‘என் இஷ்டம்,’ ‘என் விருப்பம்’ என்று சொல்கிறீர்களா?
சின்னஞ்சிறுசுகள் இரண்டு பேர் ஒன்றாகச் சேர்ந்து ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பிள்ளை தனக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொம்மையை அடுத்தவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு, “ஏய் இது என்னோடது” என்று சொல்லி கத்துகிறது. ஆம், பிள்ளைப் பருவத்திலிருந்தே அபூரண மனிதரிடம் சுயநல மனப்பான்மை தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறது! (ஆதி. 8:21; ரோ. 3:23) அதோடு, ‘நான்தான்,’ ‘எனக்குத்தான்’ என்ற மனப்பான்மையை இன்று இந்த உலகமும் ஊட்டி வளர்க்கிறது. இதை நாம் தவிர்ப்பதற்கு, சுயநல ஆசைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், மற்றவர்களின் விசுவாசத்தைத் தகர்ப்பதற்கு நாமே காரணமாகிவிடுவோம்; யெகோவாவிடம் நமக்கு இருக்கிற பந்தத்தையும் கெடுத்துக்கொள்வோம்.—ரோ. 7:21–23.
நம் செயல்கள் மற்றவர்கள்மீது ஏற்படுத்தும் பாதிப்பைச் சிந்தித்துப் பார்க்கும்படி அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார். “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது” என்று அவர் எழுதினார். அதோடு, யாருக்கும் “இடையூறாக இல்லாதபடி நடந்துகொள்ளுங்கள்” என்றும் கூறினார். (1 கொ. 10:23, 32, NW) அப்படியானால், நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றிய விஷயத்தில் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்வது நல்லது: ‘என்னுடைய செயல்கள் சபையின் அமைதியைக் குலைக்குமானால், அவற்றைச் செய்ய எனக்கு உரிமை இருந்தும் செய்யாதிருக்க மனமுள்ளவனாக இருக்கிறேனா? பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது கஷ்டமாக இருந்தாலும் அவற்றைக் கடைப்பிடிக்க நான் தயாராக இருக்கிறேனா?’
வேலையைத் தேர்ந்தெடுக்கையில்
வேலையைத் தேர்ந்தெடுப்பது தங்களுடைய சொந்த விஷயமென பெரும்பாலோர் கருதுகிறார்கள்; அது மற்றவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று எண்ணுகிறார்கள். தென் அமெரிக்காவில் ஒரு சிறிய நகரத்தில் வசிக்கும் ஒரு வியாபாரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். சூதாடி, குடிகாரர் என்று அவர் பெயரெடுத்திருந்தார். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்து ஆன்மீக ரீதியில் முன்னேறினார், தனது வாழ்க்கைப் போக்கையும் மாற்றிக்கொண்டார். (2 கொ. 7:1) சபையாருடன் சேர்ந்து பிரசங்க வேலையில் ஈடுபடுவதற்கு ஆசைப்படுவதாக மூப்பரிடம் தெரிவித்தார். அப்போது, அவர் செய்யும் வேலையைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்படி அந்த மூப்பர் சாதுரியமாக அவரிடம் சொன்னார். சில காலமாக, கரும்பு சக்கையிலிருந்து தயாரிக்கப்படும் சாராயத்தை விநியோகம் செய்துவந்த முக்கிய நபராக அந்தப் பகுதியில் விளங்கினார்; பலவற்றிற்கு இந்தச் சாராயம் உபயோகமாய் இருந்தாலும், அந்தப் பகுதியில் வாழ்பவர்கள் பொதுவாக குளிர்பானத்துடன் கலந்து, போதையேற்றிக் கொள்வதற்காகவே அதைக் குடித்தார்கள்.
இப்படிப்பட்ட சரக்கை விற்றுக்கொண்டு அதேசமயத்தில் எல்லாருக்கும் போய் பிரசங்கம் செய்வது சபையின் மதிப்பைக் கெடுக்கும், கடவுளுடன் தனது உறவையும் பாதிக்கும் என்பதை இந்த மனிதர் உணர்ந்துகொண்டார். அவரை நம்பி ஒரு பெரிய குடும்பமே இருந்தபோதிலும், சாராயம் விற்பதை உடனே நிறுத்திவிட்டார். தற்போது காகிதப் பொருள்களை விற்று தன்னுடைய குடும்பத்தின் வயிற்றுப்பாட்டைக் கவனிக்கிறார். இப்போது, இவரும் இவருடைய மனைவியும் ஐந்து பிள்ளைகளில் இருவரும் ஞானஸ்நானம் பெற்று, எந்தவித சங்கோஜமும் இல்லாமல் வைராக்கியத்துடன் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்.
நண்பர்களைத் தேர்ந்தெடுக்கையில்
உலகத்தாருடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போடுவது ஒருவருடைய சொந்த விஷயமா அல்லது அதில் பைபிள் நியமங்கள் உட்பட்டிருக்கின்றனவா? யெகோவாவின் சாட்சியல்லாத ஒரு வாலிப பையனுடன் சேர்ந்து நம் சகோதரி ஒருவர் பார்ட்டிக்குச் சென்றார். ஆபத்துகளைப் பற்றி எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், யாருடனும் செல்ல தனக்கு உரிமை இருக்கிறது என்று சொல்லிவிட்டு பார்ட்டிக்குப் போனாள். அவள் பார்ட்டிக்கு வந்தவுடன், ‘ஸ்ட்ராங்கான’ போதைப்பொருள் கலந்த பானம் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. பல மணிநேரம் கழித்து அவள் கண்விழித்துப் பார்த்தபோதுதான், தன்னுடைய “நண்பன்” தன்னைக் கற்பழித்தது அவளுக்குத் தெரிந்தது.—ஆதியாகமம் 34:2-ஐ ஒப்பிடுக.
வாஸ்தவம்தான், உலகத்தாருடன் பழகும்போது எப்போதுமே இதுபோன்ற சோகம் நடக்காது, ஆனால் பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதி. 13:20) இதில் எந்தச் சந்தேகமும் இல்லை—கெட்ட நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது நமக்கு ஆபத்தைத்தான் தேடித் தரும்! “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று நீதிமொழிகள் 22:3 சொல்கிறது. ஆம், நம்முடைய நண்பர்கள் நம்மையும், யெகோவாவுடன் நமக்கு இருக்கிற உறவையும் கெடுத்துப்போடலாம்.—1 கொ. 15:33; யாக். 4:4.
உடையில், தோற்றத்தில்
ஆடை அலங்காரமும் அழகு பாணியும் நாளுக்கு நாள் மாறி வருகின்றன. என்றாலும், உடையையும் தோற்றத்தையும் பற்றிய பைபிள் நியமங்கள் மாறுவதே கிடையாது. “நேர்த்தியான உடையினாலும் அடக்கத்தினாலும் தெளிந்த புத்தியினாலும் தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டுமென்று” கிறிஸ்தவ பெண்களுக்கு பவுல் அறிவுரை கூறினார். இதிலுள்ள நியமம் ஆண்களுக்கும் பொருந்துகிறது. (1 தீ. 2:9, NW) கட்டுப்பெட்டித்தனமாக இருக்க வேண்டுமென்றோ கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் ஒரே ரசனை இருக்க வேண்டுமென்றோ பவுல் இங்கே சொல்லவில்லை. அப்படியானால், அடக்கமாய் இருப்பதென்றால் என்ன? அடக்கம் என்பது “பகட்டோ ஆரவாரமோ இல்லாதது . . . உடையிலும் பேச்சிலும் நடத்தையிலும் கண்ணியத்தைக் காத்துக்கொள்வது” என்று ஓர் அகராதி வரையறுக்கிறது.
ஆகையால், நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘கவர்ச்சியாக உடுத்த எனக்கு உரிமையிருக்கிறது என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு, நான் அடக்கமாகத்தான் உடுத்துகிறேன் என்று சொல்ல முடியுமா? நான் உடுத்துகிற விதம் என்னை “ஒரு மாதிரியான” ஆளாகக் காட்டுகிறதா?’ இந்த விஷயத்தில், யாருக்கும் “இடறல் உண்டாக்காமல்” கவனமாய் இருப்போமாக. ஆம், ‘நம்முடைய விஷயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டாமல் மற்றவர்களுடைய விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவோமாக.’—2 கொ. 6:3; பிலி. 2:4, NW.
வியாபார விஷயங்களில்
நேர்மையின்றி நடந்துகொண்டதால் அல்லது ஏமாற்று வேலையில் ஈடுபட்டதால் கொரிந்துவிலிருந்த சபையில் மிகப் பெரிய பிரச்சினைகள் எழுந்தன. அப்போது பவுல், “நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?” என்று கேட்டு அந்தச் சபையினருக்கு எழுதினார். சகோதரனை நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்துவதற்குப் பதிலாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க தயாராய் இருக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுரை கூறினார். (1 கொ. 6:1–7) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சகோதரர் இந்த அறிவுரையை மனதில் வைத்து செயல்பட்டார். சம்பள பாக்கி விஷயத்தில் ஒருசமயம் அவருடைய கிறிஸ்தவ முதலாளியுடன் அவருக்குக் கருத்து வேறுபாடு உண்டானது. பைபிளின் வழிநடத்துதல்களைப் பின்பற்றி, அந்த இரு சகோதரர்களும் அடிக்கடி சந்தித்துப் பேசினார்கள், ஆனால் அந்தப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. கடைசியாக, இந்த விஷயத்தை ‘சபை’ மூப்பர்களிடம் கொண்டுசென்றார்கள்.—மத். 18:15–17.
ஆனாலும் அந்தப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. ஆகவே, அந்தச் சகோதரர் நன்றாக ஜெபம் செய்துவிட்டு, தனக்கு வரவேண்டிய பணத்தில் பெரும்பாலானதை இழக்க தீர்மானித்தார். ஏன்? பிற்பாடு அவர் சொன்னார்: “எனக்கும் அவருக்கும் மத்தியில் இருந்த அந்தக் கருத்து வேறுபாட்டால் என் சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக என்னைவிட்டுப் பறிபோனது. ஆன்மீக விஷயங்களுக்கு ஒதுக்கக்கூடிய பொன்னான நேரமும் வீணாய்ப் போனது.” ஆனால், அந்தத் தீர்மானமெடுத்த பிறகு, போன சந்தோஷமெல்லாம் திரும்பி வந்ததையும் தன்னுடைய சேவையில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருப்பதையும் அந்தச் சகோதரர் உணர்ந்தார்.
சின்னச் சின்ன விஷயங்களிலும்கூட
சின்னச் சின்ன விஷயங்களிலும்கூட நம் இஷ்டப்படி செய்ய வேண்டுமென வற்புறுத்தாமல் இருப்பது ஆசீர்வாதங்களை அள்ளிவழங்கும். மாவட்ட மாநாட்டின் முதல் நாளன்று ஒரு பயனியர் தம்பதியினர் மன்றத்திற்குச் சீக்கிரம் வந்துவிட்டார்கள், அவர்களுக்குப் பிடித்த மாதிரியே இருக்கைகளும் கிடைத்துவிட்டன. நிகழ்ச்சிநிரல் ஆரம்பமானபோது, நிரம்பிவழிந்த மன்றத்திற்குள் ஒரு பெரிய குடும்பம் அநேக பிள்ளைக்குட்டிகளுடன் வேகவேகமாய் நுழைந்தது. போதுமான இருக்கைகளுக்காக அந்தக் குடும்பத்தினர் தேடிக்கொண்டிருந்ததை கவனித்த அந்த பயனியர் தம்பதியினர் தங்களுடைய இரண்டு இருக்கைகளையும் விட்டுக்கொடுத்துவிட்டார்கள். இதனால் அந்தக் குடும்பத்தினர் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து உட்கார முடிந்தது. மாநாடு முடிந்து சில நாட்களுக்குப்பின், அந்தக் குடும்பத்தினரிடமிருந்து பயனியர் தம்பதியினருக்கு நன்றி மடல் வந்தது. மாநாட்டிற்குக் காலதாமதமாய் வந்தபோது தாங்கள் மிகவும் சோர்ந்துவிட்டதாக அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள். ஆனால் அந்த வருத்தம் விரைவில் சந்தோஷமாக மாறியதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். சமயம் அறிந்து அவர்கள் செய்த உதவிக்கு அந்தக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்திருந்தார்கள்.
நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, மற்றவர்களுக்காக நம்முடைய விருப்பங்களை மனமுவந்து விட்டுக்கொடுப்போமாக. ‘தன்னலமற்ற அன்பைக்’ காட்டும்போது, சபையாரிடத்திலும் அக்கம்பக்கத்தாரிடத்திலும் சமாதானத்தைக் காத்துக்கொள்கிறோம். (1 கொ. 13:5, பொது மொழிபெயர்ப்பு) மிக முக்கியமாக, யெகோவாவுடன் நம்முடைய நட்பைக் காத்துக்கொள்கிறோம்.
[பக்கம் 20-ன் படம்]
அலங்காரம் செய்யும் விஷயத்தில், உங்கள் சொந்த விருப்பங்களை விட்டுக்கொடுக்க மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?
[பக்கம் 20, 21-ன் படம்]
சகோதரர்களுக்காக இருக்கையை விட்டுக்கொடுக்க மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?