உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கிறிஸ்தவர்கள் குடிக்கலாமா?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
    • கிறிஸ்தவர்கள் குடிக்கலாமா?

      குடிப்பதைப் பற்றி இந்த உலகத்தில் வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. சிலர் எப்போதாவது நண்பர்களோடு சேர்ந்து கொஞ்சம் குடிக்கிறார்கள். வேறு சிலர் குடிப்பதே இல்லை. அதேசமயத்தில், போதை ஏறும் அளவுக்குக் குடிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், குடிப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

      1. மதுபானம் குடிப்பது தவறா?

      குடிக்கவே கூடாது என்று பைபிள் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, “மனிதனுடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்த திராட்சமதுவை” கடவுள் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறது. (சங்கீதம் 104:14, 15) அப்படியென்றால், கடவுள் தந்திருக்கும் பரிசுகளில் இதுவும் ஒன்று. கடவுளுக்கு உண்மையாக இருந்த சில ஆண்களும் பெண்களும்கூட மதுபானம் குடித்ததாக பைபிள் சொல்கிறது.—1 தீமோத்தேயு 5:23.

      2. குடிக்க நினைப்பவர்களுக்கு பைபிள் என்ன அறிவுரை தருகிறது?

      அதிகமாகக் குடிப்பதையும் குடிவெறியையும் யெகோவா கண்டனம் செய்கிறார். (கலாத்தியர் 5:21) “அளவுக்கு அதிகமாகத் திராட்சமது குடிக்கிறவர்களோடு . . . சேர்ந்துகொள்ளாதே” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 23:20) அதனால், குடிப்பதாக இருந்தால், தனியாக இருக்கும்போதுகூட அளவோடுதான் குடிக்க வேண்டும்! தெளிவாக யோசிக்க முடியாத அளவுக்கோ, என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்றே தெரியாத அளவுக்கோ, ஆரோக்கியம் கெட்டுப்போகும் அளவுக்கோ நாம் குடிக்கவே கூடாது. அளவோடு குடிக்க முடியாவிட்டால் குடிப்பதையே மொத்தமாக நிறுத்திவிடுவதுதான் நல்லது.

      3. குடிக்கும் விஷயத்தில் மற்றவர்களின் தீர்மானத்தை நாம் எப்படி மதிக்கலாம்?

      குடிப்பதா வேண்டாமா என்பதை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். அளவோடு குடிக்கிறவர்களைப் பற்றி நாம் தப்பாக நினைக்கக் கூடாது. குடிக்கவே கூடாது என்று முடிவு செய்திருப்பவர்களைக் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தவும் கூடாது. (ரோமர் 14:10) நாம் குடிப்பதால் மற்றவர்களுக்குப் பிரச்சினை என்றால் குடிக்காமல் இருப்பதுதான் நல்லது. (ரோமர் 14:21-ஐ வாசியுங்கள்.) “[நமக்கு] பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.”—1 கொரிந்தியர் 10:23, 24-ஐ வாசியுங்கள்.

      ஆராய்ந்து பார்க்கலாம்!

      குடிப்பதா வேண்டாமா, அப்படிக் குடிப்பதாக இருந்தால் எவ்வளவு குடிக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்ய உதவும் பைபிள் அறிவுரைகளைப் பார்க்கலாம். குடிப்பழக்கத்தை நிறுத்துவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் என்ன செய்யலாம் என்றுகூடப் பார்க்கலாம்.

      4. குடிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்

      குடிப்பதைப் பற்றி இயேசு என்ன நினைத்தார்? அவர் செய்த முதல் அற்புதத்தைப் பற்றிப் பார்க்கலாம். யோவான் 2:1-11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • குடிப்பதையும் குடிப்பவர்களையும் பற்றி இயேசு என்ன நினைத்தார்?

      • குடிப்பது தவறு என்று இயேசுவே சொல்லாததால், மதுபானம் குடிப்பவர்களை நாம் தப்பாக நினைக்கலாமா?

      குடிப்பதில் தவறு இல்லை என்பதற்காக, எல்லா சூழ்நிலைகளிலும் குடிக்கலாம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. நீதிமொழிகள் 22:3-ஐப் படித்துவிட்டு, இந்தச் சூழ்நிலைகளில் நீங்கள் குடிக்காமல் இருப்பது ஏன் நல்லது என்று யோசியுங்கள்:

      • வண்டி ஓட்டப்போகிறீர்கள் அல்லது ஏதோ மெஷினில் வேலை செய்யப்போகிறீர்கள்.

      • கர்ப்பமாக இருக்கிறீர்கள்.

      • குடிக்கக் கூடாதென்று டாக்டர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.

      • அளவோடு குடிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது.

      • குடிக்கக் கூடாது என்று அரசாங்கம் சொல்கிறது.

      • ரொம்பவும் கஷ்டப்பட்டுக் குடிப்பழக்கத்தை நிறுத்திய ஒருவர் உங்களோடு இருக்கிறார், இனி குடிக்கவே கூடாது என்று அவர் முடிவு எடுத்திருக்கிறார்.

      கல்யாண நிகழ்ச்சிகளில் அல்லது மற்ற பார்ட்டிகளில் மதுபானம் பரிமாற ஏற்பாடு செய்யலாமா? நீங்கள் எப்படி நன்றாக யோசித்து முடிவெடுக்கலாம் என்று தெரிந்துகொள்ள, வீடியோவைப் பாருங்கள்.

      வீடியோ: மதுபானம் பரிமாறலாமா? (2:41)

      ரோமர் 13:13-ஐயும் 1 கொரிந்தியர் 10:31, 32-ஐயும் படியுங்கள். ஒவ்வொரு வசனத்தையும் வாசித்த பிறகு இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • யெகோவாவுக்குப் பிடித்த முடிவை எடுக்க இந்த ஆலோசனை உங்களுக்கு எப்படி உதவி செய்யும்?

      ஹோட்டலில் ஒரு சகோதரர் தனக்கு ஒயின் வேண்டாம் என்று பரிமாறுபவரிடம் சொல்கிறார். அவரோடு இருக்கும் இரண்டு சகோதரிகள் ஒயின் குடிக்கிறார்கள்.

      குடிப்பதா வேண்டாமா என்பதை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். சில சூழ்நிலைகளில் குடிக்கலாம் என்று நினைக்கும் ஒருவர், மற்ற சூழ்நிலைகளில் குடிக்க வேண்டாமென்று நினைக்கலாம்

      5. எவ்வளவு குடிக்கலாம் என்று முடிவு செய்யுங்கள்

      நீங்கள் குடிப்பதாக இருந்தால் ஒரு விஷயத்தை ஞாபகம் வையுங்கள்: குடிக்கக் கூடாது என்று யெகோவா சொல்வதில்லை என்றாலும், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதைக் கண்டனம் செய்கிறார். ஏன்? ஓசியா 4:11, 18-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • ஒருவர் அளவுக்கு அதிகமாகக் குடித்தால் என்னவாகும்?

      அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? நாம் அடக்கமாக இருக்க வேண்டும், அதாவது நம்முடைய அளவைத் தெரிந்துகொண்டு அதற்குமேல் குடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நீதிமொழிகள் 11:2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • இவ்வளவுதான் குடிக்க வேண்டுமென்று முன்கூட்டியே முடிவு செய்வது ஏன் நல்லது?

      6. குடியின் பிடியிலிருந்து விடுபடுங்கள்

      ஒருவர் எப்படிக் குடியின் பிடியிலிருந்து விடுபட்டார் என்று பாருங்கள். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

      வீடியோ: ‘என்ன வாழ்க்கை இது?’ (6:32)

      படங்களின் தொகுப்பு: ‘என்ன வாழ்க்கை இது?’ என்ற வீடியோவின் காட்சிகள் 1. திமித்ரி ஒரு மது பாட்டிலைப் பார்க்கிறார். 2. திமித்ரியும் அவருடைய மனைவியும் மகளும் ஒன்றாக பைபிளைப் படிக்கிறார்கள்.
      • குடித்த பிறகு திமித்ரி எப்படி நடந்துகொண்டார்?

      • குடிப்பழக்கத்தை அவரால் உடனடியாக நிறுத்த முடிந்ததா?

      • குடியின் பிடியிலிருந்து அவர் எப்படி ஒருவழியாக விடுபட்டார்?

      1 கொரிந்தியர் 6:10, 11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • குடிவெறி ஏன் ஒரு சாதாரண பிரச்சினை கிடையாது?

      • குடிகாரர்கள்கூட மாற முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?

      மத்தேயு 5:30-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • கையை வெட்டி எறிவது என்றால் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடக்க நாம் தியாகங்கள் செய்ய வேண்டும். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட நீங்கள் போராடிக்கொண்டிருந்தால் என்ன செய்யலாம்?a

      1 கொரிந்தியர் 15:33-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • அளவுக்குமீறி குடிக்கிறவர்களோடு பழகினால் என்ன ஆகும்?

      யாராவது இப்படிக் கேட்கலாம்: “குடிக்கிறது தப்பா?”

      • நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

      சுருக்கம்

      நம் சந்தோஷத்துக்காக யெகோவா மதுபானத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதிகமாகக் குடிப்பதையும் குடிவெறியையும் அவர் கண்டனம் செய்கிறார்.

      ஞாபகம் வருகிறதா?

      • குடிப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

      • அளவுக்கு அதிகமாகக் குடிப்பதில் என்ன ஆபத்துகள் இருக்கின்றன?

      • குடிக்கும் விஷயத்தில் மற்றவர்கள் எடுக்கும் முடிவை நாம் எப்படி மதிக்கலாம்?

      குறிக்கோள்

      அலசிப் பாருங்கள்

      குடிக்கும் விஷயத்தில் டீனேஜர்கள் எப்படி நல்ல முடிவெடுக்கலாம்?

      குடிக்கும் முன் யோசி! (2:31)

      அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை நிறுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று பாருங்கள்.

      “குடிப்பதைக் கட்டுப்படுத்துங்கள்” (ஆன்லைன் கட்டுரை)

      கிறிஸ்தவர்கள் ‘சியர்ஸ்’ சொல்லிக் குடிக்கலாமா?

      “வாசகர் கேட்கும் கேள்விகள்” (காவற்கோபுரம், பிப்ரவரி 15, 2007)

      ஒருவர் எப்படிக் குடிப்பழக்கத்தை விட்டார் என்று “நான் ஒரு மொடாக் குடியனாக இருந்தேன்” என்ற கட்டுரையில் படித்துப் பாருங்கள்.

      “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” (ஆன்லைன் கட்டுரை)

      a குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதைவிட்டு வெளியே வருவதற்கு மருத்துவ உதவி தேவைப்படலாம். முன்பு குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தவர்கள் மறுபடியும் மதுவைத் தொடவே கூடாதென்று நிறைய டாக்டர்கள் ஆலோசனை கொடுக்கிறார்கள்.

  • உடையும் தோற்றமும்​—ஏன் கவனம் தேவை?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
    • பாடம் 52. என்ன துணிமணிகள் வாங்கலாம் என்று ஒரு பெண் முடிவு செய்கிறாள்.

      பாடம் 52

      உடையும் தோற்றமும்—ஏன் கவனம் தேவை?

      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கிறது. நம் உடையும் தோற்றமும் நம் ரசனைக்கு ஏற்றபடியும் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரியும் இருப்பதற்கு ஒருசில பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்தாலே போதும். அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

      1. என்ன நியமங்களை நாம் மனதில் வைக்க வேண்டும்?

      நாம் ‘நேர்த்தியான உடையை அடக்கத்தோடும் தெளிந்த புத்தியோடும்’ உடுத்த வேண்டும். அதோடு, நம் தோற்றம் ‘கடவுள்பக்தியை’ காட்டும் விதத்தில் சுத்தமாக இருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 2:9, 10) இந்த நான்கு நியமங்களை மனதில் வையுங்கள்: (1) நம் உடை ‘நேர்த்தியாக’ இருக்க வேண்டும். யெகோவாவின் மக்களுக்கு வித்தியாசமான ரசனைகள் இருந்தாலும், அவர்களுடைய உடையும் முடி அலங்காரமும் எப்போதுமே யெகோவாவுக்கு மரியாதை காட்டும் விதத்தில்தான் இருக்கும். இதை நீங்களே சபைக் கூட்டங்களில் பார்த்திருப்பீர்கள். (2) நாம் ‘அடக்கமாக’ உடை உடுத்த வேண்டும். அதாவது, நம் தோற்றம் கவர்ச்சியாகவோ மற்றவர்களுடைய கவனத்தை அளவுக்கு அதிகமாக ஈர்க்கும் விதத்திலோ இருக்கக் கூடாது. (3) புதிதாக வரும் ஒவ்வொரு ஃபேஷனையும் ஸ்டைலையும் நாம் பின்பற்றாமல் ‘தெளிந்த புத்தியோடு’ உடை உடுத்த வேண்டும். (4) நம் தோற்றம் ‘கடவுள்பக்தியை’ காட்ட வேண்டும். அதாவது, நாம் உண்மைக் கடவுளை வணங்குகிறவர்கள் என்பதை எப்போதுமே காட்ட வேண்டும்.​—1 கொரிந்தியர் 10:31.

      2. ஏன் சகோதர சகோதரிகளை மனதில் வைத்து உடை உடுத்த வேண்டும்?

      எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்திக்கொள்ள நமக்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அது மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் ஒருபோதும் மற்றவர்களைச் சங்கடப்படுத்திவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, அவர்களை “பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அவர்களுக்குப் பிரியமாக நடந்துகொள்ள வேண்டும்.”​—ரோமர் 15:1, 2-ஐ வாசியுங்கள்.

      3. நம் தோற்றம் எப்படி மற்றவர்களை உண்மை வணக்கத்திடம் ஈர்க்கும்?

      நாம் எல்லா சமயத்திலும், முக்கியமாக சபைக் கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போகும்போது, கண்ணியமாக உடை உடுத்துகிறோம். நம் தோற்றத்தைப் பார்த்து மற்றவர்கள் நம் செய்தியைக் கேட்காமல் போய்விடக் கூடாது. அதற்குப் பதிலாக, அவர்கள் சத்தியத்திடம் ஈர்க்கப்பட வேண்டும். அப்போதுதான், நம் தோற்றம் ‘நம்முடைய மீட்பரான கடவுளுடைய போதனைகளை . . . அலங்கரிக்கும்.’​—தீத்து 2:10.

      ஆராய்ந்து பார்க்கலாம்!

      நாம் உண்மைக் கடவுளை வணங்குகிறவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியும்படி நம் உடையும் தோற்றமும் இருக்க வேண்டும். எப்படி என்று பார்க்கலாம்.

      இரண்டு ஆண்கள் ஒரு நீதிபதிக்கு முன்னால் நிற்கிறார்கள். ஒருவர் கோட் சூட் போட்டிருக்கிறார். இன்னொருவர் கிழிந்துபோன உடையை ஏனோதானோவென்று உடுத்தியிருக்கிறார். பேஸ்பால் தொப்பியை மாட்டியிருக்கிறார்.

      அதிகாரத்தில் இருப்பவர்களை நாம் மதிக்கிறோமா இல்லையா என்பதை நம் தோற்றம் காட்டும். நம் மனதில் இருப்பதை யெகோவாவினால் பார்க்க முடியும் என்றாலும், நம் தோற்றத்திலும் நாம் அவருக்கு மதிப்புக் காட்ட வேண்டும்

      4. கண்ணியமான தோற்றம் யெகோவாவுக்கு மதிப்பு சேர்க்கும்

      நம் தோற்றத்தை நன்றாக வைத்துக்கொள்வதற்கு மிக முக்கியமான காரணம் என்ன? சங்கீதம் 47:2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • நம் தோற்றம் யெகோவாவின் பெயரைப் பாதிக்கும் என்பதால் உடை உடுத்தும் விஷயத்தில் எப்படிக் கவனமாக இருக்கலாம்?

      • கூட்டங்களிலும் ஊழியத்திலும் கலந்துகொள்ளும்போது நம் தோற்றத்துக்குக் கவனம் செலுத்துவது முக்கியம் என்று நினைக்கிறீர்களா? ஏன்?

      5. சரியான முடிவுகளை எடுப்பதற்கு உதவி

      வீடியோவைப் பாருங்கள்.

      வீடியோ: “எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்” (10:18)

      விலை அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, நம் உடை சுத்தமாகவும் சூழ்நிலைக்கு ஏற்றபடி கண்ணியமாகவும் இருக்க வேண்டும். 1 கொரிந்தியர் 10:24-ஐயும் 1 தீமோத்தேயு 2:9, 10-ஐயும் படியுங்கள். பிறகு, இப்படிப்பட்ட உடைகளை ஏன் தவிர்க்க வேண்டுமென்று கலந்துபேசுங்கள்:

      • கசங்கிப்போன அழுக்கான உடை அல்லது ஏனோதானோவென்ற உடை

      • உடம்போடு ஒட்டிக்கொண்டோ, உடம்பைக் காட்டும்படியோ, மற்றபடி கவர்ச்சியாகவோ இருக்கும் உடை

      மோசே மூலம் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தை இன்று கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்றாலும், யெகோவா யோசிக்கும் விதத்தைப் பற்றி அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். உபாகமம் 22:5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • பெண்கள் ஆண்களைப் போலவோ, ஆண்கள் பெண்களைப் போலவோ டிரஸ் பண்ணிக்கொள்வது ஏன் தப்பு?

      1 கொரிந்தியர் 10:32, 33-ஐயும் 1 யோவான் 2:15, 16-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • நம் தோற்றம் நம்மைச் சுற்றியுள்ள மக்களை அல்லது சபையில் இருப்பவர்களைச் சங்கடப்படுத்தாதபடி நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

      • நீங்கள் இருக்கும் இடத்தில் என்ன மாதிரியான ஃபேஷனும் ஸ்டைலும் இருக்கின்றன?

      • அதில் ஏதாவது கிறிஸ்தவர்களுக்கு ஒத்துவராது என்று நினைக்கிறீர்களா? ஏன்?

      நம் உடையும் முடி அலங்காரமும் விதவிதமாக இருக்கலாம், அதேசமயத்தில் அவை யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி கண்ணியமாக இருக்க வேண்டும்

      கிறிஸ்தவர்களுக்குத் தகுந்த வித்தியாசமான உடைகளோடும் முடி அலங்காரத்தோடும் இருக்கும் வெவ்வேறு வயதையும் இனங்களையும் நாடுகளையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும்.

      சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “என் இஷ்டத்துக்கு டிரஸ் பண்ணிக்க எனக்கு உரிமை இருக்கு.”

      • இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? ஏன்?

      சுருக்கம்

      உடை மற்றும் தோற்றம் விஷயத்தில் நாம் சரியான முடிவுகளை எடுக்கும்போது யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் மதிப்புக் காட்டுவோம்.

      ஞாபகம் வருகிறதா?

      • நம் உடையையும் தோற்றத்தையும் யெகோவா ஏன் முக்கியமாக நினைக்கிறார்?

      • உடை மற்றும் தோற்றம் சம்பந்தமாக என்ன நியமங்களை நாம் மனதில் வைக்க வேண்டும்?

      • நம் தோற்றம் உண்மை வணக்கத்தைப் பற்றிய மக்களுடைய அபிப்பிராயத்தை எப்படிப் பாதிக்கும்?

      குறிக்கோள்

      அலசிப் பாருங்கள்

      நீங்கள் போடும் டிரஸைப் பார்த்து மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

      “இந்த டிரஸ் எனக்கு எப்படி இருக்கு?” (ஆன்லைன் கட்டுரை)

      பச்சை குத்திக்கொள்ளலாமா என்று முதலிலேயே யோசிப்பது ஏன் புத்திசாலித்தனம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

      “பச்சை குத்திக்கொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?” (ஆன்லைன் கட்டுரை)

      சரியான முடிவுகளை எடுக்க உதவுகிற இன்னும் நிறைய நியமங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

      “நீங்கள் உடுத்தும் விதம் கடவுளை மகிமைப்படுத்துகிறதா?” (காவற்கோபுரம், செப்டம்பர் 2016)

      உடை உடுத்தும் விஷயத்தில் மற்றவர்கள் எடுக்கும் முடிவுகளை ஒரு பெண் எப்படி மதிக்கக் கற்றுக்கொண்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

      “அவர்களுடைய உடையையும் தலைமுடியையும் பார்த்து தப்புக்கணக்குப் போட்டேன்” (ஆன்லைன் கட்டுரை)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்