மனித பிரச்சினைகளுக்கு மதமே ஆணிவேரா?
“மதம் மனிதர்களுக்கிடையே சண்டையை தூண்டிவிடாத சமயங்களில், மனிதருடைய மனசாட்சியை மரத்துப்போகச் செய்கிற, மனித மூளையை கற்பனை காட்சிகளால் நிரப்புகிற ஒரு போதைப்பொருளாக செயல்படுகிறது. . . . மனிதரிடையே குறுகிய மனப்பான்மையை வளர்க்கிறது, மனிதரில் மூடநம்பிக்கையை விதைக்கிறது, மனிதரை பகைமையாலும் பயத்தாலும் ஆட்டிப்படைக்கிறது.” இதை எழுதிய முன்னாள் மெத்தடிஸ்ட் மிஷனரி மேலும் இவ்வாறு கூறினார்: “இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை. மதத்தால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு.”—உங்களுக்கென ஓர் மதத்தை தொடங்குங்கள் (ஆங்கிலம்).
‘நிச்சயமாகவே இது தவறான விமர்சனம்’ என சிலர் சொல்லலாம். ஆனால் வரலாற்று உண்மைகளை யாரால் மறுக்க முடியும்? மொத்தத்தில், மதம் அதிர்ச்சியூட்டும் பதிவை ஏற்படுத்தியிருக்கிறது; மதம் என்பது “கடவுளுக்கு அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றிற்கு செய்யும் சேவை மற்றும் வழிபாடு” என வரையறுக்கப்படுகிறது. மதம் அறிவொளியூட்ட வேண்டும், நம்மை உந்துவிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் அது சண்டையையும் சகிப்பின்மையையும் பகைமையையுமே தூண்டிவிடுகிறது. ஏன்?
தவறாக வழிநடத்தும் ‘ஒளியின் தூதன்’
பைபிளில் மிகவும் எளிய பதில் இருக்கிறது. பிசாசாகிய சாத்தான் ‘ஒளியின் தூதனாக’ வேஷம் போட்டுக்கொண்டு, கடவுளுடைய போதனைகளை அல்ல ஆனால் தன்னுடைய போதனைகளைப் பின்பற்றுவதற்கு கோடாகோடி மக்களை தவறாக வழிநடத்தியிருக்கிறான். (2 கொரிந்தியர் 11:14) ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று’ சொல்லும் அளவுக்கு சாத்தான் மிகப் பரவலாக செல்வாக்கு செலுத்துவதை அப்போஸ்தலன் யோவான் காண்பித்தார். (1 யோவான் 5:19) சாத்தான் ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிறான்’ என்பதை யோவான் அறிந்திருந்தார்.—வெளிப்படுத்துதல் 12:9.
சாத்தான் இப்படி மோசம்போக்குவதன் விளைவென்ன? புனிதமானது போல தோன்றுகிற மத அமைப்புகளை சாத்தான் நிறுவியிருக்கிறான். அவை “‘மதம்’ என்ற வேஷத்தை” போட்டிருக்கின்றன, ஆனால் அவை பிறப்பிக்கும் கனியோ அந்த வேஷத்தைக் கலைத்து விடுகிறது. (2 தீமோத்தேயு 3:5, ஜே. பி. பிலிப்ஸ்; மத்தேயு 7:15-20) மதம் மனித பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, உண்மையில் அதுவே பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது.
இதெல்லாம் வெறும் கற்பனை என்றோ நம்ப முடியாதவை என்றோ உடனே முடிவுகட்டி விடாதீர்கள். வஞ்சிக்கப்படுகிறவர் தான் வஞ்சிக்கப்படுவதை அறியாமல் இருப்பதே வஞ்சகத்தின் தனிச்சிறப்பு என்பதை மறந்துவிடாதீர்கள். “அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று” அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது இதற்கு ஓர் உதாரணத்தைக் கொடுத்தார். (1 கொரிந்தியர் 10:20) தாங்கள் பேய்களை வழிபட்டு வந்ததாக நினைப்பது அந்த ஆட்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்திருக்கும். நல்ல தெய்வத்தை, அல்லது தெய்வங்களை வழிபட்டு வந்ததாகவே அவர்கள் நினைத்தார்கள். ஆனால் உண்மையில், ‘வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளால்’ அவர்கள் வஞ்சிக்கப்பட்டிருந்தார்கள்; மனிதகுலத்தை தவறாக வழிநடத்த சாத்தான் மேற்கொள்ளும் முயற்சிகளை இந்த ஆவிகள் ஆதரிக்கின்றன.—எபேசியர் 6:12.
உதாரணமாக, கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்ட அநேகரை—பொல்லாத ஆவிகளின் தீய செல்வாக்கைப் பற்றிய அப்போஸ்தலன் யோவானின் எச்சரிக்கையை அசட்டை செய்த அநேகரை—சாத்தான் எப்படி வஞ்சிக்கவும் தவறாக வழிநடத்தவும் முடிந்தது என்பதை நாம் பார்க்கலாம்.—1 கொரிந்தியர் 10:12.
இயேசு கற்பித்தவை அனைத்தும் கடவுள் சொன்னவை
“என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது” என இயேசு கிறிஸ்து கூறினார். (யோவான் 7:16) ஆம், அவருடைய போதனைகள் சர்வ வல்லமை பொருந்திய கடவுளுடையவை. ஆகவே, கேட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது இயேசுவின் போதனைகள் சக்திவாய்ந்த செல்வாக்கை செலுத்தின, அவர்களுக்கு அறிவொளியூட்டின. அவை ‘மனிதருடைய மனசாட்சியை மரத்துப்போகச் செய்யவுமில்லை, அவர்களுடைய மனதை கற்பனை காட்சிகளால் நிரப்பவுமில்லை.’ மாறாக, மத ரீதியிலான தவறுகளிலிருந்தும் மனித தத்துவங்களிலிருந்தும் மக்களை விடுதலை செய்தன; ஆம், பிசாசினுடைய வஞ்சகத்தின் காரணமாக “புத்தியில் அந்தகாரப்பட்டு” கிடந்த உலகத்தின் இப்படிப்பட்ட காரியங்களிலிருந்து விடுதலை செய்தன.—எபேசியர் 4:18; மத்தேயு 15:14; யோவான் 8:31, 32.
பக்தி இருப்பதாக வெறுமனே சொல்லிக்கொண்டதை வைத்து மெய் கிறிஸ்தவர்கள் அடையாளம் காட்டப்படவில்லை, ஆனால் கடவுளுடைய பரிசுத்த ஆவியால் பிறப்பிக்கப்படும் அருமையான பண்புகளை வைத்தே அடையாளம் காட்டப்பட்டார்கள். (கலாத்தியர் 5:22, 23; யாக்கோபு 1:22; 2:26) இந்தப் பண்புகளில் குறிப்பிடத்தக்கதும், உண்மை கிறிஸ்தவத்திற்கு அடையாளமாக இருப்பதுமான தனிச்சிறப்புமிக்க பண்பு அன்பே.—யோவான் 13:34, 35.
ஆனால் இந்த முக்கியமான குறிப்பை கவனியுங்கள்: கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டபோது எப்படி இருந்ததோ அப்படியே தொடர்ந்து இருக்குமென இயேசுவோ அவருடைய அப்போஸ்தலர்களோ நினைக்கவில்லை. விசுவாச துரோகம் வளர்ந்து மெய் மதம் சில காலத்திற்கு மறைக்கப்படும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
சில காலம் மறைக்கப்பட்டிருந்த மெய் மதம்
கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமையில், மெய் மதம் சிலகாலத்திற்கு கிட்டத்தட்ட மறைக்கப்பட்டுவிடும் என்பதை இயேசு முன்னறிவித்தார். மத்தேயு 13:24-30, 36-43-ல் நீங்களே அந்தப் பதிவை வாசித்துப் பாருங்கள். ஒரு வயலில் ‘நல்ல விதையாகிய’ கோதுமை விதையை இயேசு விதைத்தார்; இது அவருடைய உண்மையுள்ள சீஷர்களை படமாக சுட்டிக் காட்டியது, இவர்களே ஆரம்பகால கிறிஸ்தவ சபையில் அங்கம் வகித்தார்கள். “சத்துரு,” அதாவது பிசாசாகிய சாத்தான் கொஞ்சகாலம் கழித்து கோதுமை வயலில் “களைகளை”—இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதாக உரிமை பாராட்டிக்கொண்டு அதேசமயத்தில் அவருடைய போதனைகளைப் புறக்கணித்த மக்களை—விதைத்தான்.
இயேசுவின் அப்போஸ்தலர்கள் இறந்தவுடனேயே, ‘களைகளைப்’ போன்ற ஆட்கள் தோன்ற ஆரம்பித்தார்கள்; இவர்கள் ‘யெகோவாவின் வேதத்தை’ அல்ல, ஏறுக்குமாறான மனித போதனைகளையே விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். (எரேமியா 8:8, 9; அப்போஸ்தலர் 20:29, 30) இதனால், கறைபடிந்த போலி கிறிஸ்தவம் பூமியில் தோன்ற ஆரம்பித்தது. “அக்கிரமக்காரன்” என பைபிளால் அழைக்கப்படும் குருவர்க்கத்தால் இது ஆதிக்கம் செலுத்தப்பட்டது; ‘சகலவித வஞ்சகத்தில்’ ஊறிப்போனதும் கறைபடிந்ததுமே குருவர்க்கம். (2 தெசலோனிக்கேயர் 2:6-10) ‘இந்த உலக ஒழுங்குமுறையின் முடிவில்’ (NW) இந்நிலை மாறும் என இயேசு முன்னறிவித்தார். கோதுமையைப் போன்ற கிறிஸ்தவர்கள் ஐக்கியமாக ஒன்றிணைக்கப்படுவார்கள், ‘களைகள்’ எனப்படும் போலி கிறிஸ்தவர்களோ கடைசியில் அழிக்கப்படுவார்கள்.
இந்தப் போலி கிறிஸ்தவமே “அப்பட்டமான காட்டுமிராண்டித்தனம் நிறைந்த நூற்றாண்டுகளுக்கு” பொறுப்பாகும்; அதைப் பின்தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் கிறிஸ்தவமண்டலத்தை சூழ்ந்திருந்த ஆன்மீக இருளுக்கும் பொறுப்பாகும். இதையும் மதத்தின் பெயரால் அதுமுதல் செய்யப்பட்டு வரும் மற்றெல்லா ஒழுக்கங்கெட்ட மற்றும் வன்முறை செயல்களையும் முன்னறிந்து, ‘இவர்கள் நிமித்தம் [கிறிஸ்தவர்களென சொல்லிக்கொள்பவர்கள் நிமித்தம்] சத்திய மார்க்கம் தூஷிக்கப்படும்’ என அப்போஸ்தலன் பேதுரு சரியாகவே தீர்க்கதரிசனம் உரைத்தார்.—2 பேதுரு 2:1, 2.
‘பகையையும் வெறியையும் தூண்டுபவை’
மதத்திற்கு அவப்பெயரை தேடித் தந்தது கிறிஸ்தவமண்டலம் மட்டுமே அல்ல. உதாரணமாக, “வெறித்தனமான பக்தி”யை காட்டும் அடிப்படைவாதிகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். முன்னாள் கன்னிகாஸ்திரீ கேரன் ஆம்ஸ்ட்ராங்கின் கூற்றுக்கு ஏற்றவாறே “அனைத்து முக்கிய மதங்களிலும்” அவர்கள் காணப்படுகிறார்கள். ஒரு மதத்தின் தரத்தை சோதிப்பதற்கு, அது “நடைமுறையில் இரக்கத்தைக் காட்ட” உதவுகிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் கூறுகிறார். இதன் சம்பந்தமாக அடிப்படைவாத மதங்களின் பதிவு என்ன? “அடிப்படைவாதம்,” “அது யூத அடிப்படைவாதமோ கிறிஸ்தவ அடிப்படைவாதமோ இஸ்லாமிய அடிப்படைவாதமோ எதுவாக இருந்தாலும், அது பகையையும் வெறியையும் தூண்டிவிடுமானால் இந்த முக்கிய சோதனையில் தோல்வியுறுகிறது” என அவர் எழுதினார். (கடவுளுக்காக போர்—யூத மதத்திலும் கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் அடிப்படைவாதம்) ஆனால் இந்த சோதனையில் தோல்வியடைந்து, ‘பகையையும் வெறியையும் தூண்டிவருவது’ அடிப்படைவாத மதங்கள் மாத்திரம்தானா? சரித்திரமோ வேறு விதமாக சான்று பகருகிறது.
சொல்லப்போனால், பகை, வெறி, இரத்தஞ்சிந்துதல் போன்ற செயல்களுக்கு பெயர்பெற்று விளங்கும் பொய் மத உலகப் பேரரசை சாத்தான் ஸ்தாபித்திருக்கிறான். இந்தப் பேரரசை ‘மகா பாபிலோன், . . . பூமியிலுள்ள அருவருப்புகளுக்கு தாய்’ என பைபிள் அழைக்கிறது. மேலும், அது மூர்க்க மிருகமாகிய அரசியல் அமைப்பின் முதுகில் சவாரி செய்யும் ஒரு வேசியாக சித்தரிக்கப்படுகிறது. “பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்த”த்திற்கும் அவளே பொறுப்பாளி என்பது குறிப்பிடத்தக்கது.—வெளிப்படுத்துதல் 17:4-6; 18:24.
எல்லாரும் வஞ்சிக்கப்படவில்லை
ஆனால் எல்லாரும் வஞ்சிக்கப்படவில்லை என்பதை சரித்திரம் நிரூபிக்கிறது. மனித சரித்திரத்திலேயே மிகவும் இருண்ட காலங்களிலும்கூட, “தங்களைச் சுற்றியிருந்த பெரும்பாலோர் தீமை செய்தபோது நல்ல ஆத்துமாக்கள் பலர் நன்மை செய்தார்கள்” என மெல்வன் பிராக் குறிப்பிடுகிறார். உண்மையான கிறிஸ்தவர்கள் தொடர்ந்து கடவுளை “ஆவியோடும் உண்மையோடும் தொழுது” வந்திருக்கிறார்கள். (யோவான் 4:21-24) “இராணுவ பலத்தை ஆதரிப்ப”தன் மூலம் அடையாள அர்த்தத்தில் வேசித்தனம் செய்திருந்த உலக மத அமைப்பிலிருந்து அவர்கள் பிரிந்திருந்தார்கள். சர்ச்சுடனும் அரசுடனும் சேர்ந்து செயல்பட அவர்கள் மறுத்துவிட்டார்கள்; ஏனெனில் “நாசரேத்து ஊரைச் சேர்ந்த இயேசுவால் அல்ல, ஆனால் [அவை] சாத்தானால் தோற்றுவிக்கப்பட்டவை” என்பதை சரித்திரம் வெளிப்படுத்துகிறது.—இரண்டாயிரம் ஆண்டு—இரண்டாம் ஆயிரமாண்டு: இடைக்கால கிறிஸ்தவமண்டலம் முதல் உலகளாவிய கிறிஸ்தவம் வரை (ஆங்கிலம்).
வெகு சமீப காலங்களில், நன்மை செய்வதில் யெகோவாவின் சாட்சிகள் பெயர் பெற்றவர்களாக விளங்குகிறார்கள். பொய் மதத்தால் எந்த விதத்திலும் கறைபடியாமல் காத்துக்கொள்வதற்கு, அவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளையும் செயல்களையும் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளின் அடிப்படையில் அமைத்திருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:16, 17) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல, ‘உலகத்தாரல்லாதவர்களாய்’ இருக்கும்படி இயேசு கொடுத்த கட்டளையை அவர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். (யோவான் 15:17-19; 17:14-16) உதாரணமாக, நாசி ஜெர்மனியில், கிறிஸ்தவ நியமங்களை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார்கள், அதனால் நாசி கொள்கையின்படி அவர்கள் ஏற்கத்தகாதவர்களாக இருந்தார்கள். இதற்காக ஹிட்லர் இவர்களை வெறுத்தான். ஒரு பள்ளிப் பாடநூல் இவ்வாறு கூறுகிறது: “யெகோவாவின் சாட்சிகள் . . . எக்காரணத்தை முன்னிட்டும் போராயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்ற பைபிள் போதனையைப் பின்பற்றினார்கள். ஆகையால் இராணுவத்தில் சேவை செய்யவோ நாசிக்களுடன் எந்தவித சம்பந்தம் கொள்ளவோ மறுத்துவிட்டார்கள். அவர்களை பழிவாங்க SS பாதுகாவலர்கள் யெகோவாவின் சாட்சிகளை குடும்பம் குடும்பமாக சிறையிலிட்டார்கள்.” (ஜெர்மனி—1918-45) சொல்லப்போனால், நாசி துன்புறுத்தலின் காரணமாக ஜெர்மனியிலிருந்த யெகோவாவின் சாட்சிகளில் நூற்றுக்கணக்கானோர் இறந்துபோனார்கள்.
பல்வேறு மதத்தைச் சேர்ந்த தைரியமிக்க மற்ற ஆட்களும் தங்களுடைய நம்பிக்கைக்காக துன்பப்பட்டனர் என்பது உண்மைதான். ஆனால் யெகோவாவின் சாட்சிகளோ ஓர் ஐக்கியப்பட்ட மத தொகுதியாக உபத்திரவத்தை சந்தித்தனர். ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியம்’ என்ற அடிப்படை பைபிள் நியமத்தை யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பான்மையோர் உறுதியாக கடைப்பிடித்தனர்.—அப்போஸ்தலர் 5:29; மாற்கு 12:17.
பிரச்சினைக்கு ஆணிவேர்
ஆகவே, மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் மதமே ஆணிவேர் என்பதில் ஓரளவுதான் உண்மை இருக்கிறது. பொய் மதமே ஆணிவேர் என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை. என்றாலும், வெகு சீக்கிரத்தில் எல்லா பொய் மதங்களையும் கடவுள் அழிக்கப்போகிறார். (வெளிப்படுத்துதல் 17:16, 17; 18:21) நீதியையும் நியாயத்தையும் நேசிக்கிறவர்களுக்கு இதுவே அவருடைய கட்டளை: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு [அதாவது, பொய்மத உலகப் பேரரசான மகா பாபிலோனைவிட்டு] வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.” (வெளிப்படுத்துதல் 18:4, 5) ஆம், ‘சண்டையை தூண்டுகிற, மனிதருடைய மனசாட்சியை மரத்துப்போகச் செய்கிற, அவர்களுடைய மனதை கற்பனை காட்சிகளால் நிரப்புகிற, மனிதரை குறுகிய மனப்பான்மையுள்ளவர்களாக, மூடநம்பிக்கையுள்ளவர்களாக, பகைமையும் பயமும் நிறைந்தவர்களாக ஆக்குகிற’ மதத்தைக் கண்டு கடவுளே பெரிதும் விசனமடைந்துள்ளார்!
இதற்கிடையில், சத்தியத்தை நேசிக்கிற ஆட்களை தூய மதத்திற்குள் கடவுள் கூட்டிச்சேர்த்து வருகிறார். அன்பும் நீதியும் கருணையும் கொண்ட படைப்பாளருடைய நியமங்களையும் போதனைகளையும் பின்பற்றுகிற மதம் இதுவே. (மீகா 4:1, 2; செப்பனியா 3:8, 9; மத்தேயு 13:30) நீங்கள் அதன் பாகமாக ஆகலாம். தூய மதத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றிய கூடுதலான தகவல்களைப் பெற விரும்பினால், தயங்காமல் இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுதுங்கள் அல்லது உதவிக்காக யெகோவாவின் சாட்சிகளில் யாரிடமாவது கேளுங்கள்.
[பக்கம் 7-ன் படம்]
எல்லா பின்னணியைச் சேர்ந்த மக்களும் தூய மதத்தில் மகிழ்ச்சி கண்டிருக்கிறார்கள்