கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தலின்படி சுயாதீனமாய் வாழ்தல்
“யெகோவாவின் ஆவி எங்கு இருக்கிறதோ அங்கு சுயாதீனமும் இருக்கிறது.”—2 கொரிந்தியர் 3:17, NW.
1. யெகோவாவின் சாட்சிகள் யாருக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள், சட்டப்பூர்வ நிறுவனங்களை அவர்கள் ஏன் பயன்படுத்துகிறார்கள்?
யெகோவாவின் சாட்சிகள், தங்கள் மதம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று நம்புகிறார்கள். ஆகையால், நித்திய காலமும் கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” சேவிக்கும்படி எதிர்நோக்கியிருக்கிறார்கள். (யோவான் 4:23, 24) நன்மை தீமைக்குரிய சுயாதீன உணர்வுடையோராய் இந்தக் கிறிஸ்தவர்கள், நிபந்தனையின்றி தங்களை முழுமையாக யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, அதன்படி வாழ்வதற்குத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை நிறைவேற்றுவதற்கு உதவியாக, கடவுளுடைய வார்த்தையின்பேரிலும் அவருடைய பரிசுத்த ஆவியின்பேரிலும் அவர்கள் சார்ந்திருக்கிறார்கள். கடவுள் அருளியுள்ள சுயாதீனத்தில் தங்கள் கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தலெனும் போக்கை முழு இருதயத்தோடும் நாடுகையில், இந்தச் சாட்சிகள், ‘மேலான அதிகாரமுள்ளவர்களாகிய’ அரசாங்க அதிகாரிகள் வகிக்கும் பொறுப்புக்கு அதற்குரிய மரியாதை காண்பிக்கிறார்கள்; சட்டப்பூர்வ வழிமூலங்களையும் ஏற்பாடுகளையும் சரியான முறையில் பயன்படுத்துகிறார்கள். (ரோமர் 13:1; யாக்கோபு 1:25) உதாரணமாக, உடன் மனிதருக்கு, முக்கியமாய் ஆவிக்குரிய முறையில் உதவிசெய்யும் தங்களுடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்கான பல வழிவகைகளில் ஒன்றாக, பல்வேறு நாடுகளில் உவாட்ச் டவர் சொஸைட்டியை ஒரு சட்டப்பூர்வ கருவியாய் சாட்சிகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சாட்சிகள், எந்தச் சட்டப்பூர்வ நிறுவனத்திற்கும் அல்ல, கடவுளுக்கே தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்; யெகோவாவுக்கு செய்திருக்கும் அவர்களுடைய ஒப்புக்கொடுத்தல் என்றுமாக நிலைத்திருக்கும்.
2. ஏன் உவாட்ச் டவர் சொஸைட்டியும் அதைப்போன்ற சட்டப்பூர்வ நிறுவனங்களும் யெகோவாவின் சாட்சிகளால் பெருமளவில் நன்றியோடு மதிக்கப்படுகின்றன?
2 கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக யெகோவாவின் சாட்சிகள், “சகல தேசத்து ஜனங்களையும் சீஷராக்கி, பிதாவின், குமாரனின் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களை முழுக்காட்டி, அவர்களுக்குப் போதியுங்கள்” என்ற இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறார்கள். (மத்தேயு 28:19, 20, NW) இந்த வேலை, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரையாகத் தொடரும், ஏனெனில் இயேசு இவ்வாறும் சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:3, 14) ஆண்டுதோறும், உவாட்ச் டவர் சொஸைட்டியும் அதைப்போன்ற சட்டப்பூர்வ நிறுவனங்களின் அச்சகங்களும், கோடிக்கணக்கான பைபிள்களையும், புத்தகங்களையும், சிற்றேடுகளையும், பத்திரிகைகளையும் உலகமெங்கும் செய்யப்படும் பிரசங்க ஊழியத்தில் உபயோகிப்பதற்காக யெகோவாவின் சாட்சிகளுக்கு அளிக்கின்றன. ஆகவே, இந்தச் சட்டப்பூர்வ நிறுவனங்கள், கடவுளுடைய ஒப்புக்கொடுத்த ஊழியர்களுக்கு, தங்கள் ஒப்புக்கொடுத்தலின்படி வாழ உதவிசெய்வதில் பெரும் மதிப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன.
3. “த சொஸைட்டி” என்ற பதத்தை என்ன கருத்தில் யெகோவாவின் சாட்சிகள் முன்பு பயன்படுத்தினர்?
3 உவாட்ச் டவர் சொஸைட்டியை, அல்லது பேச்சு முறையில் “சொஸைட்டியைப்” பற்றி சாட்சிகள் பேசும் விதத்தைக் கவனிக்கையில், அவர்கள் அதை சட்டப் பூர்வ கருவி என்பதைப் பார்க்கிலும் மேலானதாய் கருதுவதாகத் தோன்றுகிறது. வணக்க விஷயங்களில் முடிவான அதிகாரத்துவமாக அவர்கள் அதைக் கருதுகிறார்கள் அல்லவா என்று எவராவது ஒருவேளை விவாதிக்கலாம். யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகம் இந்தக் குறிப்புக்கு இவ்வாறு விளக்கம்கூறி தெளிவாக்குகிறது: “‘த சொஸைட்டி’ என த உவாட்ச்டவர் [ஜூன் 1, 1938] குறிப்பிட்டபோது, இது, வெறும் சட்டப்பூர்வ சாதனத்தை அல்ல, அந்தச் சட்டப்பூர்வ நிறுவனத்தை அமைத்தும் அதைப் பயன்படுத்தியுமிருந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் குழுவைக் குறித்தது.” a எனவே இந்தச் சொல்லமைப்பு, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமையைக்” குறிப்பிட்டது. (மத்தேயு 24:45, NW) இந்த அர்த்தத்திலேயே “த சொஸைட்டி” என்ற பதத்தை சாட்சிகள் பொதுவாக பயன்படுத்தினர். நிச்சயமாகவே, சட்டரீதியிலான ஸ்தாபனமும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமையும்” ஒன்றின் இடத்தில் மற்றொன்றைப் பயன்படுத்தத்தக்க பதங்கள் அல்ல. உவாட்ச் டவர் சொஸைட்டியின் டைரக்டர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் ‘உண்மையுள்ள அடிமையில்’ இருக்கும் சாட்சிகள் யெகோவாவின் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்படுகிறார்கள்.
4. (அ) தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதைத் தவிர்ப்பதற்கு சாட்சிகளில் அநேகர் எவ்வாறு தங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்? (ஆ) சொற்களைப் பற்றியதில் நாம் ஏன் சமநிலையுடையவராக இருக்க வேண்டும்?
4 தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதைத் தவிர்ப்பதற்கு, யெகோவாவின் சாட்சிகள் தங்கள் கருத்தை சொல்லும் விதத்தைக் குறித்து கவனமாயிருக்க முயற்சி செய்கிறார்கள். “சங்கம் கற்பிக்கிறது” என்று சொல்வதற்குப் பதிலாக, “பைபிள் சொல்லுகிறது” அல்லது “பைபிள் கற்பிப்பதாக நான் புரிந்துகொள்கிறேன்” போன்ற சொற்றொடர்களை அநேக சாட்சிகள் பயன்படுத்த விரும்புகின்றனர். இவ்வாறு, பைபிள் போதகங்களை ஏற்பதில் ஒவ்வொரு சாட்சியும் தாங்களே சொந்தத் தீர்மானம் செய்திருப்பதை அறிவுறுத்துகிறார்கள்; மேலும் ஏதோ மத உட்பிரிவின் கட்டளைகளுக்கு எவ்வாறோ கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்ற தவறான எண்ணத்தை அளிப்பதையும் தவிர்க்கிறார்கள். நிச்சயமாகவே, சொற்களைப் பற்றியதில் கருத்துத் தெரிவிப்பது சர்ச்சைக்குரிய விஷயமாக ஒருபோதும் ஆகக்கூடாது. தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதைத் தவிர்க்கும் அளவுக்கே சொற்கள் முக்கியமாக உள்ளன. கிறிஸ்தவ சமநிலை தேவைப்படுகிறது. சொற்களைப்பற்றி ‘வாக்குவாதம் செய்யாமல்’ இருக்க பைபிள் அறிவுரை கூறுகிறது. (2 தீமோத்தேயு 2:14, 15) இந்த நியமத்தையும் வேதவசனங்கள் கூறுகின்றன: “எளிதாகப் புரிந்துகொள்ளும் பேச்சை நாவினால் பேசினால் தவிர, பேசப்படுகிறது இன்னதென்று எப்படி அறிந்துகொள்ளப்படும்?”—1 கொரிந்தியர் 14:9, NW.
சட்டங்களுக்கான தேவையைக் கடவுளுடைய ஆவி குறைக்கிறது
5. 1 கொரிந்தியர் 10:23-ஐ எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?
5 “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது [“பயனுள்ளதாயிராது,” NW]” என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். அவர் மேலும் இவ்வாறு கூறினார்: “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.” (1 கொரிந்தியர் 10:23) கடவுளுடைய வார்த்தை திட்டமாகக் கண்டனம் செய்யும் காரியங்களைச் செய்வது நியாயமானதென்று பவுல் அர்த்தப்படுத்தவில்லை என்பது தெளிவாயுள்ளது. பூர்வ இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட ஏறக்குறைய 600 சட்டங்களோடு ஒப்பிட, கிறிஸ்தவ வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் திட்டமானக் கட்டளைகள் சிலவே உள்ளன. ஆகையால், பல காரியங்கள் அவரவரின் சொந்த மனச்சாட்சிக்கு விடப்படுகின்றன. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிற ஒருவர், கடவுளுடைய ஆவியினால் வழிநடத்தப்படுவதன் பலனாக வரும் சுயாதீனத்தை அனுபவித்து மகிழ்கிறார். சத்தியத்தைத் தன்னுடையதாக ஆக்கிக்கொண்டதனால், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தன் மனச்சாட்சியைக் கிறிஸ்தவர் பின்பற்றி, பரிசுத்த ஆவியின்மூலம் வரும் கடவுளுடைய வழிநடத்துதலின்பேரில் சார்ந்திருக்கிறார். எது “பக்திவிருத்தி” உண்டுபண்ணி, தனக்கும் மற்றவர்களுக்கும் “பயனுள்ளதாயிருக்கும்” என்பதைத் தீர்மானிக்க, ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவருக்கு இது உதவிசெய்கிறது. தான் செய்யும் தீர்மானங்கள், தான் ஒப்புக்கொடுத்திருக்கிற கடவுளுடன் தனக்குள்ள உறவைப் பாதிக்கும் என்பதை உணருகிறார்.
6. சத்தியத்தை நம்முடைய சொந்தமாக்கிக்கொண்டதை, கிறிஸ்தவக் கூட்டங்களில் நாம் எவ்வாறு காட்டலாம்?
6 சாட்சியாக இருப்பவர், சத்தியத்தைத் தனதாக்கிக் கொண்டதை, கிறிஸ்தவக் கூட்டங்களில் குறிப்புகள் சொல்வதன் மூலம் காட்டுகிறார். முதன்முதலில், படிக்கப்படுகிற அந்தப் பிரசுரத்தில் உள்ளதை அதிலிருக்கிறபடியே அவர் ஒருவேளை வாசிக்கலாம். எனினும், காலப்போக்கில், பைபிள் போதகங்களைத் தன் சொந்த வார்த்தைகளில் எடுத்துச் சொல்லும் நிலைக்குப் படிப்படியாய் முன்னேறுவார். இவ்வாறு, மற்றவர்கள் சொன்னதை தான் திரும்பச் சொல்கிறதில்லை, தன் யோசிக்கும் திறமையைப் பெருக்கிவருவதற்கான அத்தாட்சியை அளிக்கிறார். எண்ணங்களை தன் சொந்த வார்த்தைகளில் அமைத்து சத்தியத்தின் திருத்தமான வார்த்தைகளை இருதயத்தில் உணர்ந்த வகையில் வெளிப்படுத்திச் சொல்வது அவருக்கு இன்பமான மகிழ்ச்சியைத் தந்து, தன் மனதில் அதை உறுதியாய் நம்புகிறார் என்பதைக் காட்டும்.—பிரசங்கி 12:10; ஒப்பிடுக: ரோமர் 14:5ஆ.
7. யெகோவாவின் ஊழியர்கள் என்ன தீர்மானங்களை சுயாதீனமாக எடுத்திருக்கின்றனர்?
7 கடவுளின்மீதும் தங்கள் உடன் மனிதரின்மீதும் உள்ள அன்பால் யெகோவாவின் சாட்சிகள் தூண்டப்படுகிறார்கள். (மத்தேயு 22:36-40) உலகளாவிய சகோதர கூட்டமாக, கிறிஸ்து காட்டியதைப்போன்ற அன்பின் பிணைப்பால் அவர்கள் நெருங்க ஒன்றிணைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது மெய்யே. (கொலோசெயர் 3:14; 1 பேதுரு 5:9) ஆனால், நன்மை தீமைக்குரிய சுயாதீன உணர்வுடையோராய், கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை யாவரறிய அறிவிப்பதற்கும், அரசியல் சம்பந்தமாய் நடுநிலை வகிப்போராய் நிலைத்திருப்பதற்கும், இரத்தத்திற்கு விலகியிருப்பதற்கும், ஒருசில வகையான பொழுதுபோக்குகளை தவிர்ப்பதற்கும், பைபிள் தராதரங்களின்படி வாழ்வதற்கும், ஒவ்வொருவரும் அவரவர்தாமே சுயமாய் தீர்மானித்திருக்கின்றனர். இவை, அவர்கள்மீது வற்புறுத்தப்பட்ட தீர்மானங்கள் அல்ல. சாட்சிகளாக போகிறவர்கள், கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தலின் நிலையை எடுப்பதற்கு முன்னதாக, தாங்களே விரும்பி தெரிந்துகொண்ட ஒரு வாழ்க்கைமுறைக்கு உரிய தீர்மானங்கள்.
ஆளும் குழுவுக்குப் பதில் சொல்லும் பொறுப்புடையோரா?
8. எந்தக் கேள்விக்கு விளக்கம் தேவைப்படுகிறது?
8 உண்மையான கிறிஸ்தவர்கள் வற்புறுத்தலின்கீழ் கடவுளைச் சேவிப்பதில்லை என்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. அது சொல்வதாவது: “யெகோவா ஆவியானவர்; யெகோவாவின் ஆவி எங்கு இருக்கிறதோ, அங்கு சுயாதீனமும் இருக்கிறது.” (2 கொரிந்தியர் 3:17, NW) ஆனால், ஆளும் குழு அடங்கிய ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையைப்’ பற்றிய கருத்துடன் இந்த உண்மையை எவ்வாறு ஒத்திசைவிக்க முடியும்?—மத்தேயு 24:45-47, NW.
9, 10. (அ) தலைமை வகிப்பைப் பற்றிய நியமம், கிறிஸ்தவ சபையில் எவ்வாறு பொருந்துகிறது? (ஆ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில், தலைமை வகிப்பைப் பற்றிய இந்த நியமத்தைப் பின்பற்றினது எதை அவசியப்படுத்தினது?
9 இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, தலைமைவகிப்பு பற்றிய வேதப்பூர்வ நியமத்தை நாம் மனதில் வைக்க வேண்டும். (1 கொரிந்தியர் 11:3) எபேசியர் 5:21-24-ல், கிறிஸ்து ‘சபைக்குத் தலையாயிருக்கிறார்’ என்று குறிப்பிட்டு, அவருக்கே அது “கீழ்ப்படிந்திருக்கவேண்டும்” எனக் காட்டப்பட்டிருக்கிறது. உண்மையும் விவேகமுமுள்ள அடிமை, இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர் அடங்கியதாக உள்ளதென்று யெகோவாவின் சாட்சிகள் புரிந்துகொள்கிறார்கள். (எபிரெயர் 2:10-13) இந்த உண்மையுள்ள அடிமை வகுப்பு, “ஏற்றவேளையிலே” ஆவிக்குரிய ‘போஜனத்தைக்’ கடவுளுடைய ஜனங்களுக்கு அளிக்கும்படி நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவின் காலத்தில், கிறிஸ்து, “தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும்” விசாரணைக்காரனாக இந்த அடிமையை நியமித்திருக்கிறார். ஆகையால், இந்த அடிமையின் ஸ்தானம், கிறிஸ்தவர் என்று உரிமைபாராட்டும் எவரும் மதிப்பதற்குத் தகுந்தது.
10 ஒற்றுமையைக் காப்பதும், ‘சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படும்படி’ நிச்சயப்படுத்திக்கொள்வதும், இந்தத் தலைமை வகிப்பின் நோக்கமாக உள்ளது. (1 கொரிந்தியர் 14:40) இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, முதல் நூற்றாண்டில், உண்மையும் விவேகமுமுள்ள இந்த அடிமை வகுப்பாரிலிருந்து, அபிஷேகஞ்செய்யப்பட்ட அநேக கிறிஸ்தவர்கள், இந்த முழு வகுப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்வதற்குத் தெரிந்துகொள்ளப்பட்டனர். இதற்குப் பின் நடந்த சம்பவங்கள் நிரூபித்தபடி, இந்த முதல் நூற்றாண்டு ஆளும் குழுவின் கண்காணிப்பு, யெகோவாவின் அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் உடையதாக இருந்தது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இந்த ஏற்பாட்டை மகிழ்ச்சியுடன் ஏற்றார்கள். ஆம், உண்மையில் அவர்கள் அதை ஆவலோடு வரவேற்று, அதனால் உண்டான சிறந்த பலன்களுக்காக நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள்.—அப்போஸ்தலர் 15:1-32.
11. தற்கால ஆளும் குழு எவ்வாறு கருதப்பட வேண்டும்?
11 இத்தகைய ஒரு ஏற்பாடு இப்போதும் பயனுள்ளதாக இருந்துவருகிறது. தற்போது, யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவில், அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பத்து பேர் இருக்கின்றனர். இவர்களெல்லாரும் பல பத்தாண்டு கால கிறிஸ்தவ அனுபவம் பெற்றவர்கள். முதல் நூற்றாண்டு ஆளும் குழு செய்ததைப்போல் இவர்கள், யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆவிக்குரிய வழிநடத்துதலை அளிக்கிறார்கள். (அப்போஸ்தலர் 16:4) பூர்வ கிறிஸ்தவர்களைப்போல், வணக்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில், பைபிள் ஆதாரமுடைய அறிவுரைக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் இந்த ஆளும் குழுவிலுள்ள முதிர்ந்த சகோதரர்களையே சாட்சிகள் ஆவலோடு நோக்குகிறார்கள். இந்த ஆளும் குழுவின் உறுப்பினர், தங்கள் உடன் கிறிஸ்தவர்களைப்போல், யெகோவாவுக்கும் கிறிஸ்துவுக்கும் அடிமைகளாக இருக்கிறபோதிலும், பைபிள் நமக்கு இவ்வாறு கட்டளையிடுகிறது: “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.”—எபிரெயர் 13:17.
12. கிறிஸ்தவர் ஒவ்வொருவரும் யாருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்?
12 ஆளும் குழுவுக்கு வேதவசனங்கள் நியமிக்கும் இந்தக் கண்காணிப்பு ஸ்தானம், யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் வேலைகளைப்பற்றி அதற்கு பதில் சொல்லும் பொறுப்புடையோர் என அர்த்தப்படுத்துகிறதா? ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதின பவுலின் இந்த வார்த்தைகளின்படி அவ்வாறு அர்த்தப்படுத்துகிறதில்லை: “நீ உன் சகோதரனைக் குற்றவாளியாய்த் தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாயெண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கடவுளின் நியாயாசனத்திற்குமுன் நிறுத்தப்படுவோமே. . . . நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துக் கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பான்.”—ரோமர் 14:10-12, தி.மொ.
13. யெகோவாவின் சாட்சிகள் ஏன் தங்கள் பிரசங்க ஊழிய விவரங்களை அறிக்கை செய்கிறார்கள்?
13 எனினும், தனி நபர்களாக சாட்சிகள், தங்கள் பிரசங்க ஊழிய விவரங்களை அறிக்கை செய்யும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்பது உண்மை அல்லவா? ஆம், ஆனால் இதன் நோக்கம், சாட்சிகளுடைய கையேடு ஒன்றில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது, அது சொல்வதாவது: “தொடக்கத்தில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவர்கள், பிரசங்க வேலையின் முன்னேற்றத்தைப் பற்றிய விவர அறிக்கைகளில் அக்கறை காட்டினார்கள். (மாற்கு 6:30) வேலை முன்னேற்றமடைந்து வந்தபோது, நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பங்குகொண்டவர்களின் குறிப்பிடத்தக்க சிறந்த அனுபவங்களைப் பற்றிய விவரங்களோடுகூட புள்ளிவிவர அறிக்கைகள் தொகுக்கப்பட்டன. . . . (அப்போஸ்தலர் 2:5-11, 41, 47; 6:7; 1:15; 4:4) . . . நிறைவேற்றப்பட்டதைப் பற்றிய விவர அறிக்கைகளைக் கேட்பது, அந்த உண்மையுள்ள கிறிஸ்தவ ஊழியர்களுக்கு எவ்வளவு ஊக்கமூட்டுதலாக இருந்தது! . . . அதைப்போன்றே, யெகோவாவின் தற்கால அமைப்பு, மத்தேயு 24:14-ன் நிறைவேற்றமாகச் செய்யப்படுகிற வேலையைப் பற்றிய துல்லியமான பதிவுகளை வைத்திருப்பதற்குப் பிரயாசப்படுகிறது.”
14, 15. (அ) எவ்வாறு 2 கொரிந்தியர் 1:24 ஆளும் குழுவுக்குப் பொருந்துகிறது? (ஆ) எதன் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் சொந்த தீர்மானங்களைச் செய்ய வேண்டும், என்ன உண்மையைத் தெரிந்து ஒப்புக்கொள்பவராக அவ்வாறு செய்ய வேண்டும்?
14 ஆளும் குழு, அன்புள்ள ஓர் ஏற்பாடாகவும், பின்பற்றத் தகுதியான விசுவாசத்திற்குரிய முன்மாதிரியாகவும் இருக்கிறது. (பிலிப்பியர் 3:17; எபிரெயர் 13:7) கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு, முன்மாதிரியாக அவரைப் பின்தொடருவதால், பவுலின் இந்த வார்த்தைகளை அது எதிரொலிக்க முடியும்: “விசுவாசவிஷயத்தில் நாங்கள் உங்களை ஆளுகிறவர்களல்ல, உங்கள் சந்தோஷத்திற்கோ நாங்கள் உடன் ஊழியர்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்கள்.” (2 கொரிந்தியர் 1:24, தி.மொ.) தற்காலப்போக்குகளை ஆளும் குழு கவனித்து, பைபிளின் அறிவுரைக்குச் செவிகொடுத்து நடப்பதன் நன்மைகளை ‘உடன் விசுவாசிகளின்’ கவனத்திற்குக் கொண்டுவந்து, பைபிளின் சட்டங்களையும் நியமங்களையும் பொருத்திப் பயன்படுத்துவதைப் பற்றிய ஆலோசனைகளை அவர்களுக்கு அளிக்கிறது; மறைந்துள்ள ஆபத்துகளைப் பற்றி அவர்களை எச்சரிக்கிறது, தேவைப்படும் ஊக்கமூட்டுதலையும் அவர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு அது, அதன் கிறிஸ்தவ உக்கிராண பொறுப்பை நிறைவேற்றி, உடன் விசுவாசிகள் தங்கள் மகிழ்ச்சியைக் காத்துவரும்படி அவர்களுக்கு உதவிசெய்து, அவர்கள் உறுதியாய் நிலைநிற்பதற்கு ஏதுவாக விசுவாசத்தில் அவர்களைத் திடப்படுத்துகிறது.—1 கொரிந்தியர் 4:1, 2; தீத்து 1:7-9.
15 ஆளும் குழு அளித்த பைபிள் அறிவுரையின் ஆதாரத்தின்பேரில் ஒரு சாட்சி தீர்மானங்களைச் செய்தால், தன் சொந்த விருப்பத்தின்படியே அவ்வாறு செய்கிறார்; ஏனெனில், அவர்தாமே பைபிளைப் படித்தது, இதுவே சரியான போக்கு என்று அவரை உறுதியாய் நம்பச் செய்திருக்கிறது. ஆளும் குழு அளிக்கும் சரியான வேதப்பூர்வ அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்தும்படி கடவுளுடைய சொந்த வார்த்தை ஒவ்வொரு சாட்சியின்மீதும் செல்வாக்கு செலுத்துகிறது. இவ்வாறு, அவர் செய்யும் தீர்மானங்கள், அவர் தன்னை ஒப்புக்கொடுத்துள்ள கடவுளுடன் தனக்குள்ள தனிப்பட்ட உறவைப் பாதிக்கும் என்பதை முழுமையாய்த் தெரிந்து ஒப்புக்கொள்பவராய் அவ்வாறு செய்கிறார்.—1 தெசலோனிக்கேயர் 2:13.
மாணாக்கர்களும் போர்வீரர்களும்
16. நடத்தையைக் குறித்த தீர்மானங்கள் தனிப்பட்ட விஷயமாக இருக்கிறபோதிலும், ஏன் சிலர் சபை நீக்கம் செய்யப்படுகின்றனர்?
16 நடத்தையைக் குறித்த தீர்மானம் தனிப்பட்ட விஷயமாக இருக்கிறதென்றால், யெகோவாவின் சாட்சிகளில் சிலர் ஏன் சபை நீக்கம் செய்யப்படுகின்றனர்? ஒரு குறிப்பிட்ட விதமான பாவம் சபை நீக்கம் செய்யப்படுவதைத் தேவைப்படுத்துகிறது என்று எவரும் தன்னிஷ்டத்தின்படி தீர்மானிக்க முடியாது. மாறாக, ஒன்று கொரிந்தியர் ஐந்தாம் அதிகாரத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதைப் போன்ற மோசமான பாவங்களைச் சபையின் அங்கத்தினர் ஒருவர் தொடர்ந்து செய்துவருவாரென்றால் மட்டுமே இத்தகைய நடவடிக்கை வேதப்பூர்வமாய் தேவைப்படுகிறது. இவ்வாறு, வேசித்தனத்தில் ஈடுபட்ட ஒரு கிறிஸ்தவர், அன்பான மேய்ப்பர்களின் ஆவிக்குரிய உதவிகளை ஏற்க மறுத்துவிட்டால் மட்டுமே சபை நீக்கம் செய்யப்படுகிறார். இந்தக் கிறிஸ்தவ நடவடிக்கையை பின்பற்றுவதில் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே தனியாக இல்லை. தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கொள்கையை ஏற்காமல், பொதுநலனுக்கு ஆபத்தாயிருக்கிற உறுப்பினருக்கு எதிராகத் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை தனக்கு இருப்பதாக எந்தச் சமுதாயமும் பாராட்டுகிறது. ஒரு மத சூழமைவில் [நீக்கப்படுதலுக்கான] இந்த உரிமையை பயன்படுத்தும் முறை, கடவுளுக்கு முன்பாக ஒருவரின் நிலைநிற்கையைப் பாதிக்கிறது என்ற நம்பிக்கையால் பெரும்பாலும் வலியுறுத்தப்படுகிறது.”
17, 18. சபை நீக்கம் செய்வதன் நேர்மை எவ்வாறு விளக்கப்படலாம்?
17 யெகோவாவின் சாட்சிகள் பைபிள் மாணாக்கராக இருக்கின்றனர். (யோசுவா 1:8; சங்கீதம் 1:2; அப்போஸ்தலர் 17:11) ஆளும் குழு அளிக்கும் பைபிள் படிப்பு திட்டத்தை, ஒரு கல்வி மன்றக்குழு திட்டமிட்டு அளிக்கும் பள்ளி பாடத்திட்டத்திற்கு ஒப்பிடலாம். கற்பிக்கப்படுகிற விஷயத்தின் ஊற்றுமூலமாக அந்த மன்றக்குழு இல்லாதபோதிலும், அந்தப் பாடத்திட்டத்தை ஏற்படுத்தி, அந்தப் போதனாமுறையைத் தீர்மானித்து, தேவையான பொது வழிகாட்டு குறிப்புகளை அது நிச்சயமாகவே அளிக்கிறது. பள்ளி நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்பட்டு வாழ்வதற்கு எந்த மாணாக்கனாவது பகிரங்கமாக மறுத்து, உடன் மாணாக்கர்களுக்கு கஷ்டங்களை உண்டாக்கினால் அல்லது பள்ளிக்கு அவமதிப்பை ஏற்படுத்தினால் அவன் பள்ளியிலிருந்து நீக்கப்படலாம். எல்லா மாணாக்கருக்கும் நன்மையுண்டாக செயல்படும் உரிமையை அப்பள்ளி அதிகாரிகள் உடையோராய் இருக்கின்றனர்.
18 மாணாக்கராக இருப்பதுமட்டுமல்லாமல், யெகோவாவின் சாட்சிகள் இயேசு கிறிஸ்துவின் போர்வீரர்களாக இருக்கிறார்கள், ‘விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடும்படி’ கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 6:12; 2 தீமோத்தேயு 2:3) இயல்பாகவே ஒரு கிறிஸ்தவ போர்வீரனுக்குத் தகாத நடத்தை, தெய்வீக அங்கீகாரமின்மைக்கு அவனை ஆளாக்கலாம். தெரிவு சுயாதீனமுடைய ஒரு நபராக, ஒரு கிறிஸ்தவ போர்வீரன் தன் விருப்பப்படி தீர்மானிக்கலாம், ஆனால், தன் தீர்மானத்தின் விளைவுகளை அவன் எதிர்ப்பட்டே தீரவேண்டும். பவுல் இவ்வாறு விவாதிக்கிறார்: “தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும் தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு உகந்தவனாயிருக்கும்படி பிழைப்புக்கடுத்த வேறு அலுவல்களில் சிக்கிக்கொள்ள மாட்டான். அன்றியும் பந்தய ஆட்டத்தில் ஒருவன் சட்டப்படி ஆடினாலன்றி முடிசூட்டப்படான்.” (2 தீமோத்தேயு 2:4, 5, தி.மொ.) ஆளும் குழுவினர் உட்பட, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் தலைவராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக நிலைத்திருந்து, நித்திய ஜீவனின் பரிசை தாங்கள் பெறும்படி ‘சட்டங்களை’ கடைப்பிடிக்கிறார்கள்.—யோவான் 17:3; வெளிப்படுத்துதல் 2:10.
19. கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தலைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்ததால், எதைப்பற்றி நாம் நிச்சயமாயிருக்கலாம்?
19 யெகோவாவின் சாட்சிகள் கடவுளின் ஊழியர்கள், மனிதரின் அடிமைகள் அல்ல என்று உண்மை விஷயங்கள் தெளிவாகக் காட்டுகின்றன அல்லவா? ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாய், கிறிஸ்து தங்களை விடுதலையாக்கின சுயாதீனத்தை அனுபவித்து மகிழ்வோராக, கடவுளின் சபையில் தங்கள் சகோதரருடன் ஒற்றுமையாய் சேவிக்கையில், கடவுளுடைய ஆவியும் அவருடைய வார்த்தையும் தங்கள் வாழ்க்கையை ஆட்கொள்ளும்படி அவர்கள் அனுமதிக்கிறார்கள். (சங்கீதம் 133:1) இதற்கிருக்கும் அத்தாட்சிகள், அவர்களுடைய பலத்தின் ஊற்றுமூலத்தைப் பற்றிய எந்தவித சந்தேகத்தையும் துடைத்தழிக்க வேண்டும். சங்கீதக்காரனோடு சேர்ந்து அவர்கள் இவ்வாறு பாடலாம்: “யெகோவா என் பலம், என் கேடகம்; அவரில் என் இருதயம் நம்பிக்கைவைத்திருக்கிறது, நான் சகாயம் பெற்றேன், ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்.”—சங்கீதம் 28:7, தி.மொ.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியால் 1993-ல் பிரசுரிக்கப்பட்டது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ உவாட்ச் டவர் சொஸைட்டியும் அதைப்போன்ற சட்டப்பூர்வ நிறுவனங்களும் யெகோவாவின் சாட்சிகளுக்கு எவ்வாறு உதவிசெய்கின்றன?
◻ யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு வகிக்கும் பாகத்திலிருந்து கிறிஸ்தவர்கள் எவ்வாறு பயனடைகிறார்கள்?
◻ யெகோவாவின் ஜனங்கள் ஏன் தங்கள் பிரசங்க ஊழிய விவரங்களை அறிக்கை செய்கிறார்கள்?
◻ ஒப்புக்கொடுத்த ஒரு கிறிஸ்தவரை, என்ன சந்தர்ப்பங்களில் சபை நீக்கம் செய்வது தகுந்ததாக இருக்கிறது?
[பக்கம் 19-ன் படம்]
முதல் நூற்றாண்டு ஆளும் குழுவினர், கோட்பாட்டில் ஒற்றுமையைக் காத்தனர்
[பக்கம் 23-ன் படம்]
உலக முழுவதும், யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்து தங்களை விடுதலையாக்கின சுயாதீனத்தை அனுபவித்து மகிழ்கின்றனர்