கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுதல் —முதல் நூற்றாண்டிலும் இன்றும்
‘ஒரே சக்திதான் இவை எல்லாவற்றையும் செயல்படுத்துகிறது.’—1 கொ. 12:11.
1. இந்தக் கட்டுரையில் எவற்றைச் சிந்திப்போம்?
பெந்தெகொஸ்தே நாள். இதைக் கேட்டதும் பூரிப்பூட்டும் பல நிகழ்ச்சிகள் மனதுக்கு வருகின்றனவே! (அப். 2:1-4) அன்றுதான் கடவுள் தம்முடைய ஊழியர்கள்மீது தமது சக்தியைப் பொழிந்தார்; அதுமுதல் தம் மக்களைப் புதிய விதத்தில் வழிநடத்த ஆரம்பித்தார். முந்தைய கட்டுரையில், கடவுள் கொடுத்திருந்த கஷ்டமான வேலைகளைச் செய்ய பூர்வ கால விசுவாசிகளுக்கு அவரது சக்தி உதவிய சில வழிகளைப் பற்றிச் சிந்தித்தோம். ஆனால், கடவுளுடைய சக்தி பூர்வ காலத்தில் செயல்பட்ட விதத்திற்கும் முதல் நூற்றாண்டில் செயல்பட்ட விதத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இன்று அது செயல்படுகிற விதத்திலிருந்து கிறிஸ்தவர்கள் எப்படிப் பயனடைகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது சிந்திப்போம்.
“இதோ! நான் யெகோவாவின் அடிமைப் பெண்!”
2. கடவுளுடைய சக்தியைப் பற்றி மரியாள் எதை அறிந்திருந்தார்?
2 வாக்குறுதி அளிக்கப்பட்ட கடவுளுடைய சக்தி, எருசலேமிலிருந்த ஒரு வீட்டின் பெரிய மாடி அறையில் கூடியிருந்தவர்கள்மீது பொழியப்பட்ட சமயத்தில் மரியாளும் அங்கிருந்தார். (அப். 1:13, 14) ஆனால், இது நடப்பதற்கு வெகு காலம் முன்பேகூட, யெகோவாவின் சக்தியால் அற்புதமான காரியங்களைச் செய்ய முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். 30-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு யெகோவா தம்முடைய மகனின் உயிரைப் பரலோகத்திலிருந்து பூமிக்கு அனுப்பி, மரியாள் கருவுறும்படி செய்திருந்தார். ஆம், மரியாள் கன்னியாக இருந்தபோதே ‘கடவுளுடைய சக்தியின் மூலம் கர்ப்பமானார்.’—மத். 1:20.
3, 4. மரியாள் எப்படிப்பட்ட மனப்பான்மையை வெளிக்காட்டினார், நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?
3 இந்த ஒப்பற்ற பாக்கியத்தைப் பெறும்படி மரியாள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? கடவுளுடைய மகனை மரியாள் பெற்றெடுப்பாரெனத் தேவதூதர் சொன்ன பிறகு, மரியாள் இவ்வாறு கூறினார்: “இதோ! நான் யெகோவாவின் அடிமைப் பெண்! உங்கள் வார்த்தையின்படியே எனக்கு நடக்கட்டும்.” (லூக். 1:38) இவ்வாறு சொன்னதன் மூலம் தன்னுடைய மனப்பான்மையை அவர் வெளிப்படுத்தினார்; இதை யெகோவா முன்னமே கவனித்திருந்தார். மரியாள் உடனடியாகப் பதிலளித்தது, இந்த விஷயத்தில் யெகோவாவின் சித்தத்தை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருந்ததைக் காட்டியது. தான் கர்ப்பமானால் ஊரார் என்ன பேசுவார்கள் என்று அவர் அந்தத் தூதரிடம் கேள்வி கேட்கவில்லை; தன் திருமணம் நின்றுபோய்விடுமோ என்று பயப்படவுமில்லை. தன்னை அடிமைப் பெண் எனக் குறிப்பிடுவதன் மூலம் தன் எஜமானராகிய யெகோவாவை முழுக்க முழுக்க நம்பியிருந்ததை அவர் காட்டினார்.
4 கடவுளுடைய சேவையில் சந்திக்கிற சவால்களை அல்லது கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளைக் குறித்து நீங்கள் எப்போதாவது திணறிப்போயிருக்கிறீர்களா? நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘யெகோவா தம்முடைய சித்தத்திற்கு இசைவாகக் காரியங்களைச் செய்வார் என்பதை நான் முழுமையாக நம்புகிறேனா? யெகோவா எதிர்பார்க்கிற வேலையைச் செய்ய நான் உண்மையிலேயே மனமுள்ளவனா(ளா)க இருக்கிறேனா?’ முழு இருதயத்தோடு தம்மைச் சார்ந்திருக்கிறவர்களுக்கும் தம்முடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கும் கடவுள் தம்முடைய சக்தியைக் கொடுக்கிறார் என நீங்கள் உறுதியாய் நம்பலாம்.—அப். 5:32.
கடவுளுடைய சக்தி பேதுருவுக்கு உதவியது
5. கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பாகவே என்ன விதங்களில் கடவுளுடைய சக்தி செயல்பட்டதை பேதுரு கண்டிருந்தார்?
5 மரியாளைப் போலவே பேதுருவும், கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பாகவே கடவுளுடைய சக்தி மிகுந்த வல்லமையுடன் செயல்பட்டதை அனுபவப்பூர்வமாகக் கண்டிருந்தார். பேய்களைத் துரத்தும் அதிகாரத்தை பேதுருவுக்கும் மற்ற அப்போஸ்தலர்களுக்கும் இயேசு கொடுத்திருந்தார். (மாற். 3:14-16) பைபிள் இது சம்பந்தமாக அதிக விவரங்களை அளிக்காவிட்டாலும், பேதுரு அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பார் என்றே தோன்றுகிறது. கலிலேயக் கடலின் தண்ணீர்மீது நடந்து தம்மிடம் வரும்படி பேதுருவை இயேசு அழைத்தபோது கடவுளுடைய சக்தியின் உதவியோடு பேதுரு அவரிடம் நடந்து சென்றார். (மத்தேயு 14:25-29-ஐ வாசியுங்கள்.) பேதுரு கடவுளுடைய சக்தியின் உதவியைச் சார்ந்திருந்ததாலேயே அற்புதங்களைச் செய்ய முடிந்ததென்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தச் சக்தி சீக்கிரத்திலேயே புதிய விதங்களில் அவர்மீதும் மற்ற சீடர்கள்மீதும் செயல்படவிருந்தது.
6. கடவுளுடைய சக்தியின் உதவியோடு கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளிலும் அதற்குப் பிறகும் பேதுரு எதையெல்லாம் செய்தார்?
6 கி.பி. 33, பெந்தெகொஸ்தே பண்டிகையின்போது, எருசலேமிற்குப் பயணப்பட்டு வந்திருந்த பல தேசத்தாரின் மொழிகளில் பேசும் அற்புத வல்லமையை பேதுருவுக்கும் மற்றவர்களுக்கும் கடவுளுடைய சக்தி கொடுத்தது. அதற்குப் பிறகு பேதுரு எழுந்து நின்று அங்கு கூடிவந்திருந்தவர்களிடம் பேசினார். (அப். 2:14-36) சில சமயங்களில் இவர் யோசிக்காமல் செயல்பட்டார் அல்லது பயப்பட்டார்; ஆனால் கடவுளுடைய சக்தியைப் பெற்ற பிறகோ, பயமுறுத்தல்களையும் துன்புறுத்தல்களையும் சந்தித்தபோதிலும் தைரியமாகச் சாட்சிகொடுத்தார். (அப். 4:18-20, 31) கடவுள் தம்முடைய சக்தியின் மூலம் விசேஷ அறிவை அவருக்குத் தந்தார். (அப். 5:8, 9) ஒருவரை உயிர்த்தெழுப்புவதற்குக்கூட கடவுளுடைய சக்தி அவருக்கு உதவியது.—அப். 9:40.
7. பரலோக நம்பிக்கையைப் பெற்ற பிறகு இயேசுவுடைய எந்தப் போதனைகளை பேதுருவால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது?
7 பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பு, இயேசு கற்பித்த சத்தியங்கள் பலவற்றை பேதுரு தெளிவாகப் புரிந்திருந்தது உண்மைதான். (மத். 16:16, 17; யோவா. 6:68) ஆனால், அவற்றில் சில பேதுருவுக்குப் புரியாமலே இருந்தன. உதாரணமாக, இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகு பரலோக உடலில் கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்படுவார் என்பதையும் அவரது அரசாங்கம் பரலோகத்தில் இருக்கும் என்பதையும் அவர் புரிந்துகொள்ளாதிருந்தார். (யோவா. 20:6-10; அப். 1:6) அதோடு, மனிதர்கள் பரலோகத்திற்குச் சென்று, கடவுளுடைய அரசாங்கத்தில் ஆட்சி செய்வார்கள் என்ற கருத்தை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஆனால், கடவுளுடைய சக்தியின் ஞானஸ்நானத்தையும் பரலோக நம்பிக்கையையும் அவர் பெற்றபோதுதான், இந்த விஷயங்களைக் குறித்து இயேசு போதித்தவற்றின் அர்த்தத்தை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
8. பரலோக நம்பிக்கை உள்ளவர்களும், ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்களும் எதைப் புரிந்துகொள்கிறார்கள்?
8 இயேசுவின் சீடர்களால் முன்பு புரிந்துகொள்ள முடியாதிருந்த விஷயங்களைக் கடவுளுடைய சக்தி பொழியப்பட்ட பிறகு அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. யெகோவாவின் நோக்கம் சம்பந்தப்பட்ட அருமையான சத்தியங்களை விளக்க, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்களைக் கடவுளுடைய சக்தி தூண்டியது. (எபே. 3:8-11, 18) இன்று, பரலோக நம்பிக்கை உள்ளவர்களும்சரி ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தோரும்சரி, இதே சத்தியங்களைப் படித்துப் புரிந்துகொள்கிறார்கள். (யோவா. 10:16) கடவுளுடைய வார்த்தையின் அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் பெற அவருடைய சக்தி உங்களுக்கு உதவுவதற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?
பவுல் ‘கடவுளுடைய சக்தியினால் நிறைந்திருந்தார்’
9. கடவுளுடைய சக்தியின் உதவியோடு பவுல் எதையெல்லாம் செய்தார்?
9 கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு ஓரிரு வருடங்கள் கழித்து, இன்னொருவர் மீதும் கடவுளுடைய சக்தி பொழிந்தது. அவர்தான் சவுல்; பின்பு அவர் பவுல் என அறியப்பட்டார். கடவுளுடைய சக்தி அவரிடம் பல விதங்களில் செயல்பட்டது; அது நமக்கு இன்று பயனுள்ளதாக இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் பைபிளில் 14 புத்தகங்களை எழுதும்படி கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டார். பேதுருவைப் போலவே இவரும் சாவாமையுள்ள பரலோக வாழ்க்கையைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் எழுதவும் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டார். அந்தச் சக்தி, வியாதிப்பட்டவர்களைக் குணப்படுத்தவும், பேய்களைத் துரத்தவும், இறந்தவர்களை உயிர்த்தெழுப்பவும்கூட அவருக்கு உதவியது. என்றாலும், இதையெல்லாம்விட மிக முக்கியமான ஒன்றைச் செய்வதற்காகவே கடவுளுடைய சக்தியை அவர் பெற்றார்; இன்று கடவுளுடைய ஊழியர்களும் அதைச் செய்வதற்காகவே அந்தச் சக்தியைப் பெறுகிறார்கள், என்றாலும் அதை அவர்கள் அற்புதமாகப் பெறுவதில்லை.
10. சத்தியத்தைப் பற்றிப் பேச கடவுளுடைய சக்தி எப்படி பவுலுக்கு உதவியது?
10 ‘கடவுளுடைய சக்தியினால் நிறைந்திருந்த’ பவுல் ஒரு மந்திரவாதியை எதிர்த்துத் தைரியமாகப் பேசினார். இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் முழுவதையும் சீப்புரு தீவின் முக்கிய ஆளுநர் கேட்டார். பவுல் பேசியது அவருக்கு மிகவும் பிடித்துப்போனதால் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். அவர் “யெகோவாவைப் பற்றிய போதனையைக் கேட்டு மலைத்துப்போனார்” என்று பைபிள் சொல்கிறது. (அப். 13:8-12) சத்தியத்தைத் தைரியமாகப் பேசுவதற்குக் கடவுளுடைய சக்தி எந்தளவு அவசியம் என்பதை பவுல் தெளிவாக அறிந்திருந்தார். (மத். 10:20) பின்னர், தனக்குப் “பேச்சாற்றல்” தரும்படி கடவுளிடம் மன்றாடச் சொல்லி எபேசு சபையிலிருந்தவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.—எபே. 6:18-20.
11. கடவுளுடைய சக்தி பவுலை எப்படி வழிநடத்தியது?
11 கடவுளுடைய சக்தி சத்தியத்தைப் பேச பவுலுக்கு உதவியது மட்டுமல்லாமல் சில இடங்களில் அவர் பேசுவதைத் தடுக்கவும் செய்தது. மிஷனரி பயணங்களின்போது கடவுளுடைய சக்தி அவரை வழிநடத்தியது. (அப். 13:2; அப்போஸ்தலர் 16:6-10-ஐ வாசியுங்கள்.) பிரசங்க வேலையை வழிநடத்த இன்றும் யெகோவா தம்முடைய சக்தியைப் பயன்படுத்துகிறார். பவுலைப் போல, யெகோவாவுடைய கீழ்ப்படிதலுள்ள ஊழியர்கள் எல்லாருமே தைரியத்தோடும் பக்திவைராக்கியத்தோடும் சத்தியத்தை அறிவிக்கக் கடும் முயற்சி செய்கிறார்கள். பவுலுடைய காலத்தைப்போல் இன்று கடவுளுடைய வழிநடத்துதல் அவ்வளவு தெளிவாகத் தெரியாதபோதிலும், தகுதியானவர்களைச் சத்தியத்திடம் ஈர்ப்பதற்கு யெகோவா தம்முடைய சக்தியைப் பயன்படுத்துகிறார் என்று நிச்சயமாய் இருக்கலாம்.—யோவா. 6:44.
“பல வகை செயல்பாடுகள்”
12-14. கடவுளுடைய சக்தி அவருடைய ஊழியர்கள் எல்லாரிடமும் ஒரே விதத்தில் செயல்படுகிறதா? விளக்குங்கள்.
12 முதல் நூற்றாண்டில், பரலோக நம்பிக்கை பெற்றிருந்தவர்களின் சபையை யெகோவா ஆசீர்வதித்ததைப் பற்றிய பைபிள் பதிவுகள் இன்றுள்ள அவருடைய ஊழியர்களுக்கு அதிக உற்சாகத்தை அளிக்கின்றனவா? நிச்சயமாகவே அளிக்கின்றன. கடவுளுடைய சக்தி அருளிய அற்புத வரங்களைப் பற்றி கொரிந்து சபையினருக்குக் கடவுளுடைய தூண்டுதலால் பவுல் இவ்வாறு எழுதியதை நினைவில் வையுங்கள்: “பல வகை வரங்கள் இருக்கின்றன; ஆனால், கடவுளுடைய சக்தி ஒன்றுதான்; பல வகை ஊழியங்கள் இருக்கின்றன, என்றாலும் எஜமானர் ஒருவர்தான்; பல வகை செயல்பாடுகள் இருக்கின்றன, என்றாலும் கடவுள் ஒருவர்தான், அவரே எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் செயல்படுத்துகிறவர்.” (1 கொ. 12:4-6, 11) ஆம், கடவுளுடைய சக்தி ஒரு நோக்கத்துடன் பல்வேறு வழிகளில் பல்வேறு ஊழியர்களிடம் செயல்படலாம். சொல்லப்போனால், கிறிஸ்துவின் ‘சிறு மந்தையை’ சேர்ந்தோர் மட்டுமல்லாமல் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தோரும் கடவுளுடைய சக்தியைப் பெற முடியும். (லூக். 12:32; யோவா. 10:16) என்றாலும், சபையிலுள்ள ஒவ்வொருவரிடமும் அந்தச் சக்தி ஒரே விதமாக எப்போதும் செயல்படுவதில்லை.
13 உதாரணத்திற்கு, சபையிலுள்ள மூப்பர்கள் கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்படுகிறார்கள். (அப். 20:28) ஆனால், கடவுளுடைய சக்தியின் பொழிவைப் பெற்ற எல்லாருமே சபையில் கண்காணிகளாகச் சேவை செய்வதில்லை. இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வருகிறோம்? சபையிலுள்ளவர்களிடம் கடவுளுடைய சக்தி வெவ்வேறு விதமாகச் செயல்படுகிறது என்ற முடிவுக்கே வருகிறோம்.
14 பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் தாங்கள் ‘கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்ற உறுதியை அவருடைய சக்தியின் மூலம் பெறுகிறார்கள்; இந்தச் சக்தியைப் பயன்படுத்தியே யெகோவா தம்முடைய ஒரே மகனை சாவாமை உள்ள பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பினார். (ரோமர் 8:11, 15-ஐ வாசியுங்கள்.) இந்தச் சக்தியைப் பயன்படுத்தியே யெகோவா முழுப் பிரபஞ்சத்தையும் படைத்தார். (ஆதி. 1:1-3) இந்தச் சக்தியைப் பயன்படுத்தியே யெகோவா ஆசரிப்புக் கூடாரத்தின் சிறப்புப் பணிக்கு பெசலெயேலைத் தகுதிபெறச் செய்தார், விசேஷ பலம் தேவைப்பட்ட வேலைகளைச் செய்ய சிம்சோனுக்குக் கைகொடுத்தார், தண்ணீரின் மீது நடக்க பேதுருவுக்கு உதவினார். எனவே, கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுவதை அவருடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படுவதோடு, அதாவது பரலோக நம்பிக்கைக்கு நியமிக்கப்படுவதோடு, நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது; ஒருவரைப் பரலோக நம்பிக்கைக்கு நியமிப்பது அந்தச் சக்தியின் விசேஷ செயல்பாடுகளில் ஒன்றுதான். இந்த விசேஷ நியமிப்பை யெகோவாவே செய்கிறார்.
15. கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் பெறுவது என்றென்றும் தொடர்ந்து நடைபெறுமா? விளக்குங்கள்.
15 கடவுளுடைய சக்தி எப்போதுமே அவருடைய உண்மை ஊழியர்கள்மீது பல்வேறு வழிகளில் செயல்பட்டு வந்திருக்கிறது; ஆம், பரலோக நம்பிக்கை உள்ளவர்களைக் கடவுள் தேர்ந்தெடுக்க ஆரம்பிப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அது செயல்பட்டு வந்திருக்கிறது. கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு பரலோக நம்பிக்கை உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கும் புதிய செயல்பாடு துவங்கியது; ஆனால் அது என்றென்றும் தொடராது. இப்படிக் கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் பெறுவது முடிவடையும் என்றாலும் கடவுளுடைய மக்கள் அவருடைய சித்தத்தை என்றென்றும் செய்ய அவருடைய சக்தியால் தொடர்ந்து வழிநடத்தப்படுவார்கள்.
16. கடவுளுடைய சக்தியின் உதவியால் இன்று அவருடைய ஊழியர்கள் என்ன செய்து வருகிறார்கள்?
16 யெகோவாவுடைய சக்தியின் உதவியோடு முக்கியமாக இன்று பூமியில் என்ன செய்யப்பட்டு வருகிறது? வெளிப்படுத்துதல் 22:17 இவ்வாறு பதிலளிக்கிறது: “‘வருக, வருக!’ என்று கடவுளுடைய சக்தி அழைத்துக்கொண்டே இருக்கிறது, மணமகளும் அவ்வாறே அழைக்கிறாள். கேட்கிற எவனும் ‘வருக, வருக!’ என்று அழைக்கட்டும்; தாகமாயிருக்கிற எவனும் வரட்டும்; விருப்பமுள்ள எவனும் வாழ்வளிக்கும் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளட்டும்.” இன்று கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு, வாழ்வளிக்கும் தண்ணீரைப் பெற யெகோவா விடுக்கிற அழைப்பை ‘விருப்பமுள்ளவர்களுக்கு’ கொடுக்கிறார்கள். இந்த வேலையைப் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் முன்நின்று செய்கிறார்கள். என்றாலும், இந்த வேலையில் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்குத் தோள்கொடுக்கிறார்கள். இவ்வேலையைச் செய்து முடிக்க கடவுளுடைய சக்தியே இந்த இரு தரப்பினருக்கும் உதவுகிறது. யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பதற்கு அடையாளமாக இந்த இரு தரப்பினருமே, ‘பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம்’ பெற்றிருக்கிறார்கள். (மத். 28:19) இந்த இரு தரப்பினருமே தங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய சக்தி செயல்பட அனுமதிப்பதன் மூலம் அந்தச் சக்தியால் பிறப்பிக்கப்படுகிற குணங்களை வெளிக்காட்டுகிறார்கள். (கலா. 5:22, 23) இந்த இரு தரப்பினருமே கடவுளுடைய சக்தியின் உதவியால், அவர் எதிர்பார்க்கிற விதத்தில் பரிசுத்தமாக வாழ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.—2 கொ. 7:1; வெளி. 7:9, 14.
கடவுளுடைய சக்திக்காகக் கேட்டுக்கொண்டே இருங்கள்
17. உங்களிடம் கடவுளுடைய சக்தி இருக்கிறது என்பதற்கு நீங்கள் எப்படி அத்தாட்சி அளிப்பீர்கள்?
17 நீங்கள் பரலோகத்தில் என்றென்றும் வாழப் போகிறவர்களாக இருந்தாலும்சரி பூமியில் என்றென்றும் வாழப் போகிறவர்களாக இருந்தாலும்சரி, உத்தமத்தில் நிலைத்திருப்பதற்கும் பரிசைப் பெறுவதற்கும் உதவியாக யெகோவாவால் உங்களுக்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ கொடுக்க முடியும். (2 கொ. 4:7) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை நீங்கள் பிரசங்கித்து வருவதைப் பார்த்து மற்றவர்கள் கேலிகிண்டல் செய்யலாம். ஆனால், நீங்கள் நிறுத்தாமல் தொடர்ந்து ஊழியம் செய்தீர்கள் என்றால் உங்களிடம் கடவுளுடைய சக்தி இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி அளிப்பீர்கள். இதை மறந்துவிடாதீர்கள்: “கிறிஸ்துவின் பெயரை முன்னிட்டு அவதூறாகப் பேசப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் சந்தோஷமானவர்கள்; ஏனென்றால், கடவுளுடைய சக்தியாகிய மகிமையான சக்தி உங்கள்மீது தங்கியிருக்கிறது என்று அர்த்தம்.”—1 பே. 4:14.
18, 19. யெகோவா தம்முடைய சக்தியின் மூலம் உங்களுக்கு எப்படி உதவுவார், இதன் சம்பந்தமாக உங்கள் தீர்மானம் என்ன?
18 கடவுளுடைய சக்தியை உண்மையாய் நாடுகிறவர்களுக்கு அதை அவர் அன்பளிப்பாகத் தருகிறார். அந்தச் சக்தி உங்களுடைய திறமைகளை மெருகூட்டுவதோடுகூட கடவுளுடைய சேவையில் மிகச் சிறந்ததைச் செய்வதற்கான உங்கள் விருப்பத்தையும் அதிகரிக்கும். “உங்களை மனமுவந்து செயல்பட வைப்பதற்காகக் கடவுள்தான் தமக்குப் பிரியமானபடி உங்களிடையே செயல்பட்டு வருகிறார்.” கடவுளுடைய அருமையான அன்பளிப்பான அவருடைய சக்தியும் ‘வாழ்வளிக்கும் வார்த்தையை இறுகப் பற்றிக்கொள்ள’ நாம் எடுக்கிற ஊக்கமான முயற்சிகளும் சேர்ந்து, ‘பயத்துடனும் நடுக்கத்துடனும் நம்முடைய மீட்புக்காக உழைத்து வர’ நமக்கு உதவும்.—பிலி. 2:12, 13, 15, 16.
19 ஆகவே, கடவுளுடைய சக்தியின் மீது முழு நம்பிக்கை வைத்து, கொடுக்கப்படுகிற எந்த வேலையையும் முழுமூச்சோடு செய்யுங்கள், திறம்படச் செய்யுங்கள், உதவிக்காக யெகோவாவைச் சார்ந்திருங்கள். (யாக். 1:5) அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள... பிரச்சினைகளைச் சமாளிக்க... நற்செய்தியைப் பிரசங்கிக்க... தேவையான எல்லாவற்றையும் அவர் தருவார். “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டடைவீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்”; கடவுளுடைய சக்திக்காகக் கேட்பதையும் இது உட்படுத்துகிறது. (லூக். 11:9, 13) எனவே, பூர்வ காலத்திலும் நவீன காலத்திலும் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்ட விசுவாசிகளைப் போலிருக்க உதவும்படி யெகோவாவிடம் தொடர்ந்து மன்றாடுங்கள்.
விளக்க முடியுமா?
• மரியாளைப் போல, என்ன மனப்பான்மையைக் காட்டினால் ஆசீர்வாதங்களைப் பெறுவோம்?
• எந்த அர்த்தத்தில் பவுல் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்டார்?
• இன்று கடவுளுடைய ஊழியர்கள் எப்படி அவருடைய சக்தியால் வழிநடத்தப்படுகிறார்கள்?
[பக்கம் 24-ன் படம்]
பேய்களின் செல்வாக்கை அடக்க கடவுளுடைய சக்தி பவுலுக்கு உதவியது
[பக்கம் 26-ன் படம்]
இன்று பரலோக நம்பிக்கை உள்ளவர்களும்சரி பூமிக்குரிய நம்பிக்கை உள்ளவர்களும்சரி, கடவுளுடைய சக்தியைப் பெறுகிறார்கள்