‘தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாராளமாய் மன்னியுங்கள்’
“தொடர்ந்து ஒருவரையொருவர் பொறுத்து ஒருவருக்கொருவர் தாராளமாய் மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:13, NW.
1. (அ) நாம் மற்றவர்களுக்கு “ஏழுதரம்” மன்னிக்க வேண்டுமென பேதுரு குறிப்பாகச் சொன்னபோது, தான் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தினதாக அவர் ஏன் நினைத்திருக்கலாம்? (ஆ) “ஏழெழுபதுதரமட்டும்” நாம் மன்னிக்க வேண்டும் என்று இயேசு சொன்னபோது என்ன அர்த்தம் கொண்டார்?
“ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதரமட்டுமோ”? (மத்தேயு 18:21) இவ்வாறு, தான் குறிப்பாகச் சொன்னதில் மிக தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தினதாக பேதுரு நினைத்திருக்கலாம். அக்காலத்தில், ஒரே குற்றத்திற்காக ஒருவரை மூன்று தடவைக்குமேல் மன்னிக்கக்கூடாது என ரபீக்களின் பாரம்பரியம் கூறியது.a அப்படியானால், இயேசு பின்வருமாறு பதிலளித்தபோது பேதுருவுக்கு உண்டான ஆச்சரியத்தைக் கற்பனை செய்து பாருங்கள்: “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்”! (மத்தேயு 18:22) ஏழேழாக திரும்பத்திரும்ப மன்னிப்பது “வரையறையில்லாமல்” என்று சொல்வதற்குச் சமமாயிருந்தது. இயேசுவின் நோக்கில், ஒரு கிறிஸ்தவன் மற்றவர்களை இத்தனை தடவை மன்னிக்க வேண்டும் என்ற மட்டுப்பாடே உண்மையில் இல்லை.
2, 3. (அ) மற்றவர்களுக்கு மன்னிப்பது கடினமாகத் தோன்றும் சில சந்தர்ப்பங்கள் எவை? (ஆ) மற்றவர்களுக்கு மன்னிப்பது நம்முடைய மிகச் சிறந்த நன்மைக்கானதாக இருக்கிறதென்று நாம் ஏன் நம்பிக்கையுடையோராக இருக்கலாம்?
2 எனினும், அந்த அறிவுரையைப் பொருத்தி பயன்படுத்துவது எப்போதும் எளிதாக இருப்பதில்லை. நியாயமற்ற புண்படுத்துதலின் வேதனையை உணராதவர்களாக நம்மில் யார் இருக்கிறோம்? உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவர் ஓர் இரகசியத்தை ஒருவேளை வெளிப்படுத்திவிட்டிருக்கலாம். (நீதிமொழிகள் 11:13) நெருங்கிய நண்பர் ஒருவரின் சிந்தனையற்ற சொற்கள் “பட்டயக்குத்துகள்போல்” உங்களை ஒருவேளை தாக்கியிருக்கலாம். (நீதிமொழிகள் 12:18) நீங்கள் நேசித்த அல்லது நம்பின ஒருவர் உங்களை தவறாக நடத்தினது, உங்கள் உள்ளத்தில் ஆழமான காயங்களை உண்டாக்கியிருக்கலாம். இத்தகைய நிகழ்ச்சிகள் ஏற்படுகையில், கோபப்படுவது நம்முடைய இயல்பான பிரதிபலிப்பாக இருக்கலாம். தீங்கிழைத்தவரிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளும்படியாக, கூடுமானால் முற்றிலுமாகவே அவரைத் தவிர்க்கும்படியாக மனம் சாய்வோராய் நாம் ஒருவேளை இருக்கலாம். அவரை மன்னிப்பது, நமக்குத் தீங்கிழைத்ததற்கு தண்டனையில்லாமல் அவர் தப்பிப்போய் விடுவதாகத் தோன்றலாம். எனினும், மனக்கசப்பை மனதில் பேணி வைப்பதால், நமக்குநாமே தீங்கிழைத்துக்கொள்கிறோம்.
3 ஆகையால், “ஏழெழுபதுதரம்” மன்னிக்கும்படி இயேசு நமக்கு கற்பிக்கிறார். நிச்சயமாகவே, அவருடைய போதகங்கள் நமக்கு ஒருபோதும் தீங்கிழைப்பதில்லை; அவர் போதித்தவை எல்லாம், ‘பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதிக்கிறவராகிய’ யெகோவாவிடமிருந்து வந்தன. (ஏசாயா 48:17; யோவான் 7:16, 17) மற்றவர்களை மன்னிப்பது, தர்க்கரீதியாக, நம்முடைய மிகச் சிறந்த நன்மைக்கானதாகவே இருக்க வேண்டும். நாம் ஏன் மன்னிக்க வேண்டும், எவ்வாறு மன்னிக்கலாம் என்பதை ஆலோசிப்பதற்கு முன்பாக, மன்னிப்பது என்பது எது என்றும், எதுவல்ல என்றும் முதலாவதாகத் தெளிவுபடுத்திக்கொள்வது உதவியாக இருக்கலாம். மன்னிப்பைப் பற்றிய நம் கருத்து, மற்றவர்கள் நமக்குத் தீங்குசெய்கையில் மன்னிப்பதற்கு இருக்கும் நம்முடைய திறமையின்பேரில் ஓரளவு சார்ந்திருக்கலாம்.
4. மற்றவர்களை மன்னிப்பது எதைக் குறிப்பதில்லை, ஆனால் மன்னிப்பு என்பது எவ்வாறு விளக்கப்படுகிறது?
4 தனிப்பட நமக்குச் செய்யப்பட்ட தீங்குகளை மற்றவர்களுக்கு மன்னிப்பது, அவர்கள் செய்திருப்பதை நாம் அற்பமாய் எண்ணுகிறோம் அல்லது அதன் வினைமையைக் குறைக்கிறோம் என்பதை அர்த்தப்படுத்துகிறதில்லை; மற்றவர்கள் நம் பேரில் நியாயமற்ற சலுகை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதையும் குறிப்பதில்லை. யெகோவா நம்மை மன்னிக்கையில், நிச்சயமாகவே, அவர் நம் பாவங்களை அற்பமாகக் கருதுகிறதில்லை. பாவிகளான மனிதர்கள், தம்முடைய இரக்கத்தை, தகா முறையில் நடப்பதற்கு அனுகூலப்படுத்திக்கொள்ள அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். (எபிரெயர் 10:29) “வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை” (ஆங்கிலம்) புத்தகத்தில், மன்னிப்பது, “தீங்கு செய்தவனை மன்னித்துவிடும் செயல்; அவன் செய்த தீங்கின் காரணமாக அவனிடம் மனக்கசப்புடன் இருப்பதை விட்டுவிட்டு, ஈடு செய்யும்படி கேட்பதை எல்லாம் விட்டுவிடுதல்.” (தொகுதி 1, பக்கம் 861)b மற்றவர்களை மன்னிப்பதற்கான நல்ல காரணங்களை பைபிள் நமக்கு அளிக்கிறது.
ஏன் மற்றவர்களை மன்னிக்க வேண்டும்?
5. மற்றவர்களை மன்னிப்பதற்கு என்ன முக்கியமான காரணம் எபேசியர் 5:1-ல் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது?
5 மற்றவர்களை மன்னிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் எபேசியர் 5:1-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது: ‘ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்.’ என்ன வகையில் நாம் ‘தேவனை பின்பற்றுகிறவர்களாக’ ஆக வேண்டும்? “ஆதலால்” என்ற வார்த்தை இந்தக் கூற்றை முந்தின வசனத்தோடு இணைக்கிறது, அது சொல்வதாவது: ‘ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு [“தாராளமாய்,” NW] மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் [“தாராளமாய்,” NW] மன்னியுங்கள்.’ (எபேசியர் 4:32) ஆம், மன்னிக்கும்படி நேரிடுகையில், நாம் கடவுளின் மாதிரியைப் பின்பற்றுவோராக வேண்டும். ஒரு சிறு பையன், தன் தகப்பனைப் போலவே இருப்பதற்கு முயற்சி செய்வதைப்போல், நாம், யெகோவா அருமையாய் நேசிக்கிற பிள்ளைகளாக, மன்னிக்கிற நம்முடைய பரலோக தகப்பனைப்போல் ஆகும்படி விரும்ப வேண்டும். பரலோகங்களிலிருந்து கீழ் நோக்கி, பூமிக்குரிய தம்முடைய பிள்ளைகள், ஒருவருக்கொருவர் மன்னிப்பதால் தம்மைப் போன்று இருக்கும்படி முயற்சி செய்வதைக் காண்பது அவருடைய இருதயத்தை எவ்வளவாய் மகிழ்விக்கும்!—லூக்கா 6:35, 36; மத்தேயு 5:44-48-ஐ ஒப்பிடுக.
6. எவ்வகையில் யெகோவா அருளும் மன்னிப்புக்கும் நம்முடைய மன்னிப்புக்கும் இடையே மிகப் பெரும் வேறுபாடு உள்ளது?
6 உண்மைதான், யெகோவா மன்னிப்பதைப் போன்ற பரிபூரண கருத்தில் நாம் ஒருபோதும் மன்னிக்க முடியாது. ஆனால், நாம் ஏன் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் என்பதற்கு அது மேலும் அதிகமான காரணமாய் இருக்கிறது. கவனியுங்கள்: யெகோவா அருளும் மன்னிப்புக்கும் நம்முடைய மன்னிப்புக்கும் இடையே மிகப் பெரும் வேறுபாடு உள்ளது. (ஏசாயா 55:7-9) நமக்கு விரோதமாக பாவம் செய்தவர்களை நாம் மன்னிக்கையில், சீக்கிரத்திலோ பிந்தியோ அவர்கள் நம்மை மன்னிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்ற அறிவின் அடிப்படையில் செய்யப்படலாம். மனிதரைக் குறித்ததில், இது, பாவிகள் பாவிகளை மன்னிக்கும் காரியமாக உள்ளது. எனினும் யெகோவாவைக் குறித்ததில், மன்னிப்பது எப்போதும் ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. அவர் நம்மை மன்னிக்கிறார், ஆனால் நாம் ஒருபோதும் அவரை மன்னிக்கவேண்டிய அவசியம் இருப்பதில்லை. பாவம் செய்யாதவராகிய யெகோவா, அவ்வளவு அன்புடனும் முற்றிலும் நம்மை மன்னிக்க முடியும் என்றால், பாவமுள்ள மனிதராகிய நாம் ஒருவருக்கொருவர் மன்னிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமல்லவா?—மத்தேயு 6:12.
7. இரக்கம் காட்ட காரணமிருக்கையில், மற்றவர்களை மன்னிக்க நாம் மறுத்தால், யெகோவாவிடமாக இருக்கும் நம்முடைய சொந்த உறவை அது எவ்வாறு எதிர்மாறாக பாதிக்கலாம்?
7 இன்னும் அதிக முக்கியமாக, இரக்கம் காட்ட காரணமிருக்கையில் ஆதாரம் இருக்கையில் மற்றவர்களை மன்னிக்க நாம் மறுத்தால், கடவுளிடமாக இருக்கும் நம் சொந்த உறவைத்தானே அது எதிர்மாறாக பாதிக்கலாம். ஒருவருக்கொருவர் மன்னிக்கும்படி யெகோவா நம்மை வெறுமனேக் கேட்பதில்லை; அவ்வாறு நாம் செய்யும்படி அவர் எதிர்பார்க்கிறார். வேதவசனங்களின்படி, மன்னிப்போராக நாம் இருப்பதற்கான ஓரளவு உள்நோக்கம், யெகோவா நம்மை மன்னிக்கும்படி எதிர்பார்ப்பதாலும் அல்லது அவர் நமக்கு மன்னித்திருப்பதினாலும் ஆகும். (மத்தேயு 6:14; மாற்கு 11:25; எபேசியர் 4:32; 1 யோவான் 4:11) அப்படியானால், மன்னிப்பதற்கு நல்ல காரணம் இருக்கையில், மற்றவர்களை மன்னிக்க நாம் மனமற்றிருந்தால், யெகோவா நம்மை மன்னிக்கும்படி நாம் உண்மையில் எதிர்பார்க்க முடியுமா?—மத்தேயு 18:21-35.
8. மன்னிப்போராக இருப்பது ஏன் நம்முடைய மிகச் சிறந்த அக்கறைகளுக்கு ஏதுவாக பலன் தருகிறது?
8 யெகோவா, தம்முடைய ஜனத்திற்கு, “அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை” போதிக்கிறார். (1 இராஜாக்கள் 8:36) ஒருவருக்கொருவர் மன்னிக்கும்படி அவர் நமக்கு அறிவுறுத்துகையில், நம்முடைய மிகச் சிறந்த அக்கறைகளை தம் இருதயத்தில் வைத்திருக்கிறார் என்ற திடநம்பிக்கையுடன் நாம் இருக்கலாம். “கோபத்திற்கு இடங்கொடுங்கள்” என்று, பைபிள் நல்ல காரணத்துடனேயே நமக்கு சொல்கிறது. (ரோமர் 12:19, NW) மனக்கசப்பானது, வாழ்க்கையில் சுமப்பதற்கு கனத்த ஒரு பாரமாக உள்ளது. அதை நாம் மனதில் பேணி வைக்கையில், அது நம்முடைய சிந்தனைகளை ஆட்கொண்டு, மனசமாதானத்தைக் கெடுத்து நம்முடைய சந்தோஷத்தை அகற்றி விடுகிறது. நீடித்திருக்கும் கோபம், பொறாமையைப் போல், நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். (நீதிமொழிகள் 14:30) இவ்வாறெல்லாம் நாம் பாதிக்கப்பட்டிருக்கையில், நம்மைப் புண்படுத்தினவர் நம் மனவேதனையைப் பற்றி ஒன்றும் அறியாதவராக இருக்கலாம்! மற்றவர்களின் நன்மைக்காக மட்டுமல்லாமல், நம்முடைய சொந்த நன்மைக்காகவும்கூட நாம் மற்றவர்களை வெளிப்படையாக மன்னிக்க வேண்டும் என்பதை நம்முடைய அன்புள்ள சிருஷ்டிகர் அறிந்திருக்கிறார். மன்னிக்கும்படியான பைபிளின் அறிவுரை, ‘நடப்பதற்கான நல்வழியாக’ நிச்சயமாகவே இருக்கிறது.
“தொடர்ந்து ஒருவரையொருவர் பொறுத்து” நடவுங்கள்
9, 10. (அ) என்ன வகையான சந்தர்ப்பங்கள் விதிமுறையான மன்னிப்பை பெரும்பாலும் தேவைப்படுத்துகிறதில்லை? (ஆ) “தொடர்ந்து ஒருவரையொருவர் பொறுத்து” நடவுங்கள் என்ற சொற்றொடரால் என்ன குறிப்பிடப்படுகிறது?
9 உடல் காயங்கள் சிறிய வெட்டுகளிலிருந்து ஆழமான காயங்கள் வரை ஏற்படலாம்; எல்லாம் ஒரே அளவான கவனிப்பைத் தேவைப்படுத்துகிறதில்லை. புண்படுத்தப்பட்ட உணர்ச்சிகளைக் குறித்ததிலும் அவ்வாறே உள்ளது—சில புண்படுத்துதல்கள் மற்றவற்றைப் பார்க்கிலும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மற்றவர்களிடமான நம்முடைய உறவுகளில் நமக்கு நேரிடும் சிறு தீங்குகள் ஒவ்வொன்றையும் பெரிதாக எடுத்துக்கொண்டு விவாதிப்பது உண்மையில் தேவைதானா? ஏதோ சிறிய கோபமூட்டுதல்கள், அவமதிப்புகள், நச்சரிப்புகள் ஆகியவை வாழ்க்கையின் பாகமாக உள்ளன; விதிமுறையான மன்னிப்பை பெரும்பாலும் இவை தேவைப்படுத்துகிறதில்லை. ஒவ்வொரு அற்ப மனசங்கடத்திற்காகவும் மற்றவர்களைத் தவிர்த்து ஒதுக்கி, அவர்களை மறுபடியும் மரியாதையுடன் நடத்துவதற்கு முன்பாக, அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தும் ஒருவராக நாம் அறியப்பட்டிருந்தால், நம்மோடு மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி, அல்லது அதிக தொடர்பு இல்லாமல் பெரும்பாலும் தூரமாய் விலகி இருக்கும்படி அவர்களை வற்புறுத்துவோராக நாம் இருப்போம்!
10 மாறாக, “இணக்கமுள்ளவர்களாக இருப்பதன் நற்பெயரை உடையோராக” இருப்பது அதைப் பார்க்கிலும் மிக மேலானது. (பிலிப்பியர் 4:5, ஃபிலிப்ஸ்) தோளோடுதோள் சேர்த்து சேவிக்கும் அபூரண சிருஷ்டிகளாக, அவ்வப்போது நம்முடைய சகோதரர்கள் நமக்கு இடைஞ்சல் உண்டாக்கலாம் என்றும், நாமும்கூட அவ்வாறே அவர்களுக்குச் செய்ய நேரிடலாம் என்றும் நாம் நியாயமாகவே எதிர்பார்க்கலாம். கொலோசெயர் 3:13 (NW) நமக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “தொடர்ந்து ஒருவரையொருவர் பொறுத்து” நடவுங்கள். மற்றவர்களோடு பொறுமையுடன் இருக்கும்படி, குறிப்பிடுவதானது, அவர்களில் நாம் விரும்பாத காரியங்களை அல்லது நமக்குக் கோபத்தை உண்டாக்கும் பண்புகளை சகித்துக்கொள்வதை உட்படுத்துகிறது. இத்தகைய பொறுமையும், தன்னுணர்ச்சி கட்டுப்பாடும் மற்றவர்களோடு தொடர்பு கொள்கையில் நமக்கு ஏற்படும் சிறுசிறு மனத்தாங்கல்களையும் புண்படுத்தல்களையும்—சபையின் சமாதானத்தைக் கெடுக்காமல்—சமாளிக்க நமக்கு உதவி செய்யலாம்.—1 கொரிந்தியர் 16:14.
காயங்கள் மேலும் ஆழமாக இருக்கையில்
11. மற்றவர்கள் நமக்கு விரோதமாக பாவம் செய்கையில், அவர்களை மன்னிப்பதற்கு எது நமக்கு உதவி செய்யலாம்?
11 எனினும், மற்றவர்கள் நமக்கு விரோதமாகப் பாவம் செய்து, நம்மை அதிகமாய் புண்படுத்திவிட்டால் என்ன செய்வது? அந்தப் பாவம் மிக அதிக வினைமையானது அல்ல என்றால், “ஒருவருக்கொருவர் தாராளமாய் மன்னியுங்கள்” என்ற பைபிளின் அறிவுரையை பொருத்திப் பயன்படுத்துவது நமக்கு ஒருவேளை கடினமாக இராது. (எபேசியர் 4:32) மன்னிப்பதற்கு இவ்வாறு ஆயத்தமாக இருப்பது, தேவாவியால் ஏவப்பட்ட பேதுருவின் இவ்வார்த்தைகளுக்கு இசைவாக இருக்கிறது: “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.” (1 பேதுரு 4:8) நாமும்கூட பாவிகள் என்பதை மனதில் வைப்பது, மற்றவர்களின் மீறுதல்களை சகிக்க நமக்கு உதவி செய்கிறது. இவ்வாறு நாம் மன்னிக்கையில், நம்முடைய மனக்கசப்பை பேணி வைப்பதற்கு மாறாக அது நம்மை விட்டு விலகும்படி செய்கிறோம். இதன் பலனாக, நம்மை புண்படுத்தினவரிடம் நம் உறவு, நிரந்தரமாக எந்தக் கேடும் அனுபவியாதிருக்கலாம்; மேலும், சபையில் நிலவும் அருமையான சமாதானத்தைப் பாதுகாக்கவும் நாம் உதவி செய்கிறோம். (ரோமர் 14:19) அவர் இழைத்த தீங்கைப் பற்றிய நினைவும், காலப்போக்கில் மறைந்து விடலாம்.
12. (அ) நம்மை ஆழமாய்ப் புண்படுத்தியிருக்கிற ஒருவரை மன்னிப்பதற்கு என்ன முன்முயற்சியை நாம் எடுக்க வேண்டியதாக இருக்கலாம்? (ஆ) பிரச்சினைகளை நாம் விரைவில் தீர்க்க வேண்டும் என்று எபேசியர் 4:26-ல் உள்ள வார்த்தைகள் எவ்வாறு காட்டுகின்றன?
12 எனினும், மேலுமதிக வினைமையான முறையில் எவரேனும் நமக்கு விரோதமாக பாவம் செய்து, நம்மை மிக ஆழமாய் புண்படுத்தினால் என்ன செய்வது? உதாரணமாக, நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரிடம் நீங்கள் நம்பி இரகசியமாய்ச் சொன்ன, மிகவும் தனிப்பட்ட காரியங்கள் சிலவற்றை அவர் வெளிப்படுத்தி விட்டிருக்கலாம். நீங்கள் உள்ளாழத்தில் புண்பட்டவர்களாகவும், சங்கடமடைந்தவர்களாகவும், வஞ்சிக்கப்பட்டவர்களாகவும் உணருகிறீர்கள். அதை மனதை விட்டு அகற்ற முயற்சி செய்கிறீர்கள், ஆனால் அந்தக் காரியம் மனதைவிட்டு அகலுவதில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், அந்தப் பிரச்சினையைத் தீர்க்க நீங்கள் ஏதாவது முன்முயற்சி எடுக்க வேண்டியதாக இருக்கும், புண்படுத்தினவரிடம் பேசுவதன்மூலம் அவ்வாறு செய்ய வேண்டியதாக ஒருவேளை இருக்கலாம். நிலைமை மோசமாவதற்கு முன்பாக இதைச் செய்வது ஞானமாக உள்ளது. பவுல் இவ்வாறு நமக்கு அறிவுரை கூறினார்: “நீங்கள் கோபங்கொண்டாலும் [அதாவது, வன்மத்தை மனதில் பேணி வைத்துக்கொண்டிருப்பதால் அல்லது கோபத்தில் செயல்படுவதால்] பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.” (எபேசியர் 4:26) யூதர்களுக்கு, சூரிய அஸ்தமானம் ஒரு நாளின் முடிவையும் புதிய நாளின் தொடக்கத்தையும் குறித்த இந்த உண்மையைக் கவனிக்கையில், பவுலின் அறிவுரை மேலுமதிக சக்திவாய்ந்ததாக உள்ளது. ஆகையால், அறிவுரை இதுவே: அந்தக் காரியத்தை விரைவில் சரிசெய்யுங்கள்!—மத்தேயு 5:23, 24.
13. நம்மைப் புண்படுத்தின ஒருவரை அணுகுகையில், நம்முடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும், அதை நிறைவேற்றுவதற்கு என்ன ஆலோசனைகள் நமக்கு உதவி செய்யலாம்?
13 தீங்கு செய்தவரை நீங்கள் எவ்வாறு அணுக வேண்டும்? “சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்” என்று 1 பேதுரு 3:11-ல் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், கோபத்தை வெளிப்படுத்துவது அல்ல, உங்கள் சகோதரனுடன் சமாதானம் செய்துகொள்வதே உங்கள் நோக்கமாக இருக்கிறது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, கடுமையான வார்த்தைகளையும் சைகைகளையும் தவிர்ப்பது மிக நல்லது; இவை, அந்த மற்றவரிடமிருந்தும் அதைப்போன்ற பிரதிபலிப்பை வருவிக்கக்கூடும். (நீதிமொழிகள் 15:18; 29:11) அதோடுகூட, “நீர் எப்பொழுதும் . . . !” அல்லது, “நீர் ஒருபோதும் . . . !” என்றவற்றைப் போன்ற மிகைப்படுத்தும் கூற்றுகளைச் சொல்வதைத் தவிருங்கள். மிகைப்படுத்தப்பட்ட இத்தகைய குறிப்புகள், அந்த நபர் தன்னை தற்காப்பு செய்துகொள்ள எதிர்க்கிறவராகும்படியே செய்விக்கும். அதற்கு மாறாக, உங்களை வெகு ஆழமாய் புண்படுத்தியிருக்கிற ஒரு காரியத்தைத் தீர்ப்பதற்கே நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை, உங்கள் குரலின் தொனியும் முகபாவமும் தெரிவிக்கட்டும். நடந்ததைப் பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதைத் தெளிவாக விளக்குங்கள். அந்த நபர் தன் செயல்களுக்கு விளக்கம் கூற வாய்ப்பளியுங்கள். அவர் சொல்வதை செவிகொடுத்து கேளுங்கள். (யாக்கோபு 1:19) அது என்ன நன்மை செய்யும்? நீதிமொழிகள் 19:11 இவ்வாறு விளக்குகிறது: “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.” அந்த தீங்கிழைத்தவரின் உணர்ச்சிகளையும் அவருடைய செயல்களுக்குரிய காரணங்களையும் நாம் புரிந்துகொள்வது, அவரிடமாக நமக்கு ஏற்படும் எதிர்மறையான எண்ணங்களையும் நினைவுகளையும் அகற்றிவிடக்கூடும். சமாதானமாகி அந்த மனநிலையைக் காத்துக்கொள்ளும் நோக்கத்துடன் அந்தச் சூழ்நிலையை நாம் அணுகும்போது, தவறாகப் புரிந்துகொண்ட எதுவும் தீர்க்கப்பட்டு, பொருத்தமான வருத்தம் தெரிவிக்கப்பட்டு, மன்னிப்பளிக்கப்படுவதற்கு பெரும்பாலும் அது வழிநடத்தலாம்.
14. மற்றவர்களை நாம் மன்னிக்கையில், என்ன அர்த்தத்தில் நாம் மறந்துவிட வேண்டும்?
14 மற்றவர்களை மன்னிப்பதானது, நடந்ததை நாம் உண்மையில் மறந்துவிட வேண்டும் என்று குறிக்கிறதா? முந்தின கட்டுரையில் நாம் ஆலோசித்ததன் பிரகாரம், இதைப் பற்றியதில் யெகோவாவின் சொந்த முன்மாதிரியை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். யெகோவா நம்முடைய பாவங்களை மறந்துவிடுகிறார் என்று பைபிள் சொல்கையில், அவற்றை திரும்ப நினைவுபடுத்திக்கொள்ள முடியாதவராக இருக்கிறார் என்று இது அர்த்தப்படுகிறதில்லை. (ஏசாயா 43:25) மாறாக, ஒரு முறை அவர் மன்னித்து விடுகையில், அந்தப் பாவங்களுக்காக எதிர்காலத்தில் மறுபடியும் நம்மைத் தண்டிப்பதில்லை என்ற அர்த்தத்திலேயே அவர் மறந்துவிடுகிறார். (எசேக்கியேல் 33:14-16) அதைப்போலவே, உடன் மனிதருக்கு மன்னிப்பது, அவர்கள் செய்தது திரும்ப நம் நினைவுக்கே வராது என்று அர்த்தப்படுகிறதில்லை. எனினும், தீங்கு செய்தவருக்கு விரோதமாக அதை நாம் மனதில் பேணி வைக்காமல் அல்லது எதிர்காலத்தில் அதை மறுபடியும் கவனத்திற்குக் கொண்டுவராமல் இருக்கும் கருத்தில் நாம் மறந்துவிட முடியும். அந்தக் காரியம் இவ்வாறு தீர்க்கப்பட்ட பின்பு, அதைப் பற்றி வீண்பேச்சு பேசிக்கொண்டிருப்பது சரியாக இராது; தீங்கு செய்தவரை சபைக்குப் புறம்பாக்கப்பட்டவரைப்போல் நடத்தி, முற்றிலுமாகத் தவிர்ப்பதும் அன்புள்ள காரியமாக இராது. (நீதிமொழிகள் 17:9) உண்மைதான், அவரிடம் நம் உறவு மீண்டும் சரியாவதற்கு காலம் எடுக்கலாம்; முன்பு இருந்ததைப்போன்ற அதே நெருங்கிய உறவை நாம் ஒருவேளை அனுபவியாதிருக்கலாம். ஆனால், நம்முடைய கிறிஸ்தவ சகோதரராக அவரை நாம் இன்னும் நேசிக்கிறோம் அதோடு சமாதான உறவுகளைக் காத்துக்கொள்வதற்காக நம்மாலான மிகச் சிறந்ததை செய்கிறோம்.—லூக்கா 17:3-ஐ ஒப்பிடுக.
மன்னிக்கவே இயலாது என்பதுபோல் தோன்றுகையில்
15, 16. (அ) தவறு செய்துவிட்டு மனந்திரும்பாமல் இருக்கிற ஒருவரை மன்னிக்கும்படியான தேவை கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறதா? (ஆ) சங்கீதம் 37:8-ல் காணப்படுகிற பைபிளின் அறிவுரையை நாம் எவ்வாறு பொருத்தி பயன்படுத்தலாம்?
15 மிக ஆழமான காயங்களை உண்டுபண்ணும் வகையில் மற்றவர்கள் நமக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டு, தங்கள் பங்கில், அந்தப் பாவத்தை ஒப்புக்கொள்ளவோ, மனந்திரும்பவோ, மன்னிப்பு கேட்கவோ மனம் இல்லாதவர்களாய் இருந்தால், என்ன செய்வது? (நீதிமொழிகள் 28:13) மனந்திரும்பாதவர்களாய்க் கடினப்பட்டுப்போன பாவிகளை யெகோவா மன்னிப்பதில்லை என்று வேதவசனங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. (எபிரெயர் 6:4-6; 10:26, 27) நம்மைப் பற்றியதென்ன? வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகத்தில் இவ்வாறு சொல்லியிருக்கிறது: “மனந்திரும்பாமல், கெட்ட எண்ணத்துடன், வேண்டுமென்றே பாவத்தை பழக்கமாய்ச் செய்து வருவோரை கிறிஸ்தவர்கள் மன்னிக்கத் தேவையில்லை. அத்தகையோர் கடவுளுடைய பகைஞராக ஆகின்றனர்.” (தொகுதி 1, பக்கம் 862) மட்டுக்குமீறிய அநியாயமான, வெறுக்கத்தக்க, அல்லது கடுங்கொடிய, அடாத முறையில் நடத்தப்பட்டிருக்கிற எந்தக் கிறிஸ்தவரும், தீங்கு செய்து மனந்திரும்பாமல் இருக்கும் ஒருவரை மன்னிக்கும்படி, அல்லது குற்றத்தைப் பொருட்படுத்தாமல் விடும்படி வற்புறுத்தப்படுபவராக உணரக்கூடாது.—சங்கீதம் 139:21, 22.
16 கொடூரமாய்த் தவறான விதத்தில் நடத்தப்பட்டிருப்பவர்கள் புண்படுத்தப்பட்டவர்களாயும் கோபமாயும் உணரக்கூடும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. எனினும், கோபத்தையும் மனக்கசப்பையும் பேணி வைத்திருப்பது நமக்கே மிகத் தீங்கானது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தீங்கு செய்தவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் அல்லது மன்னிப்பு கேட்பாரென நாம் காத்திருந்து, அது ஒருபோதும் நடவாமலிருப்பது, நம்மை மேலும் மேலும் அதிகமாக மனசங்கடமடையவே செய்யலாம். அநியாயம் இழைக்கப்பட்டதன் மன வேதனையால் பீடிக்கப்பட்டிருப்பது, நமக்குள் கோபம் கொதித்துக் குமுறும்படி செய்யக்கூடும்; இது நம்முடைய ஆவிக்குரிய, உணர்ச்சி சம்பந்த, மற்றும் உடலுக்குரிய ஆரோக்கியத்தின்பேரில் பாழ்ப்படுத்தும் பாதிப்புகளை உண்டாக்குவதாக இருக்கலாம். உண்மையில், நமக்குத் தீங்கு செய்தவர், தொடர்ந்து தீங்கிழைத்துக்கொண்டிருக்கும்படி நாம் அனுமதிப்போராகவே இருக்கிறோம். ஞானமாக, பைபிள் இவ்வாறு அறிவுரை அளிக்கிறது: “கோபத்தை விலக்கு, உக்கிரத்தை விட்டுவிடு.” (சங்கீதம் 37:8, தி.மொ.) ஆகையால் கிறிஸ்தவர்கள் சிலர், காலப்போக்கில் மனக்கசப்பை மனதில் பேணி வைப்பதை விட்டுவிடும் கருத்தில் மன்னித்துவிடுவதற்குத் தீர்மானிக்கக் கூடியோராகக் கண்டிருக்கின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட தீங்கின் வினைமையை அல்ல, ஆனால் கோபத்தால் ஆட்கொள்ளப்படுவதைத் தவிர்ப்பதற்கே அவ்வாறு செய்திருக்கின்றனர். நீதியுள்ள கடவுளின் கரங்களில் அந்தக் காரியத்தை முற்றிலுமாக விட்டுவிடுவதால், மிகுந்த மன நிம்மதியை அவர்கள் அனுபவித்து, தங்கள் வாழ்க்கையைத் தொடர கூடியவர்களாக இருந்திருக்கின்றனர்.—சங்கீதம் 37:28.
17. வெளிப்படுத்துதல் 21:4-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிற யெகோவாவின் வாக்குறுதி என்ன ஆறுதலான நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது?
17 வெகு ஆழமாகப் புண்படுத்தப்பட்டிருக்கையில், தடமில்லாமல் முற்றிலுமாக அதை நம் மனதிலிருந்து அழித்துப் போட இயலாதவர்களாக நாம் இருக்கலாம்; இந்தக் காரிய ஒழுங்குமுறைவரை அவ்வாறிருக்கலாம். ஆனால், ஒரு புதிய உலகத்தைக் கொண்டுவரும் வாக்குறுதியை யெகோவா அளிக்கிறார், அதில் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:4) இப்போது நம்முடைய இருதயங்களுக்கு பாரமாயிருந்தாலும், அந்தக் காலத்தில் நாம் நினைவில் வைத்திருக்கும் எதுவும் உள்ளாழமான புண்படுத்துதலை, அல்லது வேதனையை நமக்கு உண்டாக்காது.—ஏசாயா 65:17, 18.
18. (அ) நம்முடைய சதோதர சகோதரிகளுடனான தொடர்புகளில் மன்னிப்போராக இருப்பது ஏன் தேவைப்படுகிறது? (ஆ) மற்றவர்கள் நமக்கு விரோதமாக பாவம் செய்கையில், என்ன கருத்தில் நாம் மன்னித்து மறந்துவிட முடியும்? (இ) இது எவ்வாறு நமக்கு நன்மையளிக்கிறது?
18 இதற்கிடையில், அபூரணராயிருக்கும் சகோதர சகோதரிகளாக, பாவமுள்ள மனிதராக, நாம் ஒன்றுசேர்ந்து வாழவும் உழைக்கவும் வேண்டும். நாம் எல்லாரும் தவறுகள் செய்கிறோம். அவ்வப்போது, ஒருவருக்கொருவர் மனசங்கடப்படுத்துகிறோம், ஒருவருக்கொருவர் புண்படுத்தியும்விடுகிறோம். மற்றவர்களை “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும்” நாம் மன்னிக்கத் தேவைப்படும் என்பதை இயேசு நன்றாய் அறிந்திருந்தார்! (மத்தேயு 18:22) உண்மைதான், யெகோவா மன்னிப்பதுபோல் நாம் அவ்வளவு முழுமையாக மன்னிக்க முடியாது. எனினும், நம்முடைய சகோதரர்கள் நமக்கு விரோதமாக பாவம் செய்கையில், பெரும்பான்மையான காரியங்களில், மனக்கசப்பை அடக்கி மேற்கொள்ளும் கருத்தில் நாம் மன்னிக்கலாம். மேலும் அந்தக் காரியத்தை எதிர்காலத்தில் என்றென்றும் அவர்களுக்கு விரோதமாக மனதில் பேணி வைக்காதிருக்கும் கருத்தில் நாம் மறந்துவிடவும் முடியும். இவ்வாறு நாம் மன்னித்து மறந்துவிடுகையில், சபையின் சமாதானத்தை மட்டுமல்ல, நம்முடைய சொந்த மன மற்றும் இருதய சமாதானத்தையும் பாதுகாப்பதற்கு உதவி செய்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய அன்பான தேவனாகிய யெகோவா மட்டுமே தரும் சமாதானத்தை நாம் அனுபவித்து மகிழ்வோம்—பிலிப்பியர் 4:7.
[அடிக்குறிப்புகள்]
a பாபிலோனியன் டால்மூட்டின் படி ரபீக்களின் ஒரு பாரம்பரியம் இவ்வாறு கூறியது: “ஒரு மனிதன் ஒரே குற்றத்தை திரும்பத்திரும்ப செய்தால், முதலாவது, இரண்டாவது, மூன்றாவது தடவை அவன் மன்னிக்கப்படுவான், நான்காவது தடவை அவன் மன்னிக்கப்படுவதில்லை.” (யோமா 86பி) இது ஆமோஸ் 1:3; 2:6; யோபு 33:30 போன்ற வசனங்களைத் தவறாகப் புரிந்துகொண்டதன்பேரில் ஓரளவு சார்ந்திருந்தது.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்தது.
மறுபார்வைக்கான கேள்விகள்
◻ மற்றவர்களை மன்னிக்க மனமுள்ளோராக நாம் ஏன் இருக்க வேண்டும்?
◻ என்ன வகையான சந்தர்ப்பங்கள், நாம் “தொடர்ந்து ஒருவரையொருவர் பொறுத்து” வரும்படி தேவைப்படுத்துகின்றன
◻ மற்றவர்களுடைய பாவங்களால் நாம் உள்ளாழத்தில் புண்படுத்தப்பட்டிருக்கையில், அந்தக் காரியத்தை சமாதானமாய்த் தீர்ப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?
◻ நாம் மற்றவர்களை மன்னிக்கையில், என்ன கருத்தில் மறந்துவிட வேண்டும்?
[பக்கம் 16-ன் படம்]
நாம் மனக்கசப்பை பேணி வைக்கையில். நம்மைப் புண்படுத்தினவர் நம் மனவேதனையைப் பற்றி ஒன்றும் அறியாதவராக இருக்கலாம்
[பக்கம் 17-ன் படம்]
சமாதானம் செய்துகொள்ளும்படி மற்றவர்களை நீங்கள் அணுகுகையில், தவறாக புரிந்துகொள்ளப்பட்டவை எளிதில் தீர்க்கப்பட்டு சரிசெய்யப்படலாம்