1, 2. மற்றவர்களை மன்னிக்க நீங்கள் தயாராய் இருக்கிறீர்களா என்ற கேள்வியைச் சிந்திப்பது ஏன் முக்கியம்?
யெகோவா பாவச் செயல்களை எப்படிக் கருதுகிறார்? நாம் பாவங்களைச் செய்யும்போது அவர் எப்படி உணருகிறார்? இதையெல்லாம் தெரிந்துகொள்ள அவருடைய வார்த்தை நமக்கு உதவுகிறது. அவர் நம்மை மன்னிக்கத் தயாராய் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளவும் அது உதவுகிறது. தாவீதையும் மனாசேயையும் யெகோவா ஏன் மன்னித்தார் என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். செய்த பாவங்களை நினைத்து அவர்கள் உள்ளப்பூர்வமாக வருந்தினார்கள், தங்கள் பாவங்களை மறைக்காமல் ஒத்துக்கொண்டார்கள், பொல்லாத செயல்களை விட்டொழித்தார்கள், உண்மையான மனந்திரும்புதலைக் காட்டினார்கள். அதனால், யெகோவா அவர்களை மன்னித்தார், மீண்டும் அவர்களுக்குத் தயவு காட்டினார்.
2 இந்தக் கட்டுரையில், மற்றவர்களை மன்னிக்க நாம் தயாராய் இருக்கிறோமா என்பதைப் பற்றிப் பார்ப்போம். மனாசேயின் பாவச் செயல்களுக்குப் பலியான அப்பாவிகளில் உங்களுடைய உறவினரும் ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்; அப்போது, என்ன செய்திருப்பீர்கள்? மனாசேயை மன்னித்திருப்பீர்களா? இன்று இது ஒரு முக்கியமான கேள்வி. ஏனென்றால், அக்கிரமமும் வன்முறையும் சுயநலமும் நிரம்பி வழிகிற உலகத்தில் நாம் வாழ்கிறோம். அப்படியானால், நாம் ஏன் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்? அவமானத்திற்கு அல்லது அநீதிக்கு நீங்கள் ஆளாகியிருந்தால் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த எது உதவும்? அதோடு, யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் நடக்க, மன்னிப்பதற்குத் தயாராய் இருக்க எது உதவும்?
ஏன் மன்னிக்க வேண்டும்?
3-5. (அ) மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்க இயேசு என்ன கதையைச் சொன்னார்? (ஆ) மத்தேயு 18:21-35-ல் உள்ள கதையின் மூலம் அவர் என்ன குறிப்பைச் சொன்னார்?
3 நம்மைப் புண்படுத்துகிறவர்கள் சக கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவர்களை மன்னிக்க நாம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்; அப்போதுதான், நம் குடும்பத்தாருடன், நண்பர்களுடன், சக மனிதர்களுடன், யெகோவாவுடன் சமாதான பந்தத்தில் நம்மால் பின்னிப்பிணைந்திருக்க முடியும். மற்றவர்கள் எத்தனை முறை புண்படுத்தினாலும் அத்தனை முறையும் மன்னிப்பதுதான் கிறிஸ்தவர்களுக்கு அழகு. ஆம், மன்னிக்கும் மனம் கிறிஸ்தவ குணம்! நாம் ஏன் இந்தக் குணத்தைக் காட்ட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இயேசு ஒரு கதையைச் சொன்னார்; கடன்பட்டிருந்த ஓர் அடிமையைப் பற்றிய கதை அது.
4 ஓர் அடிமை தன் ராஜாவுக்கு ஆறு கோடி தினாரி கடன்பட்டிருந்தான்; ஆறு கோடி நாட்கள் அவன் வேலை செய்தால்தான் அந்தக் கடனை அவனால் அடைக்க முடிந்திருக்கும். அவ்வளவு பெரிய கடனை ராஜா ரத்து செய்தார். அந்த அடிமையோ வெளியே போய், தனக்கு வெறுமனே நூறு தினாரி கடன்பட்டிருந்த சக அடிமை ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து, தனக்குக் கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பித் தரச்சொல்லி அவன் கழுத்தை நெரித்தான். அவனோ, கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் கடனைக் கொடுத்துவிடுவதாகச் சொல்லி, காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்தான்; அதற்குச் சம்மதிக்காத அந்த அடிமை தன் சக அடிமையைச் சிறையில் அடைக்கச் செய்தான். இதைக் கேள்விப்பட்ட ராஜா கொதித்துப்போனார். “நான் உனக்கு இரக்கம் காட்டியதைப் போல் நீயும் உன்னுடைய சக அடிமைக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்று அவனிடம் கடுங்கோபத்துடன் கேட்டார். பின்பு, “அவன் எல்லாக் கடனையும் அடைக்கும்வரை சிறைக் காவலர்களிடம் அவனை ஒப்படைத்தார்.”—மத். 18:21-34.
இந்தக் கதையின் மூலம் இயேசு என்ன குறிப்பைச் சொன்னார்?
5 இந்தக் கதையின் மூலம் இயேசு என்ன குறிப்பைச் சொன்னார்? “அவ்வாறே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரரை மனமார மன்னிக்காவிட்டால் என் பரலோகத் தகப்பனும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று அவர் சொன்னார். (மத். 18:35) அபூரணரான நாம் வாழ்நாளெல்லாம் ஏராளமான பாவங்களைச் செய்கிறோம்; இதனால், யெகோவாவின் நெறிமுறைகளை நாம் முழுமையாகக் கடைப்பிடிக்க முடிவதில்லை. ஆனாலும், அவர் நம்மை மன்னிக்கத் தயாராய் இருக்கிறார், நம்முடைய பாவங்களைச் சுத்தமாகத் துடைத்தழிக்க மனமுள்ளவராய் இருக்கிறார். எனவே, அவருடைய நட்பைப் பெற விரும்பினால், சக மனிதர்களின் குற்றங்குறைகளை நாம் மன்னிக்க வேண்டும். அதைத்தான் இயேசு மலைப்பிரசங்கத்தில் சொன்னார்: “மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்; மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காதிருந்தால், உங்கள் தகப்பனும் உங்களுடைய குற்றங்களை மன்னிக்க மாட்டார்.”—மத். 6:14, 15.
6. மற்றவர்களை மன்னிப்பது ஏன் அவ்வளவு சுலபமல்ல?
6 ‘இதெல்லாம் சொல்வது சுலபம், ஆனால் செய்வது ரொம்பவே கஷ்டம்’ என நீங்கள் நினைக்கலாம். உண்மைதான், யாராவது நம்மைப் புண்படுத்தினால் உணர்ச்சி அலைகள் நம் இருதயத்தில் பொங்கியெழலாம். உதாரணத்திற்கு, கோபம் தலைக்கு ஏறலாம், ஏமாற்றத்தில் இருதயம் சுக்குநூறாகலாம், நீதி வேண்டுமென மனம் துடிக்கலாம், பழிவாங்கும் எண்ணம் பொங்கியெழலாம். ஏன், புண்படுத்திய நபரை மன்னிக்கவே முடியாதென்ற முடிவுக்குக்கூட வந்துவிடலாம். இப்படிப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் நீங்கள் சிக்கித் தவிக்கிறீர்கள் என்றால், யெகோவா எதிர்பார்க்கிறபடி மன்னிக்கும் குணத்தை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
உங்கள் உணர்ச்சிகளை அலசி ஆராயுங்கள்
7, 8. யாராவது உங்களிடம் அன்பற்ற விதத்தில் நடந்துகொண்டால், அவர்களை மன்னிக்க எது உங்களுக்கு உதவும்?
7 நம்மை யாராவது புண்படுத்தும்போது அல்லது புண்படுத்திவிட்டதாக நாம் நினைத்துக்கொள்ளும்போது, நம் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கலாம், கோப எரிமலை வெடிக்கலாம். அப்படிக் கோபாவேசப்பட்ட ஓர் இளைஞனின் அனுபவத்தைக் கேளுங்கள்: ‘ஒருநாள் எனக்குச் சரியான கோபம் வந்தது. “இனிமேல் வீட்டுப் பக்கமே வர மாட்டேன்” என்று ஆக்ரோஷமாகக் கத்திவிட்டு நடையைக் கட்டினேன். வெளியே, இளம் வெயில் எனக்கு இதமாக இருந்தது. அழகான, அமைதியான பாதைகளில் கால்போன போக்கில் போய்க்கொண்டே இருந்தேன். படிப்படியாக என் மனதில் பதற்றம் தணிந்தது. சில மணிநேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பினேன்—மனந்திரும்பியவனாக, இந்தளவு கோபப்பட்டதை நினைத்து மனவேதனைப்பட்டவனாக!’ இந்த அனுபவம் நல்லதொரு விஷயத்தை நமக்குக் கற்பிக்கிறது: கோபம் தணியும்வரை காத்திருந்தால், சூழ்நிலையைச் சரியாகச் சீர்தூக்கிப் பார்க்க முடியும்; கோபத்தில் கண்மூடித்தனமாக நடந்துகொண்டதை நினைத்துப் பின்னர் வேதனையோ, வருத்தமோ பட வேண்டியிருக்காது.—சங். 4:4; நீதி. 14:29; யாக். 1:19, 20.
8 ஒருவேளை கோபமும் எரிச்சலும் உங்கள் இருதயத்தைவிட்டுப் போக மறுத்தால் என்ன செய்வது? ஏன் கோபம் வருகிறதென்று யோசித்துப் பாருங்கள். உங்களை யாராவது மோசமாக அல்லது அவமரியாதையாக நடத்தினார்களா? யாராவது வேண்டுமென்றே உங்களைப் புண்படுத்திவிட்டதாக நினைக்கிறீர்களா? அவருடைய செயல் உண்மையிலேயே மோசமானதாக இருந்ததா? கோபம் வருவதற்கான காரணத்தை அலசி ஆராய்ந்து, புரிந்துகொள்ள முயற்சி செய்தீர்களென்றால்... அதைத் தவிர்க்க உதவுகிற பைபிள் நியமங்களைத் தெரிந்துகொண்டீர்களென்றால்... யெகோவாவுக்குப் பிடித்தமான விதத்தில் நடப்பீர்கள். (நீதிமொழிகள் 15:28-ஐயும்17:27-ஐயும் வாசியுங்கள்.) அப்படி அலசி ஆராய்வது, மன்னிக்கும் மனப்பான்மையை உங்களுக்குள் உருவாக்கும். என்றாலும், மன்னிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், உங்களுடைய “இருதயத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும்” ஆராய்ந்து பார்க்க... யெகோவாவைப் போலவே மன்னிக்க மனமுள்ளவர்களாய் இருக்க... பைபிள் உங்களுக்கு உதவும்.—எபி. 4:12.
தொட்டதற்கெல்லாம் கோபப்படலாமா?
9, 10. (அ) ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் எப்படி நடந்துகொள்வீர்கள்? (ஆ) தொட்டதற்கெல்லாம் கோபப்படாமல் மன்னிக்கும் குணத்தைக் காட்டும்போது எப்படி உணருவீர்கள்?
9 வாழ்க்கையில், அநேக சந்தர்ப்பங்கள் நம் கோபத்தைக் கிளறிவிடலாம். உதாரணத்திற்கு, நீங்கள் கார் ஓட்டிக்கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். திடீரென்று வேறொரு கார் உங்கள் கார்மீது மோதிவிடுவதுபோல் எதிரே வருகிறது. அப்போது என்ன செய்வீர்கள்? சிலர், கோபம் தலைக்கேறி கார் டிரைவரைக் கண்டபடி திட்டவோ தாக்கவோ ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், ஒரு கிறிஸ்தவராக நீங்கள் ஒருபோதும் அப்படி நடந்துகொள்ளக் கூடாது.
10 நடந்த சம்பவத்தைப் பற்றி ஒரு கணம் மனதில் அலசி ஆராய்வது நல்லது. கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஏதோவொன்று உங்கள் கவனத்தைத் திசைதிருப்பியதால் நீங்களேகூட தவறு செய்திருக்கலாம். அல்லது, எதிரே வந்த காரில் ஏதாவது இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம். குறிப்பு என்னவென்றால், தவறுகள் ஏன் நடந்தன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதும், தவறுக்கான எல்லாக் காரணங்களும் நமக்குத் தெரியாது என்பதை உணர்ந்திருப்பதும், மன்னிக்க மனமுள்ளவராய் இருப்பதும், கோபத்தைத் தணிக்க... எரிச்சலைக் கட்டுப்படுத்த... ஏமாற்றத்தைத் தவிர்க்க... உதவும். “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்” என்று பிரசங்கி 7:9 சொல்கிறது. எனவே, தொட்டதற்கெல்லாம் கோபப்படாதீர்கள். ஒருவர் நம்மை வேண்டுமென்றே புண்படுத்துகிறார் என நாம் பல சந்தர்ப்பங்களில் நினைக்கலாம்; ஆனால், அவர் வெறுமனே அபூரணத்தின் காரணமாக அப்படி நடந்திருக்கலாம் அல்லது நாம்தான் அதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். எனவே, ஒரு நபருடைய செயலுக்கும் சொல்லுக்கும் பின்னால் எத்தனையோ காரணங்கள் இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள். அன்போடு அந்த நபரை மன்னியுங்கள். அப்படிச் செய்தீர்களென்றால், உண்மையிலேயே சந்தோஷப்படுவீர்கள்.—1 பேதுரு 4:8-ஐ வாசியுங்கள்.
‘நீங்கள் கூறிய சமாதான வாழ்த்து உங்களிடமே திரும்பட்டும்’
11. ஊழியத்தில் மக்கள் நம்மை ஏற்றுக்கொண்டாலும் சரி எதிர்த்தாலும் சரி, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
11 வெளி ஊழியத்தில் ஒருவர் உங்களிடம் கடுகடுப்பாக நடந்துகொள்ளும்போது நீங்கள் எவ்வாறு கோபப்படாமல் இருக்கலாம்? இயேசு 70 பேரைத் தேர்ந்தெடுத்து ஊழியம் செய்ய அனுப்பியபோது, ஒவ்வொரு வீட்டிலும் “இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக” என வாழ்த்த சொன்னார். “சமாதானத்தை விரும்புகிற ஒருவர் அங்கிருந்தால், நீங்கள் கூறிய சமாதான வாழ்த்து அவர்மேல் தங்கட்டும்,” இல்லையென்றால் “நீங்கள் கூறிய சமாதான வாழ்த்து உங்களிடம் திரும்பிவிடும்” என்று அவர்களிடம் சொல்லி அனுப்பினார். (லூக். 10:1, 5, 6) நாம் சொல்லும் நற்செய்தியை மக்கள் மனதார ஏற்றுக்கொள்வதைப் பார்க்கும்போது, சந்தோஷத்தில் திளைக்கிறோம். ஏன்? ஏனென்றால், அவர்கள் நன்மை அடையப்போகிறார்கள். ஆனால், சிலசமயம் அவர்கள் நம்மை எதிர்க்கலாம். அப்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அப்போதும் மனசமாதானத்துடன் இருக்க வேண்டுமென இயேசு சொன்னார். எனவே, வீட்டுக்காரர்கள் நம்மை ஏற்றுக்கொண்டாலும் சரி எதிர்த்தாலும் சரி, அவர்களுடைய வீட்டிலிருந்து கிளம்புகிறபோது, நம் இருதயத்தில் சமாதானம் தங்க வேண்டும். வீட்டுக்காரர் கடுகடுப்பாய் நடந்ததற்காக நாம் கோபப்பட்டால், நம் இருதயத்தில் சமாதானம் தங்காது.
12.எபேசியர் 4:31, 32-லுள்ள பவுலின் வார்த்தைகளுக்கு இசைய நாம் எப்படி நடக்க வேண்டும்?
12 ஊழியத்தில் மட்டுமல்ல, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உங்கள் இருதயத்தில் சமாதானம் தங்குவதற்குக் கடும்முயற்சி எடுங்கள். ஆனால் ஒரு விஷயத்தைக் கவனத்தில் வையுங்கள்... மற்றவர்களை மன்னிப்பது, அவர்களுடைய தவறான நடத்தையை அங்கீகரிப்பதையோ, எந்த விதத்திலும் நாம் பாதிக்கப்படாததுபோல் காட்டிக்கொள்வதையோ அர்த்தப்படுத்தாது. மாறாக, மனதிலிருந்து எல்லா மனக்கசப்பையும் களைந்துவிட்டு, உள்ளுக்குள் சமாதானமாய் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. சிலர் தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களைப் பற்றிச் சதா யோசித்துக்கொண்டிருப்பார்கள்; மற்றவர்கள் தங்களை எப்படியெல்லாம் கேவலமாக நடத்தினார்கள் என்பதை மனதில் அசைபோட்டுக்கொண்டே இருப்பார்கள்; இதனால், சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தொலைத்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட வேண்டாத யோசனைகள் உங்கள் மனதை ஆக்கிரமிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். மனதில் வன்மம் குடிபுகுந்தால் சந்தோஷம் குடிபெயர்ந்துவிடும் என்பதை நினைவில் வையுங்கள். எனவே, மற்றவர்களைத் தாராளமாய் மன்னியுங்கள்!—எபேசியர் 4:31, 32-ஐ வாசியுங்கள்.
யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் நடந்திடுங்கள்
13. (அ) எதிரியின் தலையில் ஒரு கிறிஸ்தவர் “நெருப்புத் தணலை” எவ்வாறு குவிக்க முடியும்? (ஆ) உங்களைப் புண்படுத்துபவரிடம் சாந்தமாக நடந்துகொண்டால் என்ன ஏற்படலாம்?
13 கிறிஸ்தவரல்லாத ஒருவர் உங்களுக்கு ஏதாவது தீங்கு செய்திருக்கலாம்; அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரைச் சத்தியத்திடம் ஈர்க்க நீங்கள் முயற்சியெடுக்க நினைக்கலாம். “ ‘உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; இப்படிச் செய்யும்போது நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பீர்கள்.’ தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 12:20, 21) ஒருவர் உங்கள் கோபத்தைக் கிளறும்போது, அவரிடம் இனிமையாக... மென்மையாக... நடந்துகொண்டீர்களென்றால், எப்படிப்பட்ட கல்நெஞ்சமும் கரைந்துவிடும். உங்களைப் புண்படுத்தும் நபரைப் புரிந்துகொண்டீர்களென்றால்... அவரது இடத்தில் உங்களை வைத்துப் பார்த்தீர்களென்றால்... அவர்மேல் கரிசனை காட்டினீர்களென்றால்... ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் அவர் சத்தியத்திடம் ஈர்க்கப்படுவார். அப்படி ஈர்க்கப்படுகிறாரோ இல்லையோ, நீங்கள் சாந்தமாக நடந்துகொள்வதற்கான காரணத்தை நிச்சயம் அவர் யோசித்துப் பார்ப்பார்.—1 பே. 2:12; 3:16.
14. ஒருவர் உங்கள் மனதை ரணமாக்கியிருந்தால்கூட, நீங்கள் ஏன் அவரை மன்னிக்க வேண்டும்?
14 ஒரு சிலரிடம் நாம் சகவாசமே வைத்துக்கொள்ளக் கூடாது—முக்கியமாக, சபை நீக்கம் செய்யப்பட்டோரிடம்! அவர்கள் பாவம் செய்துவிட்டு மனந்திரும்பாததால் சபையிலிருந்து நீக்கப்பட்டிருப்பவர்கள். அப்படிப்பட்ட ஒருவர் உங்கள் மனதை ரணமாக்கியிருந்தால், அவரை மன்னிப்பது உங்களுக்கு ரொம்பவே சிரமமாக இருக்கலாம்—பிற்பாடு அவர் மனந்திரும்பி வந்தால்கூட! காரணம், நெஞ்சத்தில் ஏற்படுகிற காயங்கள் அவ்வளவு சீக்கிரம் ஆறுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், மன்னிக்கும் மனதைத் தரும்படி யெகோவாவிடம் நீங்கள் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். இப்படிச் செய்வது முக்கியம், ஏனென்றால் அந்த நபருடைய இருதயத்தில் என்ன இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியாது, யெகோவாவுக்குத்தான் தெரியும். ஒருவருடைய உள்ளத்தில் புதைந்திருக்கிற யோசனைகளை அவர் ஆராய்ந்து பார்க்கிறார், தவறு செய்கிறவர்களிடம் பொறுமையாக இருக்கிறார். (சங். 7:9; நீதி. 17:3) அதனால்தான் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் நன்மையான செயல்களைச் செய்யுங்கள். கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாகுங்கள். அன்புக் கண்மணிகளே, ‘பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிலடி கொடுப்பேன் என்று யெகோவா சொல்கிறார்’ என எழுதப்பட்டுள்ளதால், நீங்கள் பழிக்குப் பழிவாங்காமல் அதைக் கடவுளுடைய கடுங்கோபத்திற்கு விட்டுவிடுங்கள்.” (ரோ. 12:17-19) மற்றவர்களை உங்களால் சரியாக நியாயந்தீர்க்க முடியுமா? முடியாது. (மத். 7:1, 2) ஆனால், கடவுள் சரியாக நியாயந்தீர்ப்பார் என்பதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம்.
15. நமக்கு யாராவது அநியாயம் செய்தால் நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
15 அநியாயத்தின் பிடியில் நீங்கள் சிக்கித் தவிக்கும்போது அதற்குக் காரணமானவர் மனந்திரும்பி வந்தும் அவரை மன்னிக்க நீங்கள் தயாராக இல்லையென்றால், அவரும்கூட ஏதோவொன்றின் பிடியில் சிக்கித் தவிக்கிறார் என்பதை மனதில் வையுங்கள். ஆம், அவரும்கூட அபூரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறார். (ரோ. 3:23) அபூரண மனிதர்கள் எல்லோரையும் கண்டு யெகோவா மனதுருகிறார். எனவே, நமக்கு அநியாயம் செய்த நபருக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும். ஒருவருக்காக நாம் ஜெபம் செய்யும்போது, அவர்மேல் நாம் கோபமாகவே இருக்க மாட்டோம், அல்லவா? நம்மைக் கேவலமாக நடத்துகிறவர்கள்மீதுகூட நாம் கோபமாக இருக்கக் கூடாதென்பதை இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன: “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.”—மத். 5:44.
16, 17. பாவம் செய்த ஒரு நபர் மனந்திரும்பிவிட்டதாக அறிவிப்புச் செய்யப்படும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள், ஏன்?
16 பாவம் செய்த ஒருவரை நீதிவிசாரணை செய்கிற பொறுப்பை யெகோவா மூப்பர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். யெகோவாவைப் போல் அவர்களால் எல்லா விஷயங்களையும் பார்க்க முடியாவிட்டாலும், பைபிளிலுள்ள அறிவுரைக்கும் அவருடைய சக்தியின் வழிநடத்துதலுக்கும் இசைய தீர்மானங்களை எடுக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். எனவே, ஜெபம் செய்த பிறகு அவர்கள் எடுக்கிற ஒவ்வொரு தீர்மானமும் யெகோவாவின் தீர்மானமே என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம்.—மத். 18:18.
மன்னிக்கும் மனம் கிறிஸ்தவ குணம்!
17 இப்படி அவர்கள் எடுக்கிற தீர்மானங்களை நாம் மனதார ஏற்றுக்கொண்டு, பற்றுமாறாதவர்களாய் நடக்க வேண்டும். பாவம் செய்த ஒரு நபர் மனந்திரும்பிவிட்டதாக அறிவிப்புச் செய்யப்படும்போது, அவரை மன்னிப்பீர்களா? அவரிடம் மீண்டும் அன்பு காட்டுவீர்களா? (2 கொ. 2:5-8) உண்மைதான், அப்படிச் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது; அதுவும் அந்த நபரால் நீங்களோ உங்கள் உறவினரோ பாதிக்கப்பட்டிருந்தால் ரொம்பவே கஷ்டம். ஆனால் யெகோவாவின் மீதும், சபையில் காரியங்களை அவர் கையாளுகிற விதத்தின் மீதும் முழு நம்பிக்கை வைத்தீர்களென்றால், சரியானதைச் செய்வீர்கள். ஆம், மற்றவர்களைத் தாராளமாய் மன்னிக்கிறவர் என்பதைக் காட்டுவீர்கள்.—நீதி. 3:5, 6.
18. தாராளமாய் மன்னிக்கும்போது என்ன நன்மைகள் விளைகின்றன?
18 மன்னிக்கும் குணம் இல்லாவிட்டால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது, பந்தங்களில் விரிசல் விழுகிறது, மன அழுத்தம் ஏற்படுகிறது, பேச்சுத்தொடர்பு அறுந்துவிடுகிறது. ஆனால், தாராளமாய் மன்னிக்கும்போது அநேக நன்மைகள் விளைவதாக மனநல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மோசமான உடல்நிலைக்குக் காரணமாய் இருக்கிற உள்ளக்கொந்தளிப்புகளுக்கும் மனக்குமுறல்களுக்கும் அது வடிகாலாக அமைகிறது; ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது, சந்தோஷமான நட்புறவுகளுக்கு உரம் சேர்க்கிறது. அதோடு, மிகமிக முக்கியமான ஆசீர்வாதத்தை, ஆம் பரலோகத் தகப்பனான யெகோவாவோடு ஓர் அருமையான பந்தத்தை, அனுபவிக்க வழிசெய்கிறது.—கொலோசெயர் 3:12-14-ஐ வாசியுங்கள்.