பொய்க் கடவுட்களுக்கு எதிராக சாட்சிகள்
“நீங்களே என் சாட்சிகள், நீங்கள் நான் தெரிந்தெடுத்த என் தாசன், இது யெகோவாவின் திருவாக்கு.”—ஏசாயா 43:10, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. உண்மையான கடவுள் யார், இன்று வணங்கப்பட்டு வரும் திரளான கடவுட்களைவிட அவர் எவ்விதங்களில் அதிவுன்னதமானவராக இருக்கிறார்?
யார் உண்மையான கடவுள்? இன்று, இந்த முக்கிய கேள்வி முழு மனிதவர்க்கத்தின் முன்பாகவும் இருக்கிறது. மனிதர்கள் திரளான கடவுட்களை வணங்கிவருகிற போதிலும், அவர்களுள் ஒருவர் மட்டுமே நமக்கு ஜீவனையும் மகிழ்ச்சியுள்ள எதிர்காலத்தையும் கொடுக்கமுடியும். “அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்,” என்று ஒருவரைக் குறித்தே சொல்லப்படமுடியும். (அப்போஸ்தலர் 17:28) உண்மையில், ஒரே ஒரு கடவுளுக்கே வணக்கத்தைப் பெற உரிமையிருக்கிறது. வெளிப்படுத்துதலில் உள்ள தெய்வீக பாடகர் குழு சொல்கிறபடி, “கர்த்தாவே [யெகோவாவே, NW], தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 4:11.
2, 3. (அ) வணங்கப்படுவதற்கு யெகோவாவுக்கு உள்ள உரிமையை சாத்தான் எவ்விதம் பொய்யுரைத்து சவாலிட்டான்? (ஆ) ஏவாளின் பாவத்தினால் அவளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் வந்த விளைவென்ன, சாத்தானுக்கு வந்த விளைவென்ன?
2 வணங்கப்படுவதற்கு யெகோவாவுக்கு உள்ள உரிமையை ஏதேன் தோட்டத்தில் சாத்தான் பொய்யுரைத்து சவால் விட்டான். யெகோவாவின் கட்டளைக்கு எதிராக ஏவாள் கலகம் செய்து யெகோவா தடைசெய்திருந்த மரத்தின் கனியை சாப்பிட்டால், அவள் கடவுளைப்போல் ஆவாள் என்று அவன் ஒரு சர்ப்பத்தின் மூலம் ஏவாளிடம் சொன்னான். “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்,” என்பதே அவனுடைய வார்த்தைகள். (ஆதியாகமம் 3:5) ஏவாள் சர்ப்பத்தை நம்பி தடைசெய்யப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்டாள்.
3 நிச்சயமாகவே, சாத்தான் பொய் சொன்னான். (யோவான் 8:44) ஏவாள் பாவம் செய்தபோது எது நன்மை எது தீமை என்பதை யெகோவா தீர்மானிக்கும்படி விடுவதற்கு பதிலாக, அப்பொறுப்பை தானே ஏற்றுக்கொண்ட அவ்வொரு விதத்திலேயே ‘தேவனைப்போல்’ ஆனாள். சாத்தான் சொன்ன பொய்யுக்கு மாறாக, அவள் நாளடைவில் இறந்தாள். எனவே ஏவாளின் பாவத்தால் உண்மையில் பயனடைந்தது சாத்தானே. உண்மையில், பாவம் செய்யும்படி ஏவாளைத் தூண்டுவதற்கு சாத்தான் வெளியே தெரிவிக்காது தனக்குள் வைத்திருந்த குறிக்கோள் அவனே ஒரு கடவுளாக ஆகிவிடவேண்டும் என்பதே. ஏவாள் பாவம் செய்தபோது, அவனைப் பின்பற்றும் மனிதர்களில் முதலாவது ஆளாக ஆனாள், சீக்கிரத்தில் ஆதாமும் அவளோடு சேர்ந்துகொண்டான். அவர்களுடைய பிள்ளைகளில் பெரும்பான்மையானோர் “பாவத்தில்” பிறந்தது மட்டுமன்றி, சாத்தானின் செல்வாக்கிற்குள் வீழ்ந்து போனார்கள். இதனால், குறுகிய காலத்திற்குள் உண்மையான கடவுளைவிட்டுப் பிரிந்த ஓர் முழு உலகமே உருவாகிவிட்டது.—ஆதியாகமம் 6:5; சங்கீதம் 51:5.
4. (அ) இவ்வுலகத்தின் கடவுள் யார்? (ஆ) எதைச் செய்ய ஓர் அவசர தேவை இருக்கிறது?
4 அந்த உலகம் ஜலப்பிரளயத்தின் மூலம் அழிக்கப்பட்டது. (2 பேதுரு 3:6) அந்த ஜலப்பிரளயத்திற்குப் பிறகு யெகோவாவை விட்டுப்பிரிந்த மற்றொரு உலகம் உருவானது, அது இன்றும் இருந்துகொண்டிருக்கிறது. அவ்வுலகத்தைக் குறித்து பைபிள் சொல்கிறது: “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிற[து].” (1 யோவான் 5:19) யெகோவாவின் கட்டளையின் உட்கருத்துக்கும் வெளிப்படையான அர்த்தத்துக்கும் எதிராக செயல்படுவதன் மூலம் இவ்வுலகம் சாத்தானின் குறிக்கோள்களை சேவிக்கிறது. அவனே அதன் கடவுள். (2 கொரிந்தியர் 4:4) ஆயினும், அடிப்படையில் அவன் ஒரு திறனற்ற கடவுளாக இருக்கிறான். மக்களை மகிழ்ச்சியடையும்படி செய்யவோ அல்லது அவர்களுக்கு உயிரளிக்கவோ அவனால் முடியாது; யெகோவா மட்டுமே அதைச் செய்ய முடியும். எனவே, அர்த்தமுள்ள வாழ்க்கையையும் மேம்பட்ட உலகத்தையும் விரும்பும் மக்கள் முதலாவது யெகோவாவே உண்மையான கடவுள் என்பதை அறிந்துகொண்டு பிறகு அவருடைய சித்தத்தைச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். (சங்கீதம் 37:18, 27, 28; பிரசங்கி 12:13) இதனால், விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுக்கவேண்டிய, அல்லது சத்தியத்தை அறிவிக்கவேண்டிய ஓர் அவசர தேவை இருக்கிறது.
5. யாரை ‘மேகம்போன்ற சாட்சிகள்’ என்று பவுல் குறிப்பிட்டார்? அவர் பட்டியலிட்ட சில நபர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்.
5 அத்தகைய விசுவாசமுள்ள நபர்கள் மனிதவர்க்க சரித்திரத்தின் ஆரம்பம் முதற்கொண்டே உலகில் இருந்திருக்கின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல், எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் அவர்களுடைய பெயர்களடங்கிய நீண்ட பட்டியல் ஒன்றைக் கொடுத்து, அவர்களை “மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள்” என அழைக்கிறார். (எபிரெயர் 12:1) ஆதாம் ஏவாளின் இரண்டாம் மகனான ஆபேல் பவுலின் பட்டியலில் முதலில் இருக்கிறார். ஜலப்பிரளயத்துக்கு முன் வாழ்ந்த ஏனோக்கும் நோவாவும்கூட குறிப்பிடப்படுகின்றனர். (எபிரெயர் 11:4, 5, 7) யூத வம்சத்தின் மூதாதையரான ஆபிரகாம் சிறப்பான இடம்பெறுகிறார். “தேவனுடைய சிநேகிதன்” என்றழைக்கப்படும் ஆபிரகாம், “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி”யாகிய இயேசுவுக்கு முற்பிதா ஆனார்.—யாக்கோபு 2:23; வெளிப்படுத்துதல் 3:14.
ஆபிரகாம் சத்தியத்துக்கு கொடுத்த சாட்சி
6, 7. ஆபிரகாமின் வாழ்க்கையும் செயல்களும் யெகோவாவே உண்மையான கடவுள் என்பதற்கு எவ்விதத்தில் ஒரு சாட்சியாக இருந்தன?
6 ஆபிரகாம் எவ்விதத்தில் ஒரு சாட்சியாக சேவித்தார்? யெகோவாவின் மீது அவர் கொண்டிருந்த உறுதியான விசுவாசத்தின் மூலமும் யெகோவாவுக்கு உண்மைப்பற்றுறுதியுள்ள கீழ்ப்படிதலை காட்டுவதன் மூலமும். ஊர் என்ற நகரத்தைவிட்டு வெளியேறி தன்வாழ்நாட்காலத்தின் எஞ்சிய பாகத்தை தூரதேசத்தில் வாழும்படி அழைக்கப்பட்டபோது ஆபிரகாம் கீழ்ப்படிந்தார். (ஆதியாகமம் 15:7; அப்போஸ்தலர் 7:2-4) நாடோடிகளாக அலைந்து கொண்டிருக்கும் குலமரபுக்குழுவினர் தங்கள் பயணவாழ்க்கையை விட்டுவிட்டு பாதுகாப்பான நகரவாழ்க்கையை சாதாரணமாகத் தெரிந்துகொள்வர். எனவே, ஆபிரகாம் நகரவாழ்க்கையை விட்டுவிட்டு கூடாரங்களில் வாழச் சென்றது, யெகோவா தேவன் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு பலமான அத்தாட்சியளித்தது. அவருடைய நடத்தையை கவனித்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவருடைய கீழ்ப்படிதல் ஒரு சாட்சியாக இருந்தது. ஆபிரகாமை அவருடைய விசுவாசத்துக்காக யெகோவா செழுமையாய் ஆசீர்வதித்தார். கூடாரங்களில் குடியிருந்தாலும் ஆபிரகாம் செல்வ வளம் பெற்றார். லோத்தும் அவருடைய குடும்பமும் கைதிகளாக எடுத்துச்செல்லப்பட்டபோது, ஆபிரகாம் பின்தொடர்ந்து சென்று வெற்றிகரமாய் அவர்களை மீட்டுவர யெகோவா உதவினார். ஆபிரகாமின் மனைவி தன் முதிர்வயதில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றார்கள், ஆபிரகாம் ஒரு வித்துக்கு தந்தையாவார் என்ற யெகோவாவின் வாக்கு இவ்வாறு உறுதிசெய்யப்பட்டது. யெகோவா தம் வாக்குகளை நிறைவேற்றும் உயிருள்ள கடவுள் என்பதை ஆபிரகாமின் மூலம் மக்கள் கண்டனர்.—ஆதியாகமம் 12:1-3; 14:14-16; 21:1-7.
7 லோத்தை மீட்டுக்கொண்டு திரும்புகையில், (பிற்காலத்தில் எருசலேம் என்றழைக்கப்பட்ட) சாலேமின் அரசனாகிய மெல்கிசேதேக்கு ஆபிரகாமை சந்தித்து ‘உன்னதமான தேவனுடைய . . . ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக,’ என்று சொல்லி அவரை வரவேற்றார். சோதோமின் அரசனும் அவரை சந்தித்து வெகுமதிகள் கொடுக்க முன்வந்தான். ஆபிரகாமோ அவற்றை மறுத்துவிட்டார். ஏன்? தன்னுடைய ஆசீர்வாதங்களுக்கு ஊற்றுமூலம் யார் என்பதைப் பற்றி எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்க அவர் விரும்பவில்லை. அவர் கூறினார்: “ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.” (ஆதியாகமம் 14:17-24) எப்பேர்ப்பட்ட சிறந்த சாட்சியாக ஆபிரகாம் இருந்தார்!
சாட்சிகளாலான தேசம்
8. மோசே எவ்விதமாக யெகோவாவின் மீது அதிக விசுவாசம் காட்டினார்?
8 ஆபிரகாமின் வம்சத்தில் வந்த மோசேயும் பவுல் கொடுக்கும் சாட்சிகளின் பட்டியலில் காணப்படுகிறார். மோசே எகிப்தின் செல்வங்களை நிராகரித்து, பின்னர் இஸ்ரவேலின் பிள்ளைகளை விடுதலைக்கு நடத்திச்செல்வதற்காக அப்பெரிய உலக வல்லரசின் அரசனை தைரியமாக எதிர்ப்பட்டார். எங்கிருந்து அவர் தைரியத்தைப் பெற்றார்? அவருடைய விசுவாசத்திலிருந்து. பவுல் சொல்கிறார்: “[மோசே] கண்ணுக்குப் புலப்படாத இறைவனைக் கண்ணால் பார்ப்பவர்போல், தளராமல் நிலைத்து நின்றார்.” (எபிரேயர் 11:27, தமிழ் கத்தோலிக்க பைபிள்) எகிப்தின் கடவுட்களை பார்க்கமுடியும், தொடமுடியும். இன்றும்கூட அவற்றின் சிலைகள் மக்களுக்கு கம்பீரமான தோற்றமளிக்கின்றன. ஆனால் யெகோவாவோ, காணமுடியாதவராக இருந்தபோதிலும் மோசேக்கு அந்த எல்லா பொய் கடவுட்களைவிட மிக அதிக அளவில் உண்மையானவராக இருந்தார். யெகோவா இருக்கிறார் என்பதைக் குறித்தும் அவர் தன் வணக்கத்தாருக்கு பலனிப்பார் என்பதைக் குறித்தும் மோசேக்கு எவ்வித சந்தேகமுமில்லை. (எபிரெயர் 11:6) மோசே ஒரு சிறந்த சாட்சியாக ஆனார்.
9. இஸ்ரவேல் தேசம் யெகோவாவை எவ்விதம் சேவிக்கவேண்டும்?
9 இஸ்ரவேலரை விடுவித்து வந்தபின், ஆபிரகாமுக்கு யாக்கோபின்மூலமாக வந்த சந்ததியாருக்கும் யெகோவாவுக்கும் இடையே செய்யப்பட்ட ஒரு உடன்படிக்கைக்கு மோசே மத்தியஸ்தராக ஆனார். இதன் விளைவாக, இஸ்ரவேல் தேசத்தினர் யெகோவாவின் சொந்த உடைமையாக ஆனார்கள். (யாத்திராகமம் 19:5, 6) முதல் முறையாக, ஒரு தேசத்தால் சாட்சி கொடுக்கப்படவேண்டும். சுமார் 800 ஆண்டுகளுக்குப்பிறகு ஏசாயாவின் மூலம் உரைக்கப்பட்ட யெகோவாவின் வார்த்தைகளின் அடிப்படை கருத்துகள் அத்தேசம் உருவானது முதற்கொண்டே பொருந்தின: “நீங்களே என் சாட்சிகள், நீங்கள் நான் தெரிந்தெடுத்த என் தாசன், இது யெகோவாவின் திருவாக்கு. நானே அவரென்று நீங்கள் அறிந்து நம்பி உணரவேண்டும்.” (ஏசாயா 43:10, தி.மொ.) இப்புதிய தேசத்தார் எவ்விதத்தில் யெகோவாவின் சாட்சிகளாக சேவிப்பார்கள்? தங்கள் விசுவாசத்தின் மூலமும் கீழ்ப்படிதலின் மூலமும், அவர்கள் சார்பாக யெகோவா செய்யும் செயல்களின் மூலமுமே.
10. இஸ்ரவேலின் சார்பாக யெகோவா செய்த வல்லமைமிக்க செயல்கள் எவ்வித்தில் சாட்சியளித்தன, அதன் விளைவுகள் என்ன?
10 இஸ்ரவேல் தேசம் உருவாகி சுமார் 40 ஆண்டுகள் ஆன பிறகு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அது சுதந்தரித்துக்கொள்ளப் போகும் நிலையில் இருந்தது. எரிகோ நகரத்தை வேவுபார்க்க வேவுகாரர் சென்றனர், அந்நகரில் வசித்துவந்த ராகாப் அவர்களைப் பாதுகாத்தாள். ஏன்? அவள் சொன்னாள்: “நீங்கள் எகிப்தைவிட்டு வந்துபோது யெகோவா உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானின் கீழ்ப்புறத்தில் சங்கரித்த எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். கேள்விப்படவே எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று; உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உயர வானத்திலும் கீழே பூமியிலும் உங்கள் கடவுளாகிய யெகோவாவே கடவுள்.” (யோசுவா 2:10-12, தி.மொ.) யெகோவாவின் வல்லமைமிக்க செயல்களைப்பற்றி ராகாபும் அவளுடைய குடும்பமும் கேள்விப்பட்டவை அவர்கள் எரிகோவையும் அதன் பொய் கடவுட்களையும் விட்டு இஸ்ரவேலருடன் சேர்ந்து யெகோவாவை வணங்கும்படி தூண்டின. தெளிவாக, இஸ்ரவேலரின் மூலம் யெகோவா ஒரு வல்லமைமிக்க சாட்சியைக் கொடுத்திருந்தார்.—யோசுவா 6:25.
11. சாட்சிகொடுத்தல் சம்பந்தமாக என்ன உத்தரவாதம் இஸ்ரவேலில் இருந்த எல்லா பெற்றோருக்கும் இருந்தது?
11 இஸ்ரவேலர்கள் எகிப்தில் இருந்தபோது, யெகோவா மோசேயை பார்வோனிடம் அனுப்பி பின்வருமாறு சொன்னார்: “நீ பார்வோனிடத்தில் போ, நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் [“கடினமாகும்படி விட்டுவிட்டேன்,” NW]; அவர்கள் நடுவே நான் என் அடையாளங்களாகிய இவைகளைக் காண்பிக்கும் படிக்கும் நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குச் செய்த என் அடையாளங்களையும் நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே யெகோவா என்பதை நீங்கள் அறியும்படிக்கும் இப்படிச் செய்தேன்.” (யாத்திராகமம் 10:1, 2, தி.மொ.) கீழ்ப்படிதலுள்ள இஸ்ரவேலர்கள் யெகோவாவின் பலத்த செய்கைகளைப் பற்றி தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுவார்கள். அந்தப் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கு, இவ்வாறு ஒரு தலைமுறையினர் அடுத்த தலைமுறையினருக்கு சொல்லுவது தொடர்ந்து நடைபெறும். இவ்வாறாக, யெகோவாவின் வல்லமைமிக்க செயல்கள் நினைவில் வைக்கப்படும். அதேவிதமாக இன்று, தங்கள் பிள்ளைகளிடம் சாட்சி கொடுக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது.—உபாகமம் 6:4-7; நீதிமொழிகள் 22:6.
12. சாலொமோனின் மீதும் இஸ்ரவேலின் மீதும் இருந்த யெகோவாவின் ஆசீர்வாதம் எவ்விதம் ஒரு சாட்சியாக சேவித்தது?
12 இஸ்ரவேலர் உண்மைத்தன்மையோடு இருந்தபோது அவர்கள் மீது இருந்த யெகோவாவின் செழுமையான ஆசீர்வாதங்கள் சுற்றியிருந்த தேசங்களுக்கு ஒரு சாட்சியாக சேவித்தன. யெகோவா வாக்களித்த ஆசீர்வாதங்களையெல்லாம் விவரித்தப்பின் மோசே சொன்னபடி: “அப்பொழுது யெகோவாவின் திருநாமம் தரிக்கப்பெற்றாய் என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு உனக்குப் பயப்படுவார்கள்.” (உபாகமம் 28:10, தி.மொ.) சாலொமோனுடைய விசுவாசத்தின் காரணமாக அவருக்கு ஞானமும் செல்வமும் கொடுக்கப்பட்டது. அவருடைய ஆட்சியின்கீழ் தேசம் செழித்து நீண்டகாலத்துக்கு சமாதானத்தை அனுபவித்தது. அச்சமயத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம்: “சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.” (1 இராஜாக்கள் 4:25, 29, 30, 34) சாலொமோனைக் காண வந்தோரில் ஒரு பிரதான நபர் சேபாவின் அரசி. அத்தேசத்தின் மீதும் அதன் ராஜாவின் மீதும் இருந்த யெகோவாவின் ஆசீர்வாதத்தை கண்கூடாகக் கண்டபிறகு, அவள் சொன்னதாவது: “உமது கடவுளாகிய யெகோவாவுக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படி உம்மைத் தமது சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கப்பண்ண உம்மில் பிரியங்கொண்ட உமது கடவுளாகிய யெகோவா புகழப்படுவாராக; உமது கடவுள் இஸ்ரவேலை என்றும் நிலைநிறுத்தும்படி நேசிக்கிறபடியினால் அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக ஏற்படுத்தினார்.”—2 நாளாகமம் 9:8, தி.மொ.
13. இஸ்ரவேலின் மிகத் திறம்பட்ட சாட்சி எதுவாக இருந்திருக்கக்கூடும், அதிலிருந்து இப்போதும் நாம் எப்படி பயனடைகிறோம்?
13 ஒருவேளை இஸ்ரவேலரின் மிகத் திறம்பட்ட சாட்சியாக இருந்திருந்த ஒன்றை பவுல் குறிப்பிட்டார். ரோமிலிருந்த கிறிஸ்தவ சபையிடம் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலரைப் பற்றி பேசுகையில், அவர் சொன்னார்: “தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது.” (ரோமர் 3:1, 2) இஸ்ரவேலோடு யெகோவாவின் செயல்தொடர்புகளையும் அவருடைய புத்திமதிகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய தீர்க்கதரிசனங்களையும் எழுத்து வடிவில் பதிவுசெய்ய மோசே முதற்கொண்டு உண்மைத்தன்மையுள்ள குறிப்பிட்ட இஸ்ரவேலர் சிலர் ஏவப்பட்டனர். அவ்வெழுத்துக்களின் மூலம் அந்த எழுத்தாளர்கள் ஒரே ஒரு கடவுளே இருக்கிறார், அவருடைய பெயர் யெகோவா என்று, நம் தலைமுறை உட்பட பின்வரும் தலைமுறைகள் அனைத்துக்கும் சாட்சி கொடுத்தனர்.—தானியேல் 12:9; 1 பேதுரு 1:10-12.
14. யெகோவாவுக்கு சாட்சிகொடுத்தவர்களில் சிலர் ஏன் துன்புறுத்தலை அனுபவித்தனர்?
14 வருந்தத்தக்க விதத்தில், இஸ்ரவேல் விசுவாசத்தைக் காட்ட அடிக்கடி தவறியது. இதனால் யெகோவா தன் தேசத்துக்கே சாட்சிகளை அனுப்பவேண்டியதாயிற்று. இவர்களில் அநேகர் துன்புறுத்தப்பட்டனர். பவுல் சொன்னார்: “வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்.” (எபிரெயர் 11:36) உண்மையிலேயே உத்தமமுள்ள சாட்சிகள்! யெகோவாவின் தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்தின் உடன் அங்கத்தினர்களிடமிருந்தே அவர்களுக்கு பெரும்பாலும் துன்புறுத்தல் வந்தது எவ்வளவு வருந்தத்தக்கது! (மத்தேயு 23:31, 37) உண்மையில், அந்தத் தேசத்தின் பாவம் அவ்வளவு அதிகமானதால், பொ.ச.மு. 607-ல் எருசலேமை அதன் ஆலயத்துடன் சேர்த்து அழித்துவிட்டு உயிர்தப்பிய இஸ்ரவேலர்களில் பெரும்பான்மையானோரை நாடுகடத்திச் செல்லும்படி யெகோவா பாபிலோனியர்களை வரவழைத்தார். (எரேமியா 20:4; 21:10) யெகோவாவின் பெயருக்குக் கொடுக்கப்பட்டு வந்த அந்தத் தேசிய சாட்சி அதோடு முடிவுக்கு வந்ததா? இல்லை.
கடவுட்களுக்கு ஓர் நியாய விசாரணை
15. பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தபோதும் எவ்விதம் ஒரு சாட்சி கொடுக்கப்பட்டது?
15 பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தபோதிலும், அத்தேசத்தின் விசுவாசம் நிறைந்த அங்கத்தினர்கள் யெகோவாவின் தேவத்துவத்தைப் பற்றியும் வல்லமையைப் பற்றியும் சாட்சிகொடுக்க தயங்கவில்லை. உதாரணமாக, தானியேல் தைரியமாக நேபுகாத்நேச்சாரின் கனவுகளுக்கு அர்த்தம் சொன்னார், சுவரில் தோன்றிய வார்த்தைகளை பெல்ஷாத்சாருக்கு விளக்கினார், ஜெபத்தைப் பொருத்த விஷயத்தில் தரியுவுக்கு இணங்கிப் போக மறுத்தார். அந்த மூன்று எபிரேயர்களுங்கூட, ஒரு சொருபத்தை வணங்க மறுக்கையில் நேபுகாத்நேச்சாரிடம் வியக்கத்தக்க சாட்சி கொடுத்தனர்.—தானியேல் 3:13-18; 5:13-29; 6:4-27.
16. இஸ்ரவேலர் தங்கள் தேசத்துக்கு திரும்பிவருவதை யெகோவா எப்படி முன்னறிவித்தார், இந்தத் திரும்பிவருதலின் நோக்கம் என்னவாக இருக்கும்?
16 இருப்பினும், இஸ்ரவேலின் மண்ணில் மறுபடியும் ஒரு தேசிய சாட்சி கொடுக்கப்பட வேண்டும் என்று யெகோவா நோக்கம் கொண்டார். பாழாக்கப்பட்டிருந்த அத்தேசத்தைக் குறித்து யெகோவாவின் தீர்மானத்தை பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட நிலையிலிருந்த யூதர்களிடையே தீர்க்கதரிசனம் உரைத்துவந்த எசேக்கியேல் எழுதினார்: “நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்.” (எசேக்கியேல் 36:10) யெகோவா ஏன் இதைச் செய்வார்? முக்கியமாக தன் பெயருக்கு ஒரு சாட்சியாக இருப்பதற்காகவே. எசேக்கியேலின் மூலம் அவர் சொன்னார்: “இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் நிமித்தம் அல்ல, நீங்கள் வந்து சேர்ந்த புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.”—எசேக்கியேல் 36:22; எரேமியா 50:28.
17. ஏசாயா 43:10-ல் உள்ள வார்த்தைகளின் சூழமைவு என்ன?
17 பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட நிலையிலிருந்து இஸ்ரவேல் திரும்பிவருவதை முன்னறிவிக்கையிலேயே, இஸ்ரவேல் யெகோவாவின் சாட்சி, அவருடைய தாசன் என்று கூறும் ஏசாயா 43:10-லுள்ள வார்த்தைகளை எழுத தீர்க்கதரிசியான ஏசாயா கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டார். ஏசாயா 43 மற்றும் 44-ஆம் அதிகாரங்களில் யெகோவா இஸ்ரவேலின் சிருஷ்டிகர், உருவாக்கினவர், தேவன், பரிசுத்தர், இரட்சகர், மீட்பர், ராஜா, உண்டாக்கினவர் என விவரிக்கப்படுகிறார். (ஏசாயா 43:3, 14, 15; 44:2) அவரை அவ்வாறு மகிமைப்படுத்த இஸ்ரவேல் தொடர்ந்து தவறியதன் காரணமாகவே அது நாடுகடத்தப்படுவது அனுமதிக்கப்பட்டது. ஆயினும், இன்னும் அவர்கள் அவருடைய மக்களாகத்தான் இருந்தனர். யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தார்: “பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.” (ஏசாயா 43:1) இஸ்ரவேல் பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தது முடிவுக்கு வரும்.
18. இஸ்ரவேல் பாபிலோனிலிருந்து விடுவிக்கப்பட்டது யெகோவாவே ஒரே மெய்க்கடவுள் என்பதை எவ்விதம் நிரூபித்தது?
18 உண்மையில், இஸ்ரவேலர்கள் பாபிலோனிலிருந்து விடுவிக்கப்படுவதை கடவுட்களுக்கு ஒரு நியாய விசாரணையைப்போல் ஆகும்படி யெகோவா செய்தார். மற்ற தேசங்களின் கடவுட்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவரும்படி அவர் சவால் விடுத்து, இஸ்ரவேலை தன்னுடைய சாட்சியாக குறிப்பிட்டார். (ஏசாயா 43:9, 12) நாடுகடத்தப்பட்ட நிலையிலிருந்து இஸ்ரவேலரை அவர் விடுவித்தபோது, பாபிலோனின் கடவுட்கள் எவ்விதத்திலும் கடவுட்களே இல்லையென்றும், தானே உண்மையான கடவுள் எனவும் அவர் நிரூபித்தார். (ஏசாயா 43:14, 15) யூதர்களை விடுவிக்கப்போகும் தன் ஊழியனாக பெர்சியனாகிய கோரேசின் பெயரை இந்நிகழ்ச்சிக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிடுவதன் மூலம் தம்முடைய தேவத்துவத்துக்கு கூடுதலான நிரூபணத்தை அவர் அளித்தார். (ஏசாயா 44:28) இஸ்ரவேல் விடுவிக்கப்படும். ஏன்? யெகோவா விளக்குகிறார்: “இவர்கள் [இஸ்ரவேலர்] என் துதியைச் சொல்லிவருவார்கள்.” (ஏசாயா 43:21) சாட்சி கொடுப்பதற்கு இது மேலும் வாய்ப்பளிக்கும்.
19. இஸ்ரவேலர்களை எருசலேமுக்கு திரும்பிச் செல்லும்படி கோரேசு கொடுத்த அழைப்பின் மூலமும் அவ்விதம் திரும்பிவந்தபின் விசுவாசமுள்ள யூதர்களுடைய செயல்களின் மூலமும் எப்படிப்பட்ட சாட்சி கொடுக்கப்பட்டது?
19 காலம் வந்தபோது, தீர்க்கதரிசனமுரைக்கப்பட்டபடியே பெர்சியனாகிய கோரேசு பாபிலோனை வென்றான். அவன் புறமத வணக்கத்தைச் சேர்ந்தவனாயிருந்தும் பாபிலோனிலிருந்த யூதர்களுக்கு பின்வரும் அறிவிப்பை எழுதியனுப்பியதன்மூலம் யெகோவாவின் தேவத்துவத்தை அறிவித்தான்: “அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்; எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.” (எஸ்றா 1:3) அநேக யூதர்கள் புறப்பட்டனர். நீண்ட பயணத்திற்குப்பின் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அடைந்து அவர்கள் பழைய ஆலயம் இருந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினர். சோர்வூட்டும் நிலைமையும் கடும் எதிர்ப்பும் இருந்த போதும், இறுதியில் அவர்கள் ஆலயத்தையும் எருசலேம் நகரத்தையும் திரும்ப கட்ட முடிந்தது. இவையனைத்தும், “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, [அவருடைய] ஆவியினாலேயே ஆகும்,” என்று யெகோவா சொன்னபடி நிகழ்ந்தன. (சகரியா 4:6) இச்சாதனைகள் அனைத்தும் யெகோவாவே உண்மையான கடவுள் என்பதற்குக் கூடுதலான அத்தாட்சிகளை அளித்தன.
20. இஸ்ரவேலரின் பலவீனங்கள் இருந்தபோதிலும், பண்டைய உலகில் யெகோவாவின் நாமத்திற்கு அவர்கள் சாட்சிகொடுத்ததைப் பற்றி என்ன சொல்லப்படலாம்?
20 இவ்வாறு, யெகோவா இஸ்ரவேலரை, அவர்கள் அபூரணமானவர்களாகவும், சில சமயங்களில் கலகத்தனமுள்ளவர்களாகவும் இருந்தபோதிலும் தன் சாட்சிகளாக தொடர்ந்து உபயோகித்தார். கிறிஸ்தவ காலத்திற்கு முன்பிருந்த உலகில், தேவாலயத்தையும் ஆசாரியத்துவத்தையும் கொண்ட அந்தத் தேசம் மெய் வணக்கத்திற்கு உலக மையமாக இருந்தது. இஸ்ரவேலின் தொடர்பாக யெகோவா நடப்பித்த செயல்களை எபிரெய வேதாகமங்களில் வாசிக்கும் எவருக்கும் ஒரே ஒரு மெய்க் கடவுளே இருக்கிறார், அவருடைய பெயர் யெகோவா என்பதைக் குறித்து எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. (உபாகமம் 6:4; சகரியா 14:9) ஆயினும், யெகோவாவின் பெயருக்கு இதைவிட ஒரு பெரிய சாட்சி கொடுக்கப்பட வேண்டியிருந்தது, இதை நாம் அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிப்போம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யெகோவாவே உண்மையான கடவுள் என ஆபிரகாம் எவ்விதம் சாட்சி கொடுத்தார்?
◻ மோசேயிடம் இருந்த எந்தச் சிறப்பான பண்பு ஒரு உண்மைத்தன்மையுள்ள சாட்சியாக இருக்க அவருக்கு உதவியது?
◻ எவ்வழிகளில் இஸ்ரவேல் யெகோவாவைப் பற்றி ஒரு தேசிய சாட்சியை கொடுத்தது?
◻ பாபிலோனிலிருந்து இஸ்ரவேல் விடுவிக்கப்பட்டது ஒரே மெய் கடவுள் யெகோவாவே என்பதை எவ்விதம் நடப்பித்து காட்டியது?
[பக்கம் 10-ன் படம்]
ஆபிரகாம் தன் விசுவாசத்தின் மூலமும் கீழ்ப்படிதலின் மூலமும், யெகோவாவின் தேவத்துவத்துக்கு சிறப்பான சாட்சியைக் கொடுத்தார்