உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 1/15 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • இதே தகவல்
  • ஜீவனுள்ள தேவனுடைய வழிநடத்துதலை பின்பற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • இரத்தம்—உயிருக்கு அத்தியாவசியம்
    உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்?
  • இரத்தம்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • இரத்தம் விற்பனை பெரிய வியாபாரம்
    விழித்தெழு!—1991
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 1/15 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

உலர்ந்த நிணநீர் (பிளாஸ்மா) போன்ற இரத்தத்தின் பாகங்கள் உணவுபொருள்களோடு சேர்க்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் குறித்து கிறிஸ்தவர்கள் எந்த அளவுக்கு அக்கறையுடையவர்களாய் இருக்கவேண்டும்?

உள்ளூர் உணவு பொருள்களில் மிருக இரத்தம் (அல்லது அதன் ஒரு பாகம்) நிச்சயமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நம்புவதற்கு நியாயமான ஆதாரம் இருந்தால், கிறிஸ்தவர்கள் முன்னெச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இருப்பினும், வெறும் சந்தேகத்தின் பேரில் கவலைப்பட்டு விடுவதும், ஆதாரமற்ற கவலைகளுடன் வாழ்வதும் ஞானமற்றதாகும்.

மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில், மானிடர்கள் இரத்தம் சாப்பிடக்கூடாது என்று நம்முடைய சிருஷ்டிகர் கட்டளையிட்டார். (ஆதியாகமம் 9:3, 4) இரத்தம் உயிரை பிரதிநிதித்துவம் செய்கிறது என்று அவர் கூறினார். அது அவரிடமிருந்து வந்த பரிசு. உயிரினங்களிலிருந்து நீக்கப்படும் இரத்தம், பலிபீடத்தின் மீது பலி கொடுப்பதற்காக மட்டுமே உபயோகப்படுத்தப்படவேண்டும். அப்படியில்லையென்றால், ஓர் உயிரினத்திலிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் தரையில் ஊற்றப்படவேண்டும். ஓர் அர்த்தத்தில் அதை கடவுளுக்கு திரும்ப கொடுப்பதை இது குறிக்கிறது. அவருடைய ஜனங்கள் இரத்தத்தை உண்பதன் மூலம் உயிர்வாழ்வதை தவிர்க்கவேண்டும். அவர் கட்டளையிட்டார்: “எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான்.” (லேவியராகமம் 17:11-14) இரத்தத்தை புசிப்பதன் பேரில் கடவுளின் தடையுத்தரவு கிறிஸ்தவர்களுக்கு மறுபடியுமாக சொல்லப்பட்டது. (அப்போஸ்தலர் 15:28, 29) ஆகையால் பூர்வ கிறிஸ்தவர்கள் குரல்வளை நெரித்துக் கொல்லப்பட்ட மிருகங்களின் இறைச்சி அல்லது இரத்த சாசேஜ் போன்ற இரத்தம் சேர்க்கப்பட்ட உணவை தவிர்க்க வேண்டியதாயிருந்தது.

ஆனால் நடைமுறையான விதத்தில், ‘இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும்’ என்ற அவர்களுடைய தீர்மானத்தில், அக்கிறிஸ்தவர்கள் எவ்வாறு செயல்படுவார்கள்? (அப்போஸ்தலர் 21:25) அவர்கள் வெறுமென அப்போஸ்தலனாகிய பவுலின் பின்வரும் வார்த்தைகளின்படி நடந்தால் போதுமா? “கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை.”

இல்லை. 1 கொரிந்தியர் 10:25-ல் இருக்கும் இவ்வார்த்தைகள் விக்கிரக கோவிலில் பலிசெலுத்தப்பட்ட மிருகத்திலிருந்து எடுத்த இறைச்சியைக் குறிக்கிறது. அக்காலத்தில் கோவில்களிலிருந்து பெறப்பட்ட மீதமான இறைச்சி வியாபாரிகளிடம் விற்கப்பட்டது. அந்த வியாபாரிகள் தங்கள் கடைகளில் விற்கும் இறைச்சியோடு அதையும் சேர்த்துக் கொள்வர். கோவிலிலிருந்து பெறப்பட்ட இறைச்சி இயல்பாகவே கெட்டுப்போனதாகவோ அல்லது சுத்தமில்லாததாகவோ இல்லை என்பது தான் பவுலின் குறிப்பு. பலிசெலுத்தப்படும் மிருகங்களின் இரத்தத்தை வடித்து புறமத பலிபீடங்களின் மீது உபயோகிப்பது வழக்கமாயிருந்தது. ஆகையால் மீதமான இறைச்சி ஒரு கோவிலோடு அல்லது புறமதங்களின் தவறான கருத்துக்களோடு எவ்வித வெளிப்படையான தொடர்புகளும் இன்றி சந்தையில் விற்கப்பட்டால், அந்த இறைச்சி சுத்தமானதும், இரத்தம் வடிக்கப்பட்டு வெறுமென கடையில் விற்கப்படும் இறைச்சி என்றும் கிறிஸ்தவர்கள் அதை வாங்கலாம்.

ஆனால் குரல்வளை நெரித்துக் கொல்லப்பட்ட மிருகங்களின் இறைச்சி (அல்லது இரத்த சாசேஜ்) உள்ளூர் கடைகளில் விசேஷமாக விற்கப்படுகிறது என்று அந்தக் கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தால், அது வித்தியாசமானதாக இருக்கவேண்டும். எந்த இறைச்சியை வாங்குவது என்பதன் பேரில் அவர்கள் கவனமாய் இருக்கவேண்டும். இரத்தம் சேர்க்கப்பட்ட இறைச்சி உணவுகளை அவர்கள் அதன் குறிப்பிட்ட நிறத்தைப் பார்த்து கண்டுபிடிக்க முடியும் (இரத்த சாசேஜ் பொதுவாக விற்கப்படும் தேசங்களில் இன்றும்கூட அவைகளை கண்டுபிடித்து விடலாம்). அல்லது கிறிஸ்தவர்கள் நம்பத்தக்க இறைச்சிக் கடைக்காரனை அல்லது இறைச்சி வியாபாரியை விசாரிக்கலாம். அந்த இறைச்சியில் இரத்தம் இருக்கிறது என்று நம்புவதற்கு அவர்களுக்கு எந்தக் காரணமும் இல்லையென்றால், அதை அவர்கள் வாங்கி சாப்பிடலாம்.

“உங்கள் சாந்தகுணம் (நியாயமானத் தன்மை, NW) எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக” என்றும்கூட பவுல் எழுதினார். (பிலிப்பியர் 4:5) அது இறைச்சி வாங்கும் விஷயத்துக்கு பொருந்தக்கூடும். இறைச்சியைக் குறித்து விசாரிப்பதில் கடவுளுடைய ஜனங்கள் அதிக நேரமும் முயற்சியும் செலவழிக்கவேண்டும் என்றும், கிடைக்கக்கூடிய இறைச்சியில் இரத்தம் இருப்பது பற்றி சிறு சந்தேகம் இருந்தால் காய்கறி உண்பவர்களாகவும்கூட ஆகவேண்டும் என்றும் இஸ்ரவேலின் சட்டமோ அல்லது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ ஆளும் குழுவின் கட்டளையோ குறிப்பிடவில்லை.

ஒரு மிருகத்தைக் கொன்ற இஸ்ரவேல் வேட்டைக்காரன் அதன் இரத்தத்தை வடித்து விடுவான். (உபாகமம் 12:15, 16 ஒப்பிடுக.) அவனுடைய குடும்பம் எல்லா இறைச்சியையும் சாப்பிட முடியவில்லையென்றால், அவன் கொஞ்சம் இறைச்சியை விற்றுவிடுவான். ஒழுங்காக இரத்தம் வடிக்கப்பட்ட மிருகத்தின் உடலிலும்கூட ஒரு சிறு அளவு இரத்தம் இறைச்சியில் இருக்கும்.

இறைச்சி வாங்குவதற்காக செல்லும் ஒரு யூதன், அம்மிருகம் கொலை செய்யப்பட்டதற்கும் இரத்தம் வடிக்கப்பட்டதற்கும் இடையே எவ்வளவு நிமிடங்கள் ஆயின, இரத்தம் வடிந்து விடுவதற்கு எந்தக் குருதிக்குழாய் வெட்டப்பட்டது, அந்த மிருகம் எவ்வாறு, எவ்வளவு நேரத்துக்கு தொங்கவிடப்பட்டது போன்ற உண்மைகளை பெற்றுக்கொள்வதற்கு பெரும் முயற்சி எடுக்கவேண்டும் என்று பைபிளில் எதுவும் குறிப்பிடப்பட்டில்லை. கூடுதலாக, எந்த இறைச்சியையும் சாப்பிடுவதற்கு முன் அதிக ஆதாரப்பூர்வமான பதில்கள் தேவைப்படுவது போல், இவ்விஷயத்தைக் குறித்து கிறிஸ்தவர்கள் அசாதாரண முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று ஆளும் குழு எழுதவில்லை.

இன்று அநேக தேசங்களில் மிருகங்கள் கொல்லப்படும்போது, சட்டம், பழக்க வழக்கங்கள் அல்லது மதசம்பந்தமான பழக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக, இரத்தம் வடிக்கப்பட்ட இறைச்சியிலிருந்து தான் உணவுபொருள்கள் தயாரிக்கப்படுகிறது. (இரத்த சாசேஜ் போன்ற அசாதாரணமான உணவுகளை தவிர) ஆகையால் அந்தப் பிராந்தியங்களில் இருக்கும் கிறிஸ்தவர்கள், மிருகங்கள் வெட்டப்படுவதைக் குறித்தோ அல்லது பதனஞ் செய்யப்படும் முறையைக் குறித்தோ அதிகமாக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. விரிவான அர்த்தத்தில், அவர்கள் வெறுமென ‘கடையிலே விற்கப்படுகிற இறைச்சியை விசாரிக்காமல் வாங்கி புசிக்கலாம்.’ இரத்தத்திலிருந்து தாங்கள் விலகியிருக்கிறோம் என்ற சுத்தமான மனசாட்சியும் கொண்டிருக்கலாம்.

ஆயினும் இரத்தம் வியாபார ரீதியில் உபயோகப்படுத்தப்படுவதைக் குறித்து வெளி வந்துள்ள சில தொழில்நுட்ப அறிக்கைகள் சில கிறிஸ்தவர்களை கலக்கமடையச் செய்திருக்கிறது. இறைச்சிப் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ள சில வியாபாரிகள் கொல்லப்படும் மிருகங்களின் திரளான இரத்தம் சேர்க்கப்பட்டு எரு, மிருக உணவு போன்ற லாபகரமான நடைமுறையான உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்று யோசித்திருக்கின்றனர். இத்தகைய இரத்தமோ (அல்லது அதன் பாகங்களோ) பதனிடப்பட்ட இறைச்சியில் பயன்படுத்தப்பட முடியுமா என ஆராய்ச்சியாளர்கள் முயன்று வந்திருக்கின்றனர். சில தொழில் நிறுவனங்கள் இறைச்சி உணவுப் பொருள்களில், ஒரு சிறு அளவு இறைச்சிக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய திரவ, உறைந்த அல்லது துகளான பிளாஸ்மா (அல்லது நிறம் மாற்றப்பட்ட சிவப்பு நிற செல்கள்) போன்றவற்றை உற்பத்தி செய்திருக்கின்றன. வேறு சில ஆராய்ச்சிகள் அரைத்த இறைச்சியை இறுகச் செய்வதற்கு துகளான இரத்தப் பகுதிகள் பயன்படுத்தப்படுவதன் பேரிலும், பிற வகையான உணவிலும் பானத்திலும் புரதத்தையும் இரும்பு சத்தையும் கூட்டுவதற்கு அவை உபயோகிக்கப்படுவதன் பேரிலும் செயல்பட்டு வந்திருக்கின்றன.

ஆயினும் இத்தகைய ஆராய்ச்சி அநேக ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தகுந்தது. இருந்தபோதிலும், பெரும்பாலான தேசங்களில் இப்படிப்பட்ட பொருள்களின் உபயோகம் வெகு குறைவாக அல்லது முற்றிலும் இல்லாமல் உள்ளது. இது ஏன் என்று பின்வரும் அறிக்கைகள் காட்டும்:

“போஷாக்கு தரும் பயனுள்ள புரதச்சத்தின் ஊற்றுமூலமாக இரத்தம் இருக்கிறது. ஆயினும் மாட்டு இரத்தம் அதனுடைய அடர்த்தியான நிறத்தினாலும், ஒருவகைப்பட்ட சுவையினாலும் மனித உணவில் உபயோகப்படுத்தப்படுவது வெகு குறைந்த அளவில் மட்டுமே.”—ஜர்னல் ஆப் புட் சையன்ஸ், புத்தகம் 55, நம்பர் 2, 1990.

“இரத்த பிளாஸ்மாவின் புரதத்துக்கு பயனுள்ள தன்மைகள் உள்ளன. உதாரணமாக, எளிதில் கரையும் எண்ணெயோடும் தண்ணீரோடும் நன்கு கலக்கும் தன்மைகள் உள்ளன . . . உணவு பொருள்களின் தயாரிப்பில் அவற்றின் உபயோகம் பெரும் அனுகூலங்களை அளிக்கக்கூடும். ஆயினும், பிளாஸ்மாவை விசேஷமாக உறைந்த நிலையில் சுத்தமாக வைத்திருப்பதற்கு எந்தத் திறம்பட்ட முறையும் ஜப்பானில் கண்டுபிடிக்கப்படவில்லை.”—ஜர்னல் ஆப் புட் சையன்ஸ், புத்தகம் 56, நம்பர் 1, 1991.

பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களில் என்ன சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை மேலுறையில் அச்சிட வேண்டும் என்று அநேக அரசாங்கங்கள் வற்புறுத்துவதால், சில கிறிஸ்தவர்கள் அந்த உறைகளை கவனமாக வாசிக்கின்றனர். இரத்தம் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று தாங்கள் எண்ணுவதற்கு நல்ல காரணங்கள் இருக்கையில், தவறாமல் அவ்விதம் வாசிக்க அவர்கள் தீர்மானிக்கக்கூடும். இரத்தம், இரத்த பிளாஸ்மா, பிளாஸ்மா குளோபின் (அல்லது குளோப்யுலின்) புரதம் அல்லது ஹீமோகுளோபின் (அல்லது குளோபின்) இரும்புச்சத்து போன்றவை அச்சிடப்பட்டிருந்தால், அப்பொருள்களை தவிர்ப்பது சரியானது. இத்தொழிலில் உள்ள ஓர் ஐரோப்பிய நிறுவனத்தின் வியாபாரக் குறிப்பு சொல்வதாவது: “வாங்குபவர், அடங்கியுள்ள பொருள்கள் யாவை என்பதைக் குறித்தோ அல்லது உணவின் பயனைக் குறித்தோ எவ்வித தவறுமின்றி புரிந்துகொள்ளும்படி குளோபின் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை பற்றிய விவரம் மேலுறையில் அச்சடிக்கப்பட வேண்டும்.”

ஆயினும், மேலுறைகளை கவனமாய் வாசிப்பது, இறைச்சி விற்பனையாளர்களை விசாரிப்பது என்பதிலும் நியாயமானத் தன்மை அவசியம். உலகமுழுவதிலுமுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும் பாக்கெட்டுகளில் வரும் எல்லா உணவுபொருள்களின் விவரங்களையும் மேலுறையில் அச்சிடப்பட்டுள்ளதைப் படித்து அறிந்து கொள்ளவேண்டும் என்றோ, உணவகங்களிலும் உணவு பொருள்கள் விற்கப்படும் கடைகளிலும் உள்ள வேலையாட்களை குறுக்கு விசாரணை செய்யவேண்டும் என்றோ அல்ல. ‘இந்தப் பிராந்தியத்திலோ அல்லது தேசத்திலோ உள்ள பொதுவான உணவு பொருள்களில் இரத்தமோ அல்லது அதன் பாகங்களோ உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதற்கு ஆதாரப் பூர்வமான அத்தாட்சி ஏதாவது இருக்கிறதா?” என்று ஒரு கிறிஸ்தவன் முதலில் தன்னை கேட்டுக்கொள்ள வேண்டும். பெரும்பாலான இடங்களில் இதற்கு பதில் இல்லை என்பதே. எனவே, அரிதான சாத்தியக்கூறுகளை சரிபார்ப்பதற்கென தங்களுடைய பெரும்பாலான நேரத்தையும் கவனத்தையும் செலவிடப்போவதில்லை என்று அநேக கிறிஸ்தவர்கள் தீர்மானித்துள்ளனர். இவ்வாறு உணராத ஒரு நபர் தன்னுடைய மனசாட்சிக்கு இணங்க நடப்பது அவசியம். இதற்கு முரணான யோசனை கொண்டிருந்த போதிலும், கடவுளுக்கு முன் சுத்தமான மனசாட்சியை கொண்டுள்ள மற்றவர்கள் குறை காணக்கூடாது.—ரோமர் 14:2-4, 12.

இரத்தம் அடங்கிய உணவுப்பொருள்கள் தயாரிக்கப்பட முடியுமென்றாலும், அது விரிவாக செய்யப்படாததற்கு காரணம் செலவு, சட்ட கட்டுப்பாடுகள், மேலும் பிற காரணங்களும் ஆகும். உதாரணமாக, புட் ப்ரோசசிங் (செப்டம்பர் 1991) குறிப்பிடுகிறது: “மாட்டு ரத்த பிளாஸ்மாவை தயாரிக்கப்பட்ட (இறைச்சி மாப்பண்டத்தில்) 1 சதவீதத்திற்கும் குறைவாகக்கூட உபயோகிப்பதில் பிரச்னைகளை எதிர்ப்படும் பதனிடுபவர்கள் பாற்கட்டி ஊறல் நீர் புரதத்தை பயன்படுத்தலாம்,” கோஷர் என்று அழைக்கப்படலாம்.

உணவுக்காக கொல்லப்படும் மிருகங்களின் இரத்தம் வடிக்கப்பட வேண்டும், அந்த இரத்தம் வேறு எந்த உணவு பொருள்களிலும் உபயோகப்படுத்தப்படக்கூடாது என்பதே அநேக தேசங்களில் உள்ள சட்டங்களும், பழக்கவழக்கங்களும், விருப்பங்களும் என்ற உண்மையை அழுத்தியுரைப்பது பொருத்தமாயிருக்கிறது. உள்ளூர் நிலைமைகள் வித்தியாசமானவை அல்லது சமீபத்தில் இவ்விஷயத்தில் பெரிய மாற்றம் நேரிட்டிருக்கிறது என்று நம்புவதற்கு போதுமான ஆதாரம் இல்லையென்றால், வெறுமென சாத்தியக்கூறுகள் நிமித்தமோ அல்லது வதந்தியின் நிமித்தமோ கிறிஸ்தவர்கள் கலக்கம் அடையாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். ஆயினும், உணவிலோ அல்லது மருத்துவ சிகிச்சையிலோ இரத்தம் பொதுவாக உபயோகப்படுத்தப்படுவது நிச்சயமாகவும் கூடியகாரியமாகவும் இருக்கையில் நாம் இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும் என்ற கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிய உறுதியான தீர்மானமாய் இருப்பது அவசியம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்