“எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்”
முதல் கொரிந்தியரிலிருந்து முக்கியக் குறிப்புகள்
யெகோவா தேவனை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்கக்கூடிய யாவருக்கும் அவருடைய மகிமை முக்கிய அக்கறையுடையதாயிருக்கிறது. (யோவான் 4:23, 24) ஆகவே பண்டைய கொரிந்துவிலிருந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான்: “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” (1 கொரிந்தியர் 10:31) இதைச் செய்வதானது இந்தப் பொருளாசையுள்ள, பொய் மதத்தில் மூழ்கியிருக்கும் ஒழுக்கமற்ற உலகில் நம்முடைய பிரச்னைகளைச் சரி செய்வதற்கு யெகோவாவின் வழியை ஏற்றுக்கொள்வதை நம்மிடம் தேவைப்படுத்துகிறது.
கொரிந்திய கிறிஸ்தவர்களுக்குத் தங்களுடைய பிரச்னைகளை சரிசெய்து கொள்வதற்காக தெய்வீக உதவி தேவைப்பட்டது, ஏனென்றால் அவர்கள் வளமான, பொய்மதம் நிறைந்த ஒழுக்கமற்ற பட்டணத்தில் வாழ்ந்து வந்தனர். கிரேக்க கண்டத்திற்கும் பெலோபோனிஸ்ஸாஸுக்கும் இடையே நிலப்பரப்புகளை இணைக்கும் சிறு பகுதியிலே அமைந்திருந்த கொரிந்து ரோம மாநிலமாகிய அகயாவின் தலைநகரமாக இருந்தது. மேலும் இது 4,00,000 ஜனத்தொகையை உடையதாக மதிப்பிடப்பட்டிருந்தது. பவுல் இந்தச் சபையை பொ.ச. 50-ல் ஸ்தாபித்தான்.—அப்போஸ்தலர் 18:1–11.
கொரிந்தியர் பவுலிடம் விவாகத்தைப் பற்றியும் விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட மாம்சத்தைப் புசிப்பதைப் பற்றியும் எழுதிக் கேட்டிருந்தனர். (7:1) அவன் அவர்கள் மத்தியில் பிரிவினைகளும் மேலும் பெரியளவு ஒழுக்கயீனமான ஒரு காரியமும் இருந்ததினால் வருத்தப்பட்டான். அவர்களுக்குக் கர்த்தரின் இராப்போஜனத்தை அனுசரிக்கும் சரியான முறையைப் பற்றி புத்திமதி தேவைப்பட்டது. விசுவாச துரோகத்தைப் பற்றிய அச்சுறுத்தலும் இருந்தது, மேலும் சபைக்கு அன்பைப் பற்றிய புத்திமதி தேவைப்பட்டது. இந்தக் காரணங்களுக்காக, பவுல் தனது ஏவப்பட்ட முதல் நிருபத்தை கொரிந்தியர்களுக்கு எபேசுவிலிருந்து ஏறக்குறைய பொ.ச. 55-ல் எழுதினான். ஆனால் நாமும்கூட இதிலிருந்து நன்மையடையலாம்.
ஐக்கியமும் ஒழுக்க சுத்தமும் முக்கியம்
நாம் “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்”வோமென்றால், சபையிலே பிரிவினைகளை உண்டாக்க தேடும் எவரையும் நாம் பின்பற்ற மாட்டோம்—கொரிந்தியர்கள் எதிர்ப்பட்ட பிரச்னைகளில் இது ஒன்று. (1:1–4:21) பவுல் அவர்களை “ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களா”யிருக்குமாறு அறிவுரை சொன்னான். நாம் இந்தப் புத்திமதியைப் பின்பற்றி ஆவிக்குரிய குணங்களை வளர்த்தால் ஐக்கியமானது நிலவும். பாவமுள்ள யாதொரு மனிதனில் பெருமைப் பாராட்டுவதைக் காட்டிலும் ஆவிக்குரிய விதத்தில் நாம் ‘நட்டு, நீர் பாய்ச்சினாலும் தேவனே விளையச் செய்கிறார்’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கொரிந்துவிலிருந்த தற்பெருமைப் பாராட்டியவர்கள் அவர்கள் பெறாத எதையும் கொண்டில்லை; ஆகவே உடன் விசுவாசிகளைக் காட்டிலும் மேன்மையானவர்களாக நம்மை நாம் ஒருபோதும் கருத வேண்டாம். இப்படிப்பட்ட தாழ்மையான குணம் ஐக்கியத்தை முன்னேற்றுவிக்க நமக்கு உதவி செய்யும்.
ஐக்கியம் நிலவ வேண்டுமென்றால், நியமிக்கப்பட்ட மூப்பர்கள் சபையை ஆவிக்குரிய விதத்தில் சுத்தமாக வைக்க செயல்பட வேண்டும். (5:1–6:20) ‘கொஞ்சம் புளித்தமா எல்லா மாவையும் புளிப்பாக்கும்.’ ஆதலால் மனந்திரும்பாத வேசிமார்க்கத்தார், பொருளாசைக்காரர், விக்கிரகாராதனைக்காரர், உதாசினர், குடிவெறியர், கொள்ளைக்காரர் சபைநீக்கம் செய்யப்பட வேண்டும். தேவனுடைய ஆலயத்தை தீட்டுப்படுத்தும் ஒழுக்க அசுத்தம் யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் சகித்துக் கொள்ளப்படக்கூடாது. அதற்கு மாறாக, அவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாக்கும் காரியங்களைச் செய்ய வேண்டும்.
மற்றவர்கள்மேல் கரிசனையுள்ளவர்களாக இருங்கள்
“எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்ய” நாம் விவாகம் மற்றும் தனிமையாக இருத்தல் பேரில் பவுலின் புத்திமதியைப் பொருத்துவது அவசியம். (7:1–40) விவாக பந்தத்தில் இணைக்கப்பட்டவர்கள் பாலுறவுக் கடமைகளைக் கரிசனையோடு செலுத்த வேண்டும். விவாகமான ஒரு கிறிஸ்தவன் அவிசுவாசியான துணையிடமிருந்து பிரியக்கூடாது, ஏனென்றால் ஒன்றாக இருப்பது அந்த நபர் இரட்சிப்பு அடைய உதவி செய்யலாம். விவாகம் அதிகரிக்கப்பட்ட கவலையைக் கொண்டுவருகையில். தனிமை கவனசிதறல் இல்லாமல் கர்த்தருக்கு சேவைச் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு ஆவிக்குரிய விதத்தில் உதவி செய்ய விரும்பும் ஒரு நபருக்கு உதவியாக இருக்கக்கூடும்.
தனிநபராக இருப்பவர்களாக இருந்தாலும் சரி, விவாகமானவர்களாக இருந்தாலும் சரி, மற்றவர்களின் ஆவிக்குரிய நலனில் கரிசனைக் காட்டுதல் எல்லாக் கிறிஸ்தவர்களின் கடமையாக இருக்கிறது. (8:1–10:33) ஆகவே, கொரிந்தியர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை சாப்பிடுவதால் மற்றவர்களை இடறலடையச் செய்யாதபடி புத்திமதியளிக்கப்பட்டனர். நற்செய்தியை ஏற்றுக் கொள்வதில் எவரையாவது தடைச் செய்வதைத் தவிர்ப்பதற்கு, பவுல் பொருள் உதவியை வாங்கும் உரிமையைக்கூட அப்பியாசிக்கவில்லை. அவன் மேலும் ‘மற்றவர்களுக்குப் பிரசங்கித்துவிட்டு தான்தானே ஆகாதவனாக போகாதபடிக்கு தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்தினான்.’ பாவத்திற்குள்ளான இஸ்ரவேலின் வனாந்தர அனுபவங்களை இருதயத்திற்குக் கொண்டு செல்வதானது விக்கிரகாராதனை மற்றும் தவறு செய்தலை தவிர்ப்பதற்கு நமக்கு உதவி செய்யும். மேலுமாக, ‘எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்வது’ எவரையாவது இடறலடைய செய்வதைத் தவிர்ப்பதற்கு நமக்கு உதவி செய்யும்.
மரியாதை காண்பித்து ஒழுங்கைக் கடைப்பிடியுங்கள்
“எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்”வது நாம் சரியான மதிப்பைக் காண்பிப்பதைத் தேவைப்படுத்துகிறது. (11:1–34) ஒரு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ பெண் சபையிலே ஜெபம் செய்யும்போதோ அல்லது தீர்க்கதரிசனம் சொல்லும்போதோ ஒரு தலை முக்காட்டை அணிவதன் மூலம் தலைமை ஸ்தானத்திற்கு மரியாதை காண்பித்தாள். தலைமை ஸ்தானத்திற்கு இதேவிதமான மரியாதையானது தேவபக்தியுள்ள பெண்களால் இன்றும் காண்பிக்கப்படுகிறது. மேலுமாக திருத்தம் தேவைப்பட்ட கொரிந்தியர்கள் போலாவதைத் தவிர்க்க நாம் எல்லாரும் கர்த்தரின் இராப்போஜனத்திற்கு மரியாதையைக் காண்பிக்க வேண்டும்.
“எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்ய” நாம் கூட்டங்களையும் ஒழுங்கான முறையில் நடத்த வேண்டும். (12:1–14:40) பூர்வீகக் கிறிஸ்தவர்கள் கூடியபோது, அந்நிய பாஷைகள் பேசுவது போன்ற ஆவியின் வரங்களை அவர்களுடைய ஊற்றுமூலம் மற்றும் நோக்கத்திற்காக மரியாதையோடும் போற்றுதலோடும் உபயோகிக்க வேண்டியதாயிருந்தது. நாம் இப்போது இந்த வரங்களை உடையவர்களாக இல்லாதபோதிலும், இவைகளை மிஞ்சக்கூடிய அன்பை வெளிக்காட்டுவதன் மூலம் நாம் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருகிறோம். நாமும் யெகோவாவை மகிமைப்படுத்துகிறோம். ஏனென்றால் நம்முடைய கூட்டங்கள் நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்டவையாயிருக்கின்றன, மேலும் நாம் பவுலின் புத்திமதியாகிய “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது” என்பதை மரியாதையோடு பொருத்துகிறோம்.
‘எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்காக செய்வதானது’ பைபிள் கோட்பாட்டை மதித்து ஆவிக்குரியவிதத்தில் உறுதியாக நிற்பதை நம் பேரில் கேட்கிறது. (15:1–16:24) அநேகமாக கிரேக்க தத்துவத்தின் செல்வாக்கினால், கொரிந்து சபையிலுள்ள சிலர்: “மரித்தவர்களுக்கு உயிர்த்தெழுதல் இல்லை” என்று சொன்னார்கள். (அப்போஸ்தலர் 17:18, 32-ஐ ஒப்பிடவும்.) எதிர்காலத்தில் எந்த உயிர்த்தெழுதலும் இருக்காது ஆனால் உயிரோடிருக்கும் கிறிஸ்தவர்கள் அடையாள அர்த்தமுள்ள ஆவிக்குரிய உயிர்த்தெழுதலை அனுபவித்துவிட்டனர் என்ற விசுவாச துரோகிகள் கொண்டிருந்த கருத்தை உடையவர்களாக அவர்கள் இருந்திருக்கலாம். (2 தீமோத்தேயு 2:16–18) பவுல் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறிப்பிட்டு மெய்யான நம்பிக்கையை ஆதரித்தான். மேலும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அழியாத பரலோக வாழ்க்கைக்கு எழுப்பப்பட வேண்டியதால் அவர்கள் மரித்தாக வேண்டும் என்பதையும் காண்பித்தான். மற்ற வழிகளிலும்கூட, அவனுடைய வார்த்தைகள் விசுவாச துரோகத்தை தவிர்த்து மேலும் ‘விசுவாசத்தில் உறுதியாக நிற்க’ நமக்கு உதவுகிறது.
எப்போதும் தேவனுடைய மகிமைக்காகக் காரியங்களைச் செய்யுங்கள்
முதல் கொரிந்தியரிலுள்ள பவுலின் புத்திமதி பொ.ச. முதல் நூற்றாண்டில் எவ்வளவு பிரயோஜனமாயிருந்ததோ அதேயளவு இன்றும் இருக்கிறது. அது நவீனகால யெகோவாவின் சாட்சிகளை ஒரு சுத்தமான ஜனமாக தேவனை ஐக்கியத்தோடு சேவிக்க உந்துவிக்கிறது. அப்போஸ்தலனின் வார்த்தைகள் மற்றவர்களின் பேரில் கரிசனையாக இருக்கவும் சரியான மரியாதை காண்பிக்கவும் நம்மை உந்துவிக்க வேண்டும். பவுல் சொன்னவை நாம் விசுவாசதுரோகத்தை எதிர்த்து மெய் விசுவாசத்திற்காக உறுதியாக நிற்க நம்மை பலப்படுத்தக்கூடும்.
நிச்சயமாகவே, யெகோவாவின் ஒவ்வொரு விசுவாசமுள்ள ஊழியனின் இருதயபூர்வமான ஆசையும் அவரை வாழ்த்தி, அவருடைய ராஜ்யத்தை அறிவித்து, அவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே. (சங்கீதம் 145:1, 2, 10–13) உண்மையில், கொரிந்தியருக்குப் பவுல் எழுதிய முதல் நிருபமானது “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்ய” நமக்கு உதவுகிறது. (w90 9/15)
[பக்கம் 24, 25-ன் பெட்டி/படம்]
மரிப்பது நிச்சயம்: கொரிந்தியருக்கு அவனுடைய கடிதங்களில் ஒரு முறைக்கு மேல், பவுல் விளையாட்டரங்கில் மரணத்தைப் பற்றி குறிப்பிட்டான். உதாரணமாக, அவன் எழுதினான்: “எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள் போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப் பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.” (1 கொரிந்தியர் 4:9) பவுல் பெஸ்டியரி (மிருகங்களோடு சண்டையிடும் மனிதர்கள்) மற்றும் சண்டைவீரர்களின் (மனிதர்களோடு சண்டையிடும் மனிதர்கள்) கண்காட்சிகளைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். சிலர் கூலிக்காக சண்டையிட்டனர், ஆனால் குற்றவாளிகள் சண்டையிடும்படியாகக் கட்டாயப்படுத்தப்பட்டனர். முதலில் ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர், பின்னர் இந்தக் கைதிகள் ஆடையின்றி தற்காப்பில்லாமல் மேலும் நிச்சயமாக மரிப்பதற்கு கொண்டுவரப்பட்டனர்.
‘தேவதூதர்களையும்’ ‘மனிதர்களையும்’ (மனிதவர்க்கத்தின் ‘உலகத்தை’ மாத்திரமல்லாமல்) பார்வையாளர்களாகக் கொண்டு, இப்பேர்ப்பட்ட முடிவான இரத்தத்தை உறைய வைக்கும் காட்சியில் மரிப்பவர்களை போல அப்போஸ்தலர் இருந்தனர். பவுல் ‘எபேசுவில் துஷ்ட மிருகங்களுடனே போராடியதாக’ சொன்னான், ஆனால் ஒரு ரோம பிரஜை இந்தக் காரியத்திற்கு உட்படுத்தப்படுவதைக் குறித்து சிலர் சந்தேகித்து அவன் துஷ்ட மிருகங்களுக்கு ஒப்பான எதிர்ப்பாளர்களைக் குறிப்பிடுகின்றான் என்று சொல்கின்றனர். (1 கொரிந்தியர் 15:32) இருப்பினும் ஆசியா மாவட்டத்திலே (எபேசு அமைந்திருந்த இடத்திலே) ‘அப்படிப்பட்ட மரணத்திலிருந்து’ தேவன் தன்னைக் காப்பாற்றினார் என்ற பவுலின் கூற்றானது, மனித எதிர்ப்பைக் காட்டிலும் அரங்கிலே உண்மையில் துஷ்ட மிருகங்களோடு கொண்டிருந்த அனுபவத்திற்குப் பொருத்தமாயிருக்கிறது.—2 கொரிந்தியர் 1:8–10; 11:23; அப்போஸ்தலர் 19:23–41.
[பக்கம் 29-ன் பெட்டி/படம்]
பந்தயப்பொருளை காட்சியில் வைத்திருங்கள்: பவுல் மிக முக்கியமான குறிப்புகளை விளக்குவதற்கு பூர்வீக கிரேக்க விளையாட்டின் அம்சங்களை உபயோகித்தான். (1 கொரிந்தியர் 9:24–27) கொரிந்துவிற்கு அருகே, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு முறை நடைப்பெற்ற இஸ்திமியன் விளையாட்டு போட்டிகளின் நிகழ்ச்சி நிரலில் ஓட்டப்பந்தயம், குத்துச்சண்டை மற்றும் பிற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இப்படிப்பட்ட போட்டிகளுக்காக தயார் செய்து கொண்டிருக்கும் போது ஓட்டப்பந்தயக்காரர்களும் மற்றும் குத்துச் சண்டை வீரர்களும் சுயகட்டுப்பாட்டை பயிற்சித்து, ஆரோக்கியம் தரும் குறைந்த உணவை உண்டு, திராட்சரசத்தை பத்து மாதங்களுக்குப் பருகாமலும் இருத்தல் வேண்டும். என்றாலும் இஸ்திமியன் விளையாட்டுகளிலே வெற்றிபெறுபவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அழியக்கூடிய பைன் அல்லது ஐவி மலர் வளையங்களுக்குப் பதிலாக அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு கிறிஸ்தவன் என்றென்றும் வாழும் ஜீவன் என்ற அழிவில்லாத கிரீடத்தைப் பெற கடினமாக உழைக்கிறான். அந்தப் பந்தயப்பொருளை பெறுவதற்கு அவன் தன்னுடைய கண்களை அதன் மீது நிலையாக வைத்து சுயகட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். என்றென்றுமான பூமிக்குரிய வாழ்க்கையை நோக்கியிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் அதே நியமனம் பொருந்துகிறது.