யெகோவா—“அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டு” அறிவிப்பவர்
“அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கிறேன்.”—ஏசாயா 46:10.
1, 2. பாபிலோன் கைப்பற்றப்பட்டபோது நிகழ்ந்த சம்பவங்களின் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன, இது யெகோவாவைப் பற்றி என்ன தெரிவிக்கிறது?
இரவுப்பொழுது. கும்மிருட்டு. எதிரிநாட்டு வீரர்கள் ஐப்பிராத்து நதிப்படுகை வழியே தாங்கள் தாக்கப்போகும் இடத்தை நோக்கி, அதாவது, மாபெரும் பாபிலோன் நகரை நோக்கி பதுங்கிப் பதுங்கிச் செல்கிறார்கள். அதன் நுழைவாயிலை நெருங்கியபோது, அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. ஏன்? பாபிலோன் மதிற்சுவரின் ராட்சத இரட்டைக் கதவுகள் திறந்தே விடப்பட்டிருக்கின்றன! நதிப்படுகையிலிருந்து அவர்கள் மளமளவென்று மேலே ஏறுகிறார்கள்; நகருக்குள் நுழைகிறார்கள். நொடிப்பொழுதில் நகரைக் கைப்பற்றிவிடுகிறார்கள். அந்தப் படைவீரர்களின் தலைவரான கோரேஸ், அந்நகரை உடனடியாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார். சிறைப்பட்டுக்கிடந்த இஸ்ரவேலரை விடுவிக்க பிற்பாடு ஆணை பிறப்பிக்கிறார். நாடுகடத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அந்த இஸ்ரவேலர் தங்கள் தாயகமான எருசலேமுக்குச் சென்று யெகோவாவின் வணக்கத்தை மீண்டும் துவங்குகிறார்கள்.—2 நாளாகமம் 36:22, 23; எஸ்றா 1:1-4.
2 இச்சம்பவங்கள் அனைத்தும், பொ.ச.மு. 539-537-ல் உண்மையிலேயே நடந்தன என்பதற்குச் சரித்திராசிரியர்கள் சான்றளிக்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்குமென்று சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததே குறிப்பிடத்தக்க விஷயமாகும். அத்தனை வருடங்களுக்கு முன்பே தம்முடைய தீர்க்கதரிசியான ஏசாயா மூலம் பாபிலோனின் வீழ்ச்சி பற்றி யெகோவா விவரித்திருந்தார். (ஏசாயா 44:24–45:7) பாபிலோன் கைப்பற்றப்படும்போது நிகழும் சம்பவங்களைப் பற்றி மட்டுமல்ல, அதைக் கைப்பற்றவிருந்த தலைவருடைய பெயரையும் யெகோவா வெளிப்படுத்தியிருந்தார்.a தமக்குச் சாட்சிகளாக இருந்த இஸ்ரவேலரிடம் யெகோவா இப்படிச் சொன்னார்: “முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கிறேன்.” (ஏசாயா 46:9, 10அ) ஆம், நடக்கப்போகிற சம்பவங்களை வெகு காலத்திற்கு முன்னரே அறிந்துகொள்ளும் சக்திபடைத்த கடவுள்தான் யெகோவா.
3. என்ன கேள்விகளுக்கான பதில்களை இப்போது நாம் சிந்திக்கப்போகிறோம்?
3 எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களைப் பற்றி யெகோவாவுக்கு எந்தளவு தெரியும்? நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யப்போகிறோம் என்பது முன்கூட்டியே அவருக்குத் தெரியுமா? நம் எதிர்காலம் முன்விதிக்கப்பட்டிருக்கிறதா? இவற்றிற்கும் இது சம்பந்தமான மற்ற கேள்விகளுக்கும் பைபிள் தரும் பதில்களை இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் நாம் சிந்திக்கப்போகிறோம்.
யெகோவா—தீர்க்கதரிசனம் உரைக்கிற கடவுள்
4. பைபிளிலுள்ள தீர்க்கதரிசனங்களின் ஊற்றுமூலர் யார்?
4 யெகோவாவுக்கு எதிர்காலத்தை முன்னறிய முடியும் என்பதால், தம்முடைய பண்டைய ஊழியர்களை ஏவி, ஏராளமான தீர்க்கதரிசனங்களை பைபிளில் பதிவுசெய்திருக்கிறார்; இந்தத் தீர்க்கதரிசனங்கள் வாயிலாக யெகோவாவின் நோக்கங்களை நம்மால் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிகிறது. யெகோவா இவ்வாறு தெரிவிக்கிறார்: “பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (ஏசாயா 42:9) எப்பேர்ப்பட்ட பாக்கியம் கடவுளுடைய ஜனங்களுக்கு!
5. யெகோவா என்ன செய்யப்போகிறார் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஒருவருக்கு, அத்துடன் என்ன பொறுப்பும் வருகிறது?
5 ஆமோஸ் தீர்க்கதரிசி இப்படி உறுதி அளிக்கிறார்: “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.” அவ்வாறு முன்கூட்டியே அறிந்துகொள்பவர்களுக்கு அத்துடன் ஒரு பொறுப்பும் வருகிறது. அடுத்ததாக ஆமோஸ் பயன்படுத்துகிற வலிமையான ஓர் உதாரணத்திலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். “சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்?” என்ற கேள்வியை அவர் கேட்கிறார். ஒரு சிங்கம் கெர்ச்சிப்பதைக் கேட்டதுமே சுற்றுவட்டாரத்திலுள்ள மனிதரோ மிருகமோ உடனடியாகச் செயல்படுவதைப் போல, ஆமோஸ் போன்ற தீர்க்கதரிசிகள் யெகோவாவின் பிரகடனங்களைக் கேட்டதுமே உடனடியாக அவற்றை அறிவித்தார்கள். “கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?”—ஆமோஸ் 3:7, 8.
யெகோவாவின் வார்த்தை “வாய்க்கும்”
6. பாபிலோனை வீழ்த்துவதற்கான யெகோவாவின் “ஆலோசனை” எவ்விதத்தில் நிறைவேறியது?
6 தமது தீர்க்கதரிசியான ஏசாயா மூலம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்.” (ஏசாயா 46:10ஆ) பாபிலோனுடைய விஷயத்தில் யெகோவாவுடைய “ஆலோசனை,” அதாவது அவருடைய சித்தம் அல்லது நோக்கம் என்னவாக இருந்தது? பெர்சியாவிலிருந்து கோரேஸை வரவழைத்து, பாபிலோனைக் கைப்பற்ற வைத்து, அதை வீழ்த்த வேண்டுமென்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தை வெகு காலத்திற்கு முன்பே யெகோவா அறிவித்தார். முன்னர் குறிப்பிட்டபடி, அந்த நோக்கம் பொ.ச.மு. 539-ல் படுதுல்லியமாக நிறைவேறியது.
7. யெகோவாவின் வார்த்தை எப்போதுமே வாய்க்கும் என நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
7 பாபிலோனை கோரேஸ் கைப்பற்றுவதற்கு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர், அம்மோன் மற்றும் மோவாபிய படைகள் யூத ராஜாவான யோசபாத்திற்கு எதிராகப் போரிட வந்தன. அப்போது யோசபாத் நம்பிக்கையுடன் இவ்வாறு ஜெபித்தார்: ‘எங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக்கூடாது.’ (2 நாளாகமம் 20:6) ஏசாயாவுக்கும் யெகோவாமீது அதேபோன்ற நம்பிக்கை இருந்தது; அதை இவ்வாறு தெரிவித்தார்: ‘சேனைகளின் யெகோவா இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?’ (ஏசாயா 14:27) புத்தி பேதலித்துப் போயிருந்த பாபிலோனிய ராஜாவான நேபுகாத்நேச்சார் புத்திதெளிந்த பிறகு மனத்தாழ்மையோடு இவ்வாறு ஒப்புக்கொண்டார்: ‘தேவனுடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை.’ (தானியேல் 4:35) ஆம், யெகோவா தம் மக்களுக்கு உறுதி அளிப்பது இதுவே: ‘என் வசனம் [அதாவது, வார்த்தை] வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.’ (ஏசாயா 55:11) ஆக, யெகோவாவுடைய வார்த்தை ஒருகாலும் தவறிப்போகாது என நாம் முழு நிச்சயத்துடன் இருக்கலாம். அவருடைய நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும்.
கடவுளுடைய ‘நித்திய நோக்கம்’
8. கடவுளுடைய ‘நித்திய நோக்கம்’ எதைக் குறிக்கிறது?
8 எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கடிதம் எழுதியபோது கடவுளைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்; அவருக்கு ஒரு ‘நித்திய நோக்கம்’ இருந்ததென குறிப்பிட்டார். (எபேசியர் 3:11, NW) தாம் நினைத்ததை நிறைவேற்றுவதற்காக என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் யெகோவா வெறுமனே திட்டமிடுகிறார் என அது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, மனிதகுலத்திற்கும் பூமிக்குமான அவருடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவதற்குரிய அவருடைய திடத்தீர்மானத்தையே அது குறிக்கிறது. (ஆதியாகமம் 1:28) அந்த நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் தீர்க்கதரிசனத்தைச் சற்று கவனியுங்கள்.
9. ஆதியாகமம் 3:15 கடவுளுடைய நோக்கத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
9 ஆதியாகமம் 3:15-லுள்ள வாக்குறுதி சுட்டிக்காட்டுகிறபடி, தமது அடையாளப்பூர்வ ஸ்திரீ ஒரு வித்துவை, அதாவது ஒரு மகனைப் பெற்றெடுக்க வேண்டுமென ஆதாம் ஏவாள் பாவம் செய்த உடனேயே யெகோவா தீர்மானித்தார். ஸ்திரீக்கும் சாத்தானுக்கும் இடையேயும், அவர்களுடைய வித்துகளுக்கு இடையேயும் உள்ள பகைமையின் விளைவைக்கூட யெகோவா அச்சமயத்தில் முன்னறிந்திருந்தார். ஸ்திரீயின் வித்துவுடைய குதிங்கால் நசுக்கப்படுவதற்கு அவர் அனுமதித்தாலும், தக்க சமயத்தில் சர்ப்பத்தின் தலை, அதாவது பிசாசாகிய சாத்தானின் தலை அந்த வித்துவால் நசுக்கப்படும்படி செய்வார். இதற்கிடையே, வாக்குப்பண்ணப்பட்டிருந்த மேசியாவாகிய இயேசு, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சாவளியில் பிறக்க வேண்டுமென்ற யெகோவாவுடைய நோக்கம் படிப்படியாக நிறைவேறி வந்தது.—லூக்கா 3:15, 23-38; கலாத்தியர் 4:5.
யெகோவா எவற்றை முன்குறிக்கிறார்
10. ஆதாம் ஏவாள் பாவம் செய்வார்கள் என்று யெகோவா முன்கூட்டியே தீர்மானித்தாரா? விளக்கவும்.
10 கடவுளுடைய நோக்கத்தில் இயேசு வகித்த பங்கைப் பற்றிப் பேசியபோது அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு குறிப்பிட்டார்: “அவர் [இயேசு] உலகத் தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார்.” (1 பேதுரு 1:20) ஆதாம் ஏவாள் பாவம் செய்வார்கள் என்றும், அந்தப் பாவத்திலிருந்து மனிதர்களை மீட்பதற்காக இயேசு கிறிஸ்து பலியாக வேண்டும் என்றும் யெகோவா முன்கூட்டியே தீர்மானித்தாரா? இல்லை. ‘தோற்றம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சொல்லர்த்தமாக “[விதையை] விதைத்தல்” என்று பொருள்படுகிறது. அப்படியானால், ஆதாம் ஏவாள் பாவம் செய்வதற்கு முன்னர் விதை விதைக்கப்பட்டதா, அதாவது மனித சந்ததி கருவில் உருவாக ஆரம்பித்ததா? இல்லை. ஆதாம் ஏவாள் கீழ்ப்படியாமல்போன பிறகுதான் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. (ஆதியாகமம் 4:1) எனவே, ஆதாம் ஏவாளின் கலகச் செயலுக்குப் பின்னர், ஆனால் அவர்களுடைய சந்ததி உருவாவதற்கு முன்னர்தான் ‘வித்துவைப்’ பற்றி யெகோவா தீர்மானித்தார். இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் மீட்கும்பலி என்ற அன்பான ஏற்பாட்டிற்கு வழிவகுத்தன; அதன் மூலம், ஆதாமிலிருந்து வந்துள்ள பாவம் முற்றிலுமாக நீக்கப்படப்போகிறது; சாத்தானுடைய அனைத்து முயற்சிகளும்கூட முற்றிலுமாக முறியடிக்கப்படப் போகின்றன.—மத்தேயு 20:28; எபிரெயர் 2:14; 1 யோவான் 3:8.
11. யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மேலும் என்ன படியை எடுக்க முன்தீர்மானித்தார்?
11 யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மற்றொரு படியை எடுக்க முன்தீர்மானித்தார். அது என்னவென்பதை எபேசியர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் சுட்டிக்காட்டினார்; அதாவது கடவுள், ‘பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலத்தையும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டிச் சேர்க்கப்போகிறார்’ என்று சுட்டிக்காட்டினார். பிறகு, ‘பரலோகத்திலிருக்கிறவைகளை,’ அதாவது கிறிஸ்துவின் சக அரசர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது பவுல் இவ்வாறு விளக்கினார்: ‘தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டிருக்கிறோம்.’ (எபேசியர் 1:9, 12) ஆம், மனிதர்களிலிருந்து கொஞ்சம் பேர் தமது ஸ்திரீயின் வித்துவுடைய இரண்டாம் பாகமாகி, மீட்கும்பலியின் நன்மைகளை வழங்குவதில் கிறிஸ்துவோடு சேர்ந்து கொள்வார்கள் என்பதை யெகோவா முன்தீர்மானித்தார். (ரோமர் 8:28-30) அவர்களை அப்போஸ்தலன் பேதுரு “பரிசுத்த தேசம்” எனக் குறிப்பிடுகிறார். (1 பேதுரு 2:9, NW) கிறிஸ்துவின் சக அரசர்களாய் ஆகப்போகிற அவர்களுடைய எண்ணிக்கை 1,44,000 என்பதை ஒரு தரிசனத்தின் வாயிலாகத் தெரிந்துகொள்ளும் விசேஷ வாய்ப்பு அப்போஸ்தலன் யோவானுக்குக் கிடைத்தது. (வெளிப்படுத்துதல் 7:4-8; 14:1, 3) ராஜாவாகிய கிறிஸ்துவுடன் இணைந்து, ‘கடவுளுடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக’ அவர்கள் சேவை செய்வார்கள்.—எபேசியர் 1:11, 13, 14.
12. பரலோகத்திற்குச் செல்லும் 1,44,000 பேர் யார் யாரென்று முன்விதிக்கப்படவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
12 கிறிஸ்துவின் சக அரசர்களாய் பரலோகத்தில் கடவுளைச் சேவிக்க 1,44,000 பேர் முன்குறிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் யார் யாரெல்லாம் பரலோகத்திற்குச் செல்லப்போகிறார்கள் என்பதை கடவுள் முன்விதித்துவிடவில்லை. ஏனென்றால், பரலோக அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாவதற்குத் தேவையான அறிவுரைகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் வாயிலாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. அவை, தொடர்ந்து உத்தமத்தன்மையைக் காண்பிக்கவும், நிலைத்திருக்கவும் அவர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்தன. (பிலிப்பியர் 2:12; 2 தெசலோனிக்கேயர் 1:5, 12; 2 பேதுரு 1:10, 11) தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக 1,44,000 பேர் தகுதிபெறுவார்கள் என்பது யெகோவாவுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால், அவர்கள் யார்யார் என்பது அந்நபர்களுடைய வாழ்க்கை முறையை வைத்தே முடிவுசெய்யப்படும்; அப்படி வாழ்வது அவரவர் எடுக்க வேண்டிய தனிப்பட்ட தீர்மானமாகும்.—மத்தேயு 24:13.
யெகோவா முன்னறிந்திருக்கிற விஷயங்கள்
13, 14. யெகோவா தமது முன்னறியும் திறனைப் பயன்படுத்துகிற விதம் எதற்கு இசைவாக இருக்கிறது, ஏன்?
13 யெகோவா, தீர்க்கதரிசனம் உரைக்கிற கடவுள்; நோக்கமுள்ள கடவுளும்கூட. எனவே அவர் முன்னறியும் திறன் படைத்தவர் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் இத்திறனை அவர் எப்படிப் பயன்படுத்துகிறார்? முதலாவது, அவருடைய வழிகளெல்லாம் உண்மையானவை, நீதியானவை, அன்பானவை என்ற உறுதி நமக்கு அளிக்கப்படுகிறது. அப்போஸ்தலன் பவுல் பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதியபோது, கடவுளின் “மாறாத் தன்மையுடைய” ஆணை, வாக்குறுதி ஆகிய ‘இவை இரண்டையும் பொறுத்தவரையில் அவர் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது’ என்பதை உறுதிசெய்தார். (எபிரெயர் 6:17, 18, பொது மொழிபெயர்ப்பு) சீஷனாகிய தீத்துவுக்கு எழுதிய கடிதத்தில் ‘தேவன் பொய்யுரையாதவர்’ என்று எழுதியபோது இதை மறுபடியும் உறுதிப்படுத்தினார்.—தீத்து 1:3.
14 யெகோவாவுக்கு அளவிலா வல்லமை இருந்தாலும், அவர் ஒருபோதும் அநீதியாக நடந்துகொள்வதில்லை. “அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்” என்று மோசே அவரைப் பற்றி விவரித்தார். (உபாகமம் 32:4) யெகோவா என்ன செய்தாலும், அது அவருடைய அருமையான சுபாவத்திற்கு இசைவாகவே இருக்கிறது. அவர் செய்வதெல்லாம், அன்பு, ஞானம், நீதி, வல்லமை ஆகிய அவரது முக்கிய பண்புகளுக்கு இசைவாகவே இருக்கிறது.
15, 16. ஏதேன் தோட்டத்தில், ஆதாமுக்கு முன் என்ன தெரிவுகளை யெகோவா வைத்தார்?
15 அந்த முக்கிய குணங்களையெல்லாம் ஏதேன் தோட்டத்தில் அவர் எப்படி வெளிக்காட்டினார் என்பதைக் கவனியுங்கள். யெகோவா ஓர் அன்பான தகப்பனாக, மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையுமே அளித்தார். நன்கு சிந்தித்து, நியாயப்படுத்திப் பார்த்து, ஒரு முடிவுக்கு வரும் திறனோடு ஆதாமைப் படைத்தார். உள்ளுணர்வினால் வழிநடத்தப்படும் மிருக ஜீவன்களைப் போல் இல்லாமல், சுயமாய்த் தெரிவுசெய்யும் திறனோடு ஆதாமைப் படைத்தார். அவனைப் படைத்த பிறகு, தமது பரலோக சிம்மாசனத்திலிருந்து, “தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.”—ஆதியாகமம் 1:26-31; 2 பேதுரு 2:12.
16 ஆதாமிடம் “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின்” கனியைப் புசிக்க வேண்டாமென யெகோவா கட்டளையிட்டபோது, முடிவெடுப்பதற்குத் தேவையான அனைத்து விவரங்களையும் அவனுக்கு அளித்தார். ஒரேயொரு விருட்சத்தின் கனியைத் தவிர, “தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின்” கனியையும் புசிக்கலாம் என்றும், விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசித்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் ஆதாமை எச்சரித்தார். (ஆதியாகமம் 2:16, 17) அவனுடைய செயல்களால் உண்டாகும் பின்விளைவுகளையும் விளக்கினார். ஆதாம் என்ன செய்யத் தீர்மானிப்பான்?
17. தேவையானவற்றை மட்டுமே யெகோவா முன்னறிந்துகொள்ள விரும்புகிறார் என நாம் ஏன் சொல்லலாம்?
17 யெகோவாவுக்கு முன்னறியும் திறன் இருக்கிறபோதிலும், ஆதாம் ஏவாள் என்ன செய்வார்கள் என்பதை முன்னறிய அவர் விரும்பவில்லை. எனவே, யெகோவாவினால் எதிர்காலத்தை முன்னறிய முடியுமா என்பது கேள்வி அல்ல, ஆனால் அப்படி முன்னறிய அவர் விரும்புகிறாரா என்பதே கேள்வி. நியாயமாகப் பார்த்தால், அன்பின் உருவாகத் திகழும் கடவுள் கொடூரமான அந்தக் கலகத்தையும் அதன் சோக விளைவுகளையும் முன்தீர்மானித்திருக்கவே மாட்டார். (மத்தேயு 7:11; 1 யோவான் 4:8) ஆக, தேவையானவற்றை மட்டுமே யெகோவா முன்னறிந்துகொள்ள விரும்புகிறார், எல்லாவற்றையும் அல்ல.
18. யெகோவா எல்லாவற்றையும் முன்னறிவதில்லை என்பதால், அவர் எதிலாவது குறைவுபடுகிறார் என்று அர்த்தமா? ஏன்?
18 யெகோவா எல்லாவற்றையும் முன்னறிவதில்லை என்பதால், அவர் எதிலாவது குறைவுபடுகிறார் என்று அர்த்தமா? இல்லை. யெகோவா ஒரு “கன்மலை” என்றும், “அவர் செயல் நிறைவானது” என்றும் மோசே விவரித்தார். மனிதர்கள் செய்த பாவத்தின் விளைவுகளுக்கு அவர் பொறுப்பாளி அல்ல. ஆதாமின் கீழ்ப்படியாமையால்தான்—அநீதியான அச்செயலால்தான்—இன்று நாம் பாவத்தின் படுமோசமான பாதிப்புகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது” என அப்போஸ்தலன் பவுல் தெளிவாகவே விளக்கினார்.—உபாகமம் 32:4, 5; பொ.மொ.; ரோமர் 5:12; எரேமியா 10:23.
19. அடுத்த கட்டுரையில் என்னென்ன கேள்விகள் சிந்திக்கப்படும்?
19 இதுவரை சிந்தித்ததிலிருந்து, யெகோவாவிடம் அநீதி இல்லை என்பதைத் தெரிந்துகொண்டோம். (சங்கீதம் 33:5) யெகோவாவுடைய திறன்கள், நன்னெறிகள், தராதரங்கள் ஆகியவை அவருடைய நோக்கத்திற்கு இசைவாக இருக்கின்றன என்பதையும் தெரிந்துகொண்டோம். (ரோமர் 8:28, NW) தீர்க்கதரிசனம் உரைக்கிற கடவுளான யெகோவா ‘அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கிறார்.’ (ஏசாயா 46:9, 10) ஆனாலும், அவர் எல்லாவற்றையும் முன்னறிவதில்லை என்பதைக்கூட நாம் பார்த்தோம். அப்படியானால், அது நம்மை எப்படிப் பாதிக்கிறது? நம்முடைய தீர்மானங்கள் கடவுளுடைய அன்பான நோக்கத்திற்கு இசைவாக இருப்பதை நாம் எப்படி உறுதிசெய்துகொள்ளலாம்? அப்படிச் செய்யும்போது என்ன ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும்? அடுத்த கட்டுரையில் இந்தக் கேள்விகள் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டில், பக்கம் 28-ஐக் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
• கடவுளுடைய வார்த்தை எப்போதும் “வாய்க்கும்” என்பதற்கு எந்தப் பூர்வகால உதாரணங்கள் சான்றளிக்கின்றன?
• தமது ‘நித்திய நோக்கம்’ சம்பந்தப்பட்டதில் யெகோவா எதையெல்லாம் முன்விதித்திருக்கிறார்?
• தமது முன்னறியும் திறனை யெகோவா எவ்விதத்தில் பயன்படுத்துகிறார்?
[பக்கம் 22-ன் படம்]
யோசபாத்திற்கு யெகோவாமீது நம்பிக்கை இருந்தது
[பக்கம் 23-ன் படம்]
இயேசு மரிப்பார் என்றும், உயிர்த்தெழுப்பப்படுவார் என்றும் கடவுள் முன்னறிவித்தார்
[பக்கம் 24-ன் படம்]
ஆதாம் ஏவாள் என்ன செய்வார்கள் என்பதை யெகோவா முன்தீர்மானித்தாரா?