சமநிலையுடன் வளைந்துகொடுப்பவர்களாக இருங்கள்
‘வளைந்துகொடுப்பவர்களாக நடந்துகொள்ளும்படி . . . அவர்களுக்கு நினைப்பூட்டு.’ —தீத்து 3:2; NW அடிக்குறிப்பு.
1, 2. வளைந்துகொடுப்பதைப்பற்றி வேத வசனங்கள் என்ன சொல்கின்றன, அவை சொல்வது ஏன் ஏற்க தகுந்ததாய் இருக்கிறது?
அன்புள்ள நம் பரலோக தகப்பனாகிய யெகோவா எல்லையற்ற ஞானமுள்ளவர். நாம் அவரால் படைக்கப்பட்டிருப்பதால் நம் வாழ்க்கையை வழிநடத்துவதற்காக அவருடைய உதவியை நாடுகிறோம். (சங். 48:14) “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் [“நியாயமுள்ளதாயும்,” NW, “வளைந்துகொடுப்பதாயும்,” NW அடிக்குறிப்பு] இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது” என கிறிஸ்தவ சீஷராகிய யாக்கோபு நம்மிடம் சொல்கிறார்.—யாக். 3:17.
2 “உங்கள் சாந்தகுணம் [“நியாயத்தன்மை,” NW; ‘வளைந்துகொடுக்கும் தன்மை,’ கிங்டம் இன்டர்லீனியர்] எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக” என அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்துகிறார்.a (பிலி. 4:5) கிறிஸ்து இயேசு, கிறிஸ்தவ சபைக்கு ஆண்டவராகவும் தலைவராகவும் இருக்கிறார். (எபே. 5:23) எனவே, கிறிஸ்துவின் வழிநடத்துதலுக்கு இசைவாக நடந்துகொள்வதன் மூலமும் சக மனிதருடன் வளைந்துகொடுப்பவர்களாக இருப்பதன் மூலமும் நாம் ஒவ்வொருவரும் நியாயத்தன்மையுடன் செயல்படுவது எவ்வளவு முக்கியமாய் இருக்கிறது!
3, 4. (அ) நாம் வளைந்துகொடுக்கும்போது விளையும் நன்மைகளைப்பற்றி உதாரணத்துடன் விளக்குங்கள். (ஆ) நாம் எதைக் கவனிக்கப் போகிறோம்?
3 நாம் சமநிலையுடன் வளைந்துகொடுப்பவர்களாய் இருந்தால் நல்ல பலன்களைப் பெறுவோம். உதாரணத்திற்கு, பிரிட்டனில் பயங்கரவாதிகள் போட்ட ஒரு சதி திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், விமானத்தில் பயணிகள் முன்பு எடுத்துச்செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட சில பொருட்களுக்கு அப்போது தடைவிதிக்கப்பட்டது. பெரும்பாலான பயணிகள் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க தயாராய் இருந்தார்கள். மற்றொரு உதாரணத்தை பாருங்கள்: நாம் வாகனம் ஓட்டும்போது, சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து வளைவுகளைச் சுற்றி வரவேண்டியிருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களிலும் அனைவரின் பாதுகாப்பையும் சுமுகமான போக்குவரத்தையும் கருதி மற்ற ஓட்டுநர்களுக்கு நாம் விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது.
4 வளைந்துகொடுப்பது நம்மில் அநேகருக்கு அவ்வளவு சுலபமானதல்ல. எனவே, வளைந்துகொடுப்பவர்களாய் இருப்பதற்கு அதில் உட்படும் மூன்று அம்சங்களை இப்போது கவனிப்பது நமக்கு உதவியாயிருக்கும். நம் உள்நோக்கம், அதிகாரத்தை நாம் கருதும் விதம், எந்தளவுக்கு நாம் வளைந்துகொடுக்க வேண்டும் ஆகியவையே அந்த மூன்று அம்சங்கள்.
ஏன் வளைந்துகொடுக்க வேண்டும்?
5. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, ஓர் அடிமை தன் எஜமானோடே தொடர்ந்து இருப்பதற்கு அவரை எது தூண்டியிருக்கும்?
5 பூர்வ காலங்களில் இருந்த ஒரு பழக்கத்தை இப்போது உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். வளைந்துகொடுப்பதற்கான சரியான உள்நோக்கத்தை அது சுட்டிக் காட்டுகிறது. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, எபிரேய அடிமைகள் தாங்கள் அடிமைகளாக இருக்கும் ஏழாவது வருடத்தில் அல்லது யூபிலி வருடத்தில், இவற்றில் எது முதலில் வருகிறதோ அந்த வருடத்தில் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால், ஓர் அடிமை தொடர்ந்து அடிமையாகவே இருக்க விரும்பினால் அவர் அவ்வாறு இருக்கலாம். (யாத்திராகமம் 21:5, 6-ஐ வாசியுங்கள்.) இப்படிச் செய்வதற்கு எது ஓர் அடிமையைத் தூண்டியது? கரிசனையுள்ள தன் எஜமானுடைய அதிகாரத்தின்கீழ் தொடர்ந்து இருப்பதற்கு அன்பே அந்த அடிமையைத் தூண்டியிருக்கும்.
6. வளைந்துகொடுப்பவர்களாய் இருக்க அன்பு நமக்கு எவ்வாறு உதவுகிறது?
6 அதுபோல, யெகோவாவிடம் நாம் வைத்திருக்கும் அன்பே நம் வாழ்க்கையை அவருக்காக ஒப்புக்கொடுக்கவும் அதற்கிசைய வாழவும் நம்மைத் தூண்டுகிறது. (ரோ. 14:7, 8) “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோ. 5:3) இந்த அன்பு சுயநலமானதல்ல. (1 கொ. 13:4, 5) சக மனிதருடன் பழகும்போது, அவர்களுக்கு வளைந்துகொடுத்து அவர்களுடைய விருப்பங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்கு அயலார்மீதுள்ள அன்பு நம்மை உந்துவிக்கும். எனவே, சுயநலமாக இருப்பதற்கு மாறாக மற்றவர்களுடைய விருப்பங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்போம்.—பிலி. 2:2, 3.
7. வளைந்துகொடுப்பது நம் ஊழியத்தில் என்ன பங்கு வகிக்கிறது?
7 நம்முடைய சொல்லோ செயலோ மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்கிவிடக்கூடாது. (எபே. 4:29) வித்தியாசப்பட்ட பின்னணிகளையும் கலாச்சாரங்களையும் சேர்ந்தவர்கள் யெகோவாவைச் சேவிப்பதற்காக வருகையில், அவர்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாகிவிடும் எதையும் நாம் செய்துவிடாதபடி அன்பு நம்மை உந்துவிக்கும். இதற்காக பெரும்பாலும் நாம் வளைந்துகொடுக்க வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு, அழகு சாதனங்களையோ நீண்ட நைலான் காலுறைகளாகிய ஸ்டாக்கிங்ஸ்களையோ பயன்படுத்தும் பழக்கம், சில மிஷனரி சகோதரிகளுக்கு இருக்கலாம். ஆனால், சில இடங்களில் அதுபோன்ற பழக்கமுள்ளவர்கள் ஒழுக்கங்கெட்ட நபர்களாகக் கருதப்படலாம். அப்படிப்பட்ட இடங்களில் மற்றவர்களை இடறலடையச் செய்யாமலிருப்பதற்காக இந்த மிஷனரி சகோதரிகள் தங்களுடைய விருப்பங்களை விட்டுக்கொடுக்கிறார்கள்.—1 கொ. 10:31-33.
8. நம்மை நாமே ‘சிறியவர்களாக’ நடத்திக்கொள்ள கடவுள் மீதுள்ள அன்பு எப்படி உதவி செய்யும்?
8 யெகோவாமீது நாம் அன்பு வைத்திருப்பது பெருமையை அறவே நீக்கிவிட நமக்கு உதவி செய்கிறது. சீஷர்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு, இயேசு அவர்கள் மத்தியில் ஒரு சிறுபிள்ளையை நிறுத்தி பின்வருமாறு விவரித்தார்: “இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.” (லூக். 9:48; மாற். 9:36) நம்மை நாமே ‘சிறியவர்களாக’ நடத்திக்கொள்வது உண்மையிலேயே நம் ஒவ்வொருவருக்கும் கடினமாக இருக்கக்கூடும். நாம் வழிவழியாகப் பெற்றிருக்கும் அபூரண தன்மையும் பெருமையான எண்ணமும் பிரபலத்தை நாடுவதற்கு நம்மைத் தூண்டலாம்; ஆனால், மனத்தாழ்மை என்ற பண்பு, வளைந்துகொடுத்து மற்றவர்களை மதிப்புடன் நடத்த உதவி செய்யும்.—ரோ. 12:10.
9. வளைந்துகொடுப்பவர்களாய் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
9 வளைந்துகொடுப்பவர்களாய் இருக்கவேண்டுமென்றால், கடவுளால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் அதிகாரத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும். தலைமைத்துவம் என்ற முக்கிய நியமத்தை உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். கொரிந்தியருக்கு எழுதும்போது அப்போஸ்தலன் பவுல் இதைத் தெளிவாகக் குறிப்பிட்டார்: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாறென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.”—1 கொ. 11:3.
10. நாம் யெகோவாவின் அதிகாரத்திற்கு இசைவாக வளைந்துகொடுப்பது எதைக் காண்பிக்கிறது?
10 கடவுளுடைய அதிகாரத்திற்கு இசைவாக இணங்கிப்போவது, அதாவது வளைந்துகொடுப்பது அவரை நம் அன்பான தகப்பனாகக் கருதி அவரிடம் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது. நமக்கு என்ன நடந்தாலும் அதை அவர் அறிந்திருக்கிறார்; எனவே, அதற்கேற்றபடி அவர் பலனளிப்பார். இந்த உண்மையை நாம் மனதில் வைத்திருந்தால், மற்றவர்கள் நம்மை மரியாதை குறைவாக நடத்தும்போதோ நம்மிடம் கோபப்பட்டு எரிந்து விழும்போதோ வளைந்துகொடுப்பது எளிதாக இருக்கும். “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என பவுல் எழுதினார். அதோடு சேர்த்து இந்த அறிவுரையையும் தருகிறார்: “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.”—ரோ. 12:18, 19.
11. கிறிஸ்துவின் தலைமைக்கு இணங்கிச் செல்கிறோம் என்பதை நாம் எப்படிக் காண்பிக்கலாம்?
11 கிறிஸ்தவ சபையிலும் கடவுளால் நியமிக்கப்பட்டவர்களின் அதிகாரத்திற்கு இணங்கிச் செல்வது அவசியம். கிறிஸ்து இயேசு, சபையின் “நட்சத்திரங்களை” தமது வலது கையில் ஏந்தியிருப்பதாக வெளிப்படுத்துதல் முதலாம் அதிகாரம் சித்தரிக்கிறது. (வெளி. 1:16, 20) இந்த ‘நட்சத்திரங்கள்,’ உண்மையில், அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகளின் குழுக்களைக் குறிப்பதாய் இருந்தாலும், சபைகளிலுள்ள வேறே ஆடுகளைச் சேர்ந்த மூப்பர் குழுக்களுக்கும் அது பொருந்துகிறது. நியமிக்கப்பட்ட இந்தக் கண்காணிகள், கிறிஸ்துவின் தலைமைக்கு இணங்கி, மற்றவர்களிடம் அவரைப் போலவே தயவாக நடந்துகொள்கிறார்கள். ஏற்ற வேளையில் ஆன்மீக உணவைத் தருவதற்காக “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார” வகுப்பாரை இயேசு ஏற்பாடு செய்திருக்கிறார்; இந்த ஏற்பாட்டுக்கு சபையிலுள்ள எல்லாரும் கீழ்ப்பட்டு நடக்கிறார்கள். (மத். 24:45-47) இன்று நாம் சிந்திக்கும் இந்த விஷயத்தைப் படிக்கவும் அதைக் கடைப்பிடிக்கவும் நாம் விரும்புவதுதானே நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் தலைமைக்கு இணங்கிச்செல்கிறோம், அதாவது வளைந்துகொடுக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. அவ்வாறு செய்வது சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் வழிநடத்துகிறது.—ரோ. 14:13, 19.
எந்தளவுக்கு வளைந்துகொடுப்பது?
12. வளைந்துகொடுப்பதற்கு ஏன் வரையறைகள் உள்ளன?
12 வளைந்துகொடுப்பது என்பது நம் விசுவாசத்தையும் தெய்வீக நியமங்களையும் விட்டுக்கொடுப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. இயேசுவின் பெயரில் போதிப்பதை நிறுத்தும்படி ஆரம்பகால கிறிஸ்தவர்களிடம் மதத் தலைவர்கள் கட்டளையிட்டபோது அவர்கள் என்ன செய்ய தீர்மானித்தார்கள்? “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் தைரியமாகச் சொன்னார்கள். (அப். 4:18-20; 5:28, 29) இன்றும், பிரசங்க வேலையை நிறுத்தும்படி அரசதிகாரங்கள் நம்மை வற்புறுத்துகையில், நிலைமையைச் சாதுரியமாகக் கையாளுவதற்காகப் பிரசங்கிக்கும் முறைகளை மாற்றிக்கொள்வோமே தவிர பிரசங்கிப்பதை நாம் நிறுத்திவிட மாட்டோம். வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், நாம் மக்களிடம் தொடர்புகொள்ள வேறு வழிமுறைகளைக் கண்டுபிடிப்போம். இப்படியாகக் கடவுள் கொடுத்த அந்தக் கட்டளைக்குத் தொடர்ந்து கீழ்ப்படிவோம். அதேபோல், ‘மேலான அதிகாரமுள்ளவர்கள்’ நம் கூட்டங்களுக்குத் தடைவிதித்தால், பிறர் கவனத்தை ஈர்க்காதவாறு சிறு தொகுதிகளாகக் கூடிவருவோம்.—ரோ. 13:1; எபி. 10:24, 25.
13. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இணங்கிப்போவதைப்பற்றி இயேசு என்ன சொன்னார்?
13 அதிகாரத்திற்கு இணங்கிப்போவது அவசியம் என்பதை தமது மலைப்பிரசங்கத்தில் இயேசு குறிப்பிட்டார்: “உன்னோடு வழக்காடி உன் உள்ளங்கியை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் மேலங்கியையும் விட்டுவிடு. அதிகாரத்திலுள்ள ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.” (மத். 5:40, 41, NW)b மற்றவர்களுடைய தேவைகளையும் உணர்ச்சிகளையும் புரிந்து, அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவது அவர்களுக்காக இன்னொரு மைல் செல்ல, அதாவது, அவர்கள் கேட்டதற்கும் அதிகமாக உதவி செய்ய நம்மைத் தூண்டும்.—1 கொ. 13:5; தீத். 3:1, 2.
14. நாம் ஏன் விசுவாசத் துரோகத்திற்கு ஒருபோதும் இணங்கிப்போகக்கூடாது?
14 வளைந்துகொடுக்க விரும்புகிறோம் என்பதற்காக போயும்போயும் விசுவாசத்துரோகிகளோடு நாம் ஒருபோதும் இணங்கிப்போகக்கூடாது. சத்தியத்தின் தூய்மையையும் சபையின் ஒற்றுமையையும் காத்துக்கொள்வதற்காக இந்த விஷயத்தில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். ‘கள்ளச் சகோதரரைக்’ குறித்து பவுல் எழுதினார்: “சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை [அதாவது, வளைந்துகொடுக்கவில்லை].” (கலா. 2:4, 5) அப்படியே ஒருவேளை, விசுவாசத்துரோகம் தலைதூக்கினாலும்கூட, உண்மை பற்றுறுதியுள்ள கிறிஸ்தவர்கள் சரியானதைச் செய்வதில் உறுதியாக நிலைத்திருப்பார்கள்.
கண்காணிகள் வளைந்துகொடுப்பவர்களாய் இருக்க வேண்டும்
15. கிறிஸ்தவ கண்காணிகள் ஒன்றுகூடி வருகையில் என்ன விதத்தில் அவர்கள் வளைந்துகொடுப்பவர்களாய் இருக்கலாம்?
15 கண்காணிகளாய் சேவை செய்ய நியமிக்கப்படுகிறவர்களின் தகுதிகளில் ஒன்று, வளைந்துகொடுக்க மனமுள்ளவர்களாய் இருப்பதாகும். பவுல் எழுதினார்: “கண்காணியானவர் . . . நியாயமானவராக [“வளைந்துகொடுப்பவராக,” அடிக்குறிப்பு] இருக்க வேண்டும்.” (1 தீ. 3:2, 3, NW) கண்காணிகளாக நியமிக்கப்பட்டவர்கள் சபை விஷயங்களைப்பற்றி சிந்திப்பதற்காகக் கூடிவருகையில் இது அத்தியாவசியமாக இருக்கிறது. ஒரு தீர்மானத்திற்கு வருமுன், ஒவ்வொரு மூப்பரும் ஏதாவது ஒரு குறிப்பைச் சொல்லியே ஆகவேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனாலும், அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைத் தாராளமாக அதேசமயம் தெளிவாக எடுத்துச் சொல்லலாம். விஷயங்களைக் கலந்துபேசும்போது, வேதவசனங்களிலுள்ள நியமங்கள் எப்படிப் பொருந்துகின்றன என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, ஒருவர் தனது கருத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களின் கருத்தை நிராகரித்து சொந்த கருத்தை வலியுறுத்துவதற்கு மாறாக, முதிர்ச்சியுள்ள ஒரு மூப்பர் வளைந்துகொடுப்பவராக இருப்பார். அவர்கள் கலந்துபேச ஆரம்பித்தபோது, மாறுபட்ட கருத்துகள் பல இருந்திருக்கலாம். ஆனால், ஜெப சிந்தையோடு கலந்துபேசுகையில் அடக்கமும் வளைந்துகொடுக்கும் தன்மையும் உடைய மூப்பர்கள் மத்தியில் ஒற்றுமை வளர்கிறது.—1 கொ. 1:10; எபேசியர் 4:1-3-ஐ வாசியுங்கள்.
16. ஒரு கிறிஸ்தவ கண்காணி என்ன மனநிலையைக் காட்ட வேண்டும்?
16 ஒரு கிறிஸ்தவ மூப்பர், தன்னுடைய எல்லா நடவடிக்கைகளிலும், தேவராஜ்ய ஏற்பாட்டை ஆதரிக்க கடினமாய் முயல வேண்டும். மந்தையை மேய்க்கும்போதுகூட அவர் வளைந்துகொடுக்கும் மனநிலையைக் காட்ட வேண்டும். மற்றவர்களிடம் கரிசனையோடும் கனிவோடும் நடந்துகொள்ள அது அவருக்கு உதவும். “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும் . . . கண்காணிப்புச் செய்யுங்கள்.”—1 பே. 5:2, 3.
17. சபையிலுள்ள அனைவருமே எப்படி மற்றவர்களிடம் வளைந்துகொடுக்கும் தன்மையைக் காட்டலாம்?
17 இளையவர்கள் செய்யும் உதவிக்காக சபையிலுள்ள முதியவர்கள் நன்றியுள்ளவர்களாய் இருப்பதோடு அவர்களை மதிப்புடனும் நடத்துகிறார்கள். அதே சமயம், இளையவர்களும், யெகோவாவுக்கு சேவை செய்வதில் நீண்ட நாள் அனுபவம் பெற்றிருக்கும் முதியவர்களை மதிக்கிறார்கள். (1 தீ. 5:1, 2) தகுதிபெற்ற சகோதரர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு சில பொறுப்புகளைக் கொடுத்து, கடவுளுடைய மந்தையைக் கவனிப்பதில் அவர்களுக்குத் தேவையான பயிற்சியை அளிக்க கிறிஸ்தவ மூப்பர்கள் முயலுகிறார்கள். (2 தீ. 2:1, 2) கடவுளுடைய ஆவியால் தூண்டப்பட்டு பவுல் கொடுத்த ஆலோசனையை ஒவ்வொரு கிறிஸ்தவரும் மதிக்க வேண்டும்: “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள் [‘வளைந்துகொடுங்கள்,’ NW அடிக்குறிப்பு]; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.”—எபி. 13:17.
குடும்பத்தில் வளைந்துகொடுப்பது
18. குடும்பத்தில் வளைந்துகொடுப்பவர்களாய் இருப்பது ஏன் தகுந்தது?
18 குடும்பத்திலும் வளைந்துகொடுப்பது அவசியமாக இருக்கிறது. (கொலோசெயர் 3:18-21-ஐ வாசியுங்கள்.) கிறிஸ்தவ குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினருக்கும் இருக்கிற பொறுப்புகளை பைபிள் குறிப்பிடுகிறது. குடும்பத்திலுள்ள தகப்பன் அவரது மனைவிமீது தலைமை வகிப்பதோடு பிள்ளைகளை வழிநடத்தும் முக்கிய பொறுப்பையும் பெற்றிருக்கிறார். தன் கணவரின் அதிகாரத்தை மனைவி ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் கீழ்ப்படிதலைக் காட்டுவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், இது கர்த்தருக்குப் பிரியமானது. சரியான விதத்திலும் சமநிலையோடும் வளைந்துகொடுப்பதன்மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சமாதானமும் நிலவ ஒவ்வொருவரும் பங்களிக்கலாம். இதை எடுத்துக் காண்பிக்கும் சில உதாரணங்கள் பைபிளில் உள்ளன.
19, 20. (அ) வளைந்துகொடுக்கும் விஷயத்தில் ஏலியும் யெகோவாவும் எவ்வாறு வித்தியாசமாகச் செயல்பட்டனர்? (ஆ) இந்த உதாரணங்களிலிருந்து பெற்றோர் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
19 சாமுவேல் ஒரு சிறு பையனாக இருந்தபோது, இஸ்ரவேலில் ஏலி பிரதான ஆசாரியனாக இருந்தார். என்றாலும், ஏலியின் குமாரராகிய ஓப்னியும் பினெகாஸும் “பேலியாளின் மக்களாயிருந்தார்கள்,” அதாவது, ஒன்றுக்கும் உதவாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள் “கர்த்தரை அறியவில்லை,” அதாவது, ஏற்று நடக்கவில்லை. ஆசரிப்பு கூடாரத்தின் வாசலில் சேவை செய்த பெண்களுடன் வேசித்தனம் செய்வது உட்பட, அவர்கள் செய்துவந்த எல்லா மோசமான விஷயங்களைப்பற்றியும் ஏலி கேள்விப்பட்டார். இந்தச் செய்திகளைக் கேட்ட பிறகு அவர் என்ன செய்தார்? யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவந்தால் அவர்களுக்காக எவரும் ஜெபம் செய்ய முடியாதென்று ஏலி அவர்களிடம் சொன்னார். ஆனால், அவர்களைத் திருத்தவோ சிட்சிக்கவோ தவறினார். அதனால் ஏலியின் மகன்கள் தவறான பாதையிலேயே தொடர்ந்தனர். முடிவில், அவர்கள் மரண தண்டனைக்குப் பாத்திரவான்கள் என யெகோவா நியாயமாகவே தீர்மானித்தார். அவர்களுடைய மரண செய்தியைக் கேட்ட பிறகு ஏலியும் மரணமடைந்தார். என்னே ஒரு வருத்தமான விளைவு! அவர்களுடைய பொல்லாத செயல்களை ஏலி கண்டும்காணாமல் விட்டுவிட்டது, அவர்களுக்காக அவர் தவறான விதத்தில் வளைந்துகொடுத்ததுபோல் ஆயிற்று. இது சரியல்ல என்பது தெளிவாகவே தெரிகிறது.—1 சா. 2:12-17, 22-25, 34, 35; 4:17, 18.
20 ஏலிக்கு நேர்மாறாக, யெகோவா தம்முடைய ஆவிக் குமாரர்களாகிய தூதர்களிடம் எப்படி நடந்துகொண்டார் என்பதைக் கவனியுங்கள். ஒரு சந்தர்ப்பத்தில் மிகாயா தீர்க்கதரிசி குறிப்பிடத்தக்க ஒரு தரிசனத்தைக் கண்டார். அந்தத் தரிசனத்தில், யெகோவாவும் அவருடைய தூதர்களும் கூடியிருந்தார்கள். இஸ்ரவேலின் பொல்லாத அரசனாகிய ஆகாபின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அவனை ஏமாற்றப்போவது யார் என்று தூதர்களிடம் யெகோவா கேட்டார். அவர்களில் பலர் கொடுத்த ஆலோசனைகளையும் அவர் கவனித்துக் கேட்டார். பின்னர் ஒரு தூதன், தன்னால் அதைச் செய்யமுடியும் என்று கூறியபோது அதை அவர் எப்படிச் செய்வாரென யெகோவா கேட்டார். அவர் சொன்ன பதிலில் யெகோவா திருப்தி அடைந்து, அவ்வாறே செய்யும்படி அந்தத் தூதனிடம் சொன்னார். (1 இரா. 22:19-23) மனிதர்களாகிய நம்முடைய சூழலை எடுத்துக்கொண்டால், வளைந்துகொடுப்பதைப் பற்றி இந்தச் சம்பவத்திலிருந்து குடும்ப அங்கத்தினர்கள் எத்தனையோ பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம், அல்லவா? ஒரு கிறிஸ்தவ கணவராகவும் தகப்பனாகவும் இருப்பவர், தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடைய ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்துக்கொள்வார். மறுபட்சத்தில், மனைவியும் பிள்ளைகளும் தங்கள் கருத்தை அல்லது விருப்பத்தைத் தெரிவித்த பிறகு, தீர்மானம் எடுப்பதற்கு வேதப்பூர்வமாக அதிகாரம் பெற்றிருக்கும் கணவரின் அல்லது தந்தையின் வழிநடத்துதலை மதித்து, அதற்கேற்றபடி வளைந்துகொடுக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருப்பது அவசியம்.
21. அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
21 வளைந்துகொடுப்பது சம்பந்தமாக யெகோவா தந்திருக்கும் அன்பான, ஞானமான நினைப்பூட்டுதல்களுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! (சங். 119:99) சமநிலையுடன் வளைந்துகொடுப்பது மணவாழ்வில் மகிழ்ச்சியைக் காண எப்படி உதவும் என்பதை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
[அடிக்குறிப்புகள்]
a நியாயத்தன்மையைக் குறிப்பிட அப்போஸ்தன் பவுல் பயன்படுத்திய வார்த்தையை ஒரு வார்த்தையாக மொழிபெயர்ப்பது கடினம். ஓர் ஆராய்ச்சி நூல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒருவர், தன்னுடைய தனிப்பட்ட உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கும் மற்றவர்களுக்குக் கரிசனையையும் கனிவையும் காட்டுவதற்கும் மனமுள்ளவராய் இருப்பது நியாயத்தன்மையில் உட்படுகிறது.” அப்படியென்றால், சட்டதிட்டங்களை இம்மியும் பிசகாமல் கடைப்பிடிக்க வேண்டுமென வற்புறுத்தாமல் அல்லது ஒருவருடைய உரிமைகளைக் கண்டிப்பாகப் பெறவேண்டுமென வலியுறுத்தாமல், வளைந்துகொடுத்து நியாயமாக நடந்துகொள்வதை அந்த வார்த்தை அர்த்தப்படுத்துகிறது.
b 2005 பிப்ரவரி 15 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 23-6-ல் “வேலை செய்ய நீங்கள் பலவந்தம் செய்யப்பட்டால்” என்ற கட்டுரையைக் காண்க.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• வளைந்துகொடுப்பவர்களாய் இருப்பதால் வரும் நற்பலன்கள் யாவை?
• கண்காணிகள் எப்படி வளைந்துகொடுக்கும் மனநிலையைக் காட்டலாம்?
• குடும்பத்தில் வளைந்துகொடுப்பது ஏன் அவசியம்?
[பக்கம் 4-ன் படம்]
மற்றவர்களிடம் தயவாய் நடந்துகொண்ட கிறிஸ்துவின் முன்மாதிரியை மூப்பர்கள் பின்பற்றுகிறார்கள்
[பக்கம் 6-ன் படம்]
சபை மூப்பர்கள் கூடிவரும்போது, ஜெப சிந்தையுடனும் வளைந்துகொடுக்கும் மனநிலையுடனும் இருப்பது ஒற்றுமையை வளர்க்கும்