உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 4/1 பக். 10-15
  • ஏன் முழுக்காட்டப்பட வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏன் முழுக்காட்டப்பட வேண்டும்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எப்படிப்பட்ட முழுக்காட்டுதல்?
  • முழுக்காட்டுதலுக்கான புதிய காரணம்
  • திருத்தமான அறிவு அவசியம்
  • மனந்திரும்பி, குணப்படுவதன் அவசியம்
  • இருதயப்பூர்வமான ஒப்புக்கொடுத்தல் அவசியம்
  • உங்களை ஏதாவது தடுத்து நிறுத்துகிறதா?
  • முழுக்காட்டுதலும் கடவுளோடுள்ள உங்கள் பந்தமும்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • முழுக்காட்டப்படுவதிலிருந்து உங்களைத் தடுப்பது என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • ஞானஸ்நானம் என்றால் என்ன?
    பைபிள் தரும் பதில்கள்
  • உங்கள் முழுக்காட்டுதல் குறிப்பது
    ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 4/1 பக். 10-15

ஏன் முழுக்காட்டப்பட வேண்டும்?

“நீங்கள் போய் சகல தேசத்தாரையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுங்கள்.”​—⁠மத்தேயு 28:19, NW.

1, 2. (அ) என்ன சூழ்நிலைகளில் சில முழுக்காட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன? (ஆ) முழுக்காட்டுதலைக் குறித்து என்ன கேள்விகள் எழுகின்றன?

ஷார்லமேன் என்ற ஃபிரான்கிய அரசன், தான் கைப்பற்றிய சாக்ஸன்களை பொ.ச. 775-77-⁠ல் ஒட்டுமொத்தமாக முழுக்காட்டுதல் பெறும்படி வற்புறுத்தினார். “பெயரளவில் கிறிஸ்தவத்திற்கு மாறும்படி அவர்களை அவர் கட்டாயப்படுத்தினார்” என சரித்திராசிரியர் ஜான் லார்ட் எழுதினார். அதைப் போலவே, பொ.ச. 987-⁠ல் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் இளவரசியை மணம் முடித்த பின்பு ரஷ்ய அரசராகிய முதலாம் விலாடிமர் தன் குடிமக்கள் “கிறிஸ்தவர்களாக” வேண்டுமென்று தீர்மானித்தார். எனவே தன் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக முழுக்காட்டுதல் பெறும்படி ஆணை பிறப்பித்தார்; தேவைப்பட்டால் இதை கத்தி முனையில் சாதிக்கவும் அவர் தயங்கவில்லை!

2 அத்தகைய முழுக்காட்டுதல்கள் சரியானவை தானா? அவற்றிற்கு உண்மையிலேயே அர்த்தம் உள்ளதா? யார் வேண்டுமானாலும் முழுக்காட்டுதல் பெறலாமா?

எப்படிப்பட்ட முழுக்காட்டுதல்?

3, 4. தலையில் தண்ணீரைத் தெளிப்பது அல்லது ஊற்றுவது ஏன் கிறிஸ்தவ முழுக்காட்டுதலுக்குப் பொருத்தமானதல்ல?

3 ஷார்லமேனும் முதலாம் விலாடிமரும் முழுக்காட்டுதல் பெறும்படி ஜனங்களை வற்புறுத்தியபோது, அந்த ராஜாக்கள் கடவுளுடைய வார்த்தைக்கு எதிராக செயல்பட்டார்கள். பைபிள் சத்தியத்தைக் கற்பிக்காமல் தனிப்பட்ட நபர்களின் தலையில் தண்ணீரைத் தெளித்தோ, தண்ணீரை ஊற்றியோ, ஏன் தண்ணீரில் முழுக்கியோ முழுக்காட்டுதல் கொடுப்பதில் உண்மையில் எந்தப் பயனும் இல்லை.

4 பொ.ச. 29-⁠ல், நசரேயராகிய இயேசு முழுக்காட்டுபவரான யோவானிடம் சென்றபோது என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். யோர்தான் நதியில் ஜனங்களுக்கு யோவான் முழுக்காட்டுதல் கொடுத்து வந்தார். முழுக்காட்டுதல் பெறும்படி அவர்கள் தாங்களாகவே அவரிடம் வந்திருந்தார்கள். அவர்களை யோர்தானில் நிற்க சொல்லி யோவான் அந்த நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை அவர்களுடைய தலையில் ஊற்ற அல்லது தெளிக்க மட்டுமே செய்தாரா? இயேசுவுக்கு யோவான் முழுக்காட்டுதல் கொடுத்தபோது என்ன நடந்தது? முழுக்காட்டுதல் பெற்றபின் “இயேசு உடனடியாக தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தார்” என்று மத்தேயு அறிவிக்கிறார். (மத்தேயு 3:​16, NW) அவர் யோர்தான் நதியின் தண்ணீருக்குள் முழுக்கப்பட்டு வெளியே வந்தார். அவ்வாறே, பக்திமிக்க எத்தியோப்பிய மந்திரியும் ‘தண்ணீருள்ள ஓரிடத்தில்’ முழுக்காட்டப்பட்டார். இயேசுவும் அவருடைய சீஷர்களும் முழுமையாய் தண்ணீரில் முழுகுவதன் மூலம் முழுக்காட்டுதல் பெற்றதால் அத்தகைய தண்ணீர் நிறைந்த இடங்கள் தேவைப்பட்டன.​—⁠அப்போஸ்தலர் 8:​36.

5. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் ஜனங்களுக்கு எப்படி முழுக்காட்டுதல் கொடுத்தார்கள்?

5 “முழுக்காட்டு,” “முழுக்காட்டுதல்” என பலவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைகள், தண்ணீருக்குள் முழுக்குவது, அமிழ்த்துவது, அல்லது மூழ்குவதைக் குறிக்கின்றன. ஸ்மித்ஸ் பைபிள் டிக்ஷ்னரி இவ்வாறு சொல்கிறது: “சரியாகவும் சொல்லர்த்தமாகவும் முழுக்காட்டுதல் என்பது முழுகுவதைக் குறிக்கிறது.” எனவே சில பைபிள் மொழிபெயர்ப்புகள், “திருமுழுக்கு யோவான்,” “முழுக்குபவராகிய யோவான்” என குறிப்பிடுகின்றன. (மத்தேயு 3:1, பொ.மொ.; டயக்ளாட் இன்டர்லீனியர்) கிறிஸ்தவ மதம் மற்றும் சர்ச்சின் வரலாறு, முதல் மூன்று நூற்றாண்டுகளின்போது (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் “முழுக்காட்டுதல் ஆரம்பத்தில் தண்ணீர் முழுக்கின் மூலம் கொடுக்கப்பட்டது” என அகஸ்டஸ் நேயாண்டர் சொல்கிறார். 20-⁠ம் நூற்றாண்டின் லாரூஸ் (பாரிஸ், 1928) என்ற பிரசித்தி பெற்ற ஃபிரெஞ்சு புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “எங்கெல்லாம் தண்ணீர் காணப்பட்டதோ அந்த இடங்களில் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் முழுகுவதன் மூலம் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.” மேலும், நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: “ஆரம்ப கால சர்ச்சில் தண்ணீரில் முழுக செய்து முழுக்காட்டுதல் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.” (1967, தொகுதி II, பக்கம் 56) ஆகையால் இன்று யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டப்படுவது, மனமுவந்து எடுக்கும் ஒரு படியாக முழுமையாய் தண்ணீரில் முழுக்கப்படுவதை உட்படுத்துகிறது.

முழுக்காட்டுதலுக்கான புதிய காரணம்

6, 7. (அ) என்ன நோக்கத்திற்காக யோவான் முழுக்காட்டுதல் கொடுத்தார்? (ஆ) இயேசுவைப் பின்பற்றுவோரின் முழுக்காட்டுதலில் எது புதியதாக இருந்தது?

6 நோக்கத்தைப் பொருத்ததில், யோவான் கொடுத்த முழுக்காட்டுதல் இயேசுவைப் பின்பற்றினோர் கொடுத்த முழுக்காட்டுதலிலிருந்து வேறுபட்டது. (யோவான் 4:​1, 3) நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாக செய்த பாவங்களிலிருந்து மனந்திரும்பியதற்கு வெளிப்படையான அடையாளமாக ஜனங்களுக்கு யோவான் முழுக்காட்டுதல் கொடுத்தார்.a (லூக்கா 3:6) ஆனால், இயேசுவைப் பின்பற்றினோர் கொடுத்த முழுக்காட்டுதலில் புதிய அம்சம் ஒன்று உட்பட்டிருந்தது. பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளின்போது அப்போஸ்தலன் பேதுரு தன் பேச்சைக் கேட்பவர்களை, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என ஊக்குவித்தார். (அப்போஸ்தலர் 2:​37-​41) பேதுரு யூதர்களிடமும் யூத மதத்திற்கு மாறியவர்களிடமும் பேசிக்கொண்டிருந்தார். எனினும் நியாயப்பிரமாணத்திற்கு எதிரான பாவங்களிலிருந்து மனந்திரும்புவதற்கு அடையாளமான முழுக்காட்டுதலைப் பற்றி அவர் சொல்லவில்லை. இயேசுவின் பெயரில் முழுக்காட்டுதல் பெறுவது பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவதற்கு அடையாளம் என்றும் அவர் சொல்லவில்லை.​—⁠அப்போஸ்தலர் 2:​10.

7 அந்தச் சந்தர்ப்பத்தில், பேதுரு “பரலோக ராஜ்யத்தின்” முதல் ‘திறவுகோலை’ பயன்படுத்தினார். ஏன் பயன்படுத்தினார்? பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பைப் பற்றிய அறிவை தனக்குச் செவிசாய்ப்பவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே பயன்படுத்தினார். (மத்தேயு 16:19) யூதர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்காமல் புறக்கணித்தார்கள்; எனவே, கடவுளுடைய மன்னிப்பை நாடி, அதைப் பெறுவதற்கு மனந்திரும்பி அவரில் விசுவாசத்தை வெளிக்காட்டுவது, புதிதான, முக்கியமான ஓர் அம்சமாக அவர்களுக்கு இருந்தது. இயேசு கிறிஸ்துவின் பெயரில் தண்ணீர் முழுக்காட்டுதல் பெறுவதன் மூலம், அத்தகைய விசுவாசத்திற்கான அத்தாட்சியை அவர்கள் வெளிப்படையாய் அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் கிறிஸ்துவின் மூலமாய் கடவுளுக்குத் தங்கள் தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தலாம். இன்று கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புகிற யாவரும், அதே போன்ற விசுவாசத்தைக் காட்டி, யெகோவா தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, மகா உன்னத கடவுளிடம் நிபந்தனையின்றி ஒப்புக்கொடுத்திருப்பதற்கு அடையாளமாக கிறிஸ்தவ முழுக்காட்டுதலைப் பெற வேண்டும்.

திருத்தமான அறிவு அவசியம்

8. ஏன் கிறிஸ்தவ முழுக்காட்டுதல் எல்லாருக்கும் உரியதல்ல?

8 கிறிஸ்தவ முழுக்காட்டுதலுக்கு எல்லாரும் தகுதியானோர் அல்ல. “நீங்கள் போய் சகல தேசத்தாரையும் சீஷராக்கி, பிதாவின், குமாரனின், பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்” என இயேசு தம்மைப் பின்பற்றினோருக்கு கட்டளையிட்டார். (மத்தேயு 28:19, 20, NW) முழுக்காட்டப்படுவதற்கு முன்பாக, ‘இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் கைக்கொள்ளும்படி’ ஜனங்கள் கற்பிக்கப்பட வேண்டும். எனவே, கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவை சார்ந்த விசுவாசத்தைப் பெறாதவர்களுக்கு வலுக்கட்டாயமாக முழுக்காட்டுதல் கொடுப்பது பயனற்றது, தம்மை உண்மையாய் பின்பற்றுவோருக்கு இயேசு கொடுத்த கட்டளைக்கு எதிரானது.​—⁠எபிரெயர் 11:⁠6.

9. ‘பிதாவின் பெயரில்’ முழுக்காட்டப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது?

9 ‘பிதாவின் பெயரில்’ முழுக்காட்டப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது? நம்முடைய பரலோக தகப்பனின் ஸ்தானத்தையும் அதிகாரத்தையும் முழுக்காட்டுதல் பெறவிருப்பவர் ஒப்புக்கொள்வதை அது அர்த்தப்படுத்துகிறது. இவ்வாறு யெகோவா தேவன், நம்முடைய படைப்பாளராகவும், ‘பூமியனைத்தின் மேலும் உன்னதமானவராகவும்,’ சர்வலோக பேரரசராகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.​—⁠சங்கீதம் 83:17; ஏசாயா 40:28; அப்போஸ்தலர் 4:​24.

10. ‘குமாரனின் பெயரில்’ முழுக்காட்டப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது?

10 ‘குமாரனின் பெயரில்’ முழுக்காட்டப்படுவது, கடவுளுடைய ஒரே பேறான குமாரனாக இயேசுவின் ஸ்தானத்தையும் அதிகாரத்தையும் ஒப்புக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. (1 யோவான் 4:9) கடவுள், “பலருடைய மீட்புக்கு ஈடாக” இயேசுவைக் கொடுத்திருப்பதை முழுக்காட்டுதல் பெற தகுதியுள்ளவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். (மத்தேயு 20:28, பொ.மொ.; 1 தீமோத்தேயு 2:​5, 6) மேலும், கடவுள் தம்முடைய குமாரனை “எல்லாவற்றிற்கும் மேலாக” உயர்த்தியிருப்பதையும் முழுக்காட்டுதல் பெறவிருப்போர் ஒப்புக்கொள்ள வேண்டும்.​—⁠பிலிப்பியர் 2:​8-​11; வெளிப்படுத்துதல் 19:16.

11. ‘பரிசுத்த ஆவியின் பெயரில்’ முழுக்காட்டப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது?

11 ‘பரிசுத்த ஆவியின் பெயரில்’ முழுக்காட்டப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது? பரிசுத்த ஆவி யெகோவாவின் செயல்நடப்பிக்கும் சக்தி என்றும், அவருடைய நோக்கத்திற்கு இசைவாக பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது என்றும் முழுக்காட்டுதல் பெறவிருப்பவர் ஒப்புக்கொள்வதை இது குறிக்கிறது. (ஆதியாகமம் 1:2; 2 சாமுவேல் 23:​1, 2; 2 பேதுரு 1:​21) முழுக்காட்டுதலுக்குத் தகுதி பெறுகிறவர்கள், ‘தேவனுடைய ஆழங்களை’ புரிந்துகொள்வதற்கும், ராஜ்ய பிரசங்க ஊழியத்தைத் தொடருவதற்கும், “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய ஆவியின் கனிகளை வெளிக்காட்டுவதற்கும் பரிசுத்த ஆவி தங்களுக்கு உதவுவதை ஒப்புக்கொள்கிறார்கள்.​—⁠1 கொரிந்தியர் 2:​10; கலாத்தியர் 5:​22, 23; யோவேல் 2:​28, 29.

மனந்திரும்பி, குணப்படுவதன் அவசியம்

12. கிறிஸ்தவ முழுக்காட்டுதல் எப்படி மனந்திரும்புதலுடன் தொடர்புடையதாக இருக்கிறது?

12 பாவமில்லாத மனிதராகிய இயேசு தவிர, முழுக்காட்டுதல் மனந்திரும்புதலோடு தொடர்புடைய, கடவுள் அங்கீகரிக்கும் அடையாளமாக உள்ளது. மனந்திரும்புகையில் நாம் செய்த அல்லது செய்ய தவறின செயலுக்காக உள்ளூர பெரிதும் வருந்துகிறோம் அல்லது வேதனைப்படுகிறோம். கடவுளைப் பிரியப்படுத்த விரும்பிய முதல் நூற்றாண்டு யூதர்கள், கிறிஸ்துவுக்கு விரோதமான பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டியிருந்தது. (அப்போஸ்தலர் 3:11-20) கொரிந்துவிலிருந்த புறமத விசுவாசிகள் சிலர் வேசித்தனம், விக்கிரக ஆராதனை, திருடு, இன்னும் பிற பாவ செயல்கள் ஆகியவற்றை விட்டு மனந்திரும்பியிருந்தார்கள். அவர்களுடைய மனந்திரும்புதலினால் இயேசுவின் இரத்தத்தில் ‘கழுவப்பட்டார்கள்’; கடவுளுடைய சேவைக்காக, ‘பரிசுத்தமாக்கப்பட்டார்கள்,’ அல்லது பிரித்து வைக்கப்பட்டார்கள்; கிறிஸ்துவின் பெயரிலும் கடவுளுடைய ஆவியாலும் அவர்கள் ‘நீதிமான்களாக அறிவிக்கப்பட்டார்கள்.’ (1 கொரிந்தியர் 6:9-11; NW) இவ்வாறு, நல்மனசாட்சியைப் பெறுவதற்கும் பாவத்தின் உறுத்துதலிலிருந்து கடவுள் தரும் விடுதலையை அனுபவிப்பதற்கும் மனந்திரும்புதல் முக்கிய படியாக உள்ளது.​—⁠1 பேதுரு 3:21.

13. முழுக்காட்டுதலைக் குறித்ததில் குணப்படுதல் எதை உட்படுத்துகிறது?

13 யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன்பு குணப்படுவது அவசியம். குணப்படுவது என்பது கிறிஸ்து இயேசுவைப் பின்பற்ற மனதார தீர்மானித்திருக்கும் ஒருவர் அதற்கேற்ப தானாகவே மனமுவந்து செயல்படுவதைக் குறிக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய தவறான முந்தைய வாழ்க்கைப் போக்கிற்கு முழுக்குப் போட்டுவிட்டு கடவுளுடைய பார்வையில் சரியானதை செய்ய தீர்மானிக்கிறார்கள். பைபிளில் குணப்படுதல் என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய, கிரேக்க வினைச் சொற்கள், விட்டு விலகுவதை, முற்றிலும் திரும்பி வருவதைக் குறிக்கின்றன. இந்தச் செயல், தவறான பாதையை விட்டு விலகி கடவுளிடம் திரும்பி வருவதைக் குறிக்கிறது. (1 இராஜாக்கள் 8:33, 34) குணப்படுவதற்கு “மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச்” செய்ய வேண்டும். (அப்போஸ்தலர் 26:20) இது, நாம் பொய் வணக்கத்தை விட்டு முற்றிலும் விலகி, கடவுளுடைய கட்டளைகளுக்கு இசைய நடந்து, யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை செலுத்தும்படி அவசியப்படுத்துகிறது. (உபாகமம் 30:2, 8-10; 1 சாமுவேல் 7:3) குணப்படுவது, நம் எண்ணத்தில், நோக்கங்களில், குணத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. (எசேக்கியேல் 18:31) கடவுளுக்குப் பிரியமில்லாத பண்புகளை புதிய ஆள்தன்மையால் மாற்றீடு செய்கையில் நாம் ‘குணமடைகிறோம்.’​—⁠அப்போஸ்தலர் 3:20; எபேசியர் 4:20-24; கொலோசெயர் 3:5-14.

இருதயப்பூர்வமான ஒப்புக்கொடுத்தல் அவசியம்

14. இயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் ஒப்புக்கொடுத்தல் எதைக் குறிக்கிறது?

14 இயேசுவைப் பின்பற்றுவோர் முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன்பு தங்களை கடவுளுக்கு இருதயப்பூர்வமாக ஒப்புக்கொடுப்பதும் அவசியம். பரிசுத்த நோக்கத்திற்காக பிரித்து வைக்கப்படுவதை ஒப்புக்கொடுத்தல் குறிக்கிறது. இந்தப் படி மிக மிக முக்கியமானது; எனவே, என்றென்றும் யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியைச் செலுத்துவதற்கான நம் தீர்மானத்தை அவரிடம் ஜெபத்தில் தெரிவிக்க வேண்டும். (உபாகமம் 5:9, NW) சொல்லப்போனால் ஒரு வேலைக்கு அல்லது ஒரு மனிதனுக்கு நம்மை நாம் ஒப்புக்கொடுப்பதில்லை, ஆனால் கடவுளுக்கே நம்மை ஒப்புக்கொடுக்கிறோம்.

15. முழுக்காட்டுதல் பெறவிருப்போர் ஏன் தண்ணீரில் முழுக்கப்படுகிறார்கள்?

15 கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கையில், பைபிளில் சொல்லப்பட்டுள்ள கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நாம் வாழ தீர்மானித்திருப்பதைக் காட்டுகிறோம். அந்த ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக முழுக்காட்டுதல் பெறவிருப்பவர்கள் தண்ணீரில் முழுக்கப்படுகிறார்கள். இது, தம்மை கடவுளுக்கு சமர்ப்பித்ததற்கு அடையாளமாக யோர்தான் நதியில் இயேசு முழுக்காட்டப்பட்டதைப் போலவே உள்ளது. (மத்தேயு 3:13) முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சந்தர்ப்பத்தில் இயேசு ஜெபித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.​—⁠லூக்கா 3:21, 22.

16. ஜனங்கள் முழுக்காட்டுதல் பெறுவதைக் காண்கையில் நம்முடைய சந்தோஷத்தை எப்படி பொருத்தமான விதத்தில் வெளிக்காட்டலாம்?

16 இயேசுவின் முழுக்காட்டுதல் பொறுப்புணர்ச்சி மிக்கதாக இருப்பினும் அது சந்தோஷமிக்க தருணமாக இருந்தது. அவ்வாறே இன்றைய கிறிஸ்தவ முழுக்காட்டுதலும் உள்ளது. ஜனங்கள் கடவுளுக்கான தங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்துவதை பார்க்கையில் மரியாதைக்குரிய விதத்தில் கரவொலி எழுப்பி, அன்புடன் பாராட்டி நம்முடைய சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், இப்படி விசுவாசத்தை வெளிப்படுத்தும் சம்பவத்தின் பரிசுத்தத்தன்மையை கவனத்தில் வைத்து கூச்சலுடன் கரவொலியெழுப்புதல், சீழ்க்கை அடித்தல், இன்னும் இதுபோன்ற பிற செயல்களை தவிர்க்க வேண்டும். நம்முடைய சந்தோஷத்தை கண்ணியமான முறையில் வெளிக்காட்ட வேண்டும்.

17, 18. ஒருவர் முழுக்காட்டுதல் பெற தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க எது உதவுகிறது?

17 பச்சிளங்குழந்தைகளின் மீது தண்ணீரைத் தெளிப்பவர்கள் அல்லது பைபிளைப் பற்றியே அறியாத கூட்டத்தாருக்கு வலுக்கட்டாயமாக முழுக்காட்டுதல் கொடுப்பவர்கள் போன்று யெகோவாவின் சாட்சிகள் ஒருபோதும் யாருக்கும் வற்புறுத்தி முழுக்காட்டுதல் கொடுப்பதில்லை. வேதப்பூர்வ தகுதிகளைப் பெறாதவர்களுக்கு உண்மையில் அவர்கள் முழுக்காட்டுதல் கொடுப்பதே இல்லை. முழுக்காட்டப்படாத நற்செய்தியின் பிரசங்கியாக ஒருவர் ஆவதற்கு முன்பே அவர் பைபிளின் அடிப்படை போதனைகளை புரிந்துகொண்டிருக்கிறாரா, அவற்றிற்கு இசைய அவர் வாழ்கிறாரா, “நீங்கள் உண்மையிலேயே யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராயிருக்க விரும்புகிறீர்களா?” என்பதைப் போன்ற கேள்விக்கு சாதகமாக பதிலளிப்பாரா என்றெல்லாம் கிறிஸ்தவ மூப்பர்கள் உறுதி செய்துகொள்கிறார்கள்.

18 பெரும்பாலும், ராஜ்ய பிரசங்க ஊழியத்தில் குறிப்பிடத்தக்க அளவு பங்கு கொள்ள ஆரம்பித்து, முழுக்காட்டுதல் பெற விரும்புவதாக ஆட்கள் சொல்லுகையில், அவர்களுடன் கிறிஸ்தவ மூப்பர்கள் கலந்து பேசுவார்கள்; அப்போது, அவர்கள் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிற விசுவாசிகள் என்றும், முழுக்காட்டுதல் பெறுகிறவர்களிடம் கடவுள் எதிர்பார்ப்பவற்றைப் பூர்த்தி செய்கிறவர்கள் என்றும் உறுதி செய்துகொள்வார்கள். (அப்போஸ்தலர் 4:4; 18:8) பைபிள் போதனைகளின் அடிப்படையிலான 100-⁠க்கும் அதிகமான கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிப்பது, முழுக்காட்டப்படுகிறவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிற வேதப்பூர்வ தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்திருக்கிறார்களா என்பதை தீர்மானிக்க மூப்பர்களுக்கு உதவுகிறது. சிலர் அதற்கு தகுதி பெறுவதில்லை; ஆகவே அவர்கள் கிறிஸ்தவ முழுக்காட்டுதலைப் பெற அனுமதிக்கப்படுவதில்லை.

உங்களை ஏதாவது தடுத்து நிறுத்துகிறதா?

19. யோவான் 6:44-⁠ன் அடிப்படையில் யார் இயேசுவின் உடன் சுதந்தரவாளிகளாக இருப்பார்கள்?

19 கட்டாயத்தின் பேரில் ஒட்டுமொத்தமாக முழுக்காட்டப்படுகிற அநேகரிடம் மரணத்திற்குப் பின்பு அவர்கள் பரலோகத்திற்குப் போவார்கள் என சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவர்களைப் பற்றி இயேசு சொல்கையில், “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்றார். (யோவான் 6:44) கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் உடன் சுதந்தரவாளிகளாக இருக்கும்படி 1,44,000 பேரை கடவுள் இழுத்திருக்கிறார். வற்புறுத்தி முழுக்காட்டுதல் கொடுப்பது, கடவுளுடைய ஏற்பாட்டில் அந்த மகத்துவமான நிலைக்கு ஒருபோதும் யாரையும் பரிசுத்தப்படுத்துகிறதில்லை.​—⁠ரோமர் 8:14-17; 2 தெசலோனிக்கேயர் 2:13; வெளிப்படுத்துதல் 14:1.

20. இதுவரை முழுக்காட்டுதல் பெறாதவர்களுக்கு எது உதவலாம்?

20 முக்கியமாய் 1930-களின் மத்திபத்திலிருந்து, “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைத்து, பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உள்ள திரளானவர்கள் இயேசுவின் ‘வேறே ஆடுகளோடு’ சேர்ந்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 14; யோவான் 10:16) கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக வாழ்வதாலும், ‘தங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும், சிந்தையோடும்’ அவரை நேசிப்பதாலும் அவர்கள் முழுக்காட்டுதலுக்கு தகுதி பெறுகிறார்கள். (லூக்கா 10:25-28) யெகோவாவின் சாட்சிகள் கடவுளை “ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்”கிறார்கள் என்பதை சிலர் அறிந்திருக்கிறார்கள்; எனினும் இப்போது வரை அப்படிப்பட்டவர்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றவில்லை, முழுக்காட்டுதல் பெறுவதன் மூலம் யெகோவாவிடம் உண்மையான அன்பு இருப்பதையும் அவருக்கு தனிப்பட்ட வணக்கத்தை செலுத்த விரும்புவதையும் வெளிப்படையாக காட்டவில்லை. (யோவான் 4:23, 24; உபாகமம் 4:24, NW; மாற்கு 1:9-11) இந்த முக்கிய படியை எடுப்பதற்கு உருக்கமாகவும், குறிப்பாகவும் அவர்கள் ஜெபிப்பது, முழுமையாக கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக வாழவும் நிபந்தனையற்ற ஒப்புக்கொடுத்தலை யெகோவா தேவனுக்குச் செய்யவும் பின்னர் முழுக்காட்டுதல் பெறவும் அவர்களுக்குத் தேவையான தூண்டுதலையும் தைரியத்தையும் அளிக்கும்.

21, 22. ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெறவிடாமல் சிலரைத் தடுக்கும் காரணங்கள் யாவை?

21 உலக காரியங்களில் மூழ்கிக் கிடப்பதாலோ பொருள் சம்பந்தமான காரியங்களை குவிப்பதில் குறியாக இருப்பதாலோ சிலருக்கு ஆவிக்குரிய காரியங்களுக்குச் செலவிட நேரமே இல்லாதிருக்கலாம்; இதுவே ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெற முடியாதபடி அவர்களைத் தடுத்து நிறுத்தலாம். (மத்தேயு 13:22; 1 யோவான் 2:15-17) தங்கள் நோக்கங்களையும் இலக்குகளையும் மாற்றிக்கொண்டால் எவ்வளவு சந்தோஷத்தை அவர்கள் அனுபவிக்கலாம்! யெகோவாவிடம் நெருங்கி வருவது ஆவிக்குரிய விதத்தில் அவர்களை செல்வந்தர்களாக்கும், கவலைகளிலிருந்து விடுபட உதவும், கடவுளுடைய சித்தத்தை செய்வதால் விளையும் மனசமாதானத்தையும் திருப்தியையும் அளிக்கும்.​—⁠சங்கீதம் 16:11; 40:8; நீதிமொழிகள் 10:22; பிலிப்பியர் 4:6, 7.

22 இன்னும் சிலர் தாங்கள் யெகோவாவை நேசிப்பதாக சொல்கிறார்கள், ஆனால் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்கும் பொறுப்பிலிருந்து விடுபடும் நினைப்பில், ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெறுவதில்லை. எனினும் நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும். யெகோவாவின் வார்த்தையைக் காதுகொடுத்து கேட்ட போதே நாம் அந்தப் பொறுப்புக்கு ஆளானோம். (எசேக்கியேல் 33:7-9; ரோமர் 14:12) ‘தெரிந்துகொண்ட’ ஜனமாகிய பூர்வ இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்த ஒரு தேசத்திலேயே பிறந்தார்கள். ஆகையால் அவருடைய சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு உண்மையுடன் சேவிக்கும் கட்டாயத்தில் அவர்கள் இருந்தார்கள். (உபாகமம் 7:6, 11) இன்று பிறப்பின் மூலம் யாரும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியராவதில்லை, ஆனால் திருத்தமான வேதப்பூர்வ போதனையை நாம் பெற்றுக் கொள்கையில் விசுவாசத்துடன் அவற்றிற்கு இசைய நடப்பது அவசியம்.

23, 24. எப்படிப்பட்ட பயங்கள் முழுக்காட்டுதல் பெறுவதைத் தடுத்து நிறுத்த அனுமதிக்கக்கூடாது?

23 போதுமான அறிவை தாங்கள் பெறவில்லையோ என்ற சந்தேகம் சிலரை முழுக்காட்டுதல் பெறவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. எனினும், கற்றுக்கொள்ள நம் அனைவருக்கும் ஏராளம் உள்ளது; ஏனெனில், “தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.” (பிரசங்கி 3:11) எத்தியோப்பிய மந்திரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். ஏற்கெனவே அவர் மதம் மாறியவராக இருந்ததால் வேதவசனங்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தார். ஆனால் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் அவர் பதில் அறியாதிருந்தார். எனினும், இயேசுவின் கிரய பலியின் மூலம் யெகோவா செய்திருக்கும் இரட்சிப்பின் ஏற்பாட்டைப் பற்றி அவர் அறிந்துகொண்ட போதோ உடனடியாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றார்.​—⁠அப்போஸ்தலர் 8:26-38.

24 தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ முடியாது என்ற பயத்தால் சிலர் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க தயங்குகிறார்கள். “என்னுடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ முடியாது என்ற பயமே முழுக்காட்டுதல் பெறவிடாமல் என்னைத் தடுத்துக்கொண்டிருந்தது” என்கிறாள் மோனீக் என்ற 17 வயது பெண். எனினும், முழு இருதயத்துடன் யெகோவாவை சார்ந்திருந்தால், அவர் ‘நம் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.’ ஒப்புக்கொடுத்த உண்மை ஊழியர்களாக தொடர்ந்து ‘சத்தியத்திலே நடக்க’ அவர் நமக்கு உதவுவார்.​—⁠நீதிமொழிகள் 3:5, 6; 3 யோவான் 4.

25. என்ன கேள்வி இப்போது நம் கலந்தாலோசிப்புக்கு தகுந்தது?

25 யெகோவாவின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், அவரிடமுள்ள இருதயப்பூர்வமான அன்பும் அவருக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறும்படி ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோரைத் தூண்டுகிறது. ஒப்புக்கொடுத்திருக்கும் கடவுளுடைய ஊழியர்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாகவே அவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க விரும்புகிறார்கள். எனினும், நாம் கொடிய காலங்களில் வாழ்வதால் அநேக விசுவாச பரீட்சைகளை எதிர்ப்படுகிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) யெகோவாவுக்கான நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ்வதற்கு நாம் என்ன செய்யலாம்? இது அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்.

[அடிக்குறிப்பு]

a இயேசு பாவமற்றவராக இருந்ததால், மனந்திரும்புதலுக்கு அடையாளமாக அவர் முழுக்காட்டுதல் பெறவில்லை. தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்ய தம்மை கடவுளுக்கு சமர்ப்பித்ததை அவருடைய முழுக்காட்டுதல் அடையாளப்படுத்தியது.​—⁠எபிரெயர் 7:​26; 10:​5-​10.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

• கிறிஸ்தவ முழுக்காட்டுதல் எப்படி கொடுக்கப்படுகிறது?

• முழுக்காட்டுதல் பெற ஒருவருக்கு எதைப் பற்றிய அறிவு தேவை?

• உண்மை கிறிஸ்தவர்களின் முழுக்காட்டுதலுக்கு வழிநடத்தும் படிகள் யாவை?

• ஏன் சிலர் முழுக்காட்டுதல் பெறாமல் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு எப்படி உதவி அளிக்கலாம்?

[பக்கம் 14-ன் படங்கள்]

‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் பெயரில்’ முழுக்காட்டப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது என உங்களுக்குத் தெரியுமா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்