நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும்
“நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்.”—மத். 5:37.
1. சத்தியம் செய்வது பற்றி இயேசு என்ன சொன்னார், ஏன்?
பொ துவாக, உண்மைக் கிறிஸ்தவர்கள் ஆணையிட்டுச் சத்தியம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், “நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும்” என இயேசு சொன்ன கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிகிறார்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் இயேசு அர்த்தப்படுத்தினார். அந்தக் கட்டளையைக் கொடுப்பதற்குமுன், “நீங்கள் சத்தியமே செய்ய வேண்டாம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஏன்? அநேகர் தங்கள் அன்றாட உரையாடலின்போது பழக்கதோஷத்தில் அடிக்கடி சத்தியம் செய்தாலும், சொன்னபடி செய்ய வேண்டுமென்ற எண்ணமே அவர்களுக்கு இல்லாததால் அப்படிக் குறிப்பிட்டார். வெறுமனே ‘ஆம்’ என்றோ ‘இல்லை’ என்றோ சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் ‘அதற்கு மிஞ்சி’ சத்தியம் செய்பவர்கள், தாங்கள் நம்பகமானவர்கள் அல்ல என்பதைக் காட்டுகிறார்கள்; ‘பொல்லாதவனின்’ பிடியில் சிக்கிக்கொள்கிறார்கள்.—மத்தேயு 5:33-37-ஐ வாசியுங்கள்.
2. நாம் சத்தியமே செய்யக் கூடாதா? விளக்குங்கள்.
2 அப்படியானால், சத்தியமே செய்யக் கூடாது என்றா இயேசு அர்த்தப்படுத்தினார்? இல்லை! ஏனென்றால், சென்ற கட்டுரையில் நாம் பார்த்தபடி, யெகோவா தேவனும் அவருடைய உண்மை ஊழியரான ஆபிரகாமும் முக்கியமான சமயங்களில் ஆணையிட்டுச் சத்தியம் செய்தார்கள். அதோடு, சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஆணையிட்டுக் கொடுக்க வேண்டுமென்பது கடவுளுடைய சட்டமாக இருந்தது. (யாத். 22:10, 11; எண். 5:21, 22) இன்றும்கூட, ஒரு கிறிஸ்தவர் நீதிமன்றத்தில் தான் சொல்வதெல்லாம் உண்மையென்று சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டியிருக்கலாம். அல்லது, தன் உள்நோக்கத்தை உறுதிப்படுத்தவோ ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாணவோ எப்போதாவது சத்தியம் செய்ய வேண்டியிருக்கலாம். சொல்லப்போனால், யூத நீதிமன்றத்தில் கடவுள்மீது ஆணையிட்டுச் சொல்லும்படி இயேசுவுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அதை அவர் ஆட்சேபிக்காமல் உள்ளதை உள்ளபடியே சொன்னார். (மத். 26:63, 64) யாரிடமும் ஆணையிட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. ஆனாலும், தாம் சொல்லப்போகிற விஷயம் நம்பகமானது என்பதை வலியுறுத்துவதற்காக, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” என அவர் அடிக்கடி குறிப்பிட்டார். (யோவா. 1:51; 13:16, 20, 21, 38) சொன்ன சொல்லைக் காப்பாற்றிய இயேசு, பவுல் மற்றும் இன்னும் பலருடைய உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
இயேசு—முத்தான முன்மாதிரி
இயேசு தம் தகப்பனுக்குக் கொடுத்த வாக்கை ஞானஸ்நானம்முதல் மரணம்வரை காப்பாற்றினார்
3. ஜெபத்தில் தம் தகப்பனிடம் இயேசு என்ன வாக்குக் கொடுத்தார், அப்போது அவருடைய தகப்பன் எதைத் தெரியப்படுத்தினார்?
3“கடவுளே, இதோ! உங்கள் சித்தத்தைச் செய்வதற்கு வந்திருக்கிறேன்.” (எபி. 10:7) வாக்குப்பண்ணப்பட்ட சந்ததியான இயேசு கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காகத் தம்மையே அளித்தபோது அர்த்தம்பொதிந்த இந்த வார்த்தைகளைச் சொன்னார்; தம் ‘குதிங்கால் நசுக்கப்படுவது’ உட்பட தம்மைப் பற்றிய எல்லாத் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்ற முன்வந்தார். (ஆதி. 3:15) இதுவரை இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்க வேறு யாருமே முன்வந்ததில்லை. பரலோகத்திலிருந்து யெகோவா தம் மகன்மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதைத் தெரியப்படுத்தினார்; என்றாலும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதாகச் சத்தியம் செய்துகொடுக்கும்படி அவர் தம் மகனிடம் கேட்கவில்லை.—லூக். 3:21, 22.
4. இயேசுவின் விஷயத்தில் ‘ஆம்’ என்பது எப்போதும் ‘ஆம்’ என்றே இருந்தது எப்படி?
4 இயேசுவின் விஷயத்தில் ‘ஆம்’ என்பது எப்போதும் ‘ஆம்’ என்றே இருந்தது. தம் தகப்பன் தம்மிடம் ஒப்படைத்த பிரசங்க வேலையிலிருந்தும், அவர் தம்மிடம் ஈர்க்கிற ஆட்களைச் சீடராக்கும் வேலையிலிருந்தும் தம்மைத் திசைதிருப்ப இயேசு யாருக்குமே எதற்குமே இடங்கொடுக்கவில்லை. (யோவா. 6:44) கடவுளுடைய சித்தத்தைச் செய்வதாகத் தாம் கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றினார் என்பதைப் பின்வரும் வசனம் உறுதிப்படுத்துகிறது: “கடவுளுடைய வாக்குறுதிகள் எத்தனை இருந்தாலும், அவை அத்தனையும் அவர் மூலமாக ‘ஆம்’ என்றே ஆகியிருக்கின்றன.” (2 கொ. 1:20) வாக்குத் தவறாமல் இருப்பதில் என்னே ஒரு முத்தான முன்மாதிரி! அடுத்ததாக, இயேசுவை அப்படியே பின்பற்றிய ஒரு நபரைக் குறித்து இப்போது பார்ப்போம்.
பவுல்—வாக்கு மாறாதவர்
5. அப்போஸ்தலன் பவுல் நமக்கு என்ன முன்மாதிரி வைத்தார்?
5“நான் என்ன செய்ய வேண்டும், எஜமானே?” (அப். 22:10) தம் சீடர்களை சவுல் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக எஜமானராகிய இயேசு ஒரு தரிசனத்தில் அவருக்குக் காட்சியளித்தபோது சவுல் தாழ்மையோடு அவரிடம் கேட்ட கேள்வி இது. இந்தத் தரிசனத்திற்குப் பிறகு சவுல் மனந்திரும்பினார், ஞானஸ்நானம் பெற்றார், புறதேசத்தாருக்கு இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுக்கிற விசேஷ நியமிப்பை ஏற்றுக்கொண்டார். சவுல் என அழைக்கப்பட்ட பவுல் தன் கடைசி மூச்சுவரை இயேசுவை ‘எஜமானர்’ என்றே குறிப்பிட்டார், அவருக்குக் கீழ்ப்படிந்தே நடந்தார். (அப். 22:6-16; 2 கொ. 4:5; 2 தீ. 4:8) “நான் சொல்கிறபடி செய்யாமல் ஏன் என்னை ‘கர்த்தாவே! கர்த்தாவே!’ என்று அழைக்கிறீர்கள்?” என இயேசு கண்டனம் செய்த சிலரைப் போல் அவர் இருக்கவில்லை. (லூக். 6:46) ஆம், தம்மை எஜமானராக ஏற்றுக்கொள்கிற எல்லோரும் அப்போஸ்தலன் பவுலைப் போலவே வாக்கு மாறாதவர்களாக இருக்க வேண்டுமென இயேசு எதிர்பார்க்கிறார்.
6, 7. (அ) மீண்டும் கொரிந்துவுக்குப் போகும் திட்டத்தை பவுல் ஏன் மாற்றிக்கொண்டார், சிலர் அவருடைய நம்பகத்தன்மையைச் சந்தேகித்தது ஏன் சரியல்ல? (ஆ) நம்மை முன்நின்று நடத்துகிற சகோதரர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
6 பவுல், ஆசியா மைனர் முழுவதிலும் ஐரோப்பாவிலும் பயணம் செய்து பக்திவைராக்கியத்தோடு நற்செய்தியைப் பிரசங்கித்தார், அநேக சபைகளை உருவாக்கினார், அவற்றை மீண்டும் போய்ச் சந்தித்தார். தான் எழுதிய விஷயங்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்த சில சமயங்களில் அவர் ஆணையிட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. (கலா. 1:20) கொரிந்துவிலிருந்த சிலர் அவருடைய நம்பகத்தன்மையைச் சந்தேகித்தபோது, “நாங்கள் எதையுமே ‘ஆம்’ என்றும் அதே சமயத்தில் ‘இல்லை’ என்றும் சொல்வதில்லை; கடவுள் சொல்வது எப்படி நம்பகமானதோ அப்படியே நாங்கள் சொல்வதும் நம்பகமானதுதான்” என்று தன் தரப்பு வாதத்தை எழுதினார். (2 கொ. 1:18) அவர் அதை எழுதிய சமயத்தில், கொரிந்துவுக்குப் போவதற்காக எபேசுவிலிருந்து புறப்பட்டு மக்கெதோனியா வழியே பயணம் செய்துகொண்டிருந்தார். மக்கெதோனியாவுக்குள் போகும்முன் கொரிந்து சபையை மீண்டும் சந்திக்க திட்டமிட்டிருந்தார். (2 கொ. 1:15, 16) ஆனால், அந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது—இன்றுள்ள பயணக் கண்காணிகள் செய்வதுபோல! அவர்கள் சுயநல காரணங்களுக்காகவோ, அற்பசொற்ப காரணங்களுக்காகவோ அல்ல, ஆனால் அவசர நிலை ஏற்படும்போது மட்டுமே சில சமயம் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்கிறார்கள். அப்படித்தான், பவுலும் கொரிந்து சபையைச் சந்திக்கும் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டார்—அந்தச் சபையின் நன்மைக்காக! என்ன நன்மை?
7 கொரிந்துவுக்குப் போகத் திட்டமிட்ட கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அந்தச் சபையில் பிரிவினையும் ஒழுக்கக்கேடும் நிலவுகிறதென்ற வேதனையான விஷயம் பவுலின் காதை எட்டியது. (1 கொ. 1:11; 5:1) இந்த நிலைமையைச் சரிசெய்யவே கொரிந்தியர்களுக்குத் தன் முதல் கடிதத்தில் அவர் சூடான அறிவுரையைக் கொடுத்தார். அந்த அறிவுரையை அவர்கள் பின்பற்றுவதற்குப் போதிய அவகாசம் கொடுக்க நினைத்தார்; அதனால், அவர் எபேசுவிலிருந்து நேராக கொரிந்துவுக்குப் போகவில்லை. அதுமட்டுமல்ல, பிற்பாடு தன் சந்திப்பு அவர்களுக்கு ஊக்கமளிப்பதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் அங்கு நேராகப் போகவில்லை. தன் திட்டத்தை மாற்றிக்கொண்டதற்கு உண்மையான காரணம் அதுவே என்பதை உறுதிப்படுத்த பவுல் தன் இரண்டாவது கடிதத்தில் இவ்வாறு எழுதினார்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்: உங்களை மேலும் வருத்தப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே இதுவரை நான் கொரிந்துவுக்கு வரவில்லை; கடவுள்தான் இதற்குச் சாட்சி.” (2 கொ. 1:23) பவுலைக் குறைகூறிய சிலரைப் போல் நாம் இருப்பதற்குப் பதிலாக, நம்மை முன்நின்று வழிநடத்துகிற சகோதரர்களுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும். பவுல் எப்படி கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றினாரோ அப்படியே நாமும் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.—1 கொ. 11:1; எபி. 13:7.
இன்னும் பல முத்தான முன்மாதிரிகள்
8. ரெபெக்காள் நமக்கு என்ன முன்மாதிரி வைத்தாள்?
8“போகிறேன்.” (ஆதி. 24:58) ரெபெக்காள் சொன்ன வார்த்தை இது; ஈசாக்கின் மனைவியாவதற்காக ஆபிரகாமின் ஊழியரோடு போகச் சம்மதமா என அவளுடைய அம்மாவும் அண்ணனும் கேட்டபோது அவள் சொன்ன பதில் இது; இதற்காக அவள் அன்றே தன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு 800 கிலோமீட்டருக்கும் (500 மைல்களுக்கும்) மேலாகப் பயணம் செய்ய வேண்டியிருந்தது, அதுவும் முன்பின் தெரியாத நபரோடு! (ஆதி. 24:50-58) ரெபெக்காள் வாக்கு மாறாமல் நடந்துகொண்டாள்; ஈசாக்கின் ஆருயிர் மனைவியானாள், கடவுளுக்கு உண்மையாய் இருந்தாள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் தன் வாழ்நாளெல்லாம் அந்நியராகக் கூடாரங்களில் குடியிருந்தாள். யெகோவா அவளுடைய உண்மைத்தன்மைக்கு பரிசளித்தார்; ஆம், வாக்குப்பண்ணப்பட்ட சந்ததியான இயேசு கிறிஸ்துவின் மூதாதையாகும் பாக்கியத்தை அவளுக்குக் கொடுத்தார்.—எபி. 11:9, 13.
9. ரூத் தான் சொன்ன சொல்லில் எப்படி உறுதியாய் இருந்தாள்?
9“உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம்.” (ரூத் 1:10) மோவாபைச் சேர்ந்த விதவைப் பெண்களான ரூத்தும் ஓர்பாளும் தங்கள் விதவை மாமியாரான நகோமியிடம் திரும்பத்திரும்பச் சொன்ன வார்த்தைகள் இவை. நகோமி மோவாபிலிருந்து பெத்லகேமுக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார். மருமகள்களை அவர்களுடைய சொந்த நாட்டுக்குப் போகும்படி அவர் வற்புறுத்திக்கொண்டே இருந்ததால், ஓர்பாள் திரும்பிப்போனாள். ரூத்தோ தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல், சொன்ன சொல்லில் உறுதியாய் இருந்தாள். (ரூத் 1:16, 17-ஐ வாசியுங்கள்.) தன் சொந்தபந்தங்களையும் மோவாபியரின் பொய் வணக்கத்தையும் விட்டுவிட்டு கடைசிவரை நகோமியுடனே இருந்தாள். இறுதிமூச்சுவரை யெகோவாவையே வழிபட்டாள், இதன் காரணமாக, யெகோவா அவளை ஆசீர்வதித்தார். மத்தேயு பதிவுசெய்த கிறிஸ்துவின் வம்சாவளிப் பட்டியலில் உள்ள ஐந்தே ஐந்து பெண்களின் பெயர்களில் ரூத்தின் பெயரும் இடம்பெறும்படி செய்தார்.—மத். 1:1, 3, 5, 6, 16.
10. ஏசாயா நமக்கு ஏன் ஒரு நல்ல முன்மாதிரி?
10“இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்.” (ஏசா. 6:8) ஏசாயா சொன்ன வார்த்தைகள் இவை; இப்படிச் சொல்வதற்குமுன் அவர் ஒரு மகத்தான தரிசனத்தைப் பார்த்தார்; எருசலேம் ஆலயத்திற்கு மேல் ஒரு சிம்மாசனத்தில் யெகோவா அமர்ந்திருப்பதைக் கண்டார். இந்த அற்புதமான காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, “யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான்?” என்று யெகோவா கேட்ட கேள்வி அவருடைய காதில் விழுந்தது. தறிகெட்டுப்போன தம் மக்களுக்குத் தம்முடைய செய்தியை அறிவிப்பதற்காக யெகோவா விடுத்த அழைப்பு அது. அந்த அழைப்பை ஏசாயா ஏற்றுக்கொண்டார், “என்னை அனுப்பும்” என்று சொன்னார், சொன்னபடியே செய்தார். ஆம், 46 வருடங்களுக்கும்மேல் கடவுளுடைய தீர்க்கதரிசியாகச் சேவை செய்து சொன்ன சொல்லைக் காப்பாற்றினார்; எச்சரிப்பின் செய்திகளையும் உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவது பற்றிய அருமையான வாக்குறுதிகளையும் அறிவித்துவந்தார்.
11. (அ) வாக்குத் தவறாமல் நடப்பது ஏன் மிக முக்கியம்? (ஆ) வாக்குத் தவறிய சிலர் யார்?
11 மேற்குறிப்பிடப்பட்ட உதாரணங்களையெல்லாம் யெகோவா ஏன் தம் வார்த்தையாகிய பைபிளில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்? அதோடு, நாம் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கும்படி பார்த்துக்கொள்வது ஏன் மிக முக்கியம்? காரணத்தை பைபிள் சொல்கிறது; ‘வாக்குத் தவறுகிறவர்கள்’ ‘மரண தண்டனைக்கு உரியவர்கள்’ என்று அது தெளிவாகச் சொல்கிறது. (ரோ. 1:31, 32) எகிப்தை ஆண்ட பார்வோன், யூதாவை ஆண்ட சிதேக்கியா, அனனியா, சப்பீராள் ஆகியோர் கெட்ட முன்மாதிரிகள், வாக்குத் தவறியவர்கள், அழிவைச் சந்தித்தவர்கள், எச்சரிக்கும் உதாரணங்கள்!—யாத். 9:27, 28, 34, 35; எசே. 17:13-15, 19, 20; அப். 5:1-10.
12. சொன்ன சொல்லின்படியே நடக்க நமக்கு எது உதவும்?
12 இந்த “கடைசி நாட்களில்,” நம்மைச் சுற்றியுள்ள ஆட்கள் “நம்பிக்கை துரோகிகளாக,” “பக்திமான்களைப் போல் காட்டிக்கொண்டு அதற்கு நேர்மாறாய் வாழ்கிறவர்களாக” இருக்கிறார்கள். (2 தீ. 3:1-5) அப்படிப்பட்ட மோசமான ஆட்களோடு சகவாசம் வைத்துக்கொள்வதைக் கூடுமானவரை நாம் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, சொன்ன சொல்லின்படியே நடக்கிறவர்களோடு தவறாமல் ஒன்றுகூடிவர முயற்சியெடுக்க வேண்டும்.—எபி. 10:24, 25.
நாம் கொடுக்கும் மிக முக்கியமான வாக்கு
13. இயேசுவின் சீடராவதற்கு ஒருவர் எப்போது மிக முக்கியமான வாக்கு ஒன்றைக் கொடுக்கிறார்?
13 ஒருவர் கடவுளுக்குத் தன்னை அர்ப்பணம் செய்யும் கட்டத்தில் மிக முக்கியமான வாக்கு ஒன்றைக் கொடுக்கிறார். இயேசுவின் சீடர்களாவதற்குத் தங்களை அர்ப்பணிக்க விரும்புகிறவர்கள் மூன்று சந்தர்ப்பங்களில் ‘ஆம்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. (மத். 16:24) ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியாய் ஆக விரும்புகிற ஒருவரிடம் இரண்டு மூப்பர்கள் பேசும்போது, “ஒரு யெகோவாவின் சாட்சியாக வேண்டுமென உண்மையிலேயே விரும்புகிறீர்களா?” எனக் கேட்பார்கள். பிற்பாடு, அந்த நபர் ஆன்மீக ரீதியில் மேலும் முன்னேற்றம் செய்து ஞானஸ்நானம் பெற விரும்பும்போது மூப்பர்கள் அவரிடம், “உங்களை அர்ப்பணிப்பதாக யெகோவாவிடம் ஜெபத்தில் தெரிவித்துவிட்டீர்களா?” எனக் கேட்பார்கள். கடைசியாக, ஞானஸ்நானம் பெறுகிற தினத்தன்று பேச்சாளர், “இயேசு கிறிஸ்துவினுடைய பலியின் அடிப்படையில் உங்கள் பாவங்களைவிட்டு மனந்திரும்பி, யெகோவாவின் சித்தத்தைச் செய்யும்படி உங்களை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறீர்களா?” என்று கேட்பார். அந்தச் சமயத்தில், ஞானஸ்நானம் பெறவிருப்பவர்கள் கூடியிருப்போர் முன்பாக, ‘ஆம்’ என்று சொல்வார்கள்; இவ்வாறு, கடவுளுக்கு என்றென்றும் சேவை செய்வதாக வாக்குக் கொடுப்பார்கள்.
கடவுளுக்கு உங்களை அர்ப்பணித்தபோது கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகிறீர்களா?
14. அவ்வப்போது நம்மையே என்ன கேட்டுக்கொள்ள வேண்டும்?
14 நீங்கள் ஞானஸ்நானம் பெற்று சில நாட்கள் ஆகியிருந்தாலும் சரி, பல வருடங்கள் ஆகியிருந்தாலும் சரி, அவ்வப்போது உங்களையே இதுபோல் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்னை அர்ப்பணித்தபோது நான் கொடுத்த மிக முக்கியமான வாக்கை இயேசுவைப் போலவே கடைசிவரை காப்பாற்றுவேனா? பிரசங்க வேலைக்கும் சீடராக்கும் வேலைக்கும் முதலிடத்தைக் கொடுத்து அவருக்கு எப்போதும் கீழ்ப்படிவேனா?’—2 கொரிந்தியர் 13:5-ஐ வாசியுங்கள்.
15. வாழ்க்கையின் முக்கியமான எந்த அம்சங்களில் நாம் வாக்கு மாறாதிருக்க வேண்டும்?
15 நம்மை அர்ப்பணித்தபோது கொடுத்த வாக்குக்கு இசைய நடக்க வேண்டுமென்றால், வாழ்க்கையின் முக்கியமான பிற அம்சங்களிலும் நாம் வாக்கு மாறாமல் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு: உங்களுக்கு மணமாகியிருந்தால், உங்கள் மணத்துணையை உயிருக்கு உயிராய் நேசிப்பதாகத் திருமணத்தன்று எடுத்த உறுதிமொழிக்கு ஏற்ப தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் வியாபார ஒப்பந்தம் செய்திருந்தால், அல்லது கடவுளுடைய சேவைக்காக ஏதோவொரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்திருந்தால், வாக்கு மாறாதிருங்கள். ஓர் ஏழை சகோதரரின் வீட்டுக்குச் சாப்பிட வருவதாக ஒத்துக்கொண்டிருந்தால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுங்கள்; அதன்பின் பணக்கார சகோதரர் கூப்பிடுகிறார் என்பதற்காக வாக்கு மாறாதீர்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்தித்த ஒருவரை மீண்டும் சந்திப்பதாக வாக்குக் கொடுத்திருந்தால், சொன்னபடியே மறக்காமல் போய்ச் சந்தியுங்கள்; அப்போது, யெகோவா உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்.—லூக்கா 16:10-ஐ வாசியுங்கள்.
நம் தலைமைக் குரு... ராஜா... இயேசு உதவுகிறார்
16. நாம் வாக்குத் தவறிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
16 அபூரண மனிதர்களான நாம் எல்லோருமே “பலமுறை தவறு செய்கிறோம்,” முக்கியமாக சொல் தவறிவிடுகிறோம் என்று பைபிள் சொல்கிறது. (யாக். 3:2) அப்படி நாம் சொல் தவறிவிட்டால் என்ன செய்ய வேண்டும்? ஓர் இஸ்ரவேலர் ‘மனம் அறியாமல் [அதாவது, யோசிக்காமல்], உதடுகளினால்’ பாவம் செய்துவிட்டால், அவர் கடவுளுடைய இரக்கத்தைப் பெறுவதற்குத் திருச்சட்டத்தில் ஓர் ஏற்பாடு இருந்தது. (லேவி. 5:4-7, 11) அதேபோல், ஒரு கிறிஸ்தவர் உதடுகளினால் பாவம் செய்தால், அதற்கும் ஓர் அன்பான ஏற்பாடு இருக்கிறது. அந்தப் பாவத்தை யெகோவாவிடம் அறிக்கையிட வேண்டும்; அப்போது அவர், நம் தலைமைக் குருவான இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரக்கம் காட்டி மன்னிப்பார். (1 யோ. 2:1, 2) என்றாலும், அவருடைய தயவை இழந்துவிடாதிருக்க, நாம் உண்மையிலேயே மனந்திரும்பியிருப்பதைக் காட்ட வேண்டும்; வாக்குத் தவறாமல் இருக்க எப்போதும் முயற்சியெடுக்க வேண்டும்; யோசிக்காமல் பேசி, ஒருவேளை பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைச் சரிசெய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். (நீதி. 6:2-4) கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் விழிபிதுங்கி நிற்பதற்குப் பதிலாக அதைக் கொடுப்பதற்குமுன் தீர யோசிப்பது எவ்வளவோ நல்லது.—பிரசங்கி 5:2-ஐ வாசியுங்கள்.
17, 18. வாக்கு மாறாதவர்களுக்கு என்ன பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது?
17 ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைய வாழ முயலுகிற உண்மைக் கிறிஸ்தவர்கள் அனைவருக்குமே பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. பரலோக நம்பிக்கையுள்ள 1,44,000 பேருக்குச் சாவாமையுள்ள வாழ்வு பரலோகத்தில் காத்திருக்கிறது; அங்கே அவர்கள் இயேசுவோடுகூட “ஆயிரம் வருடங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.” (வெளி. 20:6) கோடிக்கணக்கானோருக்கு கிறிஸ்துவின் ஆட்சியில் பூஞ்சோலை பூமியில் முடிவில்லா வாழ்வு காத்திருக்கிறது. அங்கே அவர்கள், உடலிலும் உள்ளத்திலும் பரிபூரணத்தை அடைவார்கள்.—வெளி. 21:3-5.
18 இயேசுவுடைய ஆயிரவருட அரசாட்சியின் முடிவில் நடக்கப்போகிற கடைசி பரீட்சையில் உண்மையுள்ளவர்களென நிரூபிப்பவர்கள் மட்டுமே பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வார்கள்; அவர்கள் ஒவ்வொருவருமே சொல் தவறாதவர்களாக, வாக்கு மாறாதவர்களாக இருப்பார்கள். (வெளி. 20:7-10) அவர்கள் ‘ஆம்’ என்று சொல்வது எப்போதுமே ‘ஆம்’ என்றுதான் இருக்கும், ‘இல்லை’ என்று சொல்வது எப்போதுமே ‘இல்லை’ என்றுதான் இருக்கும். அனைவருமே ‘சத்தியபரரான’ நம் அன்புத் தகப்பன் யெகோவாவை அச்சுப்பிசகாமல் பின்பற்றுகிறவர்களாக இருப்பார்கள்.—சங். 31:5.