உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • jy அதி. 19 பக். 48-பக். 51 பாரா. 4
  • சமாரியப் பெண்ணுக்குக் கற்பிக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சமாரியப் பெண்ணுக்குக் கற்பிக்கிறார்
  • இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சமாரியர்கள் நிறைய பேர் நம்புகிறார்கள்
  • ஒரு சமாரிய பெண்ணுக்குப் போதித்தல்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • ஒரு சமாரிய பெண்ணுக்குப் போதித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • சமாரியர்கள் அநேகர் விசுவாசிக்கிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • கிணற்றின் பக்கத்தில் ஒரு பெண்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
jy அதி. 19 பக். 48-பக். 51 பாரா. 4
கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு சமாரியப் பெண்ணிடம் இயேசு பேசுகிறார்

அதிகாரம் 19

சமாரியப் பெண்ணுக்குக் கற்பிக்கிறார்

யோவான் 4:3-43

  • சமாரியப் பெண்ணுக்கும் மற்றவர்களுக்கும் இயேசு கற்பிக்கிறார்

  • கடவுள் ஏற்றுக்கொள்கிற வணக்கம்

இயேசுவும் அவருடைய சீஷர்களும் யூதேயாவிலிருந்து வடக்கு நோக்கிப் பயணம் செய்து, கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சமாரியா மாகாணம் வழியாகப் போகிறார்கள். ரொம்பத் தூரம் நடந்ததால் எல்லாரும் களைப்பாக இருக்கிறார்கள். உச்சி வெயில் அடிக்கும் நேரத்தில், சீகார் என்ற நகரத்துக்குப் பக்கத்தில் வந்துசேர்கிறார்கள். அங்கே இருக்கிற ஒரு கிணற்றுக்குப் பக்கத்தில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தக் கிணற்றை பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் யாக்கோபு வெட்டியிருக்கலாம், அல்லது கூலி கொடுத்து வெட்ட வைத்திருக்கலாம். இன்றும்கூட, நாப்லஸ் என்ற நகரத்துக்குப் பக்கத்தில் இந்தக் கிணற்றைப் பார்க்க முடியும்.

இந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் இயேசு ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய சீஷர்கள் உணவு வாங்குவதற்காகப் பக்கத்திலிருக்கிற நகரத்துக்குப் போகிறார்கள். அப்போது, ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுப்பதற்காக அங்கே வருகிறாள். இயேசு அவளிடம், “குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்கிறார்.—யோவான் 4:7.

ஒரு கிணற்றுக்குப் பக்கத்தில் இயேசு ஓய்வெடுக்கிறார், அவருடைய சீஷர்கள் அங்கிருந்து போகிறார்கள், தண்ணீர் எடுக்க ஒரு சமாரியப் பெண் வருகிறாள்

யூதர்களும் சமாரியர்களும் பரம விரோதிகள். அதனால், ஒருவருக்கொருவர் பேசக்கூட மாட்டார்கள். இயேசு தண்ணீர் கேட்டதும், அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆச்சரியம்! அதனால், “நான் ஒரு சமாரியப் பெண், நீங்களோ ஒரு யூதர். அப்படியிருக்கும்போது, குடிப்பதற்கு என்னிடம் எப்படித் தண்ணீர் கேட்கிறீர்கள்?” என்று கேட்கிறாள். அதற்கு இயேசு, “கடவுள் கொடுக்கும் இலவச அன்பளிப்பு எது என்றும், குடிப்பதற்கு உன்னிடம் தண்ணீர் கேட்பவர் யார் என்றும் உனக்குத் தெரிந்திருந்தால், நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவர் உனக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்று சொல்கிறார். அப்போது அவள், “ஐயா, தண்ணீர் எடுக்க உங்களிடம் வாளிகூட இல்லை, கிணறும் ஆழமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது, வாழ்வு தரும் தண்ணீர் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்த எங்கள் மூதாதையான யாக்கோபைவிட நீங்கள் உயர்ந்தவரா? அவரும் அவருடைய பிள்ளைகளும் இதிலிருந்துதானே தண்ணீர் குடித்தார்கள், அவருடைய கால்நடைகளும் இதிலிருந்துதானே தண்ணீர் குடித்தன” என்று சொல்கிறாள்.—யோவான் 4:9-12.

அதற்கு இயேசு, “இந்தத் தண்ணீரைக் குடிக்கிற எல்லாருக்கும் மறுபடியும் தாகமெடுக்கும். ஆனால், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிற ஒருவனுக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளிருந்து பொங்கிவருகிற நீரூற்றாக மாறி, முடிவில்லாத வாழ்வைத் தரும்” என்று சொல்கிறார். (யோவான் 4:13, 14) இயேசு களைப்பாக இருந்தாலும்கூட, வாழ்வு தரும் சத்தியங்களை அந்தச் சமாரியப் பெண்ணுக்குக் கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறார்.

அந்தப் பெண் அவரிடம், “ஐயா, எனக்கு அந்தத் தண்ணீரைக் கொடுங்கள்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது, தண்ணீர் எடுக்க நான் இங்கே வர வேண்டிய அவசியமும் இருக்காது” என்று சொல்கிறாள். இப்போது இயேசு வேறொரு விஷயத்தைப் பற்றி அவளிடம் கேட்கிறார். அவளிடம், “நீ போய் உன் கணவனை இங்கே கூட்டிக்கொண்டு வா” என்று சொல்கிறார். அந்தப் பெண்ணோ, “எனக்குக் கணவன் இல்லை” என்று சொல்கிறாள். அதற்கு அவர், “‘எனக்குக் கணவன் இல்லை’ என்று நீ சொன்னது சரிதான். ஏனென்றால், உனக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள், இப்போது உன்னோடு இருப்பவன் உன் கணவன் அல்ல. நீ உண்மையைச் சொன்னாய்” என்று சொல்கிறார்; அதைக் கேட்டதும் அவளுக்குப் பயங்கர அதிர்ச்சி!—யோவான் 4:15-18.

இயேசு ஒரு சாதாரண மனிதர் கிடையாது என்பதை அந்தப் பெண் புரிந்துகொள்கிறாள். அதனால், “ஐயா, நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்று எனக்குப் புரிந்துவிட்டது” என்று ஆச்சரியத்தோடு சொல்கிறாள். கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள அவள் ரொம்ப ஆசைப்படுகிறாள். அதனால், “எங்களுடைய முன்னோர்கள் [சமாரியர்கள்] இந்த மலையில் [பக்கத்திலிருக்கிற கெரிசீம் மலையில்] கடவுளை வணங்கினார்கள். ஆனால், எருசலேமில்தான் அவரை வணங்க வேண்டுமென்று நீங்கள் [யூதர்கள்] எல்லாரும் சொல்கிறீர்கள்” என்கிறாள்.—யோவான் 4:19, 20.

கடவுளை எந்த இடத்தில் வணங்குகிறோம் என்பது முக்கியம் கிடையாது என்று இயேசு அவளுக்குப் புரிய வைக்க நினைக்கிறார். அதனால், “நேரம் வருகிறது, அப்போது பரலோகத் தகப்பனை நீங்கள் இந்த மலையிலும் வணங்க மாட்டீர்கள், எருசலேமிலும் வணங்க மாட்டீர்கள்” என்று சொல்கிறார். அதோடு, “உண்மை வணக்கத்தார் பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்கப்போகிற நேரம் வருகிறது, அது ஏற்கெனவே வந்துவிட்டது. சொல்லப்போனால், தன்னை இப்படி வணங்க விரும்புகிறவர்களையே தகப்பன் தேடிக்கொண்டிருக்கிறார். கடவுள் பார்க்க முடியாத உருவத்தில் இருக்கிறார். அவரை வணங்குகிறவர்கள் அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்” என்றும் அவளிடம் சொல்கிறார்.—யோவான் 4:21, 23, 24.

உண்மை வணக்கத்தார் தன்னை எங்கே வணங்குகிறார்கள் என்று கடவுள் பார்ப்பதில்லை, அவர்கள் எப்படி வணங்குகிறார்கள் என்றுதான் பார்க்கிறார். இயேசு சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் அசந்துபோகிறாள்! அதனால், “கிறிஸ்து என்ற மேசியா வருவார் என்று எனக்குத் தெரியும். அவர் வரும்போது எல்லா விஷயங்களையும் எங்களுக்கு வெளிப்படையாகச் சொல்வார்” என்று சொல்கிறாள்.—யோவான் 4:25.

அப்போது இயேசு, “உன்னோடு பேசிக்கொண்டிருக்கிற நான்தான் அவர்” என்று சொல்கிறார். (யோவான் 4:26) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! மத்தியான நேரத்தில் தண்ணீர் எடுக்க வந்த பெண்ணிடம், தான்தான் மேசியா என்ற முக்கியமான உண்மையை இயேசு சொல்கிறார். இது ரொம்பப் பெரிய விஷயம்! ஏனென்றால், அதுவரை இயேசு வேறு யாரிடமும் இந்த விஷயத்தை நேரடியாகச் சொன்னதில்லை.

சமாரியர்கள் நிறைய பேர் நம்புகிறார்கள்

இயேசுவின் சீஷர்கள் உணவு வாங்கிக்கொண்டு சீகாரிலிருந்து திரும்பி வருகிறார்கள். அப்போது யாக்கோபின் கிணற்றுக்குப் பக்கத்தில், ஒரு சமாரியப் பெண்ணுடன் இயேசு பேசிக்கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். சீஷர்கள் வந்தபோது, அவள் தண்ணீர் குடத்தை அங்கேயே வைத்துவிட்டு, ஊருக்குள் போகிறாள்.

இயேசுவின் சீஷர்கள் கிணற்றுக்குத் திரும்பி வருகிறார்கள், சமாரியப் பெண் அங்கிருந்து போகிறாள்

இயேசு சொன்னதையெல்லாம் சீகாரில் இருக்கிற மக்களிடம் அவள் சொல்கிறாள். “நான் செய்த எல்லாவற்றையும் ஒருவர் என்னிடம் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்” என்று அவர்களைக் கூப்பிடுகிறாள். அதோடு, “அவர் கிறிஸ்துவாக இருப்பாரோ?” என்று அவர்களிடம் கேட்கிறாள். (யோவான் 4:29) ஒருவேளை, அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டிவிடுவதற்காக அவள் அப்படிக் கேட்டிருக்கலாம். ஏனென்றால், இதைத் தெரிந்துகொள்ளத்தான் மோசேயின் காலத்திலிருந்தே எல்லாரும் ரொம்ப ஆர்வமாக இருந்தார்கள். (உபாகமம் 18:18) அவள் சொன்னதைக் கேட்டு, சீகார் நகரத்து மக்கள் இயேசுவைப் பார்க்க கிளம்பி வருகிறார்கள்.

இயேசு சொன்னதையெல்லாம் சீகார் நகர மக்களிடம் சமாரியப் பெண் சொல்கிறாள்

இதற்கிடையே, இயேசுவின் சீஷர்கள் தாங்கள் வாங்கிவந்த உணவைச் சாப்பிடும்படி அவரிடம் சொல்கிறார்கள். ஆனால் அவர், “உங்களுக்குத் தெரியாத ஒரு உணவு என்னிடம் இருக்கிறது” என்று சொல்கிறார். சீஷர்களுக்கு ஒரே ஆச்சரியம்! அவர்கள் ஒருவருக்கொருவர், “யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்து கொடுத்திருப்பார்களோ?” என்று பேசிக்கொள்கிறார்கள். இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்து அவருடைய வேலையை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது” என்று சொல்கிறார்; இயேசு சொன்ன இந்தப் பதில் அவரைப் பின்பற்றுகிற எல்லாருக்குமே முக்கியமாக இருக்கிறது.—யோவான் 4:32-34.

எந்த வேலையைப் பற்றி இயேசு இங்கே சொல்கிறார்? நான்கு மாதங்களுக்குப் பின்னால் வரப்போகிற அறுவடை வேலையைப் பற்றி அவர் சொல்லவில்லை. சீஷர்களை உருவாக்கும் வேலையைப் பற்றித்தான் இயேசு சொல்கிறார். அதனால், “வயல்களை ஏறெடுத்துப் பாருங்கள். அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன. அறுவடை செய்கிறவர் ஏற்கெனவே கூலியை வாங்கிக்கொண்டு, முடிவில்லாத வாழ்வுக்காகப் பயிர்களைச் சேகரித்து வருகிறார். இதனால், விதைக்கிறவரும் அறுவடை செய்கிறவரும் ஒன்றுசேர்ந்து சந்தோஷப்படுகிறார்கள்” என்று சொல்கிறார்.—யோவான் 4:35, 36.

சமாரியப் பெண்ணிடம் பேசியதால் கிடைத்த பலன்களை இயேசு அப்போதே பார்க்கிறார். அவள் தன் ஊர்க்காரர்களிடம் போய், “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொன்னார்” என்று சொல்கிறாள். (யோவான் 4:39) இதைக் கேட்டு, சீகாரில் இருக்கிற நிறைய பேர் இயேசுமேல் விசுவாசம் வைக்கிறார்கள். அவரைப் பார்ப்பதற்காக அவர்கள் எல்லாரும் கிளம்பி யாக்கோபின் கிணற்றுக்கு வருகிறார்கள். தங்கள் ஊரில் தங்கி, கற்பிக்கும்படி அவரிடம் கேட்டுக்கொள்கிறார்கள். அதனால் இயேசு, சமாரியாவில் இரண்டு நாட்கள் தங்குகிறார்.

இயேசு சொன்னதைக் கேட்டு, சமாரியர்கள் நிறைய பேர் அவர்மேல் விசுவாசம் வைக்கிறார்கள். அவர்கள் அந்தப் பெண்ணிடம், “நீ சொன்னதை வைத்து நாங்கள் இனி நம்ப வேண்டியதில்லை, நாங்களே அவர் பேசியதைக் கேட்டோம்; நிச்சயமாக அவர்தான் இந்த உலகத்தின் மீட்பர் என்று தெரிந்துகொண்டோம்” என்று சொல்கிறார்கள். (யோவான் 4:42) கிறிஸ்துவைப் பற்றிச் சாட்சி கொடுக்கும்போது, நாமும் அந்த சமாரியப் பெண்ணைப் போல மக்களின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையை ஏற்படுத்த வேண்டும்.

அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருப்பதாக இயேசு சொன்னார். அநேகமாக, அது பார்லி அறுவடையாக இருக்கலாம். பொதுவாக, அந்தப் பகுதியில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்தான் பார்லியை அறுவடை செய்வார்கள். அப்படியென்றால், இயேசு சமாரியப் பெண்ணிடம் பேசியது நவம்பர் அல்லது டிசம்பர் மாதமாக இருக்கலாம். கி.பி. 30-ஆம் வருஷத்தின் பஸ்கா பண்டிகைக்குப் பிறகு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக யூதேயாவில் பிரசங்கித்து, ஞானஸ்நானம் கொடுத்திருந்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அவர்கள் வடக்கு நோக்கிப் பயணம் செய்து கலிலேயாவுக்குப் போகிறார்கள். அங்கே என்ன நடக்கிறது?

சமாரியர்கள் யார்?

தெற்கிலிருந்த யூதேயாவுக்கும் வடக்கிலிருந்த கலிலேயாவுக்கும் இடையே இருந்த பகுதிதான் சமாரியா என்று அழைக்கப்பட்டது.

சாலொமோன் ராஜா இறந்த பிறகு, இஸ்ரவேல் தேசம் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யமாகவும் இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யமாகவும் பிரிந்தது. பத்துக் கோத்திர ராஜ்யத்தைச் சேர்ந்த மக்கள் கன்றுக்குட்டியை வணங்க ஆரம்பித்தார்கள். அதனால், கி.மு. 740-ல் அசீரியர்கள் வந்து சமாரியாவைக் கைப்பற்ற யெகோவா அனுமதித்தார். பெரும்பாலான மக்களை அசீரியர்கள் அங்கிருந்து பிடித்துக்கொண்டு போனார்கள். அசீரிய பேரரசு ஆட்சி செய்த மற்ற இடங்களிலிருந்த மக்களைக் கொண்டுவந்து, சமாரியாவில் குடியேற்றினார்கள். பொய் தெய்வங்களை வணங்கிவந்த இந்த மக்கள், சமாரியாவில் மீதியிருந்த இஸ்ரவேலர்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள். காலப்போக்கில், இந்த மக்கள் தங்களுடைய வழிபாட்டையும் திருச்சட்டத்தில் சொல்லப்பட்ட சில நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் கலந்து, புதிதாக ஒரு வழிபாட்டை ஆரம்பித்தார்கள். அதனால், விருத்தசேதனம் செய்வது போன்ற ஒருசில விஷயங்களை அவர்களும் கடைப்பிடித்தார்கள். இருந்தாலும், அதை உண்மை வழிபாடு என்று சொல்ல முடியாது.—2 ராஜாக்கள் 17:9-33; ஏசாயா 9:9.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த சமாரியர்கள் மோசே எழுதிய புத்தகங்களை ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும், எருசலேம் ஆலயத்துக்கு வந்து கடவுளை வணங்கவில்லை. பல வருஷங்களாக, சீகாருக்குப் பக்கத்திலிருந்த கெரிசீம் மலையில் கட்டப்பட்டிருந்த ஒரு கோயிலில் வழிபட்டுவந்தார்கள். அந்தக் கோயில் அழிந்த பிறகும்கூட, கடவுளை வழிபடுவதற்காக அந்த மலைக்குப் போனார்கள். இயேசு ஊழியம் செய்த சமயத்தில், யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே இருந்த பகை தெளிவாகத் தெரிந்தது.—யோவான் 8:48.

  • இயேசு தன்னிடம் பேசுவதைப் பார்த்து சமாரியப் பெண் ஏன் ஆச்சரியப்படுகிறாள்?

  • வாழ்வு தரும் தண்ணீரைப் பற்றியும், கடவுளை எங்கே வணங்க வேண்டும் என்பதைப் பற்றியும் இயேசு அவளிடம் என்ன சொல்கிறார்?

  • தான் யார் என்பதை இயேசு எப்படி சமாரியப் பெண்ணுக்குத் தெரியப்படுத்துகிறார்? எப்படிப்பட்ட வணக்கம் சரியானது என்று இயேசு சொல்கிறார்?

  • இயேசுவைப் பற்றி சமாரியப் பெண் என்ன புரிந்துகொள்கிறாள்? அதற்குப் பிறகு அவள் என்ன செய்கிறாள்?

  • கி.பி. 30-ஆம் வருஷத்தின் பஸ்காவுக்குப் பிறகு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் என்ன செய்கிறார்கள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்