வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜூன் 3-9
பைபிளில் இருக்கும் புதையல்கள்|கலாத்தியர் 4-6
“‘அடையாளப்பூர்வ நாடகமும்’ அதன் அர்த்தமும்”
it-1-E 1018 ¶2
ஆகார்
அப்போஸ்தலன் பவுல் விளக்கிய அடையாளப்பூர்வ நாடகத்தில், இஸ்ரவேல் தேசத்துக்கு ஆகார் அடையாளமாக இருந்தாள். இஸ்ரவேலர்கள் சீனாய் மலையில் யெகோவாவோடு திருச்சட்ட ஒப்பந்தத்தைச் செய்திருந்தார்கள். ஆனால், அவர்கள் பாவ இயல்புள்ளவர்களாக இருந்ததால், அந்த ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க அவர்களால் முடியவில்லை. அதனால், அந்த ஒப்பந்தத்தின் கீழ் இருந்த இஸ்ரவேலர்கள் சுதந்திர மக்களாக ஆவதற்குப் பதிலாக, மரண தண்டனை பெற வேண்டிய பாவிகளாகக் கண்டனம் செய்யப்பட்டார்கள். இந்த விதத்தில், அந்த ‘ஒப்பந்தத்துக்கு உட்பட்ட [அவர்கள்] எல்லாரும் அடிமைகளாக இருந்தார்கள்.’ (யோவா 8:34; ரோ 8:1-3) பவுலின் நாளில் இருந்த எருசலேமுக்கு ஆகார் ஒப்பாக இருந்தாள். ஏனென்றால், இஸ்ரவேல் தேசத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அதன் தலைநகரமான எருசலேம், ‘தன் பிள்ளைகளோடுகூட அடிமையாக இருந்தாள்.’ ஆனால், கடவுளுடைய சக்தியினால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், கடவுளுடைய அடையாளப்பூர்வ மனைவியான ‘மேலான எருசலேமின்’ பிள்ளைகளாக இருக்கிறார்கள். இந்த எருசலேம், சுதந்திரப் பெண்ணாகிய சாராளைப் போல ஒருபோதும் அடிமையாக இருந்ததில்லை. ஆனால், இஸ்மவேல் எப்படி ஈசாக்கைத் துன்புறுத்தினானோ அப்படியே அடிமைத்தனத்தில் இருந்த எருசலேமின் பிள்ளைகள், கடவுளுடைய மகனால் விடுவிக்கப்பட்ட இந்த ‘மேலான எருசலேமின்’ பிள்ளைகளைத் துன்புறுத்தினார்கள். ஆகாரும் அவளுடைய மகனும் துரத்தப்பட்டது, இஸ்ரவேல் தேசத்தை யெகோவா ஒதுக்கித்தள்ளியதற்கு அடையாளமாக இருந்தது.—கலா 4:21-31; இதையும் பாருங்கள்: யோவா 8:31-40.
கடவுளுடைய வாக்குறுதிகளை உறுதியாக நம்புங்கள்
11 ஆபிரகாமின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்கள் கானான் தேசத்திற்குள் போனபோது ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறியது. ஆனால், அந்த வாக்குறுதிக்கு இன்னொரு நிறைவேற்றமும் இருக்கிறது. (கலா. 4:22-25) இதைத்தான் அப்போஸ்தலன் பவுல் கலாத்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக விளக்கினார். அதாவது, ஆபிரகாமின் சந்ததியில் வந்த வாரிசு, முக்கியமாக இயேசுவையும் அவரோடு ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேரையும் குறிக்கிறது. (கலா. 3:16, 29; வெளி. 5:9, 10; 14:1, 4) ‘மேலான எருசலேம்தான்’ ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட பெண்; அதாவது, கடவுளுடைய அமைப்பின் பரலோக பாகம். அது கடவுளுக்கு உண்மையோடு இருக்கும் தேவதூதர்களைக் குறிக்கிறது. (கலா. 4:26, 31) ஆபிரகாமோடு கடவுள் செய்த ஒப்பந்தத்தின்படி, இயேசுவும் 1,44,000 பேரும் ஆட்சி செய்யும்போது ‘பூமியிலுள்ள சகல தேசத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.’
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w09 10/1 13
உங்களுக்குத் தெரியுமா?
ஜெபத்தில் இயேசு ஏன் யெகோவாவை “அபா” என்று அழைத்தார்?
“அபா” என்ற அரமேயிக் வார்த்தை “அப்பா” என்ற அர்த்தத்தைத் தருகிறது. பைபிளில் இந்த வார்த்தை மூன்று இடங்களில் காணப்படுகிறது; அந்த மூன்று இடங்களிலும், ஜெபத்தில் பரலோகத் தகப்பனான யெகோவாவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தை உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது?
தி இண்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “இயேசுவின் காலத்தில் அபா என்ற வார்த்தை, முக்கியமாகப் பிள்ளை தன் அப்பாவை அன்னியோன்னியத்தோடும் மரியாதையோடும் அழைப்பதற்கு அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப்பட்டது.” இது பாசத்தோடு அழைப்பதற்கான வார்த்தையாகவும் பிள்ளை கற்றுக்கொண்ட முதல் வார்த்தையாகவும் இருந்தது. இயேசு தம் தகப்பனிடம் மிக ஊக்கமாய் ஜெபம் செய்தபோது இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் இறப்பதற்கு சில மணிநேரங்கள் முன்பு, கெத்செமனே தோட்டத்தில் ஜெபம் செய்தபோது “அபா, அப்பா” என்று யெகோவாவை அழைத்தார்.—மாற்கு 14:36.
“கிரேக்க, ரோம காலத்திற்குரிய யூத இலக்கியங்களில் அபா என்ற வார்த்தை கடவுளுக்குப் பயன்படுத்தப்பட்டதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை; ஏனென்றால், இப்படிக் கடவுளை அன்னியோன்னியமாக அழைப்பது அவமரியாதைக்குரியதாகக் கருதப்பட்டிருக்க வேண்டும்” என்று மேற்குறிப்பிடப்பட்ட புத்தகம் தொடர்ந்து சொல்கிறது. இருந்தாலும், “இயேசு . . . இந்த வார்த்தையை ஜெபத்தில் பயன்படுத்தியது, கடவுளுடன் அவருக்கிருந்த மிக நெருக்கமான பந்தத்தை மறைமுகமாய் உறுதிப்படுத்தியது.” பைபிளில் இந்த வார்த்தை இன்னும் இரண்டு இடங்களில், அதாவது அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதங்களில், காணப்படுகிறது; இது, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் தங்கள் ஜெபங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள் என்பதைக் காட்டுகிறது.—ரோமர் 8:15; கலாத்தியர் 4:6.
w10-E 11/1 15
உங்களுக்குத் தெரியுமா?
“நான் இயேசுவின் அடிமை என்பதற்கு அடையாளமாக என்னுடைய உடலில் சூட்டுத் தழும்புகளைச் சுமந்துகொண்டிருக்கிறேன்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன?—கலாத்தியர் 6:17.
▪ முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் பவுலின் வார்த்தைகளைப் பல விதங்களில் புரிந்துகொண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு, அந்தக் காலத்தில் போர்க் கைதிகளுக்கும், ஆலயத்தில் திருடியவர்களுக்கும், தங்கள் எஜமானிடமிருந்து தப்பிவந்த அடிமைகளுக்கும் சூட்டுக்கோலால் (பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலால்) அடையாளக்குறி போடப்பட்டது. அப்படிப்பட்ட சூட்டுத் தழும்புகள் அவமானச் சின்னங்களாகக் கருதப்பட்டன.
ஆனால், அந்தக் காலத்தில் சூட்டுத் தழும்புகளுக்கு மற்ற அர்த்தங்களும் இருந்தன. உதாரணத்துக்கு, அன்று வாழ்ந்த நிறைய பேர், தாங்கள் ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு அடையாளமாகச் சூட்டுக்கோலால் அடையாளக்குறியைப் போட்டுக்கொண்டார்கள். புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதி (ஆங்கிலம்) இப்படிச் சொல்கிறது: “சீரியர்கள், ஹாடாட் தெய்வத்துக்கும் ஆட்டார்காட்டிஸ் தெய்வத்துக்கும் தங்களை அர்ப்பணிப்பதற்கு அடையாளமாகத் தங்கள் மணிக்கட்டிலோ கழுத்திலோ சூட்டுக்கோலால் அடையாளக்குறியைப் போட்டுக்கொண்டார்கள். . . . டயோனிசஸ் பக்தர்கள் ஐவி இலையின் வடிவத்தில் அடையாளக்குறியைப் போட்டுக்கொண்டார்கள்.”
பவுல் கிறிஸ்தவ மிஷனரி ஊழியம் செய்தபோது நிறைய முறை தாக்கப்பட்டதால், அப்போது ஏற்பட்ட தழும்புகளைப் பற்றி இங்கே குறிப்பிட்டிருப்பார் என்று நவீனகால விமர்சகர்கள் பலர் சொல்கிறார்கள். (2 கொரிந்தியர் 11:23-27) ஆனால், பவுல் ஒருவேளை நிஜமான தழும்புகளைப் பற்றிச் சொல்லாமல், தன்னுடைய வாழ்க்கை முறையைப் பற்றிச் சொல்லியிருக்கலாம்; அதுவே அவரை ஒரு கிறிஸ்தவராக அடையாளம் காட்டியதாக அவர் சொல்லியிருக்கலாம்.
ஜூன் 10-16
பைபிளில் இருக்கும் புதையல்கள்|எபேசியர் 1-3
“யெகோவாவின் நிர்வாகமும் அதன் சாதனைகளும்”
it-2-E 837 ¶4
பரிசுத்த ரகசியம்
மேசியானிய அரசாங்கம். கிறிஸ்துவைப் பற்றி வெளிப்படுத்தப்பட்ட பரிசுத்த ரகசியத்தை பவுல் தன் கடிதங்களில் முழுமையாக விளக்கியிருக்கிறார். எபேசியர் 1:9-11-ல், கடவுள் தன்னுடைய விருப்பத்தைப் பற்றிய “பரிசுத்த ரகசியத்தை” தெரியப்படுத்தியதாக பவுல் குறிப்பிட்டார். அதன் பிறகு, “இந்த ரகசியம், ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அவருடைய நோக்கத்துக்கும் பிரியத்துக்கும் ஏற்றபடி இருக்கிறது. குறித்த காலங்கள் நிறைவேறும்போது அந்த நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. அதாவது, பரலோகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் பூமியில் இருக்கிற எல்லாவற்றையும் மறுபடியும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. அதன்படியே, கிறிஸ்துவுக்குள் கூட்டிச்சேர்க்கப்பட்டு அவரோடு ஒன்றுபட்டிருக்கிற எங்களை வாரிசுகளாகவும் நியமித்தார். எல்லாவற்றையும் தன்னுடைய விருப்பத்தின்படி தீர்மானித்து நிறைவேற்றுகிற அவர், தன்னுடைய நோக்கத்தின்படி எங்களை முன்கூட்டியே தேர்ந்தெடுத்தார்” என்று குறிப்பிட்டார். இந்த ‘பரிசுத்த ரகசியம்’ ஒரு அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது, அதுதான் கடவுளுடைய மேசியானிய அரசாங்கம். “பரலோகத்தில் இருக்கிற எல்லாவற்றையும்” என்று பவுல் சொன்னது, அந்தப் பரலோக அரசாங்கத்தில் கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்யப்போகிறவர்களைக் குறிக்கிறது. “பூமியில் இருக்கிற எல்லாவற்றையும்” என்று அவர் சொன்னது, பூமியில் வாழப்போகும் அதன் குடிமக்களைக் குறிக்கிறது. இயேசு தன் சீஷர்களிடம், “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியம் உங்களுக்கு வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது” என்று சொன்னார்; இப்படி, பரிசுத்த ரகசியம் அந்த அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதைக் காட்டினார்.—மாற் 4:11.
‘யெகோவா ஒருவரே’ தம் குடும்பத்தை ஒன்றுசேர்க்கிறார்
3 ‘நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா’ என்று இஸ்ரவேலரிடம் மோசே சொன்னார். (உபா. 6:4) யெகோவா தம் நோக்கத்திற்கு இசைவாகவே எல்லாக் காரியங்களையும் செய்கிறார். எனவே, ‘குறித்த காலங்கள் நிறைவேறியபோது’ அவர் “ஒரு நிர்வாகத்தை” ஏற்படுத்தினார். தம்முடைய புத்திக்கூர்மையுள்ள படைப்புகளையெல்லாம் ஒன்றுசேர்ப்பதற்காக அவர் செய்த ஏற்பாடே இந்த நிர்வாகம். (எபேசியர் 1:8-10-ஐ வாசியுங்கள்.) அது இரண்டு கட்டங்களில் அதன் குறிக்கோளை நிறைவேற்றும். முதற்கட்ட வேலையாக, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பரலோகத்தில் வாழ யெகோவா அவர்களைத் தயார்படுத்துகிறார். அவர்களுக்கு இயேசு கிறிஸ்து தலைவராக இருப்பார். இந்தத் தயார்படுத்தும் வேலை கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று ஆரம்பமானது. அன்று முதல்... கிறிஸ்துவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்பவர்களை யெகோவா ஒன்றுசேர்க்க ஆரம்பித்தார். (அப். 2:1-4) அவர்கள் கிறிஸ்துவுடைய மீட்புவிலையின் அடிப்படையில் வாழ்வு பெறும்படி யெகோவா அவர்களை நீதிமான்களாக அங்கீகரித்திருக்கிறார். அதனால்தான், தாங்கள் ‘கடவுளுடைய பிள்ளைகளாக’ தத்தெடுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.—ரோ. 3:23, 24; 5:1; 8:15-17.
4 இரண்டாம் கட்ட வேலையாக, மேசியானிய அரசாங்கத்தின்கீழ் பூஞ்சோலை பூமியில் வாழப் போகிறவர்களை யெகோவா தயார்படுத்துகிறார். அந்தப் பூமியில், ‘திரள் கூட்டமான மக்களே’ முதல் குடிமக்களாக இருப்பார்கள். (வெளி. 7:9, 13-17; 21:1-5) பின்னர், ஆயிர வருட ஆட்சியின்போது உயிர்த்தெழுப்பப்படும் கோடிக்கணக்கானோரும் பூஞ்சோலை பூமியின் குடிமக்கள் ஆவார்கள். (வெளி. 20:12, 13) இப்படி, உயிர்த்தெழுந்து வருபவர்களுடன் ஒன்றுசேர்ந்து வாழும்போது நாம் ஒற்றுமையானவர்கள் என்பதற்கு மேலும் அத்தாட்சி அளிப்போம்! ஆயிரவருட அரசாட்சியின் முடிவில் “பூமியில் உள்ளவை” கடைசிப் பரீட்சைக்கு உட்படுத்தப்படும் என்று பைபிள் சொல்கிறது. கடைசிவரை உண்மையாய் இருப்பவர்கள் பூமியில் ‘கடவுளுடைய பிள்ளைகளாக’ தத்தெடுக்கப்படுவார்கள்.—ரோ. 8:21; வெளி. 20:7, 8.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நீங்கள் மகிமை அடைவதைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்
15 யெகோவாவின் சித்தத்தைச் செய்ய நாம் தொடர்ந்து முயலும்போது மற்றவர்கள் மகிமை அடைவார்கள். எபேசு சபையாருக்கு பவுல் எழுதினார்: “உங்களுக்காக நான் படுகிற இந்த உபத்திரவங்களைக் கண்டு நீங்கள் மனந்தளர்ந்துவிட வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்; ஏனென்றால், இவை உங்களுக்கு மகிமை சேர்க்கும்.” (எபே. 3:13) பவுல் பட்ட பாடுகள் எபேசியர்களுக்கு எவ்விதத்தில் ‘மகிமை சேர்த்தது?’ கஷ்டங்களின் மத்தியிலும் அவர்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய பவுல் ஆர்வமாக இருந்தார். அதன் மூலம், கிறிஸ்தவர்களாக கடவுளுக்குச் சேவை செய்வது எந்தளவு முக்கியமானது என்பதை அவர்களுக்கு நிரூபித்துக் காட்டினார். உபத்திரவங்களைக் கண்டு பவுல் மனந்தளர்ந்து போயிருந்தால், யெகோவாவோடு உள்ள நட்புறவும், ஊழியமும் நம்பிக்கையும் அப்படியொன்றும் முக்கியமானது இல்லை என்ற எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் அல்லவா? ஆனால் பவுல் காட்டிய சகிப்புத்தன்மை, கிறிஸ்துவின் சீடராய் இருப்பதற்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்யலாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது.
‘கிறிஸ்துவின் அன்பை அறிந்துகொள்ளுதல்’
21 “அறிந்துகொள்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தை “நடைமுறையில், அனுபவ ரீதியில்” அறிந்துகொள்வதை அர்த்தப்படுத்துகிறது. இயேசு காண்பித்தது போன்ற அன்பை நாம் காண்பிக்க வேண்டும், அதாவது மற்றவர்களுக்காக சுயநலமின்றி நம்மையே அளிக்கிற, அவர்களுடைய தேவைகளை இரக்கத்தோடு பூர்த்தி செய்கிற, நம்முடைய இருதயத்திலிருந்து அவர்களை மன்னிக்கிற அன்பை நாம் காட்டும்போது, நாம் அவருடைய உணர்ச்சிகளை உள்ளப்பூர்வமாக புரிந்துகொள்ளலாம். இந்த முறையில், ‘அறிவுக்கெட்டாத கிறிஸ்துவினுடைய அன்பை’ நாம் அனுபவ ரீதியில் அறிந்துகொள்கிறோம். நாம் எந்தளவுக்கு கிறிஸ்துவைப் போல ஆகிறோமோ அந்தளவுக்கு இயேசு பரிபூரணமாக பின்பற்றிய நம் அன்பான கடவுளாகிய யெகோவாவிடம் நெருங்கி வருவோம்.
ஜூன் 17-23
பைபிளில் இருக்கும் புதையல்கள்|எபேசியர் 4-6
“கடவுள் தருகிற முழு கவசத்தையும் போட்டுக்கொள்ளுங்கள்”
இளைஞர்களே—பிசாசை எதிர்த்து உறுதியோடு நில்லுங்கள்!
கிறிஸ்தவர்களை படைவீரர்களுக்கு ஒப்பிட்டு பவுல் பேசினார். நாம் போர்க்களத்தில் இருக்கிறோம், நம்முடைய எதிரிகளோ, நிஜமானவர்கள்! மனிதர்களை எதிர்த்து நாம் போர் செய்யவில்லை; சாத்தானையும், அவனோடு இருக்கிற பேய்களையும் எதிர்த்துதான் போர் செய்கிறோம்! இந்தப் போர்வீரர்களுக்கு ஆயிரக்கணக்கான வருஷங்கள் அனுபவம் இருக்கிறது; போர் செய்வதில் அவர்கள் கெட்டிக்காரர்கள்! அதனால், இந்தப் போரில் நமக்கு வெற்றி கிடைக்காது என்று நாம் நினைக்கலாம், அதுவும் நாம் இளைஞர்களாக இருந்தால்! அப்படியென்றால், இளைஞர்களால் பலம்படைத்த இந்த எதிரிகளை ஜெயிக்க முடியுமா? நிச்சயம் முடியும். அவர்கள் ஜெயித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்! எப்படி அவர்களால் ஜெயிக்க முடிகிறது? யெகோவாவிடமிருந்து அவர்களுக்குப் பலம் கிடைக்கிறது. அதோடு, நன்றாகப் பயிற்சி பெற்ற படைவீரர்களைப் போல, ‘கடவுள் தருகிற முழு கவசத்தையும் [அவர்கள்] போட்டிருக்கிறார்கள்.’ அதனால், போர்செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.—எபேசியர் 6:10-12-ஐ வாசியுங்கள்.
இளைஞர்களே—பிசாசை எதிர்த்து உறுதியோடு நில்லுங்கள்!
4 அந்த இடுப்புவாரைப் போல, பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற சத்தியம், பொய்ப் போதனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. (யோவா. 8:31, 32; 1 யோ. 4:1) நாம் சத்தியத்தை எந்தளவு நேசிக்கக் கற்றுக்கொள்கிறோமோ, அந்தளவு கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வது அல்லது நம்முடைய ‘மார்புக் கவசத்தை’ அணிந்துகொள்வது, நமக்குச் சுலபமாக இருக்கும். (சங். 111:7, 8; 1 யோ. 5:3) அதோடு, இந்தச் சத்தியங்களை நாம் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தால், நம் எதிரிகள் கேட்கிற கேள்விகளுக்குத் திறமையாகப் பதில் சொல்ல முடியும்.—1 பே. 3:15.
7 நம் “இதயத்தை” அல்லது உள்ளான மனிதனை பாதுகாக்கிற யெகோவாவின் நீதியான தராதரங்களை, மார்புக் கவசத்துக்கு ஒப்பிடலாம். (நீதி. 4:23) எந்தவொரு படைவீரரும் இரும்பாலான மார்புக் கவசத்துக்குப் பதிலாக, லேசான உலோகத்தாலான மார்புக் கவசத்தை அணியமாட்டார். அதேபோல், நாமும் எது சரி என்று யெகோவா சொல்கிறாரோ, அதன்படி செய்வதற்குப் பதிலாக, எது சரி என்று நமக்குத் தோன்றுகிறதோ, அதன்படி செய்ய மாட்டோம். நம் இதயத்தைப் பாதுகாக்கிற ஞானம் நமக்கு இல்லை! (நீதி. 3:5, 6) அதனால்தான், நம் ‘மார்புக் கவசம்’ இறுக்கமாக இருக்கிறதா, அதாவது நம் இதயத்தைப் பாதுகாக்கிற நிலையில் இருக்கிறதா, என்று தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
10 ரோமப் படைவீரர்கள் அணிந்திருந்த காலணி, போரில் வெற்றிபெற அவர்களுக்கு உதவியது. அதேபோல், நம்முடைய அடையாளப்பூர்வ காலணி, “சமாதானத்தின் நல்ல செய்தியை” பிரசங்கிப்பதற்கு நமக்கு உதவுகிறது. (ஏசா. 52:7; ரோ. 10:15) இருந்தாலும், சிலசமயங்களில், பிரசங்கிப்பதற்கு நமக்கு ரொம்பவே தைரியம் தேவை! 20 வயது ராபர்ட் இப்படிச் சொல்கிறார்: “முன்னாடியெல்லாம், கூடபடிக்கிற பசங்ககிட்ட பிரசங்கிக்குறதுக்கு பயமா இருக்கும். அவங்ககிட்ட பேசறதுக்கு எனக்கு தர்மசங்கடமா இருந்துச்சுனு நினைக்குறேன். ஆனா, ‘நான் ஏன் அப்படி இருந்தேன்னு’ இப்போ நினைக்க தோணுது. இப்பெல்லாம், கூடபடிக்கிறவங்ககிட்ட சந்தோஷமா பிரசங்கிக்குறேன்.”
w18.05 29-31 ¶13, 16, 20
இளைஞர்களே—பிசாசை எதிர்த்து உறுதியோடு நில்லுங்கள்!
13 சாத்தான் எந்த ‘நெருப்புக் கணைகளால்’ உங்களைத் தாக்கலாம்? ஒருவேளை, யெகோவாவைப் பற்றிய பொய்களைச் சொல்லி அவன் உங்களைத் தாக்கலாம். அதாவது, யெகோவாவுக்கு உங்கள்மீது அக்கறை இல்லையென்றும் அவர் உங்களை நேசிக்க மாட்டார் என்றும் அவன் உங்களை நினைக்க வைக்கலாம். 19 வயது ஈடா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “யெகோவா என்கிட்ட நெருக்கமா இல்லனும், எனக்கு ஃப்ரெண்டா இருக்க அவரு விரும்புலனும் நான் நிறைய தடவை நினைச்சிருக்கேன்.” அந்த மாதிரியான உணர்வு வரும்போது, அவர் என்ன செய்கிறார்? “கூட்டங்கள் எனக்கு டானிக் மாதிரி! என்னோட விசுவாசத்த அது பலப்படுத்துது. முன்னெல்லாம், பதிலே சொல்லாம சும்மா உட்கார்ந்துட்டு இருப்பேன். ‘என் பதில யாரு கேட்க போறாங்கனு’ நினைப்பேன். ஆனா இப்போ, கூட்டங்களுக்கு நான் தயாரிக்குறேன், ரெண்டு மூணு பதில் சொல்றதுக்கு முயற்சி பண்றேன். அது எனக்கு கஷ்டந்தான், ஆனா, பதில் சொன்னதுக்கு அப்புறம் சந்தோஷமா இருக்கு. சகோதர சகோதரிங்க என்னை உற்சாகப்படுத்துறாங்க. கூட்டங்கள் முடிஞ்சு வெளியே வர்றப்போ, யெகோவா என்னை நேசிக்குறாருங்குற எண்ணத்தோடதான் வெளியே வர்றேன்.”
16 படைவீரர்களுடைய மூளையை தலைக்கவசம் பாதுகாத்தது போல, “மீட்புக்கான நம்பிக்கை,” நம்முடைய யோசனைகளைப் பாதுகாக்கிறது. (1 தெ. 5:8; நீதி. 3:21) கடவுளுடைய வாக்குறுதிகள்மீது கவனம் செலுத்துவதற்கும், நம்முடைய பிரச்சினைகளால் சோர்ந்துபோகாமல் இருப்பதற்கும், இந்த நம்பிக்கை உதவுகிறது. (சங். 27:1, 14; அப். 24:15) ஆனால், நம்முடைய நம்பிக்கை நம்மைப் பாதுகாக்க வேண்டுமென்றால், கடவுளுடைய வாக்குறுதிகள் நிஜமாகவே நிறைவேறும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். “தலைக்கவசம்” நம் தலையில் இருக்க வேண்டும், கையில் அல்ல!
20 கடவுளுடைய வார்த்தையை வாளுக்கு ஒப்பிட்டு பவுல் பேசினார். அந்த வாளை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதைத் திறமையாகப் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நம் விசுவாசத்தை ஆதரித்துப் பேசவும், நம் யோசனைகளை சரிசெய்யவும் நம்மால் முடியும். (2 கொ. 10:4, 5; 2 தீ. 2:15) அப்படியென்றால், உங்களுடைய திறமையை எப்படி மெருகேற்றலாம்? 21 வயது செபஸ்டியன் சொல்வதைக் கவனியுங்கள். “பைபிள் வாசிக்குறப்போ, ஒவ்வொரு அதிகாரத்துலிருந்தும் ஒரு வசனத்த எழுதி வைச்சேன். எனக்குப் பிடிச்ச வசனங்களையெல்லாம் இப்ப ஒண்ணுசேர்த்துட்டு இருக்கேன்.” இப்படிச் செய்தது, யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள அவருக்கு உதவியது. டேனியல் இப்படிச் சொல்கிறார்: “பைபிள் வாசிக்குறப்போ, ஊழியத்துல பார்க்குற ஜனங்களுக்கு உதவியா இருக்குற சில வசனங்கள தேர்ந்தெடுப்பேன். பைபிள்மேல உங்களுக்கு இருக்குற ஆர்வத்தையும், அவங்களுக்கு உதவுறதுக்கு நீங்க எடுக்குற முயற்சிகளயும் ஜனங்க பார்க்குறப்போ, நீங்க சொல்றத காதுகொடுத்து கேட்பாங்க.”
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E 1128 ¶3
பரிசுத்தம்
கடவுளுடைய சக்தி. யெகோவாவின் சக்தி அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. அது எப்போதுமே அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறது. அது நல்ல விஷயங்களுக்காகவே கடவுளால் பயன்படுத்தப்படுகிறது; அது சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்கிறது. அதனால் அது “பரிசுத்த சக்தி” என்றுகூட அழைக்கப்படுகிறது. (ரோ 1:5) கடவுளுடைய சக்தி ஒருவர்மேல் செயல்படும்போது அது அவரைப் பரிசுத்தமாக்குகிறது. அதனால், அசுத்தமான பழக்கங்கள் அல்லது கெட்ட பழக்கங்கள் அந்தச் சக்தியை எதிர்ப்பதுபோல் அல்லது ‘துக்கப்படுத்துவதுபோல்’ இருக்கிறது. (எபே 4:30) கடவுளுடைய சக்தி ஒரு நபர் அல்ல; ஆனாலும், அது கடவுளுடைய பரிசுத்தமான சுபாவத்தைப் பிரதிபலிப்பதால் அதை நம்மால் ‘துக்கப்படுத்த’ முடியும். எந்த விதமான கெட்ட பழக்கமும் ‘கடவுளுடைய சக்தி பற்றவைக்கிற ஆர்வத் தீயை அணைத்துவிடும்.’ (1தெ 5:19) கெட்ட பழக்கத்தில் ஒருவர் தொடர்ந்து ஈடுபடும்போது கடவுளுடைய சக்தியை ‘துக்கப்படுத்துகிறார்’ என்று சொல்லலாம்; அப்போது, கடவுள் அவருடைய எதிரியாக ஆகிவிடுவார். (ஏசா 63:10) ஒருவர் கடவுளுடைய சக்தியை நிந்தித்துப் பேசுவதன் மூலமாகக்கூட அதைத் துக்கப்படுத்தலாம். அந்தப் பாவம் இந்தக் காலத்திலும் சரி, இனிவரும் காலத்திலும் சரி, மன்னிக்கப்படாது என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.—மத் 12:31, 32; மாற் 3:28-30.
it-1-E 1006 ¶2
பேராசை
செயல்களில் வெட்டவெளிச்சமாகிறது. ஒருவருடைய மனதில் பேராசை என்ற கெட்ட குணம் இருந்தால், ஏதோவொரு செயலில் அது வெட்டவெளிச்சமாகிவிடும். ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது என்று பைபிள் எழுத்தாளரான யாக்கோபு சொல்கிறார். (யாக் 1:14, 15) அதனால், ஒருவருக்குப் பேராசை இருக்கிறதா என்பதை அவருடைய நடவடிக்கைகளை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். பேராசை என்பது சிலை வழிபாட்டுக்குச் சமம் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபே 5:5) ஏனென்றால், ஒருவருக்கு எதன்மேல் பேராசை இருக்கிறதோ அதுவே அவருடைய தெய்வமாகிவிடுகிறது; கடவுளுடைய சேவையையும் வணக்கத்தையும்விட அதையே அவர் உயர்வாக நினைக்கிறார்.—ரோ 1:24, 25.
ஜூன் 24-30
பைபிளில் இருக்கும் புதையல்கள் | பிலிப்பியர் 1-4
“எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்”
“எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்”
10 ‘எதைப் பற்றியும் கவலைப்படாமல்’ இருக்கவும், ‘தேவசமாதானத்தை’ அனுபவிக்கவும் எது நமக்கு உதவும்? ஜெபம் செய்வதுதான் நம் கவலையைத் தீர்ப்பதற்கான வழி என்பதை பிலிப்பியர்களுக்கு பவுல் எழுதிய வார்த்தைகள் காட்டுகின்றன. அதனால், நம் மனதிலுள்ள கவலைகளையெல்லாம் ஜெபத்தில் யெகோவாவிடம் சொல்லிவிட வேண்டும். (1 பேதுரு 5:6, 7-ஐ வாசியுங்கள்.) நீங்கள் ஜெபம் செய்யும்போது, அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார் என்பதை முழுமையாக நம்புங்கள். அவர் கொடுக்கிற ஒவ்வொரு ஆசீர்வாதத்துக்காகவும் எப்போதுமே நன்றி சொல்லுங்கள். யெகோவா, ‘நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட மிக அதிகமாக, பல மடங்கு அதிகமாக எல்லாவற்றையும் செய்ய வல்லவர்’ என்பதை மறந்துவிடாதீர்கள்.—எபே. 3:20.
“எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்”
7 பவுலின் கடிதத்தை வாசித்தபோது பிலிப்பியில் இருந்த சகோதரர்களுக்கு எந்த விஷயம் ஞாபகம் வந்திருக்கும்? ஒருவேளை, பவுலுக்கும் சீலாவுக்கும் என்ன நடந்தது என்பதும், எதிர்பார்க்காத விதத்தில் யெகோவா எப்படி உதவி செய்தார் என்பதும் அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். அந்தக் கடிதத்தில் பவுல் அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தார்? ‘கவலைப்படாதீர்கள். ஜெபம் செய்யுங்கள். அப்போது, “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” உங்களுக்குக் கிடைக்கும்’ என்ற பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். அவர் எதை அர்த்தப்படுத்தினார்? சில பைபிள்கள் இந்த வார்த்தைகளை, “நம் கற்பனைகளையெல்லாம் மிஞ்சிவிடும்” அல்லது “மனிதர்களுடைய திட்டங்களையெல்லாம் மிஞ்சிவிடும்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. அப்படியென்றால், தேவசமாதானம் நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அற்புதமானது என்று பவுல் அர்த்தப்படுத்தினார். சிலசமயங்களில், பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பதென்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் யெகோவாவுக்குத் தெரியும். நாம் எதிர்பார்க்காத விதத்தில் யெகோவாவினால் நமக்கு உதவி செய்ய முடியும்.—2 பேதுரு 2:9-ஐ வாசியுங்கள்.
“எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்”
16 “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” நம் இதயத்தையும் மனதையும் “பாதுகாக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (பிலி. 4:7) “பாதுகாக்கும்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஒரு நகரத்தைப் பாதுகாப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படைவீரர்களைக் குறித்தது. பிலிப்பி நகரமும் படைவீரர்களால் பாதுகாக்கப்பட்டது. அதனால்தான், அந்த நகரத்தில் வாழ்ந்த மக்களால் ராத்திரியில் நிம்மதியாகத் தூங்க முடிந்தது. அதேபோல், நமக்கு “தேவசமாதானம்” இருக்கும்போது, நம்மாலும் நிம்மதியாக இருக்க முடியும். நம் இதயத்தையும் மனதையும் கவலை வாட்டாது. யெகோவா நம்மேல் அக்கறையாக இருக்கிறார் என்றும், நாம் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்றும் நமக்குத் தெரியும். (1 பே. 5:10) அதைத் தெரிந்திருப்பது, கவலையிலோ மனச்சோர்விலோ மூழ்கிவிடாதபடி நம்மைப் பாதுகாக்கிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E 528 ¶5
காணிக்கைகள்
திராட்சமது காணிக்கை. முக்கியமாக, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் குடியேறிய பிறகு, இஸ்ரவேலர்கள் இந்தக் காணிக்கையைச் செலுத்தினார்கள்; பெரும்பாலான மற்ற காணிக்கைகளோடு சேர்த்து இதைச் செலுத்தினார்கள். (எண் 15:2, 5, 8-10) அவர்கள் திராட்சமதுவை யெகோவாவுக்குக் காணிக்கையாகப் பலிபீடத்தில் ஊற்றினார்கள். (எண் 28:7, 14; ஒப்பிட்டுப் பாருங்கள்: யாத் 30:9; எண் 15:10.) அப்போஸ்தலன் பவுல் பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதியபோது, “விசுவாசத்தால் நீங்கள் செய்கிற பரிசுத்த சேவையின் மூலம் செலுத்துகிற பலிமீது நான் திராட்சமது காணிக்கையைப் போல் ஊற்றப்பட்டாலும் சந்தோஷமாக இருப்பேன்” என்று குறிப்பிட்டார். சகக் கிறிஸ்தவர்களுக்காகத் தன்னையே தியாகம் செய்ய மனமுள்ளவராக இருந்ததை பவுல் இப்படி உருவகப்படுத்திச் சொன்னார். (பிலி 2:17) அவர் இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு, “நான் ஏற்கெனவே என்னைத் திராட்சமது காணிக்கையைப் போல் ஊற்றிவிட்டேன்; நான் விடுதலை பெறுகிற நேரம் நெருங்கிவிட்டது” என்று தீமோத்தேயுவுக்கு எழுதினார்.—2தீ 4:6.
“முதலாம் உயிர்த்தெழுதல்”—இப்போது நடந்து வருகிறது!
5 அடுத்து, ‘தேவனுடைய இஸ்ரவேலரான’ அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், பரலோகத்தில் மகிமையான ஸ்தானத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்துகொள்ள உயிர்த்தெழுப்பப்பட வேண்டும்; அங்கே அவர்கள் ‘எப்பொழுதும் கர்த்தருடனே இருப்பார்கள்.’ (கலாத்தியர் 6:16; 1 தெசலோனிக்கேயர் 4:17) இது, ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என அழைக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 20:6) இந்த உயிர்த்தெழுதல் முடிவடைந்த பிறகே, பூங்காவன பரதீஸ் பூமியில் முடிவில்லா வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்புடன் லட்சக்கணக்கானோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். ஆகவே, நமக்கு பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி பூமிக்குரிய நம்பிக்கை இருந்தாலும் சரி, ‘முதலாம் உயிர்த்தெழுதலில்’ நாம் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாய் இருக்கிறோம். அந்த உயிர்த்தெழுதல் எப்படிப்பட்டதாய் இருக்கும்? அது எப்போது நடக்கும்?