“எல்லாரோடும் சமாதானமாகுங்கள்”
“கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாகுங்கள்.” —ரோ. 12:18.
1, 2. (அ) தம்முடைய சீடர்களுக்கு இயேசு என்ன எச்சரிக்கை கொடுத்தார்? (ஆ) எதிர்ப்பைச் சந்திக்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனையை நாம் எங்கே காணலாம்?
தம்முடைய சீடர்கள் இந்த உலகத்தின் வெறுப்பைச் சம்பாதிப்பார்களென்று இயேசு முன்கூட்டியே எச்சரித்தார். அதற்கான காரணத்தை அவர் இறப்பதற்கு முந்தின இரவு அப்போஸ்தலரிடம் விளக்கினார். அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், அதற்குச் சொந்தமான உங்களை இந்த உலகம் நேசித்திருக்கும். ஆனால், நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லாததாலும், நான் இந்த உலகத்திலிருந்து உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாலும் உலகம் உங்களை வெறுக்கிறது.”—யோவா. 15:19.
2 இயேசு சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அப்போஸ்தலன் பவுல் அனுபவப்பூர்வமாகக் கண்டார். தனது தோழனாகிய இளம் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் அவர் இவ்வாறு சொன்னார்: “நீயோ என் போதனையையும், வாழ்க்கைப் பாணியையும், குறிக்கோளையும், விசுவாசத்தையும், நீடிய பொறுமையையும், அன்பையும், சகிப்புத்தன்மையையும் கூர்ந்து கவனித்திருக்கிறாய்; எனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களையும், பாடுகளையும் . . . நன்கு அறிந்திருக்கிறாய்.” பவுல் இதையும் குறிப்பிட்டார்: “உண்மையில், கிறிஸ்து இயேசுவின் சீடர்களாகத் தேவபக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்.” (2 தீ. 3:10-12) எதிர்ப்பைச் சந்திக்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய ஞானமான ஆலோசனையை ரோமக் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தின் 12-ஆம் அதிகாரத்தில் பவுல் கொடுத்தார். முடிவுகாலத்தில் வாழ்கிற நமக்கும் அவருடைய வார்த்தைகள் வழிகாட்டுகின்றன.
“நன்மையான செயல்களைச் செய்யுங்கள்”
3, 4. ரோமர் 12:17-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையை, (அ) மத ரீதியில் பிளவுபட்ட குடும்பத்தில் எப்படிப் பின்பற்றலாம்? (ஆ) அக்கம்பக்கத்தாரிடம் எப்படிப் பின்பற்றலாம்?
3 ரோமர் 12:17-ஐ வாசியுங்கள். ஒருவர் நம்மைப் பகைத்தால் பதிலுக்கு நாம் அவரைப் பகைக்கக் கூடாதென்று பவுல் அறிவுறுத்தினார். இந்த அறிவுரையை, முக்கியமாக மத ரீதியில் பிளவுபட்டிருக்கிற குடும்பத்தார் கடைப்பிடிக்க வேண்டும். சத்தியத்தில் இல்லாத ஒருவர் சத்தியத்திலுள்ள தன் துணையை அன்பற்ற விதத்தில் நடத்தும்போது, சத்தியத்திலுள்ள துணை அவருக்குப் பதிலடி கொடுக்க மாட்டார். ஏனென்றால், ‘தீமைக்குத் தீமை செய்வதில்’ எந்தப் பிரயோஜனமும் இல்லை; அது சூழ்நிலையை இன்னும் மோசமாகவே ஆக்கும்.
4 பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு சிறந்த வழியை பவுல் சிபாரிசு செய்கிறார்: “எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் நன்மையான செயல்களைச் செய்யுங்கள்.” குடும்பத்தில், மனைவியின் மத நம்பிக்கைகளைக் குறித்துக் கணவர் சூடான வார்த்தைகளை அள்ளிவீசும்போது மனைவி கனிவாக நடந்துகொண்டால், எரிமலையாக வெடிக்கவிருந்த பிரச்சினை பனிக்கட்டியாக உருகிவிடலாம். (நீதி. 31:12) பெத்தேலில் சேவை செய்கிற கார்லோஸ் என்ற சகோதரர் சத்தியத்தில் இல்லாத தன் அப்பாவிடம் தன் அம்மா கனிவாக நடந்துகொண்டதாலும், வீட்டைச் சுத்தமாகப் பராமரித்ததாலும், தன் அப்பாவின் கடுமையான எதிர்ப்பைச் சமாளிக்க முடிந்ததாகக் குறிப்பிடுகிறார். “அப்பாவிடம் நாங்கள் எப்போதும் மரியாதையோடு நடந்துகொள்ளும்படி அம்மா சொல்வார். அப்பாவோடு பூல் ஆட்டம் (பிரான்ஸ் நாட்டு விளையாட்டு) விளையாடும்படி சொல்வார். அதில் எனக்கு அந்தளவு ஆர்வம் இல்லாதிருந்தபோதிலும் என்னை அவரோடு சேர்ந்து விளையாடும்படி சொல்வார். இதனால் அப்பா குஷியாகிவிடுவார்” என்று கார்லோஸ் கூறுகிறார். காலப்போக்கில் அவருடைய அப்பா பைபிளைப் படிக்க ஆரம்பித்து, பின்னர் ஞானஸ்நானமும் பெற்றார். “எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் நன்மையான செயல்களைச் செய்யுங்கள்” என்ற அறிவுரையை அக்கம்பக்கத்தாரிடமும் யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகிறார்கள்; பேரழிவால் பாதிக்கப்பட்ட அக்கம்பக்கத்தாருக்கு நடைமுறையான உதவிகளைச் செய்திருக்கிறார்கள்; இப்படிச் செய்வதன் மூலம் தங்கள் மீதுள்ள தப்பெண்ணத்தைத் தவிடுபொடியாக்கியிருக்கிறார்கள்.
‘நெருப்புத் தணலால்’ வெறுப்பைத் தணியுங்கள்
5, 6. (அ) எந்த அர்த்தத்தில் எதிரியின் தலையில் ‘நெருப்புத் தணலை’ குவிக்கலாம்? (ஆ) ரோமர் 12:20-ல் உள்ள அறிவுரையைப் பின்பற்றியதால் நல்ல பலன் கிடைத்தது பற்றிய ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
5 ரோமர் 12:20-ஐ வாசியுங்கள். பவுல் இந்த வசனத்திலுள்ள வார்த்தைகளைச் சொன்னபோது நீதிமொழிகள் 25:21, 22-ல் காணப்படுகிற பின்வரும் வார்த்தைகளே அவருடைய மனதில் இருந்திருக்க வேண்டும்: ‘உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; யெகோவா உனக்குப் பலனளிப்பார்.’ நம்மை எதிர்ப்பவருடைய தலையின்மேல் அடையாள அர்த்தத்தில் தணல்களைக் குவிக்கும்படி பவுல் ரோமர் 12-ஆம் அதிகாரத்தில் சொன்னபோது, எதிரியைப் பழிவாங்குவதை அல்லது அவமானப்படுத்துவதை அர்த்தப்படுத்தவில்லை. அந்த நீதிமொழியிலுள்ள வார்த்தைகளும் சரி ரோமக் கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய வார்த்தைகளும் சரி, தாதுப்பொருள்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்காகப் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு முறையையே குறிப்பதுபோல் தெரிகிறது. 19-ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அறிஞரான சார்லஸ் பிரைஜஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடினமான உலோகத்தின் கீழே நெருப்பு மூட்டப்பட்டது, அந்த உலோகத்தின் மேலேயும் நெருப்புத் தணல்கள் வைக்கப்பட்டன; இப்படியாக, மேலிருந்தும் கீழிருந்தும் வந்த வெப்பத்தினால் உலோகம் உருகியது. அப்படியென்றால், பொறுமை காக்கிற, தியாகம் செய்கிற, ஜுவாலித்து எரிகிற அன்பெனும் வெப்பத்தினால் எந்த நெஞ்சம்தான் உருகாது?”
6 ஆம், “நெருப்புத் தணல்” போன்ற அன்பான செயல்கள், உலோகம்போல் கடினமாக இருக்கிற பகைவர்களின் நெஞ்சங்களை உருக்கிவிடும்; பகைமை நிறைந்த அவர்களுடைய மனோபாவத்தை அடியோடு மாற்றிவிடும். அதோடு, யெகோவாவின் மக்கள்மீதும் அவர்கள் அறிவிக்கிற பைபிள் செய்திமீதும் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “உலகத்தார் மத்தியில் எப்போதும் நன்னடத்தை உள்ளவர்களாக இருங்கள்; அவர்கள் உங்களைத் தீயவர்கள் என்று சொன்னாலும், உங்களுடைய நற்செயல்களைக் கண்ணாரக் கண்டு, கடவுள் பரீட்சிக்கிற நாளில் அவரை மகிமைப்படுத்துவார்கள்.”—1 பே. 2:12.
“எல்லாரோடும் சமாதானமாகுங்கள்”
7. கிறிஸ்து தம் சீடர்களுக்குத் தருகிற சமாதானம் எதைக் குறிக்கிறது, அது நம்மை என்ன செய்யத் தூண்ட வேண்டும்?
7 ரோமர் 12:18-ஐ வாசியுங்கள். தம் அப்போஸ்தலர்களோடு கழித்த கடைசி இரவின்போது இயேசு அவர்களிடம், “உங்களுக்குச் சமாதானத்தைத் தந்துவிட்டுப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குத் தருகிறேன்” என்று சொன்னார். (யோவா. 14:27) கிறிஸ்து தம் சீடர்களுக்குத் தருகிற சமாதானம் எதைக் குறிக்கிறது? யெகோவாவும் அவருடைய நேச மகனும் நம்மீது அன்பு வைத்து நம்மை அங்கீகரிக்கிறார்கள் என்று அறியும்போது கிடைக்கிற மன சமாதானத்தைக் குறிக்கிறது. இந்த மன சமாதானம், மற்றவர்களோடு சமாதானமாவதற்கு நம்மைத் தூண்ட வேண்டும். உண்மைக் கிறிஸ்தவர்கள் சமாதானத்தை விரும்புகிறவர்களாக, சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கிறார்கள்.—மத். 5:9.
8. குடும்பத்திலும் சபையிலும் நாம் எவ்வாறு சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருக்கலாம்?
8 குடும்பத்தில் சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருப்பதற்கு ஒரு வழி, குடும்பத்தார் மத்தியில் ஏற்படும் சண்டை சச்சரவுகளைப் பெரிதுபடுத்தாமல் அவற்றை உடனுக்குடன் தீர்ப்பதாகும். (நீதி. 15:18; எபே. 4:26) கிறிஸ்தவ சபையிலும் இதுவே சிறந்த வழியாகும். சமாதானத்தை நாடுவதையும் நாவை அடக்குவதையும் அப்போஸ்தலன் பேதுரு ஒன்றோடொன்று சம்பந்தப்படுத்திப் பேசுகிறார். (1 பே. 3:10, 11) யாக்கோபும்கூட, நாவைச் சரியாகப் பயன்படுத்துவது பற்றியும் பொறாமையையும் சண்டையையும் தவிர்ப்பது பற்றியும் கண்டிப்பான அறிவுரையைக் கொடுத்தார்; பிறகு இவ்வாறு எழுதினார்: “பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாகவும், பின்பு சமாதானம் பண்ணுவதாகவும், நியாயமானதாகவும், கீழ்ப்படியத் தயாரானதாகவும், இரக்கமும் நற்செயல்களும் நிறைந்ததாகவும், பாரபட்சமற்றதாகவும், வெளிவேஷமற்றதாகவும் இருக்கிறது. சமாதானம் பண்ணுகிறவர்கள் சமாதானச் சூழலில் நீதியின் விதையை விதைத்து, அதன் கனியை அறுவடை செய்வார்கள்.”—யாக். 3:17, 18.
9. ‘எல்லாரோடும் சமாதானமாவதற்கு’ முயற்சி செய்கிற அதே சமயத்தில் வேறு எதையும் மனதில் கொள்ள வேண்டும்?
9 ரோமர் 12:18-ல் பவுல் சொன்ன கூற்று, குடும்பத்தாரோடும் சபையாரோடும் மட்டுமே நாம் சமாதானமாகிறவர்களாய் இருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. நாம் ‘எல்லாரோடும் சமாதானமாக’ வேண்டுமென்று அவர் சொல்கிறார். பக்கத்து வீட்டுக்காரர்கள், சக பணியாளர்கள், சக மாணவர்கள், வெளி ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஆட்கள் என எல்லாரையுமே இது உட்படுத்துகிறது. அதே சமயத்தில் இந்த அறிவுரையை அளிப்பதற்குமுன், “கூடுமானால், உங்களால் முடிந்தவரை” என்றும் அவர் சொல்கிறார். ஆகவே, ‘எல்லாரோடும் சமாதானமாவதற்காக’ நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்; ஆனால், கடவுளுடைய நீதியான நியமங்களை விட்டுக்கொடுத்துவிடும் அளவுக்குச் சென்றுவிடக் கூடாது.
பழிவாங்குதல் யெகோவாவுக்குரியது
10, 11. ரோமர் 12:19-ல் பவுல் என்ன அறிவுரை அளிக்கிறார், அது ஏன் சரியானது?
10 ரோமர் 12:19-ஐ வாசியுங்கள். நம்முடைய வேலையையும் நாம் சொல்கிற செய்தியையும் பிடிக்காமல் ‘கலகம் செய்கிறவர்களிடமும்’ சரி, நம்மை நேருக்குநேர் எதிர்ப்பவர்களிடமும் சரி, நாம் “சாந்தத்தோடு” நடந்துகொள்ள வேண்டும், அவர்கள் செய்யும் ‘தீங்கைப் பொறுத்துக்கொள்ளவும்’ வேண்டும். (2 தீ. 2:23-25) யாரையும் பழிக்குப் பழிவாங்காமல் எல்லாவற்றையும் ‘கடவுளுடைய கடுங்கோபத்திற்கு விட்டுவிடும்படி’ கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுரை அளிக்கிறார். ஆகவே, நாம் கடவுளுடைய கடுங்கோபத்திற்கு இடமளித்துவிட வேண்டும். ஆம், பழிவாங்கும் அதிகாரம் நமக்கு இல்லை என்பதைக் கிறிஸ்தவர்களாகிய நாம் அறிந்திருக்கிறோம். சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.” (சங். 37:8) சாலொமோனும் இவ்வாறு அறிவுறுத்தினார்: ‘தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.’—நீதி. 20:22.
11 எதிரிகள் நமக்கு ஏதாவது தீங்கு செய்தால், அவர்களை யெகோவா பார்த்துக்கொள்வாரென விட்டுவிடுவதே ஞானமான செயலாகும். இதை மனதில் வைத்தே ‘“பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிலடி கொடுப்பேன் என்று யெகோவா சொல்கிறார்” என எழுதப்பட்டிருப்பதாக’ பவுல் கூறினார். (உபாகமம் 32:35-ஐ ஒப்பிடுங்கள்.) நாமே பழிக்குப் பழிவாங்கிவிட முயன்றால் நாம் துணிந்து செயல்படுவதாக அர்த்தமாகிவிடும், யெகோவா மட்டுமே செய்ய வேண்டிய அந்தக் காரியத்தை நாம் செய்வதுபோல் ஆகிவிடும். அதோடு, “நானே பதிலடி கொடுப்பேன்” என்று யெகோவா அளித்திருக்கும் வாக்குறுதியின்மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்றாகிவிடும்.
12. யெகோவாவின் கடுங்கோபம் எப்போது வெளிப்படும், எப்படி வெளிப்படும்?
12 ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தின் ஆரம்பத்தில் பவுல் இவ்வாறு சொன்னார்: “சில ஆட்கள் அநியாயமாகச் சத்தியத்தை மூடிமறைக்கிறார்கள், எல்லா விதமான தேவபக்தியற்ற செயல்களையும் அநியாயமான செயல்களையும் செய்கிறார்கள், அவர்கள்மீது கடவுளுடைய கடுங்கோபம் பரலோகத்திலிருந்து வெளிப்படுகிறது.” (ரோ. 1:18) ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ யெகோவாவின் கடுங்கோபம் தம்முடைய மகன் மூலம் பரலோகத்திலிருந்து வெளிப்படும். (வெளி. 7:14) “இவையெல்லாம் கடவுள் நீதியோடு நியாயந்தீர்க்கிறார் என்பதற்கு அத்தாட்சி” அளிக்கும்; இதைத்தான் பவுல் மற்றொரு கடிதத்தில் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலோடு இவ்வாறு விளக்கினார்: “கடவுளுடைய இந்த நியாயத்தீர்ப்பு நீதியானது; ஏனென்றால், உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு அவர் உபத்திரவத்தைக் கொடுப்பார்; இப்போது உபத்திரவப்படுகிற உங்களுக்கோ, நம் எஜமானராகிய இயேசு ஜுவாலித்து எரிகிற நெருப்புடன் தமது வல்லமைமிக்க தேவதூதர்களோடு பரலோகத்திலிருந்து வெளிப்படுகையில், எங்களோடு சேர்த்து விடுதலையை அளிப்பார். அப்போது, கடவுளை அறியாதவர்களையும் நம் எஜமானராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் அவர் பழிவாங்குவார்.”—2 தெ. 1:5-8.
தீமையை நன்மையால் வெல்லுங்கள்
13, 14. (அ) எதிர்ப்பைக் கண்டு நாம் ஏன் ஆச்சரியப்படுவதில்லை? (ஆ) நம்மைத் துன்புறுத்துவோரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
13 ரோமர் 12:14, 21-ஐ வாசியுங்கள். யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார் என்பதில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் எவ்வித பயமுமின்றி அவர் கொடுத்திருக்கும் வேலையில் நாம் முழு கவனத்தைச் செலுத்துவோம். அதாவது, ‘உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும்’ ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ பிரசங்கிக்கும் வேலையில் முழு கவனத்தைச் செலுத்துவோம். (மத். 24:14) இந்த வேலையில் நாம் ஈடுபடும்போது நம்முடைய எதிரிகள் கோபத்தில் கொந்தளிக்கலாம்; ஏனென்றால், “என் பெயரை முன்னிட்டு எல்லாத் தேசத்தாருடைய வெறுப்புக்கும் ஆளாவீர்கள்” என்று இயேசுவே நம்மை எச்சரித்திருக்கிறார். (மத். 24:9) அதனால்தான் நாம் எதிர்ப்பைக் கண்டு ஆச்சரியமோ மனச்சோர்வோ அடைவதில்லை. அப்போஸ்தலன் பேதுருவும் இவ்வாறு எழுதினார்: “அன்பானவர்களே, துன்பத் தீயினால் நீங்கள் சோதிக்கப்படும்போது, விசித்திரமான ஏதோவொன்று நடப்பதாக நினைத்துத் திகைக்காதீர்கள்; மாறாக, கிறிஸ்துவின் பாடுகளில் உங்களுக்குப் பங்கு கிடைத்திருப்பதை எண்ணி எந்நேரமும் மனமகிழுங்கள்.”—1 பே. 4:12, 13.
14 நம்மைத் துன்புறுத்துவோர்மீது கொதித்தெழுவதற்குப் பதிலாக அவர்களில் சிலர் அறியாமையினால் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்த முயலுகிறோம். (2 கொ. 4:4) பவுலின் பின்வரும் அறிவுரைப்படி நடக்கக் கடினமாக முயற்சி செய்கிறோம்: “உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஆசீர்வாதத்தைக் கேளுங்கள்; ஆம், தொடர்ந்து ஆசீர்வாதத்தைக் கேளுங்கள், அவர்களைச் சபிக்காதீர்கள்.” (ரோ. 12:14) ஆசீர்வாதத்தைக் கேட்பது என்பது அவர்களுக்காக ஜெபம் செய்வதை அர்த்தப்படுத்துகிறது. இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில் இவ்வாறு சொன்னார்: “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களை வெறுக்கிறவர்களுக்குத் தொடர்ந்து நன்மை செய்யுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதியுங்கள், உங்களை அவமதிக்கிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.” (லூக். 6:27, 28) துன்புறுத்துகிற ஒருவர் கிறிஸ்துவின் உண்மைச் சீடராக, யெகோவாவின் பக்திவைராக்கியமுள்ள ஊழியராக ஒருவேளை மாறலாம் என்பதை அப்போஸ்தலன் பவுல் அனுபவப்பூர்வமாகக் கண்டார். (கலா. 1:13-16, 23) மற்றொரு கடிதத்தில் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “சபிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறோம்; துன்புறுத்தப்படும்போது தாங்கிக்கொள்கிறோம்; அவமதிக்கப்படும்போது தயவாகப் பேசுகிறோம்.”—1 கொ. 4:12, 13.
15. தீமையை நன்மையால் வெல்லுவதற்கு மிகச் சிறந்த வழி எது?
15 அவ்வாறே, ஓர் உண்மைக் கிறிஸ்தவர் ரோமர் 12-ஆம் அதிகாரத்தின் கடைசி வசனத்திலுள்ள அறிவுரைக்கும் கீழ்ப்படிவார்: “தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்.” பிசாசாகிய சாத்தானே எல்லாத் தீமைக்கும் காரணமாக இருக்கிறான். (யோவா. 8:44; 1 யோ. 5:19) இயேசுவுடன் ஆட்சி செய்யப்போகும் சகோதரர்கள் “ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலும், தாங்கள் சாட்சியாக அறிவித்த செய்தியினாலும் . . . [சாத்தானை] ஜெயித்தார்கள்” என்று அப்போஸ்தலன் யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட தரிசனத்தில், இயேசு தெரிவித்தார். (வெளி. 12:11) சாத்தானையும் இந்த உலகத்தின் மீதுள்ள அவனுடைய தீய செல்வாக்கையும் வெல்லுவதற்கு மிகச் சிறந்த வழி, நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் நன்மை செய்வதே.
நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்
16, 17. ரோமர் 12-ஆம் அதிகாரம், (அ) நாம் வாழ வேண்டிய விதத்தைக் குறித்து என்ன கற்பிக்கிறது? (ஆ) சபையாரிடம் நாம் நடந்துகொள்கிற விதத்தைக் குறித்து என்ன கற்பிக்கிறது? (இ) நம்மை எதிர்ப்பவர்களிடம் நடந்துகொள்கிற விதத்தைக் குறித்து என்ன கற்பிக்கிறது?
16 ரோமர் 12-ஆம் அதிகாரத்தைச் சுருக்கமாக ஆராய்ந்தது நிறைய விஷயங்களை நமக்கு நினைப்பூட்டியிருக்கிறது. யெகோவாவுக்கு நம்மையே அர்ப்பணித்திருப்பதால் தியாகங்கள் செய்ய நாம் மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும் எனக் கற்றுக்கொண்டோம். கடவுளுடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்டு நாம் மனமுவந்து தியாகங்களைச் செய்கிறோம்; ஏனென்றால், இதுவே கடவுளுடைய சித்தம் என்று நம்முடைய சிந்திக்கும் திறனின் மூலமாக உறுதியாய் நம்புகிறோம். யெகோவாவின் சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் செயல்படுகிறோம்; நாம் பெற்றிருக்கும் வெவ்வேறு வரங்களை ஊக்கந்தளராமல் பயன்படுத்துகிறோம். மனத்தாழ்மையோடும் தன்னடக்கத்தோடும் ஊழியம் செய்கிறோம்; சபையில் ஒற்றுமை காக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்கிறோம்; மற்றவர்களுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்கிறோம்.
17 எதிர்ப்பைச் சந்திக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் ஏராளமான அறிவுரைகளை ரோமர் 12-ஆம் அதிகாரம் அளிக்கிறது. ஒருவர் நம்மைப் பகைத்தால் பதிலுக்கு நாம் அவரைப் பகைக்கக் கூடாது. எதிர்ப்பைச் சந்திக்கும்போது கனிவாக நடந்துகொள்ள வேண்டும். முடிந்தவரை, பைபிள் நியமங்களை மீறாமல் எல்லாரோடும் சமாதானமாவதற்குக் கடினமாக முயல வேண்டும். குடும்பத்தில், சபையில், அக்கம்பக்கத்தில், வேலையிடத்தில், பள்ளியில், வெளி ஊழியத்தில் என நாம் சந்திக்கும் எல்லாரிடமும் அப்படி ஆவதற்கு முயல வேண்டும். நம்மை நேருக்குநேர் எதிர்ப்பவர்களிடமும்கூட, தீமையை நன்மையால் வெல்லுவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்; ஏனென்றால், பழிவாங்குதல் யெகோவாவுக்குரியது என்பதை அறிந்திருக்கிறோம்.
18. ரோமர் 12:12-ல் என்ன மூன்று விஷயங்களைக் குறித்து பவுல் அறிவுறுத்துகிறார்?
18 ரோமர் 12:12-ஐ வாசியுங்கள். இதுவரை நாம் பார்த்த ஞானமான, நடைமுறையான அறிவுரைகளோடுகூட, இன்னும் மூன்று விஷயங்களைக் குறித்து பவுல் அறிவுரை கூறுகிறார். யெகோவாவின் உதவியின்றி அந்த அறிவுரைகளையெல்லாம் நம்மால் கடைப்பிடிக்க முடியாது; எனவே, ‘ஜெபத்தில் உறுதியாயிருக்க’ வேண்டுமென பவுல் நம்மை அறிவுறுத்துகிறார். இப்படிச் செய்வது ‘உபத்திரவத்தில் சகித்திருக்கும்படி’ அவர் சொன்ன மற்றொரு அறிவுரைக்குக் கீழ்ப்படிய நமக்கு உதவும். கடைசியாக, பரலோகத்திற்குப் போகிறவர்களும் சரி பூமியில் வாழப்போகிறவர்களும் சரி, முடிவில்லா வாழ்வுக்கான ‘நம்பிக்கையில் சந்தோஷமாயிருக்க’ வேண்டும்; அதோடு, யெகோவா வாக்குறுதி அளித்திருக்கும் அப்படிப்பட்ட மகத்தான எதிர்காலத்தின்மீது நாம் நம் மனதை ஊன்ற வைக்க வேண்டும்.
மீண்டும் சிந்திக்க. . .
• எதிர்ப்பைச் சந்திக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
• யாரிடமெல்லாம் சமாதானம் பண்ணுவதற்கு நாம் முயல வேண்டும், எப்படி?
• நாம் ஏன் பழிக்குப் பழிவாங்கக் கூடாது?
[பக்கம் 8-ன் படம்]
அக்கம்பக்கத்தாருக்கு நடைமுறையான உதவிகளைச் செய்வதன் மூலம் நம்மீதுள்ள தப்பெண்ணத்தைத் தவிடுபொடியாக்கலாம்
[பக்கம் 9-ன் படம்]
சபையில் சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருக்கக் கடினமாய் முயலுகிறீர்களா?