‘யெகோவா ஒருவரே’ தம் குடும்பத்தை ஒன்றுசேர்க்கிறார்
‘நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன் . . . கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுங்கள்.’ —எபே. 4:1, 3.
உங்களால் விளக்க முடியுமா?
கடவுளுடைய நிர்வாகத்தின் நோக்கம் என்ன?
‘கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்ள’ நாம் என்ன செய்ய வேண்டும்?
‘ஒருவருக்கொருவர் கருணை காட்ட’ நமக்கு எது உதவும்?
1, 2. பூமிக்கும் மனிதகுலத்திற்குமான யெகோவாவின் நோக்கம் என்ன?
குடும்பம். இந்த வார்த்தையைக் கேட்டவுடன் எது உங்கள் நினைவுக்கு வருகிறது? அன்பா? சந்தோஷமா? ஒரு குறிக்கோளை அடைவதற்காக ஒன்றாகச் சேர்ந்து உழைக்கும் கரங்களா? வளருவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்குமான பாதுகாப்பான சூழலா? ஓர் அன்பான குடும்பத்தில் இருக்கிறீர்கள் என்றால் இதெல்லாம் சாத்தியமே. முதன்முதலில் குடும்பம் என்ற ஓர் ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர் யெகோவாதான். (எபே. 3:14, 15) பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அவருடைய படைப்புகள் எல்லாமே பாதுகாப்பையும், பரஸ்பர நம்பிக்கையையும், ஒற்றுமையையும் அனுபவித்து மகிழ வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது.
2 கடவுளுக்கு விரோதமாக மனிதன் என்றைக்குப் பாவம் செய்தானோ அன்றைக்கே கடவுளுடைய சர்வலோகக் குடும்பத்தில் ஒருவனாய் இருக்கும் தகுதியை இழந்துவிட்டான். ஆனாலும், யெகோவாவின் நோக்கம் மாறிவிடவில்லை. ஆதாமின் சந்ததியார் பூஞ்சோலை பூமி முழுவதிலும் குடியிருக்கும்படி யெகோவா செய்வார். (ஆதி. 1:28; ஏசா. 45:18) அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்திருக்கிறார். இந்த ஏற்பாடுகளில் பலவற்றைப் பற்றி எபேசியர் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் முக்கியமாக ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறது. தமது படைப்புகளை ஒன்றுசேர்க்க வேண்டும் என்ற யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதற்கு நாம் எந்த விதங்களில் ஒத்துழைக்கலாம்? அதைத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்திலுள்ள சில வசனங்களை இப்போது சிந்திப்போம்.
நிர்வாகமும் அதன் வேலையும்
3. எபேசியர் 1:10-ல் சொல்லப்பட்டிருக்கும் கடவுளுடைய நிர்வாகம் என்பது என்ன, அது எப்போது தன் முதற்கட்ட வேலையை ஆரம்பித்தது?
3 ‘நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா’ என்று இஸ்ரவேலரிடம் மோசே சொன்னார். (உபா. 6:4) யெகோவா தம் நோக்கத்திற்கு இசைவாகவே எல்லாக் காரியங்களையும் செய்கிறார். எனவே, ‘குறித்த காலங்கள் நிறைவேறியபோது’ அவர் “ஒரு நிர்வாகத்தை” ஏற்படுத்தினார். தம்முடைய புத்திக்கூர்மையுள்ள படைப்புகளையெல்லாம் ஒன்றுசேர்ப்பதற்காக அவர் செய்த ஏற்பாடே இந்த நிர்வாகம். (எபேசியர் 1:8-10-ஐ வாசியுங்கள்.) அது இரண்டு கட்டங்களில் அதன் குறிக்கோளை நிறைவேற்றும். முதற்கட்ட வேலையாக, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பரலோகத்தில் வாழ யெகோவா அவர்களைத் தயார்படுத்துகிறார். அவர்களுக்கு இயேசு கிறிஸ்து தலைவராக இருப்பார். இந்தத் தயார்படுத்தும் வேலை கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று ஆரம்பமானது. அன்று முதல்... கிறிஸ்துவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்பவர்களை யெகோவா ஒன்றுசேர்க்க ஆரம்பித்தார். (அப். 2:1-4) அவர்கள் கிறிஸ்துவுடைய மீட்புவிலையின் அடிப்படையில் வாழ்வு பெறும்படி யெகோவா அவர்களை நீதிமான்களாக அங்கீகரித்திருக்கிறார். அதனால்தான், தாங்கள் ‘கடவுளுடைய பிள்ளைகளாக’ தத்தெடுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.—ரோ. 3:23, 24; 5:1; 8:15-17.
4, 5. நிர்வாகத்தின் இரண்டாம் கட்ட வேலை என்ன?
4 இரண்டாம் கட்ட வேலையாக, மேசியானிய அரசாங்கத்தின்கீழ் பூஞ்சோலை பூமியில் வாழப் போகிறவர்களை யெகோவா தயார்படுத்துகிறார். அந்தப் பூமியில், ‘திரள் கூட்டமான மக்களே’ முதல் குடிமக்களாக இருப்பார்கள். (வெளி. 7:9, 13-17; 21:1-5) பின்னர், ஆயிர வருட ஆட்சியின்போது உயிர்த்தெழுப்பப்படும் கோடிக்கணக்கானோரும் பூஞ்சோலை பூமியின் குடிமக்கள் ஆவார்கள். (வெளி. 20:12, 13) இப்படி, உயிர்த்தெழுந்து வருபவர்களுடன் ஒன்றுசேர்ந்து வாழும்போது நாம் ஒற்றுமையானவர்கள் என்பதற்கு மேலும் அத்தாட்சி அளிப்போம்! ஆயிரவருட அரசாட்சியின் முடிவில் “பூமியில் உள்ளவை” கடைசிப் பரீட்சைக்கு உட்படுத்தப்படும் என்று பைபிள் சொல்கிறது. கடைசிவரை உண்மையாய் இருப்பவர்கள் பூமியில் ‘கடவுளுடைய பிள்ளைகளாக’ தத்தெடுக்கப்படுவார்கள்.—ரோ. 8:21; வெளி. 20:7, 8.
5 பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பரலோகத்தில் வாழவும்... வேறே ஆடுகள் பூஞ்சோலை பூமியில் வாழவும்... கடவுள் அவர்களைத் தயார்படுத்தி வருகிறார். கடவுளுடைய நிர்வாகத்திற்கு, அதாவது ஏற்பாட்டிற்கு, நாம் ஒவ்வொருவரும் எப்படி ஒத்துழைப்பு தரலாம்?
‘கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுங்கள்’
6. கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி வருவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
6 கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி வர வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 14:23; எபி. 10:24, 25) ஆனால், இந்த ஒன்றுகூடிவருதல் விளையாட்டு அரங்கத்திற்கோ சந்தைக்கோ வரும் ஆட்கள் ஒரே இடத்தில் கொஞ்ச நேரம் ஒன்றாக இருப்பது போல் அல்ல. ஏனென்றால், உண்மையான ஒற்றுமையில் நிறைய அடங்கியுள்ளது. யெகோவாவின் அறிவுரையைப் பின்பற்றி கடவுளுடைய சக்தியின் வழிநடத்தலுக்கு இசைய நடக்கும்போது நம் மத்தியில் அந்த உண்மையான ஒற்றுமை பிறக்கிறது.
7. ‘ஒற்றுமையைக் காத்துக்கொள்ள’ நாம் என்ன செய்ய வேண்டும்?
7 கிறிஸ்துவுடைய மீட்கும்விலையின் அடிப்படையில் யெகோவா நம்மை நீதிமான்களாக அங்கீகரித்திருக்கிறார். அதனால்தான், பரலோக நம்பிக்கை உள்ள கிறிஸ்தவர்களை மகன்களாகவும் வேறே ஆடுகளை நண்பர்களாகவும் கருதுகிறார். இருந்தாலும், இந்தப் பொல்லாத உலகத்தில் வாழும்வரை நம் மத்தியில் கருத்துவேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். (ரோ. 5:9; யாக். 2:23) அதனால்தான், ‘ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. நம்முடைய சகோதரர்களோடு ஒற்றுமையாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? ‘எப்போதும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும்’ வளர்த்துக்கொள்ள வேண்டும். ‘ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானத்தோடு வாழ்வதற்கும் ஊக்கமாய் முயற்சி செய்யும்படி’ பவுலும் நம்மை உற்சாகப்படுத்துகிறார். (எபேசியர் 4:1-3-ஐ வாசியுங்கள்.) அந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு ஒரு வழி, கடவுளுடைய சக்தியின் வழிநடத்தலுக்கு இசைய வாழ்வதும், அந்தச் சக்தி பிறப்பிக்கிற குணங்களை வெளிக்காட்டுவதும் ஆகும். இந்தக் குணங்கள் மனிதர்களுக்கிடையே ஏற்படும் விரிசல்களை ஒட்டவைக்கும். ஆனால், பாவ இயல்புக்குரிய செயல்கள் மனிதர்களுக்கிடையே விரிசல்களை ஏற்படுத்தும்.
8. பாவ இயல்புக்குரிய செயல்கள் எந்த விதங்களில் ஒற்றுமையைக் குலைக்கின்றன?
8 “பாவ இயல்புக்குரிய செயல்கள்” எப்படி ஒற்றுமையைக் குலைக்கின்றன என்பதைக் கவனியுங்கள். (கலாத்தியர் 5:19-21-ஐ வாசியுங்கள்.) பாலியல் முறைகேடு ஒருவரை யெகோவாவிடமிருந்தும் சபையாரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது. மணத்துணைக்குத் துரோகம் செய்வது ஒருவரை அவருடைய துணையிடமிருந்து பிரித்துவிடுகிறது. பிள்ளைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்துவிடுகிறது. அசுத்தமான நடத்தை ஒருவரை கடவுளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிரித்துவிடுகிறது. இரண்டு பொருள்களை ஒட்டுவதற்கு முன்பு அவற்றின் மேற்பரப்பு சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவை நன்றாக ஒட்டிக்கொள்ளும். வெட்கங்கெட்ட காரியங்களில் துணிகரமாக ஈடுபடும் ஒருவர் கடவுளுடைய நீதியான சட்டங்களைத் துளியும் மதிக்காததைக் காட்டுகிறார். பாவ இயல்புக்குரிய செயல்கள் ஒவ்வொன்றுமே கடவுளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் ஒருவரைப் பிரித்துவிடுகிறது. இப்படிப்பட்ட செயல்கள் யெகோவாவின் சுபாவத்திற்கு முற்றிலும் நேர்மாறானவை.
9. ‘கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு ஊக்கமாய்’ முயற்சி செய்கிறோமா என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
9 எனவே, நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘“கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானத்தோடு வாழ்வதற்கும்” நான் ஊக்கமாய் முயற்சி செய்கிறேனா? மற்றவர்களோடு எனக்குப் பிரச்சினை வரும்போது நான் என்ன செய்கிறேன்? என் நண்பர்களுடைய ஆதரவைச் சம்பாதிப்பதற்காக அந்தப் பிரச்சினையைப் பற்றி எல்லாரிடமும் சொல்லி புலம்புகிறேனா? சம்பந்தப்பட்டவருடன் நானே அந்தப் பிரச்சினையைப் பேசித் தீர்க்காமல் மூப்பர்கள் என் சார்பாகப் பேசி பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேனா? யாருக்காவது என்மீது மனஸ்தாபம் இருப்பது தெரிந்தால் அவருடன் பேசித் தீர்த்துக்கொள்ளாமல் அவரிடமிருந்து விலகி விலகிப் போகிறேனா?’ இப்படியெல்லாம் நாம் நடந்துகொண்டால், மீண்டும் கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றையும் கூட்டிச்சேர்ப்பதற்கான யெகோவாவின் நோக்கத்திற்கு இசைவாக செயல்படுகிறோம் என்று சொல்ல முடியுமா?
10, 11. (அ) நம் சகோதரர்களோடு எப்போதும் ஒற்றுமையாய் இருப்பது ஏன் அந்தளவு முக்கியம்? (ஆ) சமாதானத்தையும், யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
10 “உங்கள் காணிக்கையைச் செலுத்த பலிபீடத்திற்கு நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மீது ஏதோ மனக்குறை இருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால், அங்கேயே அந்தப் பலிபீடத்திற்குமுன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனிடம் சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். . . . சீக்கிரமாகச் சமரசம் செய்துகொள்ளுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:23-25) “சமாதானம் பண்ணுகிறவர்கள் சமாதானச் சூழலில் நீதியின் விதையை விதைத்து, அதன் கனியை அறுவடை செய்வார்கள்” என்று யாக்கோபு எழுதினார். (யாக். 3:17, 18) ஆகவே, மற்றவர்களோடு நாம் சமாதானமாக இல்லாவிட்டால் நம்மால் எப்போதும் நீதியின் வழியில் நடக்க முடியாது.
11 உதாரணத்திற்கு, போர் நடந்த சில நாடுகளில், 35 சதவீதத்துக்கும் அதிகமான நிலப்பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைந்து கிடப்பதால் பயிர் செய்ய முடியாமல் இருக்கிறது. ஒரு பகுதியில் கண்ணிவெடி வெடிக்கும்போது விவசாயிகள் அந்த நிலத்தில் பயிர் செய்வதை நிறுத்திவிடுகிறார்கள். கிராமத்தில் அவர்களுக்கு வேறு எந்த வேலையும் கிடைப்பதில்லை. விவசாயம் நின்றுபோய்விடுவதால் நகரங்களில் வாழ்பவர்களுக்கு உணவும் கிடைப்பதில்லை. அதைப் போலவே, நம்மிடம் கெட்ட குணங்கள் இருந்தால் மற்றவர்களிடம் சமாதானமாக இருக்க முடியாது. அதனால், நம்முடைய ஆன்மீக வளர்ச்சி தடைபடும். அதற்குப் பதிலாக, மற்றவர்களை உடனடியாக மன்னித்து அவர்களுக்கு எப்போதும் நல்லதையே செய்தால் சமாதானத்தையும் யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் நாம் பெறுவோம்.
12. நாம் ஒற்றுமையாய் இருப்பதற்கு மூப்பர்கள் எவ்வாறு உதவுகிறார்கள்?
12 கடவுள் தந்த ‘பரிசுகளாக இருக்கும் மனிதர்கள்’ நாம் ஒற்றுமையாய் இருக்க பெரிதும் உதவுகிறார்கள். ‘நாமெல்லாரும் விசுவாசத்தில் ஒன்றுபடுவதற்காக’ அவர்களைக் கடவுள் நமக்காகக் கொடுத்திருக்கிறார். (எபே. 4:8, 13) மூப்பர்கள் நம்மோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போதும்... கடவுளுடைய வார்த்தையிலிருந்து நமக்குத் தேவையான ஆலோசனையைக் கொடுக்கும்போதும்... புதிய சுபாவத்தை இன்னும் முழுமையாய் அணிந்துகொள்ள நமக்கு உதவுகிறார்கள். (எபே. 4:22-24) பூஞ்சோலை பூமியில் தமது மகனுடைய ஆட்சியின்கீழ் வாழ்வதற்காக மூப்பர்கள் தரும் ஆலோசனை மூலம் யெகோவா நம்மைத் தயார்படுத்துவதை உங்களால் பார்க்க முடிகிறதா? மூப்பர்களே... இந்த நோக்கத்தோடுதான் நீங்களும் மற்றவர்களைச் சரிப்படுத்துகிறீர்களா?—கலா. 6:1.
‘ஒருவருக்கொருவர் கருணை காட்டுங்கள்’
13. எபேசியர் 4:25-32-லுள்ள ஆலோசனைக்குக் கீழ்ப்படியாவிட்டால் என்ன நேரிடும்?
13 எபேசியர் 4:25-29-லுள்ள வசனங்கள் நாம் முக்கியமாகத் தவிர்க்கவேண்டிய சில விஷயங்களைப் பட்டியலிடுகின்றன. பொய் பேசுவது, எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, சோம்பேறித்தனமாக இருப்பது, மற்றவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளைப் பேசாமல் கெட்ட வார்த்தைகளைப் பேசுவது ஆகியவையெல்லாம் அதில் அடங்கும். எபேசியர் 4:25-29-ல் உள்ள ஆலோசனைக்கு ஒருவர் கீழ்ப்படியாமல்போனால் கடவுளுடைய சக்தியைத் துக்கப்படுத்திவிடுவார். ஏனென்றால், கடவுளுடைய சக்தி ஒற்றுமைக்கு வழிசெய்கிறது. (எபே. 4:30) அதோடு, சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க பவுல் தரும் ஆலோசனையையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்: “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான துர்குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள். ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்; கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்.”—எபே. 4:31, 32.
14. (அ) ‘கருணை காட்டுங்கள்’ என்ற வார்த்தைகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன? (ஆ) கருணை காட்ட நமக்கு எது உதவும்?
14 ‘கருணை காட்டுங்கள்’ என்ற வார்த்தைகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன? கருணை காட்ட சில சமயங்களில் நாம் தவறிவிடுவதால் அதில் இன்னும் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. எனவே, நம்முடைய உணர்ச்சிகளைவிட மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்! (பிலி. 2:4) சில சமயங்களில், மற்றவர்களைச் சிரிக்க வைப்பதற்கு அல்லது நாலு பேருக்கு முன் நம்மைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்குச் சில விஷயங்களை நாம் சொல்ல நினைக்கலாம். அது மற்றவர்களைப் புண்படுத்தும் என்றால் அதைச் சொல்லாமல் இருப்பது நல்லது. எனவே, வார்த்தைகளை அள்ளிக்கொட்டுவதற்கு முன்பு யோசிப்பது மற்றவர்களிடம் ‘கருணை காட்ட’ நமக்கு உதவும்.
குடும்பத்தில் அன்பையும் மரியாதையும் காட்டக் கற்றுக்கொள்ளுங்கள்
15. கிறிஸ்துவைப் பின்பற்ற எபேசியர் 5:28 கணவர்களுக்கு எப்படி உதவுகிறது?
15 கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவை, கணவன்-மனைவிக்கு இடையே உள்ள உறவோடு ஒப்பிட்டு பைபிள் பேசுகிறது. எனவே, மனைவியைக் கணவன் எல்லா விஷயங்களிலும் வழிநடத்தி அவள்மீது அன்பைப் பொழிந்து, அவளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்... மனைவியும் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்... என்று புரிந்துகொள்கிறோம். (எபே. 5:22-33) ‘அவ்வாறே, கணவர்கள் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்று பவுல் எழுதினார். “அவ்வாறே” என்று பவுல் எழுதியபோது எதை அர்த்தப்படுத்தினார்? (எபே. 5:28) இதற்கு முன்பு அவர் சொன்ன வார்த்தைகளில் அதற்குப் பதில் இருக்கிறது: ‘சபைக்காகக் கிறிஸ்து தம்மையே அர்ப்பணிக்கும் அளவுக்கு அதன்மீது அன்பு காட்டி, . . . கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரினால் சபையை அவர் சுத்தப்படுத்தினார்.’ அப்படியானால், தன் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தைக் கொண்டிருக்க கணவன் உதவ வேண்டும். அப்போதுதான், மீண்டும் கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றையும் கூட்டிச்சேர்க்க வேண்டும் என்ற யெகோவாவின் நோக்கத்திற்கு இசைவாக அவர் செயல்படுவதாகச் சொல்ல முடியும்.
16. கடவுள் கொடுத்த பொறுப்பைப் பெற்றோர் சரிவர நிறைவேற்றினால் என்ன பலன் பெறுவார்கள்?
16 பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டும். அது யெகோவா அவர்களுக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பு. அதைப் பெற்றோர் எப்போதும் மனதில் வைக்க வேண்டும். ஆனால், இன்று நிறையப் பேருக்கு ‘பந்தபாசமே இல்லாததுதான்’ சோகம். (2 தீ. 3:1, 3) அநேக அப்பாக்கள், தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதால் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள், ஆம், கதிகலங்கிப்போகிறார்கள். ஆனால், கிறிஸ்தவத் தகப்பன்களுக்கு பவுல் இவ்வாறு ஆலோசனை கொடுத்தார்: “உங்களுடைய பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டாதீர்கள்; மாறாக, யெகோவாவுக்கு ஏற்ற முறையில் அவர்களைக் கண்டித்து, அவருடைய சிந்தையை அவர்களுடைய மனதில் பதிய வைக்கும் விதத்தில் வளர்த்து வாருங்கள்.” (எபே. 6:4) அன்பையும், அதிகாரத்திற்கு மரியாதையையும் காட்ட பிள்ளைகள் முதலில் குடும்பத்தில்தான் கற்றுக்கொள்கிறார்கள். இதையெல்லாம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்றால் யெகோவாவின் நிர்வாகத்தோடு ஒத்துழைக்கிறார்கள் என்று சொல்லலாம். எல்லா விதமான சினத்தையும், கடுங்கோபத்தையும், பழிப்பேச்சையும் விட்டொழித்து, நம் வீட்டை அன்பின் புகலிடமாக ஆக்கினால்... அன்பையும், அதிகாரத்திற்கு மரியாதையும் காட்ட நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்போம். இப்படிச் செய்யும்போது, புதிய உலகில் வாழ்வதற்காக அவர்களைத் தயார்படுத்துவோம்.
17. பிசாசை எதிர்த்து நிற்க நாம் என்ன செய்ய வேண்டும்?
17 இந்தப் பிரபஞ்சத்தில் நிலவிய சமாதானத்தை முதன்முதலில் கெடுத்தவன் பிசாசு என்பதால்... கடவுளுடைய சித்தத்தைச் செய்யவிடாமல் நம்மைத் தடுக்க அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். விவாகரத்து எண்ணிக்கைகளில் ஏற்றம்... திருமணம் செய்யாமலேயே ஒன்றுசேர்ந்து வாழ்வது... ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வது... போன்ற காரியங்கள் சர்வசாதாரணமாக நடப்பது சாத்தான் தன் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறான் என்பதைக் காட்டுகின்றன. இன்றைய உலகம் போற்றிப் புகழ்கிற பழக்கவழக்கங்களையும், மனப்பான்மைகளையும் நாம் ஒருபோதும் பின்பற்ற மாட்டோம். நாம் கிறிஸ்துவையே பின்பற்றுவோம். (எபே. 4:17-21) எனவேதான், பிசாசையும் அவனுடைய பேய்களையும் உறுதியாய் எதிர்த்து நிற்பதற்கு, ‘கடவுள் தருகிற முழு கவசத்தையும் அணிந்துகொள்ளும்படி’ அறிவுறுத்தப்படுகிறோம்.—எபேசியர் 6:10-13-ஐ வாசியுங்கள்.
“தொடர்ந்து அன்பு காட்டுங்கள்”
18. கிறிஸ்தவ ஒற்றுமைக்கு எது அஸ்திவாரமாக இருக்கிறது?
18 கிறிஸ்தவ ஒற்றுமைக்கு அன்பே அஸ்திவாரமாக இருக்கிறது. நம்முடைய ‘ஒரே எஜமானர்’ மீதும், ‘ஒரே கடவுள்’ மீதும், சகோதர சகோதரிகள் மீதும் நம் நெஞ்சில் அன்பு பொங்கி வழிவதால் “கடவுளுடைய சக்தி அருளும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானத்தோடு வாழ்வதற்கும்” நாம் உறுதியாய் இருக்கிறோம். (எபே. 4:3-6) அத்தகைய அன்பைப் பற்றியே இயேசு தம் ஜெபத்தில் குறிப்பிட்டார். “இவர்களுக்காக மட்டுமல்ல, இவர்களுடைய வார்த்தையைக் கேட்டு என்மீது விசுவாசம் வைப்பவர்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்; தகப்பனே, . . . நீங்கள் என்னோடும் நான் உங்களோடும் ஒன்றுபட்டிருப்பது போலவே அவர்களும் நம்மோடு ஒன்றுபட்டிருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் என்மீது காட்டிய அன்பை இவர்கள் காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும் இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்” என்றார்.—யோவா. 17:20, 21, 26.
19. என்ன செய்ய நீங்கள் தீர்மானமாய் இருக்கிறீர்கள்?
19 நம்முடைய அபூரணத்தின் காரணமாக நம்மிடம் உள்ள சில கெட்ட குணங்களை மாற்றிக்கொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதுபோன்ற சமயங்களில், “நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” என்று சங்கீதக்காரனைப் போல் ஜெபம் செய்ய அன்பு நம்மைத் தூண்ட வேண்டும். (சங். 86:11) நம்முடைய அன்பான பரலோகத் தகப்பனிடமிருந்தும், அவரிடம் நற்பெயர் சம்பாதித்திருப்பவர்களிடமிருந்தும் நம்மைப் பிரிப்பதற்கு பிசாசு எடுக்கும் எல்லா முயற்சிகளையும் எதிர்த்துப் போராட நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும். குடும்பத்திலும் ஊழியத்திலும் சபையிலும் ‘அன்புக்குரிய பிள்ளைகளாகக் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றி, . . . தொடர்ந்து அன்பு காட்ட’ கடினமாக உழைக்க வேண்டும்.—எபே. 5:1, 2.
[பக்கம் 29-ன் படம்]
பலிபீடத்துக்கு அருகே தன் காணிக்கையை வைத்துவிட்டு தன் சகோதரனோடு சமாதானமாவதற்குப் போகிறார்
[பக்கம் 31-ன் படம்]
பெற்றோர்களே... மரியாதை காட்ட பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்