எப்போது தாக்கப்படுதல் நிறுத்தப்படும்
சரித்திரத்தில் எப்போதிலிருந்து மனைவியைத் தகாத முறையில் நடத்துவது இருந்து வந்திருக்கிறது? தங்கள் மனைவிமார்களை அடிப்பதற்கு கணவன்மார்களுக்கு அனுமதியளித்த எழுத்துருவிலிருந்த முற்பட்ட சட்டமாக கருதப்படுவது பொ.ச.மு. 2500 ஆண்டினுடையது என்பதாக ஒரு மூல ஆதார ஏடு குறிப்பிடுகிறது.
பொ.ச.மு. 1700-ல், பாபிலோனிய புறமத அரசனாகிய ஹமுராபி, ஓர் ஆண்மகனைக் கட்டுப்படுத்திய சுமார் 300 சட்டப்பூர்வமான நிபந்தனைகள் அடங்கிய பிரபலமான ஹமுராபி சட்டத் தொகுப்பை இயற்றினான். ஒரு மனைவி, எந்த ஒரு தவறுக்காகவும் தன் மீது தண்டனையைச் சுமத்துவதற்கு சட்டப்படி உரிமையுடைய தன் கணவனுக்கு முழுவதுமாக கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்பதாக சட்டத்தொகுப்பு அதிகாரப்பூர்வமாக தீர்ப்பளித்திருந்தது.
ரோம சாம்ராஜ்யத்தின் காலத்துக்கு முன்னோக்கி வருகையில், குடும்பத்தலைவனுக்குரிய ரோம பேரரசின் சட்டத் தொகுப்பு வலியுறுத்தியதாவது: “நீ உன் மனைவியின் விபச்சாரத்தைக் கண்டுபிடித்தால், எந்தவித தண்டனையுமின்றி, விசாரிக்காமலே நீ அவளின் உயிரை மாய்த்துவிடலாம். ஆனால் நீ விபச்சாரத்தை நடப்பித்தாலோ கேவலமாக நடந்துகொண்டாலோ அவள் உன் மீது விரலை வைக்கவும் துணிகரங்கொள்ளக்கூடாது, சட்டமும் அதை அனுமதிக்காது.”
தங்களுடைய மனைவிமார்கள் ஒரு குற்றமிழைப்பதைப் பார்க்கும் கணவன்மார்கள், “முதலில் கொடுமைப்படுத்தி அவளை பயமுறுத்தவும்” பின்னர் “ஒரு பிரம்பை எடுத்து அவளைச் செம்மையாக அடிக்கும்”படியாகவும் 15-வது நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு திருமண கையேடு பரிந்துரைச் செய்தது.
இங்கிலாந்தில், 19-வது நூற்றாண்டு சட்ட மன்ற உறுப்பினர்கள், சட்டப்படி பிரம்பு எவ்வளவு தடிப்பாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதன் மூலம் பெண்களின் துயரத்தைக் குறைக்க முற்பட்டனர். கட்டைவிரல் சட்டத்தின் விதி என்றழைக்கப்பட்ட ஒன்றை அவர்கள் உருவாக்கினார்கள். இது, ஒரு மனிதனை “அவனுடைய கட்டைவிரலின் அளவு தடிப்பான” பிரம்பினாலேயே தன் மனைவியை அடிப்பதை அனுமதித்தது.
அநேக தேசங்களில் இன்று மனைவியை அடிப்பதற்கு சட்டத்தின் பாதுகாப்பு இனிமேலும் கணவன்மார்களுக்கு இல்லாதபோதிலும் இந்தச் சரித்திர பாரம்பரியங்கள் பூமியின் பல பாகங்களிலும் இன்னும் இருந்து வருகிறது. CBS-டெலிவிஷன் செய்தி அறிக்கையின்படி, ஆண்கள் பெண்களை பூஜிக்கும் நாடு பிரேஸிலாகும். என்றபோதிலும், மனச்சாட்சியின் உறுத்தலின்றி இவர்கள் கீழ்த்தரமாக தகாத முறையில் நடத்தப்படவும், அடிக்கப்படவும் கொல்லப்படிவும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட நடத்தை, பொது நீதி வழக்குமன்றங்கள் உட்பட சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் காணப்படுவதாக அறிக்கை தொடர்ந்து கூறுகின்றது. “தன் மதிப்பைத் தற்காத்துக் கொள்வதில்” ஒரு மனிதன், குறிப்பாக அவனுடைய பலியாள், அவனுடைய மனைவியாக இருக்கையில் கொலை செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம். ஒரு செய்தி நிருபர் சொன்னதாவது: “கொலைக்காரர்களில் பலர் காடுகளில் வாசஞ்செய்யும் நாகரீகம் தெரியாதவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் தொழில்புரியும், கல்வியறிவுள்ள ஆட்களாவர்.”
‘தன்மதிப்பைக் காத்துக் கொள்வது’ என்பது கணவனின் உத்தரவுகளை சிறிதே மீறிவிடுவதாலும் கூட தூண்டப்படலாம்—நேரத்துக்கு இரவு உணவு தயாராக இல்லாதிருப்பது, தனியாக வெளியே செல்வது, ஒரு வேலையை அல்லது பல்கலைக்கழக பட்டத்தை பெறுவது, அல்லது “அவன் விரும்புகின்ற ஒவ்வொரு விதமான உடலுறவுக்கும் சம்மதிக்க தவறுவது.”
கடவுளுடைய சட்டமும் கிறிஸ்தவ நோக்குநிலையும்
புருஷர்கள், “கிறிஸ்து சபையில் அன்புகூர்ந்தது போல [அவர்கள்] மனைவிகளில் அன்புகூர வேண்டும் . . . புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்” என்பதை பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (எபேசியர் 5:25, 28, 29) இந்தச் சட்டமானது கடந்த காலத்திலும் தற்காலத்திலுமுள்ள எல்லா மனித சட்டங்களையும் ஒதுக்கிவிடுகிறது.
நிச்சயமாகவே எந்த ஒரு கிறிஸ்தவ கணவனும், அவன் தகாத விதத்தில் நடத்தும் மனைவியில் இன்னும் அன்புகூருவதாக வாதாட முடியாது. மனைவியை தகாத விதத்தில் நடத்துகிறவன் அவன் தன்னைத்தானே உண்மையில் நேசிப்பதன் காரணமாக, தன் சொந்த உடலை அடித்து—தன் முடியை பிடித்து இழுத்து முகத்திலும் உடம்பிலும் தன்னைக் குத்திக் கொள்வானா? மனைவியை அடிக்கிற ஒருவன் மற்றவர்களிடம்—வெளியே இருக்கும் குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், மற்றும் மற்ற கிறிஸ்தவர்களிடம்—அவன் தன் மனைவியை அவ்வளவு நேசிப்பதன் காரணமாக அவ்வப்போது அவளை அடித்து அவளுக்கு சரீர உபாதைகளை ஏற்படுத்துவான் என்பதாக தாராளமாகச் சொல்வானா? அல்லது மாறாக, எவரிடமும் சொல்லக்கூடாது என்பதற்காக தன் மனைவியை மிரட்டி வைப்பானா? ஒரு தகப்பன் தான் மனைவியை நடத்தும் விதத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்பதாக பிள்ளைகளிடம் ஆணையிட்டு உறுதியைப் பெற்றுக் கொள்வானா? அல்லது அவ்விதமாகச் செய்ய அவர்கள் வெட்கப்படுவார்களா? அவன் உண்மையில் தன் மனைவியை நேசிப்பதாக உரிமைப்பாராட்டுவதை அவனுடைய செயல்கள் பொய்யாக்குகின்றனவா? ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது இயல்பாகும். மனைவியை தகாதமுறையில் நடத்துவது அவ்விதமாக இல்லை.
கடைசியாக ஒரு கிறிஸ்தவன் தன் மனைவியை அடிப்பானேயானால், இது கடவுளுடைய பார்வையில் அவனுடைய மற்ற எல்லாக் கிறிஸ்தவ கிரியைகளையும் பயனற்றதாக்கிவிடுகிறதல்லவா? “அடிக்கிறவன்” கிறிஸ்தவ சபையில் சிலாக்கியங்களுக்குத் தகுதியற்றவன் என்பது நினைவிலிருக்கட்டும். (1 தீமோத்தேயு 3:3; 1 கொரிந்தியர் 13:1–3; எபேசியர் 5:28) மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்களை அடிப்பதை சுட்டிக்காட்டும் அறிக்கைகளும்கூட இந்தக் காரிய ஒழுங்கில் இருக்கின்றன. இதே கேள்விகள் இப்படிப்பட்ட மனைவிகளுக்கும் பொருந்துமல்லவா?
கணவன்மார்களும் மனைவிமார்களும் இப்பொழுது அவர்களுடைய ஒன்றுசேர்ந்த வாழ்க்கையில் ஆவியின் கனிகளை வெளிப்படுத்துவது எத்தனை இன்றியமையாதது: “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்”! (கலாத்தியர் 5:22, 23) இந்தக் கனிகளை இப்பொழுது நம்மால் பிறப்பிக்க முடியுமானால், முடிவில்லாமல் அனைவருமே ஒன்றாக சமாதானத்திலும், அன்பிலும் அந்தப் பரதீஸிய பூமியில் நாம் வாழ்வதற்கான எதிர்பார்ப்பு நம்பிக்கையூட்டுவதாக இருக்கும். (g88 11⁄22)
[பக்கம் 28-ன் படம்]
கிறிஸ்தவ கணவன்மார்கள் ‘தங்கள் மனைவிகளில் தங்கள் சொந்த சரீரங்களைப் போல அன்புகூருகிறார்கள்.’ “அடிப்பதற்கு அனுமதியில்லை!” என்பதை இது அர்த்தப்படுத்துகிறது