நம்முடைய கொடிய காலங்களுக்கு உதவியளிக்கும் போதனை
“கடைசிநாட்களில் [கையாளுவதற்குக் கடினமான, NW] கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.”—2 தீமோத்தேயு 3:1, 13.
1, 2. என்ன போதனைகளைப் பின்பற்றுகிறோம் என்பதில் நாம் ஏன் அக்கறையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
நீங்கள் உதவி செய்யப்படுகிறீர்களா, அல்லது புண்படுத்தப்படுகிறீர்களா? உங்களுடைய பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றனவா, அல்லது அவை மேலும் மோசமாக்கப்படுகின்றனவா? எதனால்? போதனைகளால். ஆம், போதனைகள் நல்ல விதத்திலோ மோசமான விதத்திலோ உங்களுடைய வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்க முடியும்.
2 மூன்று இணை பேராசிரியர்கள் சமீபத்தில் இந்தக் காரியத்தைக் குறித்து ஆராய்ந்து, தங்களுடைய கண்டுபிடிப்புகளை மதத்தைப்பற்றிய அறிவியல்பூர்வ ஆய்வு பத்திரிகையில் (Journal for the Scientific Study of Religion) வெளியிட்டனர். உங்களையோ உங்கள் குடும்பத்தையோ அவர்கள் ஆராய்ந்திருக்கமாட்டார்கள் என்பது மெய்யே. இருப்பினும், நம்முடைய கொடிய காலங்களைச் சமாளிப்பதில், போதனைகளுக்கும் ஓர் ஆளுடைய வெற்றி, அல்லது தோல்விக்கும் இடையில் ஒரு திட்டவட்டமான தொடர்பு இருப்பதாக அவர்களுடைய கண்டுபிடிப்பு காண்பிக்கிறது. அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள் என்பதை நாம் அடுத்தக் கட்டுரையில் கவனிப்போம்.
3, 4. நாம் கொடிய காலங்களில் வாழ்கிறோம் என்பதற்குச் சில அத்தாட்சிகள் யாவை?
3 என்றாலும், முதலில், இந்தக் கேள்வியைக் கவனியுங்கள்: நாம் கையாளுவதற்குக் கடினமான காலங்களில் வாழ்கிறோம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? அப்படியானால், இவை ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களாக’ இருக்கின்றன என்று அத்தாட்சி நிரூபிப்பதை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். (2 தீமோத்தேயு 3:1-5, NW) மக்கள் பாதிக்கப்படுகிற முறை வேறுபடுகிறது. உதாரணமாக, அரசியல் ஆதிக்கத்தைப் பெற வெவ்வேறு உட்கட்சிகள் போராடுவதன் காரணமாக தற்போது பிளவுபட்டிருக்கும் தேசங்களைப்பற்றி நீங்கள் ஒருவேளை அறிந்திருப்பீர்கள். வேறு இடங்களில், மத அல்லது இன வேறுபாடுகளால் கொலை தூண்டப்படுகிறது. தாக்கப்படுபவர்கள் வெறும் படைவீரர்கள் மட்டும் அல்லர். மிருகத்தனமாக நடத்தப்பட்ட எண்ணற்ற பெண்களை, பெண்பிள்ளைகளை அல்லது உணவு, உஷ்ணவசதி, தங்குமிடமின்றி விடப்பட்டிருக்கும் முதியோரை நினைத்துப்பாருங்கள். கணக்கிடப்படாத எண்ணிக்கையானோர் மிக மோசமாகத் துன்பப்படுகின்றனர்; இது சமாளிக்கமுடியாத எண்ணிக்கையில் வரும் அகதிகளுக்கும், அதோடு சம்பந்தப்பட்ட அநேக துயரங்களுக்கும் வழிநடத்துகிறது.
4 நம்முடைய காலங்கள் பொருளாதார பிரச்னைகளாலும் குறிக்கப்பட்டிருக்கின்றன; இவை அடைக்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலையின்மை, இழக்கப்பட்ட நன்மைகள் மற்றும் ஓய்வு ஊதியங்கள், பணத்தின் மதிப்பு அரிக்கப்படுதல், குறைந்தளவு உணவு அல்லது வேளாவேளைக்கு உணவில்லாமை ஆகியவற்றில் விளைவடைகின்றன. அந்தப் பிரச்னைகளின் பட்டியலை உங்களால் நிரப்பிக்கொண்டே செல்ல முடியுமா? ஒருவேளை முடியும். உலகெங்குமுள்ள இன்னும் இலட்சக்கணக்கானோர் உணவு பற்றாக்குறைகளாலும் நோய்களாலும் துன்புறுகின்றனர். கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து எலும்பும் தோலுமாக இருக்கும் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோரைக் காண்பிக்கும் பயங்கரமான புகைப்படங்களை நீங்கள் ஒருவேளை கண்டிருக்கலாம். ஆசியாவில் இலட்சக்கணக்கானோர் அதேவிதமாகவே துன்புறுகின்றனர்.
5, 6. நோயும் நம்முடைய கொடிய காலங்களில் மேலெழும்பி நிற்கும் ஓர் அம்சம் என்று ஏன் சொல்லப்படலாம்?
5 அச்சுறுத்தக்கூடிய நோய்கள் தற்போது அதிகரித்துக்கொண்டே போவதைப்பற்றி நாமெல்லாரும் கேட்டிருக்கிறோம். ஜனவரி 25, 1993-ல், தி நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிட்டது: “கலப்புப் பாலுறவு, மாய்மாலம் மற்றும் தற்செயல் நிகழ்வுகளைத் தடுத்தலின் மத்தியில், லத்தீன் அமெரிக்காவில் எய்ட்ஸ் கொள்ளைநோய் ஐக்கிய மாகாணங்களையும் விஞ்சிவிடும் அளவிற்கு அதிகரிக்கிறது . . . பெண்கள் . . . மத்தியில் அதிகரிக்கிற தொற்றும் விகிதங்களிலிருந்து பெரும்பாலான வளர்ச்சி வருகிறது.” அக்டோபர் 1992-ல், ஐ.மா. செய்தி உலக & அறிக்கை (U.S. News & World Report) கூறியது: “இருபதாண்டுகளுக்கு முன்னரே, ஐ.மா. தலைமை அறுவை சிகிச்சையாளர், என்றுமில்லாத மிகப் பெரிய பொது நல ஆரோக்கிய வெற்றிகளில் ஒன்றைப் புகழுகிறவராய், ‘தொற்று நோய்களைப்பற்றிய புத்தகத்தை மூடுவதற்கு’ சமயம் வந்தது என்று அறிவித்தார்.” இப்போதைய நிலை என்ன? “முறியடிக்கப்பட்டவை என்பதாக எண்ணப்பட்ட கொள்ளை நோய்களுக்குப் பலியானவர்களால் மருத்துவமனைகள் மறுபடியும் நிரம்பிவழிகின்றன. . . . புதிய நுண்ணுயிர்க் கொல்லிகளின் வளர்ச்சியையும் விஞ்சி செல்லக்கூடிய அளவிற்கு நுண்ணுயிர்கள் அதிக திறம்பட்ட மரபியல் சூழ்ச்சி முறைகளைத் தோற்றுவிக்கின்றன. . . . ‘தொற்று நோயின் ஒரு புதிய சகாப்தத்தில் நாம் நுழைகிறோம்.’”
6 ஓர் உதாரணமாக, ஜனவரி 11, 1993, நியூஸ்வீக் அறிக்கையிட்டது: “மலேரியா ஒட்டுண்ணிகள் இப்போது ஒவ்வொரு வருடமும் மதிப்பிடப்பட்ட 27 கோடி மக்களைத் தொற்றி, 20 இலட்சம் பேர் வரையாகக் கொன்று . . . 10 கோடி பேருக்காவது கடுமையான உடல்நலக்கேட்டை உண்டுபண்ணுகின்றன. . . . அதேநேரத்தில், ஒரு காலத்தில் குணமாக்கும் மருந்துகளாக இருந்தவற்றிற்கு, நோய், ஒருபோதும் இல்லாத அதிகளவு எதிர்ப்பாற்றல் உடையதாகிக்கொண்டு வருகிறது. . . . சீக்கிரத்தில், சில வகைகள் குணப்படுத்த முடியாதபடி ஆகலாம்.” இது உங்களைப் பயத்தில் நடுங்க வைக்கிறது.
7. இந்தக் கஷ்டமான காலங்களுக்கு இன்று அநேகர் எப்படிப் பிரதிபலிக்கின்றனர்?
7 கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில், அநேகர் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க உதவியை நோக்கி இருக்கின்றனர் என்பதை நீங்கள் கவனித்திருக்கக்கூடும். அழுத்தத்தை அல்லது ஒரு புதிய நோயைச் சமாளிப்பது பற்றிய புத்தகங்களிடமாகத் திரும்புவோரை எண்ணிப்பாருங்கள். மற்றவர்கள், ஒரு தோல்வியடைகிற திருமணத்தைப்பற்றி, குழந்தை பராமரிப்பைப்பற்றி, மதுபானம் அல்லது போதை மருந்து தொந்தரவுகளைப்பற்றி, அல்லது வேலையின் தேவைகளையும் வீட்டில் உணரும் அழுத்தங்களையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது பற்றி ஆலோசனையைப் பெற நம்பிக்கை இழந்தவர்களாய் இருக்கின்றனர். ஆம், அவர்களுக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது! நீங்கள் ஒரு சொந்த பிரச்னையுடன் போராடிக்கொண்டு அல்லது போர், பஞ்சம், அல்லது பேரழிவால் ஏற்பட்ட சில தொந்தரவுகளை அனுபவித்துக்கொண்டு இருக்கிறீர்களா? அழுத்தந்தரும் ஒரு பிரச்னை தீர்வுகாண்பதற்கு அப்பாற்பட்டதாகத் தோன்றினாலும்கூட, நீங்கள் இவ்வாறு கேட்பதற்குக் காரணம் இருக்கிறது, ‘நாம் ஏன் அத்தகைய ஒரு கொடிய நிலையைச் சென்றடைந்துள்ளோம்?’
8. உட்பார்வைக்கும் வழிநடத்துதலுக்கும் நாம் ஏன் பைபிளிடமாகத் திரும்பவேண்டும்?
8 திறம்பட்ட வகையில் சமாளிக்கவும், இப்போதும் எதிர்காலத்திலும் வாழ்க்கையில் திருப்தியைக் கண்டடைவதற்கும் முன்னர், நாம் ஏன் அப்படிப்பட்ட கொடிய காலங்களை எதிர்ப்படுகிறோம் என்று அறிவது அவசியம். வெளிப்படையாகச் சொன்னால், அது நாம் ஒவ்வொருவரும் பைபிளைக் கவனத்தில் கொள்வதற்கு காரணத்தை அளிக்கிறது. ஏன் பைபிளைச் சுட்டிக் காண்பிக்கிறோம்? ஏனென்றால், அது மட்டுமே நம்முடைய நிலைமைக்குக் காரணங்களையும், நாம் எங்கே இருக்கிறோம், மேலும் நாம் எங்கே போகிறோம் என்பவற்றைக் காண்பிக்கிற திருத்தமான தீர்க்கதரிசனத்தை, நடப்பதற்கு முன்பே எழுதப்பட்ட சரித்திரத்தை கொண்டிருக்கிறது.
வரலாற்றிலிருந்து ஒரு பாடம்
9, 10. மத்தேயு 24-ம் அதிகாரத்திலுள்ள இயேசுவின் தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் எப்படி நிறைவேற்றமடைந்தது?
9 பிப்ரவரி 15, 1994-ன் காவற்கோபுரம், மத்தேயு 24-ம் அதிகாரத்திலுள்ள இயேசுவின் தெளிவான தீர்க்கதரிசனத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வை செய்ததது. நீங்கள் உங்கள் பைபிளை அந்த அதிகாரத்துக்குத் திறந்தால், 3-ம் வசனத்தில், இயேசுவின் அப்போஸ்தலர் அவருடைய எதிர்கால வந்திருத்தல் மற்றும் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கு ஓர் அடையாளத்தைக் கேட்பதை நீங்கள் காண முடியும். பின்னர், 5 முதல் 14 வசனங்களில், கள்ளக் கிறிஸ்துக்கள், போர்கள், உணவு பற்றாக்குறைகள், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தல், அக்கிரமம், மற்றும் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய ஒரு விரிவான பிரசங்கிப்பு ஆகியவற்றை இயேசு முன்னறிவித்தார்.
10 அதே காரியங்கள் யூத காரிய ஒழுங்குமுறையின் முடிவில் சம்பவித்தன என்று வரலாறு நிரூபிக்கிறது. நீங்கள் அப்போது வாழ்ந்திருந்தால், அவை கஷ்டமான காலங்களாக இருந்திருக்காதா? என்றபோதிலும், காரியங்கள் ஓர் உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன; எருசலேம் மற்றும் யூத ஒழுங்குமுறையின்மீது முன்னொருபோதுமில்லாத ஓர் உபத்திரவம். ரோமர் எருசலேமைப் பொ.ச. 66-ல் தாக்கியதும் என்ன நிகழ்ந்தது என்பதை நாம் 15-ம் வசனத்தில் வாசிக்கத் துவங்குகிறோம். 21-ம் வசனத்தில் இயேசுவால் குறிப்பிடப்பட்ட உபத்திரவத்தில்—பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவில், அந்த நகரத்திற்கு எக்காலத்திலும் சம்பவித்திராத மிக மோசமான உபத்திரவத்தில்—அந்தச் சம்பவங்கள் ஓர் உச்சக்கட்டத்தை அடைந்தன. இன்னும், அந்த வரலாறு அதோடு முடிவடையவில்லை என்று உங்களுக்குத் தெரியும், முடிவடையும் என்று இயேசு சொல்லவுமில்லை. 23 முதல் 28-ம் வசனங்களில், பொ.ச. 70-ன் உபத்திரவத்தைப் பின்தொடர்ந்து மற்ற காரியங்கள் சம்பவிக்கும் என்று அவர் காண்பித்தார்.
11. மத்தேயு 24-ம் அதிகாரத்தின் முதல் நூற்றாண்டு நிறைவேற்றம் என்ன வழியில் நம்முடைய நாளுடன் தொடர்புடையதாய் இருக்கிறது?
11 இன்று சிலர் அப்படிப்பட்ட கடந்தகால நிகழ்ச்சிகளை, ‘அதுக்கென்னவாம்?’ என்ற ஒரு கேள்வியோடு அசட்டைசெய்யும் மனச்சாய்வுள்ளவர்களாய் இருக்கக்கூடும். அது தவறானதாக இருக்கும். அப்போதைய தீர்க்கதரிசன நிறைவேற்றம் மிக முக்கியமானது. ஏன்? யூத ஒழுங்குமுறையின் முடிவின்போது இருந்த போர்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளை நோய்கள், துன்புறுத்தல் ஆகியவை ‘புறஜாதிகளுக்காக குறிக்கப்பட்ட காலங்கள்’ 1914-ல் முடிவடைந்தபின் ஒரு பெரிய நிறைவேற்றத்தில் பிரதிபலிக்கப்பட வேண்டியவையாய் இருந்தன. (லூக்கா 21:24) இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் அநேகர், இந்த நவீன நிறைவேற்றம் துவங்கிய முதல் உலகப் போரின் கண்கண்ட சாட்சிகளாக இருந்தனர். ஆனால் நீங்கள் 1914-க்குப் பிறகு பிறந்திருந்தால்கூட, இயேசுவின் தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டு வருவதைக் கண்டிருக்கிறீர்கள். நாம் இந்தத் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவில் வாழ்கிறோம் என்று இந்த 20-ம் நூற்றாண்டின் சம்பவங்கள் மேலோங்கிய அளவில் நிரூபிக்கின்றன.
12. இயேசுவின்படி, நாம் இன்னும் எதைப் பார்க்கும்படி எதிர்நோக்கி இருக்கலாம்?
12 மத்தேயு 24:29-லுள்ள “உபத்திரவம்” நமக்கு முன் இருக்கிறது என்று இது பொருள்படுகிறது. கற்பனைசெய்து பார்க்கமுடியாத பரலோக நிகழ்ச்சிகளை இது உட்படுத்தும். மக்கள் ஒரு வித்தியாசமான அடையாளத்தை—அழிவு அருகாமையில் இருப்பதை நிரூபிக்கும் ஒன்றை—அப்போது காண்பார்கள் என்று 30-ம் வசனம் காண்பிக்கிறது. லூக்கா 21:25-28-லுள்ள இதற்கு ஒத்திருக்கும் பதிவின்படி, அந்த எதிர்காலத்தில், ‘பூமியின்மேல் வரும் காரியங்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷர் சோர்ந்துபோவார்கள்.’ அப்போது கிறிஸ்தவர்கள் தங்களுடைய மீட்பு மிகச் சமீபத்தில் இருப்பதால் தங்கள் தலைகளை உயர்த்துவார்கள் என்றும் லூக்காவின் பதிவு சொல்கிறது.
13. என்ன இரண்டு முக்கிய குறிப்புகள் நம் கவனத்திற்குரியவை?
13 ‘எல்லாம் சரிதான், ஆனால் பிரச்னை என்னவென்று நினைத்தேனென்றால், நம்முடைய கடினமான காலங்களை நான் எப்படிப் புரிந்துகொண்டு, சமாளிக்க முடியும்?’ என்று நீங்கள் ஒருவேளை சொல்வீர்கள். சரியே. நம்முடைய முதல் குறிப்பு என்னவென்றால், முக்கிய பிரச்னைகளை அடையாளங்கண்டு, அவற்றை எப்படித் தவிர்ப்பது என்று பார்ப்பதே. அதோடு தொடர்புடைய இரண்டாவது குறிப்பு, நாம் இப்போது ஒரு நல்ல வாழ்க்கையை அனுபவிப்பதற்கு வேதப்பூர்வ போதனைகள் நமக்கு எப்படி உதவக்கூடும் என்பதாகும். இதன் சம்பந்தமாக, உங்கள் பைபிளை 2 தீமோத்தேயு 3-ம் அதிகாரத்துக்குத் திறந்து, இந்தக் கடினமான காலங்களைக் கையாளுவதற்கு அப்போஸ்தலன் பவுலுடைய வார்த்தைகள் எப்படி உதவக்கூடும் என்று பாருங்கள்.
நம்முடைய காலங்களைப்பற்றிய ஒரு தீர்க்கதரிசனம்
14. 2 தீமோத்தேயு 3:1-5-ஐ கலந்தாராய்வது நமக்குப் பயனளிக்கலாம் என்று நம்புவதற்கு என்ன காரணம் இருக்கிறது?
14 அதிக வெற்றிகரமான, மகிழ்ச்சியுள்ள வாழ்க்கையை வாழ தீமோத்தேயுவுக்கு உதவிய நல்ல அறிவுரையை பவுல் உண்மைத்தவறாத கிறிஸ்தவனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதும்படி கடவுள் ஏவினார். பவுல் எழுதியதன் ஒரு பகுதி நம்முடைய நாளில் முக்கியமான பொருத்தத்தைக் கொண்டிருக்கிறது. அவற்றை நன்கு அறிந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தாலும், 2 தீமோத்தேயு 3:1-5-லுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை இப்போது கூர்ந்து கவனியுங்கள். பவுல் எழுதினார்: “மேலும், கடைசிநாட்களில் [கையாளுவதற்குக் கடினமான, NW] கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.”
15. 2 தீமோத்தேயு 3:1 நமக்கு ஏன் இப்போது விசேஷித்த அக்கறைக்குரியதாக இருக்கவேண்டும்?
15 அங்கு 19 காரியங்கள் பட்டியலிடப்பட்டிருந்ததைத் தயவுசெய்து கவனியுங்கள். இவற்றை நாம் ஆராய்ந்து, பயனடையும் நிலைக்கு வருமுன், அதைப்பற்றிய மொத்தமான ஒரு கருத்தைப் பெறுவோம். 1-ம் வசனத்தைப் பாருங்கள். பவுல் முன்னறிவித்தார்: “கடைசிநாட்களில் [கையாளுவதற்குக் கடினமான, NW] கொடிய காலங்கள் வரும்.” எந்தக் “கடைசிநாட்கள்”? பண்டைய பாம்பீயின் கடைசி நாட்கள் அல்லது ஓர் அரசன் அல்லது ஓர் ஆளும் குடும்பத்தின் கடைசி நாட்கள் என்பது போன்ற அநேக கடைசி நாட்கள் இருந்திருக்கின்றன. யூத ஒழுங்குமுறையின் கடைசி நாட்களைப்போல பைபிள்கூட பல கடைசி நாட்களைப்பற்றி குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 2:16, 17) இருந்தாலும், பவுல் குறிப்பிட்ட ‘கடைசி நாட்கள்’ நம்முடைய காலத்தைக் குறிப்பவையாய் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள இயேசு அடிப்படையைக் கொடுத்தார்.
16. கோதுமையும் களைகளும் பற்றிய உவமை நம்முடைய காலத்தைக் குறித்து என்ன நிலைமையை முன்னறிவித்தது?
16 கோதுமையும் களைகளும் பற்றிய உவமையில் இயேசு அவ்வாறு செய்தார். இவை ஒரு நிலத்தில் விதைக்கப்பட்டு வளரும்படி விடப்பட்டன. கோதுமையும் களைகளும் மக்களை—உண்மைக் கிறிஸ்தவர்களையும் பொய்யானவர்களையும்—குறிப்பதாக அவர் சொன்னார். இந்த முழு பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவிற்குமுன் ஒரு நீண்ட காலப்பகுதி கடந்துசெல்லும் என்பதை இந்த உவமை உறுதிப்படுத்துவதால் இதை இங்குக் குறிப்பிடுகிறோம். அது வந்தபோது, ஏதோவொன்று முழுமையாக மலர்ந்திருக்கும். எது? விசுவாசத்துரோகம், அல்லது உண்மை கிறிஸ்தவத்திலிருந்து விலகிச்செல்லுதல்; இது துன்மார்க்கத்தின் ஓர் அமோக விளைச்சலில் விளைவடைகிறது. இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் இது நிகழும் என்று பைபிளின் மற்ற தீர்க்கதரிசனங்கள் உறுதியளிக்கின்றன. அங்குத்தான், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில் நாம் இருக்கிறோம்.—மத்தேயு 13:24-30, 36-43.
17. இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைப்பற்றி 2 தீமோத்தேயு 3:1-5 என்ன ஒத்த குறிப்பை அளிக்கிறது?
17 முக்கியத்துவத்தைக் காண்கிறீர்களா? இந்த ஒழுங்குமுறையின் முடிவில், அல்லது கடைசி நாட்களில், கிறிஸ்தவர்களைச் சூழ்ந்துள்ள கனிகள் கெட்டதாக இருக்கும் என்று ஓர் ஒத்தக் குறிப்பை இரண்டு தீமோத்தேயு 3:1-5 கொடுக்கிறது. கடைசி நாட்கள் வந்துவிட்டதை நிரூபிப்பதற்கு, பட்டியலிடப்பட்ட 19 காரியங்களே முக்கியமான வழி என்பதாக பவுல் சொல்லிக்கொண்டில்லை. மாறாக, கடைசி நாட்களில் நாம் எவற்றை எதிர்ப்பட வேண்டியதிருக்கும் என்பதைக்குறித்து அவர் எச்சரித்துக்கொண்டிருந்தார். 1-ம் வசனம் “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள்” பற்றி பேசுகிறது. அந்தக் கூற்று கிரேக்கிலிருந்து வந்தது; அது சொல்லர்த்தமாக “பயங்கரமான நியமிக்கப்பட்ட காலங்கள்” (கிங்டம் இன்டர்லீனியர்) என்று பொருள்படும். “பயங்கரமான” என்பது சரியாகவே நாம் இன்று எதிர்ப்படுவதை விவரிக்கிறது என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? இந்த ஏவப்பட்டெழுதப்பட்ட பகுதி தொடர்ந்து நம்முடைய காலத்தைக்குறித்து தெய்வீக உட்பார்வையை அளிக்கிறது.
18. பவுலின் தீர்க்கதரிசன வார்த்தைகளைப் படிக்கும்போது நாம் எதில் கவனத்தை ஒருமுகப்படுத்தவேண்டும்?
18 இந்தத் தீர்க்கதரிசனத்திலுள்ள நம்முடைய அக்கறை, நம்முடைய காலப்பகுதி எவ்வளவு கொடியதாக, அல்லது பயங்கரமானதாக இருக்கிறது என்பதற்கான துயரகரமான உதாரணங்களை அடையாளங்காண அனுமதிக்கவேண்டும். நம்முடைய இரண்டு முக்கிய குறிப்புகளை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: (1) நம்முடைய காலங்களைக் கடினமாக்கும் பிரச்னைகளை அடையாளங்கண்டு அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்று காண்பது; (2) உண்மையில் நடைமுறையான, மேலும் நாம் நல்ல வாழ்க்கையை அனுபவிப்பதற்கு உதவக்கூடிய போதனைகளைப் பின்பற்றுதல் ஆகியவை. ஆகவே, நாம் எதிரிடையானவற்றை அழுத்திக் காண்பிப்பதற்கு மாறாக கையாளுவதற்குக் கடினமான இந்தக் காலங்களில் நமக்கும் நம் குடும்பங்களுக்கும் உதவக்கூடிய போதனைகளின்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவோமாக.
செழுமையான பலன்களை அறுவடை செய்யுங்கள்
19. மனிதர்கள் தற்பிரியர்களாய் இருக்கிறார்கள் என்பதற்கு நீங்கள் என்ன அத்தாட்சியைக் கண்டிருக்கிறீர்கள்?
19 கடைசி நாட்களில், ‘மனுஷர்கள் தற்பிரியராய் இருப்பார்கள்’ என்று பவுல் முன்னறிவிப்பதன்மூலம் தன்னுடைய பட்டியலைத் துவங்குகிறார். (2 தீமோத்தேயு 3:2) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? வரலாறு முழுவதிலும், தற்பெருமையுள்ள, தங்களையே சேவிக்கும் ஆண்களும் பெண்களும் இருந்திருக்கின்றனர் என்று சொல்வது சரியாக இருக்கும். இருப்பினும், இந்தக் குறை வழக்கத்துக்கு மாறான முறையில் இன்று பொதுவானதாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அநேகரில் இது மட்டுக்குமீறிய வகையில் இருக்கிறது. அரசியல் மற்றும் வியாபார உலகில் அதுவே ஏறக்குறைய நியதியாக இருக்கிறது. விளைவு என்னவாயிருந்தாலும் ஆண்களும் பெண்களும் அதிகாரத்தையும் புகழையும் நாடுகின்றனர். பொதுவாக அது மற்றவர்களுக்கு விளைவு என்னவாயிருந்தாலும், காரணம், அப்படிப்பட்ட தற்பிரியர்கள், தாங்கள் மற்றவர்களுக்கு எப்படித் தீங்கு செய்கின்றனர் என்பதைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க அல்லது ஏமாற்ற உடனடியாகச் செயல்படுகின்றனர். ஏன் அநேகர் இதை “நான் என்ற சந்ததி” என்று அழைக்கின்றனர் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. எளிதில் உணர்ச்சி கொள்பவர்களும் தற்பெருமையுள்ளவர்களும் மிகுந்து காணப்படுகிறார்கள்.
20. தன்னையே அன்புகூரும் பரவலான மனநிலைக்கு பைபிள்பூர்வ ஆலோசனை எப்படி வேறுபடுகிறது?
20 ‘தற்பிரியரான’ மக்களுடன் செயல்தொடர்புகொள்வதில் நமக்கிருந்த கசப்பான அனுபவங்களால் நாம் நினைவுபடுத்தப்படவேண்டிய அவசியமில்லை. என்றாலும், நேர்மையாக இந்தப் பிரச்னையை அடையாளங்காட்டுவதன்மூலம், இந்தக் கண்ணியை எப்படித் தவிர்ப்பது என்று போதிப்பதால் பைபிள் நமக்கு உதவுகிறது என்பது உண்மை. அது இவ்வாறே சொல்லுகிறது: “தன்னல குறிக்கோளுடன் அல்லது வீண்பெருமையடிக்கவேண்டும் என்ற ஒரு கீழ்த்தரமான ஆசையுடன் எதையும் செய்யாதிருங்கள்; ஆனால் எப்போதும் மற்றவர்களை உங்களைவிட மேம்பட்டவர்களாகக் கருதி ஒருவரோடொருவர் மனத்தாழ்மையாக இருங்கள். மேலும் உங்களுடையவை மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய அக்கறைகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்.” “நீங்கள் உங்களைக்குறித்து எண்ணவேண்டியதைவிட அதிக உயர்வாக எண்ணாதிருங்கள். பதிலாக, உங்களுடைய சிந்தனையில் அடக்கமுள்ளவர்களாய் இருங்கள்.” அந்தச் சிறந்த ஆலோசனை டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்-படி பிலிப்பியர் 2:3, 4 மற்றும் ரோமர் 12:3-ல் காணப்படுகிறது.
21, 22. (அ) அப்படிப்பட்ட ஆலோசனை இன்றும் உதவியாக நிரூபிக்கலாம் என்பதற்கு என்ன பரந்த அத்தாட்சி இருக்கிறது? (ஆ) சாதாரண தனி நபர்களின்மீது கடவுளுடைய ஆலோசனை என்ன பலனை உடையதாய் இருந்தது?
21 ‘அது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, ஆனால் நடைமுறையானது அல்ல’ என்று யாராவது ஒருவர் எதிர்க்கலாம். ஆம், அது நடைமுறையானது. அது வெற்றிகரமானதாக இருக்கும், மேலும் சாதாரண மனிதரில் இன்று வெற்றிகரமடைகிறது. ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்திற்காகப் பிரசுரிப்பவர் 1990-ல் சமயப்பிரிவுணர்ச்சியின் சமுதாயக் கோணங்கள் (The Social Dimensions of Sectarianism) என்ற பிரசுரத்தை அச்சிட்டார். அதிகாரம் 8, “ஒரு கத்தோலிக்க நாட்டில் யெகோவாவின் சாட்சிகள்” என்ற தலைப்பைக் கொண்டிருந்து, பெல்ஜியத்தில் ஓர் ஆய்வை விவரித்தது. நாம் வாசிக்கிறோம்: “‘சத்தியத்தை’ பற்றிய கவர்ச்சியைத் தவிர, ஒரு சாட்சியாவதற்கான உடன்பாடான கவர்ச்சிக்குக் கவனம் செலுத்துகையில், பதிலளிப்பவர்கள் அநேகர் திரும்பவும் ஒன்றிற்கும் மேற்பட்ட அம்சங்களைக் குறிப்பிட்டனர். . . . அனலான தன்மை, சிநேகப்பான்மை, அன்பு, மற்றும் ஒற்றுமை ஆகியவை பெரும்பாலும் சொல்லப்பட்ட தன்மைகள், ஆனால் நேர்மையும், ‘பைபிள் நியமங்களைச் செயல்படுத்துவதில்’ தனிப்பட்ட நடத்தையும், சாட்சிகளால் அருமையாக நேசிக்கப்பட்ட குணங்களாகும்.”
22 மேற்கண்ட விளக்கத்தை ஓர் அகல-கோண ஆடியால் எடுக்கப்பட்ட ஒரு படத்துடன் ஒப்பிடலாம். அதற்குப் பதிலாக ஓர் அணுக்க நிரலீட்டுக் கண்ணாடி (zoom lens), அல்லது தொலை புகைப்பட ஆடியைப் பயன்படுத்தினால், மிக அருகாமையிலிருந்து எடுக்கப்பட்ட பெரிய காட்சிகளையும், அநேக நிஜ-வாழ்க்கை அனுபவங்களையும் பார்க்க முடியும். இவை ஆணவமுள்ள, அடக்கியாளுகிற, அல்லது வெளிப்படையாகவே தன்னலமாக முன்பு இருந்த, ஆனால் இப்போது அதிக சாந்தமுள்ளவர்களாகி, அதிக கனிவான பாசத்தையும் இரக்கத்தையும் தங்கள் துணைவர்களிடமும் பிள்ளைகளிடமும் மற்றவர்களிடமும் காண்பிக்கும் கணவர்களாகவும் தகப்பன்களாகவும் மாறியிருக்கும் ஆண்களை உள்ளடக்கும். அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாக அல்லது பரிவிரக்கமற்றவர்களாக முன்பு இருந்து, இப்போது உண்மை கிறிஸ்தவ வழியை மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவும் பெண்களையும் இது உள்ளடக்கும். இலட்சக்கணக்கான அத்தகைய உதாரணங்கள் இருக்கின்றன. இப்போது, தயவுசெய்து நேர்மையாகச் சிந்தியுங்கள். முதன்மையாக தங்களையே நேசிக்கும் ஆண்களையும் பெண்களையும் எப்போதும் எதிர்ப்படுவதைவிட அத்தகைய மக்கள் மத்தியில் இருப்பதை நீங்கள் மிக நல்லதாக உணரமாட்டீர்களா? அது நம்முடைய கொடிய காலங்களைச் சமாளிப்பதை எளிதாக்கிவிடாதா? ஆகவே அப்படிப்பட்ட பைபிள் போதனைகளைப் பின்பற்றுதல் உங்களை அதிக மகிழ்ச்சி அடையச் செய்யாதா?
23. 2 தீமோத்தேயு 3:2-5-க்கு மேலுமான கவனம் செலுத்துவது ஏன் பிரயோஜனமுள்ளதாக இருக்கும்?
23 என்றாலும், நாம் 2 தீமோத்தேயு 3:2-5-ல் பதிவுசெய்யப்பட்ட பவுலின் பட்டியலில் முதல் காரியத்தை மட்டுமே கவனித்திருக்கிறோம். மற்றவற்றைப்பற்றி என்ன? அவற்றைக் கவனமாக ஆராய்வது, நம்முடைய காலத்தின் அடிப்படை பிரச்னைகளைத் தவிர்க்கும்படியும், எந்த வழி உங்களுக்கும் உங்களுடைய அன்பானவர்களுக்கும் அதிக மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதைப் புரிந்துகொள்ளும்படியும் அவற்றை அடையாளங்காண உங்களுக்கு உதவுமா? அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் ஒரு செழுமையான ஆசீர்வாதத்தைப் பெறவும் அடுத்த கட்டுரை உங்களுக்கு உதவும்.
நினைவுபடுத்தவேண்டிய குறிப்புகள்
◻ நாம் கொடிய காலங்களில் வாழ்கிறோம் என்பதற்குச் சில அத்தாட்சிகள் யாவை?
◻ நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்று ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?
◻ 2 தீமோத்தேயு 3:1-5-ஐ பற்றிய ஒரு படிப்பிலிருந்து என்ன இரண்டு முக்கிய குறிப்புகளை நாம் பெறமுடியும்?
◻ அத்தனை அநேகம்பேர் தற்பிரியராக இருக்கும் இந்தக் காலத்தில், பைபிள் போதனைகள் எப்படி யெகோவாவின் மக்களுக்கு உதவியிருக்கின்றன?