வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒரு கிறிஸ்தவ மனைவி “பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்” என்று பவுல் ஏன் எழுதினார்?—1 தீமோத்தேயு 2:15.
இங்கு பவுல் எதை அர்த்தப்படுத்தினார் என்பதைக் குறித்து இந்த வசனத்தின் சூழமைவு என்ன காட்டுகிறது? சபையில் கிறிஸ்தவ பெண் வகிக்கும் பாகத்தைப் பற்றி பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் அவர் ஆலோசனை கூறிக்கொண்டிருந்தார். “ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல் தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்” என்று அவர் எழுதினார். (1 தீமோத்தேயு 2:9, 10) அடக்கமாயும், அலங்காரம் செய்துகொள்வதில் சமநிலையுள்ளவர்களாயும், நற்செயல்களால் ‘அலங்கரித்தவர்களாயும்’ இருக்கும்படி தனது கிறிஸ்தவ சகோதரிகளைப் பவுல் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
அடுத்து, சபையிலுள்ள தலைமைத்துவ ஏற்பாட்டைப் பவுல் இவ்வாறு விளக்கினார்: “உபதேசம் பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும்.” (1 தீமோத்தேயு 2:12; 1 கொரிந்தியர் 11:3) இந்த ஏற்பாட்டிற்கான காரணத்தைக் கூறுகையில், சாத்தானால் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஆனால் ஏவாளே “வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்” என்று அவர் விளக்கினார். ஏவாள் செய்த தவறை ஒரு கிறிஸ்தவ பெண் எவ்வாறு தானும் செய்யாதிருக்க முடியும்? பவுல் இவ்வாறு பதிலளிக்கிறார்: “அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலை கொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.” (1 தீமோத்தேயு 2:14, 15) இவ்வார்த்தைகள் மூலம் பவுல் எதை அர்த்தப்படுத்தினார்?
பிள்ளை பெற்றால்தான் ஒரு பெண் இரட்சிக்கப்படுவாள் என சில மொழிபெயர்ப்புகள் அர்த்தப்படுத்துவதாக தோன்றுகிறது. உதாரணமாக, பொது மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது: ‘தாய்மைப் பேற்றின் வழியாக மீட்பு பெறுவாள்.’ என்றாலும், இது பவுலின் வார்த்தைகளைத் திருத்தமாக மொழிபெயர்க்கவில்லை. ஒருவர் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவர் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டு, இயேசுவில் நம்பிக்கை வைத்து, விசுவாசத்தைச் செயல்களில் வெளிக்காட்ட வேண்டும் என்று பல வசனங்கள் காட்டுகின்றன. (யோவான் 17:3; அப்போஸ்தலர் 16:30, 31; ரோமர் 10:10; யாக்கோபு 2:26) அதுமட்டுமல்ல, விசுவாசமுள்ள பெண்ணிற்குப் பிரசவத்தின்போது எந்தப் பிரச்சினைகளும் இருக்காது என்று பவுல் அர்த்தப்படுத்தவில்லை. பெண்கள் விசுவாசிகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிள்ளைகளை நல்லபடியாக பெற்றெடுத்திருக்கிறார்கள். அதேசமயம், விசுவாசிகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிலர் பிரசவத்தின்போது உயிரிழந்தும் இருக்கிறார்கள்.—ஆதியாகமம் 35:16-18.
அதே கடிதத்தின் பிற்பகுதியில் பவுல் கொடுத்த கூடுதலான ஆலோசனை அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ‘சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய் திரியப் பழகுபவர்களாய், சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களை பேசுகிறவர்களுமாயிருக்கும்’ இளம் விதவைகள் சிலரை பவுல் எச்சரித்தார். இப்படிப்பட்டவர்களுக்குப் பவுல் கொடுத்த ஆலோசனை என்ன? அவர் இவ்வாறு தொடர்ந்து கூறினார்: “ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம் பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.”—1 தீமோத்தேயு 5:13, 14.
குடும்ப ஏற்பாட்டில் பெண்கள் வகிக்கும் பயனுள்ள பாகத்தைப் பவுல் சிறப்பித்து காட்டினார். ‘பிள்ளைகளைப் பெற்று, வீட்டை நடத்துவது’ போன்ற பொறுப்புகளை உடைய ஒரு பெண், ‘தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும்’ நிலைகொண்டிருக்கையில் பயனற்ற காரியங்களுக்கு கவர்ந்திழுக்கப்பட மாட்டாள். அவளுடைய ஆன்மீகம் காக்கப்படும், அல்லது அவள் “இரட்சிக்கப்படுவாள்.” (1 தீமோத்தேயு 2:15) இப்படி செய்வதன் மூலம் அநேக இளம் பெண்கள் சாத்தானின் கண்ணிகளைத் தவிர்க்க முடியும்.
தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட பவுலின் வார்த்தைகள், நேரத்தைப் பயனுள்ள விதத்தில் செலவிடும்படி ஆண்கள் பெண்கள் என எல்லோருக்குமே நினைப்பூட்டுகின்றன. கடவுளுடைய வார்த்தை எல்லா கிறிஸ்தவர்களையும் இவ்வாறு ஊக்குவிக்கிறது: ‘நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல் ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்துகொள்ளப் பாருங்கள்.’—எபேசியர் 5:15.