அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
விவேகமுள்ள ஒரு பெண் பேரழிவைத் தடுக்கிறாள்
புத்தியுள்ள பெண் ஒருத்தி, ஒன்றுக்கும் உதவாத ஒரு மனுஷனுக்கு மணமுடிக்கப்பட்டிருந்தாள்—அபிகாயில், நாபாலுடைய விஷயத்தில் இருந்த நிலைமை அதுவே. அபிகாயில் “மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்.” அதற்கு எதிர்மாறாக, நாபால், “முரடனும் துராகிருதனுமாயிருந்தான்.” (1 சாமுவேல் 25:3) பொருத்தமற்ற இந்த ஜோடியைப் பற்றிய சம்பவங்கள், பைபிள் சரித்திரத்தில் அவர்களுடைய பெயர்களை ஓர் அழியா முத்திரையாக பதித்துவிட்டன. எப்படி என்று நாம் பார்க்கலாம்.
ஏனோதானோவென்று எடுத்துக்கொள்ளப்பட்ட தயவு
அது பொ.ச.மு. 11-ம் நூற்றாண்டு. தாவீது இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாய் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தார், ஆனால் ஆட்சிசெய்வதற்கு பதிலாக உயிருக்காக தப்பியோடிக் கொண்டிருந்தார். ஆண்டுகொண்டிருந்த ராஜாவாகிய சவுல், அவரை கொலைசெய்வதற்கு உறுதியுடன் இருந்தார். அதன் விளைவாக, தாவீது ஒரு நாடோடி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார். கடைசியில் அவரும் அவரது சுமார் 600 சகாக்களும், யூதாவுக்குத் தெற்காக சீனாய் வனாந்தரத்தை நோக்கியிருந்த பாரான் வனாந்தரத்தில் அடைக்கலம் புகுந்தார்கள்.—1 சாமுவேல் 23:13; 25:1.
அங்கு இருந்த சமயத்தில், நாபால் என்ற பெயருடைய மனிதனால் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த மேய்ப்பர்களை சந்தித்தார்கள். காலேபின் வழிவந்த இந்த சீமான், 3,000 செம்மறியாடுகளையும் 1,000 வெள்ளாடுகளையும் சொந்தமாக வைத்திருந்தான்; ஒருவேளை பாரானிலிருந்து கிட்டத்தட்ட நாற்பதே கிலோமீட்டர் தொலைவில் எபிரோனுக்கு தெற்கேயுள்ள நகரமாகிய கர்மேலில் தன்னுடைய செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.a வனாந்திரத்தில் திரிந்துகொண்டிருந்த திருடர்களிடமிருந்து ஆடுகளைக் காப்பதற்காக தாவீதும் அவனுடைய ஆட்களும் நாபாலின் மேய்ப்பர்களுக்கு உதவிசெய்தார்கள்.—1 சாமுவேல் 25:14-16.
இதற்கிடையில், செம்மறியாடுகளுக்கு மயிர்கத்தரிப்பது கர்மேலில் ஆரம்பமாயிருந்தது. இது ஒரு விழாக் காலமாய் இருந்தது, அறுவடைக் காலம் விவசாயிக்கு ஒரு விழாக் காலமாய் இருப்பதுபோல. இது, தாராளமாய் வாரிவழங்கும் ஒரு சமயமாகவும் இருந்தது, இந்தச் சமயத்தில் ஆடுகளின் சொந்தக்காரர்கள் தங்களுடைய வேலையாட்களுக்கு பரிசளிப்பார்கள். எனவே, நாபாலுடைய மந்தைகளுக்காக தாவீதின் பத்து மனிதர்கள் செய்திருந்த சேவைக்கு கைமாறாக அவனிடமிருந்து உணவை வாங்கிக்கொண்டு வரும்படி கர்மேல் நகரத்திற்கு தாவீது அவர்களை அனுப்பினார்; இப்படி செய்வதன்மூலம் அவர் கர்வமுள்ளவரைப் போல் நடந்துகொள்ளவில்லை.—1 சாமுவேல் 25:4-9.
நாபாலின் பதிலில் தாராளத்தன்மை துளிகூட இல்லை. “தாவீது என்பவன் யார்?” என்று பரிகாசத்துடன் கேட்டான். அதன் பின்பு, தாவீதும் அவருடைய ஆட்களும் வெறுமனே நாடோடியாக வந்த வேலைக்காரர்கள்தான் என்பதாக மறைமுகமாய் சொல்லி, அவன் கேட்டதாவது: “நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ”? தாவீது இதைக் கேள்விப்பட்டபோது, தன் ஆட்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள்”! சுமார் 400 மனிதர்கள் போருக்காக ஆயத்தமானார்கள்.—1 சாமுவேல் 25:10-13.
அபிகாயிலின் விவேகம்
நாபாலின் பழிதூற்றும் வார்த்தைகள் அவனுடைய மனைவி அபிகாயிலின் கவனத்திற்கு வந்தன. ஒருவேளை நாபாலுக்காக சமரசம் பண்ணுகிறவளாய் அவள் குறுக்கிட வேண்டியதாயிருந்தது இதுதான் முதல் தடவையல்ல. எதுவாக இருந்தாலும்சரி, அபிகாயில் உடனடியாக செயல்பட்டாள். நாபாலிடம் சொல்லாமல், தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு—அதோடு ஐந்து செம்மறியாடுகளையும் ஏராளமான உணவையும் எடுத்துக்கொண்டு—வனாந்தரத்தில் இருந்த தாவீதை சந்திக்கச் சென்றாள்.—1 சாமுவேல் 25:18-20.
அபிகாயில் தாவீதை கண்டபோது, உடனடியாக அவருக்கு முன்பாக தலைவணங்கினாள்: “ஒன்றுக்கும் உதவாத மனிதனாகிய நாபாலை ஒரு பொருட்டாக எண்ணாதேயும்” என அவரிடம் கெஞ்சினாள். “இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக.” அவள் மேலும் சொன்னாள்: ‘என் ஆண்டவனாகிய உமக்கு [நாபாலைப் பற்றிய இந்தக் காரியம்] துக்கமாய் இராமலும், மன இடறலாய் இராமலும் இருப்பதாக.’ ‘இடறல்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையின் அர்த்தம், மனசாட்சியின் உறுத்துதலைக் குறிக்கிறது. ஆகவே, பின்னால் மனம்வருந்தத்தக்க செயலை அவசரப்பட்டு எடுப்பதற்கு எதிராக தாவீதை அபிகாயில் எச்சரித்தாள்.—1 சாமுவேல் 25:23-31.
அபிகாயிலுக்கு தாவீது செவிசாய்த்தார். “நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றைய தினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக” என்று அவளிடம் சொன்னார். “நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் [“சுவரில் சிறுநீர் கழிக்கும் எவனும்,” NW] உயிரோடே வைக்கப்படுவதில்லை.”b—1 சாமுவேல் 25:32-34.
நமக்கு பாடங்கள்
தேவைப்பட்டால், தேவபக்தியுள்ள ஒரு பெண் தகுந்த நடவடிக்கை எடுப்பது எவ்விதத்திலும் தவறில்லை என்பதை இந்த பைபிள் விவரப்பதிவு காண்பிக்கிறது. அபிகாயில் தன் கணவன் நாபாலின் விருப்பங்களுக்கு எதிராக செயல்பட்டாள், ஆனால் இதற்காக பைபிள் அவளை கண்டித்துப் பேசுகிறதில்லை. அதற்கு மாறாக, விவேகமும் புத்தியுமுள்ள ஒரு பெண்ணாக அவளைப் போற்றுகிறது. நெருக்கடியான இந்தச் சூழ்நிலையில் அபிகாயில் நடவடிக்கை எடுத்ததன் மூலம், அநேகருடைய உயிரைப் பாதுகாத்தாள்.
பொதுவாக மனைவியானவள் தேவபக்திக்குரிய கீழ்ப்படிதலைக் காண்பிக்கவேண்டியதாய் இருக்கிறபோதிலும், சரியான நியமங்கள் கடைப்பிடிக்கப்படாதபோது அவள் சரியாகவே ஒத்துப்போகாதவளாய் இருக்கலாம். நிச்சயமாகவே, அவள் ‘சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியைக்’ காத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தீய எண்ணத்தினாலோ பெருமையினாலோ அல்லது கலகத்தன்மையினாலோ தன்னிச்சையாய் செயல்படக் கூடாது. (1 பேதுரு 3:4) என்றபோதிலும், தேவபக்தியுள்ள ஒரு மனைவியானவள், மிகவும் ஞானமற்றது என்றோ அல்லது பைபிள் நியமங்களுக்கு விரோதமானது என்றோ தான் அறிந்திருக்கிற ஏதாவதொரு காரியத்தைச் செய்வதற்கு அழுத்தப்படுவதாக உணரக்கூடாது. உண்மையிலேயே, அபிகாயிலைப் பற்றிய இந்த விவரப்பதிவு, பெண்களை வெறும் அடிமைகளாக பைபிள் சித்தரிக்கிறது என பிடிவாதமாய் சொல்கிறவர்களுக்கு எதிராக ஒரு நல்ல ஆதாரத்தைக் கொடுக்கிறது.
இந்த விவரப்பதிவு தன்னடக்கத்தைப் பற்றியும்கூட நமக்கு போதிக்கிறது. சில சமயங்களில், தாவீது இந்தப் பண்பை முழுமையாய் வெளிப்படுத்தினார். உதாரணமாக, பழிவாங்கும் இயல்புடைய ராஜாவாகிய சவுலைக் கொலைசெய்வதற்கு தாவீதுக்குப் போதிய வாய்ப்பிருந்தது, அதோடு சவுலின் மரணம் தாவீதுக்கு நிம்மதியையும் கொண்டுவந்திருக்கும், என்றபோதிலும் அவர் அப்படிச் செய்ய மறுத்துவிட்டார். (1 சாமுவேல் 24:2-7) இதற்கு மாறாக, நாபால் அவரை இகழ்ச்சியுடன் நிந்தித்தபோது, தாவீது எதிர்பாராத விதமாக உணர்ச்சிவசப்பட்டு பழிவாங்க சபதமெடுத்தார். ‘ஒருவனுக்கும் தீமைக்கு தீமை செய்யாமலிருக்கப்’ போராடும் கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு தெளிவான எச்சரிப்பு. எல்லா சமயங்களிலும், அவர்கள் பவுலின் புத்திமதியைப் பின்பற்ற வேண்டும்: “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, . . . நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”—ரோமர் 12:17-19.
[அடிக்குறிப்புகள்]
a பாரானின் வனாந்தரம் வடக்கே பெயர்செபா வரை பரந்துகிடக்கிறது என புரிந்துகொள்ளப்படுகிறது. இந்நிலப்பகுதியில் கணிசமானளவு புல்வெளியும் இருந்தது.
b “சுவரில் சிறுநீர் கழிக்கும் எவனும்” என்ற சொற்றொடர், ஆண்களுக்கு பயன்படுத்தப்படும் எபிரெய மரபுச்சொல்; இது, அவமதிக்கும் ஒரு சொற்றொடர் என தெளிவாக தெரிகிறது.—ஒப்பிடுக: 1 இராஜாக்கள் 14:10, NW.
[பக்கம் 15-ன் படம்]
தாவீதுக்கு அபிகாயில் பரிசுகள் கொண்டுவருகிறாள்