மனிதன் எப்படி கடவுளின் சாயலில் இருக்க முடியும்?
“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” இவ்வாறு ஏவப்பட்டு எழுதப்பட்ட பதிவு சொல்கிறது; ஆனால் இது எதை அர்த்தப்படுத்துகிறது? முதல் மனுஷனும் மனுஷியும் எவ்வாறு கடவுளுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டனர்?—ஆதியாகமம் 1:27.
அவர்கள் சரீரப்பிரகாரமாக கடவுளைப்போல் இருந்தார்களா? இல்லை, அது கூடாத காரியம். மனிதன் மனிதத்தன்மையுடன், மாம்சப்பிரகாரமாக, பூமியில் வாழும்படியாக உருவமைக்கப்பட்டான். கடவுள் ஆவியாக இருக்கிறார்; எந்த மனிதனும் அணுகக்கூட முடியாத, கற்பனைசெய்து பார்க்கமுடியாத பரலோக மகிமையில் வாழ்கிறார். (யாத்திராகமம் 33:18-20; 1 கொரிந்தியர் 15:50) அப்படியானால், மனிதன் எப்படி கடவுளுடைய சாயலில் உண்டாக்கப்பட்டான்? கடவுளுடைய மேலோங்கி நிற்கும் பண்புகளையும்—அன்பு, நீதி, ஞானம், மற்றும் வல்லமை—இவற்றோடு மற்ற குணங்களையும் செயல்படுத்தும் திறமை மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதினாலேயே ஆகும்.
யெகோவாவின் குணங்கள்
யெகோவா தேவனின் குணங்கள் அவருடைய எல்லா சிருஷ்டிப்பிலும் பிரதிபலிக்கப்படுகின்றன; ஆனால் முதல் மானிட ஜோடியான ஆதாம் மற்றும் ஏவாளிடம் அவருடைய செயல் தொடர்புகளில் அவை மனதில் பதியத்தக்கவிதத்தில் வெளிக்காட்டப்பட்டன. (ரோமர் 1:20) அவர் பூமியை மனிதன் வாழ்வதற்கு மிகவும் ஏற்றதாக சிருஷ்டித்ததிலிருந்து அவருடைய அன்பு காணப்பட்டது. யெகோவா, மனிதனுக்காக ஒரு பரிபூரண மனைவியை, அவனுக்குத் துணையாகவும் அவனுடைய பிள்ளைகளுக்குத் தாயாகவும் சிருஷ்டித்தார். அவர்கள் இருவரையும் ஓர் அழகிய தோட்டத்தில் வைத்து, தொடர்ந்து வாழ்வதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் தேவையான எல்லா காரியங்களையும் மிகுதியாக அவர்களுக்குக் கொடுத்தார். எல்லாவற்றிலும் மிக அற்புதகரமாக, என்றென்றுமாக வாழ்வதற்கான வாய்ப்பையும் கடவுள் அவர்களுக்குக் கொடுத்தார்.—ஆதியாகமம் 2:7-9, 15-24.
முதல் மானிட ஜோடியைச் சோதித்ததிலிருந்து கடவுளுடைய ஞானம் காணப்பட்டது. யெகோவாவுடைய சர்வலோக குடும்பத்தின் அங்கத்தினர்களாக அவர்கள் நிலைத்திருக்க வேண்டுமானால், மனிதகுலத்தின் பெற்றோராக என்றென்றுமாக அவர்கள் வாழ வேண்டுமானால், அவர்கள் உண்மைத்தன்மையிலும் மெய் வணக்கத்திலும் முன்மாதிரிகளாக இருப்பது அவசியம். எனவே, ஒரு பொருத்தமான சோதனையின்கீழ், தங்களுடைய இருதயத்தின் நிலையை வெளிக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பை யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார்—அவர்கள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கக் கூடாதென சொல்லப்பட்டனர். மனிதர்களுக்காக தாம் மனதில் வைத்திருந்த அருமையான சிலாக்கியங்களை அவர்களுக்குக் கொடுக்கும் முன்பு, தம்மிடமான அவர்களுடைய கீழ்ப்படிதலையும் அன்பையும் நிரூபிப்பதற்கு அவர்களை அனுமதிப்பது யெகோவாவின் பாகத்தில் எவ்வளவு ஞானத்தைக் காட்டுகிறது!
தம்முடைய சிருஷ்டிகளில் உயர் தராதரங்களை வற்புறுத்துவதிலிருந்தும் அந்தத் தராதரங்களில் அவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலிருந்தும் கடவுளுடைய நீதி காணப்பட்டது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சரியானதைச் செய்வதற்கான எல்லா வாய்ப்பையும் அவர் கொடுத்ததிலிருந்து அது காணப்பட்டது. மேலும் அவர்கள் அதைச் செய்யத் தவறியபோது, கலகத்திற்காகக் குறிக்கப்பட்ட தண்டனையை அவர்கள் அனுபவிக்கும்படி தீர்ப்பளித்ததிலிருந்து அவருடைய நீதி காணப்பட்டது.
தம்முடைய தீர்ப்பை நிறைவேற்றியதிலிருந்து யெகோவாவின் வல்லமை காணப்பட்டது. பெரிய கலகக்காரனாகிய சாத்தான், யெகோவா ஒரு பொய்யர் என்பதாக மறைமுகமாகக் கூறியிருந்தான்; மேலும் ஏவாள் கடவுளுக்குக் கீழ்ப்படியாவிட்டால், அவளுக்குப் பெரிய காரியங்களை அளிக்க முன்வந்தான். (ஆதியாகமம் 3:1-7) ஆனால் சாத்தானால் அதை நிறைவேற்ற முடியவில்லை. ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவதிலிருந்து யெகோவாவைத் தடுக்க அவனால் முடியவில்லை; மேலும் ஆதாமிடம் சொல்லப்பட்ட கடவுளுடைய இந்த வார்த்தைகள் நிறைவேறுவதிலிருந்து தடுக்கவும் அவனால் முடியவில்லை: “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) என்றபோதிலும், யெகோவா உடனடியாக அந்த மரண தீர்ப்பை நிறைவேற்றவில்லை; இதில் அவர் மேலுமாக தம்முடைய அன்பைக் காண்பித்தார். ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைப் பிறப்பிப்பதற்குக் காலத்தை அவர் அனுமதித்தார்; அதன் மூலமாக மனிதவர்க்கத்திற்கான அவருடைய ஆதி நோக்கம் முடிவில் அடையப்படும்.—ஆதியாகமம் 1:28.
கடைசியாக, சாத்தானின் செயல்களை அழித்து, தெய்வீக அரசுரிமைக்கு எதிரான அந்த முதல் கலகத்தின் துக்ககரமான விளைவுகளைத் துடைத்தழிப்பதற்காக ஒரு வித்துவை ஏற்படுத்துவதுபற்றிய தம்முடைய வாக்குறுதியில் யெகோவா தேவனின் நீதி, அன்பு, வல்லமை, மற்றும் ஞானம் வெளிக்காட்டப்பட்டன. (ஆதியாகமம் 3:15) என்னே ஓர் அருமையான சிருஷ்டிகரை நாம் கொண்டிருக்கிறோம்!
கடவுளைப் பின்பற்றுவதற்கு முயற்சிகள்
இனிமேலும் பரிபூரணராக இல்லாதபோதிலும், மனிதர்கள் இன்னும் கடவுளுடைய குணங்களை வெளிக்காட்ட முடியும். எனவேதான், பவுல் தன்னுடைய நாளில் இருந்த கிறிஸ்தவர்களை இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: ‘நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்.’ (எபேசியர் 5:1) என்றாலும், வரலாறு முழுவதிலும் பெரும்பாலானோர் கடவுளுடைய குணங்களுக்குப் பெருத்த அவமதிப்பை வெளிக்காட்டியிருக்கின்றனர். நோவாவின் காலத்திலெல்லாம், மனிதர் அவ்வளவு மோசமாகி இருந்ததால், யெகோவா, நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் தவிர எல்லா மனிதவர்க்கத்தையும் அழிக்கும்படி தீர்மானித்தார். நோவா “தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் [நியாயவானும்] உத்தமனுமாயிருந்தான்”; மேலும் அவர் கடவுளுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதன்மூலம் கடவுளிடமான தன்னுடைய அன்பை வெளிக்காட்டினார்.a “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.” (ஆதியாகமம் 6:9, 22) நோவா தன் உடன் மனிதர்களிடம் அன்பையும், நியாயத்திடமாக தன்னுடைய பற்றையும் ‘நீதியைப் பிரசங்கித்தவராக’ இருப்பதன்மூலம் காண்பித்தார். (2 பேதுரு 2:5) கடவுளுடைய வழிநடத்துதலைப் பின்பற்றி ஒரு பெரிய பேழையைக் கட்டி, அதில் உணவைச் சேமித்து வைத்து, மிருகங்களைச் சேர்த்து, மேலும் யெகோவாவின் கட்டளைக்கேற்ப பேழைக்குள் சென்றதன்மூலம் அவர் ஞானத்தைக் காண்பித்து, தன்னுடைய உடல் பலத்தைச் சரியாகப் பயன்படுத்தினார். துன்மார்க்கமான அயலார் தன்னைக் கறைப்படுத்த அனுமதிக்காததன்மூலம் அவர் நீதிக்கான தன்னுடைய அன்பையும் காண்பித்தார்.
அதேவிதமாக தெய்வீக குணங்களை வெளிக்காட்டிய மற்றுமநேகரைக்குறித்து பைபிள் விவரிக்கிறது. அதில் பிரதானமானவர் இயேசு கிறிஸ்து; அவர் பரிபூரணமாகக் கடவுளின் சாயலில் இருந்ததால், இவ்வாறு சொல்ல முடிந்தது: “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்.” (யோவான் 14:9) இயேசு வெளிக்காட்டிய குணங்களில் மேம்பட்டு நின்றது அவருடைய அன்பாகும். அவருடைய பிதாவுக்கும் மனிதவர்க்கத்திற்குமான அன்பு, தம்முடைய பரலோக வீட்டை விட்டுவிட்டு பூமியில் மனிதனாக வாழும்படி அவரை உந்துவித்தது. தம்முடைய பிதாவை தம்முடைய நீதியுள்ள நடத்தையால் மகிமைப்படுத்தவும், இரட்சிப்பைப்பற்றிய நற்செய்தியை மனிதவர்க்கத்திற்குப் பிரசங்கிக்கவும் அது உந்துவித்தது. (மத்தேயு 4:23; யோவான் 13:31) பின்னர், மனிதவர்க்கத்தின் இரட்சிப்பிற்காகவும், அதிமுக்கியமாக, கடவுளுடைய நாமம் பரிசுத்தப்படுவதற்காகவும் தம்முடைய பரிபூரண ஜீவனை அளிக்கும்படியாக அன்பு இயேசுவை உந்துவித்தது. (யோவான் 13:1) கடவுளைப் பின்பற்ற முயலுகையில், இயேசு கிறிஸ்துவைவிட பின்பற்றுவதற்குச் சிறந்த முன்மாதிரி வேறு இருக்கிறதா?—1 பேதுரு 2:21.
இன்று நாம் எப்படி அதிகப்படியாக கடவுளைப்போல் இருக்கமுடியும்?
இன்று நாம் எப்படி கடவுளுடைய குணங்களை வெளிக்காட்டி, அவ்வாறாக கடவுளின் சாயலில் செயல்பட முடியும்? முதலாவதாக, அன்பு என்ற குணத்தைக் கவனிப்போம். இயேசு சொன்னார்: “உன் தேவனாகிய [யெகோவாவிடத்தில், NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.” நாம் எப்படி கடவுளிடம் அன்பு காட்ட முடியும்? அப்போஸ்தலன் யோவான் பதிலளிக்கிறார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.”—மத்தேயு 22:37; 1 யோவான் 5:3.
நிச்சயமாக, யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமானால், நாம் அவற்றை அறிந்திருக்கவேண்டும். அது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் வாசிப்பதை, படிப்பதை, தியானிப்பதை உட்படுத்துகிறது. சங்கீதக்காரனைப்போல நம்மால் இவ்வாறு சொல்லமுடிய வேண்டும்: “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.” (சங்கீதம் 119:97) நாம் கடவுளுடைய வார்த்தையைப்பற்றிய மேலும் மேலுமான ஆழமான புரிந்துகொள்ளுதலை அடையும்போது, நாம் கடவுளின் சிந்தனை முறையால் நிரப்பப்பட்டு இயக்குவிக்கப்படுகிறோம். நாம் நீதியை விரும்பி அக்கிரமத்தை வெறுக்க ஆரம்பிக்கிறோம். (சங்கீதம் 45:7) அங்குதான் ஆதாம் தவறிவிட்டான். அவன் யெகோவாவின் சட்டத்தை அறிந்திருந்தான்; ஆனால் அதில் நிலைத்திருக்கும் அளவிற்கு அதை நேசிக்கவில்லை. கடவுளுடைய வார்த்தையை வாசிக்கும்போது, நம்மைநாமே தொடர்ந்து இவ்வாறு கேட்டுக்கொள்ளவேண்டும், ‘இது எப்படி எனக்குப் பொருந்துகிறது? கடவுளுடைய குணங்களுக்கு அதிக இசைவாக என்னுடைய நடத்தையைக் கொண்டுவருவதற்கு நான் என்ன செய்யலாம்?’
இயேசு இவ்வாறும் சொன்னார்: “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:39) ஒவ்வொரு ஆரோக்கியமான தனிநபரும் தன்னைத்தான் அன்புகூருகிறார்; மேலும் தனக்கு மிகச் சிறந்ததை விரும்புகிறார். அது தவறல்ல. ஆனால், அதற்கு ஒப்பிடக்கூடிய அன்பை நம் அயலாருக்குக் காண்பிக்கிறோமா? “நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே,” என்ற பைபிளின் இந்தக் கட்டளையை நாம் பின்பற்றுகிறோமா?—நீதிமொழிகள் 3:27; கலாத்தியர் 6:10.
ஞானம் என்ற குணத்தைப் பற்றியதென்ன? இந்தக் குணத்தை வெளிக்காட்ட நாடுவது நம்மை பைபிள் படிக்க வழிநடத்துகிறது, ஏனென்றால் அதுவே தெய்வீக ஞானத்தின் களஞ்சியமாக இருக்கிறது. சங்கீதம் 119:98-100 வாசிக்கிறது: “நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.” நீதிமொழிகள் 3:18-ல், ஞானம் ஒரு “ஜீவவிருட்சம்” என்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது. நாம் ஞானத்தை அடைந்து அதைப் பயிற்றுவித்தோமானால், கடவுளுடைய அங்கீகரிப்பையும் நித்திய ஜீவனாகிய வெகுமதியையும் பெறுவோம்.—பிரசங்கி 7:12.
நீதியைப் பற்றியென்ன? இந்தப் பொல்லாத உலகில், கடவுளைப் பிரியப்படுத்துவோருக்கு நீதி ஓர் அத்தியாவசியமான குணமாகும். இயேசு நீதியை (நியாயத்தை) விரும்பி, அக்கிரமத்தை வெறுத்தார். (எபிரெயர் 1:9) இன்றைய கிறிஸ்தவர்கள் அதையே செய்கின்றனர். சரியான குணங்களுக்குப் போற்றுதல் காண்பிக்கும்படியாக நீதி அவர்களை உந்துவிக்கிறது. அவர்கள் இந்த உலகின் அநீதியான வழிகளைத் தவிர்த்து, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதைத் தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாக வைக்கின்றனர்.—1 யோவான் 2:15-17.
வல்லமையைப் பொருத்தமட்டில், நாம் எல்லாருமே இதில் கணிசமான அளவைக் கொண்டிருக்கிறோம். நாம் இயல்பாகவே உடல்சார்ந்த மற்றும் அறிவாற்றல்சார்ந்த வல்லமையைக் கொண்டிருக்கிறோம்; மேலும், நாம் கிறிஸ்தவர்களாக வளர்கையில், ஆவிக்குரிய விதத்தில் வல்லமையைப் பெருக்குகிறோம். நாம் பலவீனமுள்ளவர்களாகத் தோன்றினாலும் யெகோவாவின் சித்தத்தை நிறைவேற்ற முடியும் அளவிற்கு, யெகோவா நம் வல்லமையை தம்முடைய பரிசுத்த ஆவியால் அதிகரிக்கிறார். பவுல் சொன்னார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலிப்பியர் 4:13) யெகோவாவின் ஆவிக்காக நாம் ஜெபம் செய்தால் அதே பெலன் நமக்கும் கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது.
நற்செய்தியைப் பிரசங்கித்தல்
கடவுளுடைய நான்கு பிரதான குணநலங்களை நாம் வெளிக்காட்டுவது, இந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிவதிலிருந்து நன்கு காணப்படுகிறது: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” (மத்தேயு 28:19, 20) அப்படிப்பட்ட ஒரு கற்பிக்கும் வேலை, அதற்குப் பிரதிபலிப்பவர்களுக்கு ஜீவனைக் கொண்டுவருகிறது. பெரும்பாலாக, தொடக்கத்தில் நமக்கு முற்றிலும் அறியப்படாதவர்களாகவே இருப்பவர்களுக்கு, இது என்னே ஓர் அன்பின் சிறந்த வெளிக்காட்டாக இருக்கிறது!
மேலுமாக, அப்படிப்பட்ட போதனை ஞானத்தின் வழியாக இருக்கிறது. அது நிலைத்திருக்கக்கூடிய பலனைக் கொண்டுவருகிறது. “இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வாய்,” என்று வேறு எந்த வேலையைக் குறித்து சொல்லப்பட முடியும்? (1 தீமோத்தேயு 4:16) சீஷர்களை உண்டுபண்ணும் வேலையில், இழப்பவர்கள் எவரும் இல்லை. செவிகொடுப்பவர்களும் போதிப்பவர்களும் ஆகிய இருசாராருமே நித்திய ஆசீர்வாதங்களைப் பெறுகின்றனர்.
நீதியைப் பொருத்ததில், கிறிஸ்தவர்கள் நியாயமான மற்றும் நீதியான நியமங்களைத் தங்களுடைய பைபிள் மாணாக்கர்களுக்குக் கற்பிக்கின்றனர். ‘நியாயத்தின் தேவனாகிய’ யெகோவாவை அவர்கள் சேவிக்கும்படி நாம் உதவி செய்கிறோம். (மல்கியா 2:17) இன்று தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்குச் சேவிப்பதற்கு ஒப்புக்கொடுத்து, உண்மையுடன் பின்தொடருபவர்கள், அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பதற்கு அவர்களை வழிநடத்தும் வகையில் நீதியுள்ளவர்களென, நியாயமுள்ளவர்களென அறிவிக்கப்படுகிறார்கள்.—ரோமர் 3:24; யாக்கோபு 2:24-26.
உலகெங்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதும் போதிப்பதும் வல்லமையின் என்னே ஒரு வெளிக்காட்டாக இருக்கிறது! (மத்தேயு 24:14) பெரும்பாலானோர் கேட்க விரும்பாத பிராந்தியங்களில் தொடர்ந்து பிரசங்கிப்பது சகிப்புத்தன்மையைத் தேவைப்படுத்துகிறது. ஆனால் யெகோவா தம்முடைய ஆவியின் மூலமாக, முடிவுபரியந்தம் நிலைநிற்பதற்குத் தேவையான பெலத்தைக் கொடுக்கிறார்.—ஏசாயா 40:30, 31; மத்தேயு 24:13; லூக்கா 11:13.
ஆதாமின் அபூரண சந்ததியாராக, நாம் இந்தச் சிறந்த குணங்களைப் பரிபூரணமாக அப்பியாசிக்க முடியாது என்பது உண்மையே. இருந்தாலும், மனிதன் கடவுளின் சாயலில் உண்டாக்கப்பட்டான் என்றும், நாம் அதிகமதிகமாக கடவுளைப்போல் இருக்க முயலுகையில், நாம் வாழ்ந்திருப்பதற்கான பகுதி காரணத்தை நிறைவேற்றுகிறோம் என்றும் நினைவில் கொள்ளுங்கள். (பிரசங்கி 12:13) நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்ய நாம் கடுமையாக முயன்று, தவறும்போது மன்னிப்புக் கோரினோமானால், அப்போது, முடிவில் பரிபூரணத்தை அடையக்கூடிய கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகிற்குள் தப்பிப்பிழைப்போம் என்று நம்பலாம். அப்போது, பரிபூரண மனிதர்களால் குடியேற்றப்பட்ட ஒரு பரதீஸான பூமியில், யாவருமாக யெகோவா தேவனின் குணங்களை முழுமையாக வெளிக்காட்டிக்கொண்டு இருப்போம். என்னே ஒரு சந்தோஷம்! முடிவாக, அந்தக் கூற்றின் முழுமையான அர்த்தத்தில், மனிதர்கள் கடவுளின் சாயலில் இருப்பார்கள்.
[அடிக்குறிப்புகள்]
a “நீதி” மற்றும் “நியாயம்” என்பவை மிக நெருங்கிய தொடர்புடையவை. கிரேக்க வேத எழுத்துக்களில், அவை டைகேய்யாஸ் (diʹkai·os) என்ற ஒரு வார்த்தையால் குறிப்பிடப்படுகின்றன.
[பக்கம் 25-ன் படம்]
யெகோவாவின் தெய்வீக குணங்களை எப்படி வளர்ப்பது என்று இயேசு நமக்குக் காண்பித்தார்
[பக்கம் 26-ன் படம்]
முடிவாக, முழுமையான அர்த்தத்தில் மனிதர்கள் கடவுளின் சாயலில் இருப்பார்கள்