அனுதாபம் காட்டுங்கள்
பிரச்சினைக்கு ஆணிவேர்
மற்றவர்கள் நம்மிடமிருந்து எந்தெந்த விதங்களில் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதையே பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தால், அந்த வித்தியாசங்கள் எல்லாம் குறைகளாகத்தான் தெரியும். அதனால், அவர்களை நாம் மட்டமாகப் பார்க்க ஆரம்பித்துவிடுவோம். இப்படிப்பட்ட எண்ணம் நம் மனதில் துளிர்விட ஆரம்பித்தால் மற்றவர்கள்மேல் அனுதாபம் காட்டுவது நமக்குக் கஷ்டமாகிவிடும். அப்படியென்றால், இதற்குக் காரணம், பாகுபாடு என்ற எண்ணம் நம் மனதில் ஆழமாக வேர்விட்டிருப்பதுதான்.
பைபிள் ஆலோசனை
“சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள். அழுகிறவர்களோடு அழுங்கள்.”—ரோமர் 12:15.
இதன் அர்த்தம் என்ன? அனுதாபம் காட்ட வேண்டும் என்பதைத்தான் இந்த வசனம் நமக்குக் கற்றுத்தருகிறது. மற்றவர்களின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்பதையும் அவர்களுடைய உணர்வுகளை நம் இதயத்தில் உணர்வதையும் இது அர்த்தப்படுத்துகிறது.
ஏன் அனுதாபம் காட்ட வேண்டும்?
ஒருவர்மேல் அனுதாபம் காட்டும்போது, எந்தெந்த விஷயங்களில் அவரும் நம்மைப் போல இருக்கிறார் என்பது நமக்குத் தெரியவரும். அதாவது, நம்மைப் போலவே அவரும் உணர்வதை... நம்மைப் போலவே அவரும் நடந்துகொள்வதை... புரிந்துகொள்வோம். மற்றவர்கள்மேல் நாம் அனுதாபம் காட்டும்போது, அவர்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எல்லாரையுமே ஒரே குடும்பமாகப் பார்ப்போம். எந்தெந்த விஷயங்களில் நாம் மற்றவர்களோடு ஒத்துப்போகிறோம் என்பதைப் பார்க்க முயற்சி செய்தால், அவர்களைத் தவறாக எடைபோட மாட்டோம்.
அனுதாபம் காட்டும்போது மற்றவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துவோம். செனிகல் நாட்டில் இருக்கிற ஆன் மேரி என்பவர் ஒருசமயம், தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று மக்கள் நினைத்த ஒரு பிரிவினரைத் தரக்குறைவாகப் பார்த்தார். அனுதாபம் காட்டுவது அவருக்கு எப்படி உதவியது என்று அவரே சொல்கிறார்: “தாழ்ந்த ஜாதிய சேந்தவங்க படுற கஷ்டங்கள பாத்தப்போ, அவங்க இடத்துல நான் இருந்தா எனக்கு எப்படி இருக்கும்னு என்னையே கேட்டுக்கிட்டேன். இது, மத்தவங்களவிட நான் எந்தவிதத்துலயும் உயர்ந்தவ இல்லங்கிறத புரியவெச்சுது. அதுமட்டுல்ல, உயர்ந்த அந்தஸ்துல நான் இருக்குறதா நினைச்சதெல்லாம் நானா சம்பாதிச்சது இல்லங்கிறதயும் புரியவெச்சுது.” மற்றவர்களுடைய கஷ்டத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தால் அவர்களிடம் தரக்குறைவாகப் பேசமாட்டோம். அதற்குப் பதிலாக அவர்களுக்கு அனுதாபம் காட்டுவோம்.
நீங்கள் என்ன செய்யலாம்?
ஒரு பிரிவினரைப் பற்றி உங்களுக்குத் தவறான அபிப்பிராயம் இருக்கிறதென்றால், உங்களுக்கும் அவர்களுக்கும் ஒத்துப்போகிற விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உதாரணத்துக்கு, இந்த விஷயங்களில் அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்று யோசித்துப்பாருங்கள்:
நாம் அனுதாபம் காட்டும்போது, எல்லாரையும் ஒரே குடும்பமாகப் பார்ப்போம்
குடும்பமாக ஒன்றுசேர்ந்து சாப்பிடும்போது...
நாள் முழுக்க கஷ்டப்பட்டு வேலையைச் செய்து முடித்த பிறகு...
நண்பர்களோடு நேரம் செலவிடும்போது...
பிடித்தமான பாடல்களைக் கேட்கும்போது...
அடுத்ததாக, அவர்களுடைய சூழ்நிலையில் உங்களை வைத்துப்பார்க்க முயற்சி செய்யுங்கள். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
‘நான் எதுக்குமே லாயக்கில்லாத மாதிரி யாராவது என்னை உணர வெச்சா எனக்கு எப்படியிருக்கும்?’
‘என்கிட்ட பழகுறதுக்கு முன்னாலேயே மத்தவங்க என்னைபத்தி அவங்களாவே ஒரு முடிவுக்கு வந்தா எனக்கு எப்படியிருக்கும்?’
‘நான் எந்த ஆட்கள தாழ்வா பாக்குறேனோ அவங்கள்ல ஒருத்தரா நான் இருந்தா மத்தவங்க என்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு விரும்புவேன்?’