பைபிளின் கருத்து
உடுத்துவது தலை வாருவது—கடவுளுக்கு ஒரு பொருட்டா?
“புத்தகத்தின் அட்டவணை அதில் அடங்கியுள்ள விஷயத்தைத் தெரிவிப்பது போல, ஆண் அல்லது பெண்ணின் உடையும் வெளித்தோற்றமும் அவன் அல்லது அவளது அகத்தோற்றத்தைக் காட்டுகின்றன.”—ஆங்கில நாடக ஆசிரியர் ஃபிலிப் மாஸிங்கர்.
உடுத்துவதையும் தலை வாருவதையும் பற்றிய விதிமுறைகள் அடங்கிய ஒரு நீண்ட பட்டியலை பொ.ச. மூன்றாம் நூற்றாண்டின் சர்ச் எழுத்தாளர் டைட்டஸ் கிளெமன்ஸ் தயாரித்தார். அதன்படி, நகைகள் போடக்கூடாது; ஆடம்பர ஆடைகளும் கண்ணைப் பறிக்கும் வண்ண உடைகளும் உடுத்தக்கூடாது. பெண்கள் தங்கள் முடிக்கு டை போட அனுமதி கிடையாது; “வசீகரிக்கும் தோற்றத்துக்காக அழகு சாதனங்களை தங்கள் முகங்களில் அப்பவோ, மேக்கப் செய்யவோ” கூடாது. ஆண்கள் தலைமுடியை ஒட்ட வெட்டிக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அப்படி செய்வது அவரை சீரியஸாக தோற்றமளிக்கச் செய்யும். ஆனால் நாடியில் உள்ள குறுந்தாடியை சவரம் செய்யாமல் விட்டுவிட்டாலோ கம்பீர தோற்றமளிக்கும்; அது அவருக்கு தகப்பனுக்குரிய தோரணையைக் கொடுக்கும்.”a
பல நூற்றாண்டுகளுக்குப் பின், தன்னுடைய சீஷர்கள் அணியக்கூடிய உடையின் நிறம், தன்மை ஆகியவற்றைக் குறித்து புராட்டஸ்டண்ட் தலைவர் ஜான் கால்வின் திட்டவட்டமான சட்டங்களை இயற்றினார். நகையையும் லேஸையும் (lace) பெண்கள் வெறுக்க வேண்டும், மேலே உயர்த்தி ரொம்ப ‘ஒய்யாரமாக’ முடி அலங்காரம் செய்தால் அவர்களுக்கு கிடைக்கும் வெகுமதி சிறைத்தண்டனையே.
இப்பேர்ப்பட்ட கடுமையான கருத்துக்களுக்கு மதத் தலைவர்களும் பல ஆண்டுகளாக ‘உம்’ கொட்டினார்கள். ஆனால், நேர்மையான ஆட்களுக்கோ ஒரே கேள்விமயம். நான் எதை உடுத்துகிறேன் என்பது உண்மையில் கடவுளுக்கு ஒரு பொருட்டா? குறிப்பிட்ட சில பாணிகளையும் அழகு சாதனங்களையும் கடவுள் வெறுக்கிறாரா? பைபிள் இதைக் குறித்து என்ன போதிக்கிறது?
தனிப்பட்ட ஒரு விஷயம்
இயேசு தம் சீஷர்களிடம் சொன்னதாக யோவான் 8:31, 32-ல் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயம் நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அதாவது: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால், . . . சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” ஆம், இயேசு கற்பித்த சத்தியத்தின் நோக்கம், பாரம்பரியமும் பொய்ப் போதகமும் அடங்கியவையும், ஒருவரை அடக்கி ஆளுகிறவையுமான பெருஞ்சுமைகளிலிருந்து ஜனங்களுக்கு நிம்மதி வேண்டும் என்பதாகும். அது, ‘வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களுக்கு’ இளைப்பாறுதல் தரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. (மத்தேயு 11:28) சொந்த விஷயங்களில் தனி நபர்கள் தாங்களாகவே சிந்தித்து செயல்படுகிற உரிமை அவர்களுக்கு உண்டு. இதைக் கட்டுப்படுத்துகிற அளவிற்கு இயேசுவோ அவருடைய தகப்பனாகிய யெகோவா தேவனோ செயல்பட விரும்புவதில்லை. மாறாக, ‘நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாக’ முதிர்ச்சியடையும்படியே யெகோவா விரும்புகிறார்.—எபிரெயர் 5:14.
அண்டை தேசத்தாரிடமிருந்தும் அவர்களது ஒழுக்கயீனத்திலிருந்தும் யூதர்கள் தங்களை விலக்கி வைத்திருப்பதற்காக, மோசேயின் பிரமாணத்தில் உடைகளைப் பற்றிய குறிப்பிட்ட சில சட்டங்கள் அடங்கியிருந்தன. இதைத் தவிர, உடுத்துவதைக் குறித்தோ, தலை வாருவதைக் குறித்தோ, அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதைக் குறித்தோ, நுணுக்கமான எந்தச் சட்டங்களும் பைபிளில் இல்லை. (எண்ணாகமம் 15:38-41; உபாகமம் 22:5) கிறிஸ்தவ ஏற்பாட்டில், உடை மற்றும் முடி அலங்காரம் என்பது முழுக்க முழுக்க தனிப்பட்டவருடைய விஷயம்தான்.
அப்படியென்றால், நாம் எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தலாம், எப்படி வேண்டுமானாலும் தலை வாரலாம் என்றோ, கடவுள் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார் என்றோ இது அர்த்தப்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, உடை மற்றும் முடி அலங்காரம் சம்பந்தமாக கடவுளுடைய விருப்பம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நியாயமான வழிகாட்டுக் குறிப்புகளை பைபிள் கொடுக்கிறது.
“அடக்கத்தோடும் தெளிந்த புத்தியோடும்”
கிறிஸ்தவ பெண்கள் “முடியைப் பலவிதமாக அலங்கரித்து, பொன், முத்து போன்ற நகைகளாலும், விலையுயர்ந்த உடைகளாலும் அழகுபடுத்துவதை அல்ல, ஆனால் அடக்கத்தோடும் தெளிந்த புத்தியோடும் தகுந்த உடையணிய வேண்டும்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். அதேபோல் பேதுரு, பெண்கள் ‘மயிரைப் பின்னி பொன்னாபரணங்களை அணிதலாகிய புறம்பான அலங்கரிப்புக்கு’ எதிராக எச்சரிக்கிறார்.—1 தீமோத்தேயு 2:9, NW; 1 பேதுரு 3:3.
கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் தங்கள் தோற்றத்திற்கு மெருகூட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று பவுலும் பேதுருவும் குறிப்பிடுகிறார்களா? இல்லவே இல்லை! நகைகளையும் அழகு சாதன பொருட்களையும் வாசனை தைலங்களையும் பயன்படுத்தின விசுவாசமுள்ள ஆண்களையும் பெண்களையும் பற்றி பைபிள் குறிப்பிடுவது உண்மையே. எஸ்தர் அகாஸ்வேரு ராஜாவுக்கு முன்பாக போய் நிற்பதற்குமுன், மசாஜ் செய்தல், நறுமண தைலங்கள் தடவுதல் போன்ற பெரிய அலங்கரிப்பு செய்யப்பட்டது. யோசேப்பும்கூட பட்டுப்போன்ற வஸ்திரமும் தங்க ஆரமும் அணிந்திருந்தார்.—ஆதியாகமம் 41:42; யாத்திராகமம் 32:2, 3; எஸ்தர் 2:7, 12, 15.
பவுல் பயன்படுத்தின “தெளிந்த புத்தி” என்ற சொற்றொடர் அவரது எச்சரிப்பைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. இதன் மூல கிரேக்க வார்த்தைக்கு, ‘மிதமான,’ ‘தன்னடக்கமுள்ள’ என்று அர்த்தம். இது தன்னைக் குறித்து மிஞ்சி எண்ணக்கூடாது என்றும், தேவையில்லாமல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடாது என்றும் பொருள்படுகிறது. மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகள் இதனை, “விவேகமுள்ள,” “உணர்வுள்ள,” “பண்பட்ட,” அல்லது “தன்னுணர்ச்சிக் கட்டுப்பாடுள்ள” என்றெல்லாம் மொழிபெயர்க்கிறது. கிறிஸ்தவ மூப்பர்களுக்கும்கூட தெளிந்த புத்தி என்ற இந்தக் குணம் அவசியமான ஒன்று.—1 தீமோத்தேயு 3:2.
எனவே, வேத வசனங்களின்படி, நாம் உடுத்தும் விதமும் தலைவாரும்விதமும் சீராகவும் அடக்கமாகவும் இருக்கவேண்டும். இதன் அர்த்தம், நமது பெயரையும் கிறிஸ்தவ சபையின் நற்பெயரையும் கெடுக்கும் அளவிற்கு உடை உடுத்தக்கூடாது; மற்றவர்களை புண்படுத்தும், மட்டுக்கு மீறிய ஸ்டைல்களையும் தவிர்க்க வேண்டும். அளவுக்கு மிஞ்சி அலங்கரிப்பதன் மூலம் பிறரது கவனத்தைக் கவரும் வகையில் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, தேவனுக்கென்று தங்களைப் பரிசுத்தமாக அளிப்பவர்கள், தெளிந்த புத்தியுடையவர்களாய் இருக்க வேண்டும்; ‘அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தை’ வளர்க்க வேண்டும். இதுவே “தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது” என்று பேதுரு இறுதியாக கூறுகிறார்.—1 பேதுரு 3:4.
கிறிஸ்தவர்கள் இந்த ‘உலகத்துக்கு . . . வேடிக்கையானவர்கள்.’ நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதால், தங்களைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன அபிப்பிராயத்தைக் கொடுக்கிறார்கள் என்பதைக் குறித்து அவர்கள் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 4:9; மத்தேயு 24:14) இவ்வாறு தங்கள் தோற்றமோ, வேறு எதுவுமோ அந்த முக்கியமான செய்தியை மற்றவர்கள் கேட்பதிலிருந்து திசை திருப்ப விரும்புவதில்லை.—2 கொரிந்தியர் 4:2.
ஸ்டைல்களோ இடத்திற்கிடம் வேறுபடுகின்றன; இருந்தாலும் ஒவ்வொருவரும் ஞானமான தெரிவுகளைச் செய்வதற்கென தெளிவான, நியாயமான வழிகாட்டுக் குறிப்புகள் பைபிளில் உள்ளன. இந்த அறிவுரைகளை ஆட்கள் மீறாமல் இருக்கும்வரை, எல்லாருமே அவரவர் விருப்பப்படி உடை மற்றும் முடி அலங்காரம் செய்ய கடவுள் தாராளமாகவும் அன்புடனும் அனுமதிக்கிறார்.
[அடிக்குறிப்புகள்]
a வேத வாக்கியங்களை திரித்துக் கூறுவதன் மூலம் இவ்விதிகள் அழியாமல் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. பைபிளில் இதுபோன்ற எதுவும் இல்லாதபோதிலும், “முதல் பாவத்துக்கும் மரணத்துக்கும்” பெண்ணே காரணமாயிருந்ததால், ஒரு பெண் “ஏவாளைப் போலவே நொந்துகொண்டும் புலம்பிக்கொண்டும்” இருக்கவேண்டும் என்று செல்வாக்குமிக்க இறையியலாளர் டெர்ட்டுல்லியன் போதித்தார். சொல்லப்போனால், இயற்கையிலேயே அழகாய் இருக்கும் பெண்ணும்கூட தன்னுடைய அழகை மறைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.—ஒப்பிடுக: ரோமர் 5:12-14; 1 தீமோத்தேயு 2:13, 14.