‘அவை அவன் சத்தத்தை அறிந்திருக்கின்றன’
“யெகோவா என் மேய்ப்பராய் இருக்கிறார்,” (NW). இவையே சங்கீதம் 23-ன் தொடக்க வார்த்தைகள். வேத எழுத்துக்கள் மீண்டும் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் யெகோவா தேவனை ஒரு மேய்ப்பனோடு ஒப்பிடுகின்றன; அது இவ்வாறு சொல்கிறது: “மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.”—ஏசாயா 40:11.
அதேவிதமாகவே, இயேசு கிறிஸ்து ஒரு மேய்ப்பனுக்கு ஒப்பிடப்படுகிறார். அவர் சொன்னார்: “நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.” (யோவான் 10:11) “ஆடுகளும் [மேய்ப்பனின்] சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்,” என்று இயேசு சொன்னார். மேலுமாக, “ஆடுகள் [மேய்ப்பனின்] சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம்,” என்றும் சொன்னார்.—யோவான் 10:2-5.
மேற்சொல்லப்பட்ட வேதவசனங்களில் சித்தரிக்கப்பட்ட காட்சிக்கு ஏற்றாற்போலவே யெகோவா தேவனும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவும் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய அடையாளப்பூர்வமான செம்மறியாடுகளை கனிவோடும் அன்பான அக்கறையோடும் நடத்துகின்றனர். அதன் விளைவாக, செம்மறியாடுகளைப் போன்றவர்கள், நேசிக்கப்பட்டவர்களாகவும், பாதுகாக்கப்பட்டவர்களாகவும், ஆதரவளிக்கப்பட்டவர்களாகவும் உணருகிறார்கள்.
இந்த உறவு சொல்லர்த்தமான செம்மறியாடுகள் தங்கள் மேய்ப்பனுடன் கொண்டிருக்கும் உறவுடன் பொருத்தமாகவே ஒப்பிடப்படுகிறது. 1831-ல், ஜான் ஹார்ட்லி இதன் சம்பந்தமாக தான் கவனித்தவற்றை எழுதினார். கிரீஸில் மேய்ப்பர்கள் தங்களுடைய செம்மறியாடுகளுக்குப் பெயரிடுவது வழக்கமாக இருந்ததென அவர் குறிப்பிட்டார். பெயர் சொல்லி அழைக்கப்படுகையில், செம்மறியாடுகள் மேய்ப்பனின் குரலுக்குப் பிரதிபலித்தன. சுமார் 51 வருடங்களுக்குப்பின், 1882-ல், J. L. போர்ட்டர் அதைப்போன்ற குறிப்புகளைக் கவனித்தார். மேய்ப்பர்கள் “ஒரு கீச்சென்ற விநோதமான குரலை . . . எழுப்புவதையும்,” செம்மறியாடுகள் மேய்ப்பர்களைப் பின்தொடர்வதன் மூலம் அதற்குப் பிரதிபலிப்பதையும் அவர் தனிப்பட்டவகையில் பார்த்திருக்கிறார். செம்மறியாடுகள் தங்கள் மேய்ப்பனைப் பின்தொடரவும் அவனுடைய குரலைக் கண்டுணரவும் கற்பிக்கப்படலாம் என்பதை ஊர்ஜிதப்படுத்திய பலமுறை செய்யப்பட்ட பரிசோதனைகளைப்பற்றி அதே வருடத்தில் உவில்லியம் M. தாம்ஸன் எழுதினார்.
மேய்ப்பர்களுக்கும் அவர்களுடைய செம்மறியாடுகளுக்கும் இடையிலுள்ள இந்தத் தனித்தன்மை வாய்ந்த உறவு மிக சமீப காலங்களில் கவனிக்கப்பட்டிருக்கிறதா? ஆம். நேஷனல் ஜாக்ரஃபிக்கின் செப்டம்பர் 1993 வெளியீட்டில், ஆஸ்திரேலிய துணிச்சல் வீரர் ராபன் டேவிட்சன், வடமேற்கு இந்தியாவிலுள்ள ராபாரி என்ற நாட்டுப்புற மேய்ப்பர்களைப் பற்றி பின்வருபவற்றை எழுதினார்: “ஒவ்வொரு மேய்ப்பனும் சற்று வித்தியாசமுள்ள அழைப்பொலிகளை, விஷயத்திற்கு ஏற்றார்போல் வெவ்வேறு ஒலிகளைக் கொண்டிருக்கின்றனர். வெளியே செல்வதற்கான காலை அழைப்புகள், தண்ணீரிடமாக செம்மறியாடுகளைக் கொண்டுவருவதற்கான அழைப்புகள், ஆகியவற்றைப் போன்றவை இருக்கின்றன. ஒவ்வொருவனும் தன் சொந்த செம்மறியாட்டை அறிந்திருக்கிறான்; ஆடுகளும் அவனை அறிந்திருக்கின்றன; மேலும் காலையில் அவனுடைய குறிப்பிட்ட மந்தை, பெரிய மந்தையிலிருந்து தன்னைப் பிரித்துக்கொண்டு அவன் பின்னாகச் செல்கிறது.”
சந்தேகமின்றி, இப்போது குறிப்பிடப்பட்ட நான்கு பயணிகளால் விவரிக்கப்பட்டதை இயேசு கவனித்தார். அவர் சொந்தமாக கவனித்தக் காரியங்கள், செம்மறியாடுகள் அவருடைய சத்தத்தை அறிந்திருப்பதைப்பற்றிய அவருடைய உவமைக்கு நிஜத்தன்மையைக் கூட்டுகின்றன. நீங்கள் இயேசுவின் செம்மறியாடுகளில் ஒருவரா? நீங்கள் அவருடைய சத்தத்தை அறிந்திருந்து, அதற்குச் செவிகொடுக்கிறீர்களா? அவருடைய போதனைகள் சத்தியம் என்பதாக உணர்ந்து அவற்றை நீங்கள் ஏற்றுக்கொண்டு, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெகோவாவை வணங்குவதில் அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றினால், அப்போது யெகோவா தேவன் மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பும் கனிவுமான மேய்ப்பை அனுபவிக்க முடியும்.—யோவான் 15:10.