சந்தோஷமுள்ளவர்களாயிருங்கள்—சிறுமைப்பட்டவர்களுக்கு இரங்குங்கள்
அயலானை அவமதிக்கிறவன் பாவஞ் செய்கிறான், சிறுமையுற்றோனுக்கு இரங்குபவன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW]—நீதிமொழிகள் 14:21. தி.மொ.
பங்காஸினன் மாநிலத்தில் வாழ்ந்த, பிலிப்பீன் தீவுகளைச் சேர்ந்த மூன்று குடும்பங்கள் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வந்திருந்தபோது, திடீரென்று ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் அவர்களுடைய வீடுகள் சாம்பலாயின. வீட்டிற்குத் திரும்பிய அவர்களுக்கு உணவும் இல்லை, உறங்குவதற்கு இடமும் இல்லை. இந்தத் சேதத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட சகோதரர்கள் அந்த இடத்திற்கு விரைந்து அவர்களுக்கு வேண்டிய உணவையும், சபையிலுள்ள மற்றவர்களுடன் தங்குவதற்கான வசதியையும் ஏற்பாடு செய்தனர். மறுநாள் காலை அந்தக் கிறிஸ்தவ சகோதரர்கள் மூங்கில்களுடனும் மற்றக் கட்டிட பொருட்களுடனும் அங்கு வந்தனர். இந்தச் சகோதர அன்பு அயலகத்தாரை வெகுவாகக் கவர்ந்தது. அந்த மூன்று குடும்பங்களிலும் இது நல்ல பாதிப்பையுடையதாயிருந்தது. தீ அவர்களுடைய வீடுகளை எரித்துப்போட்டது. ஆனால், அவர்களுடைய விசுவாசமும் மற்றக் கிறிஸ்தவ பண்புகளும் சேதமடையாமல், சகோதரர்களின் அன்பான பிரதிபலிப்பின் காரணமாக, அந்த நாசத்தையும் கடந்து பலப்பட்டு வளர்ந்தது.—மத். 6:33; 1 கொரிந்தியர் 3:12-14.
2 இப்படிப்பட்ட அனுபவங்கள் நம் இருதயத்திற்கு இதமளிப்பதாயிருக்கிறதல்லவா? அவை மானிட தயவின் பேரிலும் அதைவிட உண்மையான கிறிஸ்தவத்தின் வல்லமையிலும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 28:2) என்றபோதிலும் ‘யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தாருக்கும்’ நன்மை செய்வதற்கான வேதாகம அடிப்படையை நாம் மதித்துணருகிறோமா? (கலாத்தியர் 6:10) இந்தக் காரியத்தில் நாம் தனிப்பட்ட விதத்தில் எப்படி இன்னும் அதிகத்தைச் செய்யலாம்?
நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரி
3 சீஷனாகிய யாக்கோபு நமக்குச் சொல்லுவதாவது: “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகிறது.” (யாக்கோபு 1:17) அது எவ்வளவு உண்மையாக இருக்கிறது, ஏனென்றால் யெகோவா நம்முடைய ஆவிக்குரிய மற்றும் பொருள் சம்பந்தமான நன்மைக்காக ஏராளமாகச் செய்கிறார்! என்றபோதிலும் அவர் எதற்கு முதலிடத்தைக் கொடுக்கிறார்? ஆவிக்குரிய காரியங்களுக்கு. உதாரணமாக ஆவிக்குரிய வழிநடத்துதலையும் நம்பிக்கையையும் நாம் கொண்டிருக்க வேண்டுமென்று அவர் நமக்குப் பைபிளைக் கொடுத்தார். அந்த நம்பிக்கை, தம்முடைய ஈவாகிய குமாரனை மையமாகக் கொண்டிருக்கிறது. அவருடைய பலிதான் நாம் பாவ மன்னிப்பைப் பெறுவதற்கும் நித்திய ஜீவன் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதற்கும் ஆதாரமாக இருக்கிறது.—யோவான் 3:16; மத்தேயு 20:28.
4 யெகோவா நம்முடைய பொருள் சம்பந்தப்பட்ட நலனிலும் அக்கறையுள்ளவராயிருக்கிறார். இதன் பேரில் அப்போஸ்தலனாகிய பவுல் பூர்வ லிஸ்திராவிலுள்ள மனிதருடன் நியாயமான முறையில் விவாதித்தான். அவர்கள் உண்மையான வணக்கத்தாராயிராத போதிலும் சிருஷ்டிகர் ‘நன்மை செய்துவந்து வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து ஆசாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பியிருக்கிறார்’ என்பதை அவர்கள் மறுக்க முடியாது. (அப்போஸ்தலர் 14:15-17) அன்பினிமித்தம் யெகோவா நம்முடைய ஆவிக்குரிய தேவைகளையும் அளிக்கிறார். நம்முடைய சரீர வாழ்க்கைக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்கிறார். அவர் “நித்தியானந்த தேவனாக” இருப்பதற்கு இதுவும் ஒரு பாகத்தை வகிக்கிறதல்லவா?—1 தீமோத்தேயு 1:11.
5 தம்முடைய வணக்கத்தாரின் ஆவிக்குரிய தேவைகள் மற்றும் பெருளாதார நிலையின்பேரில் யெகோவா தேவன் சமநிலையான கவனத்தைச் செலுத்தி வந்தார் என்பதை அவர் பூர்வ இஸ்ரவேலரோடு கொண்டிருந்த செயல் தொடர்புகள் காண்பிக்கின்றன. முதலாவதாக, அவர் தம்முடைய ஜனத்தாருக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். அவருடைய அரசர்கள் நியாயப்பிரமாணத்தின் ஒரு தனிப்பட்ட பிரதியைத் தங்களுக்கென்று ஏற்பாடு செய்துகொள்ள வேண்டியதாயிருந்தது, மற்றும் அவருடைய நியாயப்பிரமாணம் வாசிக்கப்படுவதைக் கேட்பதற்காக அவ்வப்போது குறித்த காலத்தில் அந்த ஜனம் ஒன்றாகக் கூடிவந்தனர். (உபாகமம் 17:18; 31:9-13) நியாயப்பிரமாணம் அவர்களுக்கு ஒரு கூடாரம் அல்லது ஆலயம் இருக்கும்படியும் மற்றும் மக்கள் கடவுளுடைய தயவைப் பெறக்கூடிய விதத்தில் பலிகளைச் செலுத்துவதற்காக ஆசாரியர்கள் இருக்கும்படியாகவும் ஏற்பாடு செய்தது. இஸ்ரவேலரின் வருடாந்தர வணக்கத்தில் முக்கிய நிகழ்ச்சிகளாகிய ஆவிக்குரிய பண்டிகைகளுக்காக அவர்கள் தவறாமல் கூடிவந்தனர். (உபாகமம் 16:1-17) இந்த எல்லா காரியங்களையும் கொண்டிருந்ததன் பலன்தான், ஒவ்வொரு தனிப்பட்ட இஸ்ரவேலரும் கடவுளுக்கு முன்பாக ஆவிக்குரிய விதத்தில் ஐசுவரியமாயிருக்க முடிந்தது.
6 என்றபோதிலும், தம்முடைய ஊழியர்களின் சரீரப்பிரகாரமான சூழ்நிலைகளைக் குறித்து கடவுள் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதையும் நியாயப்பிரமாணம் வெளிப்படுத்தியது. கழிவுகளைத் துப்புரவு செய்தல் மற்றும் தொற்று நோய் பரவுவதைக் குறைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகக் கடவுள் இஸ்ரவேலருக்குக் கொடுத்த சட்டங்கள் உங்கள் நினைவுக்கு வரக்கூடும். (உபாகமம் 14:11-21; 23:10-14) என்றபோதிலும், குறைவிலும் சிறுமைப்பட்ட நிலைமையிலும் இருப்பவர்களுக்காக உதவி செய்வதற்குக் கடவுள் செய்த விசேஷ ஏற்பாடுகளையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஆரோக்கியமின்மை அல்லது தீ மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்கள் ஒரு இஸ்ரவேலனை வறுமையில் ஆழ்த்திவிடக்கூடும். பொருளாதார விதத்தில் எல்லோரும் ஒரே நிலையில் இருக்கமாட்டார்கள் என்பதை யெகோவா தேவன் நியாயப்பிரமாணத்திலேயே குறிப்பிட்டிருந்தார். (உபாகமம் 15:11) ஆனால் ஏழ்மையிலும் சிறுமைப்பட்ட நிலையிலும் இருப்பவர்களுக்காகப் பரிதாபப்படுவதைவிட அதிகத்தைச் செய்தார். உதவிக்காக ஏற்பாடு செய்தார்.
7 அப்படிப்பட்டவர்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது உணவு. எனவே இஸ்ரவேலிலிருந்த ஏழை மக்கள் வயல்களிலிருந்தும், திராட்சத் தோட்டங்களிலிருந்தும் அல்லது ஒலிவ மரங்களிலிருந்தும் எஞ்சிவிடப்பட்டதைத் தங்களுக்கென்று எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதற்குக் கடவுள் சட்டம் கொடுத்திருந்தார். (உபாகமம் 24:19-22; லேவியராகமம் 19:9, 10; 23:22) மக்கள் சோம்பேறிகளாக இருப்பதையோ அல்லது வேலை செய்யும் நிலையிலிருக்கும்போது பொதுப்பணத்தில் வாழ்வதையோ கடவுளுடைய வழி அனுமதிக்கவில்லை. எஞ்சி கிடப்பதை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் இஸ்ரவேலன் அதற்காகக் கடினமான முயற்சியை எடுக்க வேண்டும், ஒருவேளை அந்த நாளுக்குத் தேவையான உணவைப் பெற்றிட அவன் வெயிலில் அதிக மணி நேரங்களைச் செலவழிப்பவனாயிருப்பான். என்றபோதிலும் ஏழ்மையிலிருந்தவனுக்குக் கடவுள் இந்த வழியில் தயவான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார் என்பதைக் காண தவறக்கூடாது.—ரூத் 2:2-7; சங்கீதம் 69:33; 102:17-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.
8 ஏசாயா 58:6, 7-ல் சொல்லப்பட்டிருப்பதற்கொத்த வார்த்தைகளின் மூலம் சிறுமைப்பட்டவனிடம் தாம் அக்கறையாக இருக்கிறார் என்பதை யெகோவா அறிவுறுத்தினார். சுயதிருப்தியடைந்த இஸ்ரவேலர் உபவாசமிருப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டிருந்த ஒரு சமயத்தில் கடவுளுடைய தீர்க்கதரிசி பின்வருமாறு அறிக்கையிட்டார்: “நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்?” இன்று சிலர் தங்களுடைய ‘வசதி மண்டலத்தை’ அதாவது தங்கள் செளகரியங்களைக் காத்துக்கொள்கிறார்கள். அவர்கள், தங்களுடைய காரியத்தைத் தியாகம் செய்யவேண்டிய நிலை இல்லாதிருந்தால் மட்டுமே அல்லது தங்களுக்கு எந்தவித அசெளகரியமும் ஏற்படாமலிருந்தால் மட்டுமே தேவையிலிருக்கும் ஒருவனுக்கு உதவி செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏசாயாவின் மூலம் சொல்லப்பட்ட கடவுளுடைய வார்த்தையில் முற்றிலும் வித்தியாசமான ஆவி அல்லவோ அறிவுறுத்தப்படுகிறது!—எசேக்கியேல் 18:5-9-ஐயும் பாருங்கள்.
9 இஸ்ரவேலில் ஏழை சகோதரருக்குள் கரிசனை காட்டுதல் கடன்கள் விஷயத்திலும் காணப்படுகிறது. வியாபாரத்தில் ஈடுபட அல்லது அதைப் பெருக்கிட விரும்பும் ஒருவனுக்குக் கடன்கொடுக்கும் இஸ்ரவேலனுக்கு அதற்கான வட்டியும் செலுத்தப்படக்கூடும். என்றபோதிலும் ஓர் ஏழை சகோதரனுக்குக் கடன் கொடுத்திருக்கும் பணத்திற்கு வட்டி வாங்கக்கூடாது என்று யெகோவா சொன்னார், ஏனென்றால் கஷ்டத்தினால் அழுத்தப்பட்ட நிலையில் அது அவனைத் தவறிழைக்கும்படித் தூண்டக்கூடும். (யாத்திராகமம் 22:25; உபாகமம் 15:7, 8, 11; 23:19, 20; நீதிமொழிகள் 6:30, 31) அசந்தர்ப்பமான நிலையிலுள்ளவர்களின் பேரில் கடவுளுடைய மனநிலை அவருடைய மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். “ஏழைக்கு இரங்குவோன் யெகோவாவுக்குக் கடன்கொடுப்பவன். அவன் செய்ததற்கு அவர் பிரதிபலன் அளிப்பார்,” என்று வாக்களிக்கப்படுகிறோமே.” (நீதிமொழிகள் 19:17) யெகோவாவுக்குக் கடன் கொடுத்தலையும் அதற்கு ஏராளமான பிரதிபலன் இருக்கிறது என்ற நிச்சயத்தையும் குறித்து சற்று எண்ணிப்பாருங்கள்!
10 நம்மைநாமே பின்வருமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: “சிறுமைப்பட்டவர்களைக் கடவுள் நோக்கும் விதமும் அவர்களை நடத்தும் விதமும் எனக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? அவருடைய பரிபூரண முன்மாதிரியிலிருந்து நான் கற்றுக்கொள்ளவும் அதைப் பின்பற்றவும் முற்படுகிறேனா? இது சம்பந்தமாக கடவுளுடைய சாயலிலிருப்பதில் நான் முன்னேற முடியுமா?—ஆதியாகமம் 1:26.
பிதாவைப் போல் குமாரன்
11 இயேசு கிறிஸ்து “அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையில் சொரூபமுமாக” இருக்கிறார். (எபிரெயர் 1:3) எனவே, உண்மை வணக்கத்தில் அக்கறையாயிருப்பவர்களின் பேரில் பிதாவுக்கு இருக்கும் கரிசனையை இவர் பிரதிபலிப்பார் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. அப்படியே செய்தார். நிவிர்த்திக்கப்பட வேண்டிய வறுமை முக்கியமாக ஆவிக்குரிய வறுமையாகும் என்று இயேசு சொன்னார்: “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள், பரலோக ராஜ்யம் அவர்களுக்குரியது.” (மத்தேயு 5:3, NW; லூக்கா 6:20-ஐ ஒப்பிடவும்.) “சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்,” என்றும் கிறிஸ்து சொன்னார். (யோவான் 18:37) எனவே அவர் அற்புதம் செய்பவர் அல்லது சுகமளிப்பவர் என்று அறியப்படவில்லை, ஆனால் போதகர் என்று அறியப்பட்டார். (மாற்கு 10:17-21; 12:28-33) இது சம்பந்தமாக மாற்கு 6:30-34-ஐ கவனியுங்கள். சற்று இளைப்பாறிக் கொள்வதற்காக இயேசுவுக்கு நேரம் தேவைப்பட்டதைக் குறித்து’ நாம் வாசிக்கிறோம். அப்பொழுது “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்ததைக்” கண்டார். அவருடைய பிரதிபலிப்பு என்னவாயிருந்தது? “அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.” ஆம் அவர்களுடைய மிகப் பெரிய தேவையைக் கண்ட இயேசு அதற்குப் பிரதிபலிப்பவராக தம்மைத் தாமே அளித்தார்: அந்தத் தேவைதான், அவர்கள் என்றென்றும் வாழ்வதற்கேதுவான சத்தியம்.—யோவான் 4:14; 6:51.
12 மனத்தாழ்மையுள்ள யூதர்களின் ஆவிக்குரிய தேவைகளின்பேரில் கவனம் செலுத்திய இயேசு அவர்களுடைய பொருள் சம்பந்தப்பட்ட தேவைகளைக் கவனியாமற் விட்டுவிடவில்லை. சரீர உணவுக்கான தேவையைக் குறித்தும் கவனமுள்ளவராயிருந்தார் என்று மாற்குவின் பதிவு காண்பிக்கிறது. கூடியிருந்தவர்கள் “தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி” அனுப்பிவிடப்பட வேண்டும் என்று அப்போஸ்தலர்கள் கூறுகிறார்கள். இயேசு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தங்களுடைய ஊழியத்திற்காக வைத்திருந்த பணத்தில் ஒரு தொகையை அப்பம் வாங்குவதற்குப் பயன்படுத்தலாம் என்றும் சொன்னார்கள். அதற்குப் பதிலாக இயேசு, பெண்களும் பிள்ளைகளும் உட்படாமல் ஆண்கள் மட்டும் 5000 பேர் இருந்த ஒரு பெரும் கூட்டத்தாரை அப்பமும் மீனும் கொண்ட ஓர் அடிப்படை உணவால் போஷித்த ஒரு பிரபலமான அற்புதத்தை நடப்பித்தார். அந்தக் கூட்டத்தின் தேவையை அற்புதமான விதத்தில் பூர்த்திசெய்தது இயேசுவுக்கு எளிதாக இருந்தது என்று சிலர் நினைக்கக்கூடும். என்றபோதிலும், அவருக்கு உண்மையான கரிசனை இருந்தது, அதற்கு ஏற்ப அவர் செயல்பட்டார் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது.—மாற்கு 6:35-44; மத்தேயு 14:21.a
13 அனுகூலமற்ற வாழ்க்கை நிலையிலுள்ளவர்களுக்காக இயேசு கரிசனை காண்பித்தது ஏழைகளை மட்டும் உட்படுத்தவில்லை என்பதைத் தெளிவுபடுத்திடும் சுவிசேஷ பதிவுகளை நீங்கள் ஒருவேளை வாசித்திருப்பீர்கள். அவர் நோயாளிகளுக்கும் வேதனை மிகுந்தவர்களுக்கும் உதவி செய்தார். (லூக்கா 6:17-19; 17:12-19; யோவான் 5:2-9; 9:1-7) அவருக்குப் பக்கத்திலிருந்த ஒருவரை சுகப்படுத்துவது என்பது மட்டுமல்ல, சில சமயங்களில் அவர் உதவி செய்வதற்காக வியாதியஸ்தர் வீட்டிற்குப் பயணமாகச் சென்றார்.—லூக்கா 8:41-55.
14 என்றபோதிலும், ஏழை மற்றும் துயருற்ற நிலையிலிருக்கும் சீஷர்களின் (அல்லது சத்தியத்தைத் தேடுவோரின்) தேவைகள் அற்புதங்களைச் செய்து விடுதலையளிக்க முடிந்தவர்களின் அக்கறையாக மட்டுமே இருக்க வேண்டுமா? இல்லை. இயேசுவின் எல்லா சீஷர்களும் அவற்றைக் குறித்து அக்கறையுள்ளவர்களாகவும் அதற்கேற்ப செயல்படுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, நித்திய ஜீவனை விரும்பிய ஓர் ஐசுவரியவானிடம் அவர் பின்வருமாறு சொன்னார்: “உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்.” (லூக்கா 18:18-22) இயேசு மேலுமாகக் கூறியதாவது: “நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய், [சந்தோஷமுள்ளவனாயிருப்பாய்]; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும்.”—லூக்கா 14:13, 14.
15 கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன் கிறிஸ்தவன், எனவே நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பின்வருமாறு கேட்டுக்கொள்வோம்: ஏழை எளியவர்களிடமாகவும் துயரப்படுவோரிடமாகவும், நல்வாய்ப்பிழந்தவர்களிடமாகவும் இயேசு கொண்டிருந்த மனப்பான்மையையும் செய்கையையும் நான் எந்தளவுக்குப் பின்பற்றுகிறேன்? “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்,” என்று பவுல் சொன்னதுபோல நான் நேர்மையுடன் சொல்ல முடியுமா?—1 கொரிந்தியர் 11:1.
பவுல்—சந்தோஷமுள்ள ஒரு முன்மாதிரி
16 இது சம்பந்தமாகப் பவுலைக் கவனத்திற்குக் கொண்டுவருவது மிகவும் பொருத்தமானது, ஏனென்றால் அவனும் பின்பற்றுவதற்கு ஒரு சிறந்த முன்மாதிரி. நாம் எதிர்பார்க்கிறபடியே, அவனுடைய முக்கிய கவனம் மற்றவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளைப்பற்றியதாயிருந்தது. அவன் ‘கிறிஸ்துவுக்கு ஸ்தானாபதியாயிருந்து,’ “தேவனோடு ஒப்புரவாகுங்கள்,” என்று மற்றவர்களை வேண்டிக்கொண்டான். (2 கொரிந்தியர் 5:20) பிரசங்கிப்பதும் யூதரல்லாதவர்கள் மத்தியில் சபைகளைக் கட்டுவதுமே பவுலின் விசேஷ ஊழிய சிலாக்கியமாயிருந்தது. அவன் பின்வருமாறு எழுதினான்: “விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டது.”—கலாத்தியர் 2:7.
17 தான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதாக பவுல் சொன்னதால், அவன் (யெகோவாவைப் போலவும் இயேசுவைப் போலவும்) உடன் வணக்கத்தாரின் சரீரப்பிரகாரமான கஷ்டங்களுக்குக் கவனம் செலுத்தினானா? இதற்குப் பவுல்தானே பதிலளிக்கட்டும். கலாத்தியர் 2:9-ல் அவன் தொடர்ந்து சொல்லுவதாவது: ‘யாக்கோபும், கேபாவும் [பேதுரு], யோவானும் நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி எனக்கும் பர்னபாவுக்கும் வலது கை கொடுத்தனர்.’ பின்பு அடுத்த வசனத்திலேயே பவுல் பின்வருமாறு கூட்டினான்: “தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்கு மாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்.” (கலாத்தியர் 2:10) அநேக சபைகளுக்குப் பொறுப்புகளைத் தாங்கிய ஒரு மிஷனரி-அப்போஸ்தலனாயிருந்தபோதிலும் தம்முடைய சகோதர சகோதரிகளின் சரீரப்பிரகாரமான நலனில் அக்கறையற்றிருக்குமளவுக்குத் தான் அதிக வேலையாக இருக்கக்கூடாது என்பதைப் பவுல் மதித்துணர்ந்தான்.
18 கலாத்தியர் 2:10-ல் தான் குறிப்பிட்ட “தரித்திரர்” முக்கியமாக எருசலேமிலும் யூதேயாவிலுமிருந்த யூத கிறிஸ்தவர்கள். இதற்கு முன்பு ஒரு சமயம் உணவு சம்பந்தமாக “கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.” (அப்போஸ்தலர் 6:1) இப்படியாகத் தான் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருப்பதைக் குறித்துப் பேசின பவுல் கிறிஸ்தவ சகோதரத்துவத்திலுள்ள எவரையும் தான் அசட்டை செய்வதில்லை என்பதைத் தெளிவுபடுத்தினான். (ரோமர் 11:13) சகோதரர்களின் சரீர சம்பந்தமான காரியங்களைக் கவனித்தலைத் தான் மதித்துணர்ந்தான் என்பது பின்வரும் வார்த்தைகளில் உட்பட்டிருக்கிறது: “சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக் குறித்து ஒன்று கவலையாயிருக்க வேண்டும். ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால், எல்லா அவயவங்களும் கூடப்பாடுபடும்.”—1 கொரிந்தியர் 12:25, 26.
19 எருசலேம் மற்றும் யூதேயாவிலுள்ள கிறிஸ்தவர்கள் வறுமையாலும், உள்ளுர் பஞ்சத்தாலும் அல்லது துன்புறுத்தலாலும் பாதிக்கப்பட்டபோது தூரத்திலுள்ள சில சபைகள் நன்கு உதவி செய்தன. தேவையிலிருக்கும் சகோதரர்களுக்குக் கடவுளுடைய ஆதரவும் ஆறுதலும் இருக்க வேண்டும் என்று அவர்களுக்காக ஜெபித்திருப்பார்கள். ஆனால் அதோடு நின்றுவிடவில்லை. “மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள் சகாயம் செய்ய விருப்பங் கொண்டிருக்கிறார்கள்,” என்று பவுல் எழுதினான். பாதிக்கப்பட்ட தங்களுடைய சகோதரர்களுக்குப் பொருளதவி செய்பவர்கள், “தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதார குணத்திலே அவர்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவார்கள்.” (2 கொரிந்தியர் 9:1-13) அதுதானே அவர்கள் சந்தோஷப்படுவதற்கு காரணமாக இருக்குமல்லவா?
20 “எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்குப்” பொருளுதவி செய்த சகோதரர்கள் சந்தோஷப்படுவதற்குக் கூடுதலான ஒரு காரணமும் இருந்தது. அல்லற்படுவோரைக் கவனிப்பது அவர்கள் கடவுளுடைய தயவைப் பெறுவதற்கு உதவுகிறது. ரோமர் 15:26 மற்றும் 2 கொரிந்தியர் 9:13-ல் “பொருள் சகாயம்,” “தர்ம சகாயம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, “நட்புறவின் அடையாளம், சகோதர ஐக்கியத்திற்கு அத்தாட்சி, வெகுமதி,” போன்ற கருத்தை ஏன் உள்ளடங்கியதாயிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது எபிரெயர் 13:16-லும் பயன்படுத்தப்படுகிறது: “நன்மை செய்யவும் பகிர்ந்து கொடுக்கவும் மறவாதிருங்கள். இப்படிப்பட்ட பலிகள் கடவுளுக்குப் பிரியம்.”
நாம் சந்தோஷமுள்ளவர்களாயிருப்போமா?
21 யெகோவா தேவனும், இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலனாகிய பவுலும் அல்லற்படும் மக்களுக்குக் கவனஞ் செலுத்தினர் என்பதற்காக வேதப்பூர்வமான அத்தாட்சியை நாம் கலந்தாராய்ந்தோம். ஆவிக்குரிய தேவைகளுக்கே முதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் மதித்துணர்ந்தனர் என்பதையும் கவனித்தோம். ஆனால் அவர்கள் எல்லோருமே ஏழைகளுக்கும், வியாதியஸ்தர்களுக்கும் நல்வாய்ப்பிழந்த நிலையிலுள்ளவர்களுக்கும் நடைமுறையான விதத்தில் அக்கறையுடையவர்களாயிருந்தனர் என்பது உண்மை. நடைமுறையான உதவியளிப்பதில் அவர்கள் சந்தோஷத்தைக் காணக்கூடியவர்களாயிருந்தனர். நம்மைக் குறித்ததிலும் அது உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா? “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [சந்தோஷம், NW] என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டும்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் துரிதப்படுத்தினான்.—அப்போஸ்தலர் 20:35.
22 என்றபோதிலும், நீங்கள் பின்வருமாறு கேட்கக்கூடும்: நான் தனிப்பட்ட விதத்தில் என்ன செய்யலாம்? உண்மையான தேவையிலிருப்பது யார் என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது? சோம்பலை உற்சாகப்படுத்தாதபடிக்கு, தயவான, நடைமுறையான விதத்திலும், மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்குக் கரிசனை காட்டும் விதத்திலும் நற்செய்தியை அறிவிக்கும் கிறிஸ்தவ கடமைக்குச் சமநிலையாக இருக்கும் விதத்திலும் நான் எப்படி உதவி செய்யலாம்? இந்த அம்சங்களைப் பின்வரும் கட்டுரை சிந்தித்திடும். நீங்கள் கூடுதலான மகிழ்ச்சியைக் காண இது ஓர் ஆதாரமாக இருக்கும். (w86 10/15)
[அடிக்குறிப்புகள்]
a அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், இயேசுதாமே மற்றவர்களிடமிருந்து பொருள் சம்பந்தமான உதவியைப் பெற்றுக்கொள்ள வெட்கப்படவோ அல்லது பெருமையுள்ளவராகவே இல்லை.—லூக்கா 5:29; 7:36, 37; 8:3.
இவற்றைக் கவனித்தீர்களா?
◻ நம்முடைய ஆவிக்குரிய தேவைகளிலும் சரீரசம்பந்தப்பட்ட தேவைகளிலும் தாம் அக்கறையுடையவராயிருக்கிறார் என்பதைக் கடவுள் எப்படிக் காண்பிக்கிறார்?
◻ இயேசு மக்களுக்கு சத்தியத்தைப் போதிப்பதன் மூலம் உதவி செய்வதைவிட அதிக அக்கறையுடையவராயிருந்தார் என்பதை எது காண்பிக்கிறது?
◻ ஏழ்மையிலுள்ளவர்கள் சம்பந்தமாகப் பவுல் எப்படிப்பட்ட முன்மாதிரியை வைத்தான்?
◻ யெகோவா தேவன், இயேசு மற்றும் அப்போஸ்தலனாகிய பவுல் ஆகியவர்களின் முன்மாதிரியைச் சிந்தித்தப் பின்பு, நீங்கள் என்ன செய்ய வேண்டிய அவசியத்தைக் காண முடிகிறது?
[கேள்விகள்]
1, 2. பிலிப்பீன் தீவுகளைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினருக்கு என்ன ஏற்பட்டது? இது என்ன கேள்விகளைச் சிந்திக்கும்படி செய்கிறது?
3. யெகோவா நம்மிடமாகக் கொண்டிருக்கும் அக்கறையைக் குறித்து நாம் என்ன நிச்சயத்தை உடையவர்களாயிருக்கலாம்?
4. கடவுள் நம்முடைய பொருள் சம்பந்தப்பட்ட தேவைகளின்பேரிலும் அக்கறையுடையவராய் இருக்கிறார் என்பது எப்படித் தெளிவாயிருக்கிறது?
5. பூர்வீக இஸ்ரவேலரோடு கடவுள் கொண்டிருந்த செயல் தொடர்பிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
6, 7. யெகோவா இஸ்ரவேலரின் சரீரப்பிரகாரமானத் தேவைகளில் அக்கறையுடையவராயிருக்கிறார் என்பதை எப்படி நியாயப் பிரமாணத்தில் காண்பித்தார்?
8. (எ) தனிப்பட்ட யூதர்கள் தங்களுடைய சகோதரருக்கு என்ன செய்யும்படியாகத் துரிதப்படுத்தப்பட்டனர்? (எரேமியா 5:26, 28-ஐ ஒப்பிடவும்) (பி) யூதர்களிடமாகக் கடவுள் அறிவுறுத்திய மனநிலையை இன்று பொதுவாகக் காணப்படும் மனநிலையுடன் எப்படி ஒப்பிடுவீர்கள்?
9. கடன்கள் சம்பந்தமாக நியாயப்பிரமாணம் என்ன ஆலோசனையைக் கொடுத்தது? கடவுள் என்ன மனநிலையை ஊக்குவித்தார்?
10. கடவுளுடைய முன்மாதிரியைச் சிந்தித்தப் பின்பு உங்களை நீங்கள் என்ன கேட்டுக்கொள்ளலாம்?
11. இயேசு காண்பித்த கரிசனை எப்படித் தன் பிதாவின் கரிசனைக்கு ஒப்பாயிருந்தது? (2 கொரிந்தியர் 8:9)
12. மாற்கு 6:30-34 மற்றும் மாற்கு 6:35-44-ல் இயேசுவின் நோக்குநிலைக் குறித்து நாம் என்ன கற்றுக்கொள்ளக்கூடும்?
13. மக்கள் நலனில் தாம் அக்கறையுடையவராயிருக்கிறார் என்பதற்கு இயேசு வேறு என்ன அத்தாட்சி அளித்தார்?
14, 15. (எ) தாம் காண்பித்த அதே விதமான அக்கறையைத் தம்முடைய சீஷர்களும் காண்பிக்க வேண்டும் என்பது இயேசுவின் எதிர்பார்ப்பு என்று ஏன் நிச்சயமாயிருக்கலாம்? (பி) நம்மை நாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நல்லது?
16. பவுல் அப்போஸ்தலனின் விசேஷ அக்கறைக்குரிய காரியம் என்னவாயிருந்தது?
17. பவுல் சரீர சம்பந்தமான அக்கறைகளுக்கும் கவனம் செலுத்தினான் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
18. கலாத்தியர் 2:10-ல் பவுல் “தரித்திரர்” என்று யாரைக் குறிப்பிடுகிறான்? அவர்கள் ஏன் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்?
19. பவுலும் மற்றவர்களும் ஏழ்மையிலிருந்தவர்களிடமாக தங்களுக்கிருந்த கரிசனையின்பேரில் செயல்பட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
20. “தரித்திரருக்கு” உதவி செய்ய பொருள் சகாயம் செய்த சகோதரர்கள் ஏன் சந்தோஷமுள்ளவர்களாக இருக்கமுடிந்தது?
21. நாம் சந்தோஷத்தைப் பெற்றிட என்ன காரியம் ஆதாரமாயிருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்?
22. இந்தக் காரியத்தின்பேரில் நாம் வேறு என்ன அம்சங்களையும் கவனிக்க வேண்டும்?
[பக்கம் 13-ன் படம்]
கிறிஸ்தவ மூப்பர்களும் மற்றவர்களும் லூக்கா 14:13, 14-லுள்ள இயேசுவின் ஆலோசனையைப் பொருத்திட வேண்டும்