“பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டுவந்து களஞ்சியத்தில் கொட்டுங்கள்”
“நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, . . . உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னை சோதித்துப்பாருங்கள்.”—மல்கியா 3:10.
1. (எ) பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில், யெகோவா அவருடைய மக்களுக்கு என்ன அழைப்பைக் கொடுத்தார்? (பி) பொ.ச. முதல் நூற்றாண்டில், யெகோவா ஆலயத்திற்கு நியாயத்தீர்ப்புச் செய்ய வந்ததினால் என்ன நடந்தது?
இஸ்ரவேலர், பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில், யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாக இருந்தார்கள். அவர்கள் தசமபாகங்களைக் கொடுக்காமல் இருந்தார்கள், தகாத மிருகங்களைப் பலிசெலுத்த ஆலயத்திற்குக் கொண்டுவந்தார்கள். ஆனாலும், அவர்கள் முழு தசமபாகத்தையும் களஞ்சியத்திற்குக் கொண்டுவந்தால், இனிமேலும் வேண்டாம், போதும் என்ற அளவுக்குப் பொங்கி வழியும்படி தாம் ஆசீர்வாதத்தைப் பொழிவேன் என்று யெகோவா வாக்குறுதி கொடுத்திருந்தார். (மல்கியா 3:8-10) சுமார் 500 வருடங்கள் கழித்து, யெகோவா, அவருடைய உடன்படிக்கையின் தூதனாகிய இயேசுவால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு, எருசலேமில் உள்ள ஆலயத்திற்கு நியாயத்தீர்ப்பு செய்வதற்காக வந்தார். (மல்கியா 3:1) இஸ்ரவேல் ஒரு ஜனமாக குறையுள்ளவர்களாக காணப்பட்டார்கள், ஆனால் யெகோவாவிடம் திரும்பிவந்த தனிப்பட்டவர்களோ மிக அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டார்கள். (மல்கியா 3:7) அவர்கள், யெகோவாவின் ஆவிக்குரிய மகன்களாக, ஒரு புதிய சிருஷ்டியாக, “தேவனுடைய இஸ்ரவேலராக” அபிஷேகம் செய்யப்பட்டனர்.—கலாத்தியர் 6:16; ரோமர் 3:25, 26.
2. மல்கியா 3:1-10, எப்போது இரண்டாவது நிறைவேற்றத்தைப் பெறும், இதன் சம்பந்தமாக நாம் என்ன செய்யும்படி அழைக்கப்படுகிறோம்?
2 இதற்குப் பின்பு ஏறக்குறைய 1,900 ஆண்டுகள் கழித்து, 1914-ல், கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக இயேசு சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டார், மேலும் மல்கியா 3:1-10-ல் சொல்லப்பட்டுள்ள கடவுளுடைய ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைகள் இரண்டாவது நிறைவேற்றத்தைக் காணும் காலமும் வந்தது. இந்தக் கிளர்ச்சியூட்டும் நிகழ்ச்சியின் சம்பந்தமாக, கிறிஸ்தவர்கள் இன்று முழு தசமபாகத்தையும் களஞ்சியத்திற்குக் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாம் அவ்வாறு செய்தால், இனிமேலும் வேண்டாம் போதும் என்று சொல்லும் அளவிற்கு பொங்கிவழியும் ஆசீர்வாதத்தை நாமும் அனுபவிப்போம்.
3. யெகோவாவிற்கு முன்பாக வழியை ஆயத்தம்செய்கிற தூதன் யார், (எ) முதல் நூற்றாண்டில்? (பி) முதல் உலக யுத்தத்திற்கு முன்பு?
3 ஆலயத்திற்கு அவருடைய வருகையைப் பற்றி, யெகோவா இவ்வாறு சொன்னார்: “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்.” (மல்கியா 3:1) இதனுடைய முதலாம் நூற்றாண்டின் நிறைவேற்றமாக, முழுக்காட்டுபவனாகிய யோவான் இஸ்ரவேலுக்கு வந்து, பாவங்களுக்கு மனந்திரும்புதலைப் பிரசங்கம்பண்ணினார். (மாற்கு 1:2, 3) யெகோவா அவருடைய ஆலயத்திற்கு இரண்டாவது முறை வருவதைப் பற்றி ஏதேனும் தயாரிப்பு வேலை அங்கு செய்யப்பட்டதா? ஆம். முதலாம் உலக யுத்தத்திற்கு அநேக பத்தாண்டுகளுக்கு முன்பாக, பைபிள் மாணாக்கர்கள் உலகக் காட்சிமேடையிலே தோன்றி, பைபிளின் சுத்தமானப் போதனைகளைப் போதித்து, கடவுளுக்குத் தூஷணம் கொண்டுவரும் திரித்துவம், நரகஅக்கினி போன்ற போதனைகளாகிய பொய்களை அப்பட்டமாக்கி வந்தார்கள். புறஜாதியார்களின் காலம் 1914-ல் முடிவிற்கு வருகிறது என்பதையும் அவர்கள் எச்சரித்தார்கள். இந்தச் சத்திய ஒளி கொண்டுச்செல்வோர் சொன்னபடி அநேகர் கேட்டார்கள்.—சங்கீதம் 43:3; மத்தேயு 5:14, 16.
4. கர்த்தருடைய நாளில் என்ன கேள்வி தீர்க்கப்பட இருந்தது?
4 “கர்த்தருடைய நாள்,” என்று பைபிள் அழைப்பதை, 1914-ம் ஆண்டு ஆரம்பித்துவைத்தது. (வெளிப்படுத்துதல் 1:10) அந்த நாளில் தான் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் நடக்க இருந்தன, இதில் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார”ரை அடையாளங் கண்டுகொள்வது, “[எஜமானுடைய] ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும்” அவரை விசாரணைக்காரனாக வைப்பது போன்றவையும் அடங்கும். (மத்தேயு 24:45-47) ஆண்டு 1914-ன் போது, ஆயிரக்கணக்கான சர்ச்சுகள் கிறிஸ்தவத் தன்மையுடையதாக உரிமைபாராட்டின. தலைவராகிய இயேசு கிறிஸ்து, எந்தத் தொகுதியைத் தம்முடைய உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரராக ஏற்றுக்கொள்ளுவார்? ஆலயத்திற்கு யெகோவா வரும்போது இந்தக் கேள்வி தீர்க்கப்பட இருந்தது.
ஆவிக்குரிய ஆலயத்திற்கு வருதல்
5, 6. (எ) நியாயத்தீர்ப்புச் செய்ய யெகோவா, எந்த ஆலயத்திற்கு வந்தார்? (பி) யெகோவாவிடமிருந்து என்ன நியாயத்தீர்ப்பைக் கிறிஸ்தவமண்டலம் பெற்றது?
5 ஆனாலும், எந்த ஆலயத்திற்கு அவர் வந்தார்? தெளிவாகவே எருசலேமில் உள்ள சொல்லர்த்தமான ஆலயத்திற்கு அல்ல. அப்படிப்பட்ட ஆலயங்களில் இறுதியான ஒன்று, பொ.ச. 70-ல் அழிக்கப்பட்டது. ஆனாலும், எருசலேமில் இருந்த ஆலயத்தால் முன்படமாக காட்டப்பட்ட ஒரு பெரிய ஆலயம் யெகோவாவுக்கு இருக்கிறது. இந்தப் பெரிய ஆலயத்தைப் பற்றி பவுல் பேசினார், பரலோகத்திலே பரிசுத்த ஸ்தலத்தையும் இங்கே பூமியிலே பிராகாரத்தையும் கொண்டுள்ள இது உண்மையில் எவ்வளவு மகத்தானதாக இருக்கிறது என்பதையும் காண்பித்தார். (எபிரெயர் 9:11, 12, 24; 10:19, 20) இந்தப் பெரிய ஆவிக்குரிய ஆலயத்திற்குள் தான் யெகோவா, நியாயத்தீர்ப்பு செயலை நிறைவேற்ற வந்தார்.—ஒத்துப்பாருங்கள்: வெளிப்படுத்துதல் 11:1; 15:8.
6 இது எப்போது நடந்தது? கிடைக்கக்கூடிய திரளான சான்றுகள் காண்பிக்கிறபிரகாரம், அது 1918-ல் ஆகும்.a இதன் விளைவு என்ன? கிறிஸ்தவ மண்டலத்தைப் பொருத்தவரை, அதை இரத்தக்கறைப் படிந்த ஓர் அமைப்பாகவும், பணக்காரர்களோடு கூட்டுறவுகொண்டு ஏழையை ஒதுக்கித்தள்ளி, மெய்வணக்கத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக புறமத கோட்பாடுகளைப் போதித்து, இந்த உலகத்திற்கு தன்னைத்தானே வேசியாக்கிக்கொள்ளும் ஒரு பாழாய்ப்போன மத அமைப்பாகவும், யெகோவா கண்டார். (யாக்கோபு 1:27; 4:4) மல்கியாவின் மூலம் யெகோவா இவ்வாறு எச்சரித்திருந்தார்: “மந்திர வித்தைக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுபவர்கள், கூலிக்காரருக்குக் கூலி கொடுக்காத வம்பர்கள், கைம்பெண்களையும் திக்கற்றவர்களையும் கொடுமைப்படுத்துகிறவர்கள் . . . ஆகியவர்களுக்கு எதிராக நா[னே] சாட்சியாய் நின்று தீர்ப்பு வழங்க விரைந்து வரு[வேன்].” (மலாக்கியா 3:5, கத். பை.) கிறிஸ்தவமண்டலம் இதையெல்லாம் செய்தது, இதைவிட மோசமாகவும் செய்தது. யெகோவா இவளை, பொய்மதத்தின் உலகளாவிய அமைப்பாகிய மகா பாபிலோனின் மீதிப் பாகத்தோடுசேர்த்து அழிக்கப்படும்படி கண்டனத்தீர்ப்பளித்திருக்கிறார் என்பது 1919-ல் மிகத்தெளிவாக தெரிந்தது. அப்போது இருந்து, நேர்மை இருதயம் உள்ள ஜனங்களுக்கு இந்த அழைப்புக் கொடுக்கப்பட்டது: “என் ஜனங்களே, . . . அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”—வெளிப்படுத்துதல் 18:1, 4.
7. தம்முடைய உண்மையும் விவேகமும் உள்ள ஊழியக்காரர் என இயேசு யாரை ஏற்றுக்கொண்டார்?
7 அப்படியென்றால், யார் தான் உண்மையும் விவேகமும் உள்ள ஊழியக்காரர்? முதல் நூற்றாண்டில் இது முழுக்காட்டுபவராகிய யோவானுடைய பிரசங்க வேலைக்கும், உடன்படிக்கையின் தூதராகிய இயேசுவின் பிரசங்க வேலைக்கும் பிரதிபலித்த அந்தச் சிறிய தொகுதியோடு ஆரம்பித்தது. நம்முடைய நூற்றாண்டில் இவர்கள், 1914-க்கு முற்பட்ட வருடங்களில் பைபிள் மாணாக்கர்களின் தயாரிப்புவேலைக்குப் பிரதிபலிப்பைக் காட்டின ஒருசில ஆயிரம்பேராக இருந்தனர். முதல் உலகப்போரின்போது இவர்கள் மிகக் கொடூரமான துன்புறுத்தலைச் சகித்தனர், ஆனால் அதன்மூலம் இவர்கள் தங்களுடைய இருதயம் யெகோவாவிடம் இருந்தது என்பதை நிரூபித்துக்காண்பித்தார்கள்.
சுத்திகரிக்கும் ஒரு வேலை
8, 9. உண்மையும் விவேகமும் உள்ள ஊழியக்காரருக்கு, 1918-ல், என்னென்ன வழிகளில் சுத்திகரிக்கப்படுதல் தேவையாக இருந்தது, இதைப் பற்றி, யெகோவா என்ன வாக்குறுதியைக் கொடுத்தார்?
8 இருந்தபோதிலும், இந்தத் தொகுதியும் சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது. இவர்களோடு தங்களைச் சேர்த்துக்கொண்டவர்களில் சிலர் விசுவாசத்துக்கு விரோதிகளாக ஆனார்கள், அவர்கள் நீக்கப்படவேண்டியவர்களாக இருந்தார்கள். (பிலிப்பியர் 3:18) மற்றவர்கள், யெகோவாவைச் சேவிப்பதில் உட்பட்டிருக்கும் பொறுப்புக்களைச் சுமக்க விருப்பமில்லாமல் இருந்தனர், கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கப்பட்டு விலகிப்போனார்கள். (எபிரெயர் 2:1) இதோடு, அப்போது நீக்கப்படவேண்டிய பாபிலோனிய பழக்கவழக்கங்களும் இருந்தன. அமைப்பு முறையிலும்கூட இந்த உண்மையும் விவேகமும் உள்ள ஊழியக்காரர், சுத்திகரிக்கப்பட வேண்டியதிருந்தது. இந்த உலகம் சம்பந்தமான நடுநிலையைக் குறித்து ஒரு சரியான நிலைநிற்கையைக் கற்றுக்கொள்ளவும் அதைப் பின்பற்றவும் வேண்டியதிருந்தது. இந்த உலகம் அதிகமதிகமாக கெட்டுப்போவதால், சபைகளில் ஒழுக்கம் சம்பந்தமான மற்றும் ஆவிக்குரிய அசுத்தம் கறைப்படுத்தாதபடி வைத்திருப்பதற்கு அவர்கள் மிகக் கடினமாக எதிர்த்துப்போராட வேண்டியதிருந்தது.—யூதா 3, 4-ஐ ஒப்பிடுக.
9 ஆம், சுத்திகரிக்கப்படுதல் தேவை தான், ஆனால் யெகோவா, சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசுவைப் பற்றி இவ்வாறு மிக கரிசனையோடு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்: “அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்.” (மல்கியா 3:3) யெகோவா 1918-லிருந்து ஆரம்பித்து, உடன்படிக்கையின் இந்தத் தூதன்மூலம், அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றி, அவருடைய மக்களைச் சுத்திகரித்திருக்கிறார்.
10. எப்படிப்பட்ட காணிக்கையைக் கடவுளுடைய மக்கள் கொண்டுவந்தார்கள், அவர்களுக்கு என்ன அழைப்பை யெகோவா கொடுத்தார்?
10 கிறிஸ்துவின் அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்களும் பின்பாக யெகோவாவின் ஊழியத்தில் இவர்களுடன் சேர்ந்துகொண்ட திரள்கூட்டத்தினருமாகிய அனைவரும் வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரிக்கும் யெகோவாவின் நடவடிக்கையிலிருந்து பயனடைந்திருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9, 14, 15) ஓர் அமைப்பாக இவர்கள், நீதியாய் காணிக்கையைச் செலுத்துவதற்கு வந்தார்கள், இன்னும் வந்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய காணிக்கையோ, “பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, . . . கர்த்தருக்குப் பிரியமா”யிருக்கிறது. (மல்கியா 3:4) இவர்களைத் தான் யெகோவா தீர்க்கத்தரிசனமாக பின்வருமாறு அழைத்தார்: “பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டுவந்து களஞ்சியத்தில் கொட்டுங்கள்; அப்பொழுது நம் கோயிலில் உணவு இருக்கும்; அவ்வாறு செய்தபின், வானத்தின் பலகணிகளைத் திறந்து உங்கள்மீது பொங்கி வழியும்படி ஆசீரைப் பொழிகிறே[னா] இல்லையா என்று சோதித்துப் பாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.”—மலாக்கியா 3:10, கத். பை.
காணிக்கைகளும் தசமபாகங்களும்
11. மோசேயின் நியாயப்பிரமாண முறைமையின்படிக் காணிக்கைகள் ஏன் இனிமேல் அவசியமில்லை?
11 மல்கியாவின் நாளில் கடவுளுடைய மக்கள், தானியம், பழம், கால்நடைகள் போன்ற சொல்லர்த்தமான காணிக்கைகளையும் தசமபாகங்களையும் கொண்டுவந்தனர். இயேசுவின் நாட்களிலும், விசுவாசமுள்ள இஸ்ரவேலர்கள் ஆலயத்தில் மெய்யான காணிக்கைகளைக் கொடுத்தார்கள். எனினும், இயேசுவின் மரணத்திற்குப் பின்பு இவையெல்லாம் மாறிவிட்டன. விசேஷித்த பொருள்சம்பந்தமான காணிக்கைகளையும் தசமபாகங்களையும் கொடுக்கவேண்டும் என்ற கட்டளை உட்பட நியாயப்பிரமாணம் நீக்கப்பட்டது. (எபேசியர் 2:15) நியாயப்பிரமாணத்தின்கீழ் இருந்த காணிக்கைகளைப் பற்றிய தீர்க்கதரிசன மாதிரியை இயேசு நிறைவேற்றினார். (எபேசியர் 5:2; எபிரெயர் 10:1, 2, 10) அப்படியென்றால் எந்த வழியில்தான், ஒரு கிறிஸ்தவர் காணிக்கைகள், தசமபாகங்கள் போன்றவற்றைக் கொண்டுவருவார்?
12 இவர்களுக்குக் காணிக்கைகள் முக்கியமாக ஆவிக்குரிய வகையானதாகும். (ஒப்பிடுக: பிலிப்பியர் 2:17; 2 தீமோத்தேயு 4:6.) எடுத்துக்காட்டாக, பிரசங்க வேலையை ஒரு காணிக்கையாக உருவகப்படுத்தி பவுல் பேசினார்: “ஆகவே நாம் அவர் வழியாக எப்போதும் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியை ஒப்புக்கொடுப்போமாக. அவருடைய பெயரை அறிக்கை செய்வதால் நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலி.” அவர் இவ்வாறு ஆர்வமூட்டியபோது, ஆவிக்குரிய வகையான பலியில் மற்றொன்றைக் குறிப்பிட்டார்: “பிறருக்கு உதவிபுரியவும், உங்களுக்குள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளையே கடவுள் உவந்து [பிரியமாக, NW] ஏற்கிறார்.” (எபிரேயர் 13:15, 16, கத். பை.) எப்படி யெப்தா, தான் வெற்றியடையும்படிச் செய்த கடவுளுக்குத் தன்னுடைய மகளை “சர்வாங்க தகனபலியாக” கொடுத்தாரோ, அதைப்போலவே தாய்தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளைப் பயனியர் சேவையில் ஈடுபடும்படி உற்சாகப்படுத்தும்போது, இவர்களை யெகோவாவுக்குக் காணிக்கையாக கொடுப்பதாகச் சொல்லலாம்.—நியாயாதிபதிகள் 11:30, 31, 39.
13. கிறிஸ்தவர்கள் ஏன் தங்களுடைய வருவாயில், சொல்லர்த்தமான பத்தில் ஒரு பாகத்தைக் கொடுக்கத் தேவையில்லை?
13 அப்படியென்றால், தசமபாகத்தைப் பற்றி என்ன? கிறிஸ்தவ மண்டலத்தின் சில சர்ச்சுகளில் நடக்கிறதுபோலவே, கிறிஸ்தவர்கள் தங்களுடைய பொருள் சம்பந்தமான சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கை ஒதுக்கிவைத்து யெகோவாவின் அமைப்பிற்காக அதைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார்களா? இல்லை, அது தேவையில்லை. கிறிஸ்தவர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு சட்டம் இருப்பதாக எந்த வேதவசனமும் சொல்லவில்லை. பவுல் யூதேயாவில் தேவையில் உள்ளவர்களுக்கு நன்கொடைகளைச் சேகரிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறவில்லை. அதற்குப் பதிலாக, அவர் சொன்னார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 9:7) விசேஷித்த ஊழியங்களில் ஈடுபடுகிறவர்களைப் பற்றிப் பேசும்போது, ஒரு சிலர் மிகச் சரியாகவே மனமுவந்து கொடுக்கப்பட்ட காணிக்கைகளால் ஆதரவு தரப்பட்டுவந்தாலும், பவுல் வேலைசெய்து தன்னைத்தானே கவனித்துக்கொள்வதற்குத் தயாராக இருந்தார். (அப்போஸ்தலர் 18:3, 4; 1 கொரிந்தியர் 9:13-15) இந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட தசமபாகங்கள் அப்போது இல்லை.
14. (எ) தசமபாகத்தைக் கொண்டுவருவது, நம்மை முழுமையாக யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதை ஏன் குறிப்பதில்லை? (பி) தசமபாகம் அடையாளப்படுத்துவது என்ன?
14 தெளிவாகவே, கிறிஸ்தவர்களுக்கு அந்தத் தசமபாகம் வேறேதோ ஒன்றை அடையாளப்படுத்துகிறது, அல்லது குறிக்கிறது. தசமபாகம் பத்தில் ஒரு பாகமாக இருக்கிறது; பைபிளில் பெரும்பாலும் பத்து என்ற எண் பூமிக்குரிய முழுமையைக் குறிக்கிறது; எனவே, தசமபாகமானது நாம் நம்மையே முழுமையாக கொடுப்பதை அடையாளப்படுத்துகிறதா? இல்லை. நாம் யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து, அதைத் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தும்போது தான், நாம் நம்மையே முழுமையாக அவருக்குக் கொடுக்கிறோம். நாம் நம்மை ஒப்புக்கொடுத்த நேரத்திலிருந்தே, யெகோவாவுக்குரியதாக இல்லாத எதுவும் நம்மிடத்தில் இல்லை. எனினும், தனிப்பட்டவர்கள் தங்களுடைய சொந்த சம்பத்துக்களைப் பயன்படுத்த யெகோவா அனுமதிக்கிறார். ஆகவே நம்முடையவற்றின் ஒரு பாகத்தை நாம் யெகோவாவுக்குக் கொண்டுவருவதை அல்லது அவருடைய ஊழியத்தில் பயன்படுத்துவதை இந்தத் தசமபாகம் குறிக்கிறது; அவருக்கு நம்முடைய அன்பையும், நாம் அவருக்கே சொந்தம் என்பதை நாம் ஒப்புக்கொண்டிருப்பதையும், அடையாளமாக இது குறிக்கிறது. தற்கால தசமபாகம், வெறும் பத்தில் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சிலருடைய விஷயங்களில், இது குறைவாக இருக்கும். மற்றவர்களில் இது அதிகமாக இருக்கும். ஒவ்வொருவரும், அவரவர் இருதயம் எதைக் கொண்டுவரத் தூண்டுகிறதோ, அவரவர் சூழ்நிலை எதை அனுமதிக்கிறதோ, அதைக் கொண்டுவருகிறார்கள்.
15, 16. நம் ஆவிக்குரிய தசமபாகத்தில் என்ன உட்பட்டிருக்கிறது?
15 இந்த ஆவிக்குரிய தசமபாகத்தில் என்ன உட்பட்டிருக்கிறது? ஒரு காரியமானது, யெகோவாவிற்கு நம்முடைய நேரத்தையும் பலத்தையும் கொடுப்பது. கூட்டங்களில், அசெம்பிளிகளுக்கும் மாநாடுகளுக்கும் ஆஜராயிருப்பதில், வெளி ஊழியத்தில், நாம் செலவழிக்கும் நேரங்களெல்லாம், நாம் யெகோவாவிற்குக் கொடுக்கும் நம்முடைய தசமபாகத்தின் ஒரு பகுதியாகும். நோயுற்றவர்களைச் சந்திப்பது, மற்றவர்களுக்கு உதவிசெய்வது ஆகியவற்றுக்கு நாம் செலவிடும் நேரமும் சக்தியும் நம்முடைய தசமபாகத்தின் பாகங்களாகும். இதைப்போலவே, ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கு உதவிசெய்வதும், அந்த மன்றத்தைப் பராமரிப்பதிலும் சுத்தம்செய்வதிலும் பங்குபெறுவதும் ஒரு பாகமாகும்.
16 நம் தசமபாகம், பண நன்கொடைகளையும் உட்படுத்துகிறது. சமீப ஆண்டுகளில் யெகோவாவின் அமைப்பினுடைய அதிக வளர்ச்சி, பணத்தேவைகளை அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே இருக்கிறவற்றைப் பராமரிப்பதோடு, புதிய ராஜ்ய மன்றங்கள், புதிய கிளை அலுவலக வசதிகள், புதிய மாநாடு மன்றங்கள் ஆகியவையும் தேவையாக இருக்கின்றன. விசேஷித்த சேவைக்காக தங்களை—இவ்வாறு செய்வதற்காக பெரும்பாலும் பெரிய சொந்த தியாகங்களைச் செய்து—அர்ப்பணித்துள்ளவர்களுக்கு ஆகும் செலவு, சமாளிக்க முடியாத சவாலாக இருக்கிறது. மிஷனரிகள், பிரயாணக் கண்காணிகள், விசேஷித்தப் பயனியர்கள், இவர்களுக்கு உதவுவதற்கு மட்டும் 4 கோடி டாலர்களுக்கு மேலாக 1991-ல் செலவாகியிருக்கிறது, இவையனைத்தும், மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகளினால் பெறப்பட்டது.
17. நம் ஆவிக்குரிய தசமபாகமாக நாம் எதை நிச்சயமாக கொடுக்க வேண்டும்?
17 நம்முடைய ஆவிக்குரிய தசமபாகமாக நாம் எதை நிச்சயமாக கொடுக்க வேண்டும்? யெகோவா ஓர் அளவைக் குறித்துவைக்கவில்லை. ஆனாலும், ஒப்புக்கொடுத்த உணர்வு, யெகோவாமீதும் சகோதரர்கள்மீதும் உள்ள மெய்யான அன்பு, மேலும் ஜீவன்கள் பாதுகாக்கப்படவேண்டுமே என்ற அவசரஉணர்வு, இவை முழு தசமபாகத்தையும் கொண்டுவர நம்மை உற்சாகப்படுத்துகிறது. கூடியவரை அதிகமான அளவில் யெகோவாவைச் சேவிக்க தூண்டப்பட்டவர்களாக நாம் உணர்கிறோம். நாமோ கஞ்சத்தனமாக இருந்தால் அல்லது, நம்மை அல்லது நம்முடைய பொருள்செல்வங்களைக் கொடுக்க விருப்பமில்லாமல் கொடுத்தால் இது நாம் கடவுளைக் கொள்ளையடிப்பதற்குச் சமம்.—லூக்கா 21:1-4-ஐ ஒப்பிடுக.
பொங்கிவழியும்படி ஆசீர்வதிக்கப்படுதல்
18, 19. யெகோவாவின் மக்கள் தங்களுடைய முழு தசமபாகத்தையும் கொண்டுவந்ததற்காக எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்?
18 யெகோவாவின் ஜனங்கள், 1919-லிருந்து, பிரசங்க வேலைக்காக தங்கள் நேரம், சக்தி, பொருள்வளங்கள் ஆகியவற்றைக் கொடுப்பதில் மிகவும் தாராளமான மனதோடு பிரதிபலித்திருக்கிறார்கள். இவர்கள் களஞ்சியத்திற்குத் தங்களுடைய முழு தசமபாகத்தையும் உண்மையில் கொண்டுவந்திருக்கின்றனர். இதன் விளைவாக, யெகோவா அவருடைய வாக்கை நிறைவேற்றி, பொங்கிவழியும்படி ஆசீர்வாதத்தைப் பொழிகிறார். எண்ணிக்கையில் இவர்களின் வளர்ச்சியில் இது, மிகத் தெளிவாக தெரிகிறது. யெகோவா, 1918-ல் அவருடைய ஆலயத்திற்கு வந்தபோது அவருக்கு ஊழியம்செய்துகொண்டிருந்த ஒருசில ஆயிரமாக இருந்த இந்த அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள், இப்பொழுது தங்களுடைய கூட்டாளிகளான வேறே ஆடுகளோடு சேர்ந்து, இன்றுவரை 229 வேறுபட்ட நாடுகளில் 40 லட்சத்திற்கும் அதிகமாக எண்ணிக்கையில் அதிகரித்திருக்கின்றனர். (ஏசாயா 60:22) சத்தியத்தை அறிந்துகொள்வதிலும் ஓர் இடைவிடாத வளர்ச்சியால், இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர். தீர்க்கதரிசன வார்த்தை அவர்களுக்கு அதிக நம்பிக்கை தருவதாக மாறியிருக்கிறது. யெகோவாவின் நோக்கங்களின் நிறைவேற்றத்தில் அவர்களுடைய நம்பிக்கை அசைக்கமுடியாதபடி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. (2 பேதுரு 1:19) இவர்கள் உண்மையில் ‘யெகோவாவினால் போதிக்கப்படும்’ மக்கள்.—ஏசாயா 54:13.
19 மல்கியாவின் மூலம், யெகோவா இன்னுமதிகமான ஆசீர்வாதத்தை முன்னுரைத்தார்: “அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசினர்; ஆண்டவர் கவனித்துக் கேட்டார்; ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவர் பெயரைச் சிந்திக்கிறவர்களைக் குறித்துவைக்கும் நினைவுநூல் ஒன்று அவர் முன்னிலையில் எழுதப்பட்டது.” (மலாக்கியா 3:16, கத். பை.) தங்களைக் கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டும் எல்லா அமைப்புகளிலும், யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான், அவருடைய பெயரை சிந்திக்கிறவர்களாகவும் மக்களின் மத்தியில் அதற்கு புகழ்ச்சியைக் கொண்டுவருபவர்களாகவும் இருக்கிறார்கள். (சங்கீதம் 34:3) யெகோவா அவர்களுடைய விசுவாசத்தை நினைவில் கொள்கிறார் என்று அவர்கள் உறுதிதரப்பட்டது எவ்வளவு சந்தோஷமாக அவர்களுக்கு இருக்கிறது!
20, 21. (எ) உண்மைக் கிறிஸ்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட என்ன உறவை அனுபவிக்கிறார்கள்? (பி) கிறிஸ்தவத்தைக் குறித்ததில், என்ன வேறுபாடு மிகவும் தெள்ளத்தெளிவாகிக் கொண்டிருக்கிறது?
20 அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோர் யெகோவாவின் விசேஷித்த மக்கள், திரள்கூட்டமோ இவர்களோடு சேர்ந்துகொள்ள திரண்டுவந்து, உண்மை வணக்கத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். (சகரியா 8:23) மல்கியாவின் மூலம், யெகோவா இவ்வாறு வாக்குக்கொடுக்கிறார்: “‘நான் ஒரு தனிப்பெரும் சொத்தைச் சேர்க்கும் நாளில், அவர்கள் என்னுடையவர்களாக ஆவர்,’ என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். ‘ஒரு மனிதன் அவருக்காக ஊழியம்செய்யும் அவருடைய மகனுக்கு இரக்கம் காட்டுவதுபோல, நான் அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்.’” (மல்கியா 3:17, NW) யெகோவா இவர்களுக்கு இரக்கமான பரிவைக் காட்டுவது, என்னே ஓர் ஆசீர்வாதம்!
21 உண்மையில், உண்மை கிறிஸ்தவர்களுக்கும் பொய்க் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம், இன்னும் அதிகமதிகமாக வெளிப்படையாகிறது. யெகோவாவின் மக்கள் அவருடைய தராதரங்களுக்கு உரிய வகையில் வாழ கடும் முயற்சியெடுக்கிறார்கள், ஆனால் கிறிஸ்தவமண்டலமோ இந்த உலகத்தின் அசுத்தமான சேற்றினுள் அதிகமதிகமாக மூழ்கிக்கொண்டிருக்கிறது. நிஜமாகவே, யெகோவாவின் பின்வரும் வார்த்தைகள் உண்மையென நிரூபிக்கப்பட்டிருக்கின்றன: “அப்போது, மறுபடியும் நேர்மையானவனுக்கும் தீயவனுக்கும், கடவுளுக்கு ஊழியம் செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியம் செய்யாதவனுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டுணர்வீர்கள்.”—மலாக்கியா 3:18, கத். பை.
22. முழு தசமபாகத்தையும் நாம் தொடர்ந்து கொண்டுவந்து கொண்டிருந்தால், எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறுவோம் என நாம் நிச்சயமாக இருக்கலாம்?
22 சீக்கிரத்தில், பொய்க் கிறிஸ்தவர்களுக்குக் கணக்குக்கொடுக்க வேண்டிய நாள் வரும். “இதோ அந்த நாள் சூளைபோல் எரிந்து கொண்டு வரும்; அப்போது ஆணவங் கொண்டவர், கொடியவர் அனைவரும் அதில் போடப்பட்ட வைக்கோலாவர். அப்படி வருகின்ற அந்த நாள், அவர்களுடைய வேரோ கிளையோ இல்லாதபடி அவர்களை முற்றிலும் சுட்டெரித்துவிடும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.” (மலாக்கியா 4:1, கத். பை.) யெகோவா, தம்முடைய ஆவிக்குரிய ஜனத்தை எப்படி பொ.ச. 70-ல் பாதுகாத்தாரோ, அதுபோலவே அந்தச் சமயத்திலும் அவர் தம் மக்களைக் காப்பாற்றுவார் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (மல்கியா 4:2) இந்தக் காப்புறுதியைப் பெற்றிருப்பதற்காக அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்! எனவே, அந்தச் சமயம் வரும்வரை, நாம் ஒவ்வொருவரும், முழு தசமபாகத்தைக் களஞ்சியத்திற்குக் கொண்டு வருவதன்மூலம், யெகோவாவுக்கு நம்முடைய போற்றுதலையும் அன்பையும் காட்டுவோமாக! அப்பொழுது நமக்குத் தேவை இல்லாமற்போகும் வரை அவர் நம்மைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பார் என்று நாம் நம்பிக்கையாயிருக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a அதிகமான விளக்கத்திற்கு, ஜூன் 15, 1987, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 14-20-ஐப் பார்க்கவும்.
நீங்கள் விளக்க முடியுமா?
◻ நவீன காலங்களில், தம் உடன்படிக்கையின் தூதனோடு யெகோவா எப்போது ஆலயத்திற்கு வந்தார்?
◻ உண்மையும் விவேகமும் உள்ள ஊழியக்காரன் யார், அவர்களுக்கு என்ன சுத்திகரிக்கப்படுதல் 1918-க்குப் பிறகு தேவையாயிருந்தது?
◻ எந்தவிதமான ஆவிக்குரிய காணிக்கைகளை உண்மையான கிறிஸ்தவர்கள் யெகோவாவிடம் கொண்டுவருகிறார்கள்?
◻ களஞ்சியத்திற்கு எந்தத் தசமபாகத்தைக் கொண்டுவரும்படி கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள்?
◻ ஆவிக்குரிய தசமபாகங்களைக் கொடுப்பதன்மூலம் கடவுளுடைய மக்கள் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்?
12. எந்தவிதமான ஆவிக்குரிய காணிக்கைகளையும் பலிகளையும் கிறிஸ்தவர்கள் கொடுக்கிறார்கள்?
[பக்கம் 15-ன் படம்]
நம்முடைய ஆவிக்குரிய தசமபாகங்கள் என்பது நம் பலத்தையும் சம்பத்துக்களையும் ராஜ்ய மன்றம் கட்டுவதற்குக் கொடுப்பதை உட்படுத்துகின்றன
[பக்கம் 16-ன் படம்]
யெகோவாவின் ஆசீர்வாதம் அவருடைய மக்களின்மீது இருப்பதால், அதிகமான கட்டுமான வேலை தேவைப்படுகிறது, இது ராஜ்ய மன்றங்களையும் மாநாடு மன்றங்களையும் உட்படுத்துகிறது