வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: யோவேல் 1:1—3:21
யெகோவாவின் நாமத்தை நோக்கிக் கூப்பிட்டு தப்பித்துக்கொள்ளுங்கள்!
“கொள்ளை நோயை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அது கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும் அருகிலுள்ள கிழக்குப் பகுதிகளுக்கும் பரவிவிடும். இது பெரும் சேதத்தை உண்டுபண்ணக்கூடும்.” கோடிக்கணக்கில் வந்து தற்போது வட மேற்கு ஆப்பிரிக்காவில் தொல்லைக்கொடுத்து வரும் தீரா பெரும் பசியுடைய பூச்சியினத்தைச் சேர்ந்த வெட்டுக்கிளியைப் பற்றி ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அதிகாரி ஒருவர் இவ்விதமாக குறிப்பிட்டார்.
சுமார் பொ.ச.மு. 820-ல் கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய யோவேல் இதுபோன்ற ஒரு கொள்ளை நோயைப் பற்றி பேசினான். துல்லிபமாகவும், நுணுக்கமான விவரம் எதையும் விடாமல் சித்தரிப்பதிலும் ஈடிணையற்ற வகையில் தெளிவான சொற்களில், யூதா தேசம் எவ்விதமாக வெட்டுக்கிளிகளின் தாக்குதலினால் நாசமடையும் என்பதை விவரித்தான். என்றபோதிலும், அந்தக் கொள்ளைநோய் உயிரின வாழ்க்கைச் சூழலில் ஏற்பட இருந்த ஆபத்தின் முன்னறிகுறியாக இருப்பதைவிட இன்னும் அதிக முக்கியத்துவமுடைய ஏதோ ஒன்றுக்கு படமாக இருந்தது. அது “யெகோவாவுடைய நாள்” வருவதை தெரிவிப்பதாக இருந்தது! நம்முடைய சந்ததி, அந்த “பெரிதும் பயங்கரமுமான நாளை” அதன் எல்லா சங்கார உக்கிரத்தோடும் எதிர்பட இருக்கிறது. இரட்சிக்கப்பட என்ன நம்பிக்கை இருக்கிறது? யோவேல் தீர்க்கதரிசன புத்தகத்திலிருந்து நாம் என்ன பாடங்களை கற்றுக்கொள்ளலாம்?
பயங்கரமான பூச்சிகளின் தாக்குதல்
யெகோவாவின் பயங்கரமான நாளின்போது இரட்சிக்கப்படுவதற்கு மனந்திரும்புதல் அவசியமாகும். தேசம் முழுவதிலுமுள்ள அனைத்துத் தாவரங்களையும் பச்சைப்புழு கூட்டமும், வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும் (கரப்பான்) தின்றுவிட்டபோது, யோவேலின் கண்களின் வழியாக ஒரு அழிவை நாம் காண்கிறோம். ஆசாரியர்களும், மூப்பர்களும், யூதாவின் மற்ற குடிகளும் மனந்திரும்பி, “உதவிக்காக யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்”படியாக துரிதப்படுத்தப்படுகிறார்கள். பண்டக சாலைகள் பாழாகி விளைச்சல் இல்லாது போனதால், களஞ்சியங்கள் இடிந்து விட்டன. மிருகங்கள் மேய்ச்சல் நிலத்துக்காக வீணாக தேடி அலைந்து கலங்கி தவிக்கின்றன. சர்வ வல்லமையுள்ளவரிடமிருந்து என்னே மகா சங்காரமான ஒரு நாள்!—1:1-20.
யெகோவாவின் நாள் அருகாமையிலிருப்பது, பரிசுத்த நடக்கையிலும், தேவ பக்தியான செயல்களிலும் ஈடுபட நம்மைத் தூண்ட வேண்டும். (2 பேதுரு 3:10-12) அதை இருளும், அந்தகாரமும் மப்பும் மந்தாரமுமான நாளாகக் காண யோவேல் நமக்கு உதவி செய்கிறான். வெட்டுக்கிளிகளே அந்த நாளின் வரவை அறிவிப்பு செய்கின்றன. அதை அடுத்து யூதாவின் ஏதேன் தோட்டத்தைப் போன்ற இயற்கைக் காட்சி பாழான ஒரு பாலைவனமாக மாறுகிறது. வெட்டுக்கிளிகளின் சப்தமும் வருகின்ற ஆபத்துக்கு முன்னறிகுறியாக இருக்கிறது. ஏனென்றால், அவை ஓடுகிற இரதங்களின் இரைச்சல் போலவும் செத்தைகளை எரிக்கிற அக்கினி ஜுவாலையின் இரைச்சலைப் போலவுமிருக்கிறது. வெட்டுக்கிளிகள், “யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சலோடு” முன்னேறுகையில், அவை மதிலேறியும், பட்டணங்கள் எங்கும் சென்றும் வீடுகளின் மேலும் ஏறிச் செல்கின்றன. ‘யெகோவாவின் பயங்கரமான நாளில்’ சூரியன், சந்திரன் நட்சத்திரங்களும்கூட இருண்டு போகின்றன.—2:1-11.
இரட்சிப்பின் வழி
இரட்சிக்கப்படுவதற்கு, ‘யெகோவாவே தேவன், வேறு எவரும் இல்லை’ என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். “உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” என்று யெகோவா சொல்லுகிறார். தெய்வீக தயவை மன்றாடிப்பெற, முதியவர்களும், இளைஞர்களும் சபையில் பக்தியாக கூடிவரும்படி துரிதப்படுத்தப்படுகிறார்கள். கடவுள் இரக்கத்தை காண்பித்து, பூச்சிகளினால் ஏற்பட்ட இழப்புக்கு ஈடுசெய்து, செழுமையினால் அவருடைய ஜனங்களை அவர் ஆசீர்வதிப்பார். ஒரே மெய்க் கடவுளாகவும், இரட்சிப்பின் ஊற்று மூலமாகவும் யெகோவாவின் ஸ்தானத்தை நன்றியோடு ஏற்றுக்கொள்பவர்கள் வெட்கமடையமாட்டார்கள்.—2:12-27.
நம்முடைய இரட்சிப்பு, விசுவாசத்தோடு யெகோவாவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறதன் பேரிலும்கூட சார்ந்திருக்கிறது. “யெகோவாவுடைய பெரிதும் மகா பயங்கரமுமான நாள்” வருவதற்கு முன்பாக, தேவன் ‘மாம்சமான யாவர் மேலும் தம்முடைய ஆவியை ஊற்றுவார்.’ இளைஞர்களும் முதியோரும் ஆண்களும் பெண்களும் தீர்க்கதரிசனஞ் சொல்லும் ஒரு வேலையைச் செய்வார்கள். இவ்வகையில், ‘யெகோவாவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிற அனைவரும் தப்பித்துக் கொள்வார்கள்’ என்பதை அநேகர் கற்றுக்கொள்வர்.—2:28-32.
தேசங்களின் மீது நியாயத்தீர்ப்பு
தேசங்களின் மீது யெகோவா தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில், தம்முடைய உண்மையுள்ள ஜனங்களை பாதுகாப்பார். (எசேக்கியேல் 38:18-23; வெளிப்படுத்துதல் 16:14-16-ஐ ஒப்பிடவும்.) கடவுளுடைய ஜனங்களை தகாத முறையில் நடத்தியதற்காகவும் அவர்களை அடிமைத்தனத்துக்கு விற்றுப் போட்டதற்காகவும் தீருவும் சீதோனும் பெலிஸ்தியாவும் அதற்கேற்ற பலனை அடைந்தே தீர வேண்டும். யெகோவா யூதா மற்றும் எருசலேமின் சிறையிருப்பைத் திருப்புவார். அவர் தம்முடைய சத்துருக்களுக்கு கொடுக்கும் அழைப்பு: “யுத்தத்துக்கு ஆயத்தம் பண்ணுங்கள்!” ஆனால் அடையாள அர்த்தமுள்ள “யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே” அவர்கள் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் கடவுளுக்கு அவர்கள் ஈடுகொடுக்க முடியாது. வானமும் பூமியும் அதிர்ந்தாலும், யெகோவா அவருடைய ஜனத்துக்கு அடைக்கலமாயிருப்பார். உண்மையுள்ளவர்கள், தேசங்களின் வரும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிப்பிழைத்து, பரதீஸிய நிலைமைகளின் கீழ் ஜீவனை அனுபவிப்பர்.—3:1-21.
நினைவில் கொள்ள வேண்டிய பாடங்கள்: ஒரு நபர் யெகோவாவின் பயங்கரமான நாளில் பாதுகாக்கப்படுவதற்கு அவர் முன்கூட்டியே மனந்திரும்புவது அவசியமாக இருக்கிறது. அந்த நாள், அருகாமையிலிருப்பது, பரிசுத்த நடக்கையிலும் தேவ பக்திக்குரிய செயல்களிலும் ஈடுபட நம்மைத் தூண்ட வேண்டும். நிச்சயமாகவே, நம்முடைய இரட்சிப்பு, யெகோவா மட்டுமே கடவுள் என்பதை ஒப்புக்கொள்வதன் பேரில் சார்ந்திருக்கிறது. விசுவாசத்தோடு நாம் அவருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுவோமேயானால், தேசங்களின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில் அவர் நம்மை பாதுகாப்பார்.
யோவேலின் தீர்க்கதரிசனம், நாம் கவலையோடு சிந்திப்பதற்கு மேலும் அதிக காரணம் அளிக்கிறது. ஏன், “யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள்” நெருங்கிவிட்டது! மனிதவர்க்கம் எச்சரிக்கப்பட வேண்டும். யோவேல் தீர்க்கதரிசனத்தில் வெட்டுக்கிளிகளைப் போல, யெகோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ மண்டலத்தின் ஆவிக்குரிய வறட்சியான நிலைமையை இரக்கமின்றி அம்பலப்படுத்துவதன் மூலம் அவளை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது அவளுடைய தலைவர்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் கிளறிவிடுகிறது. ஆனால் அடையாள அர்த்தமுள்ள வெட்டுக்கிளிகளின் பாதையில் அவர்கள் வைக்க முற்படும் எந்த மதில் போன்ற இடையூறுகளும் பயனற்றதாகவே இருக்கின்றன. யெகோவா தம்முடைய ஆவியை தம்முடைய ஜனங்கள் மீது ஊற்றி அவருடைய நியாயத்தீர்ப்புகளை அறிவிக்க அவர்களை ஆயத்த நிலையில் வைத்திருக்கிறார். ஆகவே கடவுளுடைய பயங்கரமான நாள் வருவதற்கு முன்னால், எஞ்சியிருக்கும் இந்த குறுகிய காலத்தில், ‘தப்பித்துக் கொள்வதற்காக யெகோவாவின் நாமத்தை நோக்கி கூப்பிடுவதற்கு,’ மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முழுமையான ஒரு பங்கைக் கொண்டிருப்போமாக. (w89 3⁄15)
[பக்கம் 26-ன் படம்]
வேத வசனங்களை ஆராய்தல்
○1:2—யோவேல் தேசத்தை தவறாக வழிநடத்தியிருந்த “முதியோரை” நோக்கிப் பேசினான். அந்த தவறான வழிநடத்துதலை, “தேசத்தின் குடிகள்” பின்பற்றியதன் காரணமாக, அவர்களும்கூட யெகோவாவின் பார்வையில், கணக்கு கொடுக்க வேண்டியவர்களாயிருந்தனர். இன்று, கிறிஸ்தவ மண்டலத்தின் மதத் தலைவர்கள் அதே விதமாகவே தங்களுடைய மந்தைகளை தவறாக வழிநடத்தியிருக்கின்றனர். யோவேலைப் போலவே யெகோவாவின் சாட்சிகள் செய்திகளை அந்த குருவர்க்கத்தை கருத்திற் கொண்டே பேசியிருக்கிறார்கள். என்றபோதிலும், ஜனங்களுக்கு பொதுவில் கடவுளுடைய வார்த்தை அறிவிக்கப்பட வேண்டும். ஏனென்றால் அவர்களும்கூட யெகோவாவுக்கு கணக்குக் கொடுப்பார்கள்.—ஏசாயா 9:15-17; ரோமர் 14:12.
○2:1-10, 28—கடவுளுக்கு கீழ்ப்படியாமற் போனால் வெட்டுக்கிளிகளும் மற்ற பூச்சிகளும் அவர்களுடைய பயிர்களை அழித்துவிடும் என்பதாக இஸ்ரவேலர் எச்சரிக்கப்பட்டிருந்தனர். (உபாகமம் 28:38-45) யோவேல் குறிப்பிடும் அளவுகளில், கானானில் பூச்சிகளின் தாக்குதல் ஏற்பட்டதாக வேதாகமப் பதிவு இல்லாததன் காரணமாக, அவன் விவரிக்கும் கொள்ளை நோய் ஒரு படமாக இருந்திருக்க வேண்டும். யெகோவா தேவன், பொ.ச.33-ல் பெந்தேகோஸ்தேவின் போது இயேசுவைப் பின்பற்றியவர்கள் மீது, ‘தம்முடைய ஆவியை ஊற்ற’ ஆரம்பித்த சமயம் முதற்கொண்டே தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைய ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த சமயம் முதற்கொண்டே இவர்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட செய்திகளைக் கொண்டு பொய் மதத் தலைவர்களை வாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். (அப்போஸ்தலர் 2:1, 14-21; 5:27-29) யெகோவாவின் சாட்சிகள், அதே விதமான ஒரு பாழாக்கும் வேலையை இப்பொழுது செய்து வருகிறார்கள்.
○2:12, 13—பூர்வ காலங்களில், வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வது துக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு செயலாக இருந்தது. (ஆதியாகமம் 37:29, 30; 44:13) ஆனால் இது வெளி வேஷமாக, மாய்மாலமாக செய்யப்படலாம். துக்கத்தை வெளிப்படுத்துவது மாத்திரமே போதுமானதாயிராது என்பதை யோவேல் தெளிவுபடுத்தினான். ஜனங்கள் இருதயப்பூர்வமான மனந்திரும்புதலைக் காட்டுவதன் மூலம் ‘இருதயங்களை கிழிப்பது’ அவசியமாயிருந்தது.
○2:31, 32—யோவேலின் காலத்தில், யெகோவா உண்மையுள்ளவர்களை அழிவிலிருந்து தப்புவித்தார். இப்பொழுது, இந்த “கடைசி நாட்களில்” தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாக, இரட்சிப்பை சாத்தியமாக்குகிறார். (2 தீமோத்தேயு 3:1; ரோமர் 5:8, 12; 6:23) என்றபோதிலும் பாவமுள்ள மனிதர்கள், நித்திய இரட்சிப்புக்காக யெகோவாவின் நாமத்தை நோக்கியே கூப்பிட வேண்டும். இது தெய்வீக நாமத்தை அறிந்திருப்பதை, அதை முழுமையாக கனப்படுத்துவதை, அந்தப் பெயரை தாங்கியிருப்பவரின் மீது முழுமையாக சார்ந்திருப்பதை அர்த்தப்படுத்துகிறது. கடவுள் தம்முடைய “பெரிதும் பயங்கரமுமான நாளின்” போது தேசங்களின் மீது தம்முடைய நியாத்தீர்ப்பை நிறைவேற்றுகையில் இவ்விதமாக விசுவாசத்தில் யெகோவாவின் நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் “தப்பித்துக் கொள்வார்கள்.”—செப்பனியா 2:2, 3; 3:12; ரோமர் 10:11-13.
○3:2, 14—“யெகோவாவின் நாளில்” தெய்வீக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் அடையாள அர்த்தமுள்ள இடம் “நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கு” என்றழைக்கப்படுகிறது. இது “யோசபாத்தின் பள்ளத்தாக்கு” என்றும்கூட அழைக்கப்படுகிறது. யோசபாத் என்ற பெயரின் பொருள் “யெகோவா நியாயாதிபதி” என்பதால் இது பொருத்தமாக இருக்கிறது. யோசபாத் ராஜாவின் ஆட்சி காலத்தின்போது, கடவுள் மோவாப், அம்மோன் மற்றும் சேயீர் மலைத்தேசத்தாரின் படைகளின் கைகளிலிருந்து யூதாவையும் எருசலேமையும் விடுவிக்க, அவர்களே ஒருவரையொருவர் சங்கரித்துக்கொள்ளும்படி அவர்களை குழம்பிப் போகச் செய்தார். (2 நாளாகமம் 20:1-30) நம்முடைய நாளில் “யோசபாத்தின் பள்ளத்தாக்கு” அடையாள அர்த்தமுள்ள ஆலையாக இருக்கிறது. யெகோவாவின் ஜனங்களை தவறாக நடத்துவதற்காக, தேசங்கள் ஆலைகளில் திராட்சப் பழங்களைப் போல இங்கே மிதிக்கப்படுகிறார்கள்.○3:6—தீரு, சீதோன், மற்றும் பெலிஸ்தியா யூதாவையும் எருசலேமையும் கிரேக்கரிடத்தில் விற்றுப் போட்டதற்காக குற்றமுள்ளவர்களாயிருந்தனர். மற்ற தேசங்களால் பிடிப்பட்ட சில யூதர்கள் தீரு, சீதோன் மற்றும் பெலிஸ்திய அடிமை வியாபாரிகளுக்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை தங்கள் சத்துருக்களிடமிருந்து அடைக்கலம் நாடிய யூதர்களை இவ்விதமாக அடிமைகளாக்கியது இன்னும் அதிக மோசமான காரியமாக இருந்தது. எது எப்படியிருந்தாலும், தம்முடைய ஜனங்களை தவறாக நடத்தியதற்காக, மனித உயிர்களை வைத்து வியாபாரம் செய்தவர்களை, கடவுள் கணக்கு கேட்டார். இன்று யெகோவாவின் ஊழியர்களை துன்புறுத்துகின்ற தேசங்களுக்கு காத்திருப்பது என்ன என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.