கடவுளால் போதிக்கப்பட்டபடி நடவுங்கள்
“நாம் கர்த்தருடைய பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்.”—மீகா 4:2.
1. மீகாவின்படி, கடைசி நாட்களில் கடவுள் தம்முடைய மக்களுக்காக என்ன செய்வார்?
நம்முடைய காலமாகிய, “கடைசி நாட்களில்” அநேக மக்கள் கடவுளை வணங்கும்படி, சுறுசுறுப்புடன் அவரை நாடி தேடுவார்கள் என்று கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய மீகா முன்னறிவித்தார். இவர்கள் இவ்வாறு சொல்லி, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவர்: “நாம் கர்த்தருடைய பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்.”—மீகா 4:1, 2.
2, 3. மனுஷர் பணப்பிரியராய் இருப்பதுபற்றிய பவுலின் முன்னறிவிப்பு இன்று எப்படி நிறைவேற்றம் அடைகிறது?
2 2 தீமோத்தேயு 3:1-5-ஐ நாம் படிப்பது, “கடைசிநாட்களில்” நாம் கடவுளால் போதிக்கப்படுவதன் பலன்களைக் காண நமக்கு உதவி செய்கிறது. முந்தின கட்டுரையில், ‘தற்பிரியராய்’ இல்லாமல் இருப்பது பற்றிய பவுலின் எச்சரிப்பைக் கருத்தில் எடுத்துக்கொள்வோருக்கு வரும் பலன்களைக் கவனிப்பதன்மூலம் நாம் தொடங்கினோம். நம்முடைய நாட்களில் மனுஷர்கள் ‘பணப்பிரியராயும்’ இருப்பர் என்று பவுல் மேலுமாகச் சொன்னார்.
3 அந்த வார்த்தைகள் எவ்வளவு நன்றாக நம்முடைய காலங்களுக்குப் பொருந்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள நவீன வரலாற்றில் ஒரு கல்லூரி பட்டம் ஒருவருக்கும் தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டும் பல கோடிக்கணக்கில் சம்பாதித்தும் திருப்தியற்று இருக்கும் நிதி கொடுக்கல் வாங்கல் செய்பவர்களையும் வியாபார நிறுவனத் தலைவர்களையும்பற்றி நீங்கள் வாசித்ததில்லையா? இந்தப் பணப்பிரியர்கள், சட்டவிரோதமான வழிகளில்கூட தொடர்ந்து அதிகத்தை விரும்புகின்றனர். செல்வந்தர்களாக இல்லாவிட்டாலும் பொருளாசை உடையவர்களாய் இருந்து, ஒருபோதும் திருப்தியடையாத பலருக்கும் இன்று பவுலின் வார்த்தைகள் பொருந்துகின்றன. உங்களுடைய பகுதியில் அப்படிப்பட்ட அநேக மக்களை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
4-6. பணப்பிரியராவதைத் தவிர்ப்பதற்கு பைபிள் எப்படிக் கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறது?
4 பவுலால் குறிப்பிடப்பட்டது மனித இயல்பின் வெறும் ஒரு தவிர்க்கமுடியாத அம்சமாக இருக்கிறதா? பைபிளின் நூலாசிரியரின்படி அவ்வாறில்லை; அவர் வெகு காலத்திற்குமுன் இந்த உண்மையைக் குறிப்பிட்டார்: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.” ‘பணம் எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது,’ என்று கடவுள் சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். “பண ஆசை” அவ்வாறு இருக்கிறது என்று அவர் சொன்னார்.—1 தீமோத்தேயு 6:10.
5 அக்கறைக்குரியவிதத்தில், முதல் நூற்றாண்டிலிருந்த சில நல்ல கிறிஸ்தவர்கள், செல்வத்தைச் சுதந்தரித்ததன்மூலமோ சம்பாதித்ததன்மூலமோ அப்போதைய காரிய ஒழுங்குமுறையில் பணக்காரராக இருந்தனர் என்று பவுலினுடைய வார்த்தைகளின் சூழமைவு ஒத்துக்கொண்டது. (1 தீமோத்தேயு 6:17) அப்படியானால், நம்முடைய நிதி நிலை என்னவாக இருந்தாலும், ஒரு பணப் பிரியர் ஆகும் அபாயத்தைக்குறித்து பைபிள் நம்மை எச்சரிப்பது தெளிவாக இருக்கவேண்டும். இந்தத் துயரகரமான, பொதுவான, குறையைத் தவிர்ப்பதுபற்றி மேலும் ஏதாவது போதனையை பைபிள் அளிக்கிறதா? இயேசுவின் மலைப் பிரசங்கத்தைக் குறித்ததில் அது உண்மையாக இருக்கிறது. அதன் ஞானம் உலகப் புகழ் பெற்றது. உதாரணத்திற்கு, மத்தேயு 6:26-33-ல் இயேசு என்ன சொன்னார் என்று கவனியுங்கள்.
6 லூக்கா 12:15-21-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, அதிக செல்வத்தைச் சேர்த்துவைக்க முயன்றுகொண்டு இருந்து, திடீரென்று தன் உயிரை இழந்த ஒரு செல்வந்தனைப்பற்றி இயேசு பேசினார். இயேசுவின் குறிப்பு என்ன? அவர் சொன்னார்: “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” அப்படிப்பட்ட ஆலோசனையைக் கொடுப்பதோடு, பைபிள் சோம்பேறித்தனத்தைக் கண்டனம் செய்து, நேர்மையான உழைப்பின் முக்கியத்துவத்தை அழுத்திக் காண்பிக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:11, 12) ஓ, இந்தப் போதனைகள் நம்முடைய காலங்களுக்குப் பொருந்துவதில்லை என்று சிலர் மறுப்புத் தெரிவிக்கக்கூடும்—ஆனால் அவை நிச்சயமாக பொருந்துகின்றன, அவை பலனளிப்பவையாக இருக்கின்றன.
போதிக்கப்படுதலும் பயனடைதலும்
7. ஆஸ்திகளைக் குறித்ததில் பைபிளின் அறிவுரையை நாம் வெற்றிகரமாகப் பொருத்திப்பிரயோகிக்கலாம் என்று நம்புவதற்கு நமக்கு என்ன காரணம் இருக்கிறது?
7 பல தேசங்களில், பணத்தைப்பற்றிய தெய்வீக நியமங்களைப் பொருத்தியிருக்கும் எல்லா சமூக, பொருளாதார பின்னணிகளிலுமிருந்து வந்திருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் உண்மை வாழ்க்கை உதாரணங்களை நீங்கள் காண முடியும். புறம்பேயிருக்கிறவர்கள்கூட பார்க்க முடிகிறபடி, அவர்களும் அவர்கள் குடும்பங்களும் பயனடைந்திருக்கின்றனர். உதாரணமாக, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துடைய பிரசுரிப்பாளரின் சமகாலத்திய அமெரிக்காவில் மத இயக்கங்கள் (Religious Movements in Contemporary America) என்ற புத்தகத்தில், ஒரு மனிதவியல் நூலர் எழுதினார்: “அவர்கள் தங்களுடைய அந்தஸ்துக்காக புதிய கார்கள், விலையுயர்ந்த உடைகள் அல்லது மட்டுக்குமீறிய வாழ்க்கை தரத்தில் சார்ந்தில்லை என்று [சாட்சி] பிரசுரங்களிலும் சபை பேச்சுகளிலும் நினைப்பூட்டப்படுகின்றனர். அதேநேரத்தில் ஒரு சாட்சி தன்னைப் பணியில் அமர்த்தியிருப்பவருக்கு ஒரு நாளின் வேலையை திருப்திகரமாகச் செய்யவும் [மேலும்] வழுவாத நேர்மையுடன் இருக்கவும் வேண்டும் . . . அப்படிப்பட்ட குணங்கள், பல திறமைகள் இல்லாத ஓர் ஆளையும் ஒரு பயனுள்ள வேலையாளாக்கிவிடுகிறது; வடக்கு ஃபிலடெல்ஃபியாவிலுள்ள [அ.ஐ.மா.] சில சாட்சிகள் முக்கியத்துவம்வாய்ந்த வேலை உத்தரவாதத்தை உடைய தகுதிகளுக்கு முன்னேறி இருக்கின்றனர்.” தெளிவாகவே, கடவுளிடமிருந்து அவருடைய வார்த்தையின்மூலமாக வரும் போதனையை ஏற்றிருக்கும் மக்கள், தற்போதைய நிலைமைகளைக் கையாளுவதற்குக் கடினமாக்கும் மனநிலைகளைக் குறித்து எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். பைபிள் போதனைகள் ஒரு மேம்பட்ட, மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழிநடத்துகிறது என்று அவர்களுடைய அனுபவம் நிரூபிக்கிறது.
8. ‘வீம்புக்காரர்,’ ‘அகந்தையுள்ளவர்கள்,’ மற்றும் ‘தூஷிக்கிறவர்கள்’ ஆகியோர் ஏன் தொடர்புபடுத்தப்படலாம், இந்த மூன்று பதங்களின் அர்த்தம் என்ன?
8 பவுல் பட்டியலிடும் அடுத்த மூன்று காரியங்களைத் தொடர்புபடுத்திப் பார்ப்போம். கடைசி நாட்களில், மனுஷர்கள் “வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும்” இருப்பார்கள். இந்த மூன்றும் ஒரே காரியங்கள் அல்ல, ஆனால் எல்லாம் பெருமையோடு தொடர்புடையவை. முதலாவது, ‘வீம்புக்காரர்’ [தற்பெருமையுடையவர், NW]. இங்கு மூல கிரேக்க வார்த்தை இவ்வாறு பொருள்படுகிறது என்று ஓர் அகராதி சொல்லுகிறது: “‘உண்மை மெய்ப்பித்துக் காட்டுவதைவிட தன்னைக்குறித்து அதிகத்தைக் காட்டுதல்,’ அல்லது ‘தன்னால் செய்ய முடிவதைவிட அதிகத்தை வாக்களித்தல்.’” ஏன் சில பைபிள்கள் ‘வீண்பெருமையடித்தல்’ என்ற பதத்தைப் பயன்படுத்துகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடிகிறது. அடுத்ததாக வருவது ‘அகந்தையுள்ளவர்கள்,’ அல்லது சொல்லர்த்தமாக ‘மேம்பட்ட தோற்றமளிப்பவர்கள்.’ கடைசியாக, ‘தூஷிக்கிறவர்கள்.’ கடவுளைக்குறித்து மதிப்பற்ற விதத்தில் பேசுபவர்களைத் தூஷிக்கிறவர்கள் என்பதாகச் சிலர் நினைக்கக்கூடும்; ஆனால் அதன் மூலப் பதம் மனிதருக்கு எதிராக தீங்கான, இகழும், அல்லது பழிதூற்றும் பேச்சை உட்படுத்துகிறது. ஆகவே பவுல், கடவுளுக்கும் மனிதனுக்கும் எதிராகத் தூண்டப்பட்ட தூஷணத்தைக் குறிப்பிடுகிறார்.
9. நிலவிவரும் கெடுதலான மனநிலைகளுக்கு மாறாக, என்ன மனநிலைகளை வளர்க்கும்படி பைபிள் மக்களை உற்சாகப்படுத்துகிறது?
9 பவுலின் விவரிப்பிற்குப் பொருந்தும் மக்களின் மத்தியில் நீங்கள் இருக்கும்போது, அவர்கள் உடன்வேலையாட்களாக, பள்ளி சகாக்களாக, அல்லது உறவினர்களாக, யாராக இருந்தாலும், எவ்வாறு உணருகிறீர்கள்? அது உங்களுடைய வாழ்க்கையை எளிதாக்குகிறதா? அல்லது அப்படிப்பட்ட மக்கள் உங்கள் வாழ்க்கையைச் சிக்கலானதாக்கி, நம்முடைய காலங்களைக் கையாளுவதற்கு இன்னும் கடினமானதாக ஆக்குகின்றனரா? என்றாலும், 1 கொரிந்தியர் 4:7; கொலோசெயர் 3:12, 13; மற்றும் எபேசியர் 4:29 போன்றவற்றில் காணப்பட்டவற்றைப்போன்ற போதனைகளை அளித்து, இந்த மனநிலைகளை விட்டுவிடும்படி கடவுளுடைய வார்த்தை நமக்குப் போதிக்கிறது.
10. பைபிள் போதனையை ஏற்றுக்கொள்வதிலிருந்து யெகோவாவின் மக்கள் பயனடைகின்றனர் என்பதை எது குறிப்பிடுகிறது?
10 கிறிஸ்தவர்கள் அபூரணர்களாக இருந்தாலும், இந்த நல்ல போதனையைப் பொருத்திப் பிரயோகிப்பது இந்தக் கொடிய காலங்களில் அவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. யெகோவாவின் சாட்சிகள் வளர்ந்துகொண்டே இருப்பதற்கு ஒரு காரணம் என்னவென்றால் “அந்த இயக்கம் அதன் அங்கத்தினருக்கு ஒரு நுட்பமான, பலமான தனித்துவத்தைக் கொடுக்கிறது,” என்று இத்தாலிய பத்திரிகை லா சிவில்டா காட்டோலிக்கா சொன்னது. ஆனால், ‘பலமான தனித்துவம்’ என்பதன்மூலம் ‘வீம்புக்கார, அகந்தையுள்ள, தூஷிக்கிற ஆட்களை’ அந்த எழுத்தாளர் அர்த்தப்படுத்தினாரா? மாறாக, அந்த ஜெஸ்யுட் பத்திரிகை, அந்த இயக்கம் “அதன் அங்கத்தினருக்கு ஒரு நுட்பமான, பலமான தனித்துவத்தைக் கொடுக்கிறது; மேலும் அது அவர்கள் அனலுடனும் ஒரு சகோதரத்துவ உணர்வுடனும் ஒருமைப்பாட்டுடனும் வரவேற்கப்படும் ஓர் இடமாகும்,” என்று குறிப்பிடுகிறது. சாட்சிகளுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் காரியங்கள் அவர்களுக்கு உதவிசெய்கின்றன என்பது தெளிவாக இருக்கிறதல்லவா?
போதனை குடும்ப அங்கத்தினர்களுக்குப் பயனளிக்கிறது
11, 12. அநேக குடும்பங்களில் நிலைமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை பவுல் எப்படிச் சரியாகக் குறிப்பிட்டார்?
11 ஓரளவு தொடர்புடைய அடுத்த நான்கு காரியங்களைத் தொகுப்போம். கடைசி நாட்களில் அநேகர் “தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும் [உண்மையற்றவர்களாயும், NW], சுபாவ அன்பில்லாதவர்களாயும்” இருப்பார்கள் என்று பவுல் முன்னறிவித்தார். இவற்றில் இரண்டு குறைகள்—நன்றியறியாத மற்றும் உண்மையற்ற தன்மை—நம்மைச் சுற்றிலும் எங்கும் இருக்கின்றன என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்றாலும், ‘தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதற்கும்,’ ‘சுபாவ அன்பில்லாமல் இருப்பதற்கும்’ இடையில் அவற்றை ஏன் பவுல் வைத்தார் என்பதை நம்மால் எளிதில் காண முடிகிறது. இந்த நான்கும் ஒன்றோடொன்று பின்னப்பட்டவை.
12 உண்மையில் விழிப்புணர்ச்சியுடன் இருக்கும் எவரும்—வாலிபரோ முதியவரோ—பெற்றோருக்குக் கீழ்ப்படியாமை மட்டுமீறிய அளவில் இருக்கிறது என்றும், மோசமாகிக்கொண்டே போகிறது என்றும் ஒத்துக்கொள்ளவேண்டும். இளைஞர் தங்களுக்குச் செய்யப்பட்டிருக்கும் எல்லாவற்றிற்கும் நன்றியறியாதவர்களாய் இருப்பதுபோல் தோன்றுகின்றனர் என்று அநேக பெற்றோர் குறைகூறுகின்றனர். தங்கள் பெற்றோர் உண்மையில் தங்களிடம் (அல்லது பொதுவாக குடும்பத்திடம்) உண்மையுடன் இருக்காமல், தங்களுடைய வேலைகள், இன்பங்கள், அல்லது தங்களைக்குறித்தவற்றிலேயே மூழ்கிக்கிடக்கின்றனர் என்று அநேக இளைஞர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். யார் தவறான பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க முயலுவதற்கு மாறாக, விளைவுகளைப் பாருங்கள். பெரியவர்களுக்கும் இளைஞருக்கும் இடையிலுள்ள மனஸ்தாபம், பருவவயதினர் ஒழுக்கத்திற்கு, அல்லது ஒழுக்கயீனத்திற்கு, அடிக்கடி தங்களுடைய சொந்தத் தராதரத்தைக் கொண்டிருக்கும்படி வழிநடத்துகிறது. விளைவு? உயர்ந்துகொண்டு போகும் வீதத்தில் பருவவயது கருத்தரிப்புகள், கருக்கலைப்புகள், மற்றும் பாலுறவால் கடத்தப்பட்ட நோய்கள் ஆகியவை. பெரும்பாலும், குடும்பத்தில் சுபாவ அன்பில்லாமை வன்முறைக்கு வழிநடத்துகிறது. உங்களுடைய பகுதியிலிருந்து நீங்கள் உதாரணங்களைச் சொல்லக்கூடும், சுபாவ அன்பு மறைந்துவருகிறது என்பதற்கு நிரூபணம்.
13, 14. (அ) அநேக குடும்பங்களின் சீர்கெட்ட நிலையின் மத்தியிலும் நாம் ஏன் பைபிளுக்குக் கவனம்செலுத்தவேண்டும்? (ஆ) குடும்ப வாழ்க்கையைப்பற்றி என்ன வகையான ஞானமான ஆலோசனையைக் கடவுள் அளிக்கிறார்?
13 தங்களுடைய குடும்பத்தின் விரிவாக்கப்பட்ட பாகமாக, அதே மரபு, இனம் அல்லது தொகுதியைச் சேர்ந்தவர்களாக ஒருகாலத்தில் தோன்றியவர்களுக்கு எதிராக அதிகமதிகமானோர் ஏன் திரும்புகின்றனர் என்பதை இது விளக்கக்கூடும். எனினும், இன்றைய வாழ்க்கையின் எதிர்மறையான காரியங்களை அழுத்திக் காண்பிப்பதற்காக இந்தக் காரியங்களை நாங்கள் எடுத்துச்சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய இரண்டு முக்கிய அக்கறைகள் இவை: பவுல் பட்டியலிட்டிருக்கும் குறைகளால் துன்புறுவதைத் தவிர்ப்பதற்கு பைபிள் போதனைகள் நமக்கு உதவியளிக்க முடியுமா, மேலும் பைபிள் போதனைகளை நம்முடைய வாழ்க்கையில் பொருத்திப்பிரயோகிப்பதால் நாம் பயனடைவோமா? பவுலின் பட்டியலிலுள்ள அந்த நான்கு குறிப்புகளைக் குறித்ததில் தெளிவாக இருக்கிறதுபோல இவற்றின் பதில்கள் ஆம் என்றே இருக்கமுடியும்.
14 ஒரு பொதுவான கூற்று மிக நியாயமானதாக இருக்கிறது: இருதயத்திற்கு அனலூட்டுவதாயும் நல்ல வெற்றிகரமானதாயும் இருக்கும் குடும்ப வாழ்க்கையை உருவாக்குவதில் பைபிளிலிருந்து கிடைக்கும் போதனையைவிட வேறு எதுவும் சிறந்ததாக இல்லை. வெறுமனே படுகுழிகளைத் தவிர்ப்பதற்கு மட்டுமல்லாமல் வெற்றியும் அடைவதற்கு குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவக்கூடிய அதன் ஆலோசனையின் வெறும் ஒரு மாதிரியால் அது உறுதி செய்யப்படுகிறது. கணவர்கள், மனைவிகள், பிள்ளைகளுக்கென்று கொடுக்கப்பட்ட மற்றுமநேக சிறந்த, நடைமுறையான பதிவுகள் இருக்கிறபோதிலும், கொலோசெயர் 3:18-21 அதை நன்கு சித்தரிக்கிறது. இந்தப் போதனை நம்முடைய நாளில் பயனுள்ளதாக இருக்கிறது. உண்மை கிறிஸ்தவர்களின் குடும்பங்களில்கூட சிக்கல்களும் சவால்களும் இருக்கின்றன என்பது மெய்தான். இருந்தாலும், குடும்பங்களுக்குப் பைபிள் மிகவும் உதவியுள்ள போதனைகளைக் கொடுக்கிறது என்று மொத்த விளைவுகள் நிரூபிக்கின்றன.
15, 16. ஜாம்பியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைக்குறித்து ஆய்வு செய்கையில் ஓர் ஆராய்ச்சியாளர் என்ன நிலைமையைக் கண்டறிந்தார்?
15 ஒன்றரை வருடங்களாக, கனடாவிலுள்ள லெத்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒருவர், ஜாம்பியாவில் சமூக வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்தார். அவர் இந்த முடிவிற்கு வந்தார்: “நிலையான திருமண இணைப்புகளைக் காத்துக்கொள்வதில் மற்ற மதப்பிரிவுகளின் அங்கத்தினர்களைவிட யெகோவாவின் சாட்சிகள் பெரும் வெற்றியை அனுபவிக்கின்றனர். . . . அவர்களுடைய வெற்றி, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஒரு மாற்றியமைக்கப்பட்ட உறவு பரிமாற்றத்தைக் குறிக்கிறது; அவர்கள் இந்தப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, அச்சுறுத்தலற்ற, ஒத்துழைக்கும் முயற்சிகளில், தாங்கள் ஒருவரையொருவர் நடத்தும் முறையில் ஒரு புதிய தலைவராகிய கடவுளுக்குக் கணக்குக் கொடுக்கவேண்டியவர்களாய் இருக்கின்றனர் . . . யெகோவாவின் சாட்சி கணவன், தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக உத்தரவாதத்தை எடுத்துக்கொள்வதில் முதிர்ச்சியடையும்படி கற்பிக்கப்படுகிறான். . . . கணவனும் மனைவியும் உத்தமமுள்ள நபர்களாக இருக்கும்படி உற்சாகப்படுத்தப்படுகின்றனர் . . . உத்தமத்திற்கான இந்த மேலோங்கி நிற்கும் தேவை திருமணத்தை உறுதியாக இணைத்து வைக்கிறது.”
16 அந்த ஆய்வு, எண்ணற்ற நிஜ அனுபவங்களின் அடிப்படையில் செய்யப்பட்டது. உதாரணமாக, இந்த ஆராய்ச்சியாளர் சொன்னார், வழக்கத்திற்கு மாறாக, “யெகோவாவின் சாட்சிகளுடைய ஆண்கள் அடிக்கடி தங்களுடைய மனைவிகளுக்குத் தோட்டத்தில், ஆரம்ப நிலையில் மட்டுமல்லாமல், செடிகளை நடும் மற்றும் தோண்டும் வேலைகளிலும் உதவுவதாகக் காணப்பட்டிருக்கின்றனர்.” இவ்வாறாக, பைபிள் போதனை வாழ்க்கையைத் தொடுகிறது என்பதை பூமியெங்குமுள்ள எண்ணற்ற அனுபவங்கள் காண்பிப்பது தெளிவாக இருக்கிறது.
17, 18. மத மரபுரிமையும் திருமணத்திற்கு முன் பாலுறவையும் குறித்த ஓர் ஆய்வில் என்ன ஆச்சரியத்திற்குரிய முடிவுகள் மேலோங்கி நின்றன?
17 மதத்தைப்பற்றிய அறிவியல்பூர்வ ஆய்வு பத்திரிகையின் கண்டுபிடிப்புகளை முந்தின கட்டுரை குறிப்பிட்டது. அது 1991-ல், “மத மரபுரிமையும் திருமணத்திற்கு முன் பாலுறவும்: இளம் வயதுவந்தோரின் ஒரு தேசிய மாதிரியிலிருந்து அத்தாட்சி,” என்ற தலைப்பை உடைய ஒரு கட்டுரையைக் கொண்டிருந்தது. திருமணத்திற்கு முன் பாலுறவு எவ்வளவு பரவலாக இருக்கிறது என்று நீங்கள் ஒருவேளை அறிந்திருப்பீர்கள். இளம் வயதில் அநேகர் காம உணர்ச்சிகளுக்கு இணங்கிவிடுகின்றனர்; மேலும் அநேக பருவவயதினர் பல பாலுறவுத் துணைகளைக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பொதுவான போக்கை பைபிள் போதனைகள் திருத்தியமைக்க முடியுமா?
18 இந்தப் பிரச்னையை ஆராய்ந்த மூன்று இணைப் பேராசிரியர்கள், ‘அதிக பாதுகாப்பான கிறிஸ்தவ பாரம்பரியத்தின்படி வளர்க்கப்பட்ட வளரிளமைப் பருவத்தினர் மற்றும் இளம் வயதுவந்தோர், திருமணத்திற்கு முன் பாலுறவில் ஈடுபடுவதற்கான சாத்தியம் குறைவாக இருக்கும்’ என்ற பதிலைக் கண்டடையப்போவதாக எதிர்பார்த்தனர். ஆனால் உண்மைகள் எதைக் காண்பித்தது? மொத்தமாக, 70 சதவீதத்திற்கும் 82 சதவீதத்திற்கும் இடையிலானோர் திருமணத்திற்கு முன் பாலுறவில் ஈடுபட்டிருந்தனர். சிலருக்கு “ஒரு மாறாத மரபுரிமை திருமணத்திற்கு முன் பாலுறவு நிகழும் சாத்தியத்தைக் [குறைத்தது], ஆனால் ‘பருவவயதில் திருமணத்திற்கு முன்னான பாலுறவு’ குறித்ததில் அவ்வாறாக இல்லை.” மதப்பற்றுள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்களாகத் தோன்றிய சில இளைஞர், “பாரம்பரிய புராட்டஸ்டன்ட் பிரிவினர்களுடன் ஒப்பிடுகையில், திருமணத்திற்கு முன் பாலுறவிற்கு குறிப்பிடத்தக்க அதிக சாத்தியத்தை வெளிக்காட்டினர்,” என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.—தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.
19, 20. யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலுள்ள அநேக இளைஞருக்குக் கடவுளுடைய போதனை எவ்வாறு உதவியளித்தும் பாதுகாத்தும் இருக்கிறது?
19 யெகோவாவின் சாட்சிகளுடைய இளைஞரின் மத்தியில், இதற்கு நேர் எதிர்மாறானதை அந்தப் பேராசிரியர்கள் கண்டனர்; “மற்றவர்களிடமிருந்து மிகவும் வித்தியாசப்பட்ட தொகுதியின்” மத்தியில் அவர்கள் இருந்தனர். ஏன்? “அனுபவங்கள், எதிர்பார்ப்புகள், மற்றும் ஈடுபாட்டின் காரணமாக உண்டுபண்ணப்பட்ட பொறுப்பு மற்றும் சமூக ஒருமைப்பாட்டு நிலை . . . பொதுவாக அதிகளவில் விசுவாசத்தின் நியமங்களைப் பற்றிக்கொண்டிருக்கச் செய்கிறது.” அவர்கள் தொடர்ந்து கூறினர்: “வளரிளமைப் பருவத்தினராகவும் இளம் வயதுவந்தோராகவும், சாட்சிகள் நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியவர்களாய் இருக்கின்றனர்.”
20 ஆகவே, பைபிள் போதனை, யெகோவாவின் சாட்சிகள் ஒழுக்கக்கேட்டைத் தவிர்க்க உதவியளிப்பதன்மூலம் அவர்களுக்குப் பயனுள்ளதாய் இருந்திருக்கிறது. சில குணமாக்கமுடியாததும் மற்றவை உயிருக்கு ஆபத்தாகவும் இருக்கிற பாலுறவால் கடத்தப்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதில் அது விளைவடைகிறது. உயிரை எடுப்பதற்குச் சமானமானதாக பைபிள் போதிக்கும் கருக்கலைப்புகளைச் செய்யும்படியான அழுத்தம் இல்லை என்பதைக் குறிக்கிறது. சுத்தமான மனச்சாட்சியுடன் திருமணத்தில் நுழையக்கூடிய இளம் வாலிபரிலும் அது விளைவடைகிறது. அதிகப்படியான ஸ்திரமான அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட திருமணங்களை அது அர்த்தப்படுத்துகிறது. அப்படிப்பட்ட போதனைகளே சமாளிப்பதற்கும், ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நமக்கு உதவக்கூடும்.
நன்மையளிக்கும் போதனை
21. நம்முடைய காலத்தைப்பற்றி பவுல் என்ன காரியங்களைச் சரியாக முன்னறிவித்தார்?
21 இப்போது திரும்பவும் 2 தீமோத்தேயு 3:3, 4-ற்குச் சென்று, நம்முடைய காலத்தைக் கையாளுவதை அநேகருக்கு—ஆனால் எல்லாருக்கும் அல்ல—கடினமாக்கும் இன்னும் எவற்றைப்பற்றி பவுல் சொன்னார் என்று கவனியுங்கள்: “[மனுஷர்கள்] இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” இருப்பார்கள். எவ்வளவு சரியாக இருக்கிறது! என்றபோதிலும், பைபிளிலுள்ள போதனை நம்மைப் பாதுகாக்கவும், சமாளிப்பதற்குத் தயாராக்கவும், வெற்றியடையச் செய்யவும் முடியும்.
22, 23. என்ன நன்மையளிக்கும் அறிவுரையுடன் பவுல் தன்னுடைய பட்டியலை நிறைவு செய்தார், அதன் குறிப்பு என்ன?
22 அப்போஸ்தலன் பவுல் ஒரு நன்மையளிக்கும் குறிப்புடன் தன்னுடைய பட்டியலை நிறைவு செய்கிறார். அவர் அந்தக் கடைசி குறிப்பை ஒரு தெய்வீகக் கட்டளையாக மாற்றுகிறார்; அதுவும் நமக்கு அளவிடமுடியாத நன்மை பயக்கலாம். பவுல், “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாய்” இருப்பவர்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார்; “இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” சில சர்ச்சுகளிலுள்ள இளைஞர் திருமணத்திற்கு முன் பாலுறவில் உண்மையில் சராசரியைவிட அதிகப்படியான வீதத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதை நினைவுபடுத்துங்கள். ஏன், அந்தச் சர்ச் செல்பவர்களின் ஒழுக்கக்கேடு வெறும் ஒரு சராசரி நிலையில் இருந்தாலும்கூட, அவர்களுடைய வழிபாட்டுமுறை வல்லமையற்றது என்பதற்கு அது ஒரு நிரூபணமாக இருக்கும் அல்லவா? மேலுமாக, மக்கள் வியாபாரத்தில் எப்படிச் செயல்படுகின்றனர், தங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் எப்படி செயல்தொடர்புகொள்கின்றனர், அல்லது உறவினரை எப்படி நடத்துகின்றனர் என்பவற்றில் மத போதனைகள் அவர்களை மாற்றியமைக்கின்றனவா?
23 கிறிஸ்தவத்தின் உண்மையான வல்லமையை வெளிக்காட்டும் ஒரு வழிபாட்டு முறையைக் கொண்டிருந்து, கடவுளுடைய வார்த்தையிலிருந்து படிப்பவற்றை நாம் நடைமுறையில் செயல்படுத்தவேண்டும் என்று பவுலின் வார்த்தைகள் காண்பிக்கின்றன. வல்லமையற்ற வழிபாட்டு முறையை வைத்திருப்பவர்களைக்குறித்து பவுல் நமக்குச் சொல்கிறார்: “இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” அது நமக்கு நிச்சயமான பயன்களைக் கொண்டுவரும் ஒரு தெளிவான கட்டளை.
24. வெளிப்படுத்துதல் 18-ம் அதிகாரத்திலுள்ள எச்சரிப்பு எவ்வாறு பவுலின் ஆலோசனைக்கு இணையானதாக இருக்கிறது?
24 என்ன வழியில்? பைபிளின் கடைசி புத்தகம், மகா பாபிலோன் என்றழைக்கப்பட்ட ஒரு வேசியாகிய, அடையாள அர்த்தமுள்ள ஒரு பெண்ணைச் சித்தரிக்கிறது. மகா பாபிலோன், யெகோவா தேவன் பரிசோதித்து, நிராகரித்த பொய் மத உலகப் பேரரசைக் குறிப்பதாக அத்தாட்சி காண்பிக்கிறது. என்றாலும், நாம் உட்பட்டிருக்க வேண்டியதில்லை. வெளிப்படுத்துதல் 18:4 நம்மை எச்சரிக்கிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” “இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு,” என்று பவுல் தெரியப்படுத்திய அதே செய்தியல்லவா அது? நாம் அதற்கு இசைந்து செல்வது, கடவுளுடைய போதனையிலிருந்து பயனடைவதற்கு மற்றுமொரு வழியாகும்.
25, 26. யெகோவா தேவனிடமிருந்து வரும் போதனையை இப்போது ஏற்று, பொருத்திப்பிரயோகிப்பவர்களுக்கு என்ன வகையான எதிர்காலம் காத்திருக்கிறது?
25 சீக்கிரத்தில் கடவுள் நேரடியாக மனித விவகாரங்களில் தலையிடுவார். அவர் எல்லா பொய் மதத்தையும், தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் மீதி பாகத்தையும் நீக்கிவிடுவார். வெளிப்படுத்துதல் 19:1, 2 குறிப்பிடுவதுபோல அது களிகூருவதற்கான ஒரு காரணமாக இருக்கும். இந்தக் கொடிய காலங்களின் தடைகள் கடந்துவிட்டிருக்கையில், பூமியில் கடவுளுடைய போதனையை ஏற்று, பின்பற்றுபவர்கள் தொடர்ந்து அவருடைய போதனைகளைப் பின்பற்றும்படி அனுமதிக்கப்படுவார்கள்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
26 திரும்பவும் நிலைநாட்டப்பட்ட பரதீஸில் வாழ்வது நிச்சயமாகவே நம்முடைய கற்பனைக்கு எட்டாதவிதத்தில் களிப்பூட்டுவதாக இருக்கும். அது நமக்குச் சாத்தியமானது என்று கடவுள் வாக்களிக்கிறார்; மேலும் நாம் அவரை முழுமையாக நம்ப முடியும். இவ்வாறு அவருடைய உதவியளிக்கும் போதனையை ஏற்பதற்கும் பின்பற்றுவதற்கும் நமக்கு ஏராளமான காரணத்தைக் கொடுக்கிறார். எப்போது? அவருடைய போதனைகளை இப்போது, நம்முடைய கொடிய காலங்களிலும், அவர் வாக்களிக்கிற அந்தப் பரதீஸிலும் தொடர்ந்து பின்பற்றுவோமாக.—மீகா 4:3, 4.
சிந்தனைக்குரிய குறிப்புகள்
◻ யெகோவாவின் மக்கள், ஆஸ்திகளைப்பற்றிய அவருடைய அறிவுரையிலிருந்து எப்படி பயனடைகின்றனர்?
◻ கடவுளுடைய வார்த்தையைப் பொருத்திப் பிரயோகிப்பதன்மூலம் அவருடைய ஊழியர்களுக்கு என்ன நல்ல விளைவுகள் வருவதாக ஜெஸ்யுட் பத்திரிகை ஒன்று சான்றளித்தது?
◻ தெய்வீக போதனையை பொருத்திப் பிரயோகிக்கும் குடும்பங்களுக்கு என்ன நன்மைகள் வந்ததாக ஜாம்பியாவில் ஓர் ஆய்வு காட்டியது?
◻ தெய்வீக போதனை இளைஞருக்கு என்ன பாதுகாப்பை அளிக்கிறது?
[பக்கம் 15-ன் பெட்டி]
என்ன பயங்கரமான விளைவுகள்!
“பருவவயதினர் பாலுறவு மற்றும் போதை மருந்துகளில் அனுபவித்துப்பார்க்கவும், அபாயங்களை ஏற்று, அப்போதைக்கென்று வாழ விரும்புவதாலும், தாங்கள் மரணமடையமாட்டார்கள் என்று நினைத்து அதிகாரத்தை எதிர்ப்பதாலும் எய்ட்ஸ்-ஐ பெறுவதற்கான பேரபாயத்தை எதிர்ப்படுகின்றனர்,” என்று எய்ட்ஸும் பருவவயதினரும் பற்றிய மாநாடு ஒன்றில் அளிக்கப்பட்ட ஓர் அறிக்கை சொல்கிறது.—நியூ யார்க்கின் டெய்லி நியூஸ், ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 7, 1993.
“பாலுறவில் அதிகமாக ஈடுபடும் பருவவயது பெண்கள் எய்ட்ஸ் கொள்ளைநோயின் அடுத்த ‘முன்னணியாக’ தோன்றிவருவதாக, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐக்கிய நாடுகளின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.”—தி நியூ யார்க் டைம்ஸ், வெள்ளிக்கிழமை, ஜூலை 30, 1993.
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
பைபிள் போதனை யெகோவாவின் சாட்சிகளுக்கு சபையிலும் வீட்டிலும் பயனளிக்கிறது