யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு யுத்தம்
ஜெர்மன் தேசத்தைச் சேர்ந்த மாபெரும் ஒரு புகைக்கூண்டு வானூர்தி இரவு நேர மேகத்தினூடே இரைந்து கொண்டுவந்தது. அது லண்டனின் மீது விமானத்தாக்குதலை நடத்திவிட்டு தாயகம் திரும்பிக்கொண்டிருந்தது. அது ஈசக்ஸில் ஒரு கிராமத்தின் மீது கடந்து செல்கையில் வெடிகுண்டுகள் போடப்பட்டன. அவற்றில் ஒன்று பிரான்சில் போரிலிருந்து விடுப்பு எடுத்து வந்திருந்த ஒரு செவிலியைக் கொன்றது.
இது முதல் உலகப் போரின் ஒரு கிளைக்கதையாகவே இருந்தது. ஆனால் அது மிக அதிகமான உட்பொருளைக் கொண்டதாக இருந்தது. மனிதர்கள் ‘இனி யுத்தத்தைக் கற்றுக்கொள்ளமாட்டாத’ ஒரு காலத்தைக் கொண்டுவருவதற்குப் பதிலாக, எவ்விதமாக 20-ம் நூற்றாண்டு படைக்கலங்களிலும் போர்நடவடிக்கையின் செயற்களங்களிலும் பிரமாண்டமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது. (ஏசாயா 2:2–4) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போர்கள் நிலத்திலும் சமுத்திரத்தின் மேற்பரப்பிலும் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் முதல் உலக மகா யுத்த நடவடிக்கை விண்வெளிக்குள்ளும் சமுத்திரத்தின் மேற்பரப்புக்குக் கீழேயும் பரவினது. இதன் விளைவாக, போர்ப் படையணி இருந்த இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் அப்பாலிருந்த படைத்துறைச் சாராத மனிதர்களும் வெடிகுண்டுகளினால் கொல்லப்பட்டார்கள். கண்ணுக்குத் தெரியாத நீர்மூழ்கிகளால் அநேக கப்பல்கள் சமுத்திரத்தின் அடிபரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆம், முதல் பயங்கர உலக மகா யுத்தத்தின் போது யுத்தத்தில் 80 இலட்சம் வீரர்களும், 120 இலட்சம் படைத்துறைச் சாராத ஆட்களும், பட்டினி மற்றும் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் விடப்பட்டது உட்பட பல காரணங்களினால் மரித்துப் போனார்கள். சரித்திராசிரியர் H.A.L. ஃபிஷரின் பிரகாரம், “நிதான புத்தியுள்ள ஒரு சில மனிதர்களால் தீர்த்துவைக்கப்படக்கூடிய ஒரு பிரச்னையின் பேரில், ஐரோப்பாவில் நாகரீகத்தில் வெகுவாக முன்னேற்றமடைந்திருந்த மக்களிடையே செய்யப்பட்டதுதானே மகா யுத்தத்தின் [முதல் உலக மகா யுத்தம்] அவல நிலையாகும்.” பயங்கரமான படுகொலைக்கு நியாயங்கற்பிக்க, அது “யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு யுத்தம்” என்பதாக அழைக்கப்பட்டது. ஆனால் அந்தச் சொற்றொடர் விரைவில் மிகவும் போலியாக தொனிக்கலாயிற்று.
ஒரு சமாதான நிறுவனம்
1918-ல் சமாதானம் அறிவிக்கப்பட்டப்பின், மனமுறிவுற்ற சந்ததி, இப்பேர்ப்பட்ட ஒரு போர் இனி ஒருபோதும் நடைபெறாது என்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று வற்புறுத்தியது. இதன் காரணமாக, சர்வதேச சங்கம் 1919-ல் தோன்றியது. ஆனால் சர்வதேச சங்கம் ஒரு மாபெரும் தோல்வியாகவே இருந்தது. 1939-ல் உலகம் மீண்டும் உலகப் போரில் இறங்கியது—முதல் போரைக் காட்டிலும் அதிக கொடிதான ஒரு போர்.
இரண்டாம் உலகப் போரில், அநேக நகரங்கள், இடிந்த கட்டிட கற்கூளங்களாக ஆயின. சமுதாய வாழ்க்கை கொடுங்கனவானது. பின்னர் 1945-ல் ஹிரோஷீமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டது, மனிதனை அணுசக்தி சகாப்தத்திற்குள் அழைத்துச் சென்றது. இந்த இரண்டு ஜப்பானிய நகரங்களிலும் மேலெழுந்து சென்ற பயங்கரமான காளான் வடிவ மேகங்கள், அப்போதிருந்து மனிதவர்க்கத்தைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
எனினும் அந்த வெடிகுண்டுகள் விழுவதற்கு முன்பாகவேகூட, செயலற்றுப் போன சர்வதேச சங்கம் போன்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவதற்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டு வந்தன. இதன் விளைவே ஐக்கிய நாடுகள் சங்கம். அடிப்படையில் அதனுடைய நோக்கம் முன்னது போன்றே இருந்தது—உலக அமைதியை காக்க வேண்டும். அது என்ன சாதித்திருக்கிறது? சரி, 1945 முதற்கொண்டு உலகப் போர் எதுவுமில்லை, ஆனால் எண்ணற்ற சிறியப் போர்கள் நடந்துவருகின்றன. இலட்சக்கணக்கானோர் இவைகளில் உயிரிழந்திருக்கின்றனர்.
இது, மனிதர்கள் ‘இனி யுத்தம் கற்பதில்லை’ என்று ஏசாயாவின் மூலம் சொல்லப்பட்ட கடவுளுடைய வாக்கின் நிறைவேற்றத்தை மனிதவர்க்கம் ஒருபோதும் காணமாட்டாது என்பதை அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, வெறுமென இது மனிதனால் கொண்டுவரப்படாது என்பதைத் தானே அர்த்தப்படுத்துகிறது. ‘நம் பாதைக்கு வெளிச்சம்’ என்பதாக அழைக்கப்படும் பைபிளில்தானே ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட அந்த வாக்கு இருக்கிறது. கடைசியாக கடவுள் தாமே யுத்தங்களை ஓயப்பண்ணுவார் என்பதாக காண்பிப்பதும் பைபிளேயன்றி வேறு எதுவுமில்லை.—சங்கீதம் 119:105.
எல்லா யுத்தங்களுக்கும் ஒரு முடிவு
முந்தையக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முதல் நூற்றாண்டில் சர்வதேசீய சகோதரத்துவத்தை நிலைநாட்டிய ஒரு தொகுதி இருந்தது. இதிலுள்ள ஓர் உறுப்பினர் தன்னுடைய சகோதரனுக்கோ சகோதரிக்கோ எதிராகப் போர் தொடுப்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அதன் உறுப்பினர்கள் மிகவும் சொல்லர்த்தமான கருத்தில் ‘தங்கள் பட்டயங்களை அறிவாள்களாக அடித்திருந்தார்கள்.’ இன்று, மனிதர்கள் மொத்தமாக, போரை ஒழித்திட எந்த முன்னேற்றத்தையும் செய்திட இயலாதவர்களாக இருக்கையில் மறுபடியுமாக இதே குறிப்பிடத்தக்க இலக்கை அடைந்திருக்கும் ஒரு தொகுதியான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார்?
1914-க்கு முற்பட்ட ஆண்டுகளில், இந்தச் சிறிய தொகுதியினர் பைபிளில் நம்பிக்கையுடையவர்களாக இருந்தனர். ஆகவே, போரை ஒழித்திட மனிதர்களின் முயற்சிகள் வெற்றிப் பெறமாட்டா என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் பைபிள் படிப்பிலிருந்து, 1914-ம் ஆண்டு மனித சரித்திரத்தில் ஒரு திரும்புக் கட்டமாக இருக்கும் என்பதைக் கற்றறிந்து, இதைக்குறித்து 40 ஆண்டுகளாக எச்சரித்து வந்தார்கள். பைபிள் தீர்க்கதரிசனத்தின்படியே, 1914, பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், பூமியதிர்ச்சிகள் மற்றும் போர்களினால் தனிப்படக் குறித்துக் காட்டப்பட்ட ஒரு காலத்தின் ஆரம்பமாக இருந்தது. (மத்தேயு 24:3, 7, 8 லூக்கா 21:10, 11) முதல் உலகப் போரைக் குறித்து சரித்திராசிரியன் ஜேம்ஸ் கேமரான் எழுதியதாவது: “1914-ல் அப்போது அறியப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதுமான உலகம் முடிவுக்கு வந்தது.”
யுத்தம் முடிவதற்கு முன்பாக பயங்கரமான ஒரு காய்ச்சல் தொற்றுநோய் உலகம் முழுவதிலும் பரவி 200 இலட்சம் ஆட்களைக் கொன்றது—போரில் உயிரிழந்த போர்வீரர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகம். அப்போது முதற்கொண்டு, புற்றுநோயும், சமீபத்தில் எய்ட்ஸ் நோயும் மனிதவர்க்கத்தை அச்சுறுத்தி வந்திருக்கிறது.
இப்பொழுது மற்றொரு பைபிள் தீர்க்கதரிசனத்தை கவனியுங்கள்: “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.” (மத்தேயு 24:12) இது நிறைவேறி வருகிறதா? நிச்சயமாகவே! தினந்தோறும் செய்திகள் வாயிலாக உலகம் முழுவதிலும் காணப்படும் அக்கிரமம் வெளியாகி வருகிறது: கொலைகள், பின்நின்று தாக்குதல் மற்றும் பொதுவாக தற்காப்பற்றவராக ஒருவரை முடமாக்குதல். மேலுமாக, இரண்டாம் உலகப் போரைக் குறித்த அரசியல் முன்னறிவிப்பு, அது “பயத்திலிருந்து விடுதலை”யைக் கொண்டுவரும் என்பதாக இருந்தது. இதற்கு எதிர்மாறாக, பைபிள் துல்லிபமாக, “பூமியின் மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” என்று முன்னறிவித்தது. (லூக்கா 21:26) மறுபடியுமாக மனிதர்களின் முன்னறிவிப்பு தவறாகவும், கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் உண்மையாகவும் நிரூபித்தது.
பிரதான யுத்தப்பிரியன்
யுத்தப்பிரியன் என்பவன், யுத்தத்தைத் தூண்டி ஊக்கமளிப்பவன். அரசியல்வாதிகள், மதகுருமார், வியாபாரிகளும்கூட இதைச் செய்திருக்கின்றனர். ஆனால் முக்கியமாகப் யுத்தப்பிரியன் வேதவாக்கியங்கள் “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்பதாக அழைக்கும் பிசாசாகிய சாத்தானேயன்றி வேறு எவரும் இல்லை.—2 கொரிந்தியர் 4:4.
சாத்தான் பல ஆயிர வருடங்களுக்கு முன்பாக யெகோவா தேவனுக்கு எதிராக கலகம் செய்து, பின்னால் திரளான தேவதூதர்களை தன்னைச் சேர்ந்துகொள்ளும்படியாகத் தூண்டினான். ஆனால் 1914-ல் அவனுடைய காலம் முடிந்துவிட்டது. பைபிள் நமக்குச் சொல்வதாவது: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.”—வெளிப்படுத்துதல் 12: 7–9.
இது, 1914 முதற்கொண்டு பூமி ஏன் இத்தனை ஆபத்தான ஓர் இடமாக இருந்துவருகிறது என்பதை விளக்குவதாயிருக்கிறது. பைபிள் சாத்தானுடைய வீழ்ச்சியின் விளைவை முன்னறிவித்தது: “பூமியிலும் . . . குடியிருக்கிறவர்களே ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு உங்களிடத்தில் இறங்கினபடியால் உங்களுக்கு ஆபத்து வரும்.” (வெளிப்படுத்துதல் 12:12) எத்தனை கொஞ்சக்காலம்? இயேசு சொன்னார்: “இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்தச் சந்ததி [1914-ல் ஆரம்பமாகும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சந்ததி] ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 24:34) எவைகளெல்லாம்? இயேசு நம்முடைய நாளுக்கு முன்னுரைத்த எல்லாத் துன்பங்களும் குழப்பங்களுமே.
எனினும், சர்வதேச சங்கத்தின் படுதோல்வியின் மத்தியிலும், தற்போதுள்ள ஐக்கிய நாடுகள் அவையின் செயலற்ற நிலையின் மத்தியிலும், தேசங்கள் சமாதானத்தை உருவாக்க தங்கள் சொந்த முயற்சியை கைவிடமாட்டார்கள் என்பதாக பைபிள் காண்பிக்கிறது. ஆம், அவர்கள் வெற்றிப் பெற்றுவிட்டதாக எண்ணும் காலம் வரும். “சமாதானம் சவுக்கியம்” என்ற பெருத்த முழக்கமிருக்கும், ஆனால் இதைத் தொடர்ந்து “அழிவு சடிதியாய்” இந்தச் சீர்கெட்ட உலகின் மேல் வரும். இருளில் இருப்பதன் காரணமாக, “இரவிலே திருடன் வருகிறவிதமாய்” ஏற்படும் சம்பவங்களின் இந்தத் திடீர்த் திருப்பம் எதிர்பாராது அவர்களைச் சிக்க வைத்துவிடும்.—1 தெசலோனிகேயர் 5:2, 3.
இது எதற்கு வழிநடத்தும்? உண்மையிலேயே “யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவரும் யுத்தத்துக்கு,” “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தம்” என்பதாக பைபிள் அழைக்கும் அர்மகெதோன் யுத்தத்துக்கு. இது எல்லாப் பொல்லாத காரியங்களின் மற்றும் அவைகளின் ஆதரவாளர்களின் அழிவைக் குறிப்பதாக இருக்கும். “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்.” (வெளிப்படுத்துதல் 16:14–16; சங்கீதம் 37:9) கடைசியாக, யுத்தப் பிரியனாகிய சாத்தான், இனிமேலும் மனிதர்கள் மீது செல்வாக்கு செலுத்தமுடியாத ஓர் இடத்தில் அடைத்து வைக்கப்படுவான். கடைசியாக, அவனும்கூட அழிக்கப்பட இருக்கிறான்.—வெளிப்படுத்துதல் 20:1–3, 7–10.
என்றபோதிலும், பழிபாவமறியாதவர்களையும் குற்றமற்றவர்களையும் ஒன்று போல முட்டாள்தனமாக ஆராயாது படுகொலைச் செய்யும் ஒரு யுத்தமாக இது இருக்காது என்பதை கவனியுங்கள். தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள். இவர்கள் “இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் [கடவுளை] சேவி”க்கிறவர்களாக இருப்பார்கள். ஆம், இப்பொழுதேயும்கூட யுத்தத்தைக் கற்றுக் கொள்ள மறுத்து, ஒரு மெய்க் கிறிஸ்தவனின் சமாதான வழிகளை பின்பற்றுகிறவர்கள் இந்தக் கடைசி மகா யுத்தத்தைத் தப்பிப்பிழைப்பார்கள். அவர்கள் அநேகராயிருப்பார்களா? பைபிள் அவர்களை, “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்” என்றழைக்கிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 14, 15.
புயலுக்குப் பின்னால்
என்னே நிம்மதியாக இவர்கள் இருப்பார்கள்! பல தேசீய அரசாங்கங்களுக்குப் பதிலாக ஒரே ஓர் அரசாங்கம்: கடவுளுடைய ராஜ்யமே இருக்கும். (தானியேல் 2:44 மத்தேயு 6:9, 10) மேட்டிமையும் பேராசையுமுள்ள ஆட்களுக்குப் பதிலாக, சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:10, 11) “தேவன் தாமே . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) யெகோவா “பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்”பண்ணுவார். பட்டயங்கள் மண்வெட்டிகளாகவும் ஈட்டிகள் அரிவாள்களாகவும் அடிக்கப்படும். ‘இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.’—சங்கீதம் 46:8, 9; ஏசாயா 2:4.
இப்பேர்ப்பட்ட ஓர் உலகில் நீங்கள் வாழ விரும்பமாட்டீர்களா? நிச்சயமாகவே நீங்கள் விரும்புவீர்கள்! சரி, இது கூடிய காரியமாகும். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் படித்து, இந்த நம்பிக்கை மெய்யானதும் நல்லாதாரத்தையுடையதுமாயிருப்பதை நீங்கள் உங்களுக்கு நிச்சயப்படுத்திக் கொள்வதே முதல் படியாக இருக்கிறது. பின்னர், பைபிளிலிருந்து, உங்களைப் பற்றிய கடவுளுடைய சித்தம் என்ன என்பதைக் கண்டுபிடித்து அதற்கேற்ப செயல்படுங்கள். ஆம், படிப்பு என்பது முயற்சியை அர்த்தப்படுத்துகிறது. ஆனால் அது வீணல்ல. நீங்கள் பெற்றுக் கொள்ளும் அறிவை, சரியான வகையில் பயன்படுத்தினால் அது நித்திய ஜீவனை அர்த்தப்படுத்தும் என்பதாக இயேசு சொன்னார். (யோவான் 17:3) அதைவிட அதிமுக்கியமானது வேறு எதுவும் இருக்கிறதா? (w88 11/1)