யெகோவா தம் மந்தையின் மேய்ப்பர்களைப் பயிற்றுவிக்கிறார்
“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.”—நீதிமொழிகள் 2:6.
1, 2. முழுக்காட்டப்பட்ட சகோதரர்கள், சபையில் கூடுதலான பொறுப்பை ஏற்பதற்கு ஏன் முன்வருகிறார்கள்?
ஏழு வருடங்களாக மூப்பராய் இருக்கும் நிக் என்ற சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “நான் மூப்பராக நியமிக்கப்பட்டபோது ரொம்ப சந்தோஷப்பட்டேன். யெகோவாவுக்கு இன்னுமதிக சேவை செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பாகவும் பாக்கியமாகவும் அதைக் கருதினேன். அவர் எனக்காகச் செய்திருக்கும் எல்லாக் காரியங்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக உணர்ந்தேன். அதோடு, சபையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு முடிந்தளவு உதவி செய்ய விரும்பினேன்; மற்ற மூப்பர்கள் எனக்கு உதவியதைப் போலவே நானும் மற்றவர்களுக்கு உதவ ஆசைப்பட்டேன்.” இவ்வாறு அவர் சந்தோஷப்பட்டாலும் சில விஷயங்களைக் குறித்து கவலைப்பட்டதாகவும் சொல்கிறார்: “மூப்பராக நியமிக்கப்பட்டபோது எனக்கு 30 வயதுகூட ஆகவில்லை. எனவே சபையை நல்ல விதத்தில் மேய்க்க முடியுமா என நினைத்துக் கவலைப்பட்டேன்; அதற்குத் தேவையான விவேகம், ஞானம், திறமை எல்லாம் எனக்கு இருக்கிறதா என சந்தேகப்பட்டேன்.”
2 மந்தையைக் கவனிப்பதற்கு யெகோவாவினால் நியமிக்கப்படுகிற சகோதரர்கள் அநேக காரணங்களுக்காகச் சந்தோஷப்படலாம். அதில் ஒரு காரணத்தை, எபேசுவிலிருந்த மூப்பர்களிடம் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார்; “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [“சந்தோஷம்,” NW]” என இயேசு சொன்னதை அவர்களுக்கு நினைப்பூட்டினார். (அப்போஸ்தலர் 20:35) முழுக்காட்டப்பட்ட சகோதரர்கள் உதவி ஊழியர்களாகவோ மூப்பர்களாகவோ சேவை செய்கையில், இன்னுமநேக வழிகளில் யெகோவாவுக்கும் சபைக்கும் ‘கொடுக்க’ முடிகிறது. உதவி ஊழியர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் மூப்பர்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள். அதோடு, அதிக நேரம் பிடிக்கிற வேறு பல முக்கிய வேலைகளையும் செய்கிறார்கள். இவர்கள் கடவுள் மீதும் மற்றவர்கள் மீதும் உள்ள அன்பினால் தூண்டப்பட்டு மதிப்புமிக்க சேவை செய்கிறார்கள்.—மாற்கு 12:30, 31.
3. சபையில் பொறுப்புகளை ஏற்க சிலர் ஏன் தயங்கலாம்?
3 ஒரு கிறிஸ்தவர், தனக்குப் போதிய தகுதி இல்லையென்று நினைத்துக்கொண்டு, உதவி ஊழியராவதற்கும் பிற்பாடு மூப்பராவதற்கும் தயங்கலாம். சகோதரர் நிக்கைப் போலவே, மந்தையை நல்ல விதத்தில் மேய்ப்பதற்குத் தனக்குத் திறமைகள் இல்லையென நினைத்து அவர் கவலைப்படலாம். நீங்களும் அப்படிக் கவலைப்படுகிறீர்களா? அது நியாயமான கவலைதான். ஏனென்றால் மேய்ப்பர்களாக நியமிக்கப்படுபவர்கள் மந்தையை நடத்தும் விதத்திற்கு யெகோவாவிடம் கணக்குக் கொடுக்க வேண்டும். இயேசு இவ்வாறு சொன்னார்: “எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.”—லூக்கா 12:48.
4. உதவி ஊழியர்களுக்கும் மூப்பர்களுக்கும் யெகோவா எவ்வாறு உதவுகிறார்?
4 அப்படியென்றால் உதவி ஊழியர்களும் மூப்பர்களும் பொறுப்பைத் தாங்களாகவே சுமக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறாரா? இல்லை, அப்படி எதிர்பார்க்காமல் அவரே நடைமுறையான உதவிகளை அளிக்கிறார். இதன் காரணமாக சகோதரர்களால் பொறுப்புகளை சமாளிக்க முடிவது மட்டுமல்லாமல், அவற்றைச் சிறப்பாக நிறைவேற்றவும் முடிகிறது. சென்ற கட்டுரையில் விளக்கப்பட்டபடி, யெகோவா அவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார்; அது பிறப்பிக்கும் குணங்கள், ஆடுகளை கனிவோடு பேணிப் பாதுகாக்க அவர்களுக்கு உதவுகின்றன. (அப்போஸ்தலர் 20:28; கலாத்தியர் 5:22, 23) அதுமட்டுமின்றி, யெகோவா அவர்களுக்கு ஞானத்தையும் அறிவையும் புத்தியையும் தருகிறார். (நீதிமொழிகள் 2:6) எப்படி? மூன்று வழிகளில் அவர்களைப் பயிற்றுவிப்பதன் மூலமாகும். அவ்வழிகளைப் பற்றி இப்போது சிந்திக்கலாம்.
அனுபவமுள்ள மேய்ப்பர்களால் பயிற்றுவிக்கப்படுதல்
5. என்ன காரணத்தால் பேதுருவும் யோவானும் சிறந்த போதகர்களாக திகழ்ந்தார்கள்?
5 அப்போஸ்தலர்களான பேதுருவும் யோவானும் நியாயசங்கத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டபோது, அங்கிருந்த நியாயாதிபதிகள் அவர்களை “படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும்” கருதினார்கள். உண்மையில் அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலும், ரபீக்களின் வேத பாடசாலைகளில் பயிலவில்லையே! அப்படியிருந்தும், பேதுருவும் யோவானும் மற்ற சீஷர்களும் சிறந்த போதகர்களாக திகழ்ந்தார்கள், விசுவாசிகளாவதற்கு அநேகரைத் தூண்டினார்கள். சாதாரண ஆட்களாக இருந்தவர்கள் இப்பேர்ப்பட்ட சிறந்த போதகர்களாக ஆனது எவ்வாறு? பேதுருவும் யோவானும் பேசியதை நியாயாதிபதிகள் கேட்டபோது, ‘அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்.’ (அப்போஸ்தலர் 4:1-4, 13) அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தது உண்மைதான். (அப்போஸ்தலர் 1:8) அதேசமயத்தில் அவர்கள் இயேசுவிடமிருந்து பயிற்சியும் பெற்றிருந்தார்கள்; இது, ஆன்மீக ரீதியில் குருடர்களாக இருந்த அந்த நியாயாதிபதிகளுக்குக்கூட தெளிவாகத் தெரிந்தது. இயேசு பூமியில் இருந்தபோது, செம்மறியாடு போன்றவர்களை எப்படிக் கூட்டிச்சேர்ப்பது என்று மட்டுமல்லாமல், அப்படிக் கூட்டிச் சேர்த்த பிறகு அவர்களை எப்படி மேய்ப்பது என்றும் அப்போஸ்தலர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 11:29; 20:24-28; 1 பேதுரு 5:4.
6. மற்றவர்களைப் பயிற்றுவிப்பதில் இயேசுவும் பவுலும் எவ்வாறு சிறந்த உதாரணங்களாக இருக்கிறார்கள்?
6 இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகும்கூட, மேய்ப்பர்களாக நியமிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து பயிற்றுவித்தார். (வெளிப்படுத்துதல் 1:1; 2:1–3:22) உதாரணத்திற்கு, பவுலை அவர் தேர்ந்தெடுத்ததோடு, தேவையான பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடும் செய்தார். (அப்போஸ்தலர் 22:6-10) பவுல் அந்தப் பயிற்சியை உயர்வாக மதித்து, தான் கற்ற விஷயங்களை மற்ற மூப்பர்களோடு பகிர்ந்துகொண்டார். (அப்போஸ்தலர் 20:17-35) எடுத்துக்காட்டாக, ‘வெட்கப்படாத ஊழியக்காரனாய்’ கடவுளுக்குச் சேவை செய்ய தீமோத்தேயுவைப் பயிற்றுவித்தார்; இதற்காக அவர் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிட்டார். (2 தீமோத்தேயு 2:15) அவர்களுக்கிடையில் பாசப் பிணைப்பு ஏற்பட்டது. “தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று” தீமோத்தேயுவைப் பற்றி பவுல் முன்பு எழுதியிருந்தார். (பிலிப்பியர் 2:22) தீமோத்தேயுவையும் சரி, வேறு யாரையும் சரி, தன்னுடைய சீஷராக ஆக்கிக்கொள்ள பவுல் முயற்சி செய்யவில்லை. மாறாக, ‘தான் கிறிஸ்துவைப் பின்பற்றியது போல, அவர்கள் தன்னைப் பின்பற்ற’ வேண்டுமென்றே ஊக்குவித்தார்.—1 கொரிந்தியர் 11:1.
7, 8. (அ) இயேசுவையும் பவுலையும் மூப்பர்கள் பின்பற்றுகையில் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை எந்த அனுபவம் காட்டுகிறது? (ஆ) நாளைய உதவி ஊழியர்களுக்கும் மூப்பர்களுக்கும் இன்றைய மூப்பர்கள் எப்போதிருந்து பயிற்சி அளிக்க ஆரம்பிக்க வேண்டும்?
7 அனுபவமுள்ள மேய்ப்பர்கள் முழுக்காட்டப்பட்ட சகோதரர்களைப் பயிற்றுவிப்பதில் இயேசுவையும் பவுலையும் பின்பற்றுகிறார்கள்; அவர்களைப் போலவே நல்ல பலன்களையும் பெறுகிறார்கள். சமீபத்தில் மூப்பராக நியமிக்கப்பட்ட சாட் என்ற சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவருடைய அப்பா வேறு மதத்தைச் சேர்ந்தவர். சாட் இவ்வாறு சொல்கிறார்: “அனுபவமிக்க அநேக மூப்பர்கள், சத்தியத்தில் முன்னேறுவதற்குப் பல வருடங்களாக எனக்கு உதவியிருக்கிறார்கள். என் அப்பா சத்தியத்தில் இல்லாததால் அவர்கள் என்னை ரொம்ப அக்கறையாகக் கவனித்துக் கொண்டார்கள். சத்தியத்தில் அவர்கள்தான் எனக்கு அப்பா மாதிரி. அவர்கள் நிறைய நேரம் செலவிட்டு, ஊழியத்தில் எனக்குப் பயிற்சி கொடுத்தார்கள். பிற்பாடு ஒரு மூப்பர், சபை நியமிப்புகளைக் கையாளுவதற்கு என்னைப் பழக்கினார்.”
8 இந்த அனுபவம் காட்டுகிறபடி, விவேகமுள்ள மேய்ப்பர்கள் என்ன செய்கிறார்கள்? இன்றைய இளைஞர்களே நாளைய உதவி ஊழியர்கள் அல்லது மூப்பர்கள் என்பதை உணர்ந்து, வெகு முன்னதாகவே பயிற்சி அளிக்க ஆரம்பிக்கிறார்கள். இது ஏன் அவசியம்? ஏனென்றால் உயர்ந்த ஒழுக்க தராதரங்களையும் ஆன்மீக தராதரங்களையும் ஏற்கெனவே எட்டியிருக்கும் சகோதரர்களே உதவி ஊழியர்களாகவும் மூப்பர்களாகவும் நியமிக்கப்பட வேண்டுமென பைபிள் கட்டளையிடுகிறது. ஆம், அவர்கள் நியமிக்கப்படுவதற்கு “முன்னதாகச் சோதிக்கப்பட வேண்டும்” என அது சொல்கிறது.—1 தீமோத்தேயு 3:1-10.
9. அனுபவமிக்க மேய்ப்பர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது, ஏன்?
9 முழுக்காட்டப்பட்ட சகோதரர்கள் சோதிக்கப்பட அல்லது பரீட்சிக்கப்பட வேண்டும் என்றால், முதலில் அவர்கள் பயிற்றுவிக்கப்படுவதுதானே நியாயம். இதற்கு ஓர் உதாரணத்தைக் கவனிக்கலாம்: பள்ளி மாணவன் ஒருவன் பரீட்சை எழுத வேண்டியிருக்கிறது. அது கஷ்டமான பரீட்சை. ஆனால் ஆசிரியர்கள் அவனுக்கு ஒன்றுமே கற்றுக்கொடுக்கவில்லை. அவன் பரீட்சையில் ‘பாஸ்’ ஆவானா? வாய்ப்பே இல்லை. ஆக, கற்றுக்கொடுப்பதும் பயிற்சியளிப்பதும் எவ்வளவு அவசியம் என்பது புரிகிறது. கருத்தாக பணிபுரியும் ஆசிரியர்கள், பரீட்சையில் மாணவர்கள் ‘பாஸ்’ ஆவதற்கு மட்டுமல்ல, படித்த விஷயங்களை நடைமுறைப்படுத்தவும்கூட கற்றுத்தருகிறார்கள். அதேபோல், கருத்தாக பணிபுரியும் மூப்பர்கள், கண்காணிகளுக்குரிய குணங்களை வளர்த்துக்கொள்ள முழுக்காட்டப்பட்ட சகோதரர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். அந்தச் சகோதரர்கள் கண்காணிகளாய் ஆக உதவுவதற்கு மட்டுமல்ல, அவர்கள் மந்தையை நன்கு பேணிப் பாதுகாக்க உதவுவதற்கும் அவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள். (2 தீமோத்தேயு 2:2) முழுக்காட்டப்பட்ட சகோதரர்கள், உதவி ஊழியருக்கோ மூப்பருக்கோ உரிய தகுதிகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லைதான். (தீத்து 1:5-9) இருந்தாலும் அப்படிப்பட்டவர்கள் விரைவாக முன்னேற்றங்கள் செய்வதற்கு, அனுபவமிக்க மேய்ப்பர்கள் மனமுவந்து பயிற்சி அளிக்கலாம்.
10, 11. கூடுதலான பொறுப்புகளைக் கையாள மேய்ப்பர்கள் எவ்வாறு மற்றவர்களைப் பயிற்றுவிக்கலாம்?
10 அனுபவமிக்க மேய்ப்பர்கள், சபைப் பொறுப்புகளைக் கையாளுவதற்குக் குறிப்பாக என்னென்ன வழிகளில் மற்றவர்களைப் பயிற்றுவிக்கலாம்? முதலாவதாக, அக்கறை எடுத்து சபையிலுள்ள சகோதரர்களோடு சேர்ந்து தவறாமல் ஊழியம் செய்யலாம்; அப்படிச் செய்கையில், ‘சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கும்’ திறமையை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவலாம். (2 தீமோத்தேயு 2:15) மேலும், மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் கிடைக்கும் சந்தோஷத்தைப் பற்றி அவர்களிடம் பேசலாம்; ஆன்மீக இலக்குகளை வைப்பதிலும் அவற்றை அடைவதிலும் தங்களுக்குக் கிடைக்கும் திருப்தியைப் பற்றிச் சொல்லலாம். அதுமட்டுமின்றி, ‘மந்தைக்கு மாதிரியாக’ இருப்பதில் எப்படியெல்லாம் முன்னேறலாம் என்பதற்குக் குறிப்பான ஆலோசனைகளை அன்போடு வழங்கலாம்.—1 பேதுரு 5:3, 5.
11 ஒரு சகோதரர் உதவி ஊழியராக நியமிக்கப்பட்ட பிறகும் அவருக்கு மேய்ப்பர்கள் தொடர்ந்து பயிற்சி அளிப்பது ஞானமானது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக மூப்பராய் பணியாற்றிவரும் ப்ரூஸ் என்ற சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “ஒரு சகோதரர் உதவி ஊழியராக நியமிக்கப்படும்போது, அடிமை வகுப்பார் தந்திருக்கும் அறிவுரைகளை அவருடன் சேர்ந்து வாசிப்பேன். அவருக்கு அளிக்கப்படும் பொறுப்போடு சம்பந்தப்பட்ட அறிவுரைகள் இருந்தால் அவற்றையும் வாசிப்பேன். அதன் பிறகு, அவர் நன்கு பழகிக்கொள்ளும் வரை அவருடன் சேர்ந்து வேலைகளைச் செய்வேன்.” ஓர் உதவி ஊழியர் அனுபவம் பெற்ற பிறகு, மேய்ப்பு சந்திப்புகள் செய்வதற்கும் அவரைப் பயிற்றுவிக்கலாம். ப்ரூஸ் இவ்வாறும் சொல்கிறார்: “மேய்ப்பு சந்திப்புக்காக என்னோடு ஒரு உதவி ஊழியரை அழைத்துச் செல்லும்போது அதற்குத் தயாரிக்க அவருக்கு உதவுகிறேன்; யாரைச் சந்திக்கப் போகிறோமோ அந்த நபரை அல்லது குடும்பத்தை உற்சாகப்படுத்துவதற்குப் பொருத்தமான வசனங்களைத் தேர்ந்தெடுக்க அவருக்கு உதவுகிறேன். இவ்வாறு இதயத்தைத் தொடும் விதத்தில் வசனங்களைப் பயன்படுத்த கற்றுக்கொள்வது முக்கியம்; அப்போதுதான் உதவி ஊழியர், திறம்பட்ட மேய்ப்பராக ஆக முடியும்.”—எபிரெயர் 4:12; 5:14.
12. புதிதாக நியமிக்கப்படும் மூப்பர்களை அனுபவமிக்க மேய்ப்பர்கள் எவ்வாறு பயிற்றுவிக்கலாம்?
12 புதிதாக நியமிக்கப்படும் மூப்பர்களுக்கும்கூட தொடர்ந்து பயிற்சி அளிக்கும்போது அவர்கள் பெரிதும் பயனடைகிறார்கள். முன்பு குறிப்பிடப்பட்ட சகோதரர் நிக் இவ்வாறு சொல்கிறார்: “வயதில் மூத்த இரண்டு மூப்பர்கள் எனக்குக் கொடுத்த பயிற்சி அதிக உதவியாக இருந்தது. சில காரியங்களை எப்படிக் கையாள வேண்டுமென அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள். நான் சொல்வதை எப்போதும் பொறுமையோடு கேட்டார்கள்; என்னுடைய கருத்தை அவர்களால் ஒத்துக்கொள்ள முடியாதபோதுகூட அதை சீர்தூக்கிப் பார்த்தார்கள். சபையிலிருந்த சகோதர சகோதரிகளிடம் அவர்கள் பணிவோடும் மரியாதையோடும் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உற்சாகத்தை அளிப்பதற்கும் பைபிளைத் திறமையாகப் பயன்படுத்துவது எவ்வளவு அவசியமென்பதை அவர்கள் என் மனதில் பதிய வைத்தார்கள்.”
கடவுளுடைய வார்த்தையால் பயிற்றுவிக்கப்படுதல்
13. (அ) ஒரு சகோதரர் எப்போது சிறந்த மேய்ப்பராக விளங்க முடியும்? (ஆ) ‘என் உபதேசம் என்னுடையதல்ல’ என்று இயேசு ஏன் சொன்னார்?
13 கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில், மேய்ப்பர்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களும், நியமங்களும், உதாரணங்களும் இருக்கின்றன; ‘தேறினவர்களாகவும், எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும்’ ஆவதற்கு அவை உதவுகின்றன. (2 தீமோத்தேயு 3:16, 17) ஒரு சகோதரர் பட்டப்படிப்பு படித்திருக்கலாம்; ஆனால் பைபிளை எந்தளவு தெரிந்து வைத்திருக்கிறார் என்பதையும், அதை எந்தளவு கடைப்பிடிக்கிறார் என்பதையும் பொறுத்தே அவர் சிறந்த மேய்ப்பராக விளங்க முடியும். இயேசுவின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவரளவுக்கு அறிவும் விவேகமும் ஞானமும் பெற்ற மேய்ப்பர்கள் வேறு யாருமே இருந்ததில்லை; ஆனாலும்கூட யெகோவாவின் ஆடுகளுக்குக் கற்பித்தபோது அவர் தம்முடைய ஞானத்தைச் சார்ந்திருக்கவில்லை. “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது” என்றார். அவர் ஏன் தம் பரலோகத் தகப்பனுக்குப் புகழ் சேர்த்தார்? “சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான்” என அவரே பதில் அளித்தார்.—யோவான் 7:16, 18.
14. மேய்ப்பர்கள் எவ்வாறு சுயமகிமையைத் தேடாதிருக்கிறார்கள்?
14 உத்தம மேய்ப்பர்கள் சுயமகிமையைத் தேடாதிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அறிவுரையும் உற்சாகமும் தருகையில், தங்களுடைய ஞானத்தை சார்ந்திருக்காமல் கடவுளுடைய வார்த்தையை சார்ந்திருக்கிறார்கள். மூப்பர்களின் சிந்தையை அல்ல, ஆனால் ‘கிறிஸ்துவின் சிந்தையைப்’ பெற ஆடுகளுக்கு உதவுவதே தங்கள் கடமை என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 2:14-16) ஒரு மூப்பர், குடும்ப பிரச்சினையைத் தீர்க்க ஒரு தம்பதிக்கு உதவுவதாக வைத்துக்கொள்ளலாம்; அவர், பைபிள் நியமங்களையும் “உண்மையும் விவேகமுமுள்ள” அடிமை வகுப்பாரின் பிரசுரங்களில் உள்ள அறிவுரைகளையும் விட்டுவிட்டு, சொந்த அனுபவத்தின் பேரில் ஆலோசனை கொடுத்தால் என்னவாகும்? (மத்தேயு 24:45) அவரது ஆலோசனை அவருடைய வாழ்க்கை அனுபவத்தையும் உள்ளூர் சம்பிரதாயங்களையுமே பெருமளவு சார்ந்திருக்கும். உண்மைதான், அந்த மூப்பர் வாழ்க்கையில் அனுபவசாலியாக இருக்கலாம், அதேபோல் சில சம்பிரதாயங்களில்கூட தவறேதும் இல்லாதிருக்கலாம். ஆனாலும், மனித சிந்தனைகளுக்கும் உள்ளூர் சம்பிரதாயங்களுக்கும் ஏற்றபடி நடக்குமாறு சொல்வதைவிட, இயேசுவும் யெகோவாவும் சொல்கிறவற்றைக் கேட்டு நடக்குமாறு உற்சாகப்படுத்துவதுதான் சபையாருக்கு மிகுந்த பயன் அளிக்கும்.—சங்கீதம் 12:6; நீதிமொழிகள் 3:5, 6.
“உண்மையும் விவேகமுமுள்ள” அடிமை வகுப்பாரால் பயிற்றுவிக்கப்படுதல்
15. “உண்மையும் விவேகமுமுள்ள” அடிமை வகுப்பாருக்கு இயேசு கொடுத்த வேலை என்ன, அவர்கள் அதில் வெற்றிகண்டிருப்பதற்கு ஒரு காரணம் என்ன?
15 அப்போஸ்தலர்களான பேதுரு, யோவான், பவுல் போன்ற மேய்ப்பர்கள் அனைவரும் “உண்மையும் விவேகமுமுள்ள” அடிமை வகுப்பார் என இயேசு விவரித்த தொகுதியைச் சேர்ந்தவர்கள். பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களே அடிமை வகுப்பார்; இயேசுவின் சகோதரர்களான இவர்கள் அவரோடு பரலோகத்தில் ஆட்சி செய்யும் நம்பிக்கை உடையவர்கள். (வெளிப்படுத்துதல் 5:9, 10) இந்தக் கடைசி நாட்களில், கிறிஸ்துவின் சகோதரர்களுடைய எண்ணிக்கை எதிர்பார்த்தபடியே குறைந்திருக்கிறது. ஆனாலும், அவர்களுக்கு இயேசு கொடுத்த வேலை—முடிவு வருவதற்கு முன் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலை—என்றுமில்லாத அளவுக்கு இப்போது உலகெங்கும் நடைபெறுகிறது. ஆக, அடிமை வகுப்பார் அபார வெற்றிகண்டிருக்கிறார்கள்! காரணம் என்ன? பிரசங்கித்து, சீஷராக்கும் வேலையில் தங்களுக்குக் கைகொடுக்க ‘வேறே ஆடுகளை’ அவர்கள் பயிற்றுவித்திருப்பது இதற்கு ஒரு காரணம் என சொல்லலாம். (யோவான் 10:16; மத்தேயு 24:14; 25:40) இன்று இவ்வேலையின் பெரும் பங்கு உத்தமமுள்ள இந்த வேறே ஆடுகளால்தான் செய்யப்பட்டு வருகிறது.
16. நியமிக்கப்பட்ட சகோதரர்களை அடிமை வகுப்பார் எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள்?
16 அடிமை வகுப்பார் வேறே ஆடுகளை எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள்? முதல் நூற்றாண்டில், அடிமை வகுப்பாரின் பிரதிநிதிகள் சபைகளில் சகோதரர்களைப் பயிற்றுவித்து அவர்களைக் கண்காணிகளாக நியமித்தார்கள்; அந்தக் கண்காணிகளோ சபையில் இருந்த மற்றவர்களைப் பயிற்றுவித்தார்கள். (1 கொரிந்தியர் 4:17) இன்றும் அதுதான் நடக்கிறது. அடிமை வகுப்பாரைப் பிரதிநிதித்துவம் செய்யும் அபிஷேகம் செய்யப்பட்ட மூப்பர்கள் அடங்கிய ஒரு சிறிய தொகுதியினர் ஆளும் குழுவாகச் செயல்படுகிறார்கள்; இவர்களுடைய பிரதிநிதிகள், உலகெங்கும் ஆயிரக்கணக்கான சபைகளில் உள்ள சகோதரர்களைப் பயிற்றுவித்து அவர்களை உதவி ஊழியர்களாகவும் மூப்பர்களாகவும் நியமிக்கிறார்கள். அதோடு, ஆடுகளைச் சிறப்பாக பேணிப் பாதுகாப்பதற்குத் தேவையான பயிற்சியை ஆளும் குழுவினர் அளிக்கிறார்கள்; இதற்காக, கிளை அலுவலகக் குழுவினர், பயணக் கண்காணிகள், மூப்பர்கள், உதவி ஊழியர்கள் ஆகியோருக்கு விசேஷ பள்ளிகளை ஏற்பாடு செய்கிறார்கள். கூடுதலாக, கடிதங்கள், காவற்கோபுர கட்டுரைகள், யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகம் போன்ற பிரசுரங்கள் வாயிலாகப் பயிற்சி அளிக்கிறார்கள்.a
17. (அ) அடிமை வகுப்பார்மீது நம்பிக்கை வைத்திருப்பதை இயேசு எவ்வாறு காட்டியிருக்கிறார்? (ஆ) அடிமை வகுப்பார்மீது நம்பிக்கை வைத்திருப்பதை கிறிஸ்தவ மேய்ப்பர்கள் எவ்வாறு காட்டுகிறார்கள்?
17 அடிமை வகுப்பார்மீது இயேசு அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்; அதனால்தான் ‘தன் ஆஸ்திகள் எல்லாவற்றையும்,’ அதாவது பூமியிலுள்ள தம் ஆன்மீக உடைமைகள் அனைத்தையும், கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். (மத்தேயு 24:47) மேய்ப்பர்களாக நியமிக்கப்படுகிறவர்களும் அடிமை வகுப்பார்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்; அடிமை வகுப்பாரின் பிரதிநிதிகளான ஆளும் குழுவினரின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் அந்த நம்பிக்கையை வெளிக்காட்டுகிறார்கள். ஆக, மேய்ப்பர்கள் மற்றவர்களைப் பயிற்றுவிக்கும்போதும், கடவுளுடைய வார்த்தையால் தங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளும்போதும், அடிமை வகுப்பார் தரும் பயிற்சியை ஏற்றுக்கொள்ளும்போதும், சபையில் ஒற்றுமையை முன்னேற்றுவிக்கிறார்கள். கிறிஸ்தவ சபையில் உள்ள ஒவ்வொருவரையும் அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் சகோதரர்களை யெகோவா பயிற்றுவிப்பதற்காக நம் இருதயத்தில் நன்றி பெருக்கெடுக்கவில்லையா!
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
எப்படி பதில் அளிப்பீர்கள்?
• அனுபவமிக்க மேய்ப்பர்கள் எவ்வாறு மற்றவர்களைப் பயிற்றுவிக்கிறார்கள்?
• மேய்ப்பர்கள் ஏன் சுயமாக எதையும் கற்பிப்பதில்லை?
• அடிமை வகுப்பார்மீது நம்பிக்கை வைத்திருப்பதை மேய்ப்பர்கள் எவ்வாறு காட்டுகிறார்கள், ஏன்?
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
கிறிஸ்தவ மூப்பர்கள் சபையில் உள்ள இளம் சகோதரர்களைப் பயிற்றுவிக்கிறார்கள்
[பக்கம் 26-ன் படங்கள்]
“உண்மையும் விவேகமுமுள்ள” அடிமை வகுப்பார் மூப்பர்களுக்கு ஏராளமான விதங்களில் பயிற்சி அளிக்கிறார்கள்