கடவுளுடைய ராஜ்யம் விரைவில் விடுதலை அளிக்கும்!
“உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத். 6:10.
1. இயேசு எதை முக்கியமாகக் கற்பித்தார்?
இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதைப்பற்றிச் சொன்னார். அந்த ஜெபம், அவர் கற்பித்த முக்கியமான விஷயங்களை இரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறது. தம்மைப் பின்பற்றுகிறவர்கள் கடவுளிடம் இப்படியாக ஜெபிக்க வேண்டுமென அவர் கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத். 6:9-13) இயேசு, ‘பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்தார்.’ (லூக். 8:1) “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” என்று தம்மைப் பின்பற்றினவர்களுக்கு அறிவுறுத்தினார். (மத். 6:33) இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கையில், இதிலுள்ள விஷயங்களை ஊழியத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று யோசித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு, பின்வரும் இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள் என்று பாருங்கள்: ராஜ்யத்தைப் பற்றிய செய்தி எந்தளவு முக்கியமானது? மனிதகுலம் எதிலிருந்து விடுதலை பெற வேண்டும்? கடவுளுடைய ராஜ்யம் எப்படி அந்த விடுதலையை அளிக்கும்?
2. ராஜ்யத்தைப் பற்றிய செய்தி எந்தளவு முக்கியமானது?
2 “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் [அதாவது, தேசத்தாருக்கும்] சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்று இயேசு முன்னறிவித்தார். (மத். 24:14) கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்த நற்செய்தி மிகமிக முக்கியமானது. அதைவிட முக்கியமான செய்தி உலகில் வேறெதுவும் கிடையாது! உலகம் முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் 1,00,000-க்கும் அதிகம் உள்ளன. மிகப் பரந்தளவில் நடைபெற்றுவரும் பிரசங்க வேலையில் சுமார் 70 லட்சம் சாட்சிகள் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள், கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதைக் குறித்து எல்லாருக்கும் பிரசங்கித்து வருகிறார்கள். இந்த ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதை ஏன் ஒரு நற்செய்தி என்று சொல்லலாம்? ஏனெனில், இந்தப் பரலோக அரசாங்கம் முழு பூமியையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். அதன் ஆட்சியில் யெகோவாவின் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யப்படும்.
3, 4. கடவுளுடைய சித்தம் பூமியில் நிறைவேறுகையில் மனிதர் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்?
3 கடவுளுடைய சித்தம் பூமியில் நிறைவேறும்போது மனிதர் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்? யெகோவா ‘அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமோ, துக்கமோ, அலறுதலோ, வருத்தமோ இராது.’ (வெளி. 21:4) ஆதாமிடமிருந்து தொற்றிய பாவம் மற்றும் அபூரணத்தின் காரணமாக மனிதருக்கு இன்று ஏற்படுகிற நோயோ மரணமோ இனி ஏற்படாது. கடவுளுடைய நினைவில் இருக்கிற மரித்தோர் என்றென்றும் வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஏனெனில், ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்’ என்று பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (அப். 24:15) அப்போது, போர், நோய்நொடி, பசிப்பட்டினி எதுவும் இருக்காது. இந்தப் பூமி, பூங்கா போன்ற பரதீஸாக மாற்றப்படும். இப்போது நமக்கு ஆபத்து விளைவிக்கிற கொடிய மிருகங்கள்கூட அப்போது ஒன்றும் செய்யாது; மற்ற மிருகங்களுக்கும் அவை ஒன்றும் செய்யாது.—சங். 46:9; 72:16; ஏசா. 11:6-9; 33:24; லூக். 23:43.
4 அந்த அரசாங்கத்தில் மனிதர் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்கள்தான் எத்தனை எத்தனை! எனவே, அந்தச் சமயத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் குறித்து பைபிள் தீர்க்கதரிசனம் இவ்வாறு சொல்வதில் ஆச்சரியமில்லை: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” இது, மனதிற்கு இதமளிக்கும் வாக்குறுதி, அல்லவா? ஆனால், மற்றவர்களுக்குத் தொல்லை தரும் ஆட்களுக்கு என்ன நேரிடும்? “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்” என்று பைபிள் முன்னறிவிக்கிறது. என்றாலும், “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.”—சங். 37:9-11.
5. இந்தப் பொல்லாத உலகிற்கு என்ன நடக்கப்போகிறது?
5 இவையெல்லாம் நடந்தேற, இந்தப் பொல்லாத உலகிற்கு ஒரு முடிவு வர வேண்டும். அதோடு, தற்போது ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாய் இருக்கிற அரசாங்கங்களும், மதங்களும், வர்த்தக அமைப்புகளும் நீக்கப்பட வேண்டும். இதைத்தான் அந்தப் பரலோக அரசாங்கம் செய்யப்போகிறது. இதைப்பற்றி தானியேல் தீர்க்கதரிசி பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் இவ்வாறு முன்னறிவித்தார்: “அந்த [இப்போதுள்ள] ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த [இன்றுள்ள] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானி. 2:44) அப்போது, கடவுளுடைய ராஜ்யம், அதாவது புதிய பரலோக அரசாங்கம் ஒரு புதிய மனித சமுதாயத்தை ஆட்சி செய்யும். ‘நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் [அப்போது] உண்டாயிருக்கும்.’—2 பே. 3:13.
இன்று விடுதலைக்கான அவசரத் தேவை
6. இந்தப் பொல்லாத உலகின் மோசமான நிலைமைகளை பைபிள் எப்படி விவரிக்கிறது?
6 ஆதாம் ஏவாளும் சரி சாத்தானும் சரி, எது நல்லது எது கெட்டது என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்க விரும்பி, கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்த நாளன்றே மனிதகுலம் அழிவின் பாதையில் அடியெடுத்து வைத்தது. அவர்கள் கலகம் செய்து 1,600-க்கும் மேற்பட்ட வருடங்களுக்குப் பின்பு, அதாவது ஜலப்பிரளயத்திற்கு முன்பு, ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது . . . அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாய் இருந்தது.’ (ஆதி. 6:5) அதற்கும் சுமார் 1,300 வருடங்களுக்குப் பிறகு உலக நிலைமை ரொம்பவே மோசமாக ஆனதால் சாலொமோன் இப்படியாக எழுதினார்: “இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன். இவ்விரு திறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.” (பிர. 4:2, 3) இன்னும் சுமார் 3,000 வருடங்களைக் கடந்து நம்முடைய நாட்களுக்கு வந்தால், நிலைமை மோசமாகிக்கொண்டேதான் போகிறது.
7. கடவுள் தரும் விடுதலைக்கு ஏன் இப்போது அவசரத் தேவை இருக்கிறது?
7 இத்தனை நீண்ட காலமாக உலகில் தீமை பெருகி வந்திருக்கிறபோதிலும் என்றுமில்லாதளவுக்கு விடுதலைக்கான அவசரத் தேவை இப்போது ஏற்பட்டுள்ளது. கடவுளுடைய அரசாங்கம் மட்டுமே இந்த விடுதலையை அளிக்க முடியும். கடந்த நூறு ஆண்டுகளாக நிலைமை படுமோசமடைந்திருக்கிறது. அது இன்னும் சீர்கெட்டுக்கொண்டேதான் போகிறது. உதாரணத்திற்கு, “கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து 1899 வரையாக நடந்த போர்களில் மாண்டவர்களைவிட மூன்று மடங்கு அதிகமானோர் [20-ஆம் நூற்றாண்டில்] நடந்த போர்களில் மாண்டிருக்கிறார்கள்” என்று உவர்ல்டுவாட்ச் இன்ஸ்டிட்யூட்டின் அறிக்கை குறிப்பிடுகிறது. 1914 முதற்கொண்டு போர்களில் பத்து கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்! இரண்டாம் உலகப் போரில் சுமார் 6 கோடி மக்கள் மடிந்திருக்கிறார்கள் என்று ஓர் என்ஸைக்ளோப்பீடியா மதிப்பிடுகிறது. இப்போது சில நாடுகள் அணு ஆயுதங்களையும் தயாராய் வைத்திருப்பதால், உலக மக்கள் தொகையில் பெரும்பாகத்தை பூண்டோடு அழிக்கும் திறமை மனிதனுக்கு இருக்கிறது என்று சொல்லலாம். இன்று, விஞ்ஞானமும் மருத்துவமும் எந்தளவு முன்னேறியிருந்தாலும் பசியால் ஒவ்வொரு வருடமும் சுமார் ஐம்பது லட்சம் பிள்ளைகள் உயிரிழக்கிறார்கள்.—பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 9-ஐக் காண்க.
8. மனித ஆட்சியின் பல்லாண்டு கால சரித்திரம் எதைச் சந்தேகமின்றி நிரூபித்திருக்கிறது?
8 உலகில் தீமை பெருகுவதைத் தடுத்து நிறுத்த மனிதன் எடுத்திருக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியையே தழுவியிருக்கின்றன. இந்த உலகின் அரசியல், வர்த்தக, மத அமைப்புகள், மனிதனின் அத்தியாவசிய தேவைகளான சமாதானம், செழுமை, ஆரோக்கியம் ஆகியவற்றை ஒருபோதும் திருப்தி செய்ததில்லை. இந்த அமைப்புகள், மனிதகுலம் எதிர்ப்படுகிற மலைப்போன்ற பிரச்சினைகளைத் தீர்த்ததும் இல்லை; மாறாக, அவை பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளையே குவித்திருக்கின்றன. ஆம், ‘மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல’ என்ற வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை மனித ஆட்சியின் பல்லாண்டு கால சரித்திரம் காட்டுகிறது. (எரே. 10:23) உண்மைதான், ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டுவந்திருக்கிறான்.’ (பிர. 8:9) இதனால் ‘சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது.’—ரோ. 8:22.
9. இந்தக் “கடைசி நாட்களில்” எப்படிப்பட்ட நிலைமை இருக்குமென்று கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள்?
9 ‘கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும்’ என்று நம்முடைய காலத்தைப்பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் முன்னறிவித்தது. இந்தக் கடைசி நாட்களில் மனிதன் ஆட்சி செய்யும்போது நிலைமை எப்படி இருக்கும் என்பதை விவரித்தபின் அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் . . . மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” (2 தீமோத்தேயு 3:1-5, 13-ஐ வாசியுங்கள்.) இதைக் கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில், இந்த “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் [அதாவது, சாத்தானுக்குள்] கிடக்கிறதென்று” அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். (1 யோ. 5:19) என்றாலும், கடவுளை நேசிப்போருக்கு அவர் விடுதலை அளிப்பார் என்பதே மகிழ்ச்சிக்குரிய செய்தி. மேன்மேலும் படுவேகமாகச் சீரழிந்துவரும் இந்த உலகிலிருந்து அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
விடுதலைக்கு நம்பகமான ஒரே ஊற்றுமூலர்
10. விடுதலைக்கு நம்பகமான ஒரே ஊற்றுமூலர் யெகோவாவே என்று ஏன் சொல்கிறோம்?
10 நீங்கள் மக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கையில், விடுதலைக்கு நம்பகமான ஒரே ஊற்றுமூலர் யெகோவாதான் என்று சொல்லுங்கள். எந்த ஒரு கஷ்டத்திலிருந்தும் தம்முடைய ஊழியர்களை விடுவிக்க அவருக்கு மட்டுமே சக்தியும் விருப்பமும் இருக்கிறது. (அப். 4:24, 31; வெளி. 4:11) யெகோவா தம் மக்களுக்கு எப்போதுமே விடுதலை அளிப்பார் என்றும் தம் நோக்கத்தை அவர் எப்போதுமே நிறைவேற்றுவார் என்றும் நாம் நிச்சயமாய் இருக்கலாம். ஏனெனில், “நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்” என்று அவர் ஆணையிட்டிருக்கிறார். அவருடைய வார்த்தை ‘வெறுமையாய் அவரிடத்தில் திரும்பாது.’—ஏசாயா 14:24, 25; 55:10, 11-ஐ வாசியுங்கள்.
11, 12. கடவுள் தம்முடைய ஊழியர்களுக்கு என்ன உறுதியை அளிக்கிறார்?
11 கெட்ட ஜனங்களை அழிக்கையில் தம்முடைய ஊழியர்களைக் காப்பாற்றுவதாக யெகோவா உறுதி அளித்திருக்கிறார். பெரும் பாவங்களைச் செய்தவர்களிடம் தம்முடைய நியாயத்தீர்ப்பு செய்தியை தைரியமாக அறிவிப்பதற்கு எரேமியா தீர்க்கதரிசியை யெகோவா அனுப்பியபோது இவ்வாறு உறுதியளித்தார்: “நீ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்.” (எரே. 1:8) அவ்வாறே, துன்மார்க்கர் நிறைந்திருந்த சோதோம் கொமோராவை அழிக்கவிருந்த சமயத்தில், லோத்துவையும் அவருடைய குடும்பத்தாரையும் அந்த இடத்திலிருந்து பத்திரமாக வெளியே கொண்டுவருவதற்கு இரண்டு தேவதூதர்களை யெகோவா அனுப்பிவைத்தார். அதன் பிறகே ‘சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், . . . கந்தகத்தையும் அக்கினியையும் [அவர்] வருஷிக்கப்பண்ணினார்.’—ஆதி. 19:15, 24, 25.
12 யெகோவா உலகளவில் அழிவைக் கொண்டுவந்தாலும் தம்முடைய ஜனங்களை அதிலிருந்து விடுவிக்க முடியும். பூர்வகாலத்தில் துன்மார்க்கர் நிறைந்த உலகை அவர் ஜலப்பிரளயத்தினால் அழித்தபோது, “நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றினார்.” (2 பே. 2:5) அதேபோல் தற்போதுள்ள பொல்லாத உலகை அழிக்கும்போதுகூட நல்மனம் படைத்தவர்களை அவர் காப்பாற்றுவார். ஆகவே, அவருடைய வார்த்தை இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே [யெகோவாவை] தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை அவருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.’ (செப். 2:3) வரவிருக்கும் அந்த உலகளாவிய அழிவின்போது ‘துன்மார்க்கர் பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்’; ‘செவ்வையானவர்களோ பூமியிலே வாசம்பண்ணுவார்கள்.’—நீதி. 2:21, 22.
13. இதுவரை இறந்துள்ள யெகோவாவின் ஊழியர்களுக்கு எப்படி விடுதலை கிடைக்கும்?
13 ஆனால், கடவுளுடைய ஊழியர்களில் எத்தனையோ பேர் இதுவரை வியாதியினாலும், உபத்திரவத்தினாலும், மற்ற காரணங்களினாலும் இறந்திருக்கிறார்களே. (மத். 24:9) இவர்களுக்கெல்லாம் எப்படி விடுதலை கிடைக்கும்? ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ‘நீதிமான்கள் . . . உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.’ (அப். 24:15) ஆம், யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு விடுதலை அளிப்பதை யாருமே தடுத்து நிறுத்த முடியாது என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!
நீதியான அரசாங்கம்
14. கடவுளுடைய ராஜ்யம், நீதியாய் ஆட்சிபுரியும் ஓர் அரசாங்கம் என்று நாம் ஏன் உறுதியாக நம்புகிறோம்?
14 ஊழியத்தில் நீங்கள் மக்களிடம் பேசும்போது, யெகோவாவுடைய பரலோக ராஜ்யம் என்பது நீதியாய் ஆட்சிபுரியும் ஓர் அரசாங்கம் என்று விளக்கலாம். ஏனென்றால், கடவுளுடைய நீதி, நியாயம், அன்பு போன்ற அருமையான குணங்கள் அந்த அரசாங்கத்தில் பளிச்சிடும். (உபா. 32:4; 1 யோ. 4:8) பூமியை அரசாளுவதற்கு எல்லாத் தகுதிகளும் பெற்றிருக்கிற இயேசு கிறிஸ்துவிடமே கடவுள் அந்த அரசாங்கத்தை ஒப்படைத்திருக்கிறார். கிறிஸ்துவுடன் சேர்ந்து அரசாள பூமியிலிருந்து 1,44,000 பேரைத் தேர்ந்தெடுக்கவும் கடவுள் விரும்பினார். அபிஷேகம் செய்யப்பட்ட இவர்கள், கிறிஸ்துவின் உடன் சுதந்திரவாளிகளாக இருப்பதற்கு பூமியிலிருந்து பரலோகத்திற்கு மீட்டுக்கொள்ளப்படுவார்கள்.—வெளி. 14:1-5.
15. கடவுளுடைய ஆட்சிக்கும் மனிதனின் ஆட்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கூறுங்கள்.
15 இயேசுவும், 1,44,000 பேரும் சேர்ந்து புரியும் ஆட்சிக்கும் அபூரண மனிதர் புரியும் ஆட்சிக்கும் இடையே எவ்வளவு வித்தியாசம்! இந்த உலகின் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் கொடூரமாகவே ஆட்சி புரிந்திருக்கிறார்கள். தங்கள் குடிமக்களை போரில் ஈடுபடும்படி செய்திருக்கிறார்கள்; அதன் விளைவாக, லட்சக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவேதான், “இரட்சிக்கத் திராணியில்லாத” மனிதரை நம்ப வேண்டாமென்று பைபிள் அறிவுறுத்துகிறது. (சங். 146:3) அதற்கு நேர்மாறாக, கிறிஸ்துவின் ஆட்சியிலோ அன்பும் அமைதியும் குடிகொண்டிருக்கும்! “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்று இயேசு கூறினார்.—மத். 11:28-30.
கடைசி நாட்களுக்கு முடிவு விரைவில்!
16. இந்தக் கடைசி நாட்கள் எப்படி முடிவுக்கு வரும்?
16 இவ்வுலகின் கடைசி நாட்கள், அதாவது, “இந்தச் சகாப்தத்தின் முடிவு” 1914-ல் ஆரம்பித்துவிட்டது. (மத். 24:3, NW) வெகு விரைவில், இயேசு சொன்ன அந்த “மிகுந்த உபத்திரவம்” ஆரம்பித்துவிடும். (மத்தேயு 24:21-ஐ வாசியுங்கள்.) இதுவரை சம்பவித்திராத இந்த உபத்திரவம் சாத்தானுடைய முழு உலகத்துக்கும் முடிவைக் கொண்டுவரும். ஆனால், இந்த மிகுந்த உபத்திரவம் எப்படி ஆரம்பிக்கும்? அது எப்படி முடிவடையும்?
17. மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பத்தைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது?
17 இந்த மிகுந்த உபத்திரவம் திடீரென்று ஆரம்பிக்கும். ஆம், “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது,” “கர்த்தருடைய நாள்” திடீரென்று வரும். (1 தெசலோனிக்கேயர் 5:2, 3-ஐ வாசியுங்கள்.) நாடுகள் தங்களுடைய பெரிய பெரிய பிரச்சினைகளைச் சீக்கிரத்தில் தீர்த்துவிடுவோம் என நினைக்கையில் முன்னறிவிக்கப்பட்ட அந்த உபத்திரவம் ஆரம்பிக்கும். பொய் மத உலக பேரரசாகிய “மகா பாபிலோன்” திடீரென அழிக்கப்படுகையில், உலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடும். மகா பாபிலோனுக்கு எதிராக கடவுள் நடவடிக்கை எடுக்கையில் ராஜாக்களும் மற்றவர்களும் திகைத்து நிற்பார்கள்.—வெளி. 17:1-6, 18; 18:9, 10, 15, 16, 19.
18. தம் மக்களை சாத்தான் தாக்குகையில் யெகோவா என்ன செய்வார்?
18 ஒரு முக்கியமான கட்டத்தில், “சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்.” அதோடு, ‘மனுஷகுமாரனுடைய அடையாளமும் வானத்தில் காணப்படும்.’ அப்போது நம் ‘மீட்பு சமீபமாயிருப்பதால், நாம் நிமிர்ந்துபார்த்து, நம் தலைகளை உயர்த்தலாம்.’ (லூக். 21:25-28; மத். 24:29, 30) சாத்தான், அதாவது கோகு, கடவுளுடைய ஜனங்களுக்கு எதிராகப் போரிடுவதற்குத் தன்னுடைய ஆட்களை முடுக்கிவிடுவான். ஆனால், உண்மையுள்ள தம் ஊழியர்களைத் தாக்குகிறவர்களைக் குறித்து யெகோவா இவ்வாறு சொல்கிறார்: ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்.’ (சக. 2:8) எனவே, அவர்களை அழிப்பதற்காக சாத்தான் எடுக்கும் முயற்சி வெற்றிபெறாது. ஏன்? ஏனெனில், உன்னத பேரரசரான யெகோவா தேவன், தம்முடைய ஊழியர்களைக் காப்பதற்காகத் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுப்பார்.—எசே. 38:9, 18.
19. யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் சேனைகள் சாத்தானின் அமைப்பை அழிக்கும் என்பதில் நாம் ஏன் உறுதியாய் இருக்கலாம்?
19 தேசங்களுக்கு எதிராக யெகோவா நடவடிக்கை எடுக்கையில், அவரே “கர்த்தர் [யெகோவா] என்பதை [அவர்கள்] அறிந்துகொள்வார்கள்.” (எசே. 36:23) பூமியில் எஞ்சியிருக்கும் சாத்தானுடைய அமைப்புகளை அழிப்பதற்காக யெகோவா கோடானுகோடி தேவதூதர்கள் அடங்கிய தம் சேனைகளை அனுப்புவார். அந்தச் சேனைகளை கிறிஸ்து இயேசு வழிநடத்துவார். (வெளி. 19:11-19) ஒரு சந்தர்ப்பத்தில் ஒரேவொரு தேவதூதன் கடவுளுடைய விரோதிகளில் “லட்சத்தெண்பத்தையாயிரம் பேரை” ஒரே இரவில் ‘சங்கரித்தது’ நமக்கு நினைவிருக்கும். அப்படியானால், மிகுந்த உபத்திரவத்தின் முடிவில் நடக்கும் அர்மகெதோன் யுத்தத்தின்போது இந்தப் பரலோகச் சேனை, பூமியிலுள்ள சாத்தானுடைய அமைப்புகளை எல்லாம் சுவடு தெரியாமல் அழித்துவிடும் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம். (2 இரா. 19:35; வெளி. 16:14, 16) சாத்தானும் அவனுடைய பேய் பட்டாளமும் ஆயிரம் வருடங்களுக்குப் பாதாளத்தில் தள்ளப்படுவார்கள். கடைசியில், அவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்.—வெளி. 20:1-3.
20. தமது ராஜ்யத்தின் மூலமாக யெகோவா என்ன செய்யப்போகிறார்?
20 இப்படியாகத் தீமை ஒழிந்து பூமி புத்தம் புதிதாக மாறும். அப்போது, நீதியான மனிதர்களே இந்த உலகில் என்றென்றும் வாழ்வார்கள். அந்தச் சமயத்திற்குள், யெகோவா மாபெரும் விடுதலையை அளித்திருப்பார். (சங். 145:20) தம்முடைய ராஜ்யத்தின் மூலமாக தமது உன்னத அரசாட்சியே சரியானதென நிரூபிப்பார், தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவார், பூமிக்கான தம்முடைய மகத்தான நோக்கத்தையும் நிறைவேற்றுவார். ஆகவே, ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் இந்த நற்செய்தியைச் சொல்வதில் பெருமகிழ்ச்சி காணுங்கள். அதோடு, கடவுளுடைய ராஜ்யத்தின்மூலம் வெகு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது என்பதை ‘முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடையவர்கள்’ புரிந்துகொள்ள உதவுகையிலும் சந்தோஷம் காணுங்கள்.—அப். 13:48, NW.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ராஜ்யத்தின் முக்கியத்துவத்தை இயேசு எவ்வாறு வலியுறுத்தினார்?
• விடுதலைக்கான அவசியம் எப்போதையும்விட இப்போது ஏன் அதிகமாய் இருக்கிறது?
• மிகுந்த உபத்திரவத்தின்போது என்னென்ன சம்பவங்கள் நடைபெறுமென நாம் எதிர்பார்க்கலாம்?
• யெகோவா எப்படி மாபெரும் விடுதலையை அளிக்கிறார்?
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
நம்முடைய காலத்தில் மிகப் பரந்தளவில் பிரசங்க வேலை நடைபெறும் என்று கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்தது
[பக்கம் 15-ன் படம்]
நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றியது போலவே நம்மையும் யெகோவாவால் காப்பாற்ற முடியும்
[பக்கம் 16-ன் படம்]
யெகோவா ‘அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமும் . . . இராது.’—வெளி. 21:4