பைபிள் வாசிப்பிலிருந்து முழுமையாகப் பயனடையுங்கள்
“கடவுளுடைய சட்டத்தைக் குறித்து . . . மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.”—ரோ. 7:22.
1-3. பைபிளைப் படித்து அதைக் கடைப்பிடிப்பதால் என்ன நன்மைகள்?
“பைபிளைப் படிச்சு புரிஞ்சுக்க யெகோவா தினமும் உதவி செய்றாரு, அதுக்காக அவருக்கு நன்றி சொல்றேன்.” வயதான ஒரு சகோதரி இதைச் சொன்னார். இவர் இதுவரை 40 தடவைக்கும் மேல் பைபிளைப் படித்துவிட்டார், இன்னும் படித்துக்கொண்டே இருக்கிறார். அதே போல் ஓர் இளம் சகோதரியும் பைபிளைப் படிக்கும்போது யெகோவாவை ஒரு நிஜ நபராகப் புரிந்துகொண்டதாகச் சொல்கிறார். அதனால், யெகோவாவோடு அவருடைய நட்புறவு அதிகமானது. “என் வாழ்க்கையில நான் இந்தளவுக்கு சந்தோஷமா இருந்ததே இல்ல” என்கிறார்.
2 “கடவுளுடைய வார்த்தையிலுள்ள கலப்படமில்லாத பாலுக்காக ஏக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். (1 பே. 2:2) அந்த ஏக்கத்தைத் திருப்தி செய்ய பைபிளைப் படியுங்கள், படித்ததைக் கடைப்பிடியுங்கள். அப்போது மனசாட்சி சுத்தமாக இருக்கும், வாழ்க்கைக்கு ஒரு நோக்கமும் இருக்கும். அதோடு, யெகோவாவை நேசிக்கிற, அவரை வணங்குகிற ஆட்களோடு முறியாத நட்பை வளர்த்துக்கொள்ளவும் முடியும். ‘கடவுளுடைய சட்டத்தைக் குறித்து மகிழ்ச்சி அடைய’ எத்தனை எத்தனை காரணங்கள்! (ரோ. 7:22) இவை மட்டுமல்ல, இன்னும் நிறைய நன்மைகள் இருக்கின்றன. இதோ அவற்றில் சில:
3 யெகோவாவையும் இயேசுவையும் பற்றி அதிகமதிகமாகக் கற்றுக்கொள்ளும்போது, அவர்கள்மீதும் சக மனிதர்கள்மீதுமுள்ள அன்பு வளரும். பைபிள் விஷயங்களை நன்கு புரிந்துகொள்ளும்போது, அழியப்போகும் இந்த உலகத்திலிருந்து தமக்குக் கீழ்ப்படியும் மனிதகுலத்தைக் கடவுள் எப்படிக் காப்பாற்றுவார் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள். அப்போது, ஊழியத்தில் மக்களிடம் நற்செய்தியை நம்பிக்கையோடு சொல்வீர்கள். பைபிளிலிருந்து கற்ற விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லும்போது யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.
வாசியுங்கள், அசைபோடுங்கள்
4. பைபிளை “தாழ்குரலில்” வாசிப்பது என்றால் என்ன?
4 கடகடவென படித்து முடிப்பதற்காக யெகோவா பைபிளைக் கொடுக்கவில்லை. யோசுவாவிடம் யெகோவா என்ன சொன்னாரென கவனியுங்கள்: “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; . . . இரவும் பகலும் அதைத் தாழ்குரலில் வாசிப்பாயாக.” (யோசு. 1:8, NW; சங். 1:2) அப்படியென்றால், ஆதியாகமம்முதல் வெளிப்படுத்துதல்வரை எல்லா வசனங்களையும் முணுமுணுவென்று வாசிக்க வேண்டும் என்று அர்த்தமா? இல்லை. தியானிப்பதற்கு வசதியாக நிறுத்தி நிதானமாக வாசிக்க வேண்டும். அப்படி “தாழ்குரலில்” வாசிக்கும்போது, உங்களுடைய சூழ்நிலைக்குப் பொருத்தமான, தெம்பளிக்கிற வசனங்களின்மீது மனதைப் பதிக்க முடியும். அதுபோன்ற வாக்கியத்தையோ வசனங்களையோ சம்பவங்களையோ கவனிக்கும்போது அவற்றை வாய்விட்டு படியுங்கள், பொறுமையாகப் படியுங்கள். அதை முழுமையாகப் புரிந்துகொள்ளும்போது, உங்களுக்காகவே எழுதப்பட்டதுபோல் உணருவீர்கள். அப்போதுதான், கடவுள் கொடுக்கிற ஆலோசனையின் கருத்தைப் புரிந்துகொண்டு, அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும்.
5-7. பைபிளைத் தாழ்குரலில் வாசிப்பது பின்வரும் சூழ்நிலைகளில் எப்படி உதவும் என்பதை விளக்குங்கள்: (அ) ஒழுக்கமாக நடந்துகொள்ள (ஆ) மற்றவர்களிடம் அன்பாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்ள (இ) கஷ்ட காலங்களில்கூட யெகோவாமேல் நம்பிக்கையை வளர்க்க.
5 நீங்கள் அவ்வளவாகப் படித்திராத பைபிள் புத்தகங்களைத் தாழ்குரலில் படிப்பது பயனளிக்கும். மூன்று சூழ்நிலைகளைக் கவனியுங்கள். ஒன்று: தவறாமல் பைபிளை வாசித்து வரும் ஓர் இளம் சகோதரர், இப்போது ஓசியா புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான்காவது அதிகாரத்தில் 11-13 வசனங்களைத் தாழ்குரலில் வாசித்துவிட்டு, சற்று யோசித்துப் பார்க்கிறார். (ஓசியா 4:11-13-ஐ வாசியுங்கள்.) ஏன்? ஒரு விஷயம் பொறிதட்டியது. ஒழுக்கக்கேடான காரியங்களில் ஈடுபடுவதற்கான சோதனையைப் பள்ளியில் எதிர்ப்பட்டு வருகிறார். இப்போது, வாசித்த வசனங்களை அசைபோடுகிறார்: ‘யாருக்கும் தெரியாம செய்ற தப்பகூட யெகோவாவால பார்க்க முடியும். அதனால அவரோட மனச கஷ்டப்படுத்துற மாதிரி எதையும் செய்ய மாட்டேன்.’ கடவுளுக்கு முன்னால் ஒழுக்கச் சீலனாக இருக்க இந்தச் சகோதரர் தீர்மானிக்கிறார்.
6 இரண்டு: ஒரு சகோதரி யோவேல் 2-ஆம் அதிகாரத்தைப் படித்துக்கொணடிருக்கிறார், 13-ஆம் வசனத்தை வாசித்துவிட்டு நிறுத்துகிறார். (யோவேல் 2:13-ஐ வாசியுங்கள்.) யெகோவா “இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்” என்று அந்த வசனம் சொல்கிறது. அதைத் தாழ்குரலில் வாசித்த பின் யெகோவாவின் இந்த அருமையான குணங்களை எப்படிப் பின்பற்றலாம் என்று யோசிக்கிறார். கணவனிடமும் மற்றவர்களிடமும் சில சமயம் ஏளனமாக, கோபமாகப் பேசும் சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடிவெடுக்கிறார்.
7 மூன்று: ஒரு கிறிஸ்தவத் தகப்பனுக்கு வேலை பறிபோய்விட்டது. மனைவி மக்களை எப்படிக் காப்பாற்றுவது என நினைத்து கவலைப்படுகிறார். அந்தச் சமயத்தில் நாகூம் 1:7-ஐ தாழ்குரலில் வாசிக்கிறார். யெகோவா “தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்,” நம் “இக்கட்டு நாளிலே அரணான கோட்டை” போல் பாதுகாக்கிறார் என்ற வார்த்தைகளை அசைபோடுகிறார். இது அவர் மனதுக்கு இதமளிக்கிறது. யெகோவாவின் அன்பை உணருகிறார், வீணாகக் கவலைப்படுவதை நிறுத்துகிறார். அடுத்து, 15-ஆம் வசனத்தைத் தாழ்குரலில் வாசிக்கிறார். (நாகூம் 1:15-ஐ வாசியுங்கள்.) பிரச்சினைகள் வரும்போது பிரசங்கித்தால், யெகோவாவை மலைபோல் நம்புகிறோம் என்பதைக் காட்டலாமென்று அவர் புரிந்துகொள்கிறார். வேலை தேடிக்கொண்டே வார நாட்களில் செய்யப்படும் ஊழியத்தில் கலந்துகொள்கிறார்.
8. நீங்கள் பைபிளிலிருந்து கண்டெடுத்த ஓர் ஆன்மீக வைரத்தைப் பற்றிச் சுருங்கச் சொல்லுங்கள்.
8 இதுவரை நாம் பார்த்த அருமையான குறிப்புகள் அனைத்தும், புரிந்துகொள்வதற்குக் கஷ்டம் என சிலர் நினைக்கும் பைபிள் புத்ககங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையோடு ஓசியா, யோவேல், நாகூம் புத்தகங்களை ஆராய்ந்தால், அவற்றிலுள்ள பிற வசனங்களையும் தாழ்குரலில் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் பிறக்கும். அந்தத் தீர்க்கதரிசிகள் எழுதிய புத்தகங்களில் ஞானத்தையும் ஆறுதலையும் அள்ளித்தருகிற எத்தனை எத்தனையோ விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன! அதேபோல்தான் பைபிளிலுள்ள மற்ற புத்தகங்களும்! கடவுளுடைய வார்த்தை எடுக்க எடுக்க குறையாத வைரச் சுரங்கம் போன்றது. அதைத் தோண்டிக்கொண்டே இருங்கள்! ஆம், வைரம் போன்ற அறிவுரைகளைத் தோண்டி எடுக்க, கடவுள் தரும் நம்பிக்கையைப் பெற முழு பைபிளையும் வாசியுங்கள்.
புரிந்து படியுங்கள்
9. கடவுளுடைய சித்தத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வது எப்படி?
9 தினமும் பைபிளைப் படிப்பது முக்கியம்தான், அதேசமயம் அதைப் புரிந்துகொள்வதும் அதன் ஆழ அகலத்தை அறிந்துகொள்வதும் முக்கியம். எனவே, நீங்கள் படிக்கும் பதிவில் சொல்லப்பட்டுள்ள ஜனங்கள், இடங்கள், சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து பாருங்கள். அதற்கு, யெகோவாவின் அமைப்பு வெளியிட்டிருக்கும் பிரசுரங்கள் கைகொடுக்கும். ஒரு பைபிள் போதனை வாழ்க்கையோடு எப்படிச் சம்பந்தப்பட்டுள்ளது என்பது உங்களுக்குச் சரியாகப் புரியவில்லை என்றால், ஒரு மூப்பரிடமோ முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவரிடமோ கேளுங்கள். ஒரு விஷயத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதற்கு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர் ஒருவரின் உதாரணத்தைக் கவனியுங்கள். வசனங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள கடும் முயற்சி எடுத்த அப்பொல்லோதான் அவர்.
10, 11. (அ) நற்செய்தியைத் திறம்பட போதிக்க அப்பொல்லோவுக்கு எப்படி உதவி கிடைத்தது? (ஆ) அப்பொல்லோவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (“நீங்கள் கற்பிப்பது அப்-டு-டேட் விஷயங்களா?” என்ற பெட்டியைக் காண்க.)
10 அப்பொல்லோ ஒரு யூத கிறிஸ்தவர். “வேதவசனங்களை நன்கு அறிந்தவர்,” ‘கடவுளுடைய சக்தியினால் நிரப்பப்பட்டவர்.’ அவர் “ஆர்வத்துடிப்புடன் இயேசுவைப் பற்றிய விஷயங்களைப் பேசிக்கொண்டு வந்தார், திருத்தமாகக் கற்பித்துக்கொண்டும் வந்தார்; ஆனால், யோவான் பிரசங்கித்துவந்த ஞானஸ்நானத்தைப் பற்றி மட்டுமே அறிந்திருந்தார்.” ஞானஸ்நானத்தைப் பற்றிய போதனையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை அவர் அறியாதிருந்தார். அதனால், யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பற்றியே கற்பித்து வந்தார். எபேசுவில் அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கில்லா-ஆக்கில்லா தம்பதி, “கடவுளுடைய வழிகளைப் பற்றி இன்னும் திருத்தமாக அவருக்கு விளக்கிச் சொன்னார்கள்.” (அப். 18:24-26) அதன் விளைவு?
11 எபேசுவில் பிரசங்கித்த பிறகு அப்பொல்லோ அகாயாவுக்குப் போனார். “அவர் அங்கு போன பின்பு, கடவுளுடைய அளவற்ற கருணையினால் விசுவாசிகளானவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். எப்படியென்றால், இயேசுவே கிறிஸ்து என வேதவசனங்களிலிருந்து சான்றுகள் காட்டி, எல்லோருக்கும் முன்பாக யூதர்களுடைய போதனைகள் தவறென்று நிரூபிப்பதில் தீவிரமாகவும் முழுமையாகவும் ஈடுபட்டார்.” (அப். 18:27, 28) ஆம், கிறிஸ்தவ ஞானஸ்நானத்தைப் பற்றி அவரால் தெளிவாக விளக்க முடிந்தது. இப்படித் தெளிவாகப் புரிந்துகொண்டதால், உண்மை வழிபாட்டில் புதியவர்கள் முன்னேற்றம் செய்ய அவரால் “பெரிதும் உதவி” செய்ய முடிந்தது. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அப்பொல்லோவைப் போல பைபிளை நன்கு புரிந்துகொள்ள கடும் முயற்சி எடுக்க வேண்டும். திறப்பட்ட விதத்தில் கற்பிக்க யாராவது நமக்கு ஆலோசனை கொடுத்தால் தாழ்மையோடும் நன்றியோடும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவை முழுமையடையும்.
மற்றவர்கள் முன்னேற உதவுங்கள்
12, 13. வசனங்களைத் திறம்படப் பயன்படுத்தி பைபிள் மாணாக்கருக்கு எப்படி உதவலாமெனச் சொல்லுங்கள்.
12 பிரிஸ்கில்லா, ஆக்கில்லா, அப்பொல்லோவைப் போல நாமும் மற்றவர்களுக்கு உதவலாம். ஒரு பைபிள் மாணாக்கரின் முன்னேற்றத்திற்கு ஏதோவொன்று தடையாக இருக்கிறது. நீங்கள் அளித்த உற்சாகத்தால் அவர் அந்தத் தடையைத் தகர்த்தெறிந்துவிட்டார். அப்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? பிரச்சினையில் இருக்கும் ஒருவருக்கு நீங்கள் ஒரு மூப்பராக வேதப்பூர்வ ஆலோசனை கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக அவர் உங்களுக்கு நன்றி சொல்லும்போது எப்படி உணருவீர்கள்? மாற்றங்கள் செய்ய கடவுளுடைய வார்த்தையின் மூலம் மற்றவர்களுக்கு உதவும்போது அளவில்லா ஆனந்தமும் திருப்தியும் கிடைக்கும்!a இதை எப்படிச் செய்யலாம் என கவனியுங்கள்.
13 எலியாவின் காலத்தில், ஒருசமயம் உண்மை வணக்கமா பொய் வணக்கமா என்று முடிவெடுக்க வேண்டியிருந்தபோது நிறைய இஸ்ரவேலர்கள் மதில்மேல் பூனையாக இருந்தார்கள். இந்தப் பதிவைப் படித்துக் காண்பிப்பது, மாற்றங்களைச் செய்யத் தயங்கும் பைபிள் மாணாக்கருக்குக் கைகொடுக்கும். (1 இராஜாக்கள் 18:21-ஐ வாசியுங்கள்.) குடும்பத்தாரோ நண்பர்களோ என்ன சொல்வார்கள் என பயப்படும் ஒருவருக்கு ஏசாயா 51:12, 13-ஐ (வாசியுங்கள்) விளக்கி, யெகோவாவைச் சேவிப்பதில் திடத்தீர்மானமாய் இருக்க உதவுங்கள்.
14. மற்றவர்களுக்கு உதவுகிற பைபிள் வசனங்களை ஞாபகத்திற்குக் கொண்டுவர எது உங்களுக்கு உதவும்?
14 பைபிளில் பொதிந்துள்ள வார்த்தைகள், வாசிப்போரை உற்சாகப்படுத்துகின்றன, திருத்துகின்றன, பலப்படுத்துகின்றன. ஆனால், ‘தேவைப்படுகிற நேரத்தில் வசனங்களை எப்படி டக்கென கண்டுபிடிப்பது?’ என நீங்கள் கேட்கலாம். தினமும் பைபிளை வாசித்து, அதில் பொதிந்திருக்கும் கடவுளின் எண்ணங்களைத் தியானியுங்கள். அப்படிச் செய்தால், நிறைய வசனங்களை உங்களுடைய அறிவுக்களஞ்சியத்தில் சேமித்து வைக்க முடியும்; தேவைப்படும் சமயத்தில், அதை ஞாபகத்திற்குக் கொண்டுவர யெகோவாவின் சக்தி உங்களுக்கு உதவும்.—மாற். 13:11; யோவான் 14:26-ஐ வாசியுங்கள்.b
15. கடவுளுடைய வார்த்தையை முழுமையாகப் புரிந்துகொள்ள எது உங்களுக்கு உதவும்?
15 ஆன்மீகப் பொறுப்புகளை நிறைவேற்ற நமக்கு ஞானம் தேவை. அதற்காக, சாலொமோன் ராஜாவைப்போல் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (2 நா. 1:7-10) பூர்வகால தீர்க்கதரிசிகள் கடவுளுடைய வார்த்தையை “ஊக்கமாகவும் கவனமாகவும் அலசி ஆராய்ந்தார்கள்.” அதேபோல் யெகோவாவையும் அவருடைய சித்தத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு பைபிளை ஆராய்ச்சி செய்யுங்கள். (1 பே. 1:10-12) “விசுவாசத்திற்குரிய வார்த்தைகளாலும், . . . சிறந்த போதனைகளாலும் ஊட்டம் பெற்றவனாக” இருக்க தீமோத்தேயுவை பவுல் உற்சாகப்படுத்தினார். (1 தீ. 4:6) அப்படிச் செய்தால் ஆன்மீக முன்னேற்றம் செய்ய மற்றவர்களுக்கு உதவ முடியும், உங்களுடைய விசுவாசத்தையும் பலப்படுத்த முடியும்.
கடவுளுடைய வார்த்தை தரும் பாதுகாப்பு
16. (அ) ‘தினந்தோறும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்ததால்’ பெரோயாவில் வாழ்ந்த யூதர்கள் எப்படிப் பயனடைந்தார்கள்? (ஆ) பைபிளைத் தினமும் வாசிப்பது இன்று ஏன் மிக முக்கியம்?
16 மக்கெதோனியாவிலுள்ள பெரோயா நகரில் வாழ்ந்த யூதர்களுக்கு ‘தினந்தோறும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கும்’ பழக்கம் இருந்தது. அவர்களிடம் பவுல் நற்செய்தியைப் பிரசங்கித்தபோது, தங்களுக்குத் தெரிந்த வேத வசனங்களோடு அவர் சொன்னதை ஒப்பிட்டுப்பார்த்தார்கள். அதன் பலன்? பவுல் சத்தியத்தைத்தான் போதிக்கிறார் என்பதை அநேகர் புரிந்துகொண்டு “விசுவாசிகளானார்கள்.” (அப். 17:10-12) தினமும் பைபிள் வாசிப்பது யெகோவா மீதுள்ள நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும் என்பதை இது காட்டுகிறது. அப்படிப்பட்ட விசுவாசம், அதாவது “எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும்” என்ற உறுதியான நம்பிக்கை, அழிவிலிருந்து தப்பித்து புதிய உலகிற்குள் செல்ல பேருதவியாய் இருக்கும்.—எபி. 11:1.
17, 18. (அ) பலமான விசுவாசமும் அன்பும் எப்படி ஒரு கிறிஸ்தவரின் அடையாள அர்த்தமுள்ள இருதயத்தைப் பாதுகாக்கிறது? (ஆ) நம்பிக்கை எப்படி நம்மை ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது?
17 “பகலுக்குரியவர்களான நாம் தெளிந்த புத்தியோடிருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புக்கான நம்பிக்கையைத் தலைக்கவசமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும்” என்று பவுல் எழுதியதற்கு நல்ல காரணம் இருக்கிறது. (1 தெ. 5:8) ஒரு போர்வீரன் தன் இருதயத்தை எதிரி தாக்கிவிடாதபடி பாதுகாக்க வேண்டும். அவ்வாறே, ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய அடையாள அர்த்தமுள்ள இருதயத்தைப் பாவம் தாக்கிவிடாதபடி பாதுகாக்க வேண்டும். அவர் கடவுளுடைய வாக்குறுதிகள்மீது உறுதியான விசுவாசம் வைப்பதோடு யெகோவாமீதும் சக மனிதர்மீதும் அன்பு காட்டும்போது, ஆன்மீக மார்புக் கவசத்தை அணிந்தவராக இருப்பார். கடவுளுடைய தயவை இழக்கச் செய்யும் எதற்கும் அவர் இடங்கொடுக்க மாட்டார்.
18 “மீட்புக்கான நம்பிக்கையைத் தலைக்கவசமாக” போட்டுக்கொள்வதைப் பற்றியும் பவுல் குறிப்பிட்டார். பண்டைய காலத்தில், ஒரு போர்வீரர் தன் தலையைப் பாதுகாக்கவில்லை என்றால் போரில் உயிர் பறிபோவது உறுதி. நல்ல தலைக்கவசத்தை அணிந்திருந்தால், தலையில் அடிவிழுந்தாலும் பலத்த காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். கடவுள் தம் மக்களை எவ்விதங்களில் பாதுகாத்திருக்கிறார் என்பதை பைபிளிலிருந்து ஆழ்ந்து படிக்கும்போது நம் நம்பிக்கை பலப்படும். உறுதியான விசுவாசம் இருந்தால், விசுவாசதுரோகிகளையும் சதையழுகல் நோயைப் போல் பரவும் அவர்களுடைய ‘வீண் பேச்சுகளையும்’ தவிர்ப்போம். (2 தீ. 2:16-19) கடவுள் வெறுக்கிற காரியங்களைச் செய்ய யாராவது நம்மைத் தூண்டினால், தைரியமாக அவற்றை மறுக்க அந்த நம்பிக்கை நமக்கு உதவும்.
தப்பிப்பிழைக்க தேவைப்படுவது...
19, 20. கடவுளுடைய வார்த்தையை நாம் ஏன் பொன்னென போற்ற வேண்டும், நம் நன்றியை எப்படிக் காட்டலாம்? (“எனக்குத் தேவையானதை யெகோவா தருகிறார்” என்ற பெட்டியைக் காண்க.)
19 முடிவு நெருங்கி வர வர பைபிளை இன்னும் கருத்தூன்றி படிக்க வேண்டும். அதில் கிடைக்கும் ஆலோசனைகள் நம் கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கவும் பாவ சிந்தையைக் கட்டுப்படுத்தவும் உதவும். இந்த உலகிலிருந்தும் சாத்தானிடமிருந்தும் வருகிற சோதனைகளை வெற்றிகரமாகச் சமாளிக்க பைபிள் தரும் உற்சாகமும் ஆறுதலும் கைகொடுக்கும். பைபிள் மூலமாக யெகோவா தரும் அறிவுரையைப் பின்பற்றினால் வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையில் தொடர்ந்து செல்வோம்.
20 “பலதரப்பட்ட ஆட்களும் . . . மீட்புப் பெற வேண்டுமென்பது” கடவுளுடைய சித்தம். யெகோவாவின் வணக்கத்தாரும் ‘பலதரப்பட்ட ஆட்களில்’ அடங்குவர். நாம் பிரசங்கித்து கற்பிக்கிற மற்றவர்களும் இந்தப் பலதரப்பட்ட ஆட்களில் அடங்குவர். யாராக இருந்தாலும், ‘சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைந்தால்தான்’ மீட்பு பெற முடியும். (1 தீ. 2:4) எனவே, கடைசி நாட்களில் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால் தினமும் பைபிளைப் படித்து, கடைப்படிக்க வேண்டும். நாம் தினமும் பைபிளைப் படிக்கும்போது யெகோவாவின் முத்தான சத்திய வார்த்தையைப் பொன்னென போற்றுவோம்!—யோவா. 17:17.
a நாம், பைபிளைப் பயன்படுத்தி பிறரைக் குத்திக்காட்டுவதுமில்லை, பைபிள் விஷயங்களைத் திணிப்பதுமில்லை. யெகோவா நம்மிடம் பொறுமையாக, அன்பாக நடந்துகொள்வதைப் போல நாமும் பைபிள் மாணாக்கரிடம் நடந்துகொள்ள வேண்டும்.—சங். 103:8.
b ஒருவேளை முக்கியமான வார்த்தைகள் உங்களுக்கு நினைவிருக்கலாம், ஆனால் எந்தப் புத்தகம், எந்த அதிகாரம், எந்த வசனம் என்பது தெரியாமல் இருக்கலாம். அப்போது என்ன செய்வது? புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் கடைசி பக்கங்களில் இருக்கும் அட்டவணையில்... உவாட்ச்டவர் லைப்ரரியில்... பைபிள் கன்கார்டன்ஸில்... பார்த்து கண்டுபிடிக்கலாம்.