வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
மத்தேயு 24:34-ல் நாம் வாசிக்கிறபடி, ‘இந்தச் சந்ததியைப்’ பற்றி இயேசு சொன்னதன்பேரில், நவம்பர் 1, 1995-ன் காவற்கோபுரம் கவனம் செலுத்தியது. இது, 1914-ல் பரலோகத்திலே கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதைக் குறித்ததில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதென்று அர்த்தப்படுத்துகிறதா?
காவற்கோபுரத்தில் கொடுக்கப்பட்ட அந்த விவரம், 1914-ஐப் பற்றிய நம்முடைய முக்கிய போதகத்தில் எந்த மாற்றத்தையும் அளிக்கவில்லை. இயேசு, ராஜ்ய அதிகாரத்தில் தம்முடைய வந்திருத்தலைக் குறிப்பதற்கான அடையாளத்தை விவரித்தார். இந்த அடையாளம், 1914 முதற்கொண்டு நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கிறது என்பதற்கு மிகுதியான அத்தாட்சிகள் நமக்கு இருக்கின்றன. யுத்தங்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள், இன்னும் மற்ற அத்தாட்சிகளைப்பற்றிய உண்மைகள், 1914 முதற்கொண்டு இயேசு கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்பதை உறுதிசெய்கின்றன. அப்போதிருந்து, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று இது காட்டுகிறது.
அப்படியானால், காவற்கோபுரம் எதைத் தெளிவுபடுத்தியது? மத்தேயு 24:34-ல் “சந்ததி” என்ற சொல்லை இயேசு பயன்படுத்தின கருத்தே இதைத் தெரிவிக்கிறது. அந்தப் பகுதி இவ்வாறு வாசிக்கிறது: “இவையெல்லாம் சம்பவித்துத் தீரும்வரை இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” “சந்ததி” என்பதால் தம்முடைய நாளிலும் நம்முடைய நாளிலும் இயேசு அர்த்தங்கொண்டது என்ன?
யூதத் தலைவர்களை மாத்திரமே அல்லது தம்முடைய உண்மைப்பற்றுறுதியுள்ள சீஷர்களை மாத்திரமே கருதும், ஏதோ சிறிய அல்லது தனிப்பட்ட தொகுதியின் சம்பந்தமாக, “சந்ததி” என்பதை இயேசு பயன்படுத்தவில்லை என்று வேதவசனங்கள் பல உறுதிசெய்கின்றன. மாறாக, தம்மை ஏற்காது தள்ளின பெரும் எண்ணிக்கையான யூதர்களைக் கண்டனம் செய்வதிலேயே “சந்ததி” என்பதை அவர் பயன்படுத்தினார். எனினும், மனந்திரும்பி, “மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்” என்று, பெந்தெகொஸ்தே நாளில் அப்போஸ்தலன் பேதுரு ஊக்கப்படுத்தினதை, மகிழ்ச்சிக்கேதுவாக, தனி நபர்கள் செய்ய முடியும்.—அப்போஸ்தலர் 2:40.
குறிப்பிட்ட ஏதோ வயது ஜனத்தையோ அல்லது கால நீடிப்பையோ குறித்து நுட்பமாக பேதுரு அந்தக் கூற்றில் குறிப்பிடவுமில்லை, குறிப்பிட்ட ஏதோ தேதியோடு அந்தச் ‘சந்ததியை’ அவர் இணைத்துக்கொண்டுமில்லை என்பது தெளிவாயுள்ளது. இயேசு பிறந்த அதே ஆண்டில் பிறந்த சந்ததியிலிருந்து, அல்லது பொ.ச. 29-ல் பிறந்த சந்ததியிலிருந்து, ஜனங்கள் தங்களை இரட்சித்துக்கொள்ள வேண்டுமென்று அவர் சொல்லவில்லை. இயேசுவின் போதகங்களை அறிந்திருந்தும், அவருடைய அற்புதங்களைக் கண்டிருந்தும் அல்லது கேள்விப்பட்டிருந்தும், அவரை மேசியாவாக ஏற்காதிருந்தவர்களான—சிலர் இளைஞராக, மற்றவர்கள் முதியோராகவும் இருந்திருக்கக்கூடிய—அக்கால விசுவாசமற்ற யூதர்களைப் பற்றி பேதுரு பேசிக்கொண்டிருந்தார்.
பேதுருவும் மற்ற மூன்று அப்போஸ்தலரும் ஒலிவ மலையின்மேல் இயேசுவுடன் இருந்தபோது, “சந்ததி” என்று இயேசு பயன்படுத்தினதை பேதுரு அவ்வாறே புரிந்துகொண்டதாகத் தெரிகிறது. இயேசுவின் தீர்க்கதரிசனக் கூற்றின் பிரகாரம், அக்கால யூதர்கள்—முக்கியமாக, இயேசுவின் சமகாலத்தவர்கள்—போர்களையும், பூமியதிர்ச்சிகளையும், பஞ்சங்களையும், அந்த யூத ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கிவிட்டது என்பதற்கான மற்ற அத்தாட்சிகளையும் அனுபவிக்க அல்லது கேள்விப்பட போகிறவர்களாக இருந்தார்கள். உண்மையில், பொ.ச. 70-ல் முடிவு வந்ததற்கு முன்பாக, அந்தச் சந்ததி கடந்துபோகவில்லை.—மத்தேயு 24:3-14, 34.
இந்தக் கருத்தில் இயேசுவின் வார்த்தைகளை நாம் எப்போதும் ஏற்றிருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதே. முடிவு வரப்போகிற தேதியைப் பற்றி திட்டமாய் அறிந்திருக்க விரும்புவது அபூரண மனிதரின் ஒரு மனப்போக்காக உள்ளது. அப்போஸ்தலருங்கூட, பின்வருமாறு கேட்பதன்மூலம், மேலுமதிக திட்டமான தகவல்களைத் தேடினதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: ‘ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்’?—அப்போஸ்தலர் 1:6.
இதைப்போன்ற உள்ளப்பூர்வமான நோக்கங்களுடன், தற்காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள், ‘சந்ததியைப்’ பற்றி இயேசு சொன்னதிலிருந்து, திட்டவட்டமான ஏதோ கால அம்சத்தை, 1914-லிருந்து கணக்கிட்டுக் காண முயற்சி செய்தனர். உதாரணமாக, 70 அல்லது 80 ஆண்டுகள் ஒரு சந்ததியாக இருக்கலாம், அதாவது முதல் உலகப் போரின் உட்கருத்தையும் மற்ற சம்பவங்களையும் புரிந்துகொள்ள போதிய வயதான ஆட்களாக இருக்கலாம்; இவ்விதமாய் முடிவு எவ்வளவு சமீபமாயிருக்கும் என்பதை நாம் ஒருவாறு கணக்கிடலாம் என்பது ஒரு வகையான விவாதமாக இருந்திருக்கிறது.
இத்தகைய விவாதம் எவ்வித நல்நோக்கத்துடன் இருந்ததென்றாலும், இயேசு மேலும் தொடர்ந்து கொடுத்த அறிவுரையோடு இது பொருந்தினதா? இயேசு இவ்வாறு கூறினார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனுங்கூட அறியார். . . . ஆகவே உங்கள் ஆண்டவர் இன்னநாளிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.”—மத்தேயு 24:36-42, தி.மொ.
ஆகையால் காவற்கோபுரத்தில் “இந்தச் சந்ததி” என்பதைப் பற்றி சமீபத்தில் கொடுக்கப்பட்ட தகவல், 1914-ல் நடந்ததைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலை மாற்றவில்லை. ஆனால், “சந்ததி” என்ற இந்தப் பதத்தை இயேசு பயன்படுத்தின விதத்தைப் பற்றி மேலும் தெளிவான புரிந்துகொள்ளுதலை அது நிச்சயமாகவே நமக்குக் கொடுத்தது. இவ்வாறு, அவர் பயன்படுத்தின விதம், முடிவுக்கு எவ்வளவு சமீபமாய் நாம் இருக்கிறோம் என்பதை—1914-லிருந்து கூட்டி—கணக்கிடுவதற்கு ஆதாரமாக இல்லை என்பதைக் காண நமக்கு உதவிசெய்தது.