கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் ஒப்பற்ற ஸ்தானத்தை மதித்துணருங்கள்
“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”—யோவா. 14:6.
1, 2. கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் ஒப்பற்ற ஸ்தானத்தைக் குறித்து ஆராய்வது நமக்கு ஏன் அக்கறைக்குரியது?
சரித்திரம் முழுவதிலும், பலர் தங்களை மற்றவர்களைவிட மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்திருக்கின்றனர்; ஆனால், வெகுசிலரே அம்முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றனர். அதிலும் ஒருசிலரால் மட்டுமே குறிப்பிடத்தக்க விஷயங்களில் தாங்கள் ஒப்பற்று விளங்குவதாகச் சொல்லிக்கொள்ள முடிகிறது. ஆனால், கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்து பல வழிகளில் ஒப்பற்று விளங்குகிறார்.
2 இயேசுவின் ஒப்பற்ற ஸ்தானம் நமக்கு ஏன் அக்கறைக்குரியது? ஏனென்றால், நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவுடன் வைத்திருக்கும் உறவோடு அது சம்பந்தப்பட்டுள்ளது! “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு சொன்னார். (யோவா. 14:6; 17:3) இயேசு ஒப்பற்று விளங்கும் விஷயங்களில் சிலவற்றை இப்போது நாம் ஆராயலாம். அவ்வாறு ஆராய்வது, கடவுளுடைய நோக்கத்தில் அவருடைய ஸ்தானத்திற்கு நாம் இன்னும் மதிப்புகாட்ட உதவும்.
‘ஒரேபேறான குமாரன்’
3, 4. (அ) ஒரேபேறான குமாரனாகத் தாம் வகித்த பங்கில் இயேசு ஒப்பற்று விளங்கினாரென நாம் ஏன் சொல்ல முடியும்? (ஆ) படைப்பில் இயேசுவின் பங்கு எவ்வாறு ஒப்பற்றதாய் இருந்தது?
3 இயேசு ‘தேவனுடைய குமாரன்’ மட்டுமே அல்ல. சாத்தான் அவரைச் சோதித்தபோது அவ்வாறே குறிப்பிட்டான். (மத். 4:3, 6) அவர், ‘தேவனுடைய ஒரேபேறான குமாரன்’ என்று பொருத்தமாகவே அழைக்கப்படுகிறார். (யோவா. 3:16, 18) “ஒரேபேறான” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தைக்கு, “தனித்தன்மை வாய்ந்த,” “தன்னிகரற்ற,” “ஒப்பற்ற” என்றெல்லாம் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. யெகோவாவுக்கு, கோடிக்கணக்கான ஆவிக்குமாரர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது, இயேசு எந்த அர்த்தத்தில் ‘தன்னிகரற்றவராக’ இருக்கிறார்?
4 பிதாவினால் நேரடியாகப் படைக்கப்பட்ட ஒரே நபர் இயேசு என்பதால் அவர் ஒப்பற்றவராக இருக்கிறார். அவர், முதற்பேறான மகன். சொல்லப்போனால், அவரே ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர்.’ (கொலோ. 1:15) அவர், ‘தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறார்.’ (வெளி. 3:14) படைப்பு வேலையில் இந்த ஒரேபேறான மகன் வகித்த பங்கும்கூட ஒப்பற்றதாகும். அவர், எல்லாவற்றையும் படைத்த படைப்பாளர் அல்ல. மாறாக, எல்லாவற்றையும் படைப்பதற்கு ஒரு கருவியாக, அதாவது ஓர் உதவியாளராக யெகோவாவால் பயன்படுத்தப்பட்டவர். (யோவான் 1:3-ஐ வாசியுங்கள்.) “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—1 கொ. 8:6.
5. இயேசுவின் ஒப்பற்ற தன்மையை பைபிள் எவ்வாறு சிறப்பித்துக் காட்டுகிறது?
5 ஆனாலும், இன்னும் பல வழிகளில் இயேசு ஒப்பற்றவராய் விளங்குகிறார். பைபிளில், அவர் அநேக பட்டப்பெயர்களால் அல்லது பதவிப்பெயர்களால் அழைக்கப்படுகிறார்; அப்பெயர்கள், கடவுளின் நோக்கத்தில் அவருடைய ஒப்பற்ற பங்கைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இயேசுவுக்குச் சூட்டப்பட்டிருக்கிற பெயர்களில் இன்னும் ஐந்து பெயர்களை இப்போது நாம் ஆராயலாம்.a
“வார்த்தை”
6. இயேசு “வார்த்தை” என அழைக்கப்படுவது ஏன் பொருத்தமானது?
6 யோவான் 1:14-ஐ வாசியுங்கள். இயேசு ஏன் “வார்த்தை” என அழைக்கப்படுகிறார்? புத்திக்கூர்மையுள்ள பிற படைப்புகள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அவர் செய்துவந்த வேலையையே இந்தப் பட்டப்பெயர் சுட்டிக்காட்டுகிறது. கடவுள், பூமியிலுள்ள மனிதருக்குச் செய்தியை அறிவிக்க இயேசுவைப் பயன்படுத்திய விதமாகவே, தம்முடைய மற்ற ஆவிக்குமாரர்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்கவும் கட்டளைகளைக் கொடுக்கவும் அவரைப் பயன்படுத்தினார். இயேசு, வார்த்தையாக அல்லது கடவுளின் பிரதிநிதிப் பேச்சாளராக இருக்கிறார் என்பது அவர் யூத மக்களிடம் சொன்னதிலிருந்து தெளிவாகிறது. அவர் சொன்னதாவது: “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்.” (யோவா. 7:16, 17) இயேசு மகிமைபொருந்தினவராய்ப் பரலோகத்துக்குத் திரும்பிச்சென்ற பிறகும்கூட, “தேவனுடைய வார்த்தை” என்றே அழைக்கப்படுகிறார்.—வெளி. 19:11, 13, 16.
7. “வார்த்தை” என்ற ஸ்தானத்தை வகிக்கிற இயேசுவைப் போலவே நாம் எவ்வாறு மனத்தாழ்மை காட்டலாம்?
7 இந்தப் பெயரில் பொதிந்துள்ள குறிப்பைச் சற்றுச் சிந்தித்துப்பாருங்கள். யெகோவாவின் படைப்புகள் அனைத்திலும் இயேசுவே மிக அதிக ஞானமுள்ளவராய் இருந்தாலும், அவர் எதையும் தம் சொந்த ஞானத்தில் செய்வதில்லை. தம் பிதா சொல்பவற்றையே அவர் பேசுகிறார். அவர் எப்போதும் தமக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், யெகோவாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். (யோவா. 12:50) நாம் பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட ஒரு முன்னுதாரணம்! “நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிற” கௌரவமான வேலை நமக்கும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. (ரோ. 10:15) மனத்தாழ்மைக்கு இயேசு முன்னுதாரணமாய்த் திகழ்வதை நாம் புரிந்துகொள்ளும்போது, நம் சொந்த ஞானத்தில் பேச மாட்டோம். பைபிளிலுள்ள உயிர்காக்கும் செய்தியை அறிவிக்கையில், “எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ண” மாட்டோம்.—1 கொ. 4:6.
“ஆமென்”
8, 9. (அ) “ஆமென்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன, இயேசு ஏன் “ஆமென்” என்று அழைக்கப்படுகிறார்? (ஆ) “ஆமென்” என்ற தம் ஸ்தானத்தை இயேசு எவ்வாறு நிறைவேற்றினார்?
8 வெளிப்படுத்துதல் 3:14-ஐ வாசியுங்கள். இயேசு ஏன் “ஆமென்” என்று அழைக்கப்படுகிறார்? “ஆமென்” என்ற வார்த்தை, எபிரெய வார்த்தையின் எழுத்துப் பெயர்ப்பாகும். அதன் அர்த்தம், “அப்படியே ஆகட்டும்,” அல்லது “நிச்சயமாக” என்பதாகும். அது, “உண்மையோடிரு,” அல்லது “நம்பத்தகுந்த” என்ற அர்த்தமுடைய அடிப்படைச் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தையாகும். இந்த அடிப்படைச் சொல்லே யெகோவாவின் உண்மைத்தன்மையை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. (உபா. 7:9; ஏசா. 49:7) அப்படியானால், “ஆமென்” என்று குறிப்பிடப்படுகையில் இயேசு எவ்விதத்தில் ஒப்பற்றவராய் விளங்குகிறார்? இதற்கு 2 கொரிந்தியர் 1:19, 20 எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைக் கவனியுங்கள்: “உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து . . . ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார். எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.”
9 கடவுள் அளித்த வாக்குறுதிகள் அனைத்திற்கும் இயேசு “ஆமென்” என்று இருக்கிறார். பூமியில் அவர் மரணம் வரையாகக் குற்றமற்றவராய் வாழ்ந்தது, யெகோவா தேவன் அளித்திருந்த வாக்குறுதிகள் அனைத்தும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தியது; அவை நிறைவேறுவதைச் சாத்தியமுமாக்கியது. இயேசு உண்மையுள்ளவராய் இருந்ததன் மூலம் சாத்தான் விடுத்த சவாலைத் தவறென நிரூபித்தார்; யோபு புத்தகத்தில் நாம் வாசிப்பதுபோல், நெருக்கடிகள், கஷ்டங்கள், சோதனைகள் என வரும்போது கடவுளுடைய ஊழியர்கள் அவரைவிட்டு விலகிவிடுவார்கள் என்பதாக அவன் சவால் எழுப்பினான். (யோபு 1:6–12; 2:2–7) கடவுளுடைய எல்லாப் படைப்புகளிலும், முதற்பேறான மகனால் மட்டுமே அந்தச் சவாலுக்குச் சரியான பதிலடி கொடுக்க முடிந்தது. அதோடு, யெகோவாவின் உன்னத அரசாட்சி சரியானதா என்ற மிகப் பெரிய சவாலில் தம் பிதாவுக்கு ஆதரவு காட்டினார்.
10. “ஆமென்” என்ற ஒப்பற்ற ஸ்தானத்திலுள்ள இயேசுவை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
10 “ஆமென்” என்ற ஒப்பற்ற ஸ்தானத்திலுள்ள இயேசுவை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? யெகோவாவுக்கு உண்மையோடிருந்து, அவருடைய உன்னத அரசாட்சியை ஆதரிப்பதன் மூலம். அவ்வாறு செய்யும்போது, நீதிமொழிகள் 27:11-ல் உள்ள பின்வரும் வேண்டுகோளுக்கு இசைவாகச் செயல்படுபவர்களாய் இருப்போம்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.”
‘புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர்’
11, 12. மத்தியஸ்தராய் இயேசுவின் ஸ்தானம் ஒப்பற்றதாக இருப்பது எவ்வாறு?
11 1 தீமோத்தேயு 2:5, 6-ஐ வாசியுங்கள். இயேசு, ‘தேவனுக்கும் மனுஷருக்கும் [ஒரே] மத்தியஸ்தராய்’ இருக்கிறார். அவர், ‘புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராய்’ இருக்கிறார். (எபி. 9:15; 12:24) மோசேயும்கூட ஒரு மத்தியஸ்தராய் இருந்ததாக, அதாவது நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மத்தியஸ்தராய் இருந்ததாக பைபிள் சொல்கிறது. (கலா. 3:19) அப்படியானால், மத்தியஸ்தராய் இயேசு வகிக்கும் ஸ்தானம் ஒப்பற்றதாக இருப்பது எவ்வாறு?
12 ‘மத்தியஸ்தர்’ என மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தையின் மூலப்பதம், சட்டத்துறை சம்பந்தப்பட்டதாகும். அது, இயேசுவைப் புது உடன்படிக்கையின் சட்டப்பூர்வ மத்தியஸ்தராகக் குறிப்பிடுகிறது; அந்த உடன்படிக்கையால்தான் ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ என்றழைக்கப்படும் ஒரு புதிய தேசம் உருவானது. (கலா. 6:16) இந்தத் தேசம், பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களால் ஆனது; இவர்கள் “ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும்” இருக்கிறார்கள். (1 பே. 2:9; யாத். 19:6) மோசேயை மத்தியஸ்தராகக் கொண்டு செய்யப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையால் இதுபோன்ற ஒரு தேசத்தை உருவாக்க முடியவில்லை.
13. மத்தியஸ்தராக இயேசுவின் ஸ்தானத்தில் என்ன உட்பட்டுள்ளது?
13 மத்தியஸ்தராக இயேசு வகிக்கும் ஸ்தானத்தில் என்ன உட்பட்டுள்ளது? புதிய உடன்படிக்கையில் உட்பட்டிருப்பவர்களுக்கு இயேசு சிந்திய இரத்தத்தின் அடிப்படையில் யெகோவா நன்மை அளிக்கிறார். இதன் மூலம் அவர்களை நீதிமான்களென்று சட்டப்பூர்வமாக அறிவிக்கிறார். (ரோ. 3:24; எபி. 9:15) இவ்வாறு, பரலோகத்தில் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆகும் எதிர்பார்ப்போடு அவர்களைப் புதிய உடன்படிக்கைக்குள் அவரால் கொண்டுவர முடிகிறது. அவர்கள் கடவுளோடு ஒரு நல்ல உறவில் இருப்பதற்கு, மத்தியஸ்தரான இயேசு உதவுகிறார்.—எபி. 2:16.
14. தங்கள் நம்பிக்கை எதுவாய் இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்கள் எல்லாருமே மத்தியஸ்தராக இயேசு வகிக்கும் ஸ்தானத்தை ஏன் உயர்வாய் மதிக்க வேண்டும்?
14 புது உடன்படிக்கைக்கு உட்படாத, பூமியில் என்றென்றும் வாழப்போகும் நம்பிக்கையுள்ளவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் புது உடன்படிக்கையின் பங்காளிகளாய் இல்லாதபோதிலும் அதன் பயனாளிகளாய் இருக்கிறார்கள். அவர்கள் பாவ மன்னிப்பு பெற்று, நீதிமான்களாகவும் கடவுளின் நண்பர்களாகவும் அறிவிக்கப்படுகிறார்கள். (யாக். 2:23; 1 யோ. 2:1, 2) நமக்குப் பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி பூமிக்குரிய நம்பிக்கை இருந்தாலும் சரி, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இயேசு வகிக்கும் ஸ்தானத்தை உயர்வாய் மதிக்க நம் ஒவ்வொருவருக்குமே நல்ல காரணம் இருக்கிறது.
“பிரதான ஆசாரியர்”
15. பிரதான ஆசாரியராக இயேசுவின் ஸ்தானம், அவ்வாறு சேவைசெய்திருக்கிற அனைவரின் ஸ்தானத்திலிருந்தும் வித்தியாசமாய் இருப்பது எப்படி?
15 கடந்த காலங்களில் அநேக ஆண்கள் பிரதான ஆசாரியர்களாகச் சேவை செய்திருக்கின்றனர்; இருந்தாலும், பிரதான ஆசாரியராக இயேசு வகிக்கும் ஸ்தானம் உண்மையில் ஒப்பற்றது. எப்படி? பவுல் இதைப் பின்வருமாறு விளக்குகிறார்: “அவர் பிரதான ஆசாரியர்களைப் போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிட வேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார். நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப் பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.”—எபி. 7:27, 28.b
16. இயேசுவின் பலி உண்மையிலேயே ஏன் ஒப்பற்றது?
16 ஆதாம் பாவம் செய்வதற்கு முன்பு எப்படி இருந்தானோ, அப்படியே இயேசு ஒரு பரிபூரண மனிதராக இருந்தார். (1 கொ. 15:45) இதனால், ஒரு பரிபூரணமான, முழுமையான பலியைச் செலுத்தும் நிலையிலிருந்த ஒரே மனிதராக அவர் விளங்கினார்; அதாவது மீண்டும் மீண்டும் செலுத்துவதற்குத் தேவையில்லாத ஒரு பலியைச் செலுத்தினார். நியாயப்பிரமாணத்தின்படி, மக்கள் தினந்தோறும் பலிகளைச் செலுத்தவேண்டியிருந்தது. என்றாலும், அந்தப் பலிகளும் சரி ஆசாரிய சேவைகளும் சரி, இயேசு நிறைவேற்றப் போவதற்கு முன்னிழலாகவே இருந்தன. (எபி. 8:5; 10:1) ஆகவே, பிரதான ஆசாரியராக இயேசுவின் ஸ்தானம், மேம்பட்டதாயும் நிரந்தரமானதாயும் இருப்பதால் அது ஒப்பற்றதாகும்.
17. நமது பிரதான ஆசாரியராக இயேசு வகிக்கும் ஸ்தானத்திற்கு நாம் ஏன் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும், அதை எவ்வாறு காட்டலாம்?
17 நாம் யெகோவாவோடு ஒரு நல்ல உறவில் இருப்பதற்கு, பிரதான ஆசாரியராக இயேசுவின் சேவைகள் நமக்குத் தேவை. அவர் நமக்கு எப்பேர்ப்பட்ட மிகச் சிறந்த பிரதான ஆசாரியராய் இருக்கிறார்! “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” என பவுல் எழுதினார். (எபி. 4:15) இப்பேர்ப்பட்ட பிரதான ஆசாரியருக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருப்பது, ‘நமக்கென்று பிழைத்திராமல், நமக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்க’ நம்மைத் தூண்ட வேண்டும்.—2 கொ. 5:14, 15; லூக். 9:23.
முன்னறிவிக்கப்பட்ட “வித்து”
18. ஆதாம் பாவம்செய்த பின்னர், எதைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டது, அது சம்பந்தமாக பின்னர் என்ன வெளிப்படுத்தப்பட்டது?
18 ஏதேனில் மனிதர் எல்லாவற்றையும் இழந்தபோது, அதாவது கடவுளோடு நல்லுறவு, முடிவில்லா வாழ்வு, மனமகிழ்ச்சி, அழகிய பூஞ்சோலை என எல்லாவற்றையும் இழந்தபோது, யெகோவா தேவன் ஒரு விடுவிப்பாளரைப் பற்றி முன்னறிவித்தார். அந்த விடுவிப்பாளர் “வித்து” எனக் குறிப்பிடப்பட்டார். (ஆதி. 3:15) பெயர் குறிப்பிடப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த வித்து, பல காலமாகவே எண்ணற்ற பைபிள் தீர்க்கதரிசனங்களின் முக்கியப் பொருளாய் ஆனார். அவர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் சந்ததியில் வரவிருந்தார். மேலும், தாவீது ராஜாவின் வம்சத்தில் வரவிருந்தார்.—ஆதி. 21:12; 22:16–18; 28:14; 2 சா. 7:12–16.
19, 20. (அ) வாக்குப்பண்ணப்பட்ட வித்து யார்? (ஆ) இயேசுவோடுகூட, மற்றவர்களும் முன்னறிவிக்கப்பட்ட வித்துவின் பாகமாகிறார்கள் என ஏன் சொல்லலாம்?
19 வாக்குப்பண்ணப்பட்ட இந்த வித்து யார்? இந்தக் கேள்விக்கான பதிலை கலாத்தியர் 3:16-ல் பார்க்கலாம். (வாசியுங்கள்.) இருந்தாலும், அதே அதிகாரத்தில் அப்போஸ்தலன் பவுல் பரலோக நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், [அதாவது வித்துவாயும்] வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.” (கலா. 3:29) கிறிஸ்து வாக்குப்பண்ணப்பட்ட வித்துவாய் இருக்க, மற்றவர்களும் அதன் பாகமாய் இருப்பது எப்படி?
20 லட்சக்கணக்கானோர் தாங்கள் ஆபிரகாமின் சந்ததியாரெனச் சொல்லிக்கொள்கிறார்கள், சிலர் தீர்க்கதரிசிகளைப் போலவும் நடந்துகொள்கிறார்கள். சில மதத்தவர் தங்கள் தீர்க்கதரிசிகள் ஆபிரகாமின் சந்ததியிலிருந்து வந்தவர்கள் என்று மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் எல்லாரும் வாக்குப்பண்ணப்பட்ட வித்துவாக இருக்கிறார்களா? இல்லை. அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டுக் கூறியபடி, ஆபிரகாமின் சந்ததியார் எல்லாரும் தங்களை வாக்குப்பண்ணப்பட்ட வித்துவாகச் சொல்லிக்கொள்ள முடியாது. ஆபிரகாமின் மற்ற மகன்களின் வம்சத்தார் மூலம் மனிதகுலம் ஆசீர்வதிக்கப்படுவதற்கு யெகோவா நோக்கம் கொள்ளவில்லை. ஈசாக்கின் மூலமாக வரவிருந்த வித்துவால் மட்டுமே மனிதகுலம் ஆசீர்வதிக்கப்படுவதற்கு யெகோவா நோக்கம்கொண்டிருந்தார். (எபி. 11:18) கடைசியில், முன்னறிவிக்கப்பட்ட வித்துவின் முக்கிய பாகமாய் இருக்கிற ஒரே நபர் இயேசு கிறிஸ்துவே; இவர் ஆபிரகாமின் வம்சாவளியில் வந்திருப்பதாக பைபிள் பதிவு செய்துள்ளது.c பிற்பாடு மற்றவர்களும் ஆபிரகாமுடைய வித்துவின் இரண்டாம் பாகமானதற்குக் காரணம், அவர்கள் அனைவரும் ‘கிறிஸ்துவினுடையவர்கள்.’ ஆம், இந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதில் இயேசு வகித்த பங்கு ஒப்பற்றதுதான்.
21. யெகோவாவின் நோக்கத்தில் இயேசு தம் ஒப்பற்ற ஸ்தானத்தை நிறைவேற்றிய விதத்தில் உங்களைக் கவர்ந்த அம்சம் எது?
21 யெகோவாவின் நோக்கத்தில் இயேசுவின் ஒப்பற்ற ஸ்தானத்தைச் சுருக்கமாகச் சிந்தித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? கடவுளுடைய ஒரே பேறான குமாரன், தாம் படைக்கப்பட்டதிலிருந்தே ஒப்பற்றவராய்த் தனித்து விளங்குகிறார். என்றாலும், இந்த ஒப்பற்ற மகன் இயேசுவாக பூமிக்கு வந்தபோது எல்லாக் காரியத்திலும் தம் பிதாவின் சித்தத்திற்கு இசைவாகத் தாழ்மையாய் நடந்தார்; அவர் ஒருபோதும் தமக்கு மகிமை தேடவில்லை. (யோவா. 5:41; 8:50) இன்று நமக்கு அவர் எப்பேர்ப்பட்ட தலைசிறந்த முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்! இயேசுவைப் போலவே, ‘எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்வதை’ நம் லட்சியமாக்குவோமாக.—1 கொ. 10:31.
[அடிக்குறிப்புகள்]
a இவற்றில் சில பெயர்கள் கிரேக்கச் சுட்டிடைச் சொல்லோடு இணைந்து காணப்படுவதால் அவை, “ஒரு கருத்தில் ‘தன்னிகரற்றவர்’ ” என்பதைச் சுட்டிக்காட்டுவதாக ஓர் அறிஞர் குறிப்பிடுகிறார்.
b ஒரு பைபிள் அறிஞர் சொல்வதன்படி, “ஒரேதரம்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை, பைபிளிலுள்ள ஒரு முக்கியமான குறிப்பைத் தெரிவிக்கிறது; அதாவது, ‘கிறிஸ்துவின் மரணம் முடிவானது, ஒப்பற்றது, அல்லது தனித்தன்மைவாய்ந்தது.’
c பொ.ச. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூதர்கள், தாங்கள் ஆபிரகாமின் உண்மைச் சந்ததியாராய், கடவுளுடைய தயவைப் பெற்ற ஜனமாய் இருந்ததாக நம்பினாலும் மேசியா எனப்படும் கிறிஸ்துவாகிய ஒருவர் வருவாரெனக் காத்துக்கொண்டிருந்தார்கள்.—யோவா. 1:25; 7:41, 42; 8:39–41.
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• இயேசுவின் பட்டப்பெயர்களிலிருந்து அவருடைய ஒப்பற்ற ஸ்தானத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்? (பெட்டியைப் பாருங்கள்.)
• யெகோவாவின் ஒப்பற்ற மகனின் முன்னுதாரணத்தை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம்?
[பக்கம் 15-ன் பெட்டி/படம்]
கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் ஒப்பற்ற ஸ்தானத்தைப் பிரதிபலிக்கும் சில பட்டப்பெயர்கள்
◼ ஒரேபேறான குமாரன். (யோவா. 1:3) இயேசு, பிதாவினால் நேரடியாகப் படைக்கப்பட்ட ஒரே நபர்.
◼ வார்த்தை. (யோவா. 1:14) தம்முடைய மற்ற படைப்புகளுக்குத் தகவல்களைத் தெரிவிக்கவும் கட்டளைகளைக் கொடுக்கவும் தமது மகனைப் பிரதிநிதிப் பேச்சாளராக யெகோவா பயன்படுத்துகிறார்.
◼ ஆமென். (வெளி. 3:14) பூமியில் இயேசு மரணம் வரையாகக் குற்றமற்றவராய் வாழ்ந்தது, யெகோவா தேவன் அளித்திருந்த வாக்குறுதிகள் அனைத்தும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தியது; அவை நிறைவேறுவதைச் சாத்தியமுமாக்கியது.
◼ புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர். (1 தீ. 2:5, 6) புது உடன்படிக்கையின் சட்டப்பூர்வ மத்தியஸ்தராகிய இயேசு, ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ என்றழைக்கப்படும் ஒரு புதிய தேசம் உருவாகுவதைச் சாத்தியமாக்கினார். இந்தத் தேசம், பரலோகத்தில் “ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாக” இருக்கப்போகும் கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது.—கலா. 6:16; 1 பே. 2:9.
◼ பிரதான ஆசாரியர். (எபி. 7:27, 28) இயேசு, மீண்டும் மீண்டும் செலுத்துவதற்குத் தேவையில்லாத பரிபூரணமான பலியைச் செலுத்தும் நிலையிலிருந்த ஒரே மனிதராக விளங்கினார். அவர் பாவத்திலிருந்து நம்மைச் சுத்திகரித்து, அதனால் விளைந்த மரணத்திலிருந்து நம்மை விடுவிக்க முடியும்.
◼ வாக்குப்பண்ணப்பட்ட வித்து. (ஆதி. 3:15) முன்னறிவிக்கப்பட்ட வித்துவின் முக்கிய பாகமாய் இருக்கிற ஒரே நபர் இயேசு கிறிஸ்துவே; பிற்பாடு ஆபிரகாமுடைய வித்துவின் இரண்டாம் பாகமாகிற மற்ற அனைவரும் ‘கிறிஸ்துவினுடையவர்கள்.’—கலா. 3:29.