரிசீம் இருக்கிறது; ஏராளமான நீருற்றுகள், இதனுடைய செழிப்புக்கும் அழகுக்கும் காரணமாக இருக்கின்றன. வலது (வடக்கு) பக்கத்தில், ஏபால் இருக்கிறது; இது கொஞ்சம் உயரமானதாக ஆனால் பாறையைப் போன்றும் வறண்டும் இருக்கிறது.
இவற்றிற்கு இடையில் சீகேமின் செழிப்பான பள்ளத்தாக்கு பரவியிருக்கிறது. கடவுளுடைய நண்பன் ஆபிராம் (பின்பு ஆபிரகாம் என்று பெயரிடப்பட்டவர்) வாக்குப்பண்ணப்பட்ட தேசம் வழியாக பிரயாணம்செய்தபோது சீகேமில் தங்கிப்போனார். இங்கு அப்போதுதான் அவருக்குக் காட்சியளித்து, இந்தத் தேசத்தை அவருடைய சந்ததிக்குக் கொடுப்பதாக வாக்குப்பண்ணின யெகோவாவிற்கு ஒரு பலிபீடத்தை அவர் கட்டினார். (ஆதியாகமம் 12:5-7) இப்படிப்பட்ட வாக்கைக் கொடுப்பதற்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் மையப்பகுதி எவ்வளவு பொருத்தமான இடம்! கெரிசீம் அல்லது ஏபாலின் சிகரஉச்சியிலிருந்து, கோத்திர தகப்பன் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் பெரும் பகுதிகளைக் கண்ணோட்டமிடமுடியும். கடற்கரைக்கும் யோர்தான் பள்ளத்தாக்குக்கும் இடையேயுள்ள கிழக்கு-மேற்கு சாலைக்கு மிக அருகிலுள்ள வடக்கு-தெற்கு மலை சாலையின்மீது இருப்பதினால் சீகேம் நகரம் (நவீன நாபிலஸ்) ஒரு மிக முக்கியமான மையப்பகுதியாக இருந்தது.
ஆபிரகாமின் பலிபீடம் மட்டும்தான் இங்குள்ள குறிப்பிடத்தக்க ஒரு மதச் சின்னமாகும். பின்பு, யாக்கோபு இந்தப் பகுதியில் நிலம் வாங்கி, உண்மை வணக்கத்தில் ஈடுபட்டார். கெரிசீமின் அடிவாரத்துக்கு அருகில் அவர் ஒரு மிக ஆழமான கிணற்றை வெட்டினார் அல்லது வெட்டியதற்குரிய செலவையும் கொடுத்தார். நூற்றாண்டுகளுக்குப் பின்பு சமாரியப் பெண் இயேசுவிடம்: “இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோ[பு] . . . இதிலே குடித்ததுண்டே” என்று சொன்னாள். இது ஒரு நீரூற்றை தன்னுடைய நீரின் ஊற்றுமூலமாகக் கொண்டதாக இருக்கவேண்டும். அப்போஸ்தலனாகிய யோவான் ‘யாக்கோபின் நீரூற்று’ என்று ஏன் குறிப்பிட்டார் என்பதை இது விளக்குகிறது.
உண்மை வணக்கத்தின் சம்பந்தமாக கெரிசீம், ஏபால் பற்றிய குறிப்பு மோசே உத்தரவிட்டபடி யோசுவா இஸ்ரவேலர்களை இங்கு கொண்டுவந்தச் சம்பவத்தை உங்களுடைய நினைவிற்கு கொண்டுவரலாம். ஏபாலில் ஒரு பலிபீடத்தை யோசுவா கட்டினார். யோசுவா ‘நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிற ஆசீர்வாதத்தையும் சாபத்தையும்’ வாசித்துக்கொண்டிருந்தபோது, கெரிசீமுக்கு எதிராக பாதிபேரும் ஏபாலுக்கு எதிராக மீதிபேரும் நிற்பதைக் கற்பனைச் செய்துபாருங்கள். (யோசுவா 8:30-35; உபாகமம் 11:29) வருடங்கள் கழிந்தபிறகு, யோசுவா திரும்பிவந்து இறுதியான எச்சரிக்கையாக பின்வருமாறு சொன்னார்: “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்.” ஜனங்களும் அதையே செய்ய ஒப்புக்கொண்டனர். (யோசுவா 24:1, 15-18, 25) ஆனால் அவர்கள் உண்மையாகவே அவ்வாறு செய்வார்களா?
பதில், சமாரியப்பெண்ணோடு நடந்த இயேசுவின் உரையாடலைப் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு உதவிசெய்யும். ஆபிரகாம், யாக்கோபு, யோசுவா ஆகியோரால் பின்பற்றப்பட்ட உண்மை வணக்கம் இங்கு, சமாரியாவில், இப்போது பின்பற்றப்படவில்லை என்பதை நீங்கள் கவனியுங்கள்.
வடகோத்திரங்கள் பத்தும் சிதறடிக்கப்பட்டப் பின்பு, அவர்கள் கன்றுக்குட்டி வணக்கத்திற்குத் திரும்பினார்கள். எனவே, யெகோவா பொ.ச.மு. 740-ல் அசீரியர்கள் இந்தப் பகுதியைக் கைப்பற்றும்படி அனுமதித்தார். ஜனத்தொகையின் பெரும்பாகத்தை அவர்கள் எடுத்துசென்றுவிட்டு, அதற்குப் பதிலாக அசீரியப் பேரரசின் மற்ற பகுதிகளில் வாழும் அந்நிய தெய்வங்களை வணங்குகிற அந்நியர்களை அந்த இடத்திலே வைத்தனர். இப்படிப்பட்ட புறமதத்தினர்களில் சிலர், இஸ்ரவேலர்களோடு கலப்புத் திருமணம்செய்து, விருத்தசேதனம் போன்ற உண்மை வணக்கத்தின் சில போதனைகளைக் கற்றுக்கொண்டார்கள். ஆனால், இதனால் உருவாகிய சமாரிய வணக்கமுறை நிச்சயமாகவே கடவுளுக்கு முழுமையாக பிரியமானதாக இருக்கவில்லை.—2 இராஜாக்கள் 17:7-33.
தங்களுடைய கலப்பு வழிபாட்டில், சமாரியர்கள், மோசேயின் முதல் ஐந்து புத்தகங்களை, அந்தப் பென்ட்டடூக்-ஐ மட்டுமே வேதவசனமாக ஏற்றுக்கொண்டனர். எருசலேமில் இருந்த கடவுளுடைய ஆலயத்திற்கு போட்டியாக, ஏறக்குறைய பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில் கெரிசீம் மலையில் ஓர் ஆலயத்தை அவர்கள் கட்டினர். காலப்போக்கில், இந்தக் கெரிசீம் ஆலயம் சூஸ் (அல்லது ஜூப்பிட்டர்) தெய்வத்திற்கு பிரதிஷ்டைசெய்யப்பட்டு, இறுதியில் அழிக்கப்பட்டது. சமாரிய வணக்கம் இன்னும் கெரிசீமில் மையங்கொண்டதாக தொடர்ந்து இருந்தது.
இந்நாள்வரையில், சமாரியர்கள் கெரிசீமில் வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் பஸ்காவை ஆசரிக்கிறார்கள். அநேக ஆட்டுக்குட்டிகள் அடிக்கப்படுகின்றன. ரோமங்களைப் பிடுங்கி எடுப்பதற்காக அவற்றின் சடலங்கள், சுடுநீருள்ள பீப்பாய்களில் முக்கிஎடுக்கப்படுகின்றன, பிறகு அந்த இறைச்சி குழிகளில் பல மணிநேரங்களுக்குச் சமைக்கப்படுகிறது. நடு இரவில் நூற்றுக்கணக்கான சமாரியர்கள், எருசலேமிலிருந்து வந்த அநேகர், அவர்களுடைய பஸ்கா உணவைச் சாப்பிடுவர். இடது பக்கத்தில், கெரிசீம் மலையில், சமாரிய பிரதான ஆசாரியன், தன்னுடைய தலை மூடியவராக, பஸ்கா ஆசரிப்பில் பலிபீடத்து ஊழியம்செய்வதை நீங்கள் காணலாம்.
இயேசுவிடம் சமாரிய பெண் என்ன சொன்னாள் என்பதை ஞாபகப்படுத்திப்பாருங்கள்: “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்.” இயேசுவோ, அவளுக்கும் நமக்கும் சரியான விளக்கத்தைக் கொடுத்தார்: “நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. . . . உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.”—யோவான் 4:20-24.
[அடிக்குறிப்புகள்]
a பெரிய அளவில் இந்தப் படத்தை நீங்கள் யெகோவாவின் சாட்சிகளின் நாட்காட்டி 1993-ல் ஆராய்ந்துபார்க்கலாம்.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Garo Nalbandian
Garo Nalbandian