உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 5/1 பக். 25-28
  • சுய-தியாக ஆவியைக் கொண்டிருங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சுய-தியாக ஆவியைக் கொண்டிருங்கள்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஒரு பைபிள் தேவை
  • சுய-தியாகத்திலிருந்து வரும் ஆசீர்வாதங்கள்
  • சுய-தியாகமுள்ளவர்களாக இருக்க வழிகள்
  • சுய-தியாக ஆவியுடன் யெகோவாவைச் சேவித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • தியாக மனப்பான்மை தேவையா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • சுயதியாக உள்ளம் உங்களுக்கு உள்ளதா?
    நம் ராஜ்ய ஊழியம்—2000
  • யெகோவாவுக்குப் பிரியமான துதியின் பலிகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 5/1 பக். 25-28

சுய-தியாக ஆவியைக் கொண்டிருங்கள்!

ரால்ஃப்a, உயர்வாக மதிக்கப்பட்ட ஒரு வேலையாளாக இருந்தார். அவர் கிறிஸ்தவ ஊழியத்தில் தன்னுடைய பங்கை விரிவாக்கும் பொருட்டு, ஒரு பகுதி-நேர வேலையை தேடிக்கொள்ளத் தீர்மானித்த போது, அவருக்கு வேலை கொடுத்தவர் உடனடியாக ஒத்துழைத்தார். ஆகவே பல ஆண்டுகளாக ரால்ஃபினால் பயனியர் சேவையை அனுபவித்துக் களிக்க முடிந்தது. ஆனால் ஒரு நாள் வேலை நிலைமை மாறியது. ரால்ஃப் தன் வேலையில் அவ்வளவு திறமையுள்ளவராக நிரூபித்த காரணத்தால் அவர் அந்த நிறுவனத்தின் விற்பனை மேலாளர் பதவி அளிக்கப்பட்டார். வேலை கவர்ச்சியான ஊதியத்தோடும் மேலுமாக முன்னேற்றத்துக்கு நல்ல வாய்ப்புகளோடும் வந்தது. என்றபோதிலும் ஒரு பகுதி-நேர வேலை இனிமேலும் சாத்தியமாயிராது.

ரால்ஃப், தன் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டும், கூடுதலான பணம் பிரயோஜனமாக இருந்திருக்கும். என்றபோதிலும் தனக்கு அளிக்கப்பட்டதை அவர் ஏற்க மறுத்து, தன்னுடைய ஆவிக்குரிய மற்றும் பொருள் சம்பந்தமான பொறுப்புகளை நிறைவேற்ற தன்னை அனுமதிக்கும் மற்றொரு வேலைக்காக விண்ணப்பித்தார். ரால்ஃபின் முதலாளி இந்தத் தீர்மானத்தைக் கண்டு வியப்படைந்தார். கூடுதல் ஊதிய அளிப்பும்கூட வீணாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட போது, முதலாளி சொன்னார்: “உன் நம்பிக்கையோடு என்னால் போட்டியிட முடியாது என்பதை நான் காண்கிறேன்.”

ஆம், ரால்ஃபுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. ஆனால் அவருக்கு மற்றொரு குணாதிசயமும் இருந்தது—சுய-தியாக ஆவி. இப்படிப்பட்ட ஓர் ஆவியை கட்டுப்பாடற்ற சிற்றின்ப ஈடுபாடுள்ள உலகில் காண்பது அபூர்வமாகும். ஆனால் அது பிரயோஜனமானதும் திருப்தியளிப்பதுமான ஒரு வாழ்க்கை முறைக்கு வழிநடத்தக்கூடும். சுய-தியாக ஆவி என்பது என்ன? அது எதை அவசியமாக்குகிறது? அதைக் காத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

ஒரு பைபிள் தேவை

தியாகம் என்பது மதிப்புள்ள ஏதோ ஒன்றை விட்டுக்கொடுத்தலை அல்லது ஒப்புவித்தலை அர்த்தப்படுத்துகிறது. உண்மையுள்ள முதல் சாட்சியாகிய ஆபேல் கடவுளுக்குப் பலியாக “தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றை” அளித்த அந்தச் சமயம் முதற்கொண்டு பலிசெலுத்துவது மெய் வணக்கத்தின் ஒரு பாகமாக இருந்து வந்திருக்கிறது. (ஆதியாகமம் 4:4) நோவா மற்றும் யாக்கோபு போன்ற விசுவாசமுள்ள மனிதர்கள் இவருடைய நல்ல முன்மாதிரியை பின்பற்றினார்கள். (ஆதியாகமம் 8:20; 31:54) மிருக பலிகள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்தது. (லேவியராகமம் 1:2-4) ஆனால் அந்த நியாயப்பிரமாணத்தின் கீழ் வணக்கத்தார், தங்களுடைய மிகச் சிறந்ததை அளிக்கும்படியாக அறிவுறுத்தப்பட்டார்கள். அவர்கள் எந்த ஒரு குறையுள்ள மிருகத்தையும் பலியாக செலுத்த அனுமதி இல்லை. (லேவியராகமம் 22:19, 20; உபாகமம் 15:21) விசுவாச துரோக இஸ்ரவேலர் இந்தச் சட்டத்தை மீறிய போது, கடவுள் பின்வருமாறு சொல்லி அவர்களைக் கடிந்துகொண்டார்: “நீங்கள் ஊனமானதை பலியிடக் கொண்டு வந்தாலும் . . . அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே. அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன் மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ?”—மல்கியா 1:8, 13.

தியாகம் என்ற நியமம் கிறிஸ்தவ வணக்கத்திற்குள்ளும் எடுத்து செல்லப்பட்டது. என்றபோதிலும் கிறிஸ்து முழு மீட்பின் கிரயத்தையும் செலுத்திவிட்ட காரணத்தால், மிருக பலிகளை இனிமேலும் கடவுள் அங்கீகரிப்பதில்லை. ஆகவே கிறிஸ்தவர்கள் அங்கீகரிக்கப்படும் வகையில் என்னத்தை பலியாக செலுத்த முடியும்? பவுல் ரோமர் 12:1-ல் எழுதுகிறார்: “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.” என்னே வியப்பூட்டும் மாற்றம்! மிருகங்களின் செத்த உடலை பலியாக செலுத்துவதற்குப் பதிலாக, கிறிஸ்தவர்கள் தங்களை ஜீவபலியாக கொடுக்க வேண்டும்—அவர்கள் சக்திகள், சொத்துக்கள் மற்றும் திறமைகள். இஸ்ரவேலில் யெகோவா செய்த வண்ணமாகவே “ஊன”மானதை அல்லது அரைமனதோடு கூடிய பலிகளை யெகோவா ஏற்றுக்கொள்ள மாட்டார். தம்முடைய வணக்கத்தார் அவருக்குத் தங்களுடைய மிகச் சிறந்ததைக் கொடுக்க வேண்டும், அவரை முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் பலத்தோடும் சேவிக்க வேண்டும் என்பதாக அவர் வலியுறுத்துகிறார்.—மாற்கு 12:30.

ஆகவே சுய-தியாக ஆவி என்பது கூட்டங்கள் மற்றும் கிறிஸ்தவ வெளி ஊழிய நடவடிக்கைகளடங்கிய ஓர் அட்டவணையை உறுதியாக கடைபிடிப்பதைக் காட்டிலும் மிக அதிகத்தை உட்படுத்துகிறது. எது எப்படியாயினும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு தீர்மானமாயிருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. இன்னல்களையும் அசெளகரியங்களையும் சகித்துக் கொள்ள தயாராயிருப்பதை அது அர்த்தப்படுத்துகிறது. “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் சொந்தம் கைவிட்டு, தன் கழுமரத்தை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 16:24, NW) ஒரு கிறிஸ்தவன் தனிப்பட்ட விருப்பம் அல்லது பொருள் சம்பந்தமான இலக்குகளை தன்னுடைய முக்கிய அக்கறையாக ஆக்கிக் கொள்வதில்லை. முதலாவது கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதிலேயே அவனுடைய வாழ்க்கை ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. (மத்தேயு 6:33) அவசியமானால் அவன் தன் “கழுமரத்தை எடுத்துக்கொள்ள,” துன்புறுத்தல், அவமானம் மற்றும் மரணத்தையும்கூட சகித்துக் கொள்ள தயாராக இருக்கிறான்.

சுய-தியாகத்திலிருந்து வரும் ஆசீர்வாதங்கள்

அலட்சியம் செய்ய முடியாத சாத்தியங்களை எதிர்படுகையில், ஒருவர் இயல்பாகவே சுய-தியாகம் தகுதியுள்ளதாக இருக்குமா என்று யோசிக்கக்கூடும். யெகோவா தேவனை நேசிக்கிறவர்களுக்கு அவருடைய பெயர் கனப்படுத்தப்படுவதைக் காண விரும்புகிறவர்களுக்கு இது நிச்சயமாகவே தகுதியுள்ளதாக இருக்கிறது. (மத்தேயு 22:37) இயேசு கிறிஸ்து வைத்த பரிபூரணமான முன்மாதிரியைச் சிந்தித்துப் பாருங்கள் பூமிக்கு வருவதற்கு முன்னால் அவர் ஓர் ஆவி சிருஷ்டியாக பரலோகத்தில் உன்னதமான அந்தஸ்தை அனுபவித்துக் களித்தார். என்றபோதிலும், அவர் தம்முடைய சீஷர்களிடம் சொன்ன வண்ணமாகவே அவர், ‘சுய சித்தத்தைத் தேடாமல், தன்னை அனுப்பின பிதாவினுடைய சித்தத்தையே’ தேடினார். (யோவான் 5:30) ஆகவே அவர் மனமுவந்து “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.”—பிலிப்பியர் 2:7, 8.

இப்படிப்பட்ட தியாகங்கள் பலனற்றதாக இருக்கவில்லை. இயேசு, “தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்க” மனமுள்ளவராக இருந்தபடியால் அவர் மீட்பின் விலையை செலுத்தினார், இவ்விதமாக அபூரணமான மனிதர் பரலோகங்களில் சாவாமையையோ அல்லது பூமியின் மீது நித்திய ஜீவனையோ பெற்றுக்கொள்ள முடியும். (யோவான் 3:16; 15:13; 1 யோவான் 2:2) பரிபூரணமாக தம் உத்தமத்தைக் காத்துக் கொள்வதன் மூலம், அவர் யெகோவாவின் நாமம் மிகுதியாக துதிக்கப்படும்படிச் செய்வித்தார். (நீதிமொழிகள் 27:11) யெகோவா அவருடைய சுய-தியாக போக்குக்கு அவரை ஆசீர்வதித்தது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை! “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்.”—பிலிப்பியர் 2:9.

நிச்சயமாகவே, இயேசு கடவுளுடைய ஒரே பேறான குமாரனாக இருந்தார். தமக்காகத் தியாகங்களைச் செய்கிற மற்றவர்களுக்கும்கூட கடவுள் பலனளிக்கிறாரா? ஆம், இது பூர்வ காலங்களிலும் நவீன காலங்களிலும் அநேக உதாரணங்களில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. மோவாபிய பெண்ணாகிய ரூத்தைப் பற்றிய பைபிள் பதிவை சிந்தித்துப் பாருங்கள். அவள் யெகோவாவைப் பற்றி, தன் இஸ்ரவேல கணவனிடமிருந்து கற்றுக்கொண்டிருக்க வேண்டும். அவன் மரித்த பின்பு, அவள் ஒரு தீர்மானம் செய்ய வேண்டியவளாக இருந்தாள். அவளுடைய பிறப்பிடமாக இருக்கும் புறமத தேசத்தில் அவள் தங்கிவிடுவாளா அல்லது அவள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு தன் வயதான மாமியோடு பயணப்பட்டுப் போவாளா? தன் பெற்றோரோடு கூட்டுறவுக்கொள்வதையும் ஒருவேளை மறுவிவாக வாய்ப்பையும்கூட தியாகம் செய்வதை உட்படுத்திய போதிலும் ரூத் பின்னதைத் தெரிந்து கொண்டாள். என்றபோதிலும் ரூத் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டிருந்தாள், அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள் மத்தியில் அவரை வணங்குவதற்கு அவளுக்கிருந்த ஆசை, நகோமியை பற்றிக்கொண்டிருக்க அவளை உந்துவித்தது.

இப்படிப்பட்ட சுய-தியாகத்துக்காக ரூத் பலனளிக்கப்பட்டாளா? நிச்சயமாகவே பலனளிக்கப்பட்டாள்! காலப்போக்கில், போவாஸ் என்ற பெயர்கொண்ட நிலச் சொந்தக்காரர் அவளை மனைவியாக்கிக்கொள்ள ரூத், இயேசு கிறிஸ்துவின் முன்னோளாக ஓபேத் என்ற பெயர்கொண்ட மகனுக்கு தாயாக ஆனாள்.—மத்தேயு 1:5, 16.

அதேவிதமாக, நவீன காலங்களில் கடவுளுடைய சுய-தியாக ஊழியர்களும் ஆசீர்வாதங்களை அனுபவித்து வந்திருக்கிறார்கள். உதாரணமாக, 1923-ல் “பைபிள்” ப்ரெளண் என்று நன்கு அறியப்பட்டிருந்த வில்லியம் R. ப்ரெளண், மேற்கு ஆப்பிரிக்காவில் பிரசங்க வேலையை முன்நின்றுச் செய்ய மேற்கு இந்திய தீவுகளுக்கு தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றார். அவரோடு அவர் மனைவியும் மகளும் உடன் சென்றனர். அவர் கடைசியாக பிரசங்க வேலை பலனளிக்க ஆரம்பித்திருந்த இடமாகிய நைஜீரியாவுக்கு இடம் மாறிச் சென்றார். வின்சென்ட் சாம்வேல் என்ற பெயர் கொண்ட கருப்பு அமெரிக்க நாட்டவரும் க்ளாட் ப்ரெளண் என்ற பெயர் கொண்ட மற்றொரு மேற்கு இந்திய தீவைச் சேர்ந்த சாட்சியோடும் சேர்ந்து “பைபிள்” ப்ரெளண், மேற்கு ஆப்பிரிக்காவில் ஆரம்பக் கட்டத்தில் முக்கிய பங்கை வகித்தனர்.

இன்று, “பைபிள்” ப்ரெளணும் அவருடைய கூட்டாளிகளும் பயனியர் ஊழியஞ் செய்து திறந்த பிராந்தியங்களாகிய சயரா லியோன், லைபீரியா, கானா மற்றும் நைஜீரியாவில் 1,87,000-க்கும் மேலான பிரஸ்தாபிகள் சேவிக்கிறார்கள். 1967-ல் அவருடைய மரணத்துக்கு முன்னால், பைபிள் ப்ரெளண் இவ்விதமாகச் சொன்னார்: “கடவுளுடைய ராஜ்ய நற்செய்திக்கு ஆண்களும் பெண்களும் கீழ்ப்படிகிறவர்களாவதைக் காண்பது என்னே ஒரு சந்தோஷமாயிருக்கிறது.” ஆம், அவருடைய சுய-தியாக போக்கிற்காக அவர் வெகுவாக ஆசீர்வதிக்கப்பட்டார்.

சுய-தியாகமுள்ளவர்களாக இருக்க வழிகள்

இன்று அதே ஆவியை நாம் காண்பிப்பதற்குரிய சில வழிகள் யாவை? வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஒழுங்காக வாரந்தோறும் பங்குகொள்வது ஒரு வழியாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 20:20) ஒரு வாரம் முழுவதும் உலகப்பிரகாரமான வேலை செய்து களைத்த பின்பு, அவ்விதமாகச் செய்வது எளிதாக இராது. அது கட்டுப்பாட்டையும் நல்ல அட்டவணையையும் உட்படுத்தக்கூடும். ஆனால் சந்தோஷங்கள் சகித்துக் கொள்ளப்படும் எந்த அசெளகரியங்களைக் காட்டிலும் உயர்ந்த மதிப்புள்ளதாய் இருக்கும். ஏன், “மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும், கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்ட . . . கிறிஸ்துவின் நிருபமாக” ஆவதற்கு ஒருவருக்கு உதவிசெய்யும் சிலாக்கியத்தை நீங்கள் பெறக்கூடும்.—2 கொரிந்தியர் 3:3.

ஒருவேளை உலகப்பிரகாரமான வேலையிலிருந்து அல்லது பொழுதுபோக்குகளிலிருந்து கவனமாக “காலத்தை வாங்குவதன்” மூலம் சிலர் பிரசங்க வேலையில் தங்களுடையப் பங்கை அதிகரித்திருக்கின்றனர். (எபேசியர் 5:16) அநேகர் வருடத்துக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது துணைப் பயனியர் சேவையை அனுபவித்துக் களிப்பதற்காக தங்கள் அட்டவணைகளில் திட்டமிடுகிறார்கள். மற்றவர்களால் தொடர்ந்து துணைப் பயனியர் செய்யவும் அல்லது ஒழுங்கான பயனியர்களாக சேவிக்கவும் முடிந்திருக்கிறது. சிந்திப்பதற்குரிய மற்றொரு தியாகம், அதிகமாக ராஜ்ய பிரஸ்தாபிகள் தேவைப்படும் இடங்களுக்கு இடம் மாறிச் செல்வதாகும். இது அநேக சமயங்களில் வாழ்க்கை பாணியில் தீவிர மாற்றங்களையும் அசெளகரியங்களை பொறுத்துக் கொள்வதையும் புதிய கலாச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் அனுசரித்துச் செல்வதையும் தேவைப்படுத்துகிறது. ஆனால் மற்றவர்கள் ஜீவனையடைய உதவி செய்வதில் ஒரு முழுமையான பங்கைக் கொண்டிருப்பதில் கிடைக்கும் ஆசீர்வாதங்கள், இப்படிப்பட்ட தியாகங்களை பயனுள்ளதாகச் செய்கிறது.

கானடாவில் பிறந்த ஜான் கட்ஃபோர்த், இதைத் தனிப்பட்ட விதமாக தெரிந்து கொண்டார். உவாட்ச் டவர் கிலியட் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற பின்பு, ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மிஷனரியாக நியமிக்கப்பட்டார். “வீட்டிலிருந்து அது எத்தனை நீண்ட தூரம்!” என்பதாக சகோதரர் கட்ஃபோர்த் நினைவுபடுத்திச் சொல்கிறார். “அர்மகெதோனுக்கு முன்பு மறுபடியுமாக என் பெற்றோரையும் நண்பர்களையும் காண கானடாவுக்கு நான் திரும்பி வருவேனா? அங்கேச் செல்வதே இதை கண்டுபிடிக்க ஒரே வழியாகும்.” சகோதரர் கட்ஃபோர்த் அங்கு சென்றார். அவர் செய்த தியாகங்களுக்காக அவர் மனஸ்தாபப்படவில்லை. பிற்காலங்களில், அவர் பாப்புவா நியு கின்னியில் சாட்சி வேலையை முன்நின்று நடத்தினார். அங்கே அவர் 50 வருட கால முழு நேர ஊழியத்தை முடித்தவராக இன்னும் வைராக்கியமாக சேவை செய்து வருகிறார். அவர் ஒரு சமயம் சொன்னார்: “எப்போதும் யெகோவாவின் வழிநடத்துதலைப் பின்பற்ற நாடுகிறவராக, உங்களுக்கு கொடுக்க தகுதியுள்ளதாக அவர் கருதும் எந்த ஒரு நியமிப்பையும் ஏற்கிறவராக இருப்பது சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் எண்ணிலடங்கா நண்பர்களையும் கொண்டு வருகிறது.”

நிச்சயமாகவே, உடல்நலம், நிதி நிலைமை மற்றும் குடும்ப உத்தரவாதங்கள் நீங்கள் செய்ய முடிகிறதை கட்டுப்படுத்தக்கூடும்; அனைவருமே பயனியர்களாகவும் மிஷனரிகளாகவும் சேவிக்க முடியாது. இருப்பினும், முடிந்தவரை கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் முழுமையான ஒரு பங்கைக் கொண்டிருக்க தீர்மானமாயிருந்து கடுமையான சீதோஷண நிலை போன்ற சிறிய அசெளகரியங்கள் உங்களைத் தடை செய்ய அனுமதியாதிருங்கள். (எபிரெயர் 10:24, 25) கடவுளுடைய வார்த்தையை தனிப்பட்டவிதமாக படிப்பதற்காக நீங்கள் அதிகமான நேரத்தைக்கூட தியாகம் செய்யக்கூடியவர்களாக இருக்கக்கூடும். ஒரு சில குடும்பங்கள் டிவி நிகழ்ச்சிநிரல்களைப் பார்க்கும் நேரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், ஒருவேளை ஒவ்வொரு வாரமும் “டிவி இல்லா” இரவை அல்லது டிவியையே கொண்டில்லாதிருப்பதன் மூலம் அவ்விதமாகச் செய்கிறார்கள். தனிப்பட்ட படிப்புக்காக நேரத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் “அவருடைய நாமத்தைத் துதிக்கும்” “ஸ்தோத்திரபலி” உயர்தரமான ஒரு பலியாக இருப்பதற்கு அதிக சாத்தியமிருக்கிறது.—எபிரெயர் 13:15.

பிரசங்க வேலை இப்பொழுது அதனுடைய இறுதி கட்டங்களில் இருப்பதை மனதில் வையுங்கள். வெகு சீக்கிரத்தில் கடவுள் இந்த பேராசையும் கட்டுப்பாடற்ற சிற்றின்ப வேட்கையுமுடைய உலகின் மீது தம்முடைய நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருவார். (செப்பனியா 2:3) கடவுளுடைய தயவைக் காத்துக்கொள்ள, நாம் நம்மிடம் கண்டிப்புக்குறைவாக நடந்து கொள்ள முடியாது. நாம் நம்முடைய ‘சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க’ வேண்டும். (ரோமர் 12:1) இப்படிப்பட்ட ஆவி மிகுதியான மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொண்டு வரும். அது நம்முடைய ஊழியத்தில் அதிகமான சந்தோஷத்தை அடைவதற்கு நமக்கு உதவி செய்யும். மேலும் அது யெகோவா தேவனின் இருதயத்தை சந்தோஷப்படுத்தும்!—நீதிமொழிகள் 27:11.

ஆகவே சுய-தியாக ஆவியைக் காத்துக்கொள்ளுங்கள்! மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் ராஜ்ய அக்கறைகளின் ஆதரவாகவும் நீங்கள் அசெளகரியத்திற்குள்ளாக தயங்காதீர்கள். பவுல் அறிவுரை கூறுகிறார்: “நன்மை செய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.”—எபிரெயர் 13:16. (w92 2/1)

[அடிக்குறிப்புகள்]

a பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

[பக்கம் 26-ன் படம்]

தனிப்பட்ட படிப்புக்கும் வெளி ஊழியத்துக்கும் நேரத்தை கண்டுபிடிப்பது தியாகத்தை தேவைப்படுத்தலாம், ஆனால் அது பலனளிக்கிறது

[பக்கம் 28-ன் படம்]

W. R. ப்ரெளண் மற்றும் ஜான் கட்ஃபோர்த் தங்களுடைய சுய-தியாக போக்கிற்காக நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்