காற்றோடு குத்துச்சண்டை போடாதீர்கள்
1. ஒன்று கொரிந்தியர் 9:26 ஊழியத்திற்கு எப்படிப் பொருந்துகிறது?
1 “நான் இப்போது ஓடுகிறேன், ஆனால் சேரவேண்டிய இடத்தை அறியாதவன்போல் அல்ல. போராடுகிறேன், ஆனால் காற்றோடு குத்துச்சண்டை போடுகிறவன்போல் அல்ல” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொ. 9:26) அவர் என்ன சொல்ல வருகிறார்? ஆன்மீக இலக்குகளை எட்டிப் பிடிப்பதிலேயே குறியாய் இருந்ததாகச் சொல்கிறார். என்றாலும், இந்த வசனம் நாம் செய்யும் ஊழியத்திற்கும் பொருந்துகிறது. குத்துச்சண்டை போடுகிறவர் குறிபார்த்துக் குத்தவில்லை என்றால் காற்றோடு சண்டை போடுவதுபோல் ஆகிவிடும். அதேபோல், ஊழியத்திற்காக நாம் எடுக்கிற முயற்சிகள் வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நமக்குக் கைமேல் பலன் கிடைக்கும். சரி, அதை எப்படிச் செய்யலாம்?
2. எங்கே, எப்போது பிரசங்கிப்பது எனத் தீர்மானிக்கும் விஷயத்தில் பவுலையும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களையும் நாம் எப்படிப் பின்பற்றலாம்?
2 மக்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்லுங்கள்: பவுலும் சரி முதல் நூற்றாண்டு ஊழியர்களும் சரி, மக்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ அங்கெல்லாம் தேடிப் போய்ப் பிரசங்கித்தார்கள். (அப். 5:42; 16:13; 17:17) உங்கள் பிராந்தியத்திலுள்ள பெரும்பாலான மக்கள் சாயங்காலத்தில் வீட்டில் இருந்தால், அந்த நேரத்தில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது சிறந்தது. பொதுவாக மக்கள் அதிகாலையில் வேலைக்குச் சென்று மாலையில் திரும்பி வருவார்கள். அதனால், அந்த நேரங்களில் பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறதா? உங்கள் பிராந்தியத்திலுள்ள கடைத்தெருக்களில் மக்கள் நடமாட்டம் எப்போது அதிகமாக இருக்கிறது? அப்படிப்பட்ட சமயங்களில், தெரு ஊழியம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
3. பிராந்தியத்தில் ஊழியம் செய்யும்போது நம் முயற்சிகள் வீணாகாமல் இருக்க என்ன செய்யலாம்?
3 பிராந்தியத்தில் உங்கள் முயற்சிகள் வீணாகாமல் இருக்க: பிராந்தியத்தில் ஊழியம் செய்யும்போது நம் முயற்சிகள் வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு பகுதியில் பெரிய கும்பலாகப் போய் ஊழியம் செய்தால், அவர்களைப் பிரித்துவிடவும், பிராந்தியம் கொடுக்கவும் நேரம் எடுக்கும். அதனால் சிறு சிறு தொகுதிகளாகப் பிரித்து விடுவது நல்லது. அதேபோல், கிராமப்புறங்களில் ஊழியம் செய்யும்போது, சிறு சிறு தொகுதியாகப் பிரிந்து சென்றால் பிராந்தியத்தைச் சீக்கிரமாக முடிக்க முடியும், ஊழியத்தில் பேச எல்லாருக்கும் வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு அருகிலேயே பிராந்தியம் எடுத்துச் செய்தால், பயணம் செய்யும் நேரத்தை மிச்சப்படுத்தலாம், அல்லவா?
4. ‘மனிதர்களைப் பிடிக்கும்’ வேலையை வெற்றிகரமாய்ச் செய்ய எது நமக்கு உதவும்?
4 நற்செய்தி அறிவிப்பவர்களை இயேசு ‘மனிதர்களைப் பிடிப்பவர்கள்,’ அதாவது மீன் பிடிப்பவர்களைப் போல மனிதர்களைப் பிடிப்பவர்கள், என்று சொன்னார். (மாற். 1:17) ஒரு மீனவனுடைய குறிக்கோள் வெறுமனே வலையை வீசுவது அல்ல, மீனைப் பிடிப்பதுதான். எனவே, திறமையான மீனவர்கள், எங்கே, எப்போது நிறைய மீன் கிடைக்குமோ அப்போது மீன் பிடிக்க செல்வார்கள். அதோடு, நேரங்காலத்தோடு வேலையைத் தொடங்கி விடுவார்கள். ஆம், தங்களுடைய முயற்சிகளை அவர்கள் வீணாக்க மாட்டார்கள். நாமும் இதேபோல் சுறுசுறுப்பாய் ஊழியத்தில் ஈடுபடுவோமாக!—எபி. 6:11.